EPISODE 84
இரண்டு நாள் கல்லூரியில் பயிற்சி இருக்கிறது என்று அதையும் இதையும் சொல்லி டியூஷன் செல்லாமல் தப்பித்துக் கொண்டாள் ராதா.
ஆனால் அவள் அப்பா “படிப்பதை விட்டுவிட்டுத் தேவையில்லாத வேலைகளை எல்லாம் செய்துட்டு இருக்கே,” என்று சொல்லி அவளை டியூஷன் கொண்டு வந்து சந்தோஷின் வீட்டின் வாசலில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.
அவள் அப்பாவைத் திட்டிக் கொண்டே… கேட்டைத் திறந்து சாத்தி விட்டுச் சந்தோஷின் வீட்டிற்குள் செல்வதற்கு யோசித்துக் கொண்டே மெதுவாக நடந்து கொண்டு இருந்தாள்.
‘நான் எப்படி என் அப்பாகிட்டே சொல்லுவேன் இந்தக் பொறுக்கியோட டியூஷன்க்கு நான் வரமாட்டேன்னு சொல்லிட்டு. அவன் பார்வையே சரி இல்லை… எப்போ பார்த்தாலும் என் இருப்பு மேலேயே குறியாக இருக்கான். டியூஷன் வந்தாலும் இப்படி காலேஜ் போனாலும் இப்படிச் செய்கிறான் என்ன செய்வது இவனை வெச்சுக்கிட்டு, பொறுக்கி பொறுக்கி’ என்று முணுமுணுத்துக் கொண்டே வாசல் கதவருகே வர…
அப்போது திடமான ஒன்றின் மீது மோதி அப்படியே நின்றாள். வேறு யாருமில்லை ராதா கேட்டைத் திறந்து கொண்டு இருக்கையிலேயே வெளியே வாசல் கதவருகில் ராதாவை எதிர்பார்த்து வெளியே வந்தவன் இவள் அவனை கழுவி ஊற்றிக் கொண்டு வந்து கொண்டு இருப்பதை கதவில் சாய்ந்து கொண்டு கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
அவன் மேலே மோதிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள் “இப்படி வழியிலையா நிப்பீங்க?” என்று அவனை முறைத்தாள்.
“வழியில் யாரும் இருக்காங்களா இல்லையான்னு பார்த்து நீ வர வேண்டியது தானே…” என்றான் சந்தோஷ்.
“நான் பார்த்துத் தான் வந்தேன். நீங்க இப்படித் திடிர்னு வழியில் நின்னுட்டு இருப்பீங்கனு எனக்கு எப்படித் தெரியும்?” என்றாள் ராதா.
“நான் திடீர்னு ஒன்னும் வரலையே… நீ கேட்டைத் திறந்து உள்ளே வர அப்போ உன் அப்பாவைத் திட்டினதும்…. என்கிட்டே இருந்து எப்படி டா… டியூஷன் வராம தப்பிக்கணும்னு நினைச்சுட்டு என்னை வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு வந்ததையும் பார்த்துட்டுத் தான் நின்னுட்டு இருந்தேன்,” என்றான்.
அவன் இப்படித் தான் பேசியதை எல்லாம் சரியாகச் சொல்கிறானே என்று ஆச்சரியமாகக் கண்களை உருட்டி அவனைப் பார்க்க…
“என்ன நான் சரியா சொல்லிட்டேனா?” என்றான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் யாரையும் திட்டல. எங்க அப்பாவையும் திட்டல. உங்களையும் திட்டல,” என்றவள். “இப்போ நீங்க எனக்கு வழி விட போறீங்களா இல்லை இப்படியே வாசலில் நிற்கப் போறீங்களா?” என்றாள் ராதா.
“ஏன் இங்கே இவ்வளவு இடம் இருக்கு. இது வழியா உள்ளே போக மாட்டீங்களோ… நான் நகர்ந்தால் தான் உள்ளே போவீங்களா?” என்று சொல்ல…
அவன் அருகில் ஒரு ஆள் போகும் அளவு கூட இடம் இல்லாமல் இருக்க அதைப் பார்த்து… “இந்தச் சின்ன இடம் வழியா நான் உள்ளே போகணுமா…” என்று அவனைப் பார்க்க..
“ம்ம்… இதை வழியா போறதுன்னா போ…. இல்லைனா இங்கேயே நில்லு…” என்று அசையாமல் அப்படியே சந்தோஷ் நிற்க…
“எனக்கு ஒன்னும் இங்கேயே நிற்கணும்னு அவசியம் இல்லை,” என்றவள் திரும்பி ரோட்டை நோக்கி நடக்கப் போக… ‘சரியான ரோசாக்காரி தான் போல…’ என்று நினைத்தவன் வேகமாக அவள் பின்னால் வந்தவன் சுற்றிலும் ஒரு பார்வையைச் சுழல விட்டவன் அவள் அருகில் வேகமாக வந்து ராதாவின் இடுப்பில் தன் ஒற்றைக் கையை விட்டு அவளைத் தன்னோடு சேர்த்து இழுத்து அப்படியே தூக்கிக் கொண்டு உள்ளே வர….
அவன் இப்படி திடீர் என்று தன் இடுப்பில் கை கொடுத்துத் தூக்கியதும் அதிர்ந்துபோன ராதா… அவன் கைகளில் இருந்தவாரே அவனைத் திரும்பிப் பார்க்க… அழகாகக் குறும்பாகச் சிரித்துக் கொண்டே… ராதாவைத் தன் ஒற்றைக் கையைக் கொடுத்து அவள் வயிற்றோடு தூக்கித் தன்னோடு இறுக்கிப் பிடித்த உள்ளே தூக்கிப் போனவனை ரசித்தவள். பின் நினைவு வந்தவள் போலத் தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.
‘கொஞ்சமாவது அறிவு இருக்கா டி… உனக்கு…. நீ அவனைப் பயந்தாங்கொலின்னு சொன்ன ஒரே காரணத்துக்காக உன்னை வேணும்னே சீண்டிட்டு இருக்கான். அவனைப் போய்ப் வெட்கமில்லாமல் ரசிச்சுட்டு இருக்கே… அறிவுகெட்டவளே,’ என்று திட்டியவள். அவன் கையில் அடித்துத் தன்னை அவன் கையில் இருந்து விடுவித்துக் கொள்ளத் திமிர….
அதற்குள் அவன் வீட்டிற்குள் வந்து ராதாவை இறக்கி விட்டுவிட்டுக் கதவைச் சாற்றிவிட்டுத் திரும்ப… சந்தோஷின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்தாள்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காதவன் கோபத்துடன் அவளைப் பார்க்க… “உங்க மனசுல நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க… அன்று ஒரு நாள் ஆஃபீஸ் ரூம்ல உங்களைப் பயந்தாங்கொல்லின்னு சொன்ன ஒரே காரணத்தை மனசுல வெச்சுட்டு என்னை பழி வாங்குறதுக்காக என்கிட்டே இப்படி எல்லாம் நடந்துக்கறீங்களா…”
“என்னை பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது… நீங்க நெருக்கமா இருக்கப் பொண்ணுங்க மாதிரி என்னையும் நினைச்சுட்டீங்களா… என்ன பண்ணினாலும் நான் சும்மா இருப்பேன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா.”
“உங்களுக்கு யாரு இந்த உரிமையைக் கொடுத்தது என்னைத் தொட்டுத் தூக்கிட்டு வர… எனக்கு முத்தம் கொடுக்க…” என்று அவனை இன்னும் அவன் நோகும்படிக் கேள்விகள் கேட்க…
இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாதவன் “போதும் வாயை மூடு,” என்று சிங்கம் போலக் கர்ஜித்தவன். அவள் கழுத்தைப் பிடித்துச் சுவற்றில் அழுத்திக் பிடித்தவன் “என்னை பார்த்தாப் பொம்பளைப் பொறுக்கி மாதிரி தெரியுதா உனக்கு… நான் எத்தனை பெண்களுடன் இப்படி நெருக்கமாகப் பழகியதை நீ பார்த்த… சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் நீ பேசிட்டு இருக்கே…” என்றவன்.
“உன்னைத் தவிர இந்தக் கைகள் வேற எந்தப் பெண்ணையும் தொட்டதில்லை…. உன்னைத் தவிர நான் வேற யாருக்கும் இது வரை முத்தம் கொடுத்ததில்லை…. இனி கொடுக்கப் போவதும் இல்லை,” என்றவன் அவள் பிடியைத் தளர்த்தி அவளை விட்டவன்.
“உன்னை முதன் முதலில் காலேஜில் வைத்தேப் பார்த்ததுமே எனக்குப் பிடித்து இருந்து போய்விட்டது. என்னை நீ அன்று பேசியதை எல்லாம் நான் பெரியதாகவே எடுத்துக் கொள்ளவில்லை… இப்போது வரை நீ என்னை ராஸ்கல்…. பொறுக்கி….. என்று திட்டியது வரை நீ என்னை உரிமையோடு திட்டுவதாகத் தான் நான் நினைத்தேன். ஆனால் நிஜமாகவே நீ என்னைப் பெண்களின் பின்னால் சுற்றும் பொறுக்கியைப் போலவே நினைத்து இருக்கிறாய் என்று இப்போது தான் எனக்குப் புரிகிறது.”
“உன்னைப் பார்த்ததுமே எனக்குப் பிடித்துவிட்டது… இதை உன்னிடம் வாய்மொழியாகச் சொல்லாமல் என் காதலை உன்னிடம் செயலில் உணரச் செய்ய வேண்டும் என்று தான் நான் உன்னிடம் மிகவும் உரிமை எடுத்துக் கொண்டேன்.”
“ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது தான் எனக்குப் புரிகிறது,” என்றவன். ராதாவைத் திரும்பிப் பார்க்காமல் “உன்னிடம் நான் அத்து மீறியது தவறு தான். என்னை மன்னித்து விடு,” என்றவன் ஸ்டடி ரூமிற்குள் சென்றுவிட்டான்.
இவ்வளவு நேரம் சந்தோஷ் பேசியதைக் கேட்டதும் தான் நினைத்ததற்கு மாறாக அவன் தன்னை விரும்பி இருக்கிறான் என்று தெரிந்ததுமே உறைந்து போய் நின்றாள் ராதா…
அவன் தன் மீது வைத்து இருந்த காதலைச் சொல்லாமல் “என்னிடம் உணரச் செய்ய வேண்டும் என்று தான் இப்படி எல்லாம் நடந்து கொண்டேன்,” என்று சொன்னதும் ஏனோ அவளுள் அவன் இவளிடம் செய்த சேட்டைகள் எல்லாம் இத்தனை நாளாய் எரிச்சலை ஏற்படுத்தி இருந்தாலும் இப்போது அவன் சொன்ன வார்த்தைகள் அவளுள் சந்தோஷத்தை ஏற்படுத்தி இருந்தது.
அவளுள் ஏற்படும் மாறுதல்களை அவளால் உணர முடிந்தது. சந்தோஷ் குறித்து அவன் மேல் இருந்த எண்ணம் முற்றிலும் இப்போது மாறி இருந்தது… மனமெல்லாம் பட்டாம்பூச்சி சிறகடித்துப் பரப்பது போலத் தோன்றியது.
இப்போதே அவன் கைக்குள் தன்னை புதைத்துக்கொள்ளும் எண்ணம் தோன்ற சந்தோஷைக் காண எண்ணி ஸ்டடி ரூமிற்குள் சிரித்த முகமாக ராதா உள்ளே செல்ல…
ஆனால் அவனோ ராதாவைப் பார்க்காமல் அவள் உள்ளே வரும் சத்தம் கேட்டதும் அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் “கிளாஸ் ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று அவன் கடுமையாகப் பேச…
அவன் முகத்தைப் பார்த்தவாறே புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
கடுமையான மனநிலையில் இருந்த சந்தோஷினால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை… கோபம் தலைக்கு ஏற… தலைவலி வந்தது தான் மிச்சம்.
பாடம் நடத்த முடியாமல் தலை வின்னென்று இருக்க… புத்தகத்தைக் கீழே வைத்தவன் “டென் மினிட்ஸ்” என்று சொல்லிவிட்டு நேராக கிட்சன் வந்தவன் டீ போட்டுக்கொண்டு வந்து சற்று காற்று வாங்கினால் நன்றாக இருக்கும் என்று வெளியில் வந்து நின்று கொண்டு டீ குடித்துக்கொண்டு இருந்தான்.
வெளியே சென்றவன் இன்னும் வரவில்லையே என்று ஸ்டடி ரூமில் இருந்து வெளியே எட்டிப் பார்த்தவள் சந்தோஷைக் காணாமல் வெளியே வர அவன் வெளியில் அமைதியாக நின்று டீ குடித்துக் கொண்டு இருந்தான்.
‘என்னைத் தனியா விட்டுட்டு இங்க வந்து என்ன டா பண்றே’ என்று தனக்குத் தானே பேசிக்கொண்டு அவனிடம் வந்தவள் “டென் மினிட்ஸ்ன்னு சொல்லிட்டு வந்து இங்கக் காத்து வாங்கிட்டு இருக்கீங்க. டைம் வேஸ்ட் பண்ணாம வந்து எனக்குக் கிளாஸ் எடுக்கிறீங்களா சார்?” என்று அவனை வம்பிற்கு இழுக்க… அவள் பேசியதைக் கேட்டு “சாரி உங்க டைம்மை நான் வேஸ்ட் பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிருங்க,” என்றவன். “நீங்க போங்க நான் இப்போ வரேன்,” என்று ராதாவின் முகத்தைக் கூடப் பார்க்காமல் அவளைத் தாண்டி உள்ளே டீ கப்பைக் வைக்கப் போனான்.
அவன் தன்னிடம் முகம் கொடுத்துப் பேசாமல் சென்றது ராதாவிற்கு வருத்தமாகத் தான் இருந்தது.
‘நானும் கொஞ்சம் ஓவராத் தான் போயிட்டேன். என்னைப் பற்றின அவன் எண்ணத்தையே நான் ஒரு நொடியில் உடைத்து விட்டேன். இனி நான் தான் அதைச் சரி செய்ய வேண்டும்,’ என்று நினைத்தவள்.
“டேய் பொறுக்கி… இவ்வளவு நாளா என்னை நீ இம்சை பண்ணுனியே இனி நான் உன்னைப் படுத்துற இம்சையில் நீயே வந்து என்கிட்டே முன்ன மாதிரி பேசவே பாரு,” என்று சொல்லிக் கொண்டவள் உள்ளே சென்றால்.
துர்காவை ஏர்போர்ட்டில் பிக்கப் பண்ண ஆதியே நேரில் சென்றான்.
ஃபிளைட் செக் அவுட் பண்ணி விட்டு அனைவரும் வெளியே வர… ஆதியைக் காணும் ஆவலில் துர்காவின் கண்கள் அவனைத் தேடிக் கொண்டு ஆர்வமாக வந்து கொண்டு இருந்தவளைத் தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டு தான் இருந்தான் ஆதி.
முதலில் ஆதியைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டது விக்கி தான். அவனைப் பார்த்ததும் “ஆதி” என்று அழைத்துக் கை அசைக்க… ஆதிக்கும் விக்கியைப் பார்த்ததும் ஒரு நிமிடம் யோசித்தவன் பின் கையை ஆட்ட… இதைக் கவனித்த விக்கிக்கு ஏதோ சரி இல்லை என்று மட்டும் தோன்றியது.
லதாவும் விவேக்கும் ஆதியைக் கண்டு விஷ் செய்துவிட்டு நிற்க… துர்கா ஆதியைப் பார்த்து என்ன சொல்வது எப்படிப் பேசுவது என்று தயங்கிக் கொண்டு இருக்க… ஆதி துர்காவைப் பார்த்து “போகலாமா….” என்றவன் முன்னே நடக்க எதுவும் புரியாமல் துர்கா அவன் பின்னே சென்றாள்.
லதாவும் விவேக்கும் வேறு காரில் லகேஜ்களுடன் வர… ஆதியின் காரில் துர்காவும் ஆதியும் பின் சீட்டில் அமர்ந்து இருக்க… விக்கி டிரைவருக்கு அருகில் இருந்த சீட்டில் அமர்ந்து கொண்டான்.
கார் ஏறியதில் இருந்து விக்கி ஆதி இல்லாத போது ஊரில் நடந்தது… ஆஃபீஸில் நடந்த விஷயங்கள் ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டு வர… ஆதி “ம்ம்ம்…” என்று மட்டும் சொல்லிக்கொண்டு வந்தான். பதிலுக்கு ஒரு வார்த்தை கூடச் சரியாகப் பேசவில்லை.
ஆதி சரியாகப் பேசவில்லை என்பதை உணர்ந்த விக்கி அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமர்ந்துவிட்டான்.
விக்கி அமைதியாக வருவதைக் கவனித்த துர்காவிற்கு இவர்கள் இருவருக்கும் இடையில் அமர்ந்து கொண்டு எதுவும் செய்ய முடியாமல் இருந்தாள்.
ஆதியின் மாளிகை வந்ததும் காரை விட்டு இறங்கிய மூவரும் உள்ளே செல்ல…. துர்காவும் விக்கியும் அவன் வீட்டை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவர்கள் ஹாலில் நடுநாயகமாகச் சங்கவி அமர்ந்து இருக்க அவளை இங்குப் பார்த்ததும் இருவருக்குமே அதிர்ச்சி தான்.
அவளைக் கேள்வியாகப் பார்த்துக் கொண்டு உள்ளே வந்த இருவரையும் “வா துர்கா… வா விக்கி…” என்று என்னவோ இவள் வீட்டிற்கு இவர்கள் எல்லாம் வந்திருப்பது போல வரவேற்றவள். ஆதியைப் பார்த்து “ஆதி நான் ரெடி. நீ எப்போச் சொல்றியோ நாம ஸ்விட்சர்லாந்து கிளம்பலாம்,” என்று சொல்லி அவன் அருகில் மிகவும் சாதாரணமாகப் பேசிக்கொண்டு வந்து நின்றாள்.
ஆதி ஸ்விட்சர்லாந்து செல்கிறான் என்று அனைவர்க்கும் தெரியும் ஆனால் சங்கவியுடன் செல்வான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
ஆதி சங்கவியைப் பார்த்து “சரி போலாம்,” என்றவன் “எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. அதை நான் முடிச்சுட்டு வரேன். அதன் பிறகு போகலாம்,” என்றவன் சங்கவியிடம் சாதாரணமாகப் பேசிக்கொண்டு வந்தவன் நேராக விக்கியிடம் வர… விக்கி ஆதியைக் கேள்வியாகப் பார்த்துவிட்டு “ஆதி” என்று தான் அழைத்து இருப்பான் முழுதாக ஆதியின் பெயரைச் சொல்லி இருக்க மாட்டான் அதற்குள் ஆதி விக்கியின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்தான் ஆதி.
ஆதியும் விக்கியும் நெருங்கிய தோழர்கள் என்று அனைவருக்குமே தெரியும் அப்படி இருக்க அவனிடம் இதுவரை கடிந்து கூடப் பேசாத ஆதி இப்போது இத்தனை பேர் முன்னிலையில் அறைந்ததை ஒருவராலும் நம்ப முடியவில்லை… லதாவும் விவேக்கும் அப்போது தான் உள்ளே வந்தார்கள் அவர்களுக்கும் கூட இந்தக் காட்சி அதிர்ச்சியைத் தான் அளித்து இருந்தது.
விக்கியை ஆதி அடித்ததை நம்ப முடியாமல் நின்று இருந்த துர்கா ஆதி மறுமுறை விக்கியை அறையக் கையை ஓங்க…. அதைப் பார்த்த வேகமாக ஆதியின் அருகில் வந்த துர்கா அவன் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தியவள் “ஆதி என்ன பண்றே? இப்போ எதுக்கு நீ விக்கியை அடிச்சே?” என்றாள் கோபமாக.
இவர்கள் மூவரையும் பார்த்து சங்கவிக்குச் சந்தோஷம்… “ஏன் உன் நெருங்கிய நண்பனை அடிச்சதும் உனக்குக் கோபம் வருதோ?” என்று ஆதி கேட்க…
“என்ன ஆதி இப்படி கேக்குற? விக்கி உனக்கும் தான் நெருங்கிய நண்பன்,” என்றாள் துர்கா.
“அதற்கு நான் ஊரில் இருந்த வரை எனக்கு நெருக்கமாக இருந்தான். நான் இங்கே வந்ததும் என்னை விட என் நண்பன் உன்கிட்டே தானே நெருக்கமா இருக்கான்,” என்று ஆதி சொல்ல…
அவன் பேசியதைக் கேட்டு துர்காவும் விக்கியும் புரியாமல் இருவரையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள…
“என்ன பாக்குறீங்க? புரியலையா… அவன் என்னை விட இப்போ உனக்குத் தானே நெருங்கிய நண்பன் ஆகிவிட்டான்,” என்றவன் “நீங்கள் இருவரும் சேர்ந்து செய்யும் காரியம் எதுவும் எனக்குத் தெரியாது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா….” என்றான் ஆதி.
விக்கி உடனே… “ஆதி நான்,” என்று கூற வர… “நீ எதுவும் என்கிட்டே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை விக்கி… என்கிட்ட எல்லா ஆதாரமும் இருக்கு. நான் இல்லாத அப்போ நீங்க என்ன என்ன பண்ணுனீங்கன்னு ஃபோட்டோவோட ஆதாரம் இருக்கு,” என்று சொன்னவன்.
மறுபடியும் விக்கியை அடிக்க…. துர்காவிற்கு ஆதியின் மீது அதீத கோபம் வந்து விட்டது. காரணம் எதுவுமே சொல்லாமல் இப்படி வந்ததும் வராததுமாய் அதுவும் இத்தனை பேர் முன்னிலையில் விக்கியை அறைந்ததை துர்காவால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
ஆதிக்கு விக்கி யாருமற்றவன் என்று தெரிந்ததில் இருந்து கதிரை விடவும் விக்கியின் மீது தான் அதீத உரிமையும் பாசமும் வைத்திருக்கிறான் என்று துர்காவிற்கு நன்றாகவே தெரியும்.
விக்கியின் முகம் சிறிது சுணங்கினாலும் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அப்படி இருக்க இன்று ஆதி செய்தது துர்காவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
துர்கா ஆதியிடம் கோபமாக “எதற்காக இப்போ நீ விக்கியை அடிக்கிறே ஆதி. அப்படி என்ன தப்பு செஞ்சான் விக்கி… எதுவாக இருந்தாலும் வாயைத் திறந்து சொல்லிப் பழகு. இப்படி எதுவுமே சொல்லாமல். அவனை அடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?” என்று துர்கா ஆதியிடம் சண்டையிட..
இவ்வளவு நாள் தன்னிடம் குரலை உயர்த்திப் பேசாதவள்…. தன்னைக் கொஞ்சம் கூடக் கருத்தில் கொள்ளாமல் விக்கியை அடித்தேன் என்ற ஒரே காரணத்திற்காக துர்கா இப்போது என்னிடம் சண்டைக்கு நிற்கிறாளே என்று அவளைக் கோபத்துடன் பார்த்த ஆதி.
“அப்போ நான் காரணம் என்னன்னு சொல்லிட்டால்… விக்கியை நான் அடிப்பதைக் நீ தடுக்க மாட்டே அப்படிதானே?” என்றான் ஆதி.
“காரணம் எதுவாகவே இருந்தாலும் நீ விக்கியை அடிப்பதற்கு நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன் ஆதி,” என்றாள் துர்கா உறுதியாக.
உடனே விக்கி இவர்களுக்கு இடையில் புகுந்தவன் “என்னால நீங்க ரெண்டு பேரும் தேவையில்லாமல் சண்டை போட வேண்டாம்,” என்றவன் ஆதியிடம் திரும்பி… “டேய் ஆதி. நீ இன்னும் என்னை எத்தனை அடி வேண்டுமானாலும் அடிச்சுக்கோ உனக்கு அந்த உரிமை இருக்கிறது. ஆனால் என்னை என்ன காரணத்திற்காக நீ அடிக்கிறாய் என்று எனக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.”
“ஆனால் எதற்காக நான் உன்னிடம் அடி வாங்குகிறேன் என்று தெரிந்துகொள்ளும் உரிமை எனக்கு இருக்கிறது அல்லவா…” என்றவன்.
“நான் ஏதோ தப்பு செஞ்சுட்டேன். என்னிடம் ஆதாரம் இருக்கு என்று நீ சொன்னாய் அல்லவா… அதை என்னிடம் காட்டு. அதைக் காட்டி நான் தப்பு செய்திருக்கிறேன் என்று நிரூபணம் ஆனால் இத்தனை பேர் முன்னிலையில் என்ன இந்த ஊரே பார்க்கும் படி என்னை அடிக்கும் எல்லா உரிமையும் உனக்கு இருக்கிறது,” என்றான் விக்கி.
விக்கி இப்படிச் சொன்னதும் ‘தன் மீது எந்தத் தவறும் இருக்காது’ என்ற நம்பிக்கையில் “ஆம்…” என்று தீர்க்கமாகத் தலையை ஆட்டினான் விக்கி.
“சரி உன்னிடம் நான் ஆதாரத்தைக் காட்டி நிரூபித்தால் நான் உன்னை அடித்தாலும் இல்லை வேறு என்ன செய்தாலும் நீ அமைதியாக இருப்பாய் அப்படிதானே…” என்றான் ஆதி.
“சரி,” என்றவன் தன் பாக்கெட்டில் இருந்து தன் போனை ஆன் செய்து அதில் இருந்த ஃபோட்டோவை எடுத்து விக்கியின் முகத்திற்கு நேராக நீட்டி “இதைப் பார்த்துவிட்டுச் சொல். எனக்குத் தெரியாமல் இதை நீ செய்தது உண்மைதானா?” என்று கேட்க…
விக்கி அந்தப் ஃபோட்டோவைப் பார்த்ததும் உறைந்து போய்…. ஆதியைப் பார்த்து “க… ஆதி…. இது…. இந்த… ஃபோட்டோ… யார் எடுத்தது…. இது… இது…” என்று பேய் அறைந்தவன் போல விக்கி ஆதியைப் பார்க்க.
“ம்ம்ம்…. சொல்லு விக்கி. இந்தப் ஃபோட்டோவில் இருப்பது நீதானே?” என்று கேட்டான் ஆதி. “அது வந்து…” என்று விக்கி பேச வர… “நான் கேட்டதற்கு மட்டும் பதில் சொன்னால் போதும். தேவையில்லாமல் என் நேரத்தை வீண் அடிக்காதே,” என்றான் ஆதி.
விக்கி அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேச முடியாமல் “ஆம்” என்று தலையை ஆட்ட…
துர்கா ஆதியிடம் “ஆதி அந்தக் ஆதாரத்தை நானும் பார்க்கலாமா… நீங்கள் இருவர் மட்டும் பார்த்துவிட்டு உங்களுக்குள்ளேயே சரி தப்பு என்று நீங்களே முடிவெடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் என்னையும் சேர்த்து அல்லவா நீ விக்கிக்குச் சாதாரணமாகப் பேசுகிறேன்னு குற்றம் சொன்னே.”
“அப்போ எனக்கும் இது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது,” என்று துர்கா சொல்ல…
அதை கேட்ட ஆதி “அப்படியா… அப்போ நீயே என்னிடம் ஆதாரம் கேட்கும்போது நான் உன்னிடம் இதைக் காட்டியே ஆக வேண்டும்,” என்று சொன்னவன். அவள் முன்பு தன் போனில் இருந்த ஃபோட்டோவைக் காட்டி “இந்தப் ஃபோட்டோவில் இருப்பது நீயும் விக்கியும் தானே?” என்றான்.
அவன் காட்டிய ஃபோட்டோவைப் பார்த்ததும் துர்கா அப்படியே உறைந்து போய் நின்றாள். அவளைப் பார்த்து “என்ன இவ்வளவு நேரம் உன்னோட நெருங்கிய நண்பனுக்காக என்னை எதிர்த்துப் பேசினே… இப்போ நீயே விக்கியும் இந்தப் ஃபோட்டோவில் இருப்பதை காட்டியதும் அப்படியே ஃப்ரீஸ் ஆகி நின்னுட்டே…” என்றவன்
துர்காவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் அறைக்கு இழுத்துச் செல்ல… “டேய் ஆதி துர்காவுக்கும் இதுக்கும்….” என்று விக்கி சொல்ல வர… அவனைத் திரும்பி ஒரு பார்வை தான் பார்த்தான் ஆதி. அதற்கு மேல் எதுவும் பேசாமல் விக்கி அமைதியாகிவிட…
இவர்கள் மூவருக்குள்ளும் எழுந்த வாக்குவாதங்களையும் விரிசல்களையும் பார்த்த சங்கவிக்கு இந்தச் சந்தோஷத்தை யாரிடமாவது சொல்லியே ஆக வேண்டும் என்று ஆவலை அடக்க முடியாமல் நின்று இருந்தாள்.
‘நான் காண்பித்த ஃபோட்டோ ஒருநாள் பெரிய பிரச்னையை உண்டு பண்ணும் என்று எனக்குத் தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதுவும் இப்படி பூதாகரமாக வெடிக்கும் என்று அவள் நினைக்கவே இல்லை.’
தான் நினைத்தது போலவே ஆதிக்கும் துர்காவுக்கும் இடையில் விரிசல் வந்துவிட்டது என்று உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டாள் சங்கவி.
துர்காவை இழுத்துக் கொண்டு அவன் அறைக்கு உள்ளேத் தாளிட்டவன். அவள் அவன் தள்ளிய வேகத்தில் போய்ப் மெத்தையில் பொத்தேன்று விழுந்தாள்.
துர்காவின் அருகில் வந்தவன் அவள் கை பிடித்துத் தூக்கி நிறுத்தியவன் தன் கையில் இருந்த ஃபோட்டோவைக் காட்டி “சொல்லு இதுக்கு எல்லாம் யார் காரணம் சொல்லு,” என்று தன் மாஸ்கைக் கழட்டி விட்டு அவள் முகத்தருகில் தன் முகத்தைக் கொண்டு வந்து ஆதி கேட்க..
துர்கா இவ்வளவு கோபமாக ஆதியைப் இதுவரை துர்கா பார்த்ததே இல்லை… அவனை இவ்வளவு கோபமாகப் பார்த்ததால் உடல் நடுங்க அவனையேப் பார்த்த துர்காவிற்குப் பேச வார்த்தைகளே வர வில்லை…
அவள் எதுவும் பேசாமல் நிற்பதைப் பார்த்தவன் “சொல்லு துர்கா. இவ்வளவு நாள் நீ, நான், விக்கி மூவரும் நல்ல நண்பர்களாகத் தானே இருந்தோம்.”
“அப்படி இருக்க உங்கள் இருவருக்கும் எனக்குத் துரோகம் செய்ய எப்படி மனது வந்தது…..” என்று மிகவும் வருந்திய குரலில் ஆதி கேட்க.. துர்காவால் அவனுக்குப் பதிலே சொல்ல முடியாமல் அப்படியே உறைந்து போய் நின்று இருந்தாள்.
