Episode 56
ஆதி ரொம்ப நாள் கழிச்சுப் பார்த்த ஷிவு, அவன் முகத்தைப் பார்த்ததும் அங்கிருந்த தழும்புகளையும் கோணல்களையும் கண்டு முகம் சுளிச்சுட்டா. அதைப் பார்த்த ஆதிக்கு ரொம்ப சோர்வு ஆகிடுச்சு.
ஆதி சோர்ந்து போய் நிக்கிறதைப் பார்த்த துர்கா, அவனோட கையைப் பாசமாப் பிடிச்சு, “நான் உனக்குத் துணையா இருக்கேன்”னு அவனுக்கு புரிய வைக்க, ஆதி எதுவும் பேசாம துர்காவுடன் அங்கிருந்து கிளம்பினான்.
அவன் போனதும், அவங்களையே பார்த்துக் கிட்டிருந்த ஷிவு, “ஆதியோட பணத்துக்காகவும், அவன்கிட்ட இருந்து கிடைக்கிற லாபத்துக்காகவும் தான் துர்கா அவனை கல்யாணம் செஞ்சிருக்கா”னு தனக்குள்ளேயே சொல்லிக்கிட்டிருந்தா. சரியா அந்த நேரத்துல, “நீ சொல்றது சரிதான்”னு ஒரு குரல் அவ பக்கத்துல கேட்க, குரல் வந்த திசையைப் பார்த்தா அங்க சங்கவி நின்னுட்டு இருந்தா.
சங்கவி தன்னை அறிமுகம் செஞ்சுக்கிட்டதும், ஷிவு அவளைப் பார்த்தா. அப்புறம் ஆதியோட கல்யாணப் பத்திரிகையில சங்கவி பெயரைப் பார்த்தது அவளுக்கு ஞாபகம் வர, அவளைப் பார்த்து ஷிவு, “நீ… நீங்க…”னு இழுத்தா.
“நானே தான். ஆதியை கல்யாணம் பண்ணிக்க மணமேடை வரைக்கும் வந்துட்டேன். ஆனா, ‘என்னைப் பிடிக்கலை’னு சொல்லி, மண்டபத்தை விட்டே ஆதியோட குடும்பம் என்னையும் என் குடும்பத்தையும் அத்தனை பேர் முன்னிலையிலும் அவமானப்படுத்தி வெளியே அனுப்பிட்டாங்க.”
“அதுக்கப்புறம், இந்த துர்காவை ஆதியின் அம்மா என்ன சொல்லி, எவ்வளவு பணம் கொடுத்து சம்மதிக்க வச்சு, ஆதி-துர்கா கல்யாணத்தை நடத்தி வச்சாங்க”னு எல்லாத்தையும் சங்கவி சொன்னா. ஆனா, தான் செஞ்ச தப்பை மட்டும் ஒரு இடத்துல கூட ஷிவுகிட்ட சொல்லவே இல்லை.
சங்கவி சொன்னதை எல்லாம் உண்மையா நம்புன ஷிவு, “அந்த துர்காவைப் பார்த்தாலே அப்படித் தான் தெரியுது. ‘அவளுக்கு எவ்வளவு பணம் தருவதாகச் சொல்லி மாமாவை கல்யாணம் செஞ்சுக்கப் பேரம் பேசினார்களோ தெரியலை'”ன்னா.
“அதனால தான், நான் ஆதிகிட்ட அந்த துர்காவோட குணத்தைப் பத்திப் புரிய வைக்க இன்னைக்கு இங்க வந்திருக்கேன்”னு சங்கவி சொன்னா.
“அப்படியா! அப்போ… ஆதி மாமாகிட்ட அந்த துர்காவைப் பத்திச் சொல்லப் போறீங்களா?”னு ஆர்வமா கேட்டா ஷிவு.
“நான் எதுக்கு துர்காவைப் பத்தி ஆதிகிட்ட சொல்லணும்? அவனாவே அந்த துர்காவைப் பத்தி தெரிஞ்சுப்பான்”னு சொன்னவள், “உள்ளே போகலாமா?”னு கேட்க, அவள் முன்னால போக, ஷிவு கேள்வியோட அவ பின்னாடியே போனா
அவங்க ரெண்டு பேரும் உள்ளே போனப்போ, ஆதியும் துர்காவும் அவங்களுக்காக ஏற்பாடு செஞ்சிருந்த பூஜையில உட்கார்ந்திருந்தாங்க.
சுத்தி நிறைய பேர் உட்கார்ந்திருக்க, அங்க வந்த சங்கவியைப் பார்த்ததும், துரையின் குடும்பத்தைத் தவிர மத்த எல்லாருக்கும் அதிர்ச்சிதான்.
கதிர் விக்கிகிட்ட, “டேய் விக்கி! இந்த பேய் எதுக்குடா இங்க வந்துருக்கு? நாம இங்க வந்தது இவளுக்கு எப்படித் தெரியும்?”னு கேட்டான்.
“நானும் அதையே தான் யோசிச்சுட்டு இருக்கேன்”னு விக்கி சொன்னான்.
எல்லார் மனசுலயும் அதே கேள்வி தான் ஓடுச்சு. சங்கவி நேரா வெங்கி மாமா, விசி அத்தை கிட்ட வந்து, அவங்க சற்றும் எதிர்பார்க்காத மாதிரி, அவங்க ரெண்டு பேர் காலிலும் விழுந்தா.
அவங்க ரெண்டு பேரும் என்ன செய்றதுன்னு தெரியாம இருக்க, வெங்கி மாமா, “எழுந்திருமா சங்கவி”ன்னு சொன்னார். உடனே விசி அத்தை குனிஞ்சு, சங்கவியோட தோள்களைத் தொட்டு அவளை தூக்கி விட்டாங்க.
கண்ணுல தண்ணியோட எழுந்த சங்கவி, “அத்தை… மாமா… என்னை மன்னிச்சிருங்க. நான் இத்தனை நாளா எதுவுமே புரியாம உங்களை எல்லாம் ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன். முக்கியமா ஆதியை”னு சொன்னவள், திரும்பி எல்லாரையும் பார்த்து கை எடுத்து கும்பிட்டு, “என்னை மன்னிச்சுடுங்க”னு சொன்னா.
அவ அப்படிச் சொன்னதும், வெங்கி மாமா, “இப்போ எதுக்குமா இவ்வளவு நாள் கழிச்சு வந்து எங்ககிட்ட மன்னிப்புக் கேக்குற?”னு கேட்டார்.
“மாமா, இத்தனை நாளும் நான் உங்க எல்லார் மனசையும் புரிஞ்சுக்காம இருந்துட்டேன் மாமா. நான் செஞ்ச தப்பை எல்லாம் உணர்ந்துதான் உங்க எல்லார் கிட்டயும் மன்னிப்புக் கேக்குறேன்”னு சொன்னா.
அவ இப்படிச் சொன்னதும், என்ன சொல்றதுன்னு தெரியாம எல்லாரும் நின்னிருந்தாங்க.
“நேரம் ஆச்சு. பூஜையை ஆரம்பிக்கலாமா?”னு ஐயர் கேட்க, எல்லாரும் சங்கவியைப் பத்தி யோசிக்கிறதை விட்டுட்டுப் பூஜையில கவனம் செலுத்தினாங்க.
பூஜை ஆரம்பிச்சு, ஹோமம் எல்லாம் வளர்த்து, ஆதியையும் துர்காவையும் சேர்ந்து சில பூஜைகள் செய்யச் சொல்லிவிட்டு, அப்புறம் ரெண்டு பேரும் கோவிலை மூணு முறை சுத்தி வரச் சொல்லி ஐயர் சொன்னார்.
துர்கா சக்கர நாற்காலியை கீர்த்திகாவைக் கொண்டு வரச் சொல்ல… ஆதி அதுக்குள்ள “வேண்டாம்”னு கீர்த்திகாவைத் தடுத்துட்டு, தானே எழுந்து துர்காவைத் தன் கைகள்ல தூக்கிக்கிட்டு கோவிலைச் சுத்தி வலம் வர ஆரம்பிச்சான்.
ஆதியோட இந்த மாற்றம் கோவிலில் இருந்த எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியது. குறிப்பா விக்கியையும் கதிரையும் தான்.
கதிர் விக்கிகிட்ட, “டேய் விக்கி! என்னடா நடக்குது இங்க? நாம இங்க தான் இருக்கோமா, இல்ல வேற கிரஹத்துல இருக்கோமா? எங்க அண்ணா பண்றதைப் பார்த்தா என்னால என்னோட கண்ணையே நம்ப முடியலையே”ன்னு சொன்னான்.
“எனக்கும் அதே சந்தேகம் தான்டா கதிர். உங்க அண்ணா மாறுவான்னு எனக்குத் தெரியும். ஆனா இவ்வளவு சீக்கிரம் மாறுவான்னு நான் நினைச்சுப் பார்க்கலை. உங்க அண்ணா நமக்கு அப்புறம் தான் ரொமான்ஸ் கத்துப்பான்னு நினைச்சேன். ஆனா போற போக்கைப் பார்த்தா நாம தான் அவன் கிட்ட ரொமான்ஸ் கத்துக்கணும் போல. நல்லாத் தேறிட்டான் உங்க அண்ணன்”னு விக்கி சொன்னான்.
அவங்க ரெண்டு பேரையும் கண்டுக்காம, துர்காவைத் தூக்கிக்கிட்டு கோவிலைச் சுத்தி வலம் வந்த ஆதி, ஐயர் சொன்ன மாதிரி மூணு முறை வலம் வந்தான். துர்காவும் ஆதிக்கு எந்த எதிர்ப்பும் சொல்லாம, அவன் கழுத்தைத் தன் கைகளால் மாலை போலக் கட்டிக்கிட்டு, அவனை மட்டுமே கண் எடுக்காமப் பார்த்துக் கிட்டிருந்தாள்.
துர்காவை ஓரக்கண்ணால கவனிச்சுக்கிட்டே ஆதியும் கோவிலை வலம் வந்தான். அவளைப் பார்த்துக்கிட்டே மெய் மறந்து, துர்காவைத் தன் கைகளில் பூ மாதிரித் தூக்கிக்கிட்டு மனசுல பாட்டு பாடினான்:
கனவா… இல்லை காற்றா…
கையில் மிதக்கும் கனவா நீ…
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
நுரையால் செய்த சிலையா நீ…
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்…
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி…
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்…
உயரம் தூரம் தெரியாது…
இப்படி மனசுல பாடிக்கிட்டே துர்காவைத் தூக்கிக்கொண்டு மூணு முறை கோவிலை வலம் வந்தான்.
மூணாவது முறை வலம் வந்த பிறகு, ஐயர் சொன்ன இடத்துல வந்து துர்காவுடன் நின்னவன், அவளைக் கீழே தன் பக்கத்துல இறக்கிவிட்டு, துர்கா கீழே விழாம இருக்க அவள் இடுப்பைப் பிடிச்சான். ஆனா துர்காவோ இன்னும் ஆதியோட கழுத்தை விடாம கட்டிக்கிட்டு நின்னுட்டு இருந்தாள்.
நிமிர முடியாம ஆதி துர்காவைப் பார்க்க, அவளோ இந்த உலகத்துலயே இல்லை போல, அவன் கண்ணையே பார்த்துக் கிட்டிருந்தாள்.
ஐயர் இவங்க ரெண்டு பேரையும் பார்த்தவர், துர்காவைப் பார்த்துட்டு, “பையனுக்குப் பூ மாலை போடத் தேவை இல்லை போல… பொண்ணே தன் கைகளால பையனுக்கு மாலையா நிக்கிறாரே…”ன்னு சொன்னார்.
தன் கையில இருந்த பூமாலையை ஆதியோட கையில கொடுத்து, “நீங்களே உங்க வீட்டுக்கார அம்மாவுக்கு இந்த மாலையைப் போட்டு விடுங்கோ… அவங்க கை ரெண்டும் ரொம்ப பிஸியா இருக்கு”னு கிண்டல் பண்ண,
ஐயர் கொடுத்த மாலையைச் சிரிச்சுக்கிட்டே வாங்கின ஆதி, அதை துர்காவோட கழுத்துல போட்டு விட்டான். துர்காவோ இன்னும் ஆதியையே அதே நிலையில நின்னு பார்த்துக்கிட்டு இருந்தாள்.
அவ பக்கத்துல வந்த கீர்த்தி, துர்காவோட காதுல மெதுவா, “அக்கா… போதும் மாமாவை சைட்டடிச்சது. கொஞ்சம் உண்மை உலகத்துக்கு வா. இப்படி கோவில்னு கூடப் பார்க்காம எல்லார் முன்னாடியும் ரொமான்ஸ் பண்ணிட்டு நிக்கிறியே அக்கா…”னு அவள் காதுல சொல்ல, அப்போதும் துர்காகிட்ட எந்தப் பதிலும் இல்லை. கடுப்பான கீர்த்தி துர்காவோட இடுப்புல நறுக்குன்னு கிள்ளிவிட்டா.
அவ கிள்ளினதும், “ஆஹ்…”னு கத்திக்கிட்டு ஆதியை இறுக்கமா கட்டிக்கிட்டு நின்னாள் துர்கா.
ஆதியும் இதை எதிர்பார்க்கலை தான். துர்கா தன்னைக் கட்டிக்கிட்டதும், தான் பிடிச்சிருந்த துர்காவோட இடுப்பை இன்னும் இறுக்கமா தன்னோட சேர்த்துப் பிடிச்சுக்கிட்டு நின்னான்.
ரெண்டு பேரும் நெற்றியை முட்டிக்கிட்டு, துர்கா பட்டுச் சேலை கட்டி, கழுத்துல மாலையோட நின்னு அவனையே பார்க்க… ஆதியும் பட்டு வேஷ்டி அணிஞ்சு, துர்காவோட நெற்றியோட தன் நெற்றியை உரசிக் கண்ணோடு கண் பார்த்து காதலோட நின்னிருக்க, இந்த அழகான நேரத்தை பார்த்த விக்கி டக்குனு தான் கொண்டு வந்த கேமராவுல பதிவு செஞ்சுகிட்டான்.
எல்லாரும் அவங்க ரெண்டு பேரையும் பார்த்துச் சந்தோஷப்பட… ஆனா மூணு பேர் மட்டும் இவங்க ரெண்டு பேரையும் பார்த்துக் கோபத்துல இருந்தாங்க.
வேற யாருங்க? இந்த துரையும், அவர் மூத்த பொண்ணு ஷிவுவும். அப்புறம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நல்லவள் மாதிரி ஆதியின் அம்மா… அப்பா… கால்ல விழுந்தாளே சங்கவி, அவளும் தான் கோபத்துல இருந்தாள்.
இவங்களைப் பிரிக்கலாம்னு நினைச்சவளுக்கு, இவங்க ரெண்டு பேரோட நெருக்கத்தைப் பார்த்து பொறாமையா இருந்தது.
“ரொம்ப நேரமா இப்படியே நின்னுட்டு இருந்தா, வந்த வேலையை எப்போ பார்க்குறது?”னு சொல்லிக்கிட்டே துர்காவைக் கீர்த்தியும் ராதாவும் ஆதிகிட்ட இருந்து பிரிக்க… ஆதியை துர்காகிட்ட இருந்து கதிர் பிரிச்சு நிறுத்தினான்.
(ஐயோ! ஆதியையும், துர்காவையும் பிரிச்சிட்டீங்களா நீங்க மூணு பேரும்? அவ்வளவுதான்! நீங்க மூணு பேரும் ஆதியையும் துர்காவையும் பிரிச்சேன்னு சொன்னா என்னோட வாசகர்கள் என் கூடச் சண்டைக்கு வருவாங்களே…) என்று கதிர், கீர்த்திகா, ராதா மூவரையும் ரைட்டர் எச்சரிக்கை செய்ய… பயந்து போன மூவரும் ரைட்டரைப் புரியாமப் பார்க்க, “புரியலையா?”
“நம்ம readers கமென்ட்ல, ‘ஏன் ஹீரோ, ஹீரோயினைப் பிரிக்கிறீங்க?’னு ரெண்டு பேரும் என் கூடக் கோவிச்சுக்குவாங்களே! நான் என்ன செய்வேன் இப்போ?”னு ரைட்டர் சொல்ல,
“நாங்க அவங்களை நிஜமா பிரிக்கலை. இப்படியே நின்னுட்டு இருந்தா அடுத்த அத்தியாயம் எப்படிப் போறதுன்னு தான் தனித் தனியா பிரிச்சுப் பக்கத்துல பக்கத்துல தான் நிற்க வச்சிருக்கோம்னு சொல்லுங்க ரைட்டர்”னு மூவரும் கெஞ்சினாங்க.
“சரி சரி! ரொம்ப கெஞ்சாதீங்க. கீதா சிஸ்டரும், பாரதி சிஸ்டரும் ரொம்ப நல்லவங்க. அவங்க நம்ம ஹீரோ, ஹீரோயின் மேல வெச்சிருக்க பாசத்துல தான் அப்படிச் சொல்றாங்க. சரியா சிஸ்டர்ஸ், நான் சொன்னது?”
