EPISODE 58
கும்பகோணத்தில் இருந்து எல்லாரும் கிளம்பி வந்துவிட்டாங்க.
செண்பகம் கார்ல இருந்து இறங்கி, வெங்கடாச்சலம் (வெங்கி மாமா) வீட்டைப் பார்த்தவங்க, விசாலாட்சி (விசி அத்தை) கிட்ட, “அண்ணி, நான் இங்கிருந்து போகும்போது வீடு எப்படி இருந்துச்சோ, இத்தனை வருஷங்கள் ஆகியும் இன்னும் அப்படியே தான் இருக்கு!” என்று சொன்னார்.
“ஆமாம் செண்பகம், நம்ம பாரம்பரிய வீடு இல்லையா? இன்னும் எத்தனை சந்ததியைப் பார்க்கணும் இந்த வீடு” என்ற விசி அத்தை, “சரி வா செண்பகம், உள்ளே போகலாம்” என்று அவர் கையைப் பிடித்து உள்ளே செல்லப் போக, “ஒரு நிமிஷம் அங்கேயே நில்லு செண்பகம்…” என்று வெங்கடாச்சலம் சொல்லவும், அப்படியே நின்றார் செண்பகம்.
ஒன்றும் புரியாமல் எல்லாரும் வெங்கடாச்சலத்தையே பார்க்க, “செண்பகம், நீ இப்படியே இந்த வீட்டுக்குள் வருவது சரி இருக்காது” என்றார்.
அவர் இப்படிச் சொன்னதும், செண்பகத்துக்கு, ‘தன் அண்ணன் ஒருவேளை தான் இந்தப் பழைய கிழிந்த சேலையுடன் அவர்கள் அந்தஸ்துக்கு ஏற்றார் போல இல்லைன்னு நினைச்சுட்டாரோ’ என்று செண்பகம் நினைத்திருக்க,
வெங்கடாச்சலம் வீட்ல வேலை பார்க்கிறவங்ககிட்ட ஏதோ சொல்லி அனுப்பிட்டு, விசாலாட்சியைத் தான் அருகில் அழைச்சார். “என்னங்க, எதுவா இருந்தாலும் உள்ளே போய் பேசிக்கலாங்க. இவ்வளவு தூரம் நம்ம கூட செண்பகத்தை அழைச்சுட்டு வந்துட்டு, இப்படி வாசலிலேயே நிற்க வைக்குறது நல்லவா இருக்கு? செண்பகத்தை உள்ளே கூப்பிடுங்க…” என்றார் விசாலாட்சி.
விசாலாட்சி சொன்னதைக் கேட்டு, “எல்லாம் எனக்குத் தெரியும். நீ கொஞ்சம் பேசாம இரு…” என்று சொன்னவர்,
“இன்னும் அங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று சத்தம் போட, அவர் குரல் கேட்டு வேகமா வந்த அந்த வேலையாள் கையில் தட்டுடன் வந்து அவர் முன் நின்றார்.
“இதை வாங்கிட்டுப் போய், செண்பகத்தை கிழக்குப் பார்த்து நிற்க வச்சு, அவளுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வா” என்றார்.
அவர் அப்படிச் சொன்னதும் தான் விசாலாட்சிக்கு, “அப்பாடா”னு இருந்துச்சு. ‘எங்கே ஆதியின் அப்பா செண்பகத்தை மனசு மாறி அழைச்சுட்டு வந்தாலும், ஏதும் வரட்டுக் கௌரவம் பார்த்து செண்பகத்தை ஏதும் மனசு நோகும்படி சொல்லிவிடுவாரோ’னு நினைச்சு பயந்து போயிருந்தார்.
வேலையாள் கையில் இருந்த ஆரத்தித் தட்டைச் சிரிச்ச முகத்துடன் வாங்கிய விசாலாட்சி, கனகா அத்தையும் துர்காவையும் தன்னோடு கூட்டிட்டுப் போய், செண்பகத்தைக் கிழக்கு முகமாக நிற்க வச்சு, அவருக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வச்சு உள்ளே அழைத்துச் சென்றனர்.
கீர்த்தி அவள் அம்மா அப்பாவுடன் உள்ளே வர… வடிவு (துர்காவின் அம்மா) கீர்த்தியிடம், “நம்ம இவ்வளவு தூரம் வந்துட்டோம். ரொம்ப நேரமா வீட்டுக்குப் போகாம, எவ்வளவு நேரம் இங்கேயே இருப்பது? பொண்ணைக் கொடுத்த இடத்துல சும்மா சும்மா வந்து இருக்குறது நல்லா இருக்காது. நம்ம இப்போவே கிளம்பலாம்” என்று கீர்த்திகாவை அவசரப்படுத்த,
“அம்மா, ஏன்மா இவ்வளவு அவசரப்படுறீங்க? இப்பதானே உள்ளே வந்திருக்கோம். வந்த உடனே கிளம்பிப் போனா… அத்தை எதுவும் சொல்லப் போறாங்க. நம்ம கொஞ்ச நேரம் கழிச்சுப் போகலாம் வாங்க…” என்று அவரை வற்புறுத்தி உள்ளே அழைத்து வந்தாள்.
வெங்கடாச்சலம் உள்ளே வந்து எல்லாரையும் பார்த்து, “என் தங்கை மீண்டும் இத்தனை வருஷத்துக்குப் பிறகு திரும்ப இந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள். அதனால, இன்று யாருமே எங்கும் செல்லாமல், இன்று இரவு அனைவரும் நம் வீட்டிலேயே இருந்து சாப்பிட்டு விட்டுப் போகலாம்” என்று சொல்ல, அவர் பேச்சுக்கு மறுபேச்சு யாரும் பேச முடியாமல் போகவே, எல்லாரும் “சரி” என்று சம்மதம் சொன்னார்கள்.
எல்லாரும் வீட்டுக்குள்ள வந்துட, சங்கவி மட்டும் வீட்டுக்கு வெளியே நின்னுட்டு இருந்தா. அவளைப் பார்த்த ஷிவு, “அக்கா… சங்கவி அக்கா! வாங்க வீட்டுக்குள்ளே. நீங்க மட்டும் வெளியேவே நின்னுட்டு இருக்கீங்க!” என்று சத்தமா சங்கவியை அழைக்க, “இல்லை, பரவாயில்லை ஷிவு, நான் இங்கேயே நிற்கிறேன்”னா சங்கவி.
ஷிவு சத்தமா சங்கவியோட பேரைச் சொல்லி உள்ளே அழைச்சதும் தான் மத்தவங்களுக்குச் சங்கவியும் தங்களுடன் வந்தது நினைவுக்கு வர, வாசலுக்குச் சென்று விசாலாட்சி வேகமா சங்கவியோட கையைப் பிடிச்சு, “உள்ளே வாம்மா. ஏன் இங்கேயே நின்னுட்டு இருக்க?” என்று கேட்க, “இல்ல அத்தை, பரவாயில்லை. என்னை இதுவரைக்கும் நீங்க வர அனுமதிச்சதே போதும். நீங்க யாராவது வந்தா, உங்க கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு தான் நான் இங்கேயே நின்னுட்டு இருந்தேன்”னா சங்கவி.
“என்னடா, இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்குள் வராமல் போனா நல்லா இருக்குமா? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். இன்னைக்கு எல்லாருக்கும் நம்ம வீட்ல தான் நைட் விருந்து. அதனால, நீ இவ்வளவு தூரம் வந்துட்டயே, இருந்து நைட் சாப்பிட்டு, பொறுமையா நாளைக்குப் போகலாம் வா…” என்று வலுக்கட்டாயமாகச் சங்கவியோட கையைப் பிடிச்சு இழுத்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் விசாலாட்சி.
அங்கிருந்த எல்லாருமே சங்கவி உண்மையிலேயே திருந்திவிட்டால் என்று நினைச்சிருக்க, ஆதியும், விக்கியும் மட்டும் அவள் மீது சந்தேகத்துடனே அவளைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.
அவர்கள் இருவரும் தன்னைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதை உணர்ந்த சங்கவி, ‘இவங்க கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்’னு நினைச்சுக்கிட்டவள், விசாலாட்சியுடன் அவர்கள் இருவரையும் தாண்டி உள்ளே சென்றாள்.
செண்பகத்தை அழைச்சுட்டுப் போன கனகா, அவருக்கு வேற உடை கொடுத்து மாத்தி வரச் சொல்லிவிட்டு, அவரை ரெடி செஞ்சு வெளியே அழைச்சுட்டு வர…
அரக்கு நிறத்துல பட்டுச் சேலை அணிந்து, வெள்ளை முடிகள் எல்லாம் ஒதுக்கப்பட்டு, அழகாத் தலை சீவி கொண்டை போட்டு, அந்தச் சேலைக்கு எடுப்பாகப் பச்சைக் கல் பதித்த அட்டிகையும் கம்மலும் அதுக்கு ஏற்றார் போல வளையலும் அணிந்து வெளியே வந்தார் செண்பகம்.
செண்பகம் ரெடியாகி வந்ததும், அவரைக் கவனிச்ச விசாலாட்சியும், வெங்கடாச்சலமும் எழுந்து சென்று, செண்பகத்தைப் பார்த்து, “மகாராணி மாதிரி இருக்கே. இப்படித்தான் நீ இங்கு இருக்கும்போது ரொம்ப அழகா இருந்தே. ஆனா, உன் வாழ்க்கையில இவ்வளவு கஷ்டம் வரும்னு நாங்க நினைக்கவே இல்லை. இத்தனை வருஷத்துல… அந்த ஆண்டவன் உன்னை ரொம்பச் சோதிச்சுட்டார். இனிமேல் உனக்கு வாழ்க்கையில எந்தக் கஷ்டமுமே வராது. இந்த அண்ணாவும் அண்ணியும் உனக்காக எப்பவும் இருப்போம்” என்று கூறி வெங்கடாச்சலம் விசாலாட்சியைப் பார்க்க,
அவரும், “ஆமாங்க. இனிமே செண்பகத்துக்கு வாழ்க்கையில கஷ்டம்னா என்னன்னே தெரியாத அளவுக்கு அவளை நாம நல்லா பத்திரமா, சந்தோஷமா பார்த்துக்கணும்…” என்று சொன்னார்.
வெங்கடாச்சலம் செண்பகத்தின் தலையை வாஞ்சையாக வருடிக் கொடுத்தவர், “வாம்மா… வந்து உட்காரு…” என்று அவரை அழைத்துக்கொண்டு போய் தன் அருகில் அமர வச்சு எல்லார் கூடவும் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
செண்பகம் அம்மா வந்த சந்தோஷத்துல எல்லாரும் அமர்ந்து சந்தோஷமாப் பேசிக்கொண்டிருக்க, சங்கவியும் ஷிவுவும் மட்டும் துர்காவைப் பார்த்து ஆத்திரத்துடன், அவளை எப்படி ஆதி கிட்ட இருந்து பிரிக்கலாம் என்று இருவரும் யாருக்கும் தெரியாமல் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர்.
உணவு தயாரானதும், முதலில் செண்பகம் அம்மாவை அமர வைத்து, அவருக்கு விசாலாட்சியும் கனகாவும் ஆசை தீர செஞ்சு வச்ச எல்லா உணவுகளையும் எடுத்து வச்சு சாப்பிடச் சொல்ல, “செண்பகம், எனக்கு இவ்வளவு வேண்டாம்…” என்று சொல்ல,
செண்பகம் சொல்றதைக் காதுலயே வாங்கிக்கொள்ளாத விசாலாட்சியும், கனகாவும் அவருக்கு நிறைய உணவுகளை வச்சு, அவரை வயிறு நிறைய சாப்பிட வைக்க… இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வெங்கடாச்சலம் சிரிச்சுக்கொண்டு அமர்ந்திருந்தார்.
செண்பகம் விசாலாட்சியிடம், “அண்ணி, நான் மட்டும் சாப்பிட்டு இருக்கேன். எல்லாரையும் சாப்பிடச் சொல்லுங்க…” என்று கேட்க, “நீ முதல்ல சாப்பிடு செண்பகம். அவங்க எல்லாம் அப்புறம் சாப்பிட்டுக் கொள்வார்கள்” என்று சொல்ல,
“இல்லை, எல்லாரும் ஒன்றாகச் சாப்பிடலாம் அண்ணி” என்றவர், “இவ்வளவு நாள் தான் நான் யாருமில்லாமல் தனியாக அனாதை போல சாப்பிட்டுட்டு இருந்தேன். இப்பதான் எனக்கு என் அண்ணனும் அண்ணியும் அவங்க குடும்பமும் கிடைச்சிடுச்சே! இனிமேலாவது நான் எல்லார் கூடயும் சேர்ந்து சந்தோஷமா பேசிச் சிரிச்சுட்டுச் சாப்பிடறேனே…” என்று செண்பகம் மிகவும் வருத்தமாகச் சொல்ல,
அவர் அப்படிச் சொன்னதும் எல்லாரும் உடனே வந்து டைனிங் டேபிள்ல சுத்தி அமர்ந்து, “எங்களுக்கும் சாப்பாடு வைங்க. நாங்களும் செண்பகம் அம்மாவுடன் சேர்ந்து சாப்பிடுகிறோம்…” என்று சொல்ல, விசாலாட்சி அவங்களை எல்லாம் பார்த்துச் சிரிச்சவர், வேலையாட்களை வரச்சொல்லி அனைவருக்கும் பரிமாறச் சொல்ல, எல்லாரும் சந்தோஷமாகப் பேசிச் சிரிச்சுட்டுச் சாப்பிட்டனர்.
சாப்பிட்டு முடிச்சுட்டு எல்லாரும் கொஞ்ச நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவங்க, அவரவர் அறைக்குச் சென்று உறங்கச் சென்றனர்.
செண்பகமும் உறங்கச் செல்லும் போது, அப்போ துர்கா கையில் பாலுடன் அவர் அருகில் வந்தவள், “அம்மா, இந்தாங்க இந்த பாலைச் சாப்பிட்டு, அப்புறம் போய் படுத்துத் தூங்குங்க” என்று சொல்ல, அவளைப் பார்த்த செண்பகம், அவள் தந்த பாலை வாங்கி, எதுவும் சொல்லாமல் குடித்துவிட்டு, டம்ளரை துர்காவிடம் கொடுத்துவிட்டுத் திரும்பிச் செல்லப் போனவர், பிறகு நின்று திரும்பி துர்காவையே பார்த்தார்.
“இங்கே வாம்மா…” என்று துர்காவை அழைக்க… “சொல்லுங்க அம்மா” என்று துர்கா அவர் அருகில் வர, அவளை அருகில் நிறுத்தி அவள் முகத்தையே பார்த்தவர், “என்னோட பொண்ணு என்னுடன் இருந்திருந்தால், இந்த நேரம் அவளுக்கு உன்னோட வயசு தான்மா இருந்திருக்கும்” என்றவர், துர்காவின் தலையை வருடிக்கொடுத்தவர், அவளையே பார்க்க,
“என்னையும் உங்க பொண்ணா நினைச்சுக்கோங்க அம்மா. உங்களுக்கு என்ன வேணுமோ… என் கிட்ட சொல்லுங்க, நான் செஞ்சு தரேன். என்னை உங்க பொண்ணு மாதிரி நினைச்சுகோங்க…” என்றால் துர்கா.
அவள் அப்படிச் சொன்னதும், துர்காவைக் கட்டிக்கொண்டவர், அவள் கன்னத்தோடு தன் கன்னம் வச்சுக் கட்டிக்கொண்டவர், “சரிம்மா…” என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு, “சரிம்மா… நீ போய்த் தூங்கு. நேரம் ஆகிடுச்சுல்ல” என்று அவளைப் போகச் சொல்ல.
அப்போது இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த சங்கவியும், ஷிவுவும் அங்கு வந்தார்கள். அவர்கள் இருவரையும் பார்த்த செண்பகம், “வாங்கம்மா. நீங்க ரெண்டு பேரும் இன்னும் தூங்கலையா?” என்று கேட்க,
“எங்களுக்குத் தூக்கம் வரலை. அதான் நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு நேரம் பாசத்தைப் பொழிஞ்சு பேசிட்டு இருந்ததைப் பார்த்துட்டு வந்தோம்”னா ஷிவு.
“ரெண்டு பேரும் எவ்வளவு அழகா சீன் போடுறீங்க! இவளைப் பார்த்தா உங்க பொண்ணு வயசு இருக்கும்னு நீங்க சொல்றதும்… இவளும் உங்களைப் பார்த்துட்டு அம்மான்னு வேஷம் போடுறதும்… அப்பப்பா… என்னவொரு கண்கொள்ளாக் காட்சி!” என்று ஷிவு கூற,
“ஷிவு! ஏன் இப்படிப் பேசுற? அவங்க நமக்கு வயசுல பெரியவங்க. அவங்களைப் சங்கடப்படுத்துற மாதிரி பேசலாமா நீ?” என்றால் துர்கா.
அவள் அப்படிச் சொன்னதும், “நீயே ஒரு அண்ணக்காவடி (தந்திரக்காரி). எப்படியோ எங்க அத்தையை ஏமாத்தி, எங்க ஆதி மாமாகிட்ட இருக்கப் பணத்துக்காக அவர் உடம்புல இவ்வளவு பிரச்சனை இருந்தும் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டே. நீ இவங்களுக்கு என்ன வேணும்னாலும் செய்வேன்னு சொல்றது எல்லாம் எங்க அத்தையும், ஆதி மாமாவும் உனக்குக் கொடுக்குற இடம் தான்.
இவங்க ஒரு ஒன்றுமில்லாதவங்க. இத்தனை வருஷமாக இந்த வீட்டுப் பக்கமே வராதவங்க. இப்போ இவங்களாவே தேடி எங்க மாமாவைப் பார்க்க வந்திருக்காங்க. எதுக்குன்னு நீ நினைக்கிற? எல்லாம் எங்க மாமாகிட்ட இருக்கப் பணத்துக்காகத் தான்.
இவ்வளவு வருஷம் ஆகிருச்சு. இனி இவங்க பொண்ணு இவங்களுக்குக் கிடைப்பாளோ, இல்ல இப்போ உயிரோட இருக்காளோ, இல்லையோ? இனியும் தனியா இருந்து கஷ்டப்பட்டுச் சாகுறதை விட, இங்கே வந்து சொகுசா வாழ்ந்துட்டுச் செத்து போயிடலாம்னு நினைச்சு இங்கே ஒண்ட வந்துட்டாங்க” என்று ஷிவு மிகவும் திமிராகப் பேசினாள்.
அவள் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த இருவரும் மிகவும் மனம் உடைந்து போய்விட்டனர். செண்பகத்தின் முகம், வந்ததில் இருந்து இருந்த சந்தோஷம், ஷிவுவின் பேச்சால் மொத்தமும் வடிந்து போய் அவர் முகம் வாடிவிட்டது.
இதைக் கவனிச்ச துர்கா, “அம்மா, நீங்க எதுவும் நினைச்சுக்காதீங்க. அவ சின்னப் பொண்ணு. ஏதோ தெரியாமப் பேசிவிட்டாள்” என்று செண்பகத்தைச் சமாதானம் செய்ய,
“நான் ஒன்னும் தெரியாமப் பேசலை. எல்லாம் தெரிஞ்சுதான் பேசினேன். எங்கே நான் சொன்னதுல ஏதாவது தப்பு இருக்கான்னு சொல்லுங்க. நீ என் மாமாக்கு உடம்புல நோய் இருக்குன்னு தெரிஞ்சும் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டியே, அதுக்குக் காரணம் அவர் மேல பாசம் வச்சு எல்லாம் இல்லை. அவர் கிட்ட இருந்த காசுக்காகத் தானே அவரை நீ திருமணம் செஞ்சுகொண்டாய்?” என்று ஷிவு கேட்க,
அவள் இப்படித் தன்னையும் செண்பகத்தையும் அவமானப்படுத்துவதை பொறுத்துக்கொள்ளாமல், “ஆமாம்! நான் உன் மாமாகிட்ட இருக்குற பணத்துக்காகத் தான் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுக்கு என்ன இப்போ?
நான் தான் இந்த வீட்டின் எஜமானி! யார் இங்கே இருக்கணும், இருக்க வேண்டாம்னு நான் தான் முடிவு பண்ணனும். இவர் இங்கே வந்து இருப்பதில் உனக்கு என்ன வந்தது? செண்பகம் அம்மா என்ன உன் வீட்ல வந்து இருக்கிறாரா என்ன?
அவர் அண்ணன் வீட்ல, என் கணவரின் வீட்ல வந்து இருக்கிறார். உனக்கு என்ன வந்தது இப்போ? நீயே இங்கு விருந்தாளி தான் என்பதை முதலில் ஞாபகம் வச்சுக்கோ” என்று துர்கா ஷிவுவை எச்சரித்துவிட்டு, “வாங்கம்மா” என்று செண்பகத்தை அழைச்சுக்கொண்டு அவர் அறைக்கு வந்துவிட்டாள்.
*
இதையெல்லாம் தன் அறையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஆதி, துர்கா தன்னைப் பற்றிக் கூறியதை எல்லாம் கேட்டவன், சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், ஒரு முடிவோடு உள்ளே சென்றான்.
துர்காவும், செண்பகமும் அங்கிருந்து போன பிறகு, சங்கவியும், ஷிவுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரிச்சுட்டு, “சக்ஸஸ்” என்று ஷிவு சொல்ல, சங்கவியும் சிரிச்சுக்கொண்டே, “எப்படி ஷிவு? சரியா ஆதி துர்காவைப் பார்க்கும் போது, சரியா அவளிடம் பேசி, அவ வாயாலேயே உண்மையைச் சொல்ல வச்சே?” என்று சங்கவி கேட்க,
“அதெல்லாம் அப்படித் தான் சங்கவி அக்கா. மாமா கொஞ்ச நேரம் முன்பு ராதா மேல ரூமிற்குப் போகும்போது, ‘ஆதி… துர்கா என்ன செய்கிறாள்?’ என்று கேட்டுக்கொண்டு இருந்தார். ராதாவும், ‘உங்களுக்குக் கொடுக்க பால் காய்ச்சி எடுத்து வராங்க…’ என்று சொல்லிக்கொண்டு இருந்தாள்.
அதை வச்சுத் தான் நான் உங்களைக் கூட்டிட்டு கீழே வந்தேன். சரியாக ஆதி மாமா துர்காவைப் பார்க்கும் போது, நான் சரியா துர்காகிட்ட பேச்சுக் கொடுத்து, அவளைக் கோபப்படுத்தி… ஆதி மாமாவைப் பற்றி அவள் மனதில் என்ன நினைச்சுட்டு இருக்கிறாள் என்று அவள் வாயாலேயே சொல்ல வைத்துவிட்டேன்” என்றாள்.
இதையெல்லாம் கேட்ட சங்கவி, “சூப்பர் ஷிவு! நான் நினைச்சதையே நீ செஞ்சுவிட்டாய்” என்றவள், “சரி, நான் வந்த வேலை முடிந்துவிட்டது. நான் வீட்டுக்குக் கிளம்புகிறேன். நீ அத்தை கேட்டால், ‘எனக்கு முக்கியமான வேலை வந்ததால் சென்றுவிட்டேன்’ என்று சொல்லிவிடு” என்று ஷிவுவிடம் கூறிவிட்டு, சங்கவி அங்கிருந்து கிளம்பினாள்.
