EPISODE 127
ராதாவிற்கும் கதிருக்கும் திருமணம் என்று பேசி முடித்திருந்த போது, துரை தன் சொந்தங்களையும், சந்தோஷின் தாய் மாமாவான முத்துவையும் சந்தோஷையும் அழைத்திருந்தார்.
வந்திருந்த துரையின் சொந்தங்கள் அனைவருக்கும் போன் செய்து தன் மகளுக்குத் திருமணம் இல்லை என்றும், கதிருக்கு வேறு பெண் பார்த்திருக்கிறது என்றும் சொல்லி, இந்தத் திருமணத்திற்கு மறக்காமல் வரவேண்டும் என்று அனைவருக்கும் திரும்பவும் போன் பண்ணிச் சொன்ன துரை, சந்தோஷிற்கும் முத்துவிற்கும் மட்டும் போன் செய்து சொல்லவில்லை. காரணம், “அதை எப்படியும் ராதா, சந்தோஷிடம் சொல்லி இருப்பாள். அதனால் அவர்களுக்குச் சொல்லத் தேவையில்லை,” என்று நினைத்துக் கொண்டார் துரை.
ஆனால், அவர் இப்போதே சொல்லி இருந்தால், இன்று ராதாவிற்கு நடக்க இருக்கும் சம்பவம் நடக்காமலே இருந்திருக்கும்.
முத்துவிற்கு இன்னும் சந்தோஷ் ராதாவை விரும்புவது தெரியாது. ராதாவின் திருமணத்திற்காக முந்தின இரவே வந்தவர், சந்தோஷுடன் தங்கிக் கொள்ள… சிவகாமி, “அவருடன் தன் வீட்டில் வந்து இருக்கச் சொல்லிக் வற்புறுத்தியும், “தங்கள் குடும்பத்தோடு வந்து மகனுடன் ஒரு நாள் பொழுதே கழிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக,” முத்துவின் மனைவி கமலா சிவகாமியிடம் சொல்ல… “சரி, மகன் கூட ஒரு நாள் முழுக்க இருந்துட்டு வந்து என் கூடயும் இருந்துட்டுப் போகணும்,” என்று கண்டிப்பாக சிவகாமி சொல்லவும், “சரி,” என்று சொல்லிவிட்டு முத்து, கமலா, சந்தோஷின் தம்பி ஸ்ரீ மூவரும் சந்தோஷின் வீட்டிற்கு இரவே சென்றுவிட்டனர்.
முத்து, சந்தோஷ், கமலா, ஸ்ரீ மூவருடனும் திருமணத்திற்கு வந்திருந்தார். காரில் அவர்களை அழைத்து வந்தவன், அவர்கள் மூவரையும் மண்டபத்தின் வாசலில் இறக்கிவிட்டு, அவர்களை உள்ளே செல்லச் சொல்லிவிட்டு, காரை ‘பார்க்’ செய்துவிட்டு வருவதாகச் சென்றான்.
மண்டபத்திற்குள் வந்த முத்து, கமலாவையும் ஸ்ரீயையும் ஒரு ஓரமாக அமரச் சொல்லிவிட்டு, நேராகத் துரையிடம் வந்து, துரையைக் கட்டிக்கொண்டு, “ரொம்பச் சந்தோஷம்டா துரை! உன் பொண்ணுக்குக் கல்யாணம் வச்சிருக்க. எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு… உன் சின்னப் பொண்ணைக் கரையேத்தப் போற… ஆமா, ஏன்டா, பெரியவ இருக்கிறப்போ சின்னவளுக்குக் கல்யாணம் பண்ற?” என்று துரையிடம் கேட்க…
அவரைப் புரியாமல் பார்த்த துரை, “பெரியவ ஒரு பையனை விரும்புறேன்னு சொல்லிட்டா. அதனால்தான் சின்னவளுக்குக் கல்யாணம் வெச்சிருந்தேன்,” என்று சொன்னார் துரை.
“என்னடா கல்யாணம் ‘வெச்சிருந்தேன்னு’ சொல்ற? கல்யாணம் ‘வச்சிருக்கேன்னு’ சொல்லு,” என்றார் முத்து.
“என்ன? நிஜமாகவே புரியாமல் தான் பேசுறியா?” என்று முத்துவைப் பார்த்த துரை, “டேய், என் பொண்ணுக்கும் என் அக்கா பையன் கதிருக்கும்தான் முதல்ல கல்யாணம் பேசி வைத்திருந்தோம். ஆனா, என் அக்கா பையன் வேற ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு சொல்லிட்டான். அதனால, அந்தப் பொண்ணையே அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் பேசி முடிச்சிட்டோம்,” என்று சொன்னார் துரை.
“என்னடா சொல்ற துரை… அப்போ கல்யாணம் உன் பொண்ணுக்கு இல்லையா? நான் உன் பொண்ணுக்குத் தான் கல்யாணம் என்று நினைத்து என் பொண்டாட்டி, பிள்ளை எல்லாம் கூட்டிட்டு வந்து இருக்கேன்,” என்று சொல்லி தூரத்தில் அமர்ந்திருந்த கமலாவையும் ஸ்ரீயையும் காட்டி முத்து சொல்ல…
முத்துவிற்குச் சந்தோஷும் ராதாவும் காதலிப்பது தெரியாது போல… “இவனைத்தான் அதெல்லாம் எதையும் கேட்காமல் இருக்கிறேன்,” என்று நினைத்துக் கொண்ட துரை, முத்துவைக் கூட்டிக் கொண்டு போய்க் கமலாவின் அருகில் அமர வைத்தவர். கமலாவையும் ஸ்ரீயையும் நலம் விசாரித்துவிட்டு முத்துவிற்கு, “என் அக்கா பையன் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு எனக்குப் பொண்ணு மாதிரி தான். அதனால கல்யாணம் முடிஞ்சதும் நீயும் கமலாவும் என் அக்கா பையனையும் அவன் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணையும் ஆசிர்வாதம் பண்ணிட்டுத் தான் கிளம்பனும்,” என்று அவரை அமர வைத்துவிட்டு மற்றவர்களைக் கவனிக்க துரை சென்றுவிட்டார்.
______________________________
காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்த சந்தோஷ், அவன் அப்பா எங்கே அமர்ந்து இருக்கிறார் என்று தேடிக் கொண்டு வந்தவனைப் பார்த்த கனகா. “அடடே! வாங்க தம்பி. எப்படி இருக்கீங்க?” என்று அவனிடம் வந்து பேச…
ராதாவின் அம்மா வந்து சந்தோஷிடம் பேசவும், அவரைப் பார்த்து, “ஆண்டி, நல்லா இருக்கீங்களா?” என்றான்.
“நல்லா தான் இருக்கேன் தம்பி. ஜூஸ் கேட்டதில் இருந்து…”
“அம்மா, அப்பா, தம்பி எல்லாருமே வந்து இருக்கோம் ஆண்டி,” என்றான் சந்தோஷ்.
“என்ன தம்பி, நாம எல்லாரும் ஒரே ஊர்க்காரங்க. என்னை போய்ப் யாரோ மாதிரி ‘ஆண்டி’ன்னு கூப்பிடறீங்க… நல்லா வாய் நிறைய ‘அத்தை’ன்னு கூப்பிடுங்க தம்பி,” என்றார் கனகா.
அவர் அப்படிச் சொன்னதும், “கூடிய சீக்கிரத்திலேயே நான் உங்களை ‘அத்தை’ன்னு கூப்பிடத் தான் போறேன் பாருங்க,” என்று நினைத்துக் கொண்டவன், “சரிங்க அத்தை,” என்றவன், “அத்தை, கல்யாணப் பொண்ணு ரூம் எங்கே?” என்று கேட்டான்.
“ஏன் தம்பி?” என்றார் கனகா.
“நான் தான் அவங்க படிக்கிற ‘டிபார்ட்மென்ட்டுக்கு’ ஹெட். அதுவும் இல்லாம என்கிட்டே தானே அவங்க ‘டியூஷன்’ படிக்கிறாங்க? அதான் அவங்க கல்யாணம் பண்றதுக்கு முன்னே ஒரு முறை நேரில் பார்த்து அவங்களுக்கு வாழ்த்து சொல்லலாம்னு தான் கேட்டேன்,” என்றான் சந்தோஷ்.
“அப்படியா? சரி தம்பி, என்னோட வாங்க. நான் அங்கே தான் போறேன்,” என்று சொல்லிக்கொண்டு, சந்தோஷை அழைத்துக்கொண்டு மணமகள் அறை இருக்கும் இடத்திற்குச் சந்தோஷை அழைத்துக்கொண்டு சென்றார்.
_____________________________
சங்கவி பட்டுச் சேலை கட்டி மிகவும் அழகாக தன்னை அலங்கரித்துக் கொண்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தவள், ஹாலில் அவள் அப்பாவின் முன் வந்து நின்று, “அப்பா, நான் எப்படி இருக்கேன்?” என்று கேட்டாள். அவளைப் பட்டுச் சேலையில் பார்த்தவர், “அப்படியே கல்யாணப் பொண்ணு மாதிரியே இருக்கமா,” என்றார்.
“இன்னிக்கு நம்ம வீட்டில் இருந்து கல்யாண மண்டபம் போயிட்டுத் திரும்பி வரும்போது, நீயும் கார்த்திக்கும் கல்யாணம் பண்ணிட்டு, தம்பதிகளாத் தான் இந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்து வரணும்,” என்றார் வேதாச்சலம்.
“ஆமாம் அப்பா! நான் இன்று எப்படியும் அந்தக் கார்த்திக்கைக் கல்யாணம் பண்ணிக்கத் தான் போறேன். இதைத் தடுக்க யாராலும் முடியாது,” என்றால் சங்கவி.
“சபாஷ் சங்கவி… அங்கே உன்னை எதிர்க்க எத்தனை பேர் வந்தாலும், இந்த அப்பா உனக்குத் துணையாக இருப்பேன். கவலைப் படாதேமா,” என்று தன் பெண் என்னவோ நல்ல காரியம் செய்யப் போகிறவள் போல, அவள் செய்யும் வேலைக்கு வேதாச்சலம் அவளுக்குத் துணையாக இருப்பதாகப் பேசிக் கொண்டு இருக்கிறார்.
சிவகாமி ரெடியாகித் தன் அறையில் இருந்து வெளியே வந்தவர், சங்கவி பட்டுச் சேலை அணிந்து அழகாக நின்று கொண்டு இருப்பதைப் பார்த்தவருக்கு ஆச்சர்யத்தில் கண்கள் விரிய… அவளிடம் வந்தவர், “என் பொண்ணா இது? எவ்வளவு அழகா ரதியாட்டம் இருக்கா…” என்று சொல்லித் தன் கைகளால் அவள் முகத்தில் வைத்துத் திருஷ்டி வழித்தார்.
அவர் செய்வதைப் பார்த்த சங்கவி, “அம்மா, என்ன பண்ற? என் மேக்கப் எல்லாம் கலைஞ்சிடும்,” என்று அவரிடம் கோபப்பட…
“கோவிக்காத சங்கவி. என் பொண்ணை இப்படி அழகாப் பார்த்ததுல எனக்கு ரொம்பச் சந்தோஷம் ஆகிருச்சு. அதான் என்ன பண்றதுன்னு தெரியாமல் அப்படிப் பண்ணிட்டேன்,” என்றவர், அவர் கணவரைப் பார்த்து, “எங்க, நம்ம பொண்ணுக்குக் கல்யாணக் கலை வந்திருச்சுன்னு நினைக்கிறேன். அவ இன்னிக்கு எவ்வளவு அழகா இருக்கா பாருங்களேன்,” என்று வேதாச்சலத்திடம் கூற…
“ஆமாம், அம்மா சிவகாமி. உன் பொண்ணுக்கு உண்மையாவே கல்யாணக் கலை வந்திருச்சு,” என்றவர், சங்கவியைப் பார்த்துச் சிரிக்க…
சங்கவி அவள் அம்மாவிடம் எதுவும் கூறாமல், “அம்மா, இன்னிக்கு நாம கதிர் கல்யாணம் போறோம் இல்லையா? அந்தக் கல்யாணத்துல தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறவரை உங்களுக்குக் காட்டப் போறேன்,” என்று சொல்ல…
“என்னடா சொல்றே? வெங்கடாசலம் அண்ணா வீட்டுக்கல்யாணத்துக்கு நீ கல்யாணம் பண்ணிக்கப் போற மாப்பிள்ளை வராராம்? அப்போ அந்தப் பையனோட அம்மாவும் அப்பாவும் வருவார்களா?” என்று கேட்டார் சிவகாமி.
“அவங்க அம்மா அப்பா மட்டும் இல்லை. மொத்தக் குடும்பமும் அங்கே தான் இருப்பாங்க,” என்று வேதாச்சலம் சொல்ல…
“எங்க, இதை முதலே சொல்லக் கூடாதா?” என்றவர், சங்கவியைப் பார்த்து, “என்னடா….. இது இவ்வளவு கம்மியா நகை போட்டு இருக்கே? இப்படிப் போனால் பையன் வீட்ல உன்னைப் பார்க்கிறப்போ என்ன நினைப்பாங்க?” என்றவர், வேகமாகத் தன் அறைக்குள் சென்றவர். உள்ளிருந்து ஒரு பெரிய ஆரத்தை எடுத்து வந்து அவள் கழுத்தில் போட்டுவிட்டார்.
“அம்மா, எதுக்கு இதெல்லாம்? எவ்வளவு பெரிய ஆரத்தைக் கொண்டு வந்து போட்டு விடுறீங்க…” என்ற சங்கவி அந்த ஆரத்தைக் கழட்டப் போக…
“கழட்டாத சங்கவி! பையனோட அம்மா அப்பா உன்னை பார்க்கிறப்போ நீ நல்லா அழகா தெரிய வேண்டாமா? பேசாமல் வா…” என்று சொல்லி அவள் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு முன்னே சென்றார் சிவகாமி.
தன் அம்மா தன் கையைப் பிடித்துக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டு செல்ல… அவள் அம்மா அவள் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பார்த்து நெகிழ்ந்து போனாள் சங்கவி.
சங்கவியை அழைத்துக்கொண்டு வேதாச்சலமும், சிவகாமியும் கதிர்-கீர்த்தி திருமணத்திற்குச் சென்றனர்.
____________________
கீர்த்திக்குப் வீடியோ கால் செய்து பேச கதிர் அழைக்க, அவனது அழைப்பை ராதா எடுத்தவள், அவனிடம், “இன்னும் கொஞ்ச நேரத்தில் தான் உங்களுக்குக் கல்யாணம் ஆகப் போகுதே. அதுக்குள்ள இவளைப் பார்க்காமல் உங்களால் இருக்க முடியலையா?” என்று கேட்டாள்.
கதிரின் அருகில் இருந்த விக்கி, “இவ எங்கே போனாலும் எல்லாருக்கும் இடைஞ்சல் பண்ணவே வந்து இருக்கிறாள்,” என்று ராதாவைத் திட்ட…
“நான் அப்படித்தான் செய்வேன்,” என்று ராதா கதிர், விக்கி இருவரிடமும் வம்பு செய்ய…
அவளிடம் கீர்த்தி போனைப் பிடுங்க வர…
கீர்த்தியைத் தன்னிடம் இருந்து போனைப் பிடுங்காமல் இருக்க… அவளிடம் மாட்டிக் கொள்ளாமல் இங்கும் அங்கும் ஓடிய ராதா, நிலானி அமர்ந்து இருந்த சேரின் அருகில் வரவும், நிலானி இதுதான் சமயம் என்று ராதாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அவளிடம் இருந்த போனைப் பறித்து கீர்த்தியின் கையில் கொடுத்து, “நீ போய் பேசு. நான் இவளைப் பார்த்துக்கிறேன்,” என்று சொல்லி கீர்த்தியை அனுப்பி வைத்தாள்.
நிலானியிடம் இருந்து போனை வாங்கிய கீர்த்தி வேகமாக உள்ளே சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு போனைப் பார்க்க…
இவர்கள் மூவரும் செய்யும் அலப்பறையை கதிர் வீடியோ காலில் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்க… அவன் அருகில் நின்று விக்கியும் இதையெல்லாம் பார்த்தவன், “பார்த்தியா கீர்த்தி! கடைசில என் பொண்டாட்டி தான் உனக்கு ஹெல்ப் பண்ணினா பாரு,” என்று சொல்லி நிலானியின் பெருமையை விக்கி பேச ஆரம்பிக்க…
“அண்ணா! உங்க பொண்டாட்டியைப் பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும். நீங்க வந்து உங்க பொண்டாட்டியை ராதா கிட்டே இருந்து காப்பாத்துங்க. நான் என் ஆள் கூடப் பேசணும்,” என்று கீர்த்தி விக்கியிடம், “எங்களை ‘டிஸ்டர்ப்’ செய்யாதீர்கள்,” என்று சொல்லிப் பேச…
“போதும் தங்கச்சி! நீ சொல்ல வர்றது புரிஞ்சுது. நான் கிளம்புறேன். நீங்க பேசுங்க,” என்று சொல்லிவிட்டு விக்கியிடம், “கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னையும் என்னையும் பிரிக்கிறா பாருடா மச்சான்,” என்று கதிரிடம் விக்கி முறையிட…
“ஆமாம்டா மச்சி! நீ போய் நிலானியைப் பார்த்துட்டு வந்திரு. நான் அதுக்குள்ள இவளை மிரட்டி வைக்கிறேன்,” என்று கதிர் சொல்ல…
“டேய் மச்சான்! நீயுமாடா…” என்று விக்கி அதிர்ச்சி விலகாமல் கேட்டவன், “சரிடா நான் போறேன்,” என்றான்.
விக்கி சென்றதும் கீர்த்தியைப் பார்த்த கதிர், அவளையே பார்த்துக் கொண்டு இருக்க…
அதில் வெட்கம் கொண்டவள், “என்ன அப்படிப் பார்க்குறேடா…” என்று நெளிந்து கொண்டே கேட்டாள் கீர்த்தி.
“என்னடி… நீ நாளுக்கு நாள் அழகாகிட்டே போறே…. ரெண்டு நாள் முன்னே உனக்கு மோதிரம் போட வந்த அப்போ ஒரு மாதிரி அழகா இருந்தே…
இன்னைக்கு என்னடான்னா… இன்னும் அழகாத் தெரியுறே,” என்றான் கதிர்.
அவன் பேசியதைக் கேட்டு மேலும் வெட்கம் வந்தவளாக, அவனையே பார்க்க…
“ஓய்…” என்றான்.
“ம்ம்…” என்றால் பதிலுக்கு.
“ஒரு வாட்டி மாமான்னு கூப்பிடுடி…” என்றான்.
“ம்ம்ஹும்…. மாட்டேன்,” என்றாள் அவள்.
“ஒரு வாட்டி சொல்லுடி கீர்த்தி,” என்று கெஞ்சினான்.
“நீதானே அன்னிக்கு பெரிய இவனாட்டம் சொன்னே, என்னை ‘மாமா’ன்னு கூப்பிட வைக்காமல் நீ என் கழுத்தில் தாலி கட்டமுடியாதுன்னு.
இப்போ என்ன ஆச்சு? இப்படி என்கிட்டே கெஞ்சிட்டு இருக்கே…” என்றாள் கீர்த்தி நக்கலாக அவனிடம்.
“ஆமாம், சொன்னேன் தான். அதுக்காக இப்படி என்னை கெஞ்ச விடுவியாடி..” என்றான் கதிர்.
“நீதானே சொன்ன… அப்போ செய். அதுக்கு அப்புறம் என் கழுத்தில் தாலியை கட்டு,” என்றாள்.
“உன்னை ‘மாமா’ன்னு என்னை கூப்பிட வைக்கிறேனா இல்லையான்னு பாரு,” என்றான் கதிர்.
“பாக்குறேன் பாக்குறேன்,” என்றாள் கீர்த்தி.
“சரி, என்னை ‘மாமா’ன்னு தான் கூப்பிட மாட்டேன்னு சொல்லிட்டே… ‘அட்லீஸ்ட்’ எனக்கு ஒரு முத்தம் ஆவது கொடு,” என்றான் கதிர்.
அவன் அப்படி கேட்டதும் கீர்த்தி “ம்ம்ஹும்…” என்று வேகமாகத் தலையை ஆட்ட….
“அப்போ ‘மாமா’ன்னும் கூப்பிட மாட்டே, முத்தமும் கொடுக்க மாட்டே. அப்படித்தானே… உனக்கு என்னை வர வர பிடிக்கவே இல்லை. அதனால் தான் நீ நான் என்ன கேட்டாலும் செய்ய மாட்டேங்குறே…” என்றான் கோபமாகக் கதிர்.
அவன் கோபித்துக் கொண்டான் என்று தெரிந்து கொண்ட கீர்த்தி… “டேய் கதிர்! சாரிடா…” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.
“உன் சாரியும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம்,” என்றவன் போனைத் துண்டித்துவிட…
கீர்த்தி திருமணத்திற்கு முன் அவன் கேட்கும் ரெண்டு விஷயங்களையும் ‘முடியாது’ என்று சொல்லிவிட்டோமே, இப்படி கோபித்துக் கொள்கிறானே என்று வருத்தப்பட்டாள். கீர்த்தி கதிரிற்கு “சாரி” என்று ஒரு மெசேஜை அனுப்பி வைத்துவிட்டு, தான் இருந்த அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வர…
________________
கீர்த்திகா உள்ளே சென்ற பிறகு, அவர்கள் இருக்கும் அறைக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கவும் இருவரும் வாசல் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். நிலானியிடம், “ஏன்டி உன் புருஷன், அதான் விக்கி அண்ணா, கொஞ்ச நேரம் கூட உன்னை விட்டுட்டு இருக்க மாட்டாரா?” என்று சொல்லிக்கொண்டே, “இரு, இன்னிக்கு நான் விக்கி அண்ணாவை என்ன செய்றேன் பாரு,” என்று சொல்லிக் கொண்டே நிலானியைப் பார்த்தவாறு சென்று ராதா கதவைத் திறந்தாள்.
ராதா கதவு திறந்ததும் நிலானியின் முகம் மாறிவிட… “விக்கி அண்ணாவைப் பார்த்தது ஏன் உன் முகம் இப்படிப் போகிறது?” என்று கேட்டுக் கொண்டே வாசல் பக்கம் திரும்பிப் பார்க்க…
அவர்கள் அறை முன் சந்தோஷும் அவனுடன் கனகாவும் நின்றிருந்தனர். இந்த நேரத்தில், அதுவும் மணமகள் அறைக்கு வந்திருந்த சந்தோஷைப் பார்த்ததும் ராதாவிற்குப் பேச்சே எழவில்லை. ஏற்கனவே அவன் மீது பயங்கர கோபத்தில் இருந்தவள், அவனிடம் எதுவும் பேசாமல் அவள் அம்மாவைப் பார்த்து, “என்னம்மா?” என்று கேட்டாள்.
“ஒன்னும் இல்லைடி. தம்பி தான் கல்யாணப் பொண்ணைப் பார்க்கணும்னு சொல்லுச்சு. அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்,” என்று சொன்னவர், சந்தோஷிடம் திரும்பி, “தம்பி, நீங்க பேசிட்டு இருங்க. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு,” என்று சொல்லிவிட்டு கனகா ராதாவிடம், “அவரை நல்லபடியா கவனிச்சுக்க,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல…
அவர் சென்றதும் வேகமாக அறைக்குள் வந்து கதவைச் சாற்றிய சந்தோஷ், நிலானியையும் ராதாவையும் மாறி மாறிப் பார்த்தவன். ராதாவை மேலிருந்து கீழாகப் பார்த்துவிட்டு… “நான் அவ்வளவு சொல்லியும் என் கூட வராம, உன் மாமனைக் கல்யாணம் பண்ணிக்க இவ்வளவு அழகா ‘டிரஸ்’ பண்ணி இருக்கியா நீ?” என்றான் கோபமாக சந்தோஷ்.
“நீ சொன்னதும் நான் உன் கூட வந்துடனுமா?” என்றவள், “இப்போ எதுக்கு நீ வந்து? முதல்ல இங்கிருந்து வெளியே போ,” என்றால் ராதா சந்தோஷிடம்.
அவர்கள் இருவரும் பேசியதைப் பார்த்த நிலானி, “நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. நான் உள்ள போறேன்,” என்று கீர்த்திகாவின் அறைக் கதவைத் திறக்கப் போக… அப்போது கீர்த்திகாவும் கதிருடன் பேசிவிட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.
வெளியே வந்த கீர்த்திகா நிலானியைப் பார்த்து, “என்னடி?” என்று கேட்க, அவள் திரும்பித் தன் கையை உயர்த்தி, ராதாவும் சந்தோஷும் நின்றிருந்த இடத்தைக் காட்டினாள்.
“அவங்க ரெண்டு பேரும் எதுவும் பேசுவாங்க. நம்ம எதுக்கு இங்க ‘டிஸ்டர்ப்’ பண்ணிட்டு? வா உள்ளே போகலாம்,” என்று சொல்லி கீர்த்தி, நிலானியின் சேரை நகர்த்தப் போக…
“நீங்க ரெண்டு பேரும் போக வேண்டாம். இங்கேயே இருங்க,” என்று சொன்ன சந்தோஷ், ராதாவிடம் திரும்பி, “இப்போ நீ முடிவா என்ன சொல்ற?” என்று கேட்க…
“நான் எங்கேயும் வரல,” என்றால் ராதா தன் கைகளைக் கட்டிக்கொண்டு கோபமாக.
“சார், நீங்க ரெண்டு பேரும் ஏதோ முக்கியமான விஷயம் பேசுறீங்க போல… நாங்க இங்க இருக்கிறது சரியா இருக்காது. நாங்க ரெண்டு பேரும் உள்ளே போறோம்,” என்று கீர்த்திகா சொல்ல…
“நீங்க ரெண்டு பேரும் எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே இருங்க,” என்று சொன்னவன், “எங்க கல்யாணத்துக்குச் சாட்சி வேண்டாமா?” என்று சொல்லிவிட்டு, வேக வேகமாகத் தன் பாக்கெட்டில் இருந்த தாலியை எடுத்து ராதாவின் கழுத்தில் கட்டிவிட்டான்.
திடீர் என்று சந்தோஷ் தன் கழுத்தில் தாலியைக் கட்டவும், இதை எதிர்பார்த்திராத ராதா அதிர்ச்சியில் உறைந்துபோய் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருக்க…
இங்கே நிலானியும் கீர்த்தியும் கூட அதே அதிர்ச்சியில் தான் சந்தோஷைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.
“அவ்வளவு சொல்லியும் நீ என்னை நம்பி வர மாட்டேன்னு சொல்லிட்ட இல்ல? சரி போ. இப்ப எப்படி நீ கல்யாணம் பண்றேன்னு நானும் பார்க்கிறேன்,” என்று சொன்னவன், அவள் கழுத்தில் இருந்த தாலியைத் தன் கையில் பிடித்து அவள் முகத்திற்கு நேராகக் காட்டியவன், “இப்போ நீ என் பொண்டாட்டி. இப்போ போய் நீ உன் மாமனைக் கல்யாணம் பண்றதா இருந்தா, தாராளமா பண்ணிக்கோ,” என்று சொன்னவன், கீர்த்தியையும் நிலானியையும் பார்த்து, “எங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கும் நீங்க ரெண்டு பேரும் தான் சாட்சி,” என்று சொல்லிவிட்டு, அந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றுவிட்டான்.
ராதாவின் கழுத்தில் சந்தோஷ் தாலியைக் கட்டிவிட்டு வெளியே சென்றுவிட… அதை நம்ப முடியாமல் அதிர்ச்சியுடன் நின்று இருந்த ராதாவைப் பார்த்து, நிலானியும் கீர்த்தியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே, நிலானியின் அருகில் வந்து அவள் தோளில் கை வைத்து ராதாவை அழைக்க…
ராதா அவர்கள் அழைத்ததும் கூடக் கவனிக்கும் நிலையில் இப்போது இல்லை.
அப்போது அவர்கள் அறைக் கதவை மறுபடியும் யாரோ தட்ட…
கீர்த்திகாவைப் பார்த்து, “கீர்த்தி! எனக்குப் பயமா இருக்கு… நீயே கதவைத் திறந்து யாருன்னு பாருடி,” என்று நிலானி சொன்னாள்.
“சரி, நீ இவ கூட இரு. நான் போய் யாருன்னு பார்க்கிறேன்,” என்று சொன்னவள், ராதாவைப் பிடித்து அருகில் இருந்த சோபாவில் அமர வைத்துவிட்டு, நிலானியை அவள் அருகில் இருக்க வைத்துவிட்டுச் சென்று கதவைத் திறக்க… வாசலில் துரை நின்று கொண்டிருந்தார்.
அறைக் கதவைப் பதட்டத்தோடு திறந்துகொண்டு நின்றிருந்த கீர்த்திகாவைப் பார்த்தவர். அவளைப் புருவம் சுருக்கிப் பார்த்து, “ராதா எங்கே?” என்றார் கடுமையாக.
துரையைப் பார்த்துப் பயந்தவாரே தன் கையை நீட்டி, ராதா அமர்ந்திருந்த சோபாவை காட்டி, “உள்ளே இருக்கிறார்,” என்று சொல்ல…
கீர்த்திகாவைத் தாண்டி உள்ளே வந்தவர் சோபாவில் அமர்ந்திருந்த ராதாவைப் பார்க்க…
ராதா அவர் தன் அருகில் வந்து நின்றது கூடத் தெரியாமல், இன்னும் திடீர் என்று சந்தோஷ் கட்டிய தாலியை நினைத்து அதிர்ச்சியில் அமர்ந்திருந்தாள்.
சந்தோஷ் ராதாவின் கழுத்தில் தாலியைக் கட்டிய பிறகு, துரை உள்ளே வந்திருக்கிறார். ராதாவின் கழுத்தில் இருக்கும் தாலியைப் பார்த்து துரை என்ன முடிவு எடுப்பார்?
