EPI 250 அபி கேட்டதுமே அவ்வளவு பெரிய தொகையை ஆதி தூக்கி கொடுத்தது சங்கவியால் நம்ப முடியவில்லை. அவள் வேண்டுமென்றே தான் துர்காவின் பெற்றோரை கடத்தி வைத்துக் கொண்டு துர்காவை மிரட்ட அபியை பயன்படுத்தினாள். ஆனால் அது இப்போது தனக்கு எதிராகவே வந்துவிட்டது என நினைத்து ஆத்திரம் கொண்டாள் சங்கவி. தன் அறையில் கோபமாக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள் சங்கவி. அவள் அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்கவும் செண்பகம் தான் வந்திருக்கிறார் என “உள்ளே வா மா” என்று சத்தமிட்டாள். ஆனால் அவள் அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்தது துர்கா. துர்காவை அங்கு எதிர்பாராத சங்கவி அதிர்ச்சி அடைந்தவள், அதை தன் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் துர்காவை பார்த்து “நீயா? நீ எதுக்கு என் ரூம்க்குள்ள வர?” என்றாள் கோபமாக. “ஹலோ இது என் வீடு, நீ என் வீட்ல இருக்க அது உனக்கு தெரியுமா? அதை மறந்துட்டு நீ என்னமோ நான் உன் ரூம்க்குள்ள வந்ததுக்கு இவ்வளவு கோபமா பேசுற” என்றாள் துர்கா. “உன் வீடா? அப்படின்னு யார் சொன்னது?” என்றாள் சங்கவி. “ஹலோ இந்த வீட்டோட மூத்த மருமக நான் தான். எனக்கு இந்த வீடு சொந்தம், இந்த வீட்ல இருக்கிற எல்லாமே எனக்கு தான் சொந்தம். இந்த முழு உரிமையும் எனக்கு தான் இருக்கு. நீ ஜஸ்ட் இங்கே செண்பகம் அம்மாவோட பொண்ணா தான் வந்து இருக்க” என்றாள் துர்கா. “இந்த வீட்டு மூத்த மருமகளா வேணா நீ இருக்கலாம். ஆனா இந்த வீட்டோட முழு உரிமையும் வெங்கடாசலம் மாமாவுக்கும் அவர் கூட பிறந்த என் அம்மாவுக்கும் தான் இருக்கு” என்றாள் சங்கவி. “ஓ நீ அப்படி வரியா? நீ சொல்றதும் கரெக்ட் தான். இந்த வீட்டோட மூத்தவங்க, இந்த வீட்டோட தலைவர் என் மாமா அவர் பெயரில் தான் இந்த வீடு இருக்கு. ஓகே, அவரோட தங்கச்சி செண்பகம் அத்தை அவங்களுக்கும் இந்த வீட்ல உரிமை இருக்குன்னு கூட சொல்லலாம். ஆனா இப்ப வந்து நீ எப்படி அதை உனக்கு சொந்தம்னு அவ்வளவு உரிமையா பேசுற?” என்றாள் துர்கா. “என் அம்மாவோட ஒரே வாரிசு நான் தான். அப்போ என் அம்மாவுக்கு சேர வேண்டிய எல்லாமே எனக்கும் தான் சொந்தம். அப்போ இது என்னோட வீடு தானே” என்றாள் சங்கவி. “நீ சொல்றதும் கரெக்ட் தான்” என்றவள், “பார்க்கலாம் அவங்களுக்கு சேர வேண்டியதெல்லாம் உனக்கு வந்து சேருமா?” என்றாள் துர்கா. நீ அப்படி சொன்னதும் புருவம் சுருங்க சங்கவி துர்காவை பார்த்தவள், “நீ சொல்றதுக்கு என்ன அர்த்தம்?” என்றாள். “நீ செண்பக அம்மா பொண்ணு தான், அதுல எந்த மாற்றமும் இல்லை. அதுக்காக அவங்களுக்கு சேர வேண்டிய சொத்து எல்லாம் உனக்கு கொடுக்க எனக்கு துளியும் விருப்பமில்லை. நீ அவரை மாதிரி நல்ல எண்ணம் இல்லாதவள். உனக்கு சேர வேண்டிய சொத்தை எல்லாம் எழுதி கொடுத்துட்டா நாளைக்கு நீ செண்பகம் அம்மாவ நடுரோட்டில் விட்டுவிட மாட்டேன்னு என்ன நிச்சயம்? பணத்துக்காக நீ எதையும் செய்யக் கூடியவள் தானே” என்றாள் துர்கா. “நான் பணத்துக்காக எதையும் செய்வேன், ஏன் உன்னை கொல்ல கூட செய்வேன். அதுக்காக என்ன பெத்தவங்கள நான் கஷ்டப்படுத்தி பார்க்கணும்னு நினைக்க மாட்டேன்” என்றாள் சங்கவி. “யாரு நீதானே? உன்னை இத்தனை வருஷமா பாராட்டி சீராட்டி வளர்த்த வேதாச்சலம் சிவகாமி அத்தையையும் நீ ரொம்ப நல்லா பார்த்துக்கிட்ட? அவங்களை… அவரை உன் கையால சுட்ட? சிவகாமி அம்மாவை இந்த வீட்டை விட்டு தூரத்தின? அதெல்லாம் போதாதுன்னு மாதவி கல்யாணம் நடக்கணும்னா மாதவிக்கு சேர வேண்டிய எல்லா சொத்தையும் அவங்களுக்குன்னு கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம எல்லாத்தையும் எழுதி வாங்குனது தானே உன்னோட பாசம்? எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்” என்றாள் துர்கா நக்கலாக. “ஏய் அதெல்லாம் முடிஞ்சு போன கதை. இப்ப நீ எதுக்கு என் ரூம்குள்ள வந்த? முதல்ல அதைச் சொல்லிட்டு கிளம்பு” என்றாள் சங்கவி கடுப்பாக. “சொல்றேன் சொல்லிட்டு. ஏன் இவ்வளவு கடுப்பாக்குற? என்ன பார்த்தாலே உனக்கு பிடிக்கலையா சங்கவி?” என்றாள் துர்கா. “ஆமா உன்னை பார்த்தாலே உன் கழுத்தை நெரிச்சு கொல்லணும்னு எனக்கு ஆத்திரமா வருது. முதல்ல நான் கல்யாணம் பண்ணிக்க இருந்த ஆதியை நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட. அதுக்கு முன்னாடியே நீ அவன்கிட்ட வேலை பார்த்துட்டு இருந்தியே அப்போ இருந்து எனக்கு உன்னை கண்டாலே சுத்தமா பிடிக்க மாட்டேங்குது. நானும் ஏன் என்னென்ன காரணமெல்லாம்னு யோசிச்சு பார்த்தேன், பட் எனக்கு உன்னை பிடிக்கல அவ்வளவுதான்” என்றாள் சங்கவி திமிராக. “பரவால்ல உனக்கு என்னை பிடிக்குமா அவசியமில்லையே. என் ஆதிக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால நான் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்றாள் துர்கா. துர்கா சொன்னதைக் கேட்ட சங்கவிக்கு மேலும் ஆத்திரம் அதிகமானது. ஆனால் அவள் வாயைத் திறந்து எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, அவள் கடுப்போடு நிற்பதை கண்டு உள்ளுக்குள் ரசித்து சிரித்த துர்கா சங்கவியின் கட்டிலில் வந்து கைகளை பின்னால் கொடுத்து சாய்ந்தவாறு அமர்ந்தவள், “அப்புறம் சங்கவி உன்னோட நெக்ஸ்ட் பிளான் என்ன? அது என்னன்னு நீ முன்னமே சொல்லிட்டா அதை ஈஸியா நான் ஹேண்டில் பண்ணிடுவேன்” என்றாள். அவள் அப்படி கேட்டதும் சங்கவி துர்காவைத் தீயாக முறைக்க, “அப்பா எப்படி முறைக்கிற பாரு! உன் பார்வையில் இருக்கிற கோபமே தெரியுது நீ என் மேல எவ்வளவு வெறுப்பா இருக்குன்னு” என்று சொல்லி சிரித்த துர்கா கட்டிலில் அமர்ந்து காலாட்டிய படியே, “அப்படியே அபியை யூஸ் பண்ணி என் அம்மா அப்பாவை கடத்தி வச்சிட்டு என்னை மிரட்டி பயமுறுத்தலாம்னு நெனச்ச. ஆனா அவளை எவ்வளவு ஈஸியா ஆதி ஹாண்டில் பண்ணினான் நீ பார்த்தியா? பணத்தைக் காட்டினதும் அவ உன்னை தூக்கி போட்டுட்டு பணத்தை தூக்கிட்டு அவன் அம்மாவைக் கூட்டிட்டு ஓடினதை பார்த்தியா?” என்று சொல்லி சிரித்தாள் துர்கா. “நீ சொல்றது கரெக்டு தான் துர்கா. நான் கொஞ்சம் அதிகமாவே அபியையும் அவ அம்மாவையும் நம்பிட்டேன். ஆமா அவங்க இவ்வளவு சில்லியா இருப்பாங்கன்னு எதிர்பார்க்கல. கேவலம் அந்த நாலு கோடி பணத்துக்காக அவளுக்கு சேர வேண்டிய இந்த மொத்த சொத்தையும் விட்டுட்டு ஓடிட்டா. அவளுக்கு அவ்வளவுதான் அறிவுன்னு நான் அப்பவே புரிஞ்சுகிட்டேன்” என்றாள் சங்கவி. “என்ன சொன்ன? இந்த மொத்த சொத்தையும் அவளுக்கே சேரணும்னு சொல்றியா?” என்றாள் துர்கா சற்று கோபமாக. “ஆமா வெங்கடாசலத்தோட முதல் வைஃப் மரகதம் ஆண்டிதானே. அவங்களோட ஒரே பொண்ணு அவதானே” என்றாள் சங்கவி. “அதுக்காக என் மாமா இத்தனை வருஷமா கட்டிக் காத்த இந்த சொத்தை, ஆதியும் கதிரும் ராப்பகலா உழைச்சு சம்பாரிச்சு சேர்த்து வச்ச அவங்களோட உழைப்பை ஒரே கையெழுத்துல தூக்கி அத்தனையும் அவளுக்கு கொடுத்துவிடுவார்கள் என்று நினைத்தாயா?” என்றாள் துர்கா. “யாரும் கொடுக்க மாட்டாங்கன்னு எனக்கு நல்லா தெரியும் துர்கா. ஆனா அதை எப்படி வாங்கணும்னு கூடவா எனக்கு தெரியாது?” என்றாள் சங்கவி. துர்கா சங்கவியை புரியாமல் பார்க்க, “என்ன பார்க்கிற துர்கா? என்னோட அடுத்த பிளான் என்னன்னு சொன்னியே நான் இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோ” என்றவள், “அந்த வெங்கடாசலம் சிவகாமி ஆசை ஆசையா வளர்த்த ரெண்டு பசங்கள பிரிச்சு முதல்ல இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புவேன். கதிரும் ஆதியும் ஒருத்தர ஒருத்தர அடிச்சுக்கிட்டு சாகணும். அதேபோல என் அம்மாவுக்கு சேர வேண்டிய சொத்தை உன் மாமனார் அவர்கிட்ட இருந்து எழுதி வாங்குவேன். அதேபோல அவர்கிட்ட இருக்க பிசினஸ், அவரோட இத்தனை வருஷ உழைப்பு, சொத்துக்கள் எல்லாத்தையும் நான் என் பெயரில் எழுதி வாங்கப் போறேன். அந்த நாள் ரொம்ப தூரத்தில் இல்லை” என்றாள் சங்கவி. அவள் சொல்வதை எல்லாம் கேட்டு ஆத்திரமடைந்த துர்கா கட்டிலிலிருந்து வேகமாக எழுந்து வந்தவள், சங்கவியின் கழுத்தை நெரித்து அவளை சுவற்றில் தள்ளி நிறுத்தியவள் “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இவ்ளோ பேசுவ? நீ சொன்னதை எல்லாம் செய்கிற வரைக்கும் என் கை என்ன பூ பறிச்சுட்டு இருக்கும்னு நினைக்கிறியா?” என்று சங்கவியின் கழுத்தை மேலும் நெரிக்க, அதில் சங்கவிக்கு மூச்சு முட்டியது. அவள் கழுத்தில் இருந்து துர்காவின் கையை பிரிக்க சங்கவி முயற்சிக்க, ஆனால் அதற்கு இடமே கொடுக்காமல் தன் மற்றொரு கையையும் சேர்த்து அவள் கழுத்தை நெரித்தாள் துர்கா. “ஏய்.. துர்கா.. எ.. என்ன பண்ற.. விடு… வலிக்குது” என சங்கவி வலி பொறுக்க முடியாமல் துர்காவின் கையை தன் கழுத்தில் இருந்து பிரிக்க முயற்சிக்க, “போனா போகுதுன்னு செண்பகம் அம்மாவுக்காக அவங்க கூட நீ இருக்கணும்னு நாங்க எல்லாரும் உன்னை பத்தி தெரிஞ்சும் இந்த வீட்டுக்குள்ள விட்டு இருக்கோம். ஆனா நீ அதை ரொம்ப அட்வான்டேஜா எடுத்துட்டு உன் புத்தியைக் காட்டுற இல்ல? இப்ப சொல்றேன் கேட்டுக்கோ சங்கவி, நீ என்ன பிளான் போட்டாலும் அதை நடத்த நான் விடமாட்டேன். இந்த வீடு, இங்கே இருக்கிறவங்க எல்லாருமே என்னுடைய சொத்து. என்னதான் காசு பணத்தை என்கிட்ட இருந்து நீ பறிச்சுக்கிட்டாலும் எங்க குடும்பத்தை உன்னால பிரிக்கவே முடியாது. என் அத்தை மாமா, ஆதி, கதிர், கீர்த்திகா, என் அம்மா அப்பா, செண்பக அம்மா எல்லாருமே இந்த வீட்ல தான் ஒண்ணா இருப்போம். உன்னால எங்க யாரையுமே பிரிக்க முடியாது” என்ற துர்கா சங்கவியின் கழுத்தில் இருந்து கையை எடுத்தாள். துர்கா நெரித்ததில் சங்கவியின் கழுத்து வலிக்கவும், அதைத் தேய்த்து கொண்டே அவளைப் பார்த்த சங்கவி, “என்னடி ஊருக்கு போயிட்டு வந்ததிலிருந்து ரொம்ப துள்ளுற? நீ இப்படி எல்லாம் பேசினா உன்னைக் கண்டு நான் பயந்துடுவேன்னு நினைச்சியா? ஆஃப்டர் ஆல் நீ என்கிட்ட வேலை பார்த்தவள் தானே? ஆதியை கல்யாணம் பண்ணிட்டா உடனே நீ இந்த வீட்டு எஜமானியா? நீ எப்பவும் என்னை பொறுத்த வரைக்கும் வேலைக்காரி தான். எவ்வளவு உயரத்துக்கு நீ போனாலும் நீ எனக்கு வேலைக்காரி தான்” என்றாள் சங்கவி திமிராக. “நீ என்ன நெனச்சா எனக்கென்ன? என்னை பத்தி எனக்கு தெரியும், என் குடும்பத்துக்கு தெரியும். சும்மா வாய் சவடால் விடாத, நீ சொன்னதை நடத்திக்காட்டு. அப்படி மட்டும் நீ சொன்னதை நடத்தி காட்டிட்டா உன்னோட வேலைக்காரி தான் நான்னு ஒத்துக்குறேன்” என்றாள் துர்கா. அவள் சொன்னதை கேட்டு சந்தோஷமாக சிரித்த சங்கவி, “அப்போ ஒரு டீல்! நான் சொன்னது போல ஆதி கதிரை பிரிச்சு காட்டுறேன், அதே போல என் அம்மாவை வச்சு அவர்களுக்கு சேர வேண்டிய சொத்தையும் மத்த எல்லாத்தையும் என் பேர்ல நான் எழுதி காட்டுறேன். அப்படி மட்டும் நான் செஞ்சிட்டா நீ என்னோட வேலைக்காரியா ஒரு நாள்… ஒரே ஒரு நாள் மட்டும் இரு, அது போதும் எனக்கு. எத்தனை சொத்துக்கள் எனக்கு வந்தாலும் உன்னை ஒரு நாளாவது எனக்கு கீழ வேலைக்காரியா வேலை வாங்கின சந்தோசம் தான் ரொம்ப பெருசா இருக்கும்” என்றாள் சங்கவி திமிராக. “டீல்! நீ சொன்ன விஷயங்களில் ஏதாவது ஒன்னு நடந்தாலும் ஒரு நாள் உன்கிட்ட நான் வேலைக்காரியா இருக்கேன். ஆனா நீ சொன்னதுல எதுவுமே நடக்கலன்னா இந்த வீட்டை விட்டு நீ வெளியே போகணும். அதேபோல செண்பகம் அம்மாவோட வாழ்க்கையை விட்டு நீயா பிரிஞ்சு போயிடணும், அவங்க உன்னால கஷ்டப்படக்கூடாது. அவங்கள நல்லபடியா பார்த்துக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு, அவங்கள நான் பத்திரமா பாத்துக்குவேன். நீ அவங்க வாழ்க்கையை விட்டு போனா போதும்” என்று சங்கவியிடம் சவால் விட்டாள் துர்கா. சங்கவி துர்கா கூறியதை கேட்டு சிரித்தவள் “பார்க்கலாம். நான் சொன்னது நடக்குமா? நீ சொல்றது நடக்குமான்னு” என்றாள். “கண்டிப்பா உன்னால நீ சொன்னதுல ஒரு சின்ன துரும்பு கூட நகர்த்த முடியாது” என்றவள் “சீக்கிரமே இந்த வீட்ட விட்டு போறதுக்கு தயாரா இரு” என்று சொல்லிவிட்டு அவள் அறையை விட்டு கோபமாக வெளியேறினாள் துர்கா.
உன் ரகசிய ரசிகை நான் 250
157
previous post
