Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 73

உன் ரகசிய ரசிகை நான் 73

by Layas Tamil Novel
325 views

EPISODE 73

துர்காவுடன் வீடியோ கால் பேசிவிட்டுத் தனது பி.ஏ.வை வரச் சொல்ல… உள்ளே வந்தவர் ஆதியிடம் விவரம் கேட்க…

நேற்று மைக், துர்காவை அவரது விளம்பரத்தில் நடிக்க வைக்க வேலைகள் எவ்வளவு தூரம் சென்று இருக்கிறது என்று கேட்டார்.

“மைக், இன்று துர்கா மேடமுடன் கான்ட்ராக்ட் செய்வதற்கான ஒப்பந்தத்தை நமக்கு மெயில் பண்ணிவிடுவதாகக் கூறியிருக்கிறார். வந்ததும் அதை நீங்கள் ஒருமுறை படித்துவிட்டு ஓகே என்று சொன்னால், மேடமிற்கு ஃபேக்ஸ் செய்து அவரிடமும் ஒப்புதல் வாங்கி விடலாம்,” என்றார் ஆதியின் பி.ஏ.

அவர் சொன்னதை எல்லாம் கேட்டவன், “என்னோட மெயிலிற்கு வந்திருக்கும் கம்பெனி புரோபோசல்கள் சிலவற்றை உங்கள் மெயிலிற்கு சென்ட் பண்ணியிருக்கிறேன்.

என்னுடைய மிஸ்ஸஸ் நடிக்க வேண்டிய நிறைய வாய்ப்புகள் வந்திருக்கிறது. அதில் சிலவற்றை மட்டும் நான் தேர்ந்தெடுத்து உங்களுக்கு மெயில் பண்ணியிருக்கிறேன். அந்தக் கம்பெனிகளின் விவரங்கள், அதில் பங்கு பெறும் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் எனக்கு வேண்டும். இரண்டு நாட்களில் இதை எல்லாம் விசாரித்துவிட்டு என் டேபிளில் வைத்துவிடுங்கள். நான் அடுத்த வாரத்தில் இருந்து முக்கியமான வேலை விஷயமாக நான் வெளியில் செல்ல வேண்டி இருக்கிறது. சில வாரங்கள் நான் பயணம் செய்ய வேண்டி இருக்கும். நம் கம்பெனிக்கு முதலீடு செய்யவிருக்கும் நிறுவனங்களுக்கு நான் நேரில் சென்று நம்முடைய நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப் போகிறேன். எப்படியும் வருவதற்கு இரண்டு, மூன்று வாரங்கள் ஆகிவிடும். அதற்குள் இந்த வேலைகள் எல்லாம் முடித்துவிட வேண்டும்.

என்னுடைய மிஸ்ஸஸ் இங்கே விளம்பர விஷயமாக வர வேண்டி இருக்கும். அவர்கள் இங்கே இருக்கும்போது அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களின் பொறுப்பு,” என்று சொல்லி அவரை அனுப்பிவைத்தான். அவர் சென்றதும் கதிருக்குக் கால் செய்தான் ஆதி.


துர்காவை ஆதியிடம் மாட்டிவிட்டு வந்தது பற்றி விக்கி கதிரிடம் சொல்லி சிரித்துக்கொண்டிருக்க… அப்போது கதிரின் போன் அடிக்க… யார் என்று பார்க்க… ஆதிதான் கதிருக்கு அழைத்திருந்தான்.

ஆதி அழைத்திருந்ததைப் பார்த்ததும் விக்கி போனை ஸ்பீக்கரில் போடச் சொல்ல, போனை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்ட கதிர் ஆதியிடம், “சொல்லு அண்ணா, எப்படி இருக்கே? டென்மார்க் போனதில் இருந்து ரொம்ப பிஸியா இருப்பீங்க போல… அப்பா கூட என்கிட்ட தினமும் ஒரு முறையாவது பேசிவிடுவார். ஆனா, நீதான் ரொம்ப பிஸியா இருப்ப போலயே…” என்றான் கதிர்.

“அப்படி எல்லாம் இல்லை கதிர். நான் பிசினஸ் ட்ரிப் போயிருந்தேன். அதனால்தான் கால் பண்ண முடியலை,” என்றான் ஆதி.

அதை கேட்டதும் அவன் அருகில் இருந்த விக்கி, “ஆமா கதிர். அவருக்கு நமக்கு எல்லாம் கால் பண்ண நேரம் இருக்காது. ஆனா, அவரு பொண்டாட்டிக்கு மட்டும் மெசேஜ் அனுப்ப டைம் இருக்கும். நமக்கு ஒரு மெசேஜ் கூடப் பண்ண இவனுக்கு எல்லாம் டைம் இருக்காது.

இப்போ கூடப் பாரு, அவன் பொண்டாட்டி கூட வீடியோ கால் பேசி ரொமான்ஸ் பண்ணிட்டு… அதுக்கப்புறம்தான் நமக்கு போன் பண்ணியிருக்கான்,” என்றவன், “இவனுக்கு ரொமான்ஸ் பண்ணவே டைம் சரியா இருக்கும். இதுல நமக்குக் கால் எல்லாம் பண்ணுவாரா இவரு?” என்று ஆதியை வறுத்து எடுத்தான் விக்கி.

“நமக்கு இப்போ ஏன் போன் பண்ணியிருப்பான்னு நீ நினைக்கிறே? கண்டிப்பா ஆபீஸ் விஷயமாத்தான் இருக்கும். ஏதாவது சொல்றதுக்காகத்தான் இப்போ நமக்குக் கால் பண்ணியிருப்பான். நீ வேணும்னா கேட்டுப்பாரு உங்க அண்ணன்கிட்ட… நம்ம கூடப் பேச அவன் கால் பண்ணலை,” என்றான் விக்கி.

விக்கி இப்படிப் பேசியதைக் கேட்ட ஆதி மென்மையாகச் சிரித்தவன், “டேய் விக்கி… என்னடா ரொம்பப் பேசுறே… நான் அங்கே இல்லைன்னு உனக்கு ரொம்பக் குளிர் விட்டுப்போய்விட்டது போல,” என்றான்.

“ஆமாமா, அப்படியே இவரைக் கண்டு நாங்க பயந்துட்டாலும்!” என்றான் விக்கி. “சரி சொல்லு, இப்போ எதுக்கு உன் தம்பிக்கு கால் பண்ணினே? பேருக்குத்தான் ஃபிரெண்ட்னு பேரு. டென்மார்க் போற அப்போ நம்ம ஃபிரெண்டையும் கூட்டிட்டுப் போகலாம்னு எல்லாம் இல்லை.

அதை விட்டுட்டு வயசான காலத்துல வீட்ல ரெஸ்ட் எடுக்க வேண்டிய அப்பாவை டென்மார்க் கூட்டிட்டுப் போயிருக்கே. அவரை அங்கே கூட்டிட்டுப் போய் என்ன பண்ணப் போறே? அங்கேயும் போய் காலையில் எழுந்து வந்ததும் ஹாலில் உட்கார்ந்து காபியை வாங்கி குடிச்சுட்டு… பேப்பர் படிச்சுட்டு இருப்பாரு. அப்பறோம் மூணு வேளை சாப்பாடு, ஈவ்னிங் வாக்கிங்… அடுத்த நாள் அதையே ரிப்பீட் போட்டு ஓட்டுவாரு. அவரை அங்கே கூட்டிட்டுப் போயிருந்ததுக்குப் பதிலா, என்னைக் கூட்டிட்டுப் போயிருக்கலாம். நானாவது ஊரைச் சுற்றிப் பார்த்திருப்பேன்,” என்று விக்கி ஆதியைக் கழுவி ஊற்ற…

“சரியா சொன்னே விக்கி… இந்த அப்பாவை இங்கே கூட்டிவந்து வெச்சிட்டு இவன் வேலை வேலைன்னு சுற்றிக்கொண்டு இருக்கான். நான் நீ சொன்னது போலவே மூணு வேளையும் சாப்பிட்டு சாப்பிட்டு சும்மாத்தான் இருக்கேன்,” என்றார் வெங்கடாச்சலம்.

அவர் பேசியதைக் கேட்டதும் “ஐயோ அப்பா…” என்றால் விக்கி. “டேய் கதிர்! ஆதியின் அப்பா பக்கத்துலதான் இருக்காருன்னு சொல்ல மாட்டியாடா? நான் பேசியதை எல்லாம் கேட்டுட்டு அப்பா என்னை என்ன நினைப்பாரு?” என்று சொல்ல…

“டேய், நீ எங்கேடா என்னை பேச விட்டே? நீயே பேசிட்டு இருக்கே,” என்றான் ஆதி. “அப்பா… சாரிப்பா… நான் சும்மா அவனை கிண்டல் பண்ணத்தான் பேசிட்டு இருந்தேன்,” என்று சொல்ல…

அவர் சிரித்துக்கொண்டே, “சரி சரிடா… நான் உன்னைத் தப்பா நினைக்கலை. நீங்க பேசுங்க. அப்பாவுக்கு வேலை இருக்கு, நான் கிளம்புறேன்,” என்று சொல்லிச் சிரித்துவிட்டு அவர் சென்றுவிட்டார்.

ஆதியும், கதிரும் விக்கி நோஸ் கட் வாங்கியதைப் பார்த்துச் சிரிக்க… விக்கி எதுவும் பேசாமல் அப்படியே நல்ல பிள்ளையாக அமைதியாகிவிட்டான்.

பின் ஆதி பிசினஸ் விஷயமாகப் பேசிவிட்டு… டென்மார்க்கில் துர்காவுக்கு இருக்கும் விளம்பரங்கள் பற்றிய விவரங்களைச் சொன்னவன், இன்னும் ஒரு வாரத்தில் துர்கா இங்கு வரவேண்டி இருக்கும் என்று சொன்னவன்.

அவளுக்கு அசிஸ்டன்ட் ஆக லதாவையும், அவளது செட்யூல்ஸைப் பார்க்கக் கூடவே விவேக்கையும், துர்காவுக்கு முக்கியமான வேலை எல்லாம் பார்ப்பதற்கு விக்கியையும் அவளுடன் டென்மார்க் வரச் சொன்னான்.

கதிரை இந்தியாவில் இருந்து அங்கிருக்கும் பிசினஸைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, அவனுக்கு அசிஸ்டன்ட் ஆகப் புதிதாக ஒருவரை நியமித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, சிறிது நேரம் இவர்களிடம் பேசிவிட்டுக் காலை கட் செய்தான் ஆதி.

ஆதி சொன்னதை எல்லாம் கேட்ட கதிர், துர்கா, லதா, விவேக் மூவரையும் தனது கேபினிற்கு வரச் சொல்ல அனைவரும் அங்கே வந்தனர்.

ஆதி கூறிய விஷயங்களை எல்லாம் சொன்ன கதிர், “அடுத்த வாரம் நீங்க நாலு பேரும் தயாராக இருங்கள்,” என்று சொல்ல…

விக்கி கதிரிடம், “நீ ஒரு விஷயத்தைக் கவனிச்சியா கதிர்? நம்ம துர்கா காலையில் விளையாட்டாகப் பேசியதை எல்லாம் ஆதி இப்போதே உண்மை ஆக்கிவிட்டான்,” என்று சொல்ல… அனைவரும் அதையேதான் நினைத்திருந்தனர் என்று சொல்ல…

துர்காவை நால்வரும் சேர்ந்து ஓட்ட… அவளால் அவர்களைச் சமாளிக்க முடியாமல் திணறினாள்.

பிறகு துர்காவும் விக்கியும் டென்மார்க் செல்வதற்காக ஷாப்பிங் சென்றனர்.

விவேக்கிற்கும், லதாவிற்கும் கையில் பணத்தை வம்படியாகத் திணித்துவிட்டு, அவர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை அளித்துவிட்டு, அவர்களையும் டென்மார்க் செல்ல ஷாப்பிங் செய்யச் சொல்லி கதிர் அவர்களையும் அனுப்பினான்.

சங்கவி ஷிவுவை மாலையில் சந்திப்பதாகக் கூறி ஒரு காபி ஷாப்பில் காத்திருக்குமாறு சொல்லிவிட்டுப் போனை வைத்தாள்.

மாலை ஆபீஸ் முடிந்து சங்கவி சொன்ன ரெஸ்டாரன்ட்டில் காத்திருந்த ஷிவு, சங்கவி வருகிறாளா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

கிட்டத்தட்ட வந்து இரண்டு மணி நேரமாகியும் சங்கவி அங்கு வராமல் போகவே கடுப்பான ஷிவு எழுந்து வீட்டிற்குச் செல்லப் போக… வெளியே வந்தவள் டாக்ஸிக்காகக் காத்திருந்தபோது, துர்காவும் விக்கியும் பேசிக்கொண்டே ஒரு கடைக்குள் நின்று இருந்தனர்.

அவர்கள் இருவரையும் பார்த்தவள், ‘இவர்கள் ஏன் இங்கே இருக்காங்க?’ என்று யோசித்தவாறு ரோடைக் கிராஸ் செய்யப் போக… அப்போது அவளைப் பிக்கப் செய்வதற்காக டாக்ஸி வர, அதை அனுப்பிவிட்டு ரோடைக் கிராஸ் செய்து அந்தக் கடைக்கு அருகில் சென்றாள்.

கடை வரை சென்றவள் உள்ளே செல்லலாமா? வேண்டாமா? என்று யோசனையுடனே நின்று இருக்க, அப்போது அவள் தோள் மீது ஒரு கை படவும் சட்டென்று ஒரு நிமிடம் பயந்தவள்… தன் பின்னால் யார் நிற்கிறார்கள் என்று திரும்பிப் பார்க்க… அவள் அருகில் பின்னால் சங்கவி நின்று கொண்டிருந்தாள்.

சங்கவியைப் பார்த்ததும் தான் ஷிவுவிற்கு ‘அப்பாடா’ என்று இருந்தது. அவளைப் பார்த்துவிட்டு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஷிவு, “சங்கவி அக்கா நீங்களா? நான் யாரோ என்னவோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்,” என்று ஷிவு சொன்னாள்.

“ஏன் அப்படி யாரைக் கண்டு நீ பயப்பட்டே ஷிவு?” என்று சங்கவி கேட்க…

“சங்கவி அக்கா… நான் நீங்க வர லேட் ஆனதும் கிளம்பலாம் என்று வெளியில் டாக்ஸிக்காக வெளியே வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அப்போ இந்த ஷாப்க்குள்ளே அந்த துர்காவும், விக்கியும் இருக்கிறதைப் பார்த்தேன். அவங்களுக்குத் தெரியாம ரெண்டு பேரும் என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம்னு வந்தேன். நீங்க திடீர்னு வந்து என் தோளில் கை வைத்ததுமே எனக்கு ஒரு நிமிஷம் ‘பக்குன்னு’ ஆயிடுச்சு. வேற ஒண்ணும் இல்லை அக்கா,” என்று சொல்ல…

சங்கவி, ஷிவு சொன்னதைக் கேட்டு அவள் அருகில் இருந்த கடையை எட்டிப் பார்க்க, உள்ளே துர்காவும் விக்கியும் சிரித்துப் பேசிக்கொண்டு எதையோ வாங்கிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரையும் ஆத்திரம் பொங்கப் பார்த்துவிட்ட சங்கவி, “நீ வா, நாம முதல்ல இங்கிருந்து போகலாம்,” என்று ஷிவுவின் கையைப் பிடித்து ரோடைக் கிராஸ் செய்து அவர்கள் இருவரும் காபி ஷாப்பிற்கு வந்தனர்.

இருவரும் ஒரு டேபிளில் அமர்ந்து அவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் சொல்லிவிட்டு, சங்கவி ஷிவுவைப் பார்த்து, “என்ன ஷிவு யோசிச்சுட்டு இருக்க?” என்று கேட்டாள்.

“நான் வேற என்ன அக்கா யோசிக்கப் போறேன்? அந்த துர்கா பத்திதான் யோசிச்சுட்டு இருக்கேன். எப்படி ஒரே நைட்ல அவ இவ்ளோ ஃபேமஸ் ஆனா? அதுவும் உங்களைக் கீழே தள்ளிவிட்டுட்டு… அதுதான் எனக்கு யோசனையாகவே இருக்கு.

இதையெல்லாம் பார்த்துவிட்டு எங்க ஆஃபீஸுக்குப் போனால் அங்கே என் ஆபீஸ் முழுக்க அங்கேயும் இவளைப் பற்றியே பேசிட்டு இருக்காங்க. சரி, இங்கே வந்தாலாவது உங்க கூட கொஞ்ச நேரம் ஃப்ரீயா பேசலாம்னு இங்கே வந்தா… அங்கே பாருங்க, அவ எவ்வளவு ஜாலியா ஷாப்பிங் பண்ணிட்டு இருக்கா.

இது எல்லாம் யாரோட காசு? எங்க ஆதி மாமாவோட பணம். அவர் பணத்தில் இவ ஃபேமஸ் ஆகுறா. எவ்வளவு செலவு செய்றா தெரியுமா அக்கா?

இது எல்லாம் போதாது என்று அந்தச் செண்பகம் கிழவி வேற… இவளைக் கண்டாலே ‘என் பொண்ணு மாதிரி இருக்கா… பண்ணு மாதிரி இருக்கா’னு சொல்லிட்டு இவளைத் தலையில் தூக்கி வெச்சு ஆடுறாங்க. இப்போ இவ ரொம்ப ஃபேமஸ் வேற ஆகிட்டாளா? எங்க வீட்ல உள்ளவங்க எல்லாம் இவளைத் தலையில் தூக்கி வெச்சு என்னவோ இவ அதிசயமா ஏதோ செய்றாங்குற மாதிரி இவளைத் தாங்கு… தாங்குன்னு தாங்குறாங்க. எங்க அம்மாவும் ராதாவும் அவங்களோட சேர்ந்துட்டு சுத்திட்டு இருக்காங்க.

இதையெல்லாம் என்னால பார்க்க முடியலை அக்கா…” என்று பொருமினாள் சங்கவியிடம்.

அவள் கூறுவதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த சங்கவி, “உனக்குப் புரியுது அந்த துர்காவைப் பற்றி. ஆனால், அந்த வீட்டில் இருக்குறவங்களுக்கு இதை எல்லாம் யாரு சொல்லிப் புரியவைப்பது?” என்றவள்,

“அந்த விக்கியும் இவளும் சேர்ந்து உங்க ஆதி மாமாவுடைய பணத்தை எவ்வளவு செலவு செய்றாங்கன்னு உனக்குத் தெரியுமா?” என்றால் சங்கவி.

“என்ன அக்கா சொல்றீங்க? அந்த துர்காதான் ஆதி மாமா பணத்தைச் செலவு செய்றான்னு பார்த்தா… அந்த விக்கியுமா அப்படிச் செய்றான்?” என்று கேட்டாள் ஷிவு.

“ஆமாம் ஷிவு… உங்க ஆதி மாமாவுடைய அப்பா இருக்காருள்ள… அவர்தான் இந்த துர்காவை கல்யாணம் பண்ணிட்டு வந்த கொஞ்ச நாளிலேயே அவரோட சொத்துக்களை இரண்டு பங்கா பிரிச்சு ஆதிக்கும் கதிருக்கும் மட்டும் கொடுக்காம… மூணு பங்கா பிரிச்சு, அந்த விக்கிக்குச் சிட்டியில் முக்கியமான இடத்தில் உள்ள ஒரு மால், அப்பறோம் அதேபோல… மிகவும் பிரபலமான, பேர்போன இடத்தில் பல அடுக்கு மாடி இருக்க அபார்ட்மென்ட் அவன் பேரில் எழுதி வைத்திருக்கிறார்கள்,” என்று சங்கவி ஷிவுவிற்கு ஏற்றி விட்டாள்.

இதையெல்லாம் கேட்ட ஷிவுவிற்கு ஏற்கனவே துர்காவின் மீது இருக்கும் கோபத்தைவிட இப்போது விக்கியின் மீது கோபம் அதிகமானது. அதைக் கண்ட சங்கவி மனதிற்குள் சிரித்துக்கொண்டே, “இது எல்லாவற்றையும்விட நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்றேன். நீ அதை யார்கிட்டயும் சொல்லக் கூடாது,” என்று சொல்ல…

அவள் சொல்வதைக் கேட்டு ஏற்கனவே தன் மனதிற்குள் அவர்கள் இருவரின் மீதும் வன்மத்தை வளர்த்துக்கொண்டு இருந்த ஷிவு…

இப்போது சங்கவி என்ன சொல்கிறாள் என்று ஆர்வமாகக் கேட்க ஆரம்பித்தாள்.

சங்கவி தான் அமர்ந்திருந்த சேரை இழுத்து ஷிவுவின் அருகில் நகர்த்திப் போட்டு அமர்ந்தவள், தங்களைச் சுற்றிலும் வேறு யாரேனும் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று ஒருமுறை பார்த்துவிட்டு,

ஷிவுவிடம் மெதுவாக, “உங்க ஆதி மாமாவை அந்த துர்காவும்… விக்கியும் சேர்ந்து ஏமாத்திட்டு இருக்காங்க… அது உனக்குத் தெரியுமா?” என்றால்.

“என்ன அக்கா சொல்றீங்க!” என்று அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக ஷிவு கேட்க…

“ஆமாம் ஷிவு… உங்க ஆதி மாமாவைக் கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி இருந்தே துர்காவும், விக்கியும் ரொம்ப நெருக்கமா பழகிட்டு இருந்தாங்க…

உங்க ஆதி மாமா என்னை வேண்டாம்னு சொன்ன அப்போ எப்படியோ இவங்க ரெண்டு பேரும் பிளான் பண்ணி உங்க அத்தை விசாலாட்சியை நம்ப வெச்சு உங்க மாமாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா.

இப்போ கூடப் பாரு உங்க மாமா ஊரில் இல்லைனு கொஞ்சம் கூட வருத்தம் இல்லாம அந்த விக்கி கூட எவ்வளவு ஜாலியா வெளியே சுத்திட்டு உங்க மாமா காசை எப்படிச் செலவு பண்ணிட்டு இருக்காங்கன்னு…” என்று ஷிவுவிடம் பல பொய்களை அடுக்கி அவள் மனதில் மேலும் விஷ விதைகளை விதைத்து அத்தை விருட்சம்போலப் பரவி வளர வைத்துவிட்டாள்.

தான் வந்த வேலை முடிந்தது என்பதுபோல ஷிவுவிற்கு நன்றாக ஏற்றிவிட்டாள்.

துர்காவுடன் வீட்டிற்கு வந்த விக்கி இரவு உணவை முடித்துக்கொண்டு தன் அறையில் படுத்திருந்தவன், தன் மொபைலில் இருந்த நிலானியின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நிலாக்குட்டி… நான் மட்டும்தான் உன்னையே நினைத்து உருகிட்டு இருக்கேனா? நீ என்னை நினைப்பதே இல்லையா? உன்னைப் பார்க்கணும்… உன்கூடப் பேசணும்… உன்னை என் கூடவே வெச்சுக்கணும்… உன்னை நல்லா பார்த்துக்கணும். எனக்கு எவ்வளவு ஆசை இருக்கு தெரியுமா? ஆனா, நீ என்னைக் கண்டுக்கவே மாட்டேங்குற…” என்று அவள் புகைப்படத்தைப் பார்த்துப் பேசிக்கொண்டு இருந்தவன், தன் மொபைலை நெஞ்சில் வைத்துக்கொண்டு கண்கள் மூடி நிலானியை நினைத்துப் படுத்துக் கொண்டு இருந்தான்.

அப்போது விக்கியின் போன் மணி அடிக்க… இந்த நேரத்தில் யார் தனக்குப் போன் செய்வது என்று மொபைலை எடுத்துப் பார்க்க… நிலானியுடைய சீனியர் தான் அவனுக்கு அழைத்திருந்தாள்.

நிலானியை முதன்முதலில் சந்தித்தபோது அவளை ராகிங் செய்த பெண்தான் அவள். இந்தப் பெண் எதற்கு இந்த நேரத்தில் போன் செய்கிறாள் என்று யோசித்தவாறே போனை அட்டென்ட் செய்து “ஹலோ…” என்று சொல்ல…

“ஹலோ சார்… நான்தான் நிலானியுடைய சீனியர் பேசுறேன் சார். என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கா சார்?” என்று அந்தப் பெண் பதட்டத்துடன் பேச…

“சொல்லுமா… எனக்கு உன்னை ஞாபகம் இருக்கு. எதுக்கு இந்த நேரத்தில் எனக்குப் போன் பண்ணியிருக்கே? ஏன் உன்னோட குரல் பதட்டமா இருக்கு?” என்று கேட்டான் விக்கி.

“சார் நிலானி… நிலானி…” என்று அந்தப் பெண் மிகவும் பதட்டத்துடன் பேச… அதுவரை படுத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தவன், அந்தப் பெண் பதட்டமாக நிலானியின் பெயரைச் சொன்னதும் வேகமாக எழுந்து அமர்ந்தவன்,

“என்னமா… நிலானிக்கு என்ன? ஏன் இவ்ளோ பதட்டமா இருக்கே?” என்று ஒருவிதப் பதைபதைப்புடன் கேட்க…

“சார் நிலானி… நிலானி… மாடியில் இருந்து கீழே குதிச்சுட்டா சார்…” என்று அந்தப் பெண் சொல்ல…

விக்கி அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனான். அந்தப் பெண் சொன்னதைக் கேட்டதும் பதட்டமான விக்கிக்கு, “என்னமா சொல்றே?” என்று அவன் காதில் விழுந்தது தவறாக இருக்கக் கூடாதா என்று திரும்பவும் கேட்க.

“சார் நிலானி மாடியில் இருந்து கீழே குதிச்சுட்டா. அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போய்ட்டு இருக்கோம். நீங்க என்கிட்ட உங்க நம்பர் கொடுத்தது எனக்கு ஞாபகம் வந்ததும் உங்களுக்குக் கூப்பிட்டேன். ஹாஸ்டலில் அவளோட ஃபேமிலிக்கு இன்பார்ம் பண்ணிட்டாங்க. நீங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க சார்,” என்று சொல்லி அந்தப் பெண் போனை வைத்தாள்.

அவள் சொன்னது இன்னும் விக்கியின் மூளைக்குச் சென்றடையவில்லை. அவன் அப்படியே சிலை போல நின்று இருக்க… அவன் கண்களில் இருந்து கண்ணீர் அவனை அறியாமலேயே வழிந்து அவன் கன்னத்தை நனைத்தது.

அப்படியே எழுந்தவன், எந்த உணர்வும் இல்லாமல் தன் அறையை விட்டு வெளியே வந்தவன் வாசல் நோக்கி நடந்தான்.

அப்போது தன் அறையில் தண்ணீர் இல்லை என்று கையில் பாட்டிலுடன் கீழே வந்த துர்கா, விக்கி வாசல் நோக்கிச் செல்வதைப் பார்த்துவிட்டு, ‘இந்த நேரத்தில் இவன் எங்கே போறான்?’ என்று யோசனையிலேயே அவனை அழைக்க…

அவள் அழைத்தது விக்கியின் காதுகளை எட்டவே இல்லை. “துர்கா, நான் கூப்பிட்டும் திரும்பிப் பார்க்காமல் போகிறான்,” என்று யோசனையிலேயே இறங்கி வர…

விக்கி சென்றுகொண்டிருந்தவன் தடுமாறிக் கீழே விழ… அதைப் பார்த்த துர்கா பதறி அடித்துக்கொண்டு “விக்கி!” என்று சத்தமிட்டுக் கொண்டே அவனிடம் ஓடினாள்.

அப்போது மாடியில் காற்று வாங்கச் சென்ற ஷிவு கீழே வந்துகொண்டிருந்தவள், துர்கா விக்கியை அழைக்கும் சத்தம் கேட்டு கீழே வர…

அதற்குள் விக்கியிடம் ஓடி வந்த துர்கா அவனைப் பிடித்துத் தூக்கி நிறுத்த… விக்கி துர்காவைப் பார்த்ததும் கண்களில் கண்ணீரோடு “துர்கா…” என்று கட்டிக் கொண்டான்.

சரியாக அப்போது பார்த்து கீழே வந்த ஷிவு… வீட்டு வாசலில் நின்று கொண்டு துர்காவும் விக்கியும் கட்டிக்கொண்டிருக்க… அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷிவு, “ச்சீ… என்ன ஜென்மங்களோ… இப்படியா வீட்டு வாசலில் நின்று இருவரும் வெட்கமில்லாமல் கட்டிக்கொண்டு நிற்பார்கள்,” என்று அவர்களைப் பார்த்து அருவருத்தவள், இதற்கு மேலும் அங்கு நிற்கப் பிடிக்காமல் செல்லப் போனவள் ஒரு நிமிடம் நின்றாள். தன் கையில் இருந்த மொபைலை எடுத்து அவர்கள் இருவருக்கும் தெரியாமல் போட்டோ எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

ஷிவு தங்கள் இருவரையும் போட்டோ எடுத்தது தெரியாமல் துர்கா, விக்கிக்கு என்ன ஆனது என்று குழப்பத்தில் அவனைச் சமாதானம் செய்யும் முயற்சியில் அவன் முதுகைத் தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது யதேச்சையாக வெளியே வந்த கதிர், விக்கியும், துர்காவும் வாசலில் நின்று இருப்பதைப் பார்த்து அவர்கள் அருகில் வர… விக்கியைத் தன் தோள் மீது சாய்த்து ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த துர்கா கதிரைப் பார்த்ததும்…

“கதிர், நீ எங்கே இருந்தே இவ்வளவு நேரம்? அவன் கூட ரூமில் இல்லையா?” என்றால்.

“இல்லை துர்கா. நான் ஜிம் ரூமில் இருந்து வொர்க் அவுட் முடிச்சுட்டு இப்போதான் வெளியே வரேன்,” என்றான் கதிர்.

“நான் தண்ணி பிடிக்கக் கீழே வந்துட்டு இருந்தேன்டா. விக்கி வெளியே எங்கேயோ போய்ட்டு இருந்தான். நான் அவனைக் கூப்பிட்டும் ஏதோ போலப் போய்ட்டு இருந்தவன் வாசல் கிட்ட வந்ததும் தடுமாறி கீழே விழுந்துட்டான் கதிர். பதறி அடிச்சு வந்து தூக்கிவிட்டா… என்னைப் பார்த்ததும் அழுதுட்டே… தோளில் சாய்ஞ்சுட்டான். என்ன ஆச்சுன்னு கேட்டா சொல்ல மாட்டேங்குறான். உனக்கு எதுவும் தெரியுமா?” என்று கதிரிடம் துர்கா கேட்டாள்.

“இல்லை துர்கா… எனக்கு எதுவும் தெரியாது,” என்றவன் விக்கியை துர்காவிடம் இருந்து பிரித்து அவனைப் பார்த்து, “டேய் விக்கி, என்னடா ஆச்சு உனக்கு? ஏன் கண்ணு எல்லாம் கலங்கி இருக்கு? என்ன ஆச்சுடா?” என்று அவன் தோளை உலுக்கிக் கேட்க…

தன் எதிரில் இருந்த தன் உயிர் நண்பன் கதிரைப் பார்த்ததும், “ஓ… நான் அழுதுகொண்டே… நிலானி… நிலானி… மாடியில் இருந்து கீழே குதிச்சுட்டாளாம்டா…” என்று சொல்ல…

“ஆமாம்டா. அவளுடைய சீனியர் பொண்ணு எனக்குக் கால் பண்ணி விஷயத்தைச் சொல்லி, நிலானியை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போய்ட்டு இருக்கோம்னு என்கிட்ட சொல்லி வெச்சுட்டா,” என்று அழ…

அவன் கூறியதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சியாக… பின் சுதாரித்துக் கொண்ட துர்கா, “விக்கி, எந்த ஹாஸ்பிடல் என்று கேட்டியா?” என்றால்.

அவன் ஹாஸ்பிடல் பெயரைச் சொன்னதும், “விக்கி வா… நாம அவன் கூடப் போகலாம்,” என்று கூறி அவனை அழைத்துக்கொண்டு மூவரும் சென்றனர்.

செல்லும் வழி எல்லாம் பித்துப் பிடித்தவன்போல அமர்ந்து வந்தவனைக் கண்டு இருவருக்கும் சங்கடமாக இருந்தது.

தன் மொபைலை ரூமிலேயே துர்கா வைத்துவிட்டு வந்ததால், கதிரிடம் இருந்து போனை வாங்கியவள் கீர்த்திகாவிற்கு அழைக்க… அவள் தாயுடன் சேர்ந்து டிவியில் படம் பார்த்துக்கொண்டிருந்தவள் தன் மொபைல் ரிங் ஆனதும் அதை எடுத்துப் பார்க்க… யார் இந்த நேரத்தில் எனக்கு கால் பண்ணுவது என்று யோசித்துக்கொண்டே போனைப் பார்க்க… கதிரின் நம்பரைக் கண்டவள் போனை எடுத்துக்கொண்டு வெளியே வந்து, “என்னடா இந்த நேரத்தில் போன் பண்ணியிருக்கே?” என்று திட்டவும் துர்கா, “ஹலோ கீர்த்து, நான்தான்டி பேசுறேன்,” என்று சொல்ல…

“ஐயோ… அக்கா! எதுக்கு அவன் போனில் இருந்து இந்த நேரத்துக்குப் போன் பண்ணியிருக்கா? எதுவும் எங்க ரெண்டு பேருடைய லவ் மேட்டர் அவளுக்குத் தெரிஞ்சிருச்சோ?” என்று யோசனையில் “சொல்லு அக்கா…” என்றால் தயங்கிக் கொண்டே…

“ஏய்! இப்படித்தான் மரியாதை இல்லாம கதிரைப் பேசுவியா?” என்று துர்கா அவளைக் கடிந்துகொள்ள… “இல்லை அக்கா… இந்த நேரத்தில் அவன் நம்பரில் இருந்து போன் வந்ததும் அப்படிப் பேசிட்டேன்,” என்று சொல்லிச் சமாளித்தவள், “என்ன அக்கா இந்த நேரத்தில் நீ போன் பண்ணியிருக்கே? என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.

“நீ உடனே ரெடியாகி இரு. நான் வந்து உன்னைப் பிக்கப் பண்ணிக்கிறேன்,” என்றவள், “நிலானி மாடியில் இருந்து குதித்துவிட்டாள்,” என்று சொல்ல…

“என்ன அக்கா சொல்றே?” என்று அதிர்ச்சியில் கீர்த்தி சத்தமிட… “ஆமாம்டி, நான் சொல்றது உண்மைதான். நீ முதலில் ரெடியாகிடு. நாங்க வந்துட்டு இருக்கோம். சீக்கிரம்,” என்று போனை வைத்தாள்.

ஹாஸ்பிடல் போகும் வழியில் கீர்த்திகாவையும் பிக்கப் பண்ணிவிட்டு, நால்வரும் பதைபதைப்புடன் நிலானி இருந்த ஹாஸ்பிடல் சென்றனர்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured