Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 162

உன் ரகசிய ரசிகை நான் 162

by Layas Tamil Novel
155 views

EPISODE 162

அப்படி என்ன பாட்டு மாதவி பாடி இருப்பான்னு பார்க்கிறீர்களா… இதோ… அந்தப் பாடல்:

உன் விழிகளில்

விழுந்து நான் எழுகிறேன்

எழுந்தும் ஏன் மறுபடி

விழுகிறேன்….

உன் பார்வையில்

தோன்றிட அலைகிறேன் அலைந்தும்

ஏன் மறுபடி தொலைகிறேன்..

ஓர் நொடியும் உன்னை நான் பிரிந்தால் போர்க்களத்தை உணர்வேன் உயிரில்

என் ஆசையெல்லாம் சேர்த்து ஓர்

கடிதம் வரைகிறேன் அன்பே….

என்ற ‘டார்லிங்’ படத்தில் ஒருதலையாக நாயகி நாயகனை அவனுக்குத் தெரியாமல் காதலிக்கையில் பாடும் பாடலை முழுமையாகத் தன்னை மறந்து மாதவி பாடி முடித்தாள்.

போதி மித்ரன் சொன்னதையே நினைத்து, மாதவியை இதயம் படபடக்கப் பார்த்துக் கொண்டு இருக்க… மேடையில் அமர்ந்து பாடிக்கொண்டு இருந்த மாதவி, பாடி முடித்ததும் எழுந்திருக்கப் போகிறாள் என்று அனைவரும் நினைத்திருக்கையில், இப்போது கண்களைத் திறந்து நேராகப் போதியைப் பார்த்து…

அதே பாடலில் வரும்,

சாரலாய் ஓர் முறை நீ என்னை தீண்டினாய் உனக்கது தெரிந்ததா அன்பே….

என் மனம் காணலின் நீரென ஆகுமா கைகளில் சேருமா அன்பே…

நேசிக்கும் காலம் தான் வீணென போகுமா நினைவுகள் சேர்க்கிறேன் இங்கே..

என்று கண்களில் நீர் கோர்த்து இருக்க… காதலோடு மிகவும் உணர்வு பூர்வமாக இந்த வரிகளைப் போதியின் கண்களைப் பார்த்து மாதவி பாட…

இவ்வளவு நேரம் மித்ரன் மாதவி யாரையோ மனதில் நினைத்து உருக்கமாகக் காதல் பாடுகிறாள் என்று நினைத்துக் கொண்டு இருந்தவனுக்கு, மாதவி கடைசியில் பாடிய வரிகளை அவள் காதல் பொங்கப் போதியைப் பார்த்துப் பாடியதைப் பார்த்ததும்…

தன் அருகில் மாதவியையே பார்த்துச் சிலையாக நின்று இருந்த போதியைப் பார்த்த மித்ரன். போதியின் கையைப் பிடித்து, “டேய்… போதி… உன் காதல் வெற்றி ஆகிருச்சு டா… என் தங்கச்சி இவ்வளவு நேரம் மனசுல உன்னை நினைச்சுத் தான் பாட்டுப் பாடி இருக்கா போல இருக்கு,” என்றவன். போதியின் கையைப் பிடித்துக் குலுக்கி, “வாழ்த்துக்கள் டா…” என்று சந்தோஷமாக அவன் கையைப் பிடித்துக் குலுக்கி மித்ரன் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்த…

அதை எல்லாம் உணரும் நிலையிலேயே போதி இப்போது இல்லை. அவன் மனம் முழுதும் மாதவி பாடிய அந்த வரிகளிலேயே தான் இருந்தது.

ஆதி போதியைப் பார்த்து, “அந்தப் பொண்ணு உன்னைக் காதல் பண்றாளா?” என்று போதியிடம் கேட்டான்.

போதிக்கு ஆதியிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியவே இல்லை. தன்னிடம் நேரடியாகத் தன் காதலைச் சொல்லாமல், இங்கே இத்தனை பேர் முன்னிலையில் தன் மீதான காதலை அழகாகப் பாடல் வரிகளில் சொன்ன மாதவியையே பார்த்துக் கொண்டு போதி எதுவும் பேசாமல் அமர்ந்து இருக்க…

மித்ரன் போதியைத் தாண்டி ஆதியைப் பார்த்து, “சார், போதிக்குத்தான் அந்தப் பொண்ணு மேல காதல். அவனுக்கே அந்தப் பொண்ணு இப்போதான் இவனைக் காதலிக்கிறதை இப்படிப் பாட்டுப் பாடி சொல்லி இருக்கு… அதனால தான் போதி இப்படி அதிர்ச்சியாகி (Shock) உட்கார்ந்திருக்கான்,” என்று மித்ரன் விளக்கம் அளித்தான்.

இவர்கள் பேசியதை எல்லாம் காதில் வாங்காத போதி, மேடையில் இருந்து வேகமாக எழுந்து ஓடிய மாதவியைப் பார்த்து, அவள் பின்னால் எழுந்து செல்லப் போனான் போதி.

அவன் அருகில் அமர்ந்து இருந்த மித்ரன், “டேய் எங்கே போற?.. அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல பரிசு (Prize) அறிவிப்பாங்க. அதை பாரு. அப்புறம் என் தங்கச்சி பின்னாடி போகலாம்,” என்று மித்ரன் பிடித்து நிறுத்திக் கொள்ள…

மித்ரனின் அட்டூழியம் தாங்க முடியாத போதி, “மச்சான், உனக்கு ஒரு குளிர்பானம் (Juice) சொல்லட்டுமா டா…” என்றான்.

“என்ன டா திடீர்னு என் மேல உனக்கு இவ்வளவு அக்கறை?” என்று மித்ரன் கேட்டான்.

“உன் மேல எனக்கு ஒன்னும் அக்கறை கிடையாது. உனக்காகச் சிறப்பாகக் குளிர்பானம் தயார் செய்து வெச்சுட்டு, உனக்கு அவங்களே நேரடியா வந்து கொடுக்கணும்னு உன்னோட தீவிர ரசிகைகள் ரெண்டு பேர் மேடைக்குக் கீழே காத்துக்கிட்டு இருக்காங்க டா,” என்றான் போதி.

“என்ன டா சொல்றே! எனக்கும் ரசிகைகள் இருக்காங்களா?” என்று ஆச்சரியத்துடன் மித்ரன் கேட்க…

“ஆமா டா மித்ரா. அதை போய் நீ குடிச்சிட்டு வா டா…” என்றான் போதி.

“என்ன டா இது? எனக்கு மட்டும் தான் கொண்டு வந்து இருக்காங்களா? மேடையில் இருக்கும் உங்களுக்கு எல்லாம் இல்லையா?” என்று கேட்டவன், “இரு. நான் போய் உங்களுக்கும் குளிர்பானம் சேர்த்து வாங்கிட்டு வந்துறேன்,” என்று நாற்காலியில் இருந்து மித்ரன் எழப் போக…

தங்களுக்கும் குளிர்பானம் கொண்டு வருகிறேன் என்று மித்ரன் சொன்னதும் அதிர்ந்த போதி. “டேய், அது உனக்காகச் சிறப்பாக உன்னோட ரசிகைகள் போட்டு கொண்டு வந்து இருக்காங்க. நீ போய் குடிச்சுட்டு வா.. எங்களுக்கு வேண்டாம்,” என்று போதி மித்ரனை அனுப்ப..

‘இவன் ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கான்? நாம இவனுக்குக் குளிர்பானம் தானே கொடுக்கிறோம்னு சொன்னோம். ஆனா இவன் ஏன் இப்படி நடத்துகிறான்?’ என்று நினைத்த படியே அங்கிருந்து எழுந்து சென்றான் மித்ரன்.

அவன் எழுந்து சென்றதைப் பார்த்த போதி, ‘சாரி டா மச்சான். எனக்கு வேற வழி தெரியலை,’ என்று மனதிற்குள் தன் நண்பனுக்காக வருத்தப்பட்டவன், மேடையில் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனதும் அதைக் கவனிக்கத் துவங்கினான்.


இங்கு மேடையின் பின்புறம், மாதவி பாட்டுப் பாடி ஒத்திகை பார்த்த போது அவளுடன் இருந்த மாதவியின் தோழி லேகா, மாதவி பாடி முடித்துக் கீழே வந்ததும் அவளைத் தனியாக அழைத்துச் சென்றவள்.

“ஏய்… மாதவி, உனக்கு என்ன ஆச்சு டி… நீ இன்னைக்குப் பாடுறதா இருந்த பாட்டு இது இல்லையே. ஏன் வேற பாட்டை மேடையில பாடினே? உனக்குப் பரிசுப் பணம் வரணும்னு ஆசை இல்லையா?” என்றால் லேகா.

“ஏய், அது என்னவோ தெரியலை. நானும் முதல்ல பயிற்சி (Practice) பண்ணின பாட்டைத் தான் பாடணும்னு நினைச்சிட்டு மேடை ஏறினேன். ஆனா… ஆனா…” என்று மாதவி இழுக்க..

“ஆனா என்ன டி… மேடையில் போதி சாரைப் பார்த்ததும் வழக்கம் போல என்னையே மயக்கி (மரணத்துடன்) என்ன பண்ணினேனேனு தெரியலைன்னு சொல்லப் போறியா?” என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு மாதவியைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்த லேகா கேட்டாள்.

அவள் கேட்ட கேள்விக்கு ‘இல்லை’ என்று தலையை இட வலமாக ஆட்டிய மாதவி, பின் ‘ஆமாம்’ என்று தலையை மேலும் கீழும் ஆட்ட… அவளை முறைத்த லேகா, “என்னவோ பண்ணு போ….” என்று தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில் மேடையில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றவர்களின் பெயர்களைச் சொல்லி மேடைக்கு அழைத்து, ஆதி கையால் பரிசுகள் வழங்கிக் கொண்டு இருந்தனர்.

“அடுத்ததாகப் பாட்டுப் போட்டியில் அழகாக ஒரு காதல் பாடலை உணர்வு பூர்வமாகப் பாடிய மிஸ் மாதவி முதலாவதாக வந்து இருக்கிறார்,” என்று மேடையில் அறிவிக்கவும். மேடைக்குப் பின்னால் நின்று இருந்த மாதவிக்கு இந்தச் செய்தியைக் கேட்டு நம்பவே முடியவில்லை. அதைவிடவும் லேகா தான் மிகவும் ஆச்சரியப்பட்டாள்.

மாதவியைக் கட்டிக்கொண்டு தன் மகிழ்ச்சியை லேகா வெளிப்படுத்த… அப்போது மாதவியைப் பரிசுத் தொகையை வாங்க மேடைக்கு ஒலிபெருக்கியில் (Mic) அழைக்க… லேகா மாதவியை, “ஏய் போடி.. உன் பேர் சொல்லி தானே கூப்பிடுறாங்க. இங்கயே நின்னுட்டு இருக்கே?” என்று மாதவியைப் பரிசு வாங்க மேடைக்குச் செல்லச் சொல்ல..

“ஏய் லேகா வேணாம் டி. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு…” என்றால்.

“ஏன் ஒரு மாதிரியா இருக்கு?” என்று லேகா கேட்டாள்.

“அது.. அது வந்து… மேடையில் அவர் இருப்பாரு,” என்றால் மாதவி.

“யார் இருப்பார்?” என்று வேண்டும் என்றே எதுவும் தெரியாதவள் போலக் கேட்டாள் லேகா.

“ஏய் விளையாடாத டி.. அவர் தான் டி மேடையில இருப்பாரு. நான் வேற அவரைப் பார்த்துப் பாடிட்டு வந்து இருக்கேன். அப்படி இருக்க நான் இப்படிப் போய் அவரை நேரா பார்க்குறது எனக்கு ஒரு மாதிரி வெட்கமா.. பயமா.. இருக்கு டி,” என்று மாதவி நெளிய…

“ஓஹோ.. அப்போ அந்த வெக்கம் பயம் எல்லாம் மேடையில் போதி சார் உடைய கண்ணை நேருக்கு நேரா பார்த்துப் பாட்டுப் பாடினியே அப்போ தெரியலையா உனக்கு?” என்று நக்கலாகக் கேட்ட லேகா. மாதவியைத் தள்ளிக் கொண்டு போய் மேடை ஏற்றி விட… அவளைத் திரும்பிப் பார்த்துக் முறைத்த மாதவி, வேறு வழி இல்லாமல் தயங்கிய படியே பரிசு கொடுத்துக் கொண்டு இருந்த ஆதியைப் பார்த்துவிட்டு, நேராகப் போதியைத் தாண்டி நின்று இருந்த ஆதியை நோக்கி, ‘போதி என்ற ஒருவன் அங்கு இருக்கிறான்’ என்று தெரியாதவள் போல அவனைத் தாண்டிச் செல்ல..

மேடை ஏறியதில் இருந்து தன்னை ஒரு முறை எனும் பார்த்துவிட மாட்டாளா என்று ஏக்கமாகப் போதி மாதவியையே பார்த்துக் கொண்டு இருக்க… அவளோ அவனைக் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து ஆதியிடம் போய் நிற்க…

ஆதி கையில் மாதவிக்குப் பரிசளிக்க, அவளுக்கு ரூபாய் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும், கூடவே ஒரு கேடயமும் அதனுடன் ஒரு பரிசுப் பெட்டியும் (Gift Box) கொண்டு வந்து ஆதியின் முன் மாதவிக்குக் கொடுக்கச் சொல்லி விழாவை ஒருங்கிணைப்பவர் நீட்ட… அதை வாங்கிய ஆதி மாதவியின் முன் நீட்ட…

மாதவி அதை அவனிடம் இருந்து வாங்குவதற்காகக் கைகளை நீட்டவும்… அவளிடம் நீட்டிய பரிசுப் பொருட்களை மாதவியிடம் கொடுக்காமல் தன் கையை நேராகப் போதியின் பக்கம் நீட்டிய ஆதி. “நீயே உன் ஆளுக்குக் கொடு,” என்று அவர்களுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல… ஆதி சொன்னது மாதவியின் காதிலும் விழத் தான் செய்தது.

அவள் தயங்கிய வாறே ஆதியைப் பார்க்க… “போங்க, அவர் கிட்டயே வாங்கிக்கோங்க,” என்று மாதவியைப் பார்த்துக் ஆதி கூற…

வேறு வழியே இல்லாமல் மாதவி ஆதியைப் பார்த்துவிட்டுப் போதியின் புறம் திரும்பியவள். அவன் முகத்தைப் பார்க்க… மாதவி தன்னைப் பார்த்ததும், தன் நாக்கைக் வாயிற்குள் சுழற்றிப் புருவம் உயர்த்திய போதி மாதவியைப் பார்க்க…

‘ஐயோ… போச்சு… போச்சு… இந்த சார் நிலைமை புரியாமல் இவர் கிட்டே பரிசைக் கொடுத்து என்ன வாங்கிக்க சொல்லிட்டாரு…. இவரு வேற என்னைப் பார்க்குற பார்வையே சரி இல்லையே,’ என்று, மனதிற்குள் புலம்பியவள். பின் தன்னைத் தானே சுதாரித்துக் கொண்டு ஒரு பெரு மூச்சு ஒன்றை இழுத்து விட்டு, நேராகப் போதியின் அருகில் சென்று, அவன் கையில் வைத்திருந்த பரிசுப் பொருளை வாங்கிவிட்டுத் திரும்பிச் செல்லப் போக… அவள் சென்ற வேகத்திலேயே திரும்பி இழுக்கப்பட்டுப் போதியின் மேல் மோதி அவன் அருகில் நின்றாள்.

அவன் மீது மோதி நின்ற பிறகுதான் பார்த்தாள், போதி அவளுக்குக் கொடுத்த பரிசுப் பொருளை அவளிடம் கொடுக்காமல் கெட்டியாகப் பிடித்திருந்ததை.

போதி மீது மோதி நின்ற மாதவி அவனை நிமிர்ந்து பார்க்க… “என்ன?” என்று தன் புருவம் உயர்த்திப் பார்த்த போதி, அவளைப் பார்வையாலேயே தன் எதிரில் அவர்கள் இருவரையும் புகைப்படம் எடுப்பதற்காகக் (Photo) காத்திருந்த புகைப்படக்காரரைக் (Photographer) காட்ட… அவன் காட்டிய திசையைத் திரும்பிப் பார்த்தவள், ‘இதற்காகத் தான் தன் கையில் பரிசைக் கொடுக்காமல் வைத்திருக்கிறானா?’ என்பது போலப் பார்த்த மாதவி, அவனைப் பார்த்து லேசாக ஒரு புன்னகையைச் சிந்திவிட்டுத் திரும்பிப் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தாள்.

புகைப்படக்காரர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, பரிசுப் பெட்டியைப் பிடித்திருந்த தன் கைகளை மெல்ல மெல்ல நகர்த்தி… அந்தப் பக்கம் பிடித்திருந்த மாதவியின் விரலைப் பிடிக்க.. இதைச் சற்றும் எதிர்பாராத மாதவி தான் விரல்களை அவன் கையில் சிக்காமல் மடித்துக் கொள்ள.. அவள் விரல்களை மடக்கியதும், ‘நீ விரலை மடக்கினால் நான் அமைதியாகப் போய்விடுவேனா?’ என்பது போல என்று தன் கையை நகர்த்தி அவள் கையைப் பிடித்துக் கொள்ள… அவனிடம் இருந்து தன் கையைப் பிரிக்க முடியாமல் மாதவி நெளிந்து கொண்டு இருக்க…

புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்த புகைப்படக்காரர் மாதவியைப் பார்த்து, “மேடம் கொஞ்சம் நெளியாமல் நில்லுங்க,” என்றார்.

‘நான் என்ன வேண்டும் என்றா நெளியுறேன்!’ என்று தன் இயலாமையை நினைத்தவள், நேராக இருக்க முயன்று தோற்றாள். புகைப்படக்காரரும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருவரையும் சேர்த்து வைத்துப் புகைப்படம் எடுத்தார்.

புகைப்படம் எடுத்து முடிந்த பின்பு மாதவி அவன் கையில் இருந்து தன் கையை எடுக்க முயற்சிக்க… பரிசுப் பொருளை அவள் கையில் கொடுத்தவன், அவள் வலது கையை வலுக்கட்டாயமாகப் பிடித்துத் தன் இரண்டு கைக்குள்ளும் வைத்து அவள் வலது கையைப் பிடித்துக் குலுக்கி… “வீட்டுக்குப் போனதும் மறக்காமல் நான் கொடுத்தப் பரிசைச் சரியாக இரவு பத்து மணிக்குத் திறந்து பாரு,” என்றான் போதி.

“பரிசா?” என்று மாதவி அவனைப் புரியாமல் பார்க்க… அவள் கையில் இருந்த இதய வடிவக் குறியீடு (Heart) போட்டு மூடி இருந்த ஒரு பெட்டியைக் காட்டி, “இதுதான்,” என்றான். மாதவி எதுவும் பேசாமல் அவன் கைக்குள் இருந்து தன் கையை வலுக்கட்டாயமாகப் பிரித்துவிட்டு அங்கிருந்து ‘விட்டால் போதும்’ என்று ஓடியே விட்டாள்.

அவளை நின்று ரசித்தவாறே சிரித்த முகமாகத் திரும்ப… அவன் அருகில் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நின்று இருந்த ஆதி, “வாழ்த்துக்கள்,” என்று கைக் குலுக்கினான். போதியும் பதிலுக்கு ஒரு சிரிப்பை அளித்தான்.


சரி, குளிர்பானம் குடிக்கச் சென்ற நம்ம மித்ரன் என்ன ஆனான் என்று போய்ப் பார்க்கலாம் வாங்க… மேடையில் இருந்து மாதவியையே நினைத்துக் கொண்டே சந்தோஷமாக இறங்கிய போதிக்கு, அப்போதுதான் குளிர்பானம் குடிக்கச் சென்ற மித்ரனைக் காணோம் என்று நினைவு வர…

விழாவிற்கு வந்த ஆதியையும், துர்காவையும் அனுப்பிவிட்டு… “மித்ரன் எங்கே போய்ட்டான் இவன்?” என்று மித்ரனைத் தேடிக் கொண்டே மேடையின் பின்னால் செல்ல.. அங்கே இரு பெண்கள் நம்ம மித்ரனை ஒரு நாற்காலியில் அழுத்திப் பிடித்து, அவன் வாயில் ‘குளிர்பானம்’ என்று சொல்லி எதையோ வலுக்கட்டாயமாக ஊற்றிக் கொண்டு இருந்தனர்.

அதைப் பார்த்ததும் வேகமாக அவர்களிடம் ஓடிச் சென்று, “நீங்க எல்லாம் யாரும்மா? என் நண்பனை என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்றவன், அவர்களிடம் இருந்து மித்ரனை இழுத்துத் தன் அருகில் நிறுத்திக் கொள்ள… தன்னை விட்டால் போதும் என்று மித்ரன் வேகமாக வந்து போதியின் பின்னால் நின்று கொண்டு, “நல்ல வேலை டா மச்சான் நீ வந்தே. இல்லைன்னா இந்த நேரத்துக்கு இந்த ரெண்டு பேரும் சேர்ந்து ‘குளிர்பானம்’ங்குற பேருல எனக்கு இந்த பினாயிலை என் வாயில் ஊற்றி, என்னை இந்த நேரம் பாலோகம் அனுப்பி இருப்பாங்க,” என்றான் மித்ரன்.

அவன் சொன்னதைக் கேட்ட போதி அந்த இரு பெண்களையும் பார்த்து, “ஏன் மா… நீங்க யாரு? ஏன் இவனை இப்படி கஷ்டப்படுத்துறீங்க?” என்று போதி அந்த இரு பெண்களையும் பார்த்துக் கேட்டவன். “அம்மா நீங்க தானே இவனோட ரசிகைகள்ன்னு சொல்லி வந்தீங்க. அப்புறம் ஏன் இவன் கிட்டே இந்த மாதிரி நடந்துக்கிறீங்க?” என்றான் போதி.

“சார் மன்னிச்சிருங்க. என் பேரு ப்ரீத்தி… இதோ என் பக்கத்துல இருக்காங்களே இவங்க பேரு கீதா… நாங்க ரெண்டு பேரும் உங்களுடைய ரசிகைகள். இந்தோ இருக்கானே, இந்த ஆளுக்குக் கிடையாது,” என்றாள் ப்ரீத்தி.

“நீங்களே இப்போதான் துர்காவைக் (லக்ஷு) காதல் பண்ணிப் பிரிவு (Breakup) ஆனா சோகத்துல இருந்து வந்து, உங்க வாழ்க்கையில இப்போதான் புதுசா மாதவியைப் பார்த்த பிறகு, மறுபடியும் காதல் எட்டிப் பார்த்திருக்கு…”

“ஆனா மாதவி உங்களை மனசுல நினைச்சுப் பாட்டுப் பாடிட்டு இருந்தா… இதோ இவன் இருக்கானே,” என்று சொல்லி போதியின் பின்னால் இருந்த மித்ரனை எட்டி அவன் தலையில் நங்கென்று கொட்டு வைத்து கீதா, “உங்க கிட்டே மாதவி வேற யாரையோ காதல் பண்ணுவ போல இருக்குன்னு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, உங்களை மட்டும் இல்ல. இந்தக் கதையைத் தினமும் தவறாம படிச்சிட்டு இருக்குற எங்களையும் கடுப்பேத்திட்டான்.”

“அதான் இவனுக்கு அப்படியே போற போக்குல ஒரு பினாயில் பாயசத்தைப் போட்டுட்டுப் போகலாம்னு வந்தோம்,” என்றனர்.

கீதாவும், ப்ரீத்தியும் தன் ரசிகைகள் என்று சொன்னதும் போதிக்குச் சிறு வெட்கம் வந்துவிட, அதை அவர்கள் இருவரிடமும் காட்டிக்கொள்ளாமல். “ஏன் ப்ரீத்தி? இந்தச் கதையின் கதாநாயகன் (Hero) ஆதி இருக்கிறப்போ, அவருக்கு ரசிகைன்னு சொல்லாமல் என்னோட ரசிகைன்னு ரெண்டு பேரும் சொல்றீங்களே? இது என்ன மா கணக்கு?” என்றான் போதி.

“அதுவா சார்? நாங்க ஆதிக்குப் தீவிர ரசிகை தான். எங்களைப் போலவே அவருக்குத் தீவிரமான ஒரு ரசிகை இருக்காங்க. பாரதின்னு ஒருத்தர். அவங்களால இன்னைக்கு எங்க கூட வர முடியலை. அவங்களும் உங்களுக்கு ரசிகை தான்,” என்ற இருவரும், “கொஞ்சம் விலகிக்கோங்க சார்…. அந்தக் கதிர்னு ஒருத்தன் இருக்கானே… அவனுக்கே ஏற்கனவே பினாயில் குளிர்பானம் கொடுக்க வேண்டியது. உங்க கிட்டே துர்காவுக்குக் கல்யாணம் ஆகலைன்னு பொய்யைச் சொல்லி உங்க மனசைக் கஷ்டப்படுத்தியதற்கு….”

“அதுக்கும் சேர்த்து இவனுக்கே இந்தப் பினாயில் குளிர்பானமா ஊத்தி, இவன் வாயைப் பினாயில் வெச்சே கழுவி, எங்க மூணு பேருக்கும் அதாவது நான், கீதா, அப்புறம் பாரதி மூணு பேருக்கும் அப்போதான் மனசு சாந்தி அடையும்.”

“அதுலயும் இந்தக் கீதா இருக்காங்களே… அவங்க சில பேர் மேல கொலைக் கடுப்புல (காண்டு) இருக்காங்க… அவங்களை எல்லாம் எச்சரிக்க எங்களுக்கு ஒரு மாதிரி (Sample) வேணும். அந்த மாதிரியா நாங்க இவனை யூஸ் பண்ணிக்கிறோம்,” என்று மித்ரனை அடிக்க வர…

“இது என்ன டா போதி வம்பா இருக்கு… யாருக்கோ மாதிரி காட்ட என் உயிர் தான் கிடைச்சுதா… நான் என்ன பாவம் பண்ணினேன். இந்த வாய்யையே வெச்சுத் தான் பொழச்சிட்டு இருக்கேன். அதுக்கும் இவங்க வந்து மூடி வெச்சா நான் என்ன செய்றது?” என்றவன். அதற்கு மேல் அங்கே நிற்காமல் ‘விட்டால் போதும்’ என்று அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொண்டு மித்ரன் ஓட…

அவன் தங்களிடம் இருந்து தப்பித்துச் செல்வதைப் பார்த்த, கீதாவும் ப்ரீத்தியும், “போதி சார் நீங்க மாதவி கூடப் போய் காதல் பண்ணுங்க … நாங்க ரெண்டு பேரும் அவனை இந்தக் குளிர்பானத்தைக் குடிக்க வைக்காமல் இங்கே இருந்து போக மாட்டோம்,” என்று சொல்லிக்கொண்டு போதியிடம் விடை பெற்று மித்ரனைத் துரத்திக் கொண்டு ஓடினர்.

அவர்கள் இருவரும் கையில் பினாயில் குளிர்பானத்துடன் செல்வதைப் பார்த்த போதி, ‘நல்ல வேலை நான் அந்தச் சங்கவி பேச்சைக் கேட்டுட்டு துர்காவுக்கும், ஆதிக்கும் எதுவும் செய்து எதிரியா ஆகாமல் இருந்தேன். இல்லைன்னா இந்த நேரம் இந்தக் பினாயில் குளிர்பானம் எனக்கு வந்து இருக்க வேண்டியது,’ என்று நினைத்தவன். அந்தக் குளிர்பானத்தைக் குடிப்பது போலக் கற்பனை செய்தவன், தன் தலையை வேகமாக குலுக்கிக் கொண்டு… ‘பாவம் மித்ரன். இவங்க ரெண்டு பேர் கிட்டே மாட்டிக்கிட்டு என்ன பாடு படப் போறானோ..’ என்று நினைத்தவன்.

தன் கைக் கடிகாரத்தில் (Watch) மணியைப் பார்க்க அது இரவு ஒன்பது என்று காட்டவும். ‘ஐயோ இன்னும் ஒரு மணிநேரத்துல என் ஆள் நான் கொடுத்தப் பரிசைத் திறந்திருவாளே …. அதை பார்த்துட்டு என்னே செய்யப் போறாளோ?’ என்று நினைத்துக்கொண்டே தன் காரில் ஏறி வீட்டிற்கு விரைந்தான் போதி.

அப்படி என்ன பரிசு நம்ம மாதவிக்குப் போதி கொடுத்திருப்பான்?

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured