EPISODE 63
ஆதி டென்மார்க் செல்ல…
அவன் வாசல் தாண்டிச் செல்லும் வரை பார்த்துக்கொண்டு நின்றிருந்த துர்கா, இதற்கு மேலும் கண்ணீரை அடக்க முடியாமல் அங்கிருந்து தன் அறைக்கு ஓடினாள்.
அறைக்குள் வந்து கதவைச் சாற்றிக்கொண்டு கதவில் சாய்ந்து, இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீரும் அவள் உணர்வுகளும் காட்டாற்று வெள்ளம் போலக் கரை புரண்டது.
தன் மனதில் எழுந்த எண்ண ஓட்டங்களை நிறுத்த வழி தெரியாமல், தான் ஆதியைப் புரிந்துகொள்ள முடியாமல் அவன் மனதை நோகடித்ததும்… அவனிடம் மன்னிப்பு கேட்கக் கூடத் தனக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதை எண்ணி மிகவும் வருந்தினாள்.
தன் மீதான ஆதியின் எண்ணம் எப்படி இருக்குமோ… அவனை வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிவிட்டு இப்போது வருந்தி என்ன பிரயோஜனம்… அவன் மனம் நோகும்படி அவனை அசிங்கமாகப் பேசியது எல்லாம் துர்காவுக்கு மனக் கண்ணில் ஓட… தன்னையே நொந்து கொண்டு அப்படியே கீழே கால்களைக் குறுக்கி அமர்ந்து கொண்டு தன் மடியில் முகம் புதைத்து அழுதுகொண்டு இருந்தாள்.
யாரிடமும் தன் நிலையைச் சொல்லி அழ முடியாமல், தனக்கு ஆறுதல் சொல்ல அருகில் யாரும் இல்லாமல், தன்னைத் தானே நொந்து கொண்டு அழுதுகொண்டு இருந்தவள், அழுது அழுது… அப்படியே தரையில் படுத்து உறங்கியும் போனாள்.
எவ்வளவு நேரம் அப்படித் தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. தூக்கம் கலைந்து கண் விழித்துப் பார்க்கையில் தான் இவ்வளவு நேரம் தரையிலேயே படுத்து உறங்கி விட்டோம் என்ற நினைவே துர்காவுக்கு வந்தது.
எழுந்து பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்து உடை மாற்றிவிட்டுக் கீழே சென்றாள். கதிரும், விக்கியும் ஆபீஸ் சென்றுவிட, ஹாலில் துரையும், தன் அப்பாவும் பேசிக் கொண்டு இருக்க… டைனிங் டேபிளில் பெண்கள் எல்லாம் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர்.
அவர்களைப் பார்த்ததும், இவ்வளவு நேரம் இருந்த சோகம் மறந்து சிரித்த முகமாக அவர் அருகில் வந்தவள், “என்ன எல்லாரும் ஜாலியா உட்கார்ந்து பேசிட்டு இருக்கீங்க… யாருக்கும் வேலை இல்லை போலயே” என்று சொல்லிக்கொண்டே அம்மாவின் அருகில் இருந்த சேரில் அமர்ந்தாள்.
“வாடீம்மா… நீ மட்டும் இல்லையே என்று இப்போது தான் நினைத்தேன். நீயும் வந்துட்டியா… இனி நேரம் போறதே தெரியாது” என்றார் கனகா.
“அப்படியா…” என்று ஆச்சர்யமாகக் கேட்ட துர்காவைப் பார்த்து, “ஆமாம் துர்கா. எனக்கு இத்தனை வருடம் பெண் பிள்ளை இல்லையே என்று இருந்த என் ஏக்கத்தை நீ தான் தீர்த்து வச்ச…. நீ இருக்கிற இடமே சந்தோஷம் நிறைஞ்சு இருக்கு” என்று விசாலாட்சி கூறினார்.
இவர்கள் எல்லாம் பேசியதைக் கேட்டு கடுப்பான ஷிவு, “அம்மா! என் ஃப்ரெண்டு ஒருத்தி இங்கே இருக்கா, அவளைப் போய்ப் பார்த்துட்டு வரேன். வர்றதுக்கு அப்படியா சாயங்காலம் ஆகிவிடும்” என்று சொல்லிவிட்டு அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.
அவள் சென்றதும் கீர்த்திகாவைப் பார்த்து, “ஓய்… கீர்த்தி! நீயேண்டீ இன்னும் காலேஜ் போகலை?” என்றாள் துர்கா. “அக்கா, உனக்காகத் தான் நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்றார் கீர்த்திகா.
“எனக்காகவா! எனக்காக எதுக்கு நீ வெயிட் பண்றே?” என்றால் துர்கா.
“அது ஒண்ணுமில்லை கண்ணா… நம்ம ராதா முந்தி படிச்சுட்டு இருந்த காலேஜ்ல இருந்து, இந்த ஊரில் வேறு காலேஜ்ல சேர்த்து படிக்கணும்னு சொல்லிட்டுத் தான் நாங்க எல்லாரும் இங்கே வந்தோம். அவங்க அப்பாவுக்கும் தொழில் சம்பந்தமா வரவு செலவு இங்கே அதிகமா இருப்பதாக, இங்கேயே வந்துரலாம்னு முடிவு பண்ணிட்டோம்.”
“ஷிவுவும் தான் படிச்ச காலேஜ்ல கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி இங்கே சென்னையில் ஒரு கம்பெனியில் அவளுக்கு வேலை கிடைச்சிருக்கு. அதனால குடும்பமா இங்கேயே மாறி வந்துரலாம்னு முடிவு பண்ணிட்டோம்” என்று கனகா சொல்ல…
கனகா குடும்பத்துடன் செட்டில் ஆவதை நினைத்து அனைவரும் சந்தோஷப்பட்டனர். “ஷிவு வேலை பார்க்கப்போற கம்பெனிக்குப் பக்கத்துலயே வீடும் பார்த்து வச்சுட்டோம்… நாங்கள் இருக்கும் போதே ராதாவுக்கு ஒரு நல்ல காலேஜ் பார்த்துச் சேர்க்கணும். அதுக்குத் தான் கீர்த்திகாவை இன்னைக்குக் காலேஜ் போக வேண்டாம்னு சொல்லி நான் தான் அவளை இருக்கச் சொன்னேன் துர்கா.”
“நீயும், கீர்த்தியும் நல்ல காலேஜாப் பார்த்து ராதாவை சேர்த்து விட்டாப் போதும்” என்றார் கனகா.
“அதுக்கென்ன அம்மா, ஒரு நல்ல காலேஜாப் பார்த்து நாங்க சேர்த்து விடுறோம்” என்றாள் துர்கா.
இவர்கள் பேசியதெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த விசாலாட்சி, கனகாவைப் பார்த்து, “ஏண்டீ! வந்ததில் இருந்து என் கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லல… நீ இந்த ஊருக்கு மாறி வந்துட்டேன்னு சொல்லி… அதுவும் நாங்க எல்லாரும் இங்க இருக்குறப்போ இந்த வீட்டை விட்டுட்டு நீ தனியா வேற வீடு பார்த்துப் போய் இருக்க அப்படித்தானே?” என்று அவர் கோபித்துக் கொள்ள…
விசாலாட்சி கோபப்படவும், “ஐயோ அண்ணி… அப்படியெல்லாம் உங்களை விட்டுட்டுப் போகணும்னு நான் நினைக்கலை… என்ன இருந்தாலும் இது என் வீட்டுக்காரரோட அக்கா வீடு. இங்க வந்து நாங்க ரொம்ப நாள் இருக்க முடியுமா? அதெல்லாம் நல்லா இருக்காது அண்ணி… அப்புறம் ஷிவு வேலை பார்க்கிற இடத்துக்குப் பக்கத்துல வீடு பார்த்துட்டா, அவளும் வேலைக்குப் போயிட்டு வரப்ப கொஞ்சம் பாதுகாப்பா இருக்கும் அப்படின்னு சொல்லித் தான் அவ வேலைக்குப் போற இடத்திலேயே வீடு பார்த்துட்டோம். நீங்க கோவிச்சுக்காதீங்க அண்ணி…” என்று கனகா விசாலாட்சி இடம் கெஞ்ச.
கனகாவிடம் கோபித்துக்கொண்ட விசாலாட்சி அவரிடம் பேச மாட்டேன் என்று திரும்பிக்கொள்ள…
கனகாவைப் பார்த்து, “அது என்ன நானே எங்க அண்ணன் வீட்டுல வந்து இருக்கிற மாதிரி தானே நீ உன் வீட்டுக்காரர் அக்கா வீட்டுல வந்து இருக்குற… அண்ணி என்ன உன்கிட்ட வித்தியாசமாவா நடந்துகிறாங்க…. இப்படி எல்லாம் சொன்னா அண்ணிக்குக் கோபம் வரும் தானே கனகா… ஏன் இப்படிப் பேசுற?” என்று கனகாவைச் செண்பகமும் கேட்க.
விசாலாட்சியுடன் சேர்ந்து இப்போ செண்பகமும் கனகாவைக் கேள்வி கேட்க… கனகாவுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அவர்களைச் சமாளிக்க முடியாமல் விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
“சரி, உங்க பஞ்சாயத்து எல்லாம் அப்புறம் வச்சுக்கோங்க. நான் போய்ப் முதல்ல எனக்கு ஒரு நல்ல காலேஜா பார்க்கணும்…. சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க….. எங்க இருக்கணும்னு ஒரு முடிவு பண்ணிச் சொல்லிடுங்க, நாங்க அதுக்குப் பக்கத்துலயே காலேஜ் பார்த்துக்குவோம்” என்று ராதா சொல்ல…
கனகா என்ன சொல்வது என்று தெரியாமல் துரையைப் பார்க்க… துரை எழுந்து வந்து விசாலாட்சி இடம், “நாங்க இங்க இருக்கணும்னு நீ நினைக்கிறியா?” என்று கேட்டார்.
“இது என்ன துரை கேள்வி கேட்கிற? என் தம்பி என் பக்கத்துல அவன் குடும்பத்தோடு இருக்கிறப்போ எனக்கும் சந்தோஷமா தானே இருக்கும்.”
“நான் வேண்டாம்னா சொல்லப்போறேன்? நான் உங்களை இங்க தானே இருக்கச் சொல்றேன்” என்று விசாலாட்சி துரையிடம் சொல்ல…
“எங்களுக்கு இங்கே இருக்கிறதுல ஒரு பிரச்சினையும் இல்லை அக்கா…. ஆனா மாமாவும், உன் பசங்க, உன் மருமகள்ன்னு இவ்வளவு பேரோட சம்மதம் வேணுமே… அப்போ தானே நாங்க இங்க இருக்க முடியும். நீ மட்டும் தனியா இல்லையே…. இந்த குடும்பத்தில் இத்தனை பேர் இருக்கிறப்போ அவங்க கிட்ட சம்மதம் கேட்காமல் நீ சொன்னதுக்காக நான் இங்க வந்து இருக்கிறது நல்லா இருக்காது” என்று துரை சொல்ல.
உடனே துர்கா அவரிடம் வந்து, “அச்சோ.. மாமா… இது உங்க வீடு மாமா…. நான் உங்க பொண்ணு மாதிரி இல்லையா… நீங்க இங்க இருக்குறதுக்கு நான் சம்மதம் சொல்லணும்னு என்ன இருக்கு துரை அப்பா…..”
“அத்தை என்ன சொல்றாங்களோ அதுப்படி தான் எல்லாரும் கேட்பாங்க… அவங்களுக்கு ஓகேன்னா… எங்களுக்கும் ஓகேதான் துரை அப்பா…” என்று துர்கா சொல்ல.
“பாத்தியா துரை, என் மருமகள் எப்படி? இனி நீ இங்க இருக்கப் போறியா? இல்லையா?” என்று விசாலாட்சி கேட்க.
“அண்ணி… ஏற்கனவே இங்க நிறைய பேர் இருக்கோம். இதுல நாங்களும் வந்து இங்கே இருக்கணுமா..?” என்ற கனகா, “அதுவும் இல்லாம ஆதிக்கும் இப்போதான் கல்யாணம் ஆகி இருக்கு… வயசுப் பொண்ணுங்களை வச்சுட்டு அவனுக்கு அவன் பொண்டாட்டி கூடச் சகஜமா பேசப் பழகச் சரியா இருக்காது அண்ணி…” என்று கனகா சொல்ல.
“கனகா அம்மா… நான் ஆதி ஊரில் இருந்து வர வரைக்கும் தான் இங்கே இருப்பேன். எங்களுக்காக அத்தையும் மாமாவும் சேர்ந்து ஒரு வீடு வாங்கி கொடுத்திருக்காங்க… நாங்க அங்க தான் இருக்கப் போறோம்” என்று துர்கா சொல்ல…
“அப்புறம் என்ன கனகா உனக்கு யோசனை? இத்தனை பேர் சொல்லியும் நீ யோசிச்சுட்டு இருக்க” என்று செண்பகம் சொல்ல… என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் கனகா விழிக்க…
“அம்மா… அத்தை கிட்ட எதுக்கு வற்புறுத்திட்டு இருக்கீங்க…” என்று கேட்டுக்கொண்டே கதிர் உள்ளே வர, அவனுடன் விக்கியும் வந்தான்.
“ஏன்னடா கதிர் இப்படி சொல்றே…” என்று விசாலாட்சி கேட்க… துர்கா கதிரைப் பார்த்து, “கதிர்… அத்தையே கனகா அம்மாவை இங்க இருக்க வைக்க சிரமப்பட்டு சம்மதிக்க வச்சுட்டு இருக்காங்க. நீ வந்து ஏதாவது சொல்லி அவங்க மனசைக் கலைச்சு விட்டுடாதே” என்று கேட்க..
“அதைத்தான் நானும் சொல்றேன் துர்கா… அத்தை கிட்ட ஏன் வற்புறுத்திட்டு இருக்கீங்க… இங்க தான் இருக்கணும்னு ஆர்டர் போடுங்கன்னு நான் சொல்ல வந்தேன்” என்றான் கதிர்.
“இனி என்ன உன்கிட்ட கேட்டுட்டு இருக்குறது? டேய் துரை… நீங்க இங்க தான் இருக்கீங்க. வேற எங்கயும் போகலை சரியா…” என்று சொல்ல… “சரி அக்கா, நீ சொன்ன நாம் எதுவும் பேசல… என் மருமகன் வேற சொல்லிட்டாரு. அப்புறம் நான் மறுப்பு சொல்வேனா? நாங்க இங்கேயே இருந்துடறோம். நான் மட்டும் அப்போ அப்போ ஊருக்குப் போயிட்டு வரேன்” என்றார்.
“அப்பாடா… ஒரு வழியா முடிவு பண்ணிட்டிங்களா… துர்கா அக்கா.. கீர்த்தி… அப்போ நாம கிளம்பலாமா…” என்று ராதா அவர்களிடம் கேட்க.
விக்கி, “எங்கே நீங்க மூணு பேரும் மட்டும் தனியாப் போறீங்க… நாங்களும் கூட வரோம்” என்று கேட்டான்.
ராதாவிற்கு காலேஜ் பார்க்கப் போவதாகச் சொல்ல… “எந்த காலேஜ் பார்க்கப் போறீங்க?” என்று கதிர் கேட்டான்.
கீர்த்தி… “அக்கா… ராதா எப்படியும் என்னோட கோர்ஸ் தான் படிக்கிறா… பேசாம அவளை ஏன் எங்க காலேஜ்லேயே சேர்க்கக் கூடாது? காலேஜ்ல இருந்து இங்க வர்றதும் அவ்ளோ ஒண்ணும் ரிஸ்க் இல்லை.. எங்க காலேஜ் பஸ்ஸும் இங்கே வருதில்ல அக்கா” என்று கூற…
“நீ சொல்வதும் சரிதான் கீர்த்தி… ஆனா உங்க காலேஜ்ல லாஸ்ட் இயர்க்கு ராதாவை அட்மிஷன் எடுத்துப்பாங்களா?” என்று துர்கா சந்தேகமாகக் கேட்க…
உடனே விக்கி துர்காவைப் பார்த்து, “என்ன துர்கா இப்படி கேட்டுட்டு? நம்ம கீர்த்தி படிக்கிற காலேஜ்ல நம்மளும் ஒன் ஆஃப் தி பார்ட்னர் தான்” என்றவன்.
“நீ வி. ஆர். காலேஜ்ல தானே படிக்கிறே?” என்று கதிர் கேட்க… “அடேயப்பா.. டேய் கதிர்… உனக்கு நிஜமா கீர்த்தி எந்த காலேஜ்ல படிக்கிறான்னு தெரியாது அப்படித்தானே..” என்றான். அவன் காலில் மிதித்தவன், “எனக்குத் தெரியும். எதுக்கும் ஒரு முறை தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்” என்றான் கதிர்.
“அதே காலேஜ்ல தான் இப்போ நாம ராதாவை சேர்க்கப் போகிறோம் சரியா… அதனால ராதாவை அங்கே சேர்ப்பதில் ஒன்றும் அவ்ளோ பெரிய விஷயமே இல்ல… ஜஸ்ட் போய்ப் நம்ம இன்ஃபார்ம் பண்ணிட்டு வந்தா மட்டும் போதும்” என்று விக்கி சொல்ல…
“அப்போ என்ன, சரி வாங்க நம்ம போயி ராதாவுக்கு அட்மிஷன் போட்டுட்டு வருவோம்” என்று கீர்த்தி கூற…
“சரி” என்று கீர்த்தி, துர்கா, ராதா மூவரும் கிளம்பப் போக… “எங்கே நீங்க மூணு பேரும் மட்டும் தனியாப் போறீங்க? நாங்களும் கூட வரோம்” என்று விக்கி சொல்ல…
விக்கி எதற்காகச் சொல்கிறான் என்று புரிந்து போன கீர்த்திக்கு, “அண்ணா…. நீங்க எதுக்கு எங்க கூட வரேன்னு சொல்றீங்கனு எனக்குத் தெரியுமே….” என்று அவனை கிண்டல் செய்ய… அவள் அருகில் வந்த விக்கி, “கீர்த்திமா… அண்ணனை இப்படி எல்லாரும் முன்னாடியே மாட்டிவிடப் பார்க்கிறியே. தயவுசெய்து கம்முனு வாம்மா ப்ளீஸ்” என்று விக்கி அவளிடம் கெஞ்ச… சிரிச்சுக்கொண்டே கீர்த்தி.
“சரி வாங்க எல்லாரும் போவோம்” என்று சொல்ல, அவர்கள் அனைவரும் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிட்டு ராதாவுக்கு அட்மிஷன் போடுவதற்காகக் கிளம்பிச் சென்றனர்.
ஷிவகாமியிடம் சொல்லிவிட்டு வெளியே தன் நண்பர்களைப் பார்க்கச் சென்றுவிட்டு மாலை போல வீட்டுக்கு வர…
அங்கே ஹாலில் அமர்ந்து சங்கவி தன் மொபைலை நோண்டிக்கொண்டு இருப்பதைப் பார்த்த முத்து. அவளைப் பார்த்ததும், “சங்குமா…” என்று அழைக்க… ஏற்கனவே முத்து வந்திருப்பதைச் சிவகாமியிடம் ஷிவகாமி சொல்லி இருந்ததால். தன்னைக் யார் இவ்வளவு செல்லமாக அழைப்பார் என்று தெரிந்ததும், எழுந்து வந்து கொண்டு இருந்த முத்துவைப் பார்த்ததும், “ஹாய் முத்து…. எப்படி இருக்கே…” என்று கேட்டுக்கொண்டே… அவரிடம் சென்றவள், அவரைக் கட்டிக்கொண்டு அவர் கண்ணத்தில் முத்தம் இட…
“நான் நல்லா இருக்கேன் டா… இந்த மாமனை உனக்கு ஞாபகம் இருக்கா… பரவாயில்லையே..” என்றார்.
“என்ன முத்து இப்படி சொல்றே… உன்னை நான் மறப்பேனா..” என்று சங்கவி சொன்னாள்.
“ஆரம்பிச்சுட்டீங்களா… அண்ணா… இன்னும் அவள் உன்னை பேர் சொல்லி கூப்பிட்றா. நீ என்னன்னா.. அவளைக் கொஞ்சிட்டு இருக்கே…”
“சின்ன வயசுல தான் இப்படிப் பேர் சொல்லிக் கூப்பிட்டா. அப்படின்னா வளர்ந்த பிறகும் அப்படியே கூப்பிட்டா நல்லா இருக்கா என்ன?” என்று சொன்ன சிவகாமி.
சங்கவியைப் பார்த்து, “இனி இப்படி எல்லாம் கூப்பிடாதே” என்று அவளிடம் சொல்ல… “அம்மா… எனக்கு எப்படி வருதோ நான் அப்படி தான் கூப்பிடுவேன். இன்னும் நீ இப்படியே பேசி என்னை டென்ஷன் பண்ணாதே” என்று அவரிடம் சங்கவி சண்டைக்குப் போக…
“சங்குமா… விடுடா.. உங்க அம்மா ஏதோ சொல்றா.. அதுக்காக எல்லாம் ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகாதே” என்றவர், அவளை அழைத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தவர்.
“ஆமா முத்து, சந்தோஷ் எப்படி இருக்கான்? நல்லா இருக்கானா? என்ன பண்ணிட்டு இருக்கான் இப்போ?”
“அவன் என்கிட்ட பேசி எவ்வளவு வருஷம் ஆச்சு தெரியுமா முத்து… என்ன பண்றான் எங்கே வேலை பார்க்கிறான் என்று எனக்கு கூடத் தெரியாது. ஒரு சோசியல் மீடியாவிலும் இல்லை அவன். அவன் போன் நம்பர் கூட என் கிட்டே இல்லை தெரியுமா.. நீயும் இங்கே வரதே இல்லை.”
“அவன் என்னடான்னா இப்படி இருக்கான். நீயும் இருக்கே. இப்படியே ரெண்டு பேரும் இருந்துட்டு என்னோட நின்னு போன கல்யாணத்துக்குக் கூட உங்களால் வர முடியலை இல்லே…” என்று சங்கவி கோவிச்சுக்கொள்ள..
“நான் வேணும்னே என் சங்கு விசேஷத்திற்கு வராமல் இருப்பேனாடா.. உங்க அத்தை ரொம்ப உடம்புக்கு முடியாமல் படுத்த படுக்கையா இருந்துட்டா.. அதனால் தான்டா இந்த மாமா வரலை” என்று அவர் ஆதங்கப்பட்டவர்.
“நான் உங்க அப்பா கிட்ட போன் பண்ணி பேசி விவரம் தெரிஞ்ச பிறகு எனக்கு ரொம்பக் கஷ்டமாப் போயிருச்சுடா… இந்தச் சின்ன வயசுல நீ இப்படி எல்லாம் அனுபவிக்கணுமா? என்று நான் ரொம்ப வருத்தப்பட்டேன்” என்று உண்மையாகவே முத்து சங்கவியின் வாழ்க்கை குறித்து கவலை கொண்டார்.
“என் பையனுக்கு மட்டும் உன்னை விட ஒரு வயசு கம்மியா இல்லாம இருந்திருந்தால்… உன்னையே என் வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்திருப்பேன். ஆனா அதுக்குத் தான் இப்போ வழி இல்லாம போயிருச்சே..” என்று அவர் வருத்தப்பட…
“விடு முத்து… அவனை எல்லாம் யாரு கல்யாணம் பண்ணிப்பா.. எப்போ பாரு புக்கையே கட்டிக்கிட்டு இருந்தான். அவன் வயசு பொண்ணுங்க கூட அவனை கல்யாணம் பண்ண மாட்டாங்க… அவன் சரியான புத்தகப் புழு…” என்றால் சங்கவி.
“ஆமா சங்கு… நீ சொல்றதும் சரிதான்” என்றவர். “அம்மா சிவகாமி” என்று அழைக்க… “சொல்லுங்க அண்ணா.. கொஞ்ச முன்னே தான் சந்தோஷ் எனக்குக் கால் பண்ணினான்மா..”
“நாளைக்கு அவன் ஊருக்கு வர்றான்னு சொன்னேன் இல்லையா.. வந்ததும் ஊருக்குப் போகலை சிவகாமி நாங்க.. அவன் டெல்லியில் இருந்து இங்க வேற பக்கம் ஏதோ வேலை வாங்கிட்டு வந்துட்டான்னு சொன்னான் சிவகாமி.”
“வேலை இங்கே சென்னையில் தான்னு சொன்னான், நாளைக்கு இங்கே வந்துட்டு ரெண்டு நாள் கழிச்சு வேலையில் சேரப் போறேன்னு சொன்னான். அதுவரைக்கும் நாங்க இங்க தான் இருக்கப் போறோம்” என்று முத்து சொல்ல.
“அப்படியா அண்ணா, அப்போ எனக்குச் சந்தோஷம் தான் அண்ணா… நம்ம சந்தோஷ் இங்கே வேலை பார்க்க ஆரம்பிச்சா… நீயும் அண்ணியும் இங்க அடிக்கடி அவனைப் பார்க்க வர சாக்குல என்னையும் பார்க்க வருவீங்க தானே” என்று சந்தோஷப்பட…
அவரைப் பார்த்துச் சிரித்தவர், “ஆமா ஆமா… சிவகாமி. அப்படியாவது இனிமேல் அடிக்கடி நாங்க வர பார்க்கிறோம்” என்று சொன்னவர், சங்கவியிடம் திரும்பி.
“சங்குமா… நாளைக்கு உனக்கு ஏதும் வேலை இருக்குதாடா..?” என்றார். “ஏன் முத்து… சொல்லுங்க…” என்றால்.
“இல்லைடா, நாளைக்கு சந்தோஷ் வர்றான் இல்லையா. எனக்கு அங்கே எப்படி போயி அவனைக் கூப்பிடுறது என்னனு தெரியாது. நீ கொஞ்சம் கூட வரியாடா மாமா கூட” என்று கேட்க..
“அவன் எத்தனை மணிக்கு இங்கே வரான் முத்து?” என்று கேட்டாள். “காலையில் பதினோரு மணிக்கு இங்கே வந்திருவேன்னு சொன்னான் சங்கு” என்று சொல்ல..
“சரி முத்து, நாளைக்கு நாம பத்து மணியைப் போல இங்க இருந்து கிளம்பிடலாம். அப்போதான் அவன் வர டைம்க்கு நாம அங்க இருக்க முடியும்” என்றால்.
சங்கவியுடன் முத்து பேசிக்கொண்டு இருக்க, இரவு வேங்கடாசலமும் வந்துவிட, அனைவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றனர்.
காலை உணவை முடிச்சுக்கொண்டு சங்கவியும் முத்துவும் சிவகாமியிடம் சொல்லிவிட்டு சந்தோஷை அழைத்துவர ஏர்போர்ட் சென்றனர்.
அன்று ஃப்ளைட் சிறிது தாமதமாகவே வர, மதியம் போல வந்து இறங்கினான் சந்தோஷ்.
அவனைப் பார்த்தே பத்து வருடங்களுக்கு மேல் ஆனதால், சங்கவிக்கு இப்போதைக்கு அவன் எப்படி இருப்பான் என்றே மறந்து போனது.
முத்து தான் சந்தோஷை அடையாளம் கண்டு அவனைப் பார்த்துக் கை அசைக்க… அவர் கையசைத்த திசையைத் திரும்பிப் பார்த்த சங்கவி… அங்கே நல்ல உயரத்துடன் மாநிறத்தில் கட்டுமஸ்தான உடல்வாகுடன் கண்ணில் கூலர்ஸ் அணிந்துகொண்டு படு ஸ்டைலாக வந்தான் சந்தோஷ்.
அவனை கிராமத்தில் பார்த்தது போல, படிய வாரிய தலைமுடி, தொள தொளவென்று சட்டை அணிந்த சந்தோஷ் தான் சங்கவியின் நினைவில் இருந்தான்.
ஆனால் இன்று பழைய சந்தோஷுக்கும் இப்போது இருப்பவனுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல வந்து இறங்கினான் சந்தோஷ்.
முத்துவைப் பார்த்ததும், “ஹாய்.. அப்பா…” என்று கூறிக்கொண்டே வந்து அவரைக் கட்டிக்கொள்ள… அவரும் தன் மகனைப் பார்த்த சந்தோஷத்தில் அவனைக் கட்டிக்கொண்டார்.
இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டு இருக்க… தான் இருப்பதையே மறந்து போய் தன் மகனைக் கண்டதும் அவனுடன் பேசிக்கொண்டு இருந்த முத்துவைப் பார்த்த சங்கவி…
“ம்ஹுக்கும்…” என்று தன் தொண்டையைச் செரும… அப்போது தான் சங்கவி அங்கு இருப்பது அவருக்கு நினைவில் வர…
“அட நான் மறந்தே போய்ட்டேன் பா… இது யாருன்னு தெரியுதா…” என்று முத்து சங்கவியைப் பார்த்து சந்தோஷிடம் கேட்க….
அவளை ஒரு முறை ஏற இறங்கத் தன் கூலர்ஸை மேலே உயர்த்திப் பார்த்த சந்தோஷ், “இவளா….” என்றான் ஒரே வார்த்தையில்.
சந்தோஷ் சங்கவியைப் பார்த்து இப்படிச் சொன்னதும், சங்கவிக்கு தலைக்கு மேல் கோபம் ஏறிவிட…
“முத்து… உன் மகனை என் கிட்ட ஒழுங்கா பேசச் சொல்லு… என்னைப் எப்படி இப்படி கேவலமா சொல்றான். எனக்கு வர்ற கோபத்துக்கு நான் அவனை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்றால் கோபமாக.
முத்து சந்தோஷிடம், “டேய்! வந்ததும் வராததுமா எதுக்குடா அவ கிட்ட சண்டைக்கு நிற்குறே… ஒழுங்கா பேசு. அவள் உன்னை விட ஒரு வயசு மூத்தவள்ங்குறதை நீ மறந்துடாதே…” என்றார்.
“ஐயோ… முத்து, அவன் இப்போ என் வயசு எல்லாம் கேட்டானா என்ன?” என்ற சங்கவி, அவனை முறைத்தவள். “நான் கார்ல வெயிட் பண்றேன். உன் திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு முத்துவோட வந்து சேரு” என்று திரும்பி நடந்தாள்.
அவனை விட்டு இரண்டு அடி தள்ளிப் போயிருப்பாள் சங்கவி… “ஏய்… செக்கு மாடு… நில்லு…” என்றான் சந்தோஷ்…
இது அவன் சிறு வயதில் சங்கவியைக் கிண்டல் செய்து அழைக்கும் பெயர். அதை இன்னமும் ஞாபகம் வைத்திருக்கிறான் என்று தெரிந்ததும், அவனை முறைத்தவாரே திரும்பிய சங்கவி… “சொல்லுடா வாத்து…” என்றால் சந்தோஷைப் பார்த்து.
அவள் அப்படி கூப்பிடவும் சந்தோஷுக்கு கோபம் வர, “ஏய்… செக்கு மாடு… என்னைத் வாத்துன்னு கூப்பிட்டே… அப்புறம் நடக்குறதே வேற ஆமா…” என்றான்.
“நீ என்னைச் செக்கு மாடுன்னு சொல்லி கூப்பிட்டா, நானும் அப்படித்தான்டா வாத்து கூப்பிடுவேன்” என்று சங்கவி அவனை வார…
“ஓகே டீல்…. நீ என்னை வாத்துன்னு கூப்பிடாதே. நானும் உன்னைச் செக்கு மாடுன்னு கூப்பிட மாட்டேன்” என்றான் சந்தோஷ்.
“ம்ம்… அப்படி வா வழிக்கு…” என்ற சங்கவி, “சரி சரி நீ உன் திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா போகலாம்” என்று சொல்லி அவள் செல்லப் போக…
“ஏய், நீ எங்கே போற? என்னோட திங்ஸ் எல்லாம் ஒன்னு விடாம எடுத்துட்டு காருக்கு வா…” என்றவன், அவன் பிடித்திருந்த ட்ராலியை சங்கவியிடம் தள்ளிவிட… அதை எதிர்பாராத சங்கவி, ட்ராலியைப் பிடிக்கும் அவசரத்தில் கையில் இருந்த ஹேண்ட்பேக்கை கீழே போட்டாள்.
“டேய், என்னடா பண்ற… அவ கிட்ட ஏன்டா வம்புக்கு நிற்குற. நீ வந்ததில் இருந்து…” என்றவர், “சங்குமா… கொடுடா நான் எடுத்துட்டு வரேன்” என்று அவர் ட்ராலியை அவள் கையில் இருந்து வாங்க.
சந்தோஷை முறைச்சுக்கொண்டே முன்னாள் சென்ற சங்கவி, கார் சாவியைப் போட்டு கார் கதவைத் திறந்ததும், அவளைப் பின்னால் இழுத்தவன் டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டு அவளை ஏறச் சொன்னான்.
அவனை முறைத்தவள், தன் காலால் தரையை உதைத்து விட்டு வந்து அவன் அருகில் இருந்த சீட்டில் ஏறிக்கொள்ள… முத்து பின்னால் ஏறிக்கொண்டு கதவைச் சாற்றியதும்.
“சீட் பெல்ட்…” என்றான். அவனை முறைத்தவாரே சீட் பெல்ட் போட்ட சங்கவி அவனைப் பார்க்க… தன் மொபைலை எடுத்து மேப்பை ஆன் செய்தவன் “வி. ஆர். காலேஜ்” என்று சொன்னவன்.
மேப் லொக்கேஷனைத் தேர்ந்தெடுத்து அவனுக்கு வழி சொல்ல… காரை ஸ்டார்ட் செய்து புயல் வேகத்தில் காரைச் செலுத்தினான் சந்தோஷ்.
தான் சிறு வயதில் பார்த்த சந்தோஷா இது என்று சங்கவி அவனை வாய் பிளந்து பார்த்துக் கொண்டு அவன் அருகில் அமர்ந்து வந்தாள்.
