Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 272

உன் ரகசிய ரசிகை நான் 272

by Layas Tamil Novel
60 views

EPI 272

வெங்கடாச்சலம் கட்டிய தாலியே வேண்டாம் என்று மரகதம் அவர் சொத்து மட்டுமே போதும் என்று கூறியதால், அதற்குச் சம்மதித்து வெங்கடாச்சலம் அவர் பூர்வீக சொத்தையும், அதில் வந்த பிற சொத்துக்களையும் மொத்தமாக மரகதத்திற்குத் தாரை வார்த்துத் தருவதாகக் கூறி அந்தச் சொத்துப் பத்திரங்களை மரகதம் கையில் கொடுக்கப் போக….

அதைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கவிக்கு இதயம் வெடித்து விடும் அளவிற்குத் துடிக்க ஆரம்பித்தது. தான் போட்ட பிளான் எல்லாம் மொத்தமாக வீணாகி விடுமே என அவள் பரபரப்பாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தன் மூளையைப் போட்டுப் பிசைந்து கொண்டு இருக்க….

அந்த நேரம் பார்த்து வெங்கடாச்சலம் சொத்துப் பத்திரங்களை மரகதம் கையில் கொடுக்கச் செல்லும் வேளையில், “நிறுத்துங்க” என ஒரு குரல் மண்டபத்தையே அதிரும் அளவிற்கு எதிரொலித்தது.

குரல் வந்த திசையை அனைவரும் திரும்பிப் பார்க்க…. ஆனால் சங்கவியோ தனக்கு முன்னால் கோபமாக நின்றிருந்த செண்பகத்தை வாயைத் திறந்து கொண்டு பார்த்தாள். என்ன நிறுத்துங்கன்னு சத்தம் போட்டதே நம்ம செண்பகம் தான், அதனால்தான் சங்கவி அவரை அவ்வளவு அதிர்ச்சியா பார்த்துட்டு இருக்காள்.

சங்கவிக்கு செண்பகம் திடீரென இப்படி கோபமாகக் கத்துவதைப் பார்த்து ஒன்றும் புரியவில்லை. எதற்காக செண்பகம் இப்போது சம்பந்தமில்லாமல் கூச்சலிட்டார் என சங்கவி யோசித்துக் கொண்டு தன் அம்மா செண்பகத்தையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தால்.

மெல்ல செண்பகத்திடம் குனிந்து, “அம்மா! இப்ப எதுக்காக ‘நிறுத்துங்க’ன்னு சத்தம் போட்டீங்க?” என்றால் புரியாமல்.

“நான் எதுக்காக என் அண்ணனை அந்தச் சொத்துப் பத்திரங்களை அந்த மரகதத்துக்குக் கொடுக்க வேண்டாம் என்று சொன்னேன் இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கே புரியும்” என்றவர், எனச் சொல்லி சங்கவியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் வெங்கடாச்சலத்தின் முன்பு நிறுத்தினார்.

‘இப்போ எதுக்கு இந்த அம்மா சம்பந்தமில்லாமல் என்னைக் கூட்டிட்டு வந்து இவர் முன்னாடி நிப்பாட்டி இருக்காங்க?’ என யோசித்தபடி சங்கவி நின்று இருந்தால்.

கையில் தன்னுடைய பூர்வீகச் சொத்துக்கள் உடைய பத்திரங்களை வைத்துக் கொண்டு நின்று இருந்த வெங்கடாச்சலம் செண்பகத்தை கேள்வியாகப் பார்த்தவர், “என்னாச்சு செண்பகம்? இப்போ ஏன் நீ இதையெல்லாம் மரகதத்திடம் கொடுக்க விடாமல் தடுத்தாய்?” என கேட்டார்.

“அண்ணா! உங்களுக்கு என்ன ஆச்சு? இது நம்ம பரம்பரை பரம்பரையா வழி வழியாக வந்த சொத்துக்கள். நியாயப்படி பார்த்தா இது நம்ம தாத்தா, அவங்களோட தாத்தா என்று வழி வழியாக வந்த சொத்து. இதை அப்படியே தூக்கி மொத்தமா, ‘உங்களை வேண்டாம்’ என்று தூக்கி எறிஞ்சிட்டு போனவ கையில கொடுக்குறீங்க? இது உங்களுக்கே நியாயமா?” என்றார் செண்பகம் கோபமாக.

“இல்ல செண்பகம். என்னதான் அவள் என்னை வேண்டாம்னு ஒதுக்கிட்டுப் போனாலும், அபியும் என் பொண்ணு தானே? அவளுக்கு ஒரு அப்பாவா நான் செய்ய வேண்டிய கடமையை செஞ்சு தானே ஆகணும்?” என்றார் வெங்கடாச்சலம்.

“செய்ங்கண்ணா! உங்களை நான் வேண்டாம் என்று சொல்லவே இல்லையே. ஆனா இப்படி மொத்தமா உங்ககிட்ட இருக்கிற எல்லாத்தையுமே தூக்கி அவகிட்ட கொடுக்கணுங்குற அவசியம் இல்லையே? நம்ம வீட்லயும் பசங்க இருக்காங்க. நீங்க அவங்களைப் பத்திக் கொஞ்சமாவது யோசித்து பார்த்தீர்களா?” என்றார்.

“செண்பகம்! என் பசங்க ரெண்டு பேருமே அவங்களுக்குச் சம்பாரிச்சு அவங்க குடும்பத்தையும் நம்மளையும் காப்பாற்ற அளவுக்குத் திறமை இருக்கு. அதனால இந்தப் பணமெல்லாம் அவங்களுக்கு ஒரு பெரிய விஷயமே இல்ல. இதைவிட 100 மடங்கு என் பசங்க ரெண்டு பேரும் எனக்குச் சம்பாரிச்சு கொடுப்பாங்க என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. அவங்களைப் பத்தி உனக்கும் நல்லாவே தெரியுமே” என்றார் வெங்கடாச்சலம்.

“அண்ணா! நீங்க சொல்றதுல எந்த ஒரு தப்பும் இல்ல. நானும் அதை ஒத்துக்குறேன். ஆனா நான் ‘நம்ம பசங்கன்னு’ சொன்னது ஆதி, கதிர், என்னோட பொண்ணு சங்கவி மூணு பேரையும் சேர்த்துதான் சொன்னேன். ஆனா நீங்க உங்க மகனாக ரெண்டு பேரையும் மட்டும் மனசுல வச்சுட்டு இப்படிப் பேசுவீங்கன்னு நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல. அப்போ என் பொண்ணு வேற யாருப்பா? நான் பெத்த பொண்ணு வேற யாரோ உங்களுக்கு?” என்றார் கோபமாக.

வெங்கடாச்சலமும் விசாலட்சியும் அதிர்ந்து விட, அவர்களை விட சங்கவிக்குத் தான் பேரதிர்ச்சியாக இருந்தது. தன் அம்மா முதல் முறையாகத் தனக்காக, அதுவும் இத்தனை பேர் முன்னிலையில் சபையில் வைத்துப் பேசுவதைக் கேட்டதும் சங்கவிக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது. இதுவரை அவளுக்காக சப்போர்ட் செய்து பேசியது வேதாச்சலம் மட்டுமே. அவரும் தன் மகள் வந்ததும் தன்னை யாரோ வெனப் பார்த்துவிட, உண்மையான ரத்த பந்தம், தாய் பாசம் மட்டுமே தன்னைப் பாதுகாக்கிறது என்ற உணர்வு சங்கவிக்கு மனதில் தோன்றியது.

செண்பகம் பேசியதைக் கேட்டதுமே அவளுக்கு இத்தனை நாள் மனதில் எழுந்த பழி உணர்ச்சி எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதாக உணர்ந்தாள். அவளால் செண்பகம் பேசியதை இன்னமும் நம்ப முடியவில்லை என்றாலும், ஆனால் செண்பகம் சங்கவிக்காக வாதிடுவது கண்கூடாகப் பார்த்துச் சந்தோசப்பட்டவள், செண்பகத்தின் கையை வந்து பிடித்துக் கொண்டவள், “அம்மா! எனக்கு இது போதும். நீ எனக்காக யோசிக்கிறாய் என்கிறது எனக்குப் பெரிய விஷயமா தெரியுது. இந்தச் சொத்து பத்துக்கள் எல்லாம் நமக்கு வேண்டியதில்லை. என்னிடமும் இதைவிடப் பணம், காசு நிறைய இருக்கு. நீங்க ஏன் இப்படி இவங்ககிட்ட போய் கெஞ்சிட்டு நிக்கிறீங்க?” என்றால் சங்கவி.

“நீ சும்மா இரு சங்கவி. உனக்கு ஒன்னும் தெரியாது. உன்கிட்ட இருக்குற சொத்துக்கள் எதுவுமே நியாயமா உன்கிட்ட வந்து சேர்ந்தது கிடையாது. அது எந்த வழியில் எப்படி வந்தது என்று எனக்கும் நல்லாவே தெரியும். ஆனால் உனக்கு என்று சேர வேண்டிய சொத்து என்னோடது. என்னுடைய இரத்த சம்பந்தத்தில் இருந்து வரது தான் உண்மையான சொத்துக்கள்.

நானும் இத்தனை நாள் அண்ணாவே உனக்கு வேணுங்குறத பார்த்து செய்வாருன்னு பொறுமையா இருந்தேன். ஆனா அவர் எப்போ இத்தனை பேரும் முன்னாடி சபையில் வைத்து உன்னையும் என்னையும் யாரோ மாதிரி நடத்தினாரோ அப்பவே எல்லாம் முடிஞ்சு போயிடுச்சு” என்றவர் திரும்பி வெங்கடாச்சலத்தைப் பார்த்து, “சொல்லுங்கண்ணா! நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? உங்க குழந்தைகள்னு நீங்க நினைச்சது ஆதியையும் கதிரையும் மட்டும் தானா? அப்போ என் பொண்ணு, நானும் யாரு?” என்றார் செண்பகம்.

இப்படிப் பேசியதும் அங்கே இருந்த அனைவருக்குமே அதிர்ச்சி தான். இப்படி வந்து செண்பகம் சபையில் வைத்தே தன் அண்ணனிடம் வாதிடுவதைக் கண்ட அவரது உறவினர்கள், “என்னம்மா செண்பகம்? அந்தப் பொம்பளை தான் புரிஞ்சுக்காம உங்களோட அண்ணனை இத்தனை பேர் முன்னாடி ‘வேண்டாம்’ என்று தூக்கி எறிஞ்சிட்டு அவர் கொடுக்கிற சொத்துதான் வேணும்னு சொல்லிட்டு நிக்குது. நீயும் அதே போல பண்ணினா அந்தப் பொம்பளைக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?” என்று ஒருவர் வந்து கேட்க.

அவரைப் பார்த்த செண்பகம், “யாரு?” என்று திரும்பி அவரை நக்கலாகப் பார்த்தவர், “ஓ நீங்களா! நானும் என் புருஷனும் ஒருத்தர் ஒருத்தரும் விரும்பி கல்யாணம் பண்ணிட்டு வந்து என் அண்ணன் முன்னாடி நின்ன போ, ‘என்ன சொல்லி என்னையும் என் புருஷனையும் வீட்டை விட்டுத் துரத்துனீங்க? இந்த ஓடுகாலிக்கு நம்ம சொத்திலிருந்து ஒரு பங்கும் கொடுக்கக் கூடாது. நாம பேச்ச மீறி இவ வேற எவனோ கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டா. அதனால இவளை உள்ளே சேர்த்துக்காதே’ என்று மத்தவங்கள மாதிரி நீங்களும் சேர்ந்து என்னை விட்டுவிட்டுத் துரத்தினவர் தானே? நானும் என் புருஷனும் வெளியே போய் எவ்வளவு கஷ்டப்பட்டு உங்களுக்குத் தெரியுமா? எவ்வளவு அவமானப்பட்டு உங்களுக்குத் தெரியுமா? இது எங்க குடும்பத்துக்குள் நடக்கிற விஷயம். இதுல தலையிட உரிமை உங்களுக்குக் கிடையாது. என்ன கேள்வி கேட்கிற உரிமை என் அண்ணனோட குடும்பத்துக்கும் என் அண்ணனுக்கும் மட்டும்தான் இருக்கு. இங்க இருக்கிற யாருக்குமே கிடையாது” என்றார் செண்பகம்.

அவர் அப்படிச் சொல்லச் சொன்னதும் வெங்கடாச்சலத்திற்குப் பரிந்து பேசிய அந்த நபர் அமைதியாகப் பின்வாங்கி விட, அவரிடம் பேசிய கோபத்தோடு திரும்பி வெங்கடாச்சலத்தையும் அவர் அருகில் அமர்ந்திருந்த விசாலாட்சியையும் பார்த்தார் செண்பகம்.

அவர் பேசியதைப் பார்த்த விசாலாட்சிக்கு ஆச்சரியமாக இருந்தது. சந்தோஷமாக எழுந்து செண்பகத்திடம் வந்தவர், “இப்பதான் செண்பகம் எனக்கு உண்மையாவே சந்தோஷமா இருக்கு. உனக்கு வேணும்கிற உரிமையை நீயே வாயைத் திறந்து கேட்கணும்னு வந்திருக்க பாத்தியா? இதைத்தான் நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்த்தேன். எப்பவுமே நமக்கான விஷயத்தை நம்ம வாயைத் திறந்து சொல்லாமலோ, கேட்காமலோ நமக்கு எப்பவுமே கிடைக்காது, நடக்காது. இந்த விஷயத்துல நான் உனக்குத் தான் சப்போர்ட் பண்ணுவேன். உன் அண்ணா அவருக்கு இருக்கிற எல்லாச் சொத்தையும் தூக்கி அவர் பொண்ணுக்குக் கொடுக்கறதுல எனக்குத் துளியும் விருப்பமில்லை” என்று விசாலாட்சி செண்பகத்திற்குச் சாதகமாகப் பேசினார்.

சங்கவிக்கு இது இன்னும் பேரதிர்ச்சியாக இருந்தது. தன்னைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்திருந்த விசாலாட்சி செண்பகத்திற்காக ஆதரவாகப் பேசுவதும், அந்த ஆதரவு தன்னையும் சேர்த்துதான் என்பதையும் புரிந்து கொண்டவள், அவரையும் ஆச்சரியமாகப் பார்த்தபடி நின்று இருந்தால்.

இவர்களெல்லாம் பேசுவதைப் பார்த்த வெங்கடாச்சலம் மேடையில் இருந்து எழுந்தவர் செண்பகத்திடம் வந்து, “செண்பகம்! நீ என்ன நினைச்சது அவ்வளவுதானா? உன் அண்ணனைப் பத்திப் புரிஞ்சுகிட்டது அவ்வளவுதானா?” என்றார்.

“நான் உங்களை நல்லாதான் புரிஞ்சி வெச்சிருக்கேன் அண்ணா. இத்தனை பேர் முன்னாடி என்னை ‘யாரோ’ மாதிரி நீங்க கொஞ்சம் கூட யோசிக்காமல் நடத்திட்டீங்க. எனக்கு இது சுத்தமாகவே பிடிக்கல. எப்படி நீங்க என்னைப் பத்தியும் என் மகளைப் பற்றியும் யோசிக்காம விட்டீங்க?” என்றார்.

“நான் அப்படி உங்களைப் பற்றி யோசிக்கவில்லை என்று உன்கிட்ட யாரு செண்பகம் சொன்னது?” என்றார் வெங்கடாச்சலம் சிரித்துக் கொண்டே.

“என்ன அண்ணா இப்படி கேட்கிறீங்க? இதோ இங்கு இருக்கிற அத்தனை பேருமே சாட்சி தானே? உங்களுக்கு இருக்கிற மொத்த சொத்தையும் தூக்கி இதோ இங்கே நிற்கிறாளே, உங்களை ‘வேண்டாம்’ என்று சொல்லித் தூக்கிப் போட்டுட்டு போனாளே, அவளுக்கும் அவ பெத்தப் புள்ளைக்கும் இல்ல கொடுக்குறீங்க? இதிலிருந்து தெரிஞ்சுக்க வேண்டாமா? நீங்க எங்களைப் பத்தி கொஞ்சம் கூட நினைக்கவே இல்லைன்னு” என்றார் செண்பகம்.

“செண்பகம்! நீங்க ஒரு விஷயத்தைக் கவனிக்க மறந்துட்டேன். நான் எனக்குச் சேர வேண்டிய சொத்துக்களை எல்லாம் தான் என் மகளுக்குக் கொடுக்கிறேன் என்று சொன்னேனே ஒழிய, நம்ம தாத்தா அப்பா வழியில் வந்த எந்தச் சொத்தையுமே அவங்களுக்குத் தூக்கிக் கொடுக்கிறேன் என்று சொல்லவே இல்லையே” என்றார்.

“இப்படி குழப்பிப் பேசி எனக்கும் என் பொண்ணுக்கும் சேர வேண்டியதை கொடுக்காமல் ஏமாற்றலாம்னு நினைச்சீங்களா அண்ணா? அப்படி நடக்க நான் ஒரு காலும் சம்மதிக்க மாட்டேன். எனக்குப் பிறகு எனக்குச் சேர வேண்டிய சொத்துக்கள் அனைத்துமே சங்கவிக்கு மட்டும்தான். அவளை நான் என்ன மாதிரி அனாதையா கஷ்டப்பட விடமாட்டேன். அவளுக்குன்னு ஒரு அளவான நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க அவளுக்குச் சேர வேண்டியதை செய்யாமல் நான் ஓயமாட்டேன்” என்றார் செண்பகம் கோபமாக.

“நீ ஏன் இப்படி எல்லாம் பேசுற? நான் சொல்றது முதல்ல முழுசா கேட்டுட்டு அதுக்கப்புறம் எதுவாயிருந்தாலும் பேசு. அவசரப்பட்டு வார்த்தையை விட்டுப் பிறகு அதை அழ முடியாமல் நீ தான் சிரமப்படப் போற” என்றார் வெங்கடாச்சலம்.

“சரி சொல்லுங்க அண்ணா! நான் எதுவும் பேசல. நீங்க பேசி முடிகிற வரைக்கும் அமைதியா இருக்கேன்” என்பவர் தன் அருகில் நின்றிருந்த சங்கவியை இழுத்து அவளுடன் கைகோர்த்து நின்றவர், “நீங்க என்ன யூஸ் சொல்றதா இருந்தாலும் என்னையும் என் பொண்ணையும் மனசுல வச்சுட்டு பேசுங்க” என்றார்.

சங்கவிக்கு செண்பகம் தன் கையை கோர்த்துக்கொண்டு அவளுக்காக ஒற்றை ஆளாக இத்தனை பேரையும் எதிர்த்து நிற்பதைப் பார்த்து, இத்தனை நாள் செண்பகத்திடம் காட்டாத பாசத்தையும், கண்டுகொள்ளாத உணர்வையும் இப்போது உணர்ந்தவளாக, மொத்தமும் வடிந்து போய் தனக்கு இப்படிப்பட்ட உண்மையான நல்ல உறவு தனக்குக் கிடைத்துவிட்டது என சங்கவியின் உள்ளம் சந்தோஷத்தில் துள்ளி குதித்தது. அவள் வெளியே முகத்தோடு கண்களில் தேங்கியிருந்த கண்ணீரோடு செண்பகத்தைப் பார்த்தாலும், மனதிற்குள் உண்மையாகவே சந்தோஷப்பட்டாள்.

“செண்பகம்! நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ” என்றவர் திரும்பி மரகதத்தையும் அபியையும் பார்த்து, “நீங்களும் நான் சொல்றத கவனமா கேட்டுக்கோங்க. என்னோட பாட்டன் முப்பாட்டன் கஷ்டப்பட்டு, வேர்வை சிந்தி உழைச்ச காசை அப்படியே தூக்கி நான் யாருக்கும் கொடுக்கிற முட்டாள் கிடையாது.

அது என்னோட பசங்க ஆதி, கதிராக இருந்தாலும் அப்படித்தான். இந்தச் சொத்துக்களை நான் பிரிச்சு அவரவருக்குத் தேவையானதை தான் கொடுக்கப் போறேன்.

என் பசங்க என்னோட சொத்துல இருந்து சல்லி பைசா வேண்டான்னு சொல்லிட்டாங்க. அதுக்காக என் பசங்களை நான் அப்படியே விட்டுவிட முடியுமா?” என்றவர். “என் பாட்டன் முப்பாட்டனோட சொத்துக்களை ரெண்டு பங்கா பிரிச்சு இருக்கேன்” என்றவர் செண்பகத்தைப் பார்த்து, “ஒரு பங்கு எனக்கும், இன்னொரு பங்கு செண்பகத்துக்குமே சேரும்” என்றார்.

வெங்கடாச்சலம் அப்படிச் சொன்னதும், அதைக் கேட்டு மரகதம் உடனே அவரைப் பார்த்து, “இது என்ன நியாயம் இருக்கு? நீங்க மூணு பசங்கள பெத்து வச்சிருக்கீங்க. அங்க அவளுக்கு ஒரே ஒரு பொண்ணு தானே? அப்போ நீங்க சொத்துக்களை நம்ம குழந்தைகளுக்குத் தகுந்த மாதிரி தானே பிடித்து இருக்கணும்? எப்படி இருக்கிற கால்வாசி சொத்து அவளுக்குத் தூக்கிக் கொடுக்கப் போறீங்களா?” என்றார்.

அவரைத் திரும்பி முறைத்த வெங்கடாச்சலம், “நியாயப்படி பார்த்தால் நான் பிரிக்கிற சொத்துல உனக்கு, அபிக்கோ ஒரே சின்னத் துரும்பு கூடக் கொடுக்கணும்னு எனக்கு அவசியமில்லை. ஏன்னா நீ என்னை விட்டுப் பிரிஞ்சு போகும்போதே உனக்கும் அதிகமாச் சேர வேண்டியதை மொத்தமா பேசி எழுதி வாங்கி தானே போன? இது நானாப் பார்த்து உனக்குக் கொடுக்கிறது. இதுக்கு மேல எதுவும் பேசினா உனக்கு அதுவும் கிடைக்காது. அதை ஞாபகத்துல வச்சுக்கோ” என்று வெங்கடாச்சலம் காட்டமாகப் பேச, அவர் பேசியதைக் கேட்டதும் மரகதம் அதற்கு மேல் எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு நின்று விட்டார்.

மரகதத்தை எச்சரித்து விட்டுத் திரும்பிய வெங்கடாச்சலம் ஆதி, கதிர் இருவரையும் பார்க்க, அவர்கள் இருவருமே வெங்கடாச்சலத்திடம் வந்தனர். தன் மகன்கள் தோளில் கை போட்டுத் தன்னோடு அணைத்துக் கொண்ட வெங்கடாச்சலம்.

“என்னோட பசங்க ரெண்டு பேருமே சொக்கத்தங்கங்கள். அம்மா அப்பாவுக்கான மரியாதையையும் மதிப்பையும் கொடுத்து இந்தக் குடும்பத்துக்கான பாரம்பரியத்தையும் இவ்வளவு வரைக்கும் அவங்க ரெண்டு பேருமே நடந்துக்கிட்டாங்க. அதே போலத்தான் எனக்கு வந்த ரெண்டு மருமகள்களும் என்னோட குடும்பத்துக்கு எந்த ஒரு கலங்கமும் வராமல் அதை நல்ல முறையில் எடுத்து போவதில்லை அவர்களுக்குப் பெரிய பங்கு இருக்கு. இவங்க எல்லாரையும் சரியாக் கொண்டு போறதுல முக்கியமான பங்கு என்னோட மனைவி விசாலாட்சிக்கு தான் சேரும்” என்று விசாலாட்சியைப் பெருமையாகப் பார்த்தார் வெங்கடாச்சலம்.

விசாலாட்சி அவரைப் பார்த்துப் புன்னகைக்க… வெங்கடாச்சலம் அபியைப் பார்த்துக் கையை காட்டித் தன்னிடம் அழைத்தவர், சங்கவியை திரும்பிப் பார்த்துப் பாசமாக உண்மையான அன்போடு, “இங்கே வாம்மா” என அழைத்தார்.

இத்தனை நாள் வெங்கடாச்சலத்தை ஒரு எதிரியாக, தன் வாழ்க்கையைக் கெடுத்தவராக, தன் குடும்பத்தையே குலைத்தவராக நினைத்து பார்த்துக் கொண்டிருந்த சங்கவிக்கு அவரின் இந்த பாசமான, அன்பான அழைப்பு அவளை ஏதோ செய்தது.

மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல சங்கவி வெங்கடாச்சலத்தின் அழைப்பிற்கு எதுவும் பேசாமல் அவரிடம் சென்று நின்றாள்.

“இங்க இருக்கிறவங்க எல்லாரும் கேட்டுக்கோங்க. இவங்க நாலு பேருமே என்னோட பசங்க தான். எங்களுடைய சொத்துக்கள் அனைத்தும் முறையா இவங்க நாலு பேருக்கும் தான் சேரப்போகுது” என்றவர் ஆதி, கதிரைப் பார்த்து, “என் பசங்க ரெண்டு பேரும் அவங்களுக்குப் புடிச்ச பொண்ணுங்கள கல்யாணம் பண்ணி சந்தோஷமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்காங்க. அதே போல என்னோட பொண்ணு அபிக்கும் சங்கவிக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்னு நான் நினைக்கிறேன்” என்றவர்.

“என் பசங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கிட்டதுனால அவங்களுக்குச் சேர வேண்டிய சொத்துக்களை எந்தவித நிர்ப்பந்தமும், கண்டிஷனும் இல்லாமல் அவர்களுக்கு நான் எழுதிக் கொடுக்கப் போறேன்” என்றார்.

உடனே அபி, “அப்பா! இது என்ன நியாயம்? நீங்க சொல்றது எங்களுக்குப் புரியவில்லை. அது என்ன அவங்களுக்கு மட்டும் எந்த கண்டிஷனும் இல்லாமல் கொடுக்கப் போறேன்னு சொல்றீங்க? அப்போ இந்தச் சொத்துக்களை கொடுக்கிறதுக்கு எனக்கும் சங்கவிக்கும் கண்டிஷன் போடப் போறீங்களா?” என்றால்.

“நான் ஏற்கனவே சொல்லிட்டேன், என்கிட்ட இருக்கிற சொத்துக்களை அப்படியே மொத்தமா தூக்கிக் கொடுக்க நான் ஒன்னும் முட்டாள் கிடையாது.

ஒரு பொருளோட அருமை அது நம்ம கையை விட்டுப் போகும் போது தான் தெரியும். கூடவே வச்சிருந்தா அதனோட மதிப்பு தெரியாதுன்னு சொல்லுவாங்க. நீ கேக்குறப்போ எல்லாம் உனக்குத் தேவையானதைக் கொடுத்து உன்னை நான் அடி முட்டாள் ஆக்கிட்டேன். இனியும் நான் அதைச் செஞ்சு மேலும் முட்டாளாக்க விரும்பல” என்றவர்.

“உங்க ரெண்டு பேருக்கும் நான் பிரித்துக் கொடுக்கிற சொத்து முழுமையா உங்கள வந்து சேரனும்னா, நீங்க ரெண்டு பேரும் ஆதி, கதிர் மாதிரி கல்யாணம் செய்துட்டு குடும்பமா வாழ ஆரம்பிக்கணும். உங்களுக்குக் குடும்பம், குழந்தைன்னு நீங்க எப்படி ஒரு வாழ்க்கையை அழகா வாழ ஆரம்பிக்கிறீர்களோ, அப்போதான் இந்தச் சொத்து முழுவதும் உங்களைச் சேரும். அதுவரைக்கும் இந்தச் சொத்துக்களை ஆதி, கதிர் தான் பராமரிக்கப் போறாங்க” என்றார்.

அதைக் கேட்டதும் மரகதம், “அப்பா! இது என்ன நியாயம்? நானும் சங்கவியும் மட்டும் கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கிட்டதுக்கு பிறகு தான் இந்தச் சொத்தெல்லாம் எங்க ரெண்டு பேருக்கும் சேரும்னு சொன்னீங்க. ஆனா ஆதிக்கும், கதிரும் இன்னும் குழந்தை பெத்துக்களையே? அவங்களுக்கு மட்டும் எப்படி அவங்களுக்குச் சேர வேண்டிய சொத்துக்களைத் தூக்கிக் கொடுப்பீங்க?” என்றால்.

அவளைப் பார்த்துச் சிரித்த வெங்கடாச்சலம், “என் பசங்க ரெண்டு பேருமே அவங்களுக்குப் பிடிச்ச பொண்ணுங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒற்றுமையா, சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்காங்க. அதை நான் கண்கூடா பார்த்துட்டு தான் இருக்கேன். அதுல எந்த ஒரு பொய்யோ, நடிப்போ கிடையாது.

ஆனா இந்தச் சொத்துக்களை உங்களுக்கு நான் முழுசா கொடுக்கணும்னா நான் போட்ட கண்டிஷனைப் பார்த்துட்டு நீங்க பொய்யா யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?

இப்பதான் நிறைய சொல்றாங்களே அவசரக் கல்யாணம், ஒப்பந்தக் கல்யாணம் அப்படின்னு எல்லாம் நிறைய இருக்கே? அதுபோல நீங்க ரெண்டு பேரும் செய்துட்டு வரமாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?” என்றவர், “அதனால உங்க ரெண்டு பேருக்கும் நானே ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன். அதுக்கு நீங்க ரெண்டு பேரும் முழு மனசா சம்மதம் சொல்லணும். உங்களை நம்பி இந்தப் பொறுப்பை நான் உங்ககிட்ட விடுகிறது தான் இல்ல. நான் பார்த்து யாரை கையை நீட்டேனோ, அவங்க ரெண்டு பேருக்கும் நீங்க கழுத்த நீட்டனும். அவன் கூட நீங்க சந்தோஷமா வாழனும், உங்களுக்கான வாழ்க்கையை நீங்க உண்மையா வாழ ஆரம்பிக்கிறத நான் உணரணும். அப்போதான் இந்தச் சொத்து முழுவதும் உங்க ரெண்டு பேருக்கும் வந்து சேரும்” என்றார்.

மரகதத்திற்கு எதுவும் பேச முடியாமல் நின்றிருக்க, அபியும் வெங்கடாச்சலிடத்திலும் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தாள்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த செண்பகமே, “அண்ணா! நீங்க என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு நானும் என் பொண்ணும் கட்டுப்படுவோம். நியாயப்படி சேர வேண்டிய சொத்துக்காக நான் இங்கே எவ்வளவு நேரம் வாதாடல. இப்படி அதுக்கான எந்த ஒரு அருகதையும் இல்லாதவங்க கிட்ட இந்தச் சொத்து போய் சேருது என்கிறதா என்னோட ஆதங்கமே. என் பெண்ணும் ஒன்றும் சளைச்சவள் கிடையாது. அவள் எவ்வளவு பெரிய பிசினஸ் எடுத்து நடத்திட்டு இருந்தால் உங்களுக்கு நல்லாவே தெரியும் தானே?” என்றார் செண்பகம்.

“எனக்குத் தெரியுமா சங்கவியைப்? உனக்குத் தெரிவதற்கு முன்னாடியே இருந்தே எனக்கு நல்லாவே தெரியும். அவள் சின்ன வயசுல இருந்து என்கிட்ட தானே வளர்ந்து இருக்கா? அவளைப் பத்தி எனக்குத் தெரியாதா? ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலைல அவள் எண்ணம் வேணா தப்பான எண்ண ஓட்டத்தில் இருந்திருக்கலாம். ஆனா அவள் உடம்புல ஓடுறது உன்னோட ரத்தம். கண்டிப்பா உன்னோட குணமும் அவகிட்ட இருக்கும்னு நான் நம்புறேன்” என்றார்.

அவர் சொன்ன இந்த வார்த்தை சங்கவியின் இதயத்தில் ஆணியால் அடித்தது போல இருந்தது. அதுவரை ஏதேதோ மனதில் ஓடிக்கொண்டு இருந்த சங்கவிக்கு வெங்கடாச்சலத்தின் இந்த வார்த்தையும் தன் அம்மா தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் அவளை நிலைகுலைய செய்தது. இத்தனை நாள் வீம்பு பிடித்து திமிராக, கர்வம் கொண்டு இருந்த அனைத்துமே இப்பொழுது ஒரு நொடியில் தரையில் விழுந்தது போல உணர்ந்தாள்.

இவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்க அபி வெங்கடாச்சலத்தைப் பார்த்து, “நீங்க அது எப்படி நீங்களே எங்க ரெண்டு பேருக்கும் பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறீங்க? எங்களுக்குப் பிடிக்காத எவனையோ எங்க ரெண்டு பேருக்கும் வலுக்கட்டாயமாக கல்யாணம் செய்து வைத்து, உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறவன் கூட நாங்க நல்லபடியா வாழ மாட்டோம் என்று முடிவு பண்ணித்தானே இப்படி ஒரு பெரிய பிளானைப் போட்டு இருக்கீங்க?

இந்தச் சொத்துக்களை எல்லாம் எங்களுக்குக் கிடைக்க விடாம செய்வதற்காக இந்த பிளானை நீங்க நடத்துறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியுது” என்றால் அபி.

“இத்தனை நாள் இந்த அப்பாவைப் புரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா அபி? நீயும் உன் அம்மாவைப் போலவே என்னைப் பற்றி இன்னும் தப்பா தான் புரிஞ்சுகிட்டு இருக்க அப்படித்தானே?” என்றவர்.

“எனக்கும் என் மனைவிக்கும் இந்த அறுபதாம் கல்யாணம் ஏற்பாடு செய்திருக்கேன்னு நீங்க எல்லாம் நினைச்சுட்டு இருக்கீங்க. ஆனா அதை விட ஒரு பெரிய விஷயம் நான் இங்கே பண்ணப் போறேன். இது எப்போ நீயும் உன் அம்மாவும் இங்க கல்யாணப் பேச்சை எடுத்ததுக்கு பிறகு வீட்டுக்குள்ள நுழைஞ்சீங்களோ, அப்பவே நான் எடுத்த முடிவு இந்தச் சொத்துக்களை எல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் பிரித்துக் கொடுக்கிறது என்ன. ஆனா இப்போ இந்தக் கல்யாணப் பேச்சு, நீங்க ரெண்டு பேரும் அதன் பிறகு நம்ம வீட்டுக்கு ஏற்படுத்தின பிரச்சினைகளையும், நம்ம வீட்டு ஆளுங்க கிட்ட நீங்க நடந்து கிட்ட முறையையும் வைத்து தான் இந்த முடிவு நான் எடுத்து இருக்கேன்” என்றவர்.

“இந்த மேடையில இப்பவே நான் சொல்ற பையனுக்கு நீங்க கழுத்த நீட்டனும். அவனைக் கல்யாணம் பண்ணி அவன் கூட நீங்க சந்தோஷமா நல்லபடியா வாழனும். அதை நான் என் ரெண்டு கண்ணாலையும் பார்த்து நம்பனும். அதன் பிறகு உங்களுடைய சொத்து தானாகவே உங்க கைக்கு வந்து சேரும்” என்றார் வெங்கடாச்சலம்.

இங்கேயே இப்போதே தங்களுக்குத் திருமணம் என்று வெங்கடாச்சலம் சொன்னதும் அபியும் சங்கவியும் அதிர்ந்து போய் அவரைப் பார்த்தனர்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured