Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 145

உன் ரகசிய ரசிகை நான் 145

by Layas Tamil Novel
193 views

EPISODE 145

சந்தோஷ் விக்கியுடன் அவன் வீட்டில் இருந்ததால் ராதாவுடன் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பம் அவனுக்கு வாய்க்கவே இல்லை. வேண்டுமென்றே சந்தோஷிடம் முறுக்கிக் கொண்டு ராதாவும் அவன் முன் வேண்டுமென்றே சேலை கட்டி அழகாக வலம் வந்தவள், சந்தோஷை வெறுப்பேற்றிச் சுற்றித் திரிந்து கொண்டிருந்தாள்.

நிலானி இதைக் கவனித்து ராதாவிடம், “ஏய்… ராதா, ஏன்டி சந்தோஷ் சாரை இப்படி அலையவிடுற… பாவம் அவர் உன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்காரு” என்று கேட்டாள்.

ராதா, “புருஷனைப் பொண்டாட்டி பின்னாடி அலையவிட்டுப் பார்க்கிறதுல ஒரு தனி சுகம் இருக்குடி… அதை கல்யாணத்துக்குப் பிறகு தான் நான் புரிஞ்சுகிட்டேன். எப்படியும் நாளைக்கு நம்ம எல்லாம் ஹனிமூன் போகப் போறோம். அதுவரைக்கும் சந்தோஷ் என் பின்னால் அலையட்டும். அதுக்கப்புறம் அங்க போய் நான் அவனை சமாதானம் பண்ணிக்கிறேன். நீ இதையெல்லாம் நெனச்சு கவலைப்படாதே” என்றால்.

நிலானி ஆச்சரியமாகக் கேட்க, ராதா மேலும், “கல்யாணம் ஆன புதுசுல அப்படித்தான் எல்லா வீட்டுக்காரரும் இருப்பாங்களாம்மா… ஆனா கொஞ்ச நாள் ஆக… ஆக… அவங்களுக்கு நம்ம மேல இருக்கிற ஆர்வம் குறைஞ்சிடுமாம். அப்புறம் இந்த மாதிரி எல்லாம் நம்ம பின்னாடி அவங்க சுத்திக்கிட்டு இருக்க மாட்டாங்க. நாம தான் அவங்க பின்னாடி சுத்தணும். ஆரம்பத்திலேயே இவங்கள நம்ம கைக்குள்ள போட்டுக்கணும்னா இதையெல்லாம் பண்ணினாதான் முடியும். நீ நான் சொன்ன மாதிரி ட்ரை பண்ணு” என்று யோசனை சொன்னாள்.

“அப்படியா சொல்ற? சரி அப்போ நானும் நீ சொன்ன மாதிரி செஞ்சு பார்க்கிறேன்” என்று சொன்னாள் நிலானி.


விக்கி புது வீட்டிற்குத் தேவையான பொருட்கள் எல்லாம் வாங்குவதற்குச் சந்தோஷ் உடன் வெளியே சென்றிருந்தவன், வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து நிலானி அவனைக் கண்டுகொள்ளவே இல்லை.

‘இவளுக்குக் கால் சரியானதும் தானாகவே நடக்க ஆரம்பிச்ச பிறகு என்னைச் சரியாக் கவனிக்கிறதே இல்ல… இவ மட்டும் நல்லா நடக்க ஆரம்பிச்சுட்டா என் பாடு திண்டாட்டம் தான் போல இருக்கே’ என்று நினைத்துக் கொண்டான் விக்கி.

சாப்பிட்டு முடித்து தங்கள் ரூமிற்கு வந்த பிறகும் கூட விக்கியிடம் முகம் கொடுத்துப் நிலானி பேசவில்லை. விக்கி தன் அருகில் படுத்திருந்தவள் தோள் மீது கையைப் போட, அவள் அவன் கையைத் தட்டி விட்டாள். “பாருடா அந்த அளவுக்குக் கோவமோ!!” என்று வாய்விட்டுச் சொன்ன விக்கி, அவளைத் திரும்பிப் பார்க்குமாறு வலுக்கட்டாயமாகத் திருப்ப…

“என்ன வேணும் உங்களுக்கு?” என்று சிடுசிடுத்தாள் நிலானி.

“நானும் வந்ததிலிருந்து பார்த்துட்டு இருக்கேன் நீ என்கிட்ட முகம் கொடுத்துப் பேச மாட்டேன்னு சுத்திட்டு இருக்க… அப்படி என்ன ஆச்சு?” என்றான் விக்கி.

நிலானி, “கல்யாணமான புதுசுல என்கிட்டப் பேசுவதற்காக எவ்வளவு தடவை கால் பண்ணுவிங்க…. ஆனா ஊர்ல இருந்து வந்ததுக்குப் பிறகு நீங்க என்ன கவனிக்கிறதே இல்லை. வெளியே போனதிலிருந்து ஒரு தடவையாவது போன் பண்ணி என்ன பண்ற? சாப்டியா? அப்படின்னு ஏதாவது கேட்டீங்களா? எதுவுமே இல்ல” என்று புலம்பினாள்.

விக்கி, “நான்தான் புது வீட்டுக்காக திங்ஸ் வாங்குறதுக்குச் சந்தோஷத்தோட வெளியே போயிருந்தேனே… வேலை கொஞ்சம் ஜாஸ்தியா இருந்துச்சு. அதனால தான் உனக்குப் போன் பண்ண முடியல” என்று சமாதானம் கூறினான்.

ஆனால் நிலானி விடவில்லை, “உங்க கூட தானே சந்தோஷ் சாரும் வந்தாரு. ஆனா அவர் மட்டும் சரியா நேரத்துக்கு ராதாவுக்கு போன் பண்ணி அவ என்ன பண்றா? சாப்பிட்டாளா? ன்னு அடிக்கடி கேட்டுட்டே இருந்தாரு. அப்போ உங்களுக்கு நேரம் இல்லாமையா போயிருக்கும்?” என்றால்.

‘அடப்பாவி!!! சந்தோஷ், நீ என் கூட தானே இருந்த? எனக்குத் தெரியாம எப்போ உன் பொண்டாட்டிக்குப் போன் பண்ணிப் பேசின… இவளை எப்படி நான் சமாளிக்கிறது’ என்று மனதிற்குள் சந்தோஷத்தைத் திட்டிக்கொண்டு விக்கி எதுவும் செய்ய முடியாமல் நிலாணியைப் பார்க்க…

“நீங்க வேணும் தான் என்கூடப் பேசாம இருந்திருக்கீங்க அப்படித்தானே? இனிமே என் கூடப் பேசாதீங்க” என்று சொல்லி நிலானி கோபமாகத் திரும்பிப் படுத்துக் கொள்ள… அதன் பிறகு விக்கி எவ்வளவோ நிலானியைச் சமாதானப்படுத்த முயன்றும், அவள் வேண்டும் என்றே தான் ராதா சொன்னது போலச் சண்டையிட்டு விட்டு, அவன் தன்னிடம் கெஞ்சுவதை ரசித்துக் கொண்டு திரும்பிப் படுத்திருந்தாள்.

அப்போதிலிருந்தே இவர்கள் இருவரும் ஹனிமூன் கிளம்பிச் செல்லும்வரை நிலானி விக்கியிடம் பேசவே இல்லை.

ஏர்போர்ட்டுக்கு வந்த மூன்று ஜோடிகளில் ஆதியும் கதிரும் தான் சந்தோசமாக வந்தனர். சந்தோஸுமும் ராதாவும் ஒருபுறம் எலியும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொண்டிருக்க…. விக்கியும் நிலாணியும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தனர்.

மூன்று ஜோடிகளும் மாலத்தீவிற்குத் தங்களது ஹனிமூன் கொண்டாடச் சென்றனர். அங்கே சென்று யார் யாரை சமாதானப்படுத்துகிறார், யாருடன் யார் சண்டை போடுகிறார் என்று பார்க்கலாம்.


மாதவி சென்னை வந்து ஒரு வாரம் ஆகிறது. அவள் வேலை கிடைத்ததால் இன்று முதல் நாள் கல்லூரிக்குச் செல்லப் போகிறாள். இந்த ஒரு வாரத்தில் வேதாச்சலத்திற்கும் சமைத்துப் போட்டு, அவர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்தாள். வேதாச்சலம் அவளைத் தன் மகள் போல் பாவித்து அன்பாக நடந்து கொண்டார்.

காலையில் ரெடியாகி வந்த சங்கவியும் வேதாச்சலமும் டிபன் முடித்து கிளம்பத் தயாராக… மாதவி, வேதாச்சலத்திடம் ‘ஐயா’ என்று கூப்பிடாமல் ‘அப்பா’ என்று கூப்பிடுவதாகச் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சங்கவி, “என் அப்பாவை நீயும் அப்பான்னு கூப்பிடப் போற. அப்போ என்னை என்னன்னு கூப்பிடுவ?” என்று கேட்க… வேதாச்சலம், “மாதவி என்னை அப்பான்னு சொல்லிக் கூப்பிட்டா, அப்போ நீ அவளுக்கு மூத்தவள் தானே? அப்ப உன்னை அக்கான்னு தானே கூப்பிடனும்?” என்றார்.

சங்கவி தன்னைப் பார்க்க, மாதவி புரிந்து கொண்டு, “அக்கா, உங்களுக்கு வேற ஏதும் சாப்பிட வேண்டுமா?” என்று கேட்க, சங்கவி மனதிற்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டவள், அதைக் காட்டிக்கொள்ளாமல், “எனக்கு எதுவும் வேண்டாம் போதும்” என்று சொன்னாள்.

வேதாச்சலம் அவசரமாகச் சாப்பிட்டவர், “நாங்க போற வழியிலேயே உன்ன காலேஜ்ல டிராப் பண்ணிட்டு போறோம்” என்று சொல்ல…

மாதவி, “இல்லப்பா, நானே போயிக்கிறேன். நீங்களும் அக்காவும் ஆபீஸ் கிளம்புங்க” என்று மறுக்க…

சங்கவி கடுமையாக, “அதை அப்பா அவ்வளவு தூரம் சொல்றாங்க இல்ல? போய் ரெடியாகிட்டு வா… உன்னிடம் ‘வரியா’ன்னு கேக்கல, ‘வா’ன்னு தான் சொல்றாரு” என்று கூற…

மாதவி, சங்கவி சொன்னதும் மறுத்து பேசாமல் தலையாட்டி விட்டு, தன் பேக்கை எடுத்துக்கொண்டு அவர்களுடன் பிபி மெடிக்கல் காலேஜுக்குச் சென்றாள்.

அவளைக் கல்லூரியில் இறக்கி விட்ட சங்கவி, “சாயங்காலம் வேற எங்கேயும் சுத்திட்டு இருக்காதே. நேரா வீடு போய்ச் சேரனும். நாங்க வரதுக்குள்ள எல்லா வேலையும் முடித்துவை” என்று கூற… தன் மீது இருக்கும் அக்கறையை சங்கவிக்கு இப்படித்தான் வெளிக்காட்டத் தெரியும் போல என்று நினைத்த மாதவி, “சரி, காலேஜ் முடிஞ்சதும் நான் நேரா வீட்டுக்கு போயிடுறேன்” என்று சொன்னாள்.

வேதாச்சலம் மாதவியின் கையில் வலுக்கட்டாயமாக ₹500 நோட்டைத் திணித்து விட்டு, “எதுவும் வேணும்னா வாங்கிக்கோ” என்று சொல்ல… மாதவி வாங்க மறுக்க… சங்கவி குறுக்கிட்டு, “இதை ஒன்னும் நாங்க உனக்குச் சும்மா கொடுக்கல போதுமா… காலேஜ் முடிஞ்சதும் பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காம ஆட்டோ எதுவும் போயிடுச்சு நேரமா வீட்டுக்கு போய் எங்களுக்காக டிபன் ரெடி பண்ணி வை. அதுக்காகத்தான் இந்த பணம்” என்றால்.

மாதவி ‘சரி அக்கா’ என்று சொல்லிவிட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டாள். வேதாச்சலம் கிளம்பிச் சென்றார்கள். இவ்வளவு பாசமாகக் நடந்து கொள்ளும் வேதாச்சலத்தையும் சங்கவியையும் பார்த்த மாதவிக்கு, இத்தனை நாள் தான் வேலை பார்த்த இடத்தை விட இங்கு தன் வீடு போலவே உணர்ந்தாள். சந்தோசமாகக் கல்லூரிக்குச் சென்றாள்.


கதிரும் கீர்த்தியும் ஹனிமூன் சென்று விட… துரையும் கனகாவுடன் தங்கள் ஊருக்குச் சென்று விடுவதாகச் சொல்லிவிட்டனர். ஷிவு அலுவலக வேலை காரணமாகத் தாமதமாகவே வருகிறாள். விசாலாட்சி வெங்கடாசலமும் தங்கள் அறைக்குத் தூங்கச் சென்றுவிட்டனர்.

படுத்து இருப்பதால் துர்காவுக்குத் தூக்கமே வரவில்லை. ஆதி ஏற்பாடு செய்து கொடுத்திருந்த கதைப் புத்தகங்களையும், கேம்ஸ்களையும் திரும்பத் திரும்பச் செய்வது போர் அடிக்க… ஆதிக்கு அழைத்தாள்.

ஆதி போனை எடுத்ததும், “என்ன துர்கா? ஏன் இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க? ஏதாவது வேணுமா?” என்று கேட்டான்.

“ரொம்பப் போர் அடிச்சுதா. அதனால தான் நீ எப்போ வீட்டுக்கு வருவேன்னு கேட்பதற்காக உனக்குக் கால் பண்ணேன்” என்றால் துர்கா.

ஆதி புன்னகைத்து, “நான் எவ்வளவு நேரம் தான் அதையெல்லாம் திரும்பத் திரும்ப செஞ்சுட்டு இருக்கிறது… என்ன கீழேயும் யாரும் கூட்டிட்டு போக மாட்டேங்குறாங்க. நீ வந்தா மட்டும்தான் இந்த ரூமை விட்டு என்ன வெளியே அனுப்புறாங்க” என்று துர்கா புகார் செய்தாள்.

ஆதி வேண்டுமென்றே, “அப்படியா!! அப்போ நீ எனக்கு முதலிலேயே போன் பண்ணி இருக்கலாமே… எனக்கு வேற ஆபீஸ்ல ரொம்ப முக்கியமான வேலை இருக்கு. அதையெல்லாம் முடிச்சிட்டு நான் வரவே நைட்டு ஒரு மணிக்கு மேல ஆகிடுமே” என்றான்.

“நீ வரதுக்கு நைட்டு ஒரு மணி ஆயிடுமா!!! ம்ஹும்… எங்க வீட்ல யாருக்குமே என் மேல அக்கறை கிடையாது” என்றவள், “நான் உன் கூடப் பேச மாட்டேன். நான் கோபமா போன் வைக்கிறேன்” என்று சொல்லி போனை கட் செய்தால் துர்கா.

ஆதிக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘பரவாயில்லையே என் பொண்டாட்டி நல்லா தேறிட்டா போல. என் கூடச் சண்டை போடுற அளவுக்கு எல்லாம் வந்துட்டா’ என்று நினைத்தான். துர்காவுக்குச் சங்கவியால் ஆபத்துகள் இருப்பதால், தான் இல்லாமல் அவளை ரூமை விட்டு வெளியே எங்கும் அழைத்துச் செல்லக் கூடாது என்று ஆதி கட்டளையிட்டு இருந்தான்.

ஆதி திரும்பவும் துர்காவின் போனுக்கு அழைக்க… கோபமாகக் கையை கட்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்த துர்கா, போனை எடுத்து ஆன் செய்தவள், “நான் கோபமா இருக்கேன்” என்று சொன்னாள்.

“அப்படியா! என் பொண்டாட்டி நிஜமாகவே என் மேல கோபமா இருக்காளா? எங்கே என் முகத்தைப் பார்த்துச் சொல்லு நீ என் மேல கோவமா இருக்கேன்னு” என்று சொல்லிக் கொண்டு ஆதி, துர்கா இருந்த அறை கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர…

துர்கா அழைக்கும் போது ஆதி வீட்டிற்கு வெளியே காரைப் பார்க் செய்துவிட்டு உள்ளே வந்து கொண்டிருந்தான். அவள் கோபமாகப் போனை வைக்கவும், சிரித்துக் கொண்டே அவளை வம்பு இழுத்துக் கொண்டு அவள் அறைக்கு வந்தான்.

வீட்டுக்கு வர நேரமாகும் என்று ஆதி சொல்லவும் கோபமாக இருந்த துர்கா, அவன் கண் முன் நிற்பதைப் பார்த்ததும் சற்று முன் இருந்த கோபம் எல்லாம் வடிந்துவிட்டது.

அவனைப் பார்த்ததும் சிரித்த முகமாக, கைகள் இரண்டையும் நீட்டி, “ஆதி…” என்று அவனைப் பார்த்து அழைக்க… தன் கையில் இருந்த போனைப் பாக்கெட்டில் வைத்த ஆதி வேகமாக துர்கா அருகில் வந்து அவளைக் கட்டிக் கொண்டான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured