EPISODE 10
வீரா பூவிழியை வீட்டு வாசலில் இறக்கிவிட்டு, “பொறுக்கி என்ன செய்வான்னு நைட் வந்து காட்டுறேன், அதுவரை ரெஸ்ட் எடுத்துக்கோ” என்றவன், தான் அமர்ந்திருந்த சீட்டின் பெல்ட்டைக் கழட்டிவிட்டு, காரில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த பூவிழியிடம் வாங்கி வந்தான்.
அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பி, அவள் கீழ் உதட்டில் முத்தமிட்டு, லேசாகத் தன் பற்களுக்கு இடையில் வைத்துக் கசக்கியவன், அவளை விட்டுத் தள்ளி அமர்ந்து பூவிழியைப் பார்த்தான்.
அவன் முத்தம் கொடுத்த உதட்டை அழுத்தித் துடைத்த பூவிழி, அவனை முறைத்துக்கொண்டே, “இங்கே பாருடா, இனிமேல் இந்த மாதிரி முத்தம் கொடுக்கிறது, கட்டிப்பிடிக்கிறது, என் பக்கத்துல வர்ற வேலை எல்லாம் வெச்சுக்காத. எனக்கு இது சுத்தமாப் பிடிக்கல. அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்றாள் பூவிழி.
“போ, என்னடி பண்ணுவ? அப்படித்தான் முத்தம் கொடுப்பேன்” என்று மீண்டும் அவள் அருகில் நெருங்கி வீரா வர, அவன் மார்பில் கை வைத்துத் தன்னிடம் வராமல் அவனைத் தடுத்தவள், “மறுபடியும் என்கிட்ட இந்த மாதிரி எதுவும் அத்துமீறினா… நான் போய் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பேன், என் விருப்பம் இல்லாம நீ என்னைத் தொடறேன்னு சொல்லி” என்றாள் பூவிழி.
“வரியா? வா. நானே உன்னை இப்போ ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போறேன். என் மேல ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடு. யாரு உன் கம்ப்ளைன்ட் எடுத்துக்கிறாங்கன்னு பார்க்கலாம்” என்றான் வீரா.
“ஏன்? நான் கம்ப்ளைன்ட் கொடுத்தால் யாரும் எடுத்துக்க மாட்டாங்களா? அப்படி ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் எடுத்துக்கலைன்னா நான் கமிஷனர் ஆபீஸ் போவேன். அங்கே போய் கம்ப்ளைன்ட் கொடுப்பேன்” என்றாள்.
“கமிஷனர் ஆபீஸ்க்குத்தானே? போ போ… அங்கே இன்னைக்குத்தான் என் தம்பி அர்ஜுன் அசிஸ்டன்ட் கமிஷனரா ஜாயின் பண்ணி இருக்கான்” என்றவன், “நீ கமிஷனர் ஆபீஸ்க்குப் போய் கேஸ் கொடுத்தா, முதல்ல அவன் கிட்டதான் இந்த கேஸ் போகும். அவன் என் பேரு பார்த்துட்டு நீ யார்கிட்ட போய் கம்ப்ளைன்ட் கொடுத்த?” என்றான் நக்கலாக.
முறைத்துக்கொண்டு பூவிழி அமர்ந்திருக்க, அவள் கன்னத்தைக் கிள்ளிவிட்டு, “ரொம்ப முறைக்காத. கண்ணு வெளியே வந்துட போகுது. போய் நல்லா ரெஸ்ட் எடு. நைட் வந்து நான் உன்னை கவனித்து கொள்கிறேன்” என்றுவிட்டு ஆபீஸ்க்கு கிளம்பினான் வீரா.
காரில் இருந்து இறங்கிய பூவிழி, வீராவைத் திட்டிக்கொண்டே வீட்டிற்குள் வந்தவள் நேராகத் தன் அறைக்குச் சென்று கதவைச் சாற்றிக்கொண்டாள்.
மாலை தேவகி, செண்பகமும் தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தனர்.
பூவிழி தன் அறையிலேயே வந்ததிலிருந்து இருந்தாள். வெளியே வந்து யாரிடமும் பேசவில்லை. அவர்களும் பூவிழியைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட… ரசிகாவை அவள் அறைக்கு வரச் சொல்லி ரசிகாவுடன் பேசிக்கொண்டிருந்தாள் பூவிழி.
“என்னடி, என்ன வரச் சொல்லிட்டு நீ ஏதோ ரொம்பச் சின்சியரா யோசிச்சிட்டு இருக்க? ஏன், என்ன ஆச்சு?” என்று கேட்டாள் ரசிகா.
“அதை ஏன்டி கேட்குற? இந்த மச்சி இருக்கானே, அவன் பண்றது கொஞ்சம் கூடச் சரியில்லை. அவன் என்கிட்ட பேசறது, நடந்துகிறது எதுவுமே சரி இல்லடி” என்றாள் பூவிழி.
“ஏண்டி, அன்னைக்கு நீ கேட்டுக்கிட்டதனால உன்னை கல்யாணம் பண்ணிட்டு வந்தான். அதுக்கப்புறம் உன்னைப் பிடிக்கலைன்னு எதுவும் சொல்லி உன்கிட்ட கோபமா நடந்துகுறானா?” என்று கேட்டாள் ரசிகா.
“அப்படி கோபமா நடந்திருந்தாகூட நான் சந்தோஷப்பட்டு இருப்பேனே… ஆனா, அவன் செஞ்ச காரியத்தை எல்லாம் சொன்னா நீ நம்ப மாட்ட” என்று ரசிகாவைப் பார்த்தாள் பூவிழி.
“அப்படி என்னடி பண்ணிட்டான் அவன்? சொல்லு நானும் கேட்கிறேன்” என்று பூவிழி என்ன சொல்லப் போகிறாய் என்று அவளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் ரசிகா.
“ஒரு நிமிஷம் இருடி. அவன் இங்கே எங்காவது இருந்தாலும் ஆச்சரியத்துக்கு இல்லை. என்ன பண்ணணும்னு சொல்ல வந்தேன்னா அடுத்து அவன் என்ன பண்ணுவான்னு எனக்குத்தான் தெரியும்” என்று எழுந்தவள், வேகமாகத் தன் அறைக்கு வெளியே வந்து சுற்றிலும் வீரா எங்காவது இருக்கிறானா என ஒருமுறை நோட்டம் பார்த்துவிட்டு, உள்ளே வந்து கதவடைத்தவள் நேராக வந்து ரசிகாவின் அருகில் அமர்ந்தாள்.
அவள் பேசுவதையும் நடந்துகொள்வதையும் வித்தியாசமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்த ரசிகா, “என்னடி, பில்டப் எல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு. என்னன்னு சீக்கிரம் சொல்லு” என்றாள்.
“அதுவா” என ஆரம்பித்து, வீரா, பூவிழி முதலிரவு அன்று நடந்தது முதல், இன்று காலை காபி ஷாப்பில் வைத்து அனைவரும் முன்னிலையிலும் தன் வாயைக் கவ்வினது வரை ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள் பூவிழி.
அவள் சொல்வதைக் கேட்டு முதலில் வாயைப் பிளந்த ரசிகா, பின்பு இன்று காலை காபி ஷாப்பில் நடந்ததை எல்லாம் சொல்லும்போது அவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. முதலில் பூவிழி சங்கடப்படுவாள் என்று சிரிப்பதைத் தவிர்க்க எண்ணினாள். பிறகு வீரா பூவிழியைப் பேசவிடாமல் மீண்டும் மீண்டும் அவள் உதட்டில் முத்தம் கொடுத்தது, வீட்டிற்குத் தனியாக வருகிறேன் என்று சொல்லியும் கேட்காமல் தன்னைத் தூக்கிப்போட்டு காரில் வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டது வரை அவள் சொல்லி முடிக்க…
தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு ரசிகா மெத்தையில் உருண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
அவள் அருகில் அமர்ந்திருந்த பூவிழி, கட்டிலில் இருந்து எழுந்து ரசிகா சிரிப்பதை கடுப்போடு பார்த்தபடி நின்று இருந்தாள்.
“ஐயோ பூவிழி, என்னால நீ சொன்னதை எல்லாம் கேட்டுட்டுச் சிரிப்பைக் கண்ட்ரோல் பண்ணவே முடியலடி. அவன் இந்த அளவுக்கு உன்கிட்ட க்ளோஸா நடந்துகுறானா? என்னால நம்பவே முடியல… நீயும் அவனும் ஃப்ரெண்ட்ஸுனுதான் நான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, அவன் அதுக்கு மேல ஒரு படி போய் உன்னை இவ்வளவு வருஷமா லவ் பண்ணிட்டு இருக்கான். அதுவும் உனக்குத் தெரியாமலேயே! அதையெல்லாம் மனசுல வெச்சுட்டுப் பிளான் பண்ணி உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டானா?” என்று சொன்னவள் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள்.
கட்டிலில் உருண்டுகொண்டிருந்தவளின் கையைப் பிடித்து இழுத்த பூவிழி, அவளைக் கட்டிலில் அமர வைத்து, இரண்டு கைகளையும் இருக்கப் பிடித்துக்கொண்டவள், “ஏண்டி சிரிக்கிற? உனக்குச் சந்தோஷமா இருக்கா? அவன் என்னென்ன டார்ச்சர் பண்றான் தெரியுமா? என்னைப் போகும்போது, வரும்போது என்ன சீண்டி பார்க்குறதும், இங்கே தொடறது அங்கே தொடறதும்… அவன் பண்ற டார்ச்சர் தாங்கவே முடியல எனக்கு. அவனைப் பார்த்தாலே வயிறு பத்திக்கிட்டு எரியுது. உனக்கு இங்கே குளுகுளுன்னு இருக்கோ? நான் சொன்னதை எல்லாம் கேட்டு எப்படி சிரிக்கிற நீ?” என்று ரசிகாவின் இரண்டு கைகளையும் முறுக்கிப் பிடித்தவள், அவளுக்குக் கிச்சு கிச்சு மூட்ட ஆரம்பித்தாள்.
“ஏய், ஏய் பூவிழி, என்னடி பண்ற? பேசாம இருடி. விடுடி என்னை. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. கையை எடுடி” என்று பூவிழியின் கைக்குள் இருந்த தன் கையைப் பிரிக்க ரசிகா முயற்சிக்க, அவளை விடாமல் இறுக்கிப் பிடித்தவள், மற்றொரு கையால் தொடர்ந்து ரசிகாவிற்கு கிச்சு கிச்சு மூட்ட, அவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. சிரித்துச் சிரித்து ரசிகாவின் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.
“நான் சொன்னதை எல்லாம் கேட்டு, நான் கஷ்டப்படுறது எல்லாம் கேட்டு நீ ரொம்பச் சந்தோஷப்படுற இல்ல? உறுதியா இருடி, உனக்கும் ஒருத்தன் இந்த மாதிரி வந்து மாட்டுவான். அப்போ தெரியும் என்னோட நிலைமை உனக்கு” என்றாள் பூவிழி.
“ஏய், போதும் கைய விடுடி” என்று அவள் கையிலிருந்தே தன் கையை வேகமாக உதறிய ரசிகா, கட்டிலில் இருந்து எழுந்து பூவிழியை விட்டுத் தள்ளி நின்றவள், “எனக்கெல்லாம் இப்படி ஒரு புருஷன் கிடைச்சான்னு வெச்சுக்கோ, ‘என்ன, என்ன வேணும் பண்ணிக்கடா’ன்னு பேசாம அவன் சொன்னதை எல்லாம் கேட்டுட்டு இருப்பேன். உன்னை மாதிரியே ரொம்ப ஓவராப் பிகு பண்ணிக்கிட்டு திரியிற… உங்க அம்மாவைப் பார்த்து வெச்சாலும், வீரா மாதிரி ஒரு நல்ல பையன் கிடைக்க மாட்டான். கொஞ்சம் முரட்டு மாதிரி இருக்கானே ஒழிய, அவன் நல்ல பையனாத்தான்டி தெரியுறான். நீயும் கொஞ்சம் அவன் சொன்ன மாதிரி மனசை மாத்திக்கிட்டு, அவன் கூட ஒண்ணாச் சேர்ந்து வாழ ட்ரை பண்ணிப் பாரு” என்றாள் ரசிகா.
“என்னடி? ஆளாளுக்கு விளையாடுறீங்களா என்ன? பார்த்தா உங்களுக்கெல்லாம் எப்படித் தெரியுது? எப்படி அவன்கிட்ட இத்தனை வருஷமா ஃப்ரெண்டா பழகிட்டு திடீர்னு அவனை என் புருஷனாப் பார்க்க முடியும்? என்னால் அதெல்லாம் முடியாது. நான் சீக்கிரமே அவன்கிட்ட பேசி டைவர்ஸ் வாங்குறேனா இல்லையா பாரு” என்றாள் பூவிழி.
“சரி, டைவர்ஸ் வாங்கிட்டு என்ன பண்ணப் போற?” என்றாள் ரசிகா.
பூவிழி எதுவும் பேசாமல் ரசிகாவைப் பார்க்க…
“என்னடி பார்க்குற? நான் கேட்டதுக்கு பதில் இல்லையா உன்கிட்ட? உனக்குக் கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறந்த பிறகுதான், உனக்குச் சேர வேண்டிய எல்லா சொத்தும் உன் கைக்கு வந்து சேரும்னு உன் அப்பா உயில் எழுதி வெச்சுட்டு இறந்து போயிட்டாரு. அந்த விஷயத்தை இத்தனை வருஷமா உங்களுக்குத் தெரியாமலேயே உன்னோட மாமா ஃபேமிலி மறைச்சி வெச்சிருந்தாங்க. எப்போ உனக்கு அந்த விஷயம் தெரிய வந்திச்சோ, அன்னைக்கே அவங்களுக்குத் தெரிஞ்ச பையனா, அவங்க சொன்ன பேச்சை மட்டும் கேட்குற பையனைப் பார்த்து உனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சு, அவன் மூலியமா நீ குழந்தை பெத்துக்கிட்டதுக்கு அப்புறம் உன்கிட்ட இருந்து அந்தச் சொத்தையெல்லாம் எழுதி வாங்கலாம்னுதானே பிளான் பண்ணி, அந்த வீணாப்போன முகிலனை உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சாங்க? நான் ஒரு பேச்சுக்குச் சொல்றேன் கேட்டுக்க. நீ அந்த முகிலனை அந்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் பண்ணி இருந்தா இந்த நேரம் வரைக்கும் அவன் உன்னை ஒன்னும் பண்ணாம சும்மா விட்டு வெச்சிருப்பானு நினைச்சியா?” என்றாள் ரசிகா.
ரசிகா சொன்னதை யோசித்த பூவிழி, “ஆமாம்” என்பது போல தலையாட்டினாள்.
“அவனோட குறிக்கோள் என்ன? உன்னைக் கல்யாணம் பண்ணி உனக்குப் புள்ளை கொடுக்கிறதுதான். அப்போ அந்த வேலையைத்தானே அவன் பார்த்திருப்பான்? எவ்வளவு சீக்கிரம் நீ கர்ப்பமாகி குழந்தை பிறக்கப் போகிறாயோ, அவ்வளவு சீக்கிரம் அவனுக்கும் உன் மாமா வீட்டுக்கும் லாபம். அப்படி இருந்தவங்க கிட்ட இருந்து தப்பிக்க நினைச்சுத்தானே நீ பிளான் பண்ணி வீராவைக் கல்யாணம் பண்ணினே?” என்றாள் ரசிகா.
“நான் என்னடி கேட்டேன்? நீதானே அவனுக்கு மெசேஜ் பண்ணுன?” என்றாள் பூவிழி.
“சரிடி, நானே மெசேஜ் பண்ணினதா இருக்கட்டும். ஆனால், அவன் நீ அனுப்பினேன்னு நினைச்சு, நீ கேட்டதற்காகத்தானே கல்யாணத்துக்குச் சம்மதித்தான்?” என்றாள் ரசிகா.
“நான் கேட்காம இருந்தாலும் அவன் எப்படியோ என்னைக் கல்யாணம் பண்ணிக்க பண்ணிட்டுப் போகத்தான் மண்டபத்துக்கே வந்திருக்கான். அது தெரியுமா உனக்கு?” என்றாள் பூவிழி.
“சரிடி, நீ சொன்ன மாதிரியே இருக்கட்டும். அவன் உன்னை எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கணும், இல்லை உன்னைத் தூக்கிட்டுப் போறதுக்காவது மண்டபத்துக்கு வந்திருப்பான் வெச்சுக்குவோம். ஆனா, இன்னும் வரைக்கும் அவன் உன்கிட்ட அத்துமீறி நடந்துகிட்டனா?” என்றாள் ரசிகா.
“ஆமாம்” என்று யோசிக்காமல் பூவிழி தலையாட்ட…
“உன்னைக் கட்டிப் பிடிச்சுக்கிறதும், முத்தம் கொடுக்கிறதும், வேணும்னே உன் சேலையைக் கழட்டி எறிஞ்சுட்டு உன்னைக் கட்டிப் பிடிச்சுட்டுப் படுத்துக்கிறது இதெல்லாம் அத்துமீறல் இல்ல. அவனோட காதலை, அன்பை உன்கிட்ட எப்படி காட்டுறதுன்னு தெரியாமல் அந்த மாதிரி நடந்துகுறான். ஆனா, அதுக்கு மீறி அவன் உன்னிடம் தப்பா எதுவும் நடந்திருக்கானா? உன்னைத் தப்பா எதுவும் செஞ்சானா?” எனக் கேட்டாள் ரசிகா.
பூவிழி ‘இல்லை’ என்று தலையை இடவலமாக ஆட்ட, “அப்போ யோசிச்சுக்கோ. அந்த முகிலன் கல்யாணம் பண்ணி இருந்தா உன்னோட நிலைமை எப்படி இருந்திருக்கும்? அதுவே நீ வீராவைக் கல்யாணம் பண்ணி இருக்க, அவங்க உன்னை எப்படி வெச்சிருக்கான்? அதை மட்டும் யோசி. உன் மாமா உன்மேல கேஸ் போட்டுட்டாருங்கிற ஒரே காரணத்துக்காக அவங்களைப் பழிவாங்கணும்னு ஏதோ காரியம் செய்யப் போறான்னு நீதானே சொன்ன? அப்போ யோசிச்சுப் பார். உனக்குப் ஃபேவரா, உனக்கு என்ன வேணுமோ, உன்னை எப்படிப் பார்த்துக்கணும், அதுக்குத் தகுந்த மாதிரிதான் யோசிச்சு நடந்துகுறான். நீயும் கொஞ்சம் அவனைப் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு. உடனே அவனை உன் புருஷனா ஏத்துக்க சொல்லியோ, காதலனா பார்க்க சொல்லியோ நான் சொல்லல. முதல்ல நீ எப்படி யோசிச்ச? ஃப்ரெண்டுதானே? ஃப்ரெண்டாவே அவன்கிட்ட பேசிப் பழகு. போக போக, யார் கண்டது, உனக்கு அவனைப் பிடிக்க ஆரம்பிக்கலாம். அப்படி பிடிக்கும்போது நீ அவன் கூடச் சேர்ந்து வாழ ஆரம்பிச்சுக்கோ. அதுவரைக்கும் அவன் உன்னை எதுவும் செய்ய மாட்டான்” என்றாள்.
பூவிழி ரசிகா சொன்னது எல்லாம் யோசித்துக்கொண்டு அமர்ந்திருக்க, கீழே இருந்து செண்பகம் ரசிகாவை அழைக்கும் சத்தம் கேட்டதும், “நீ நல்லா யோசிச்சு முடிவெடு. அவன்கிட்ட டைவர்ஸ் வாங்குறேன்னு அவசரப்பட்டு எதையும் சொல்லித் தொலைக்காத. அப்படியே நீ டைவர்ஸ் வாங்கணும்னு நினைச்சாலும், அவன் கண்டிப்பா கொடுக்க மாட்டான். அதை ஞாபகத்துல வெச்சுக்கோ” என்றவள், “அம்மா கூப்பிடுறாங்க, நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரேன்” என்றுவிட்டுப் பூவிழியின் அறைக்கதவைத் திறந்து கொண்டு வேகமாகப் படிகளில் இருந்து இறங்கினாள் ரசிகா.
பூவிழி ரசிகா சொன்னதை எல்லாம் யோசித்தபடி அமர்ந்திருந்தாள்.
இங்கே செண்பகம் அழைத்தார் என்று வேகமாகப் படிகளில் இறங்கிய ரசிகா, தான் அணிந்திருந்த துப்பட்டா ஓடிவந்த வேகத்தில் கலைந்து, அவள் காலுக்குக் கீழே விழ… அதில் கால் மாட்டிக்கொண்டு படியிலிருந்து கீழே விழ வந்தாள் ரசிகா.
அதைப் பார்த்த செண்பகம் பதறி, தன் வீல் சேரை வேகமாக அவளை நோக்கி நகர்த்திக்கொண்டே, “ரசிகா… பார்த்து வாடி, விழுந்திட போற” என்று வேகமாகச் செண்பகம் வர…
அதற்குள்ளாக அவர்கள் இருவருக்கும் குறுக்கே புகுந்து, ரசிகாவை கீழே விழாமல் இறுக்கிப் பிடித்தது ஒரு கரம்.
