ராதாவின் காலில் உள்ள காயம் அளவு நன்றாகவே சரியாகி இருக்க…
இன்று ஹாஸ்பிடலுக்கு செக்கப்பிற்கு போயே ஆக வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்த ராதாவை, துரை, “இப்ப எதுக்கு நீ ஹாஸ்பிடல் போகணும்னு சொல்ற? அதான் உனக்குக் கால்ல இருக்குற காயம் எல்லாம் முழுசா நல்லாயிருச்சு. இனி போய்ப் அவங்க கிட்ட என்ன சொல்லிக் காட்டப் போற? அதெல்லாம் எதுவும் வேண்டாம்.”
“நீ பேசாம வீட்டிலேயே இரு. கல்யாண வேலை எல்லாம் எத்தனை இருக்கு! சும்மா உன்னை கூட்டிட்டுப் போயிட்டு வந்துட்டு இருக்க இங்க எங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லைன்னு நினைச்சுட்டு இருக்கியா?” என்று ராதாவைத் துரை அதட்டிக் கொண்டிருக்க…
“தம்பி! இப்ப எதுக்கு என் மருமகளைத் திட்டிக்கிட்டு இருக்க? அவ என்ன ஹாஸ்பிடல் போயிட்டு வரேன் தானே சொல்றா? என்னமோ நீயே அவளை எப்பவும் கூட்டிட்டுப் போற மாதிரி பேசுற. இங்க டிரைவர் இருக்காங்க. அவங்க கூடப் போயிட்டு வரச் சொன்னா, போயிட்டு வரப் போறா… இதுக்கு ஏன் அவ கிட்டச் சண்டை போட்டுட்டு இருக்க?” என்று துரையை அதட்டிய விசாலாட்சி, ராதாவிடம் திரும்பி, “நீ போய்ப் ரெடி ஆயிட்டு வா ராதா. நான் நம்ம டிரைவர் கிட்டச் சொல்லி ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகச் சொல்றேன்,” என்றார்.
“சரிக்கா, அப்போ அவ கூட நானும் போயிட்டு வரேன்,” என்று துரை சொல்ல…
துரையும் தன்னுடன் வருகிறார் என்றதும் ராதாவிற்கு “பக்” என்று ஆகியது. ஒன்றுமில்லாத காலை டாக்டரிடம் காட்டுகிறேன் என்று சொல்லி, சந்தோஷைப் பார்க்கத்தான் ஹாஸ்பிடலுக்குக் கிளம்ப அடம் பிடித்துக் கொண்டு இருக்கிறாள்.
இதில் துரை இவளுடன் வந்தால் காரியம் கெட்டு விடுமே? எப்படித் துரையை கழட்டிவிட்டுச் செல்வது என்று தெரியாமல் ராதா முழித்துக் கொண்டிருக்க…
“என்ன துரை, நீயும் ராதா கூட ஹாஸ்பிடல் போறேன்னு சொல்ற? நீ இப்போ தானே சொல்லிட்டு இருந்தே கல்யாண வேலை எல்லாம் நிறைய இருக்குன்னு… நீ போய்ட்டா அப்புறம் அந்த வேலையெல்லாம் யார் பார்க்கிறது? நீயும் நானும் கொஞ்சம் வெளியே போக வேண்டிய வேலை இருக்கு. போயிட்டு வரலாம் வா…” என்று சொல்லி வெங்கடாசலம் துரையை அழைக்க…
“அப்பாடா! நல்லவேளை மாமா வந்து என் அப்பன் ‘டெரர் ஃபீஸ்’ கிட்ட இருந்து என்னைக் காப்பாத்தி விட்டுட்டாரு. இங்க நிக்கக் கூடாது. முதல்ல ஹாஸ்பிடலுக்குப் போகணும்,” என்று வேகமாகச் சென்று ரெடியாகி விட்டு விசாலாட்சியிடம் வந்தவள், “அத்தை, நான் ரெடியா இருக்கேன். ஹாஸ்பிடல் போயிட்டு வரவா?” என்று கேட்க…
“இரு ராதா, நீ எங்க தனியாப் போற? வயசுப் புள்ள. அதுவும் ஹாஸ்பிடலுக்குத் தனியாப் போனால் பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க? செண்பகமும் உன் கூட வரேன்னு சொன்னா, நீயும் செண்பகமும் போயிட்டு வாங்க,” என்று சொல்லிச் செண்பகத்தை ராதாவுடன் அனுப்பி வைக்க…
செண்பகத்தைத் தன்னுடன் வர வேண்டாம் என்று சொல்வதற்கு ராதாவால் முடியவில்லை. தன் அப்பா வருவதற்குப் பதிலாக செண்பகம் வருவது எவ்வளவோ பரவாயில்லை என்று நினைத்தவள், இவரை எப்படியாவது சமாளித்து விட்டுச் சந்தோஷை ஹாஸ்பிடலில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள், செண்பகத்துடன் ஹாஸ்பிடல் கிளம்பினாள்.
ராதா கார் ஏறியதும் தன் மொபைலில் இருந்து சந்தோஷிற்கு ஹாஸ்பிடல் கிளம்புவதாக மெசேஜ் அனுப்ப…
அவள் எப்போது அழைப்பாள் என்று காத்திருந்தவன், ஹாஸ்பிடலுக்குத் தன் திட்டத்தோடு காரை எடுத்துக் கொண்டு விரைந்தான் சந்தோஷ்.
ஏற்கனவே அப்பாயின்மென்ட் செய்துவிட்டுத் தான் ஹாஸ்பிடல் வந்திருந்ததால், ராதா வந்து சிறிது நேரத்திலேயே டாக்டரைப் பார்த்துவிட்டு ராதாவும் செண்பகமும் வெளியே வர…
தன் மொபைலில் அப்போதுதான் மெசேஜ் வர, சந்தோஷ் அவளை கேண்டினுக்குப் பக்கத்தில் வரச் சொல்லி மெசேஜ் அனுப்ப. அதைப் பார்த்ததும் ராதா, “இப்போது எப்படி செண்பகத்திற்குத் தெரியாமல் சந்தோஷைச் சந்திப்பது?” என்று யோசித்துக் கொண்டு நின்று இருக்க…
செண்பகம், “ராதா, அதான் டாக்டர் பார்த்தாச்சு இல்லையா? நீ போய்ப் மருந்து வாங்கிட்டு வா… நான் இங்கேயே உட்கார்ந்திருக்கேன். ரெண்டு பேரும் சீக்கிரமா போகலாம். அங்க வீட்டுல அண்ணியும் உன் அம்மாவும் தனியா வேலை பார்த்துட்டு இருப்பாங்க…. நம்ம போனால் அவங்களுக்கு எதுவும் ஹெல்ப் பண்ணலாம். சீக்கிரமா போயிட்டு வா…” என்று செண்பகமே ராதாவிற்கு அங்கிருந்து செல்ல வழி வகுத்துக் கொடுக்க…
ராதா, செண்பகமே தன்னை மறந்து போகச் சொல்லித் தனியாக அனுப்பி வைக்கவும் ராதாவிற்கு நிம்மதியாக இருந்தது. “கடவுளே, நீ இருக்க குமாரு… எனக்குப் பக்கபலமா நீ இருக்க குமாரு… உன்னை நம்பி நான் என்ன வேணா செய்யலாம்,” என்று கடவுளைத் தன் நண்பன் போல நினைத்து மனதில் அவருடன் பேசிக் கொண்டவள், “சரி செண்பகம் அம்மா, இங்கேயே இருங்க…. நான் போயிட்டுச் சீக்கிரமா வந்திடுறேன்,” என்று சொல்லிவிட்டு ராதா வேகமாக மெடிக்கல் ஷாப் சென்று மருந்துகளை வாங்கிவிட்டு, சந்தோஷ் வரச் சொன்ன இடத்திற்குச் சென்றாள்.
ராதாவுக்காகக் காத்திருந்த சந்தோஷ், அவள் இன்னும் தான் சொன்ன இடத்திற்கு வராமல் போகவே, “என்ன இவ்வளவு நேரம் ஆகியும் அந்தக் குட்டச்சியை காணோம். கூட வந்தவங்களைச் சமாளிச்சுட்டு வரத் தெரியல. இதுல என்னென்ன பேச்சு பேசுறா! வரட்டும். இன்னைக்கு என்கிட்ட நல்லா வசமா மாட்டிக்கிட்டா,” என்று அவளை நினைத்துக் கொண்டிருக்க…
அப்போது சந்தோஷ் சொன்னது போலவே கேன்டீன் பக்கம் வந்த ராதா, அவனைக் காணாமல் தேடிக் கொண்டே இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டு வர, கேன்டீன் பக்கத்தில் மறைவாக நின்றிருந்த சந்தோஷ், ராதாவைப் பார்த்ததும் அவள் தன் அருகில் வரும் வரை காத்திருந்தவன்.
தான் இருக்கும் இடத்திற்கு அருகில் அவள் வரும் வரை பொறுமையாக இருந்தவன், அவள் வந்ததும் சட்டென்று அவள் கையைப் பிடித்து இழுத்துச் சுவற்றில் சாய்த்து நிறுத்தி அவளைப் பார்க்க…
இப்படித் திடீரென்று தன்னை இழுத்துச் சுவற்றில் வைத்துச் சாய்த்து நிறுத்திய சந்தோஷைப் பார்த்தவள், “ஓய் வாத்தி… இங்கதான் நின்னுட்டு இருக்கியா? நான் உன்னைக் காணோம்னு தேடிட்டு இருந்தேன்,” என்று ராதா சொல்ல…
“இப்படித் திடீர்னு உன்னை ஒருத்தன் புடிச்சு இழுத்துச் சுவற்றில் சாய்த்து நிறுத்தி வைக்கிறேன். கொஞ்சம் கூடப் பயமே இல்லாமல் ரொம்ப அசால்ட்டா பேசுற… இப்படித்தான் கொஞ்சம் கூடக் கவனமில்லாமல் வேடிக்கை பார்த்துட்டே நடந்து வருவியா?” என்று சந்தோஷ் அவளைக் கடிந்து கொள்ள…
“என் கையத் தொட்டதுமே நீதான்னு கண்டு பிடிச்சிட்டேன். அப்புறம் எதுக்கு நான் பயந்து போகணும் அல்லது பதட்டப்படணும்? அதனால தான் சத்தம் கூடப் போடாம அமைதியா இருந்தேன்,” என்றால் ராதா.
அவள் அப்படிச் சொன்னதும், தன் ஸ்பரிசம் பட்டதும் தன்னை அடையாளம் கண்டு கொள்ளும் அளவிற்குத் தன்னுடன் நெருங்கி இருக்கும் ராதாவை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்ட சந்தோஷ் அவளிடம், “சரி, உன் கல்யாணத்தை நிறுத்தறதுக்கு என்ன பிளான் பண்ணி வச்சிருக்க?” என்று கேட்டான்.
“நான் எதுக்குக் கல்யாணத்தை நிறுத்தப் பிளான் பண்ணனும்? உனக்கு நான் வேணும்னா, நீ தான் பிளான் பண்ணி இந்தக் கல்யாணத்தை நிறுத்தனும். நானெல்லாம் எதுவும் பண்ண மாட்டேன்,” என்று ராதா சொல்ல…
“நானும் பிளான் பண்ணிட்டுத் தான் இருக்கேன் உன் கல்யாணத்தை நிறுத்த. சரி இருந்தும் நீ ஏதாவது பிளான் பண்ணி இருப்பியே? என்ன விட ஒருவேளை பெட்டரா எதுவும் யோசிச்சு வச்சிருந்தால், பேசாம அதையே செஞ்சிடலாம்னு தான் உன்கிட்ட கேட்டேன்,” என்றான் சந்தோஷ்.
“நீ நினைக்கிற அளவுக்கெல்லாம் நான் எதுவுமே யோசிக்கல. நான் ஜாலியா இருக்கேன். எதையும் யோசிச்சு வீணா என் மூளைக்கு வேலை கொடுத்து என் மூளையை டென்ஷன் பண்ண நான் தயாரா இல்லப்பா,” என்றால் ராதா.
“யோசிக்கிறதுக்குக் கூட உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு, அப்படித்தானே குட்டச்சி?” என்றான் சந்தோஷ்.
“நான் குட்டச்சி தான். அதனால தான் என் குட்டி மூளைக்கு நான் வேலை கொடுக்கல. நீ தான் வளர்ந்து நல்லா பனை மரம் மாதிரி இருக்கியே, உன் மூளையும் நல்லா பெருசாத் தானே இருக்கும்? அதற்கு வேலை கொடுத்து இந்தக் கல்யாணத்தை நிறுத்த ஏதாவது ஐடியா பண்ணியா? இல்லையா?” என்றாள் ராதா.
**”நான் ஒரு ஐடியா யோசிச்சு வச்சிருக்கேன். உனக்கு **’ஓகே’ன்னு சொல்லு, அதையே செஞ்சிடலாம்,” என்றான் சந்தோஷ்.
ஏற்கனவே நின்று போன தன் கல்யாணத்தை நிறுத்தப் பிளான் செய்து வந்திருக்கிறேன் என்று சந்தோஷ் கூறவும், உள்ளுக்குள் அவனை நினைத்துச் சிரித்தவள், வெளியில் காட்டிக் கொள்ளாமல், அவன் என்ன சொல்லப் போகிறான் என்று ஆர்வமாக, “பிளான் பண்ணிட்டியா? சொல்லு… சொல்லு… என்ன பண்ணப் போற என் கல்யாணத்தை நிறுத்த?” என்று ஆர்வமாக ராதா கேட்க…
“நீ தான் இப்போ உன் வீட்டை விட்டு வெளியே வந்துட்டியே. இப்படியே என் கூட வந்துடு. நம்ம ரெண்டு பேரும் போய்ப் ஏதாவது ஒரு கோயில்ல வச்சு கல்யாணம் பண்ணிட்டு வந்து உன் அம்மா அப்பா முன்னாடி நிற்ப்போம். அதுக்கப்புறம் அவங்க நம்ம ரெண்டு பேரையும் ஏத்துக்கிட்டுத் தானே ஆகணும்,” என்று சந்தோஷ் சொல்ல…
சந்தோஷ் சொன்ன ஐடியாவைக் கேட்டு அவனைத் தீயாக முறைத்த ராதா, “யோவ்! உனக்கு வேற ஐடியாவே கிடைக்கலையா? இது என்ன, யாருக்கும் தெரியாமல் ஓடிப்போய்க் கல்யாணம் பண்ணிக்கலாம்னு கூப்பிடுறே??”
“நேரா என் அம்மா அப்பா கிட்ட வந்து என்னைப் பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணிக்கத் தைரியம் இல்ல. இப்படி கோழை மாதிரி என்ன வீட்டை விட்டு ஓடி வரச் சொல்ற. ச்சி… உன் தைரியம் இவ்வளவுதானா?” என்று ராதா அவனை அசிங்கப்படுத்த…
ராதா தன்னை அசிங்கப்படுத்தியதும் சந்தோஷத்திற்கு கோபம் வந்துவிட… அவளை கழுத்தோடு சேர்த்துச் சுவற்றில் அழுத்திப் பிடித்தவன். “ஏய்! யாரைப் பார்த்து என்னடி பேச்சு பேசுற? நான் கோழைன்னு உனக்குத் தெரியுமா?”
**”உன் அப்பா உன் கல்யாணத்துக்கு என்னை வரச் சொல்லி என் வீட்டுக்கு வந்து இன்விடேஷன் கொடுத்த அப்போவே, நீயும் நானும் லவ் பண்றோம்னு உன் அப்பாவிடம் நான் நேருக்கு நேராச் சொன்னவன்டி…. என்னைப் பார்த்து **’கோழை’ன்னு சொல்ற?” என்று சந்தோஷ் அவள் கழுத்தை நெறிக்க…
சந்தோஷ் ராதாவை அழுத்திப் பிடித்ததும், ராதாவிற்கு அவன் அழுத்தியதில் வலியால் கண்களில் கண்ணீர் வந்துவிட… இந்தக் கண்ணீர் அவன் கைகளில் படவும்தான் சந்தோஷ் சற்று நிதானத்திற்கு வந்தவன், அவள் கழுத்தில் இருந்து கையை எடுத்தவன்.
அவள் முகத்தைப் பார்க்க முடியாமல் திரும்பி நின்றவன் தன் கோபத்தைக் குறைத்துக் கொள்ள… தன் கை விரல்களை மடக்கி இறுக்கியவன் சுவற்றில் ஓங்கிக் குத்த… அதைப் பார்த்ததும் ராதா பதறியவள், வேகமாகச் சந்தோஷின் முன்னால் வந்த ராதா, “என்ன பண்ணி இருக்கே நீ… உன் கையில ரத்தம் வருது பாரு,” என்று ராதா அவன் கையில் இருந்த காயத்தைப் பார்த்துப் பதற…
தன் கையைப் பிடித்திருந்த அவள் கையைத் தன் மற்றொரு கையால் பிடித்து அவள் கையைத் தன் கைக்குள் பிடித்துக்கொண்ட சந்தோஷ், “முடிவா கேக்குறேன். என் கூட இப்போவே வரியா? இல்லையா?” என்றான் ராதாவின் முகத்தைப் பார்த்து…
சந்தோஷின் கைக்குள் இருந்து தன் கையைப் பிரித்துக் கொண்ட ராதா, “நான் வரலை,” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு…
“இதுதான் உன் முடிவா?” என்றான் சந்தோஷ்.
அவனிடம் பதில் சொல்லாமல் ராதா திரும்பாமல் அப்படியே நிற்க…
சந்தோஷ், தான் அழைத்ததும் தன்னை நம்பி ராதா வந்துவிடுவாள் என்று நினைத்தவனுக்கு, அவள் இப்படி “வரவில்லை” என்று சொன்னது பெருத்த ஏமாற்றமாகி விட…
அவள் மீது கோபம் அதிகம் ஆக… அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டான் சந்தோஷ்.
இவ்வளவு நேரம் ஆகியும் சந்தோஷ் அவள் சொன்ன பதிலுக்கு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க… தன் பின்னால் இருந்த சந்தோஷைத் திரும்பிப் பார்க்க…
அவன் அங்கு இல்லாமல் போகவே… ராதாவின் மனம் மிகவும் கனம் ஆகி விட்டது.
“தன்னைப் புரிந்து கொள்ளாமல் இப்படிச் சென்றுவிட்டான்,” என்று ராதாவிற்கும் அவன் மேல் கோபம் வர… “ம்ஹும்! நீயா வந்து என்கிட்டே பேசாமல், நான் இனிமேல் உன்கிட்டே பேச மாட்டேன் வாத்தி,” என்று கூறிக் கொண்டவள், அங்கிருந்து செண்பகத்தோடு கனத்த இதயத்தோடு சென்றுவிட்டாள். 💔
