Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 121

உன் ரகசிய ரசிகை நான் 121

by Layas Tamil Novel
209 views

கீர்த்திகாவைக் கதிருக்கு நிச்சயதார்த்தம் செய்ய மறுநாள் காலை அனைவரும் ஆதியின் வீட்டிலிருந்து கிளம்ப…

அதற்கு முன், காலில் இருந்த காயம் சீக்கிரமாகவே குணமாகிவிட, துர்கா ஓடி ஆடி அனைத்து வேலைகளையும் செய்துகொண்டிருந்தாள்.

ஷிவுவும் முன்பு போலத் “தனக்கு என்ன” என்பதுபோல ஒதுங்கி இருக்காமல், ராதாவுடன் சேர்ந்து நிச்சயதார்த்தத்திற்குத் தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

கனகா, செண்பகம், விசாலாட்சி எனப் பெண்கள் மூவரும் பரபரப்பில் இருக்க… வெங்கடாசலமும் துரையும் அவர்கள் அனைவரையும் அவசரப்படுத்திக் கொண்டிருந்தனர்.

**”வீட்டில் இத்தனை பேர் இருந்தும், **’இன்னும் அதை மறந்துட்டேன், இதை மறந்துட்டேன்’ன்னு தேடிட்டே இருக்கீங்க. இது எல்லாம் முன்னாடியே எடுத்து வைக்கிறது இல்லையா?” என்று அவர்களை அதிகாரம் செய்துகொண்டிருந்தனர்.

வெற்றிலைப் பாக்குத் தட்டை எடுத்து வைத்துக்கொண்டிருந்த விசாலாட்சி, வெங்கடாசலத்தை திரும்பிப் பார்க்க, விசாலாட்சி பார்த்ததும் அவர் எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டார். அதைக் கவனித்த ராதாவிடம், ஷிவு ஜாடை காட்டி, “பாத்தியா மாமா? அத்தை ஒரு பார்வை பார்த்ததும் அப்படியே அமைதி ஆயிட்டாரு,” என்று சொன்னாள் ஷிவு.

“அக்கா, நீ இப்பதான் பார்க்கிறாயா? நான் இங்கே வந்ததிலிருந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கேன். மாமா என்னதான் எல்லாரையும் மிரட்டுற மாதிரிப் பேசினாலும், அவரை மிரட்ட இந்த வீட்டில் இருக்கிற ஒரே ஆளு நம்ம விசாலாட்சி அத்தை தான்.”

**”மாமா கிட்ட **’இதைச் செய்யணும், இதைச் செய்யக்கூடாது’ன்னு ஒரு வார்த்தை அத்தை சொன்னால் போதும், இல்லை கண்ணைக் காட்டினாலே போதும். அதன் பிறகு மாமா எதுவுமே செய்ய மாட்டார்,” என்று சொல்லி கிண்டல் செய்தாள் ராதா.

தங்களை கிண்டல் செய்யும் ராதாவைப் பார்த்த விசாலாட்சி, “ஏய் வாயாடி, பேசாம வேலையைப் பாருடி!” என்று சொல்லி அவள் முதுகில் லேசாக அடிக்க…

விசாலாட்சி லேசாகத்தான் அவள் முதுகில் தட்டி இருப்பார். உடனே ராதா, “ஐயோ! அம்மா! வலிக்குது!” என்று கத்திக் கூச்சல் போட்டபடி அங்கிருந்து ஓடியவள், அப்போதுதான் கதிர் தன் அறையிலிருந்து ரெடியாகி வெளியே வர, அவனைப் பார்த்து, அவனிடம் சென்று ராதா கதிரின் கையைப் பிடித்துக் கொண்டு, “மாமா, இங்க பாருங்க! அத்தை என்னை அடுத்து அடிச்சுக் கொடுமைப்படுத்துறாங்க,” என்று சொல்லி அவனிடம் போலிக் கண்ணீர் வடிக்க…

ராதாவைத் தன்னருகில் நிற்க வைத்துக்கொண்ட கதிர், “எதுக்கு என் செல்லக்குட்டியை கொடுமைப்படுத்துறீங்க? பாவம் அவளை. சின்னப் பொண்ணு அவளைப் போய்ப் இப்படி அடிக்கிறீர்களே? அவளுக்கு வலிக்காதா?” என்றான் கதிர்.

“என்னடா, இத்தனை நாளா பூனை மாதிரி அமைதியா இருந்த? இன்னைக்கு என்னமோ பெரிய வீரன் மாதிரி ராதாவுக்கு வரிஞ்சு கட்டிட்டு வர?” என்று கேட்டார் விசாலாட்சி.

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லம்மா. நியாயம் எங்க இருக்கோ அங்க நின்னுதானே ஆகணும்?” என்றான் கதிர்.

“ஓஹோ… நியாயத்தைப் பற்றி நீ பேசுறியா? அப்படிப் பார்த்தா நியாயப்படி ராதாவை உனக்குத் தான் கல்யாணம் பண்ணி வச்சிருக்கணும்.”

“போனால் போகட்டும்னு நானும் என் தம்பியும் மனசு மாறி உனக்குக் கீர்த்திகாவைக் கல்யாணம் பண்ணி வைக்க நாங்க சம்மதிச்சா, ரொம்பத்தான் ரொம்பப் பேசுற நீ!” என்றார் விசாலாட்சி.

விசாலாட்சி பேசியதைப் பார்த்த ராதா, கதிரிடம், “ஐயோ! மாமா, நீங்க பாட்டுக்கு அத்தையை எதிர்த்துப் பேசுறேன்னு எதுவும் பேசி வச்சிடாதீங்க… அப்புறம் என் அப்பாவும் உங்க அம்மாவும் சேர்ந்து நம்ம ரெண்டு பேருக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு கிளம்பிடப் போறாங்க. நான் இந்த விளையாட்டுக்கு வரலைப்பா… நான் போறேன்,” என்று சொல்லிவிட்டு ராதா வெளியே ஓட…

“அடிப்பாவி, உனக்காகத் தானே நான் சப்போர்ட்டுக்கு வந்தேன்? இப்படி என்னை என் அம்மாகிட்ட மாட்டிவிட்டுட்டுப் போறியே! உனக்கு நியாயமா இருக்கா?” என்று சொன்னவன், தன் அம்மாவைத் திரும்பிப் பார்க்க… விசாலாட்சி கதிரை முறைத்துக் கொண்டு நின்று இருக்க…

“ராதா, ஒரு நிமிஷம் இரு. ஒரு முக்கியமான வேலை இருக்கு. நானும் வரேன்,” என்று சொல்லிவிட்டுக் கதிரும் ராதாவைத் துரத்திக்கொண்டு சென்றான்.

“என்ன எல்லாரும் ஓடிப்பிடிச்சு விளையாடிட்டு இருக்கீங்க? நிச்சயதார்த்தத்துக்கு நேரம் ஆகுது. சீக்கிரமா எல்லாரும் கிளம்புங்க,” என்று சொல்லி வெங்கடாசலம் அனைவரையும் அதட்ட, ஆதியும் அப்போதுதான் துர்காவைப் பார்த்துவிட்டு கீழே வர, அனைவரும் கிளம்பிக் கீர்த்திகா வீட்டிற்குச் சென்றனர்.


கீர்த்திகா அவள் அறையில் ரெடியாகி அமர்ந்து இருக்க… கதிரின் வீட்டிலிருந்து அனைவரும் வந்துவிட, அவர்களை வாசலிலேயே வரவேற்றனர் வடிவும் முருகனும்.

உள்ளே அனைவரையும் சோபாவில் அமர வைத்துவிட்டு, வடிவும் முருகனும் துர்காவின் உடல்நலம் குறித்து விசாரித்துக் கொண்டு இருக்க… ராதாவும், ஷிவுவும் கீர்த்துவைப் பார்க்க அவள் அறைக்குச் சென்றனர்.

தன் அறையில் பதட்டத்துடன் கீர்த்தி அமர்ந்து இருக்க… அப்போது உள்ளே முதலில் வந்த ராதாவைப் பார்த்ததும் கீர்த்தி ஓடிச் சென்று அவளைக் கட்டிக்கொண்டு அழ… கீர்த்தி ஏன் அழுகிறாள் என்று புரியாமல் அவளைத் தன்னிடம் இருந்து பிரித்த ராதா, கீர்த்திகாவின் கண்ணீரைத் துடைத்துவிட்டவள், “ஏய்… கீர்த்தி, என்ன ஆச்சு? ஏன் அழற?” என்று கேட்டாள் ராதா.

“உனக்கு நிஜமாவே நான் கதிரைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல எந்த வருத்தமும் இல்லையா?” என்றாள் அழுதுகொண்டே.

“அதுல எல்லாம் எந்த வருத்தமும் எனக்கு இல்லை கீர்த்தி. சொல்லப் போனால் நான் இப்போதான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்,” என்றாள் ராதா, கீர்த்துவின் கண்ணீரைத் துடைத்துவிட்டவள். “பாரு, நீ அழுததில் கண் மையெல்லாம் அழிஞ்சிருச்சு,” என்று சொல்லி அவள் கண்ணீரைத் துடைத்து விட…

“இங்கே வந்து உட்காரு கீர்த்தி. நான் உனக்கு கண் மை வெச்சு விடறேன்,” என்று ஷிவு கீர்த்துவை அழைக்க…

எப்போதுமே தன்னிடமும் தன் அக்காவிடமும் முகம் கொடுத்துப் பேசாமல் இருக்கும் ஷிவு, இன்று அவளாகவே வந்து பேசவும் கீர்த்துவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.

அதே ஆச்சர்யத்துடன் கீர்த்தி ராதாவைப் பார்க்க… “என்னடா ஆச்சர்யமா இருக்கா? எங்களுக்கும் அவ ரெண்டு நாளா நடந்துகுறதைப் பார்த்து அப்படித் தான் இருக்கு,” என்றவள், கீர்த்துவை அழைத்துக் கொண்டு போய்ச் சேரில் அமர வைக்க… ஷிவு கீர்த்துவிற்கு கண் மை வைத்து விட்டு அவளைப் பார்த்து, “ரொம்ப அழகா இருக்க கீர்த்தி,” என்றாள்.

ராதா கீர்த்துவிடம், “கதிர் மாமாவும் நீயும் லவ் பண்ற விஷயத்தை நீ என்கிட்ட இருந்து மறைச்சுட்டே பார்த்தியா,” என்றாள் சிறு கோபத்தோடு.

“நான் கொஞ்ச நாள் கழிச்சு உன்கிட்டே சொல்லலாம்னு இருந்தேன் ராதா. ஆனா அதற்குள் உனக்கும் கதிருக்கும் திருமணம் பேசியதும் எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை,” என்றாள் கீர்த்தி.

அதற்குள் ஷிவுவை விசாலாட்சி அழைக்க… ஷிவு இவர்களைப் பேசிக்கொண்டு இருக்கச் சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.

ஷிவு சென்றதும் மறுபடியும் கீர்த்தி ராதாவிடம், “ஏய் ராதா, உண்மையாவே உனக்கு இந்தக் கல்யாணத்தில் எந்த வருத்தமும் இல்லையே?” என்று கேட்டாள்.

ராதா ஒருமுறை தங்களைச் சுற்றி யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, “என் அத்தை உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பேசலையின்னாலும், நானே இந்தக் கல்யாணத்தை நிறுத்தி இருப்பேன்,” என்றாள் ராதா.

ராதா சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான கீர்த்தி கண்களை அகல விரித்துக்கொண்டு அவளைப் பார்க்க… “என்ன பார்க்குற? நான் எதுக்கு கல்யாணத்தை நிறுத்தி இருப்பேன்னு பார்க்கிறாயா?” என்றாள்.

கீர்த்தி “ம்ம்ம்…” என்று தலையை ஆட்ட.

“நான் சொல்ற விஷயத்தை யாரு கிட்டேயும் சொல்லக்கூடாது, சரியா?” என்ற ராதா, கீர்த்துவின் அருகில் வந்து அவளுக்கு மட்டும் கேட்கும்படி, “நானும் வாத்தியும் லவ் பண்றோம்,” என்றாள்.

“வாத்தியா? யாருடா அது?” என்று கீர்த்தி கேட்க…

“சே… நான் வேற அவன் கிட்டே பேசுற மாதிரி உன்கிட்டே சொல்லிட்டு இருக்கேன் பாரு,” என்றவள், “அதான் நம்ம டிபார்ட்மென்ட் ஹெட் சந்தோஷ் இருக்காருல்ல, அவரும் நானும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறோம்,” என்றாள்.

இதைக் கேட்டதும் மேலும் அதிர்ச்சி ஆன கீர்த்தி ராதாவைப் பார்க்க…

“என்ன அப்படிப் பார்க்குறே? நம்ப முடியலையா?” என்றாள் ராதா.

அவள் சொன்னதை நம்ப முடியாமல் வாயைத் திறந்து கொண்டு அவளைப் பார்த்த கீர்த்தி, “ஆமாம்,” என்று தலையை ஆட்டினாள்.

“போதும் போதும் தலையை ஆட்டுறதை நிப்பாட்டு. இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்போ நீ இப்படி வாயைத் திறந்துட்டு இருக்க?” என்றவள் அவள் வாயை மூடினாள்.

அதன் பிறகு கீர்த்தி எதுவுமே ராதாவிடம் கேட்டுக்கொள்ளவில்லை.

ஷிவு வந்து “கீர்த்துவை அழைத்து வரச் சொன்னார்கள்,” என்று சொல்ல, கீர்த்துவை அழைத்துக் கொண்டு ராதாவும் ஷிவுவும் கீழே அழைத்துச் செல்ல…

ஹாலில் அமர்ந்திருந்த அனைவரும் கீர்த்துவைப் பார்க்க… மஞ்சள் நிறத்தில் பட்டுச் சேலை அணிந்து, அதற்கு மேட்சாகச் சிவப்பு நிற ரவிக்கை போட்டு, லேசாக மேக்கப் செய்து அழகுப் புதுமையாய் வந்த கீர்த்துவைப் பார்த்து அவர்கள் அனைவரும் ஆச்சர்யமாக அவளைப் பார்த்தனர்.

ஆனால் அவர்களை எல்லாம் விடக் கதிர் தான் கீர்த்துவை முதன்முதலில் சேலையில் பார்த்து அவளழகில் அப்படியே ஸ்தம்பித்துப் போய் அமர்ந்திருந்தான்.

வெட்கப்பட்டுக்கொண்டே தலைகுனிந்தபடியே வந்து நின்ற கீர்த்துவைப் பார்த்து, அவளிடம் வந்த கனகா, **”என்னடாமா, இப்போதான் எங்களை எல்லாம் புதுசா பார்க்கிற மாதிரி வெட்கப்பட்டுட்டு நிக்கிறே? நாங்க தானே இருக்கோம். எதுக்குத் தரையைப் பார்த்துட்டு இருக்க? நல்ல தைரியமா தலை நிமிர்த்து எல்லாரையும் பார்த்து **’வாங்க’ன்னு அழகா கூப்பிடு,” என்றார்.

கீர்த்தும் சிரித்துக்கொண்டே தலையை நிமிர்த்தி ஒவ்வொருவராகப் பார்த்து, தன் கைகளைத் தூக்கி “வாங்க,” என்று தனித்தனியாக வரவேற்றவள், கதிரிடம் வந்தவள் அவனைப் பார்க்க… கதிர் கீர்த்துவை ஆசையாகப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனைப் பார்த்ததும் ஏனோ கீர்த்துவிற்கு இவ்வளவு நாள் அவனிடம் இருந்த சகஜ நிலை மாறி ஒருவித பதட்டத்தோடு அவனைப் பார்த்தவள், பெண்மைக்கே உரிய நாணம் அவளிடம் தொற்றிக்கொள்ள, சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள்.

அவள் அப்படிச் செய்ததும், “தன்னிடம் வார்த்தைக்கு வார்த்தை மல்லுக்கு நிற்பவள் இன்று சேலை கட்டியதனாலா? அல்லது என்ன காரணத்தினாலோ தன்னை பார்த்து வெட்கப்படுகிறாள்,” என்று நினைத்த கதிர் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

“சரி சரி, பார்த்தது போதும். இந்த மோதிரத்தை என் மகளுக்குப் போட்டுவிடு,” என்று அவன் கையில் செண்பகம் மோதிரத்தைக் கொடுத்துப் போட்டுவிடச் சொல்ல…

அவரிடம் இருந்து சிரித்துக் கொண்டே மோதிரத்தை வாங்கிக் கொண்டு எழுந்த கதிர் கீர்த்துவின் அருகில் வர…

அவள் கையில் கதிருக்காகத் தாங்கள் வாங்கி இருந்த மோதிரத்தைக் கீர்த்தி கையில் கொடுக்கப் போக…

“அதை ஒரு நிமிஷம்,” என்று ஆதி வடிவை அழைத்தவன், எழுந்து வந்து அவரிடம் இருந்த மோதிரத்தை வாங்கிக் கொண்டு, தன் கையில் இருந்த மோதிரத்தை அவர் கையில் கொடுத்து, “இந்த மோதிரத்தைப் போட்டு விடுங்க அத்தை,” என்றவன், “என்ன பார்க்கிறீங்க?”

“லக்‌ஷுவுக்கு உடம்பு நல்லா இருந்து இருந்தால், இந்த நேரம் அவள் ஒருத்தியே முன்னே நின்னு எல்லா வேலையும் பார்த்திருப்பா. அவள் செய்ய வேண்டிய வேலையை அவளுக்குப் பதிலா நான் செய்றேன்,” என்று சொன்ன ஆதி, “இந்த மோதிரத்தைக் கதிர் கையில் போட்டுவிடச் சொல்லுங்க,” என்றான்.

வடிவு கண்களில் கண்ணீரோடு மோதிரத்தைக் கீர்த்திகாவிடம் கொடுத்துக் கதிருக்கு போட்டுவிடச் சொன்னார்.

முதலில் கீர்த்திகா மோதிரம் போட்டுவிட… கதிர் கீர்த்திகாவின் கையைப் பிடித்து மோதிரம் மாட்டிவிட்டவன், அவள் உள்ளங்கையைத் தன் விரலால் வருட… அதில் கூச்சம் அடைந்த கீர்த்தி, கதிரிடம் இருந்து கையை இழுக்கப் போக… கையை எடுக்க விடாமல் பிடித்துக் கொண்டு, அவள் வலது கையைத் தன் இடது கைக்குள் கோர்த்து அனைவரையும் பார்த்தவாறு திரும்பி நின்றான்.

கீர்த்துவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவன் கைக்குள் இருந்து கையை விலக்க முயற்சிக்க… அவர்கள் இருவரையும் பார்த்தவர்கள், “கதிருக்குக் கீர்த்தி கையை விட மனசு வரலை போல,” என்று கிண்டல் செய்ய…

அனைவரும் அவர்களைக் கிண்டல் செய்ய… கீர்த்துவிற்கு வெட்கம் பிடுங்கித் தின்ன, கதிரின் கையை உதறியவள் உள்ளே ஓடிவிட்டாள்.

பின் அனைவரும் சாப்பிட்டு விட்டு அமர்ந்து, கல்யாணத்திற்கு எந்த வேலையும் செய்ய முருகனையும் வடிவையும் அலைய வேண்டாம் என்று சொன்ன வெங்கடாசலம், “எல்லா வேலையும் நாங்களே பார்த்துகிறோம்,” என்று சொன்னார்.

“அம்மா, முருகன். நாங்களே எல்லா வேலையும் பார்த்துகிறோம். நீ உன் பொண்ணை மட்டும் எங்க வீட்டுக்கு அனுப்பி வெச்சா போதும்,” என்று துரை சொல்ல… அவர் அப்படிச் சகஜமாகப் பேசுவதைப் பார்த்து அங்கிருந்த அனைவருக்குமே ஆச்சரியம் தான்.


❤️

விக்கி கையில் காயத்துடன் கதிர் நிச்சயதார்த்தத்திற்குப் போகாமல் வீட்டிலேயே இருந்தான். மது கிளம்பி ஆபீஸ் சென்றுவிட… பத்மாவும் காலையில் நேரமே வேலை எல்லாம் முடித்துக் கொண்டு பவன் வீட்டிற்குச் சென்றுவிட…

வீட்டில் இப்போது விக்கியும் நிலானியும் மட்டும் தான் இருந்தனர். விக்கியுடன் தனியே இருக்கப் பயந்து கொண்டு இருந்த நிலானி, பத்மா செல்லும் வரை அவளுடனேயே கிட்சனுக்குள் இருந்தாள். இப்போது அவளும் சென்றுவிட… என்ன செய்வது என்று தெரியாமல் பதட்டத்துடன் தன் வீல் சேரைத் தள்ளிக் கொண்டே கிட்சனுக்குள் இருந்து ஹாலிற்கு வர…

அங்கே விக்கி சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருக்க… அவனிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தவள் மெதுவாக, மிக மெதுவாகத் தன் வீல் சேரை நகர்த்திக் கொண்டு பெட்ரூம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று கதவை மெதுவாகச் சாற்றிக் கொண்டாள்.

கதவைச் சாற்றிவிட்டு “அப்பாடா!” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

நிலானி தனக்குத் தெரியாமல் உள்ளே சென்றதை கவனித்துக் கொண்டுதான் இருந்தான் விக்கி.

“தன்னிடம் தனியாக இருக்கப் பயந்து கொண்டு இப்படிப் பூனை போல உள்ளே சென்ற நிலானியை நினைத்துச் சிரித்தவன், ‘என்கிட்டே தனியா இருக்க இப்படிப் பயந்தா, அப்புறம் மத்ததெல்லாம் எப்படி நிலாக்குட்டி, மத்ததெல்லாம் நடக்கும்?’ என்று நினைத்தவன்.”

“இப்படியே விட்டா நல்லா இருக்காது. நேத்து நைட்டும் நான் நம்ம ரூமுக்கு வரதுக்குள்ளே தூங்கிட்டே. காலையில் நான் முழிக்கிறதுக்குள்ளே வெளியே போனவ தான், இப்போ வரை என்கிட்டே பேசாம இருக்கா,” என்றவன், டிவியை ஆஃப் செய்துவிட்டு எழுந்து கதவைச் சாற்றிவிட்டு நேராகத் தன் ரூமிற்க்கு வந்து கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

விக்கி உள்ளே வந்ததை கவனித்த நிலானி, என்ன செய்வது என்று தெரியாமல் அவனைப் பார்க்க…

“என்ன அப்படிப் பார்க்குறே நிலாக்குட்டி? என்னைப் பார்த்தா உனக்குப் பயமா இருக்கா?” என்றான்.

நிலானி “ஆமாம்,” என்று முதலில் தலையை ஆடியவள், பின் விக்கி எதுவும் நினைத்துக் கொள்வானோ என்று நினைத்தவள் உடனே “இல்லை,” என்று தலையையே ஆட்ட.

அவள் குழப்பமாகத் தலையை நாலா பக்கமும் ஆடுவதைப் பார்த்த விக்கிக்கு அவளை நினைத்துச் சிரிப்பு தான் வந்தது.

அவளிடம் வந்த விக்கி, நிலானியை வீல் சேரில் இருந்து தூக்கிக் கட்டிலில் படுக்க வைக்க…

“நீங்க ஏன் இது எல்லாம் பண்றீங்க? நானே எழுந்துப்பேன். ஒரு அளவுக்கு எனக்கு குணம் ஆகிருச்சு,” என்றாள் நிலானி.

“பரவாயில்லை, கல்யாணம் ஆனதும் நான் உன்னைத் தனியா விட்டுட்டு, அதுவும் உடம்பு சரியில்லாம இருந்த உன்னை விட்டுட்டு நான் பாட்டுக்கு வேலை இருக்குன்னு கிளம்பி டென்மார்க் போய்விட்டேன்.”

“நியாயப்படி பார்த்தால் நான் உனக்கு முடியாத நேரம் நான் உன் கூட இருந்து உன்னை நல்லாப் பார்த்திருக்கணும். ஆனா என்னால அப்போ அப்படி பண்ண முடியலை.”

“அதனால இனி என்னோட முக்கிய வேலை உன்னைப் பார்த்துக்கறது தான்,” என்று சொல்லி அவளை மெத்தையில் அமர வைத்துவிட்டு அவள் அருகில் அவனும் அமர்ந்துகொள்ள…

தன் தோலை உரசிக் கொண்டு வந்து தன் அருகில் நெருக்கமாக அமர்ந்து இருந்த விக்கியைப் பார்த்தவள் அமைதியாக உட்கார்ந்திருக்க…

அவன் இடது கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவன், “என்ன நிலாக்குட்டி, எதுவும் பேச மாட்டேங்குறே,” என்றான் விக்கி.

“எனக்கு… எனக்கு… என்ன பேசுறதுன்னு தெரியலைங்க,” என்றாள் அப்பாவியாக.

**”என்ன, நீ எனக்குப் பொண்டாட்டியா இருந்துட்டு **’பேசத் தெரியலை’ன்னு சொல்றே?” என்றவன், “சரி, நான் பேசுறேன் நீ பதில் சொல்லு,” என்றான். அவளும் “ம்ம்ம்…” என்று தலையையே ஆட்டினாள்.

“உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டான் விக்கி.

அவன் அப்படி கேட்டதும், ஏற்கெனவே பதட்டத்தில் இருந்த நிலானிக்கு அவனிடம் என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக இருக்க…

“என்ன நிலாக்குட்டி நீ? நான் டென்மார்க்கில் இருக்கறப்ப தினமும் நீயும் நானும் எவ்வளவு நேரம் போனில் பேசி இருக்கோம்? அப்போ எல்லாம் நல்லாத் தானே பேசுன? ஆனா இப்போ என்னடான்னா நான் வந்ததில் இருந்து நீ என்கிட்டே சரியாவே பேச மாட்டேங்குறே. நீ இப்படிப் பேசாமயே இருந்தா நான் திரும்பவும் ஆதி கிட்டே சொல்லி டென்மார்க் போறேன். அங்கே போய் உனக்கு நான் போன் பண்ணிப் பேசுறேன். அப்போ தான் நீ என்கிட்டே நல்லா பேசுற,” என்று கோபமாகச் சொன்னவன், “போ… நான் போறேன்,” என்று சொல்லி எழுந்து செல்லப்போனவனின் கையைப் பிடித்து நிலானி இழுக்க…

காயம் பட்டிருந்த விக்கியின் வலது கையைத் தெரியாமல் பிடித்து நிலானி இழுத்துவிட்டாள். அவள் இழுத்ததும் விக்கி வழியில் “ஆஅ!” என்று கத்த…

அப்போது தான் அவன் காயம் பட்ட கையைப் பிடித்துத் தான் இழுத்துவிட்டதை உணர்ந்தவள், “ஐயோ… சாரிங்க… சாரி… நான் தெரியாம காயம் பட்ட கையைப் பிடிச்சு இழுத்துட்டேன். சாரிங்க…” என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு பதறினாள் நிலானி.

“ஏய்… ஏய்… ஏன் இவ்வளவு பதட்டப்படுறே? எனக்கு அவ்ளோ எல்லாம் வலி இல்லை. நீ திடீர்னு அழுத்தியதும் கொஞ்சம் வலி ஆகிடுச்சு, அவ்ளோ தான்,” என்று அவளைச் சமாதானம் செய்தவன், அவள் கையைப் பிடித்துக் கொண்டு நிலானியைப் பார்க்க…

மறுபடியும் அவள் “சாரிங்க…” என்று சொல்ல…

“இப்போ என்ன, நான் உன்னை மன்னிக்கணும்,” என்றான் விக்கி. அவள் “ஆமாம்,” என்று தலையை ஆட்டினாள்.

“அப்போ நான் கேட்கிறதை நீ செஞ்சா நான் உன்னை மன்னிக்கிறேன்,” என்று சொல்லி நிலானியை ஒரு மார்க்கமாகப் பார்த்தான் விக்கி.

“அவள் அவசரப்பட்டுத் தெரியாமல் தலையை ஆட்டிவிட்டோமோ? என்ன கேட்கப்போகிறானோ? இவன் விழியே சரியில்லையே!” என்று நினைத்தவள் அரைமனதாகச் “சரி,” என்று தலையை ஆட்டினாள்.

அவள் சம்மதம் சொன்னதும், வேகமாக அவள் எதிரில் வந்து அமர்ந்தவன், நிலானியின் முகத்தைத் தன் கைகளில் ஏந்தியவன், “எனக்கு… எனக்கு… ஒரே… ஒரு…” என்று அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே விக்கி பேச…

நிலானி அவனை மருண்ட விழிகளோடு பார்த்தவள், “உங்களுக்கு… என்ன?” என்றாள் நிலானி.

ஸ்டோரி படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க மக்களே! ஒருத்தர் கூட கமெண்ட் பண்ண மாட்டிங்குறீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. யாருமே என் கதையை படிக்கறது இல்லையா ? என் கதை அவ்ளோ சுமாரா இருக்கா ஒரு கமெண்டுக்கு கூட எனக்கும் என் கதைக்கும் தகுதி இல்லையா?😒😒😒

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured