EPISODE 66
ஆதி தன் அப்பாவுடன் டென்மார்க் வந்தவன், சிறிது கூட ஓய்வெடுக்க விரும்பாமல் அவன் அப்பாவை மட்டும் விட்டுவிட்டு நேராக ஃபேக்டரிக்குச் சென்றான்.
தீ விபத்து நடந்த இடத்திற்கு வந்தவன், அந்த இடம் முழுவதையும் ஆராய்ந்தவன் தன் அசிஸ்டன்ட்டை அழைத்து, “இதற்கு யார் காரணம் என்று தெரிந்ததா உங்களுக்கு?” என்று கேட்டான்.
அவர் இல்லை என்று தலை கவிழ்ந்து இருக்க… “சரி, நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றவன் நேராக ஆஃபீஸ் ரூம் வந்து சிசிடிவி வீடியோவை ஆன் செய்து, அதில் நேற்று தீ விபத்து நடந்த நேரத்தைக் கணக்கிட்டு அதற்கு ஒரு மணி நேரம் முன்பில் இருந்து அந்த வீடியோவை ஓட விட்டான்.
பொறுமையாக அங்கு நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு வந்தவன், அந்த வீடியோவில் சந்தேகப்படும் படியான எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை என்று கவனித்தவன், “யார் செய்தார்கள் என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும் அல்லது எதனால் இப்படி ஆனது என்ற காரணம் கண்டுபிடிக்க வேண்டும்” என்று நினைத்துக் கொண்டான்.
பின் தன் ஆஃபீஸ் வேலைகளில் மூழ்கினான். சாப்பிடுவதைக் கூட மறந்து போய் வேலை பார்த்துக் கொண்டு இருந்தவன் தன் மொபைல் அடிக்கவும் தான் சற்று நிதானித்தான்.
போனை எடுத்துப் பார்க்க… அவன் அப்பா தான் அழைத்திருந்தார். அவரைத் தாங்கள் தங்கி இருக்கும் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்ததோடு சரி. பிறகு அவரிடம் பேசவே இல்லை… இதை எல்லாம் யோசித்தவன் போனை அட்டென்ட் செய்து காதில் வைக்க…
“ஹலோ…” என்றார் மறுமுனையில் இருந்து… “சொல்லுங்க அப்பா…” என்றான் ஆதி.
“எப்போ வீட்டுக்கு வர்றே ஆதி?” என்றார். அவர் கேட்டதும் தன் வாட்சில் மணியைப் பார்த்தவன், “அப்பா இன்னும் அரை மணி நேரத்தில் அங்கே இருப்பேன்” என்று சொன்னவன் போனை வைத்துவிட்டு ஆஃபீஸில் இருந்து கிளம்பினான்.
காரில் பின்னால் அமர்ந்து கொண்டு வந்தவனின் நினைவில் துர்காவின் நினைவுகள் ஓட…. தன் மொபைலைத் திறந்தவன் அதில் ஃபோட்டோ கேலரியை ஓபன் செய்து அதில் இருந்த துர்காவின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான்.
அவர்கள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட… ஃபோட்டோ அது… அதில் ஆதி துர்காவின் கழுத்தில் தாலி கட்ட… துர்கா லேசாக தலை சாய்த்தபடி இருந்த ஃபோட்டோ அது… அதில் தலை குனிந்தது போல அமர்ந்து கொண்டு லேசாக தலையைச் சாய்த்து கண்களை உயர்த்தி அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவள் முகத்தை ஜூம் செய்து பார்த்தவன் தன் விரலால் அவள் முகத்தை வருடியவன் அவள் கண்களைக் கவனிக்க… அந்த கண்களில். ஆதி தாலி கட்டிய போது தெரிந்த உணர்வுகள் அப்பட்டமாகத் தெரிந்தது… அதில் இருந்த சந்தோஷம்… நிம்மதி…. காதல்…. என்று அப்பட்டமாக அவள் விழிகளில் தெரிந்தது.
முன்பு எல்லாம் யாராவது அவள் விழிகளில் உள்ள காதலை நான் உணர்ந்தேன் என்று சொல்லும்போது ஆதிக்குத் தோன்றி இருக்கிறது. அது எப்படி ஒருவர் வாய் திறந்து தன் காதல் சொல்லிப் புரியவைக்க முடியாத உணர்வுகளை எப்படி தன் கண்களால் ஒருவருக்கு உணர்த்துகிறார்கள் என்று நினைத்திருக்கிறான்.
ஆனால் இந்த நிமிடம் துர்காவின் கண்களில் தெரிந்த காதலைக் கண்டு தனக்குள் எழுந்த உணர்வுகளை என்ன என்று விவரிக்க முடியாமல் இருந்தது.
“அப்போ… அப்போ… துர்கா… என்னை உண்மையிலேயே விரும்பித்தான் திருமணம் செய்தாளா… நான் துர்கா கழுத்தில் தாலி கட்டும்போது அவள் முகத்தில் எந்த விதமான கவலையோ, சோகமோ…. இல்லை மாறாக… அவள் முகத்தில் சந்தோஷமும், கண்களில் காதலும் அல்லவா தெரிகிறது…” இதை எல்லாம் யோசித்தவன் மனதில் ஏதோ ஒன்று புரிய ஆரம்பித்தது.
வரும் வழி முழுவதும் துர்காவின் நினைவிலேயே இருந்தான் ஆதி. வீடு வந்தது கூடத் தெரியாமல் ஏதோ சிந்தனையிலேயே இருந்தவனை அவனுடைய டிரைவரின் குரல் தான் சுய நினைவுக்குக் கொண்டு வந்தது. “என்ன” என்பது போல நிமிர்ந்தவனை “வீடு வந்திருச்சு” என்று ஆங்கிலத்தில் சொல்லி அவன் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு நின்றிருந்தார்.
காரை விட்டு இறங்கியவன் தன் மாஸ்க்கைக் கழட்டிக்கொண்டே உள்ளே செல்ல ஹாலில் இவனுக்காக வெங்கடாச்சலம் காத்திருந்தார். ஆதியைக் கண்டதும் “வா… ஆதி” என்று அவனை அழைத்துத் தன் அருகில் அமர வைத்தவர் ஆஃபீஸில் நடந்த விவரங்களை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டவர் அவன் கையில் ஒரு ஃபைலைக் கொடுத்து… “இதை நீ படித்துப்பார்” என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்.
ஆதியும் அந்த ஃபைலை வாங்கிப் பொறுமையாகப் படிக்க ஆரம்பித்தவன் முழுவதுமாகப் படித்து முடித்துவிட்டு, “உங்களுக்கு ஓகேவா அப்பா..?” என்றான்.
“உனக்கு என்ன தோன்றுகிறது ஆதி?” என்று கேட்டார் வெங்கடாச்சலம். “நாம் ஏற்கனவே கார்மெண்ட்ஸ் ஏற்றுமதி பிசினஸ் செய்துட்டு இருப்பதனால் நிறைய வெளிநாட்டு வியாபாரிகள் நமக்கு ஏற்கனவே தெரியும் அப்பா…”
“இப்போ இதைப் விரிவுபடுத்துற விதமா அந்த அந்த நாடுகளில் இருக்கிற கார்மெண்ட்ஸ் முதலீடு செய்றவங்க கிட்ட இருந்து ப்ரொடக்ஷன் விலையில் வாங்கி நாம ஏற்றுமதி செய்யலாம்ன்னு சொல்றீங்க….”
“இது ஆரம்பத்தில் கொஞ்சம் ரிஸ்க்கான விஷயம் தான் அப்பா… கொஞ்சம் பொறுமையா கவனமா.. செய்தால் எல்லாமே சரியா வரும்” என்ற ஆதி… “இந்த வேலைகளை நான் பார்த்துக்கறேன் அப்பா…” என்றான்.
அவன் பேசியதை எல்லாம் பொறுமையாகக் கேட்ட வெங்கடாச்சலம், “எனக்கு உன் மேல் முழு நம்பிக்கை இருக்கிறது ஆதி” என்றவர், “சீக்கிரமே இதன் வேலையை ஆரம்பிக்க வேண்டும். இந்த வேலையை நான் ஏன் டென்மார்க்கில் இருந்து ஆரம்பிக்கக் கூடாது” என்று கேட்டார் வெங்கடாச்சலம்.
“நீங்க சொல்றதும் சரி தான். நான் நாளைக்கே இதற்கான வேலைகளைப் பார்த்துக் கொள்கிறேன்” என்றான். “சரி ஆதி, நான் இந்தக் கார்மெண்ட் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணின காலத்திலிருந்து இப்போது வரை என்னுடன் தொடர்பில் இருக்கும் சில முக்கிய உற்பத்தியாளர்களை நான் உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். நீ மற்றதை எல்லாம் பார்த்துக் கொள்” என்றவர் ஆதியை அழைத்துக்கொண்டு சாப்பிடச் சென்றார். இருவரும் தொழில் விஷயமாகப் பேசிவிட்டு அவர் அவர் அறைக்கு உறங்கச் சென்றனர்.
ஆதி தன் அறைக்கு வந்ததும் இரவு உடைக்கு மாறியவன் தான் கொண்டு வந்த சூட்கேசைத் திறந்தவன் அதில் வைத்திருந்த துர்காவின் டைரியை எடுத்தவன் அதனைத் தன் கை கொண்டு தடவியவன் நேராகத் தன் பெட்டிற்குச் சென்று அமர்ந்தவன் டைரியின் முதல் பக்கத்தைத் திறந்து பார்த்தான்.
“உன் முதல் பார்வை….” என்று அதில் எழுதி இருந்தது…
அதைப் படித்த ஆதி ஆர்வமாக அடுத்த பக்கத்தைத் திருப்பிப் பார்த்தான்.
“என் முதல் வருட… முதல் நாள் கல்லூரியில் என் வகுப்பறை தேடிச் சென்று உள் நுழையும் நேரம் எனக்குப் பின் நின்று, “எக்ஸ்கியூஸ் மீ….” என்று ஒரு குரல் கேட்டது.”
“குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்க்க… எனக்குப் பின்னால் நல்ல உயர்ந்த உருவம்… சிவந்த தேகம்… முகத்தில் கண்கள் மட்டும் தெரிய மாஸ்க் போட்டு மறைத்துக் கொண்டு ஒருவன் நின்றிருந்தான்.”
“அவனை வாய் பிளந்து பார்த்தபடி நிற்க… ‘கொஞ்சம் நகர்ந்து நின்னா நான் உள்ளே போவேன்’ என்று அவன் சொல்ல… ஆனால் அவன் சொன்னது எதுவும் என் காதில் விழாமல் அவன் கண்களையே பார்த்துக் கொண்டு இருந்தவளின் செவிகளை அவன் சொன்னது எதுவும் எட்டவே இல்லை…”
“அவளை கண்கள் சுருக்கிப் பார்த்த அவன் தன் அருகில் இருப்பவனைத் திரும்பிப் பார்த்து ஏதோ சொல்ல… அவன் அருகில் இருந்தவன் என்னைச் சத்தமாக ‘இந்தா மா… பொண்ணே …கொஞ்சம் வழியை விடுறியா…’ என்றான்.”
“அப்போதுதான் நிகழ் உலகிற்கு வந்தவள் அவர்கள் இருவருக்கும் வழி விட…. ‘டேய் ஆதி வாடா.. உள்ளே…’ என்று கூறிவிட்டு அவன் நண்பன் முன்னே செல்ல…. அந்த மாஸ்க் அணிந்த ஆண் அழகன் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு என்னைக் கடந்து சென்றான்.”
“உன் முதல் பார்வையில் விழுந்து விட்டேன் அந்த கணமே…”
“ஆதி…. உன் பெயரை கேட்டதிலிருந்து என் உயிர் மூச்சாகச் சுவாசித்துக்கொண்டு, மந்திரம் போல உன் பெயரை உச்சரித்துக் கொண்டு இருக்கிறேன்” என்று எழுதியிருந்த துர்கா… அந்தப் பக்கத்தின் கீழே
துர்காஆதி!!! என்று தன் பெயரை அவன் பெயரோடு இணைத்து எழுதி அதன் முடிவில் ஒரு இதயம் வரைந்து அதில் இருவரது பெயரின் முதல் எழுத்தை எழுதியிருந்தாள்.
இந்த வரிகளைப் படித்ததும் ஆதியின் இதயத்திற்குள் துர்காவைப் பற்றிய பார்வை மாறி இருந்தது.
என்ன தான் தோழி என்று இவ்வளவு நாள் அவளை நினைத்து இருந்தாலும்… திருமணத்திற்குப் பின் மனைவி என்றால் உரிமையில் யோசித்து இருந்தவனுக்கு… அவள் தன்னை சந்தித்த நாள் முதல் தன்னை எப்படி நினைத்துக் கொண்டு இருக்கிறாள் என்று புரிய ஆரம்பிக்க…
டைரியை மூடி… தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு கண்கள் மூடிய அடுத்த நொடி துர்காவின் உருவம் அவன் கண் முன் வந்து அவனை இம்சை செய்தது.
துர்காவைத் தவிர வேறு சிந்தனையே அவன் எண்ணத்தில் ஓடவில்லை…
நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் தூங்கிப்போனான் ஆதி.
காலை உணவை முடித்துக் கொண்டு கதிரும், விக்கியும் ஆஃபீஸ் செல்லப் புறப்பட்டுக் கொண்டு இருக்க…. துர்காவும் அவர்களுடன் ஆஃபீஸ் வருகிறேன் என்று அடம் பிடித்து அவர்களுடன் ஆஃபீஸ் வந்தாள்.
வழக்கம் போல அவள் ஃபிரெண்ட்ஸ் விவேக் மற்றும் லதாவுடன் சேர்ந்து சிறிது நேரம் பேசிவிட்டு வேலையை ஆரம்பித்தாள்.
துர்கா தன் வேலையில் தீவிரமாக இருக்க… அப்போது ஆஃபீஸிற்குள் வந்த சங்கவி சுற்றிலும் பார்வையாலேயே அளந்தவள் தன் கேபினுக்குச் சென்றவள் தன் இன்டர்காமை எடுத்து துர்காவுக்குக் கால் செய்தாள்.
துர்கா போனை அட்டென்ட் செய்ததும், “ஏய் உள்ளே வா….” என்று சொல்லிவிட்டு போனை வைக்க…
முதலில் அதிர்ந்த துர்கா பின் தன் வேலையை அப்படியே விட்டு விட்டு சங்கவியின் கேபினிற்குள் வந்தாள்.
உள்ளே வந்த துர்கா சங்கவியைப் பார்க்க அவள் சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு இருந்தாள்.
அவள் அருகில் வந்த துர்கா அமைதியாக நிற்க… துர்காவை ஏற இறங்கப் பார்த்த சங்கவி… “என்னடீ பியூ… உன் புருஷன் ஊருக்குப் போய்ட்டான் போல….” என்றால். அவளை நிமிர்ந்து பார்த்த துர்கா “ஆமாம் மேடம்” என்றால் அமைதியாக…
“அப்பறம் உனக்கு இங்க என்ன வேலை… உன் புருஷன் கூடவே எப்பவும் ஒட்டிகிட்டுச் சுத்துவியே…. அவன் கூடப் போகாம இங்க என்ன பண்ற” என்றால் சங்கவி.
துர்கா எதுவும் பேசாமல் நிற்க… “அதான் பெரிய புளியங்கொம்பைப் பிடிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டியே… பேசாம வீட்டுலயே இருந்து அவன் காசை எல்லாம் செலவு செஞ்சு சந்தோஷமா இருக்காம… இங்கே ஏன் மேடம் கஷ்டப்பட்டு வேலை செய்றீங்க…” என்றால் நக்கலாக.
சங்கவி கூறியதைக் கேட்டு கடுப்பான துர்கா… “நான் என்ன உங்களைப் மாதிரியா மேடம் அப்பா காசுல செலவு பண்ணிட்டு ஜாலியா ஊரைச் சுத்திட்டு, நினைச்சா ஆஃபீஸ் போயிட்டு பார்ட்டி… பப்ன்னு சுத்திட்டு இருக்கீங்க…. உங்களைப் மாதிரியே நான் இருக்க முடியுமா..” என்று துர்கா பதில் கூற….
அவள் கூறியதைக் கேட்டு கடுப்பான சங்கவி.. “ஏய்…” என்று சேரில் இருந்து எழுந்தவள் துர்காவின் அருகில் வந்து அவளை முறைக்க… “மேடம் இப்போ எதுக்கு என்னை வரச் சொன்னீங்க… என்னன்னு சொன்னீங்கன்னா நான் போய்ப் என் வேலையைப் பார்ப்பேன்” என்றால் துர்கா.
அவளை முறைத்துவிட்டு, “போய் என்னோட ப்ராஜெக்ட்டுக்கான ஃபைலை எடுத்துட்டு வா…” என்று ஆர்டர் செய்தவள் தன் இருக்கையில் சென்று அமர…
“மேடம் அது எல்லாம் ஆதி சார் தான் ஃபாலோ பண்றாரு… நீங்க எதுக்கு அதெல்லாம் கேட்குறீங்க…” என்றால் துர்கா.
“ஏய்… பியூ… உன் வேலை நான் கேட்குறதைக் கொண்டு வந்து குடுக்கிறது மட்டும் தான். நான் சொன்ன அதைச் செய்றது மட்டும் தான். போய்ப் எடுத்துட்டு வா…” என்று சொல்லிவிட்டு, “கெட் அவுட்” என்றால்.
துர்கா அவளை முறைத்துவிட்டு வெளியே வந்தவள் ஆதியின் கேபின் வந்தவள் சங்கவியின் ப்ராஜெக்ட் சம்பந்தமான ஃபைலை எடுத்துக்கொண்டு அவள் கேபின் வந்தவள் அவள் டேபிளில் வைத்துவிட்டுத் திரும்பியும் பார்க்காமல் வெளியே சென்றாள்.
வெளியே சென்ற துர்காவைப் பார்த்து…. “உனக்கு ரொம்பக் கொழுப்பு ஆகிருச்சுடீ.. முன்ன எல்லாம் என்னைப் பார்த்தாலே பயந்து நடுங்குவே.. இப்போ என் கிட்டயே எதிர்த்துப் பேசுற அளவுக்கு வளர்ந்துட்டியா… இருடீ உனக்கு ஒரு நாளைக்கு இருக்கு” என்று வெளியே சென்ற துர்காவைப் பார்த்துக் கடுப்பில் பேசியவள் ஃபைலை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தாள்.
அதில் இருந்த விவரங்கள் ஒன்று விடாமல் படித்த சங்கவி ஃபைலுடன் வெளியே வந்தவள்… நேராகக் கதிரின் கேபினிற்குள் சென்றாள். அங்கே விக்கியும் கதிரும் பேசிக்கொண்டு இருக்க… சங்கவி வேகமாகக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர.. அவளைப் புரியாமல் இருவரும் பார்த்தனர்.
உள்ளே வந்த சங்கவி தன் கையில் இருந்த ஃபைலைத் தூக்கி கதிரின் டேபிளில் போட்டவள். “என்ன இது… இன்னும் இரண்டு நாட்களில் என்னோட ப்ராஜெக்ட் ஓட லான்ச் நடக்கப் போகுது…”
“ஆனா யாரும் அதைப் பற்றி… எதுவும் செய்யாமல் நீங்க எல்லாரும் ஜாலியா கதை பேசிட்டு இருக்கீங்க… என்னோட ப்ராஜெக்டை நல்ல படியா முடிக்கணும்னு உங்களுக்கு எல்லாம் அக்கறையே இல்லையா…” என்று சங்கவி அவர்களிடம் சண்டை இட…
“ஹலோ… ஹலோ… மேடம் இப்போ எதுக்குத் தேவை இல்லாம இங்க வந்து கத்திட்டு இருக்க…” என்றான் விக்கி.
“எதுக்கு வந்திருக்கேனா… இவ்வளவு நேரம் நான் என்ன பேசினேன் என்று உனக்குக் கேட்கவே இல்லையா… நீ என்ன செவிடா…” என்றால் சங்கவி.
“எல்லாம் கேட்டுட்டுத் தான் இருக்கோம். உங்க வேலையாகத் தான் நாங்க பிஸியா இருக்கோம்” என்று சொன்னவன் அவர்கள் முன் இருந்த லேப்டாப்பை அவள் முன் திருப்பி வைக்க… சங்கவி முன்னே வந்து அவர்கள் காட்டிய விவரங்களை எல்லாம் பார்த்தவள், “இந்த ப்ரோக்ராமிற்கு யாரை மாடல்லா சூஸ் பண்ணி இருக்கீங்க” என்று கேட்டாள்.
“அந்த மாடல் விஷயமாகத் தான் நாங்க சர்ச் பண்ணிட்டு இருந்தோம். அதற்குள்ளாக மேடம் நீங்க அவசரப்படறீங்க…” என்றான் விக்கி நக்கலாக…
அவனை முறைத்தவள் எதுவும் பேசாமல் எழுந்து வெளியே செல்லப் போக.. “ஒன் மினிட்…” என்றான் கதிர்.
நின்ற இடத்திலேயே அவனைத் திரும்பிப் பார்க்க, “என்னிக்காவது ஒரு நாள் ஆஃபீஸ் வந்தா இப்படித் தான் இருக்கும்… என்ன நடக்குதுன்னு கூடத் தெரியாது. உங்க ப்ராஜெக்ட் முடியுற வரை தான் உங்களுக்கு எங்க ஆஃபீஸில் வேலை.”
“இந்த ஃபேஷன் ஷோ முடிந்ததும் உங்க கம்பெனிக்கும் எங்கள் கம்பெனிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதனால் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமாவது ஆஃபீஸிற்கு வந்தால் தான் இங்கே என்ன நடக்கிறது என்று உனக்குப் புரியும்” என்றான்.
அவன் அவ்வளவு பொறுமையாகச் சொன்னதைக் கேட்டவள் மேலும் எதுவும் பேசாமல் “சரி” என்று மட்டும் தலையை ஆட்டி விட்டு வெளியே சென்றால்.
சங்கவி சென்றதும் அவர்கள் ரூமிற்க்கு வந்த துர்கா அவர்களிடம் ஒரு ஃபைலைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவர்கள் கார்மென்ட்க்காக ரெடியாகச் செய்திருந்த மாடல் உடையையும் எடுத்து வந்தவள் அதனைத் தன் மீது வைத்துக் காட்டி அதில் சிறு சிறு மாறுதல்கள் செய்ய வேண்டும் என்று சொல்லி அந்த ஆடையை மேலே தூக்கிக் காட்டிச் சொல்ல.
இவ்வளவு நேரம் அந்த ட்ரெஸ்ஸுக்குத் தகுந்த மாடலைத் தேடிக் கொண்டு இருந்தவர்கள், இப்போது துர்காவுடன் அந்த ஆடையைப் பார்த்த கதிரும் விக்கியும் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்க்க… இருவரின் எண்ணமும் ஒன்று போலவே இருக்க….
ஆச்சரியமாகத் தங்களையே பார்த்துக் கொண்டவர்கள் சிரித்துக் கொண்டே… துர்காவைத் திரும்பிப் பார்க்க… “என்னடா… இப்படிப் பாக்குறீங்க… நான் சொன்னது எல்லாம் புரிஞ்சுதா இல்லையா… இதை எல்லாம் சரி பண்ணச் சொல்லி டிசைனர் கிட்ட சொல்லிருங்க நமக்கு டைம் இல்லை” என்றால்.
“சரி துர்கா நாங்க சொல்லிறோம்” என்ற விக்கி அவள் கையில் இருந்த ஆடையை வாங்கி வைத்துவிட்டு விக்கியும், கதிரும் அவளை ஆளுக்கு ஒரு புறமாகக் பிடித்து சோபாவில் அமர வைத்தவர்கள்.
“துர்கா…. நாங்க உன்கிட்ட ஒண்ணு சொல்றோம் நீ அதுக்கு ஓகே சொல்லணும்” என்றான் கதிர்.
“என்ன” என்பது போல அவர்களைக் கேள்வியாகப் பார்த்த துர்காவைப் பார்த்து.. “இப்போ நீ ஒரு ட்ரெஸ் எடுத்துட்டு வந்தியே. சங்கவியோட ப்ராஜெக்ட் விஷயமா நடக்குற மெயின் ஷோவிற்காக டிசைன் செய்த மெயின் ட்ரெஸ்” என்று நிறுத்த…
“ஆமா. அதற்கு என்னடா இப்போ… அந்த ட்ரெஸ்ஸில் ஏதாவது மாறுதல் இருக்கா…” என்று துர்கா கேட்டாள்.
“அதெல்லாம் இல்லை துர்கா.. ரெண்டு மெயின் ட்ரெஸ் ரெடி பண்ணி வச்சிருக்கோம்… அதுக்காகத் தான் மாடல் தேடிட்டு இருந்தோம். ஒரு ட்ரெஸ்ஸிற்கான கொஞ்சம் முன்னே தான் ஓகே பண்ணினோம்.”
“அப்போ இன்னொரு ட்ரெஸ்ஸுக்கு மாடல்?” என்று கேட்டாள் துர்கா… “அதான் நீ இருக்கியே…” என்று விக்கி கத்திக்கொண்டே சொன்னவன் கதிரை இழுத்துக் கொண்டு துர்காவை விட்டு இரண்டு அடி பின்னால் தள்ளி நின்று கொண்டான்.
இருவரையும் பார்த்த துர்கா… அவர்கள் இருவரையும் முறைத்தவள் “நோ…. என்னால முடியாது.. போங்கடா…” என்றால். “உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா இல்லை தேடச் சிரமப்பட்டுட்டு என்னை மாட்டி விடப் பார்க்குறீங்களா…” என்று கத்தினால்.
அவர்கள் இருவரும் “துர்கா… ப்ளீஸ் துர்கா. இது எவ்ளோ பெரிய ப்ராஜெக்ட் என்று உனக்கு நன்றாகவே தெரியும். ஏதாவது குழறுபடி ஆனால் நாம் இத்தனை நாள் பட்ட கஷ்டம் எல்லாம் வீணாகப் போய்விடும்” என்றான் விக்கி.
“அதெல்லாம் என்னால முடியாது… நீங்க வேற ஆளைத் தேடிக்கோங்க. என்னை விடுங்க சாமி” என்று அவர்கள் இருவரையும் பார்த்துக் கை எடுத்து கும்பிட்டுவிட்டு அங்கிருந்து செல்லப் போக… அவள் பின்னால் ஓடி வந்த இருவரும் துர்காவிடம் கெஞ்சிக் கொண்டே அவள் பின்னால் செல்ல அப்போது அந்த அறைக்கதவைத் திறந்து கொண்டு லதாவும், விவேக்கும் உள்ளே வந்தனர்.
அவர்கள் இருவரையும் பார்த்த… விக்கி வேகமாக இருவரிடமும் சென்று விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லி துர்காவிடம் பேசி அவளைச் சம்மதிக்க வைக்க அவர்கள் இருவரையும் அழைத்தான்.
இருவரும் வந்து துர்காவிடம் என்ன என்னவோ சொல்லிப் பார்த்தும் பயன் பூஜ்யமே…
லதா துர்காவிடம் “ஏய்… லூசு துர்கா… நாங்க என்ன உன்னை புதுசாவா கேட்கிறோம்… நீ ஏற்கனவே ரெண்டு மூன்று முறை நம்ம கம்பெனிக்காக மாடல் பண்ணி இருக்கே தானே.. ஆனா இப்போ மட்டும் ஏன் முடியாதுன்னு சொல்றே” என்று துர்காவிடம் கத்தினால்.
அவளை வாய் பிளந்து நால்வரும் பார்க்க… “என்ன பாக்குறீங்க… நான் சொல்றது சரி தானே… இப்போ மட்டும் ஏன் இவ வேண்டாம்னு சொல்றா? காரணம் என்னன்னு சொல்லச் சொல்லுங்க” என்றால் லதா…
“அதானே… நீ ஏற்கனவே நம்ம கம்பெனிக்காக மாடல் பண்ணி தானே இருக்கே. இப்போ மட்டும் ஏன் வேண்டாம்னு சொல்றே” என்று கதிர் கேட்டான்.
அவர்களைப் பார்த்தவள், “அது எல்லாம் சின்ன சின்ன ப்ராஜெக்ட். பெருசா யாரையும் பாதிக்காது. ஆனா இந்தப் ப்ராஜெக்ட் எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கே நல்லா தெரியும். இதில் ஏதாவது சொதப்பி விட்டால் அவ்வளவு தான். அதுவும் இல்லாமல் இது சங்கவியுடைய ப்ராஜெக்ட். அவளுக்கு என்னைக் கண்டாலே ஆகாது. அப்படி இருக்க நான் எப்படி அவளுடைய ப்ராஜெக்டிற்குக் என்னை மாடலாக அவள் சம்மதம் சொல்வாள்” என்றால் துர்கா.
“அதைப் பற்றி எல்லாம் நீ கவலைப் படாதே துர்கா… அதை எல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம்” என்ற கதிர், “நீ சரி… என்று மட்டும் சொல்லு போதும்” என்றான்.
அவன் சொல்வதைக் கேட்டு அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்த துர்கா எதுவும் பேசமால் அமர்ந்து இருக்க… அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள… அப்போது விக்கி மற்றவர்களைப் பார்த்து நான் இருக்கிறேன் என்பது போல கண்களை மூடித் திறந்தவன். துர்காவின் அருகில் சென்று அமர்ந்தவன், “துர்கா நல்லா யோசிச்சுப் பாரு. இந்தப் ப்ராஜெக்ட்டில் எதுவும் சொதப்பி விட்டால் ஆதி எவ்வளவு டென்சன் ஆவான். அதை கூடச் சமாளித்து விடலாம்.”
“ஆதி செய்யும் எந்த ப்ராஜெக்ட்டுமே… இதுவரை தோற்றதில்லை… ஒருவேளை உனக்குப் பதிலாக வேறு யாராவது வந்தால் இந்த ப்ராஜெக்ட் சரியாகப் போகாமல் சொதப்பி விட்டால், அதனால பிறகு பேசாமல் இந்தப் ப்ராஜெக்ட்டை நாமே பண்ணி இருக்கலாமே… என்று நீ யோசித்து எந்தப் பிரயோஜனமும் இல்லை.”
“ஆதி தோற்காமல் இருப்பது உன் கையில் தான் இருக்கிறது” என்று ஆதியை முன்னிலைப்படுத்திக் சொல்லவும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் சரி என்று சம்மதம் சொன்னாள்.
“சக்ஸஸ்” என்று அவள் பின்னால் இருந்து கதிரும், விக்கியும் தன் கைகளை வெற்றிக்குறி போல உயர்த்திக் காட்ட…. அவர்களைப் பார்த்து லதாவும், விவேக்கும் சிரிக்க… அவர்கள் சிரிப்பதைப் பார்த்த துர்கா தன் பின்னால் திரும்பிப் பார்க்க…. அதற்குள் இருவரும் எதுவும் தெரியாதவர்கள் போல அமைதியாக நின்றுவிட்டனர். அவர்களிடம் திரும்பி, “எனக்கு என்ன என்ன வேணும்னு எல்லாமே லிஸ்ட் போட்டு சொல்றேன் ஒன்னு விடாம எல்லாமே வாங்கி வரணும்” என்று சொன்னாள்.
“நீ லிஸ்ட் மட்டும் கொடு துர்கா உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தேடிப் பிடித்து உனக்கு முன்னாள் கொண்டு வந்து வைக்கிறோம்” என்றான்.
“இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை” என்று துர்கா அவர்களைப் பார்த்துச் சொல்லிவிட்டு வெளியே சென்றால்.
அவள் சென்றதும் நால்வரும் சந்தோசத்தில் துள்ளி குதித்தனர்.
