EPISODE 80
துர்கா ஆதியிடம் அவனால் தான் குழப்பத்தில் இருக்கிறேன் என்று சொல்லவும். “என்னாலயா…” என்று அதிர்ச்சியாக ஆதி கேட்க…
“உன்னால தான் ஆதி நான் குழப்பமா இருக்கேன். நீ ஊருக்குப் போறதுக்கு முன்னாடி நாம கார்டனில் விளையாடும் போது நீ என்ன சொன்னேன்னு நியாபகம் இருக்கா உனக்கு?” என்றால் துர்கா.
“நீ ஏன் ஆதி என்கிட்டே அப்படிச் சொன்னே…” என்று விடாமல் துர்கா கேட்க அமைதியாக இருந்த ஆதி அன்று நடந்ததைத் தனக்குள் அசை போட்டவன்….
அன்று கார்டனில் வைத்து அவன் துர்காவிடம் சொன்னது நினைவில் வர…. அதைத்தான் துர்கா கேட்கிறாள் என்று புரிந்ததுமே…. ஆதியின் கண்கள் பளிச்சிட…… “லக்ஷு… அது..” என்று ஆதி தடுமாறினான்.
“சொல்லு ஆதி. இப்போதாவது நியாபகம் வந்திச்சா… உனக்கு… சொல்லு ஆதி,” என்றாள் துர்கா குரல் தழுதழுக்க…
ஆதி என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகப் போனை காதில் வைத்துக் கொண்டு நிற்க…
“ஆயுள் முழுக்க உன்கூடவே வெச்சுக்குவேன்… உன்னை யாராலும் என்கிட்டே இருந்து பிரிக்க முடியாதுன்னு சொல்லிட்டு… என்னை உன்கூடக் கூட்டிட்டுப் போகாம… என்னை இங்கே தனியாத் தவிக்க விட்டு நீ ஏன் ஆதி போன ….” என்று துர்கா முதல் முறையாகத் தன் மனதில் இருந்ததைத் தைரியமாக ஆதியிடம் கேட்டுவிட்டாள்.
தைரியமாகக் கேட்டுவிட்டாளே ஒழிய… ஆதி அந்தப் பக்கம் எந்த மனநிலையில் இருக்கிறான் என்று பயத்தில் அவள் இதயம் எக்குதப்பாகத் துடிக்க…. அந்தச் சத்தத்தைக் கேட்டுக் கொண்டேப் போனை காதில் வைத்துப் படுத்திருந்தால் துர்கா.
துர்கா தன்னைப் அவனுடன் ஏன் கூட்டிச் செல்லவில்லை என்று கேட்டதும் பதில் எதுவும் பேச முடியாமல் கலவையான உணர்வுகளின் பிடியில் அமைதியாகச் சோபாவில் அமர்ந்து இருந்தான் ஆதி.
இருவரும் சற்று அமைதியாக இருக்க…. துர்கா மூச்சு வாங்குவதை போனில் கேட்டுக் கொண்டு அமர்ந்து இருந்த ஆதி.
“லக்ஷு…..” என்று மெதுவாக அதே சமயம் காதலுடன் அழைத்தான். அவன் அப்படி அழைத்ததும்தான் தாமதம் துர்காவுக்கு உள்ளுக்குள் சில்லென்ற உணர்வு உடல் முழுவதும் படர…. தன்னைச் சமன் செய்து கொள்ள முடியாமல் போராடியவள் மூச்சு விடச் சிரமப்பட எழுந்து அமர்ந்து கொண்டு.
“ம்ம்ம்….” என்று மட்டும் ஆதிக்குப் பதில் அளித்தாள் துர்கா.
“சொல்லு லக்ஷு… இவ்வளவு நேரம் மூச்சு இறைக்கப் பேசிவிட்டு இப்போ மட்டும் அமைதியா இருக்கே,” என்றான் ஆதி.
துர்கா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. “இப்போ கொஞ்சம் முன்னே நீ என்கிட்டே என்ன சொன்னே… ஏன் என்னைத் தனியாத் தவிக்க விட்டுப் போனேன்னு கேட்டியே… அப்போ.. உனக்கு என் கூட இருக்கணும்னு ஆசை இருக்கு அப்படித்தானே லக்ஷு…..” என்ற ஆதி.
“அதே நிலையில் தான் நானும் இருக்கிறேன் லக்ஷு…. என் கூட நீ இருக்கனும்னு ஆசையா இருக்கு லக்ஷு எனக்கு. உன்னை என் கூடவே வெச்சுக்கணும்னு ஆசையா இருக்கு,” என்றான் ஆதி.
இப்போதும் எதுவும் பேசாமல் துர்கா அமைதியாக இருக்க.
“சொல்லு லக்ஷு….. நீ என்னைக் காதலிக்குர தானே…..” என்று மறுபடியும் அவளிடம் ஆதி கேட்க…
அவன் கேட்ட இரண்டு கேள்விகளிலேயே அவனுக்குத் தான் காதல் தெரிந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்ட துர்கா சுத்தமாகப் பேச மறந்துவிட்டாள்.
“இப்போதும் நீ அமைதியா இருக்கியா லக்ஷு…..சரி நான் சொல்கிறேன் நீ கேள்,” என்றவன்.
“உனக்கு என் மேல் விருப்பம் இருக்கிறது…. என்னை விட்டு உன்னாலக் கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாது அப்படிதானே… அதனால் தான் என்னை விட்டு இருக்க முடியாமல் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கே நீ… சரியா?” என்றான் ஆதி.
ஆதி இப்படி நேரடியாகக் கேட்பான் என்று துர்கா எதிர்பார்க்கவே இல்லை. இப்போதும் அமைதியாகவே இருந்த துர்காவிடம் “சொல்லு லக்ஷு… இன்னும் உன் மனதில் எனக்குத் தெரியாமல் என்னவெல்லாம் இருக்கிறது?” என்று கேட்டான் ஆதி.
அவன் சொன்னதைக் கேட்டு “கா…. ஆதி…” என்று துர்கா அழைக்க….
“இத்தனை நாள் ஆதி… ஆதி… என்று வெறும் நண்பன் என்ற முறையில் தான் என்னைக் கூப்பிட்டுட்டு இருக்கேன்னு நான் நினைச்சுட்டு இருந்தேன் லக்ஷு… நீ வெறும் வாய் வார்த்தையாக என்னை ஆதின்னு கூப்பிட்டாலும். உன் மனசுக்குள்ள நான் துர்காஆதியாகத் தான் இத்தனை வருசமா இருந்திருக்கேன்னு எனக்கு இப்போதான் தெரிஞ்சுது லக்ஷு…”
“ஏன் லக்ஷு… இவ்வளவு வருசமா… நீ இதை எல்லாம் என் கிட்டே சொல்லவே இல்லை. எனக்கும் இவ்வளவு வருஷம் எதுவுமே இது எல்லாம் தெரியாமல் நான் முட்டாளா உன் முன்னாடி இருந்திருக்கேன்…. அப்படித்தானே லக்ஷு?” என்று சற்று ஆற்றமையுடன் ஆதி கேட்க.
அவன் குரலில் இருந்த ஆற்றாமையை உணர முடிந்த துர்காவால் அவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறும் தன் உள்ளத்தைச் சமாதானம் செய்ய முடியாமல் துர்காவின் கண்களில் இருந்து அவளை அறியாமல் கண்ணீர் வழிந்தோடியது.
“இப்பவும் நான் இதை எல்லாம் உன்கிட்டே கேட்டிருக்க மாட்டேன் லக்ஷு… நீயே இன்னைக்கு வாய் திறந்து என்னைத் தவிக்க விட்டுட்டு ஏன் ஆதி போனேன்னு கேட்டதுனால தான் நான் இதை எல்லாம் இப்போ உன்கிட்டே கேட்க வேண்டியதாகப் போயிருச்சு லக்ஷு…” என்றான் ஆதி.
இப்படி நேரடியாக விஷயத்தைக் கேட்டுவிட்டு ஆதி அமைதியாகிவிட… இங்கு துர்காவின் மனநிலை தான் சொல்ல முடியாத உணர்வுகளோடு போராடிக் கொண்டு இருந்தது.
துர்கா முற்றிலும் பேச்சிலந்து அமர்ந்து இருக்க… “லக்ஷு… எனக்குத் தெரியும் நீ என்னுடன் பேச ரொம்ப ஆவலா இருக்கேன்னு… ஆனால் இப்போது உன் மனதில் இருக்கும் உணர்வுகளை எல்லாம் வாய் வார்த்தையாகச் சொல்ல முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறாய் என்று என்னால் உணர முடிகிறது லக்ஷு.”
“இப்போது எதுவும் நீ சொல்ல வேண்டாம் லக்ஷு….. எப்படியும் நாளை மறுநாள் காலை நீ என்னுடன் இங்கே தான் இருக்கப் போகிறாய். அப்போது உன் மனதில் இருப்பதை எல்லாம் நீ என்னிடம் கண்டிப்பாகச் சொல்லியே ஆக வேண்டும். அப்படி நீ சொல்ல மறுத்தாலும் நீ சொல்லாமலேயே உன் மனதில் இருக்கும் அனைத்தையும் நான் அறிவேன் லக்ஷு…” என்ற ஆதி.
“உன் வாயால் கேட்க வேண்டும் என்ற ஒரு சின்ன ஆசைதான்,” என்றவன், “சரி நான் போனை வைக்கிறேன் லக்ஷு…” என்றவன் “மிஸ் யூ லக்ஷு…” என்று சொல்லிவிட்டுப் போனை வைத்தான் ஆதி.
இவ்வளவு நேரம் துர்காவிடம் தைரியமாகப் பேசினாலும் போனை வைத்த ஆதி. தன் இடது மார்பின் மீது கைவைத்து தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டவன் தன் தலையைக் குலுக்கியவன் “லக்ஷு…” என்று அவள் பெயரை ஆசையோடும்… காதலோடும்… மோகத்தோடும் உச்சரித்தவன் தன் போனை எடுத்து துர்காவின் ஃபோட்டோவைப் பார்த்து சீக்கிரம் என்னிடம் வந்துவிடு லக்ஷு என்றவன் அவள் ஃபோட்டோவைப் பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதி.
இவ்வளவு நேரம் ஆதி துர்காவுடன் பேசிக் கொண்டு இருந்ததை எல்லாம் அவர்களுக்குத் தெரியாமல் மறைந்து நின்று கேட்டுக் கொண்டு இருந்த சங்கவி.
‘ஓஹோ…. காதல் ஜோடிகள் இரண்டும் தூரத்தில் இருந்தே காதல் செய்துட்டு இருக்கீங்களா…. வரட்டும் வரட்டும் நாளை மறுநாள் துர்கா இங்கே வரட்டும் அதன் பிறகு அவளை நான் பார்த்துக் கொள்கிறேன். எப்படி ஆதியும் அவளும் ஒன்று சேர்வார்கள் நான் இருக்கும்போது,’ என்று நினைத்தவள். ‘ஏய் துர்கா எப்படி அந்தக் ஆதியும் நீயும் சந்தோசமா இருக்கப்போறீங்கன்னு நானும் பாக்குறேன். நான் இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது,’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள். எதுவும் தெரியாதவள் போல ஆதியிடம் வந்தவள் “ஆதி போலாமா?” என்று குழைந்து பேச அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு “ம்ம்…” என்று சொன்னவன் தன் பர்ஸில் இருந்த கார்டை எடுத்துக் கொடுத்து “நீ இந்தியா செல்லும் வரை இந்தக் கார்டை வைத்துக் கொள்,” என்று சொல்லி அவள் கையில் கார்டை வைத்துவிட்டு “உனக்கு வேண்டும் என்பதை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துவிடு,” என்று சொன்னவன்.
அங்கிருந்து எழுந்து தான் துர்காவுக்காக வாங்கிய உடையை எடுத்துக் கொண்டு செல்லப் போக…
அவன் கையில் இருந்த கவரைப் பார்த்த சங்கவி வேகமாக ஓடி வந்து “இது என்ன ஆதி கையில்?” என்று சொல்லிக் கொண்டே அவன் கையில் இருந்த பையை வாங்கப் போக.
“ஏய்….” என்று கண்கள் சுருங்க சங்கவியைப் பார்த்தவன் “இது உனக்குத் தேவை இல்லாதது,” என்றவன் அங்கிருந்து சென்றான்.
‘அப்படி அதில் என்ன இருக்கிறது?’ என்று யோசித்தவள் அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டு மறுபடியும் ஷாப்பிங் செய்யச் சென்றுவிட்டாள்.
இங்கே துர்கா போன் கட் ஆனதும்தான் தாமதம். இவ்வளவு நேரம் வார்த்தைகள் இன்றித் தடுமாறியவள் இப்போது…. “ஆதி…” என்று சத்தமாகக் கத்தி அழ ஆரம்பித்தாள்.
“என்னுடைய காதல் உனக்குப் புரிந்துவிட்டதா ஆதி. நான் சொல்லாமலேயே என் காதலை நீ புரிந்து கொண்டாயா?” என்றவள்.
சந்தோஷத்தில் அழத் துவங்கினாள். இன்னும் ஒரு நாளில் ஆதியை நேரில் சந்திக்கப் போகிறோம் என்ற நினைப்பே அவளை ஆட்டிப் படைத்தது. ‘நான் எப்படி ஆதியை நேரில் சந்திக்கப் போகிறேன். என்னைப் பார்த்ததும் ஆதி எப்படி நடந்து கொள்வான். என்னிடம் என்னைக் கேட்பான்?’ என்று ஆயிரம் கேள்விகள் அவள் மனதில் எழுந்தாலும்.
தன் காதலை துர்கா சொல்லாமலேயே ஆதி உணர்ந்து கொண்டான் என்ற சந்தோஷமே அந்த இரவை துர்காவுக்குத் தூங்காத இரவாக மாற்றிவிட்டது.
செண்பகமும் கனகாவும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருக்க….
அப்போது தான் வீட்டிற்குள் வந்தான் விக்கி. அவனைப் பார்த்ததும். “அடடே… விக்கி வாப்பா… என்னை ரெண்டு நாளா வீட்டுப் பக்கம் வரவே இல்லை. ஆஃபீஸில் வேலை அதிகமா இருக்குனு கதிரும், துர்காவும் சொன்னாங்க. அவங்க ரெண்டு பேரும் கூட அடிக்கடி வந்துட்டுப் போறாங்க… ஆனா நீ வீட்டுக்கு வரவில்லையே?” என்று கனகா விக்கியிடம் கேட்க.
“ஆமாம்மா. உங்க மருமகன் ஊரில் இருந்துட்டு என்னை இந்த வேலை அந்த வேலைன்னு சொல்லி என்னை ஆஃபீஸிலேயே இருக்க வெச்சிடறான். உங்க மருமகன்கிட்டே போன் போட்டுக் சொல்லுங்க…. பாவம் விக்கி அவனை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுடான்னு,” என்றான் விக்கி.
இவர்கள் பேசிக் கொண்டு இருந்ததை எல்லாம் கேட்டுக் கொண்டு வந்த ஷிவு, “ஆமாம்மா. எங்க ஆதி மாமா இருந்தாவே இவரு வேலை செய்ய மாட்டாரு… இப்போ அவரும் இல்லை சொல்லவா வேணும். ஆஃபீஸ்க்குப் போகாம வேற எங்கயாவது போய்ச் ஜாலியா சுத்திட்டு வந்திருப்பாரு…. ஆனா நீங்க எல்லாரும் கேட்டதும் அப்படியே வேலை செஞ்ச மாதிரி நடிக்குறாரு,” என்று விக்கியைக் குத்திக்காட்டியது போல ஷிவு பேச.
அவள் பேசியதை எல்லாம் கேட்ட விக்கி ‘என்ன இவ நேருல நான் என்ன செஞ்சேன்னு பார்த்த மாதிரிப் பேசுறா…. ஒரு வேலை ஆஃபீஸ் வந்து பார்த்திருப்பாளோ….’ என்று யோசித்தவன்.
“ஆமா ஷிவு… நான் ரெண்டு நாளா ஆஃபீஸ் போகாம ஊர் சுத்திட்டு இருந்தது உனக்கு எப்படித் தெரியும்?” என்றான் விக்கி.
அவனை ஆச்சர்யமாகப் பார்த்த ஷிவுவிடம் குனிந்து “உனக்கு ஒண்ணு தெரியுமா? நேத்து எனக்குக் கல்யாணம் கூட ஆகிடுச்சு… இப்போ வரை என் பொண்டாட்டி கூட இருந்துட்டு ஜஸ்ட் இப்பதான் வீட்டுக்கு வரேன்,” என்றவன் “யாருகிட்டயும் சொல்லிறதே…” என்று அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டு அங்கிருந்து செல்லப் போக.
“ஏய் ஷிவு தம்பி கிட்ட இப்படித்தான் பேசுவியா….. ஒழுங்கா பேசிப் பழகு முதல்ல. எப்போ பாரு யாராவது ஒருத்தரைப் பேசிக்கிட்டே இருக்க,” என்று கனகா அவளைத் திட்ட…
“விடுங்க அம்மா…. சின்ன பொண்ணு தான சரியா போய்டும்,” என்று விக்கி சொல்லிவிட்டு அவன் அறைக்குப் போக….
அவன் வீட்டிற்கு வந்துவிட்டு அவன் ரூமிற்குச் செல்வதைப் பார்த்த துர்கா தன் அறையில் இருந்து வேகமாக இறங்கி ஹாலில் அமர்ந்து இருந்தவர்களைக் கூடச் சட்டை செய்யாமல் அவர்களைத் தாண்டி விக்கி, கதிர் இருக்கும் அறைக்குள் வேகமாக ஓடினாள்.
அவள் சென்ற வேகத்தைப் பார்த்து செண்பகமும் கனகாவும் சிரித்துவிட்டு ‘என்ன பொண்ணு இப்படியா மாடியில் இருந்து ஓடி வருவது….’ என்று பேசிக்கொள்ள…
‘அவ எதுக்கு இவ்ளோ அவசரமா உள்ளே போறான்னு எனக்குத் தான் தெரியும்’ என்று மனதிற்குள் நினைத்த ஷிவு துர்கா என்ன செய்கிறாள் என்று இவர்களுடன் சோபாவில் அமர்ந்தவாறு பார்த்துக் கொண்டு இருந்தால்.
விக்கி உள்ளே சென்று குளிக்கப் போகலாம் என்று சட்டையைக் கழட்டப் போக அப்போது வேகமாக கதவைத் திறந்து கொண்டு வந்த துர்காவைப் பார்த்து கழற்றிய சட்டையைத் தன் மீது போர்த்திக் கொண்டு…. தன் வாய் மீது கைவைத்து… “ஆஹ்…” என்று பெண்கள் கத்துவது போல ஆக்ஷன் செய்ய…
அப்போது தான் பாத்ரூமிற்குள் இருந்து வந்த கதிர் இந்தக் காட்சியைக் பார்த்துச் சிரித்துக் கொண்டே… “டேய் விக்கி இதை எல்லாம் ரொம்ப ஓவரா இல்லை….” என்று ஓட்டிய கதிர்.
துர்காவைப் பார்த்து “ஆமா லக்ஷு. என்ன கோலம் இது இப்படியேவா வருவே?” என்று சொல்ல… அப்போது தான் தன்னைக் கவனித்தால். நைட் அணிந்த அதே நைட் பேண்ட் பனியனுடன் தலையில் முயல் குட்டி காது மட்டும் இருப்பது போல ஹெட் பேண்ட் மாட்டிக்கொண்டு நின்று இருந்தாள்.
“அதை விடுங்கடா… நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லத் தான் வந்தேன்,” என்றாள் துர்கா.
“என்ன விஷயம் டி… சொல்லு,” என்று இருவரும் ஆவலாகத் துர்காவைப் பார்த்த இருவரிடமும்.
“நேத்து… நேத்து…” என்று துர்கா ஏதோ சொல்ல வர…
“ஏய் லூசு லக்ஷு… நீ என்ன தேய்ந்து போன ரெக்கார்டா… நிறுத்தி நிறுத்திப் பேசிட்டு இருக்க… சீக்கிரம் என்னன்னு சொல்லு லூசு…” என்றான் விக்கி.
அவன் தோளிலேயே நாலு அடி வைத்த துர்கா… “ஆமா நாங்க தேய்ந்து போன ரெக்கார்ட்… இவரு பெரிய சில்க் ஸ்மிதா. இவரு அழகைப் பார்த்து நாங்க கண்ணு வெச்சிருவோம்னு சட்டையை மேல போர்த்திட்டு நிக்குறாரு…. அடச்சீ… சட்டையை எடு அதுதான் உள்ளே பனியன் போட்டு இருக்க தானே….” என்று துர்கா விக்கியை வார… கதிர் “உங்க ரெண்டு பேரையும் என்ன தான் சொல்றதோ… எப்படி தான் உங்க ரெண்டு பேரையும் எங்க அண்ணன் காலேஜில் வைத்துச் சமாளித்தானோ தெரியலையே,” என்று தலையில் அடித்துக் கொண்ட கதிர் விக்கியின் சட்டையை வெடுக்கென்று பிடுங்க….
விக்கி ஷாக் ஆவது போல ரியாக்ஷன் கொடுக்க… “டேய் டேய்… போதும் போதும். உனக்குத் தான் கல்யாணம் ஆகிருச்சே. நாளைக்கே உன் பொண்டாட்டி முன்னாடி பனியனோட நிக்குற அப்போ இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவியா?” என்று துர்கா சத்தமாகப் பேச…
கதிருடன் சோபாவில் அமர்ந்து இருந்த விக்கி…. கட்டிலில் அமர்ந்து அவன் கல்யாண விஷயத்தை துர்கா சத்தமாகப் பேசவும்… யாரும் கேட்டுவிடப் போகிறார்கள் என்று வேகமாக வந்து துர்காவின் வாயை மூட வர தரையில் இருந்த மேட் தடுக்கி துர்காவின் மீது போய்ச் விழுந்தான் விக்கி.
இவர்கள் மூவரும் அறையில் பேசிக் கொள்வது புரியவிட்டாலும் உள்ளே என்ன செய்கிறார்கள் என்று கதவின் வழியே ஷிவுவிற்கு நன்றாகவே தெரிந்தது.
திடீர் என்று விக்கி துர்காவின் மீது விழுந்ததும் ஷிவுவிற்கு ஷாக் ஆகி விட்டது. உடனே தன் மொபைலை எடுத்து அவர்கள் இருவரையும் வரிசையாக ஃபோட்டோக்களை எடுத்தவள் பின் எதுவும் தெரியாதது போல இருந்து கொண்டாள்.
துர்காவின் மேலே விழப் போன விக்கி அவளை இடித்துக்கொண்டு போய்ப் பெட்டில் விழுந்தான். ஆனால் ஷிவு எடுத்த ஃபோட்டோக்கள் எல்லாம் சரியாகத் துர்காவை விக்கி இடிக்கும் போது எடுக்க அதை பார்க்கும்போது இருவரும் ஒருவர் மேல் ஒருவர் விழுவது போல இருந்தது.
பெட்டில் விழுந்த விக்கியின் முதுகில் அடித்தவள் “எருமை…. எருமை…. பார்த்து வர மாட்டே… இன்னேரம் என் மேல விழுந்து வெச்சிருப்பே… நீ…” என்றாள் துர்கா.
“நான் சரியாப் பெட்டில் தானே லேண்ட் ஆனேன்?” என்ற விக்கி அப்படியே தலைக்குக் கை கொடுத்துப் பெட்டில் படுத்த விக்கி “சரி நீ என்னவோ சொல்ல வந்தியே அதைச் சொல்லு முதலில்,” என்று விக்கி கேட்டான்.
“நேத்து நைட் ஆதி எனக்கு போன் பண்ணினான்டா…” என்றாள் துர்கா.
“ஆதி தானே போன் பண்ணினான்? என்னவோ. சீஃப் மினிஸ்டர் போன் பண்ண மாதிரி சொல்றே…” என்று விக்கி கிண்டல் செய்ய.
அவனை முறைத்த துர்கா வாயை மூடு என்பது போலத் தன் கையால் அவனுக்குத் தன் வாயைப் பொத்தி சைகை காட்டிய துர்கா.
“நான் சொல்ல வருவதை முதல்ல கேளுங்கடா ரெண்டு பேரும். இப்படியேப் பேசிட்டு இருந்தால்… நான் எழுந்து போயிடுவேன்,” என்று கோபித்துக் கொண்டுப் பெட்டில் எழுந்தவளைச் சோபாவில் இருந்து எழுந்து வந்த கதிர் பிடித்துக் கட்டிலில் அமர வைத்துவிட்டு அவனும் போய்ச் விக்கியின் மேல் தலை வைத்துப் படுத்துக்கொண்டான்.
“சொல்லு லக்ஷு நாங்க எதுவும் பேசலை,” என்ற கதிர் அவள் சொல்வதைத் தீவிரமாகக் கேட்க ஆரம்பித்தான்.
“நேத்து நைட் ஆதி எனக்கு போன் பண்ணி இருந்தான்டா… போன் பண்ணிட்டு…” என்று வெட்கப்பட்டவள் நடந்ததை எல்லாம் அவர்கள் இருவரிடமும் சொல்லி கடைசியில் அவன் மிஸ் யூ சொன்னதையும் சொல்ல…
கதிரும் விக்கியும் ஒருவரை ஒருவர் ஆச்சர்யமாகத் திரும்பிப் பார்த்துக் கொண்டு துர்காவைப் பார்க்க…
அவள் வெட்கப்படுவது போலத் தன் கைகளைப் பிசைந்து கொண்டு அமர்ந்திருந்து இருந்தால்.
“அப்போ நீ நாளைக்கு டென்மார்க் போனதும் போனதும் என் அண்ணனும் நீயும் காதல் ஜோடிங்க மாதிரி சுற்றித் திரியப் போறீங்க… அப்படித் தானே?” என்றான் கதிர்.
“இவங்க கூட நானும் இல்ல அங்கே இருப்பேன். நாம அன்னைக்கு எல்லாரும் கோவில் போன அப்போவே அத்தனை பேர் இருந்தும் இவங்க ரெண்டு பேரு ரொமான்ஸையும் தாங்க முடியலை. இப்போ வேற அங்க யாரும் இல்லையா… அப்பாவும் இன்னிக்கு வந்திடுவாரு… பிறகு வேற யாரு நாங்க ரெண்டு மூணு பேர் தானே… எங்களை எல்லாம் ஈஸியாச் சமாளிச்சுருவாங்க ரெண்டு பேரும்,” என்று துர்காவை ஓட்ட…
“டேய் அதெல்லாம் அப்புறம் பாக்கலாம். எனக்கு இப்போ டென்மார்க் வரவே பயமா இருக்குடா…. எப்படி நான் நேரில் ஆதியைப் பார்த்தும் பேசப் போறேனோ தெரியலை,” என்றாள் துர்கா.
“இது என்னடி லூசு லக்ஷு… வம்பா இருக்கு. இத்தனை நாள் அவனுக்கி உன்னோட லவ் தெரியலை… அவனுக்கு உன்னோட லவ் புரியனும்னு எல்லாம் சொல்லிட்டு இருக்கே… இப்போ ஆதியே வந்து மனசு திறந்து எல்லாம் சொன்ன பிறகு நீ அங்கப் போறதுக்கு யோசிக்குறது நல்லாவா இருக்கு?” என்ற விக்கி.
“ஒழுங்கா ஊருக்குக் கிளம்பு,” என்றவன், “வெண்ணெய் திரண்டு வரும் வேலையில் பானை உடைந்ததைப் போல… நீ எதுவும் செஞ்சு நாளைக்கு அதுனால உனக்கும் ஆதிக்கும் எதுவும் பிராப்ளம் வரப்போகுது. சரியா…” என்ற விக்கி.
“எல்லாம் நல்லாதாவே நடக்கும். நீ கவலைப் படாதே ஓகேவா… நான் தான் கல்யாணம் ஆகியும் சிங்கிளா சுத்துறேன். நீயாவது உன் புருஷன் கூடச் சேர்ந்து என்ஜாய் பண்ணு ஓகேவா?” என்றான் விக்கி.
“போங்கடா எனக்கு எதுவும் சப்போர்ட் பண்ற மாறி பேசுவீங்கன்னு இங்க வந்தா… நீங்க ஆதிக்கு தான் சப்போர்ட் பண்றீங்க,” என்று சலித்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.
இவ்வளவு நேரம் மூன்று பேரும் அப்படி என்ன பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று கேட்பதற்கு எவ்வளவோ முயன்றும் ஷிவுவால் இவர்கள் பேசுவது எதுவும் கேட்க முடியவில்லை.
துர்கா அறையை விட்டு வெளியே வந்ததும் விசாலாட்சி சமையல் அறையில் இருக்க… அவரைப் பார்க்க ஷிவுவைத் தாண்டிச் செல்ல.
துர்காவைப் பார்த்து முறைத்த… ஷிவு… “போடி போ…. இன்னும் எவ்வளவு நாளைக்கு உன்னோட ஆட்டம் எல்லாம் செல்லுபடி ஆகும்னு நானும் பாக்குறேன்,” என்று நினைத்துக் கொண்ட ஷிவு.
தன் மொபைலில் சற்று முன் தன் மொபைலில் துர்காவையும், விக்கியையும் எடுத்த ஃபோட்டோக்கலை எடுத்துப் பார்த்த ஷிவு… அதில் எந்த ஃபோட்டோவைப் பார்த்தால் துர்காவும், விக்கியும் நெருக்கமாக இருப்பது போலத் தோன்றுகிறதோ அதைத் தேர்வு செய்து சங்கவிக்கு அனுப்பினாள் ஷிவு.
