Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 59

உன் ரகசிய ரசிகை நான் 59

by Layas Tamil Novel
474 views

EPISODE 59

ஷிவுவிடம் அவள் கூறியதற்குப் பதில் பேசிவிட்டு, துர்கா செண்பகத்தை அழைச்சுட்டு அவர் அறைக்கு வந்தவள், அவரைப் பார்த்து, “அம்மா, ஷிவு சொன்னதெல்லாம் நீங்க மனசுல எதுவும் வச்சுக்காதீங்க. அவ சின்னப் பொண்ணு. எதுவும் தெரியாம அந்தச் சங்கவி கூடச் சேர்ந்து எதுவும் பேசிட்டா. அவளை தயவுசெய்து மன்னிச்சுடுங்கம்மா. அவளுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்புக் கேட்கிறேன். நீங்க இதையெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க” என்றால் துர்கா.

துர்காவை ஷிவு அவ்வளவு தூரம் அவமானப்படுத்தியும், துர்கா அந்த ஷிவுவுக்காக மன்னிப்புக் கேட்பதைப் பார்த்த செண்பகம், அவளை நினைச்சுப் பெருமைப்பட்டவர், “எங்க அண்ணாவும் அண்ணியும் இந்த வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளைத் தான் தேர்ந்தெடுத்திருக்காங்க. உனக்கு எவ்வளவு பெரிய மனசு! ஷிவு உன்னை அவ்வளவு காயப்படுத்தியும்! நீ அவளுக்குத் தான் பரிஞ்சு பேசுற. இந்த மனசு யாருக்குமே வராது…” என்று சொன்னவர்,

“நான் ஷிவு பேசினதை எதுவுமே பெருசா எடுத்துக்கலைம்மா. அவ சின்னப் பொண்ணு. ஷிவு வேற யாரோவா? என் கனகாவோட பொண்ணு. அவளும் எனக்குப் பொண்ணு தான். அப்போ அவ எனக்கும் பொண்ணு தானே? என் பொண்ணு பேசினா எப்படி எடுத்துப்பேனோ, அதே போலத் தான் இருக்கேன். நீ எதுவும் நினைச்சுக்காதம்மா” என்றார்.

பின் துர்காவைப் பார்த்து, “நீயும் அவ பேசியதை எதுவும் மனசுல வச்சுக்காதேம்மா. போகப் போக அவ சரி ஆகிடுவா” என்றவர்,

“சரி, நீ போய்த் தூங்குமா. ரொம்ப நேரமாயிடுச்சு. நீ போய் ஆதிக்கு எடுத்து வந்த பாலை அவனுக்குக் கொடும்மா, ஆறிடப் போகுது” என்றவர், “ஆதி உனக்காகக் காத்துட்டு இருக்கப் போறான்…” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தார் செண்பகம்.

அவரிடம் சொல்லிட்டு, கையில் இருந்த பாலுடன் தன் ரூமுக்கு வந்த துர்கா கதவைத் திறந்து உள்ளே வர, ஆதியைத் தேடினாள்.

ஆதி, துர்கா வருவதற்கு முன்னாடியே படுத்து உறங்கி இருந்தான். அவன் உறங்கினதைப் பார்த்ததும், தான் கொண்டு வந்த பாலை அருகில் இருந்த டேபிளில் வச்சு மூடி வைத்தவள்… அவன் அருகில் சென்று அவன் முகத்தை உற்றுப் பார்க்க, ஆதி நல்லா உறங்கிக் கொண்டிருந்தான்.

“அதுக்குள்ள தூங்கிட்டியா ஆதி?” என்று சொல்லிட்டுப் போனவள், ஃப்ரெஷ் ஆகிட்டு வந்து ஆதியின் அருகில் கட்டிலின் மறுபுறம் படுத்து உறங்கிவிட்டாள்.

அடுத்த நாள் காலைப் பொழுது அழகா விடிந்தது. சூரியன் கண் விழிச்சு வெளியே வருவதற்குள் துர்கா கண் விழித்திருந்தாள்.

‘என்ன ஃப்ரெண்ட்ஸ், நம்ம துர்கா இவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்கிற ஆள் இல்லையே’னு தானே யோசிக்கிறீங்க! அதுக்கும் காரணம் இருக்கு ஃப்ரெண்ட்ஸ்… வாங்க பார்க்கலாம்.

ஆதியோட புது வீட்ல இருந்திருந்தால் துர்கா மெதுவா தான் எழுந்திருப்பாள். ஆனா, இங்கு அவன் குடும்பத்துடன் இருப்பதால், காலை நேரமே எழுந்துவிட்டாள்.

நேரமே எழுந்தவள் பாத்ரூம் சென்று குளிச்சுட்டு வந்து உடை மாத்திட்டு, கீழே கிச்சனுக்கு காபி போடலாம்னு வந்தவள், உள்ளே வர அங்கே சிரிப்பு சத்தம் கேட்க,

சமையலறைக்குள் இவ்வளவு நேரத்துல யார்னு உள்ளே எட்டிப் பார்க்க, அங்கே விசாலாட்சி, கனகா, செண்பகம் மூவரும் பேசிச் சிரிச்சுக்கொண்டு இருந்தனர்.

அவர்களை இவ்வளவு சந்தோஷமாப் பார்த்ததும் துர்காவுக்கும் ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. “என்ன, மூணு பேரும் இவ்வளவு நேரமே எழுந்துட்டீங்க போல? ஒரே சிரிப்பு சத்தமா இருக்கு! என்னனு எனக்குச் சொன்னீங்கன்னா, நானும் உங்களோட சேர்த்துச் சிரிப்பேனே?” என்று கேட்டுக்கொண்டே சமையலறைக்குள் வந்தாள் துர்கா.

துர்கா பேசிக்கொண்டே சமையலறைக்குள் வருவதைப் பார்த்த மூவரும் அவளைப் பார்த்து சிரிச்ச முகமா வரவேற்க, விசாலாட்சி, “அடடே… துர்கா, என்ன இன்னைக்கும் இல்லாம இன்னைக்கு ரொம்ப சீக்கிரமா எழுந்துட்ட போல? என் பையன் என் கிட்ட, ‘நீ தினமும் எட்டு மணிக்கு மேல தான் எழுந்திருப்பா’ன்னு சொன்னானேம்மா. ஆனா இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா எழுந்துட்ட!” என்று விசாலாட்சி துர்காவைக் கிண்டல் செய்ய,

“உங்க பையன் எல்லாமே உங்க கிட்ட வந்து சொல்லிட்டுப் போவானா அத்தை? நீங்களும் அவரோட சேர்ந்துட்டு என்னைக் கிண்டல் பண்றீங்க பாருங்களேன்… அங்க நாங்க ரெண்டு பேர் மட்டும் தான் இருக்கோம். எப்பவுமே ஆதி நேரமே எழுந்து ஜாக்கிங் போயிட்டு வருவதற்கு டைம் ஆயிடும். அதனால தான் நான் லேட்டா எழுந்திருப்பேன்.

“ஆனா, இங்க அப்படி இல்லையே! இங்க எல்லாருமே இருக்கீங்க. என் கூடப் பேசுவதற்கு எத்தனை பேர் இருக்கீங்க. உங்களை எல்லாம் விட்டுட்டு நான் அவ்வளவு நேரம் தூங்கி என்ன பண்ணப் போறேன்னு தான் நேரமே எழுந்து வந்துட்டேன்” என்றால் பொய்க் கோபமாக துர்கா.

“சரிடா… சரிடா… அத்தை சும்மா உன்னைக் கிண்டல் பண்ணினேன். இதுக்காக இப்படி கோவிச்சுக்குவியா?” என்றவர், “சரிமா… இந்தா இந்தக் காபியை முதல்ல குடி” என்று தாங்கள் ஏற்கனவே போட்டு வைத்திருந்த காபியை துர்கா கையில் கொடுக்க,

“நீங்க எல்லாரும் காபி குடிச்சுட்டீங்களாமா?” என்று எல்லாரையும் கேட்க, “நாங்க எல்லாரும் குடிச்சுட்டோம். நீ குடிடா” என்று அவளை அருகில் இருந்த சேரில் அமர வைத்து துர்காவுக்குக் காபி கொடுத்தார் விசாலாட்சி.

இவர்கள் மூவரோடு சேர்ந்து துர்கா காபி குடிச்சுக்கொண்டு அரட்டை அடிச்சுக்கொண்டு சிரிச்சுப் பேசிக்கொண்டிருக்க… ஆதி ரெடியாகிட்டு ஜாக்கிங் செல்வதற்காகக் கீழே வந்தவன், கிச்சனிலிருந்து சிரிப்பு சத்தம் கேட்கும். ஒரு நிமிஷம் நின்று கிச்சனை எட்டிப் பார்க்க, அங்கே தன் அம்மாவும் மத்தவங்களும் அமர்ந்து துர்காவோடு சேர்ந்து சிரிச்சுப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தவன்.

ஒரு நிமிஷம் நின்று அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று ஆதி கேட்க…

“எங்க அண்ணி உன்னைக் கிண்டல் செய்யாம இருக்க நான் ஒரு ஐடியா கொடுக்கட்டுமா?” என்று கனகா துர்காவிடம் கேட்க… “என்ன ஐடியாம்மா? சொல்லுங்க… நான் ட்ரை பண்றேன்” என்று துர்கா ஆவலாகக் கேட்க,

“இங்கே வா…” என்று அவளைத் தன் அருகில் அழைத்தவர், “இப்போ சீக்கிரமா எழுந்திருக்க முடியலைன்னா, அதுக்குக் காரணம் உன் புருஷன் தான். நைட் எல்லாம் உன்னைத் தூங்க விட்டிருக்க மாட்டான்.”

“அப்புறம், தினமும் நீ லேட்டா தான் எழுந்திருப்ப” என்று கனகா சொல்ல… அவர் சொன்னதைக் கேட்டதும் துர்காவுக்கு என்ன சொல்றதுனு தெரியாமல் சங்கடமாக நெளிய…

“அதனால, சீக்கிரமா ரெண்டு மூணு பசங்களைப் பெத்து எங்க அண்ணி கையில கொடுத்துட்டா… பேரப் பிள்ளைகளைப் பார்த்துகிறதுலயே எங்க அண்ணிக்கு நேரம் போறதே தெரியாது… அப்புறம் நீயும் உன் புருஷனும் நைட் எல்லாம் ரொமான்ஸ் பண்ணிட்டு, காலையில எவ்வளவு லேட்டா எழுந்தாலும் எங்க அண்ணி உன்னை எதுவும் சொல்ல மாட்டார்” என்று கனகா சொல்ல… செண்பகமும் அவர் சொன்னதற்குத் தலையை ஆட்ட,

அவர் கூறியதைக் கேட்ட துர்காவுக்கு வெட்கத்துல முகமெல்லாம் சிவந்துவிட, அவளை மூவரும் சேர்ந்து கிண்டல் செய்து ஒரு வழி பண்ணி விட்டனர்.

பின் துர்காவும் அவர்களை மாற்றி மாற்றி கிண்டல் செய்துகொண்டு பேச, இதையெல்லாம் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆதி.

துர்கா சிரிச்சுப் பேசிக்கொண்டிருப்பதப் பார்த்தவன், ஒரு நிமிஷம் அவளை ரசிச்சுட்டு, “என்னைத் தவிர மற்ற எல்லாரிடமும் சகஜமாகவும், சந்தோஷமாகவும், சிரிச்சுப் பேசுறா! ஆனா என்கிட்ட மட்டும் சரியாவே பேச மாட்டேங்கிறாளே!!” என்று நினைத்தவன்,

“ஆனாலும் இந்த அத்தைங்க ரெண்டு பேரும் ரொம்பவே மோசம். எப்படி எல்லாம் பேசுறாங்க பார்” என்று நினைத்தவன்.

பிறகு நேற்று இரவு ஷிவுவிடம் துர்கா பேசியதெல்லாம் அவனுக்கு நினைவில் வர, அவளை ஒரு நிமிஷம் அமைதியாகப் பார்த்தவன், பிறகு அமைதியாக வெளியே சென்று விட்டான்.

துர்கா மூவருடனும் சேர்ந்து கிச்சன்ல காலை உணவு தயாரிக்க உதவி செய்வதாகக் கூற… அவளை ரூமுக்குச் சென்று ரெஸ்ட் எடுக்கச் சொல்லிவிட்டு, “நாங்க மூணு பேர் இருக்கோம். போதாததுக்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீ போய் ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுமா” என்று சொல்லி, அவளை வலுக்கட்டாயமாகச் சமையலறையில் இருந்து வெளியே அனுப்பிவிட்டனர்.

பெட் ரூமுக்குள் செல்ல விருப்பம் இல்லாமல், என்ன செய்வது என்று யோசித்த துர்கா, வெளியே கார்டனுக்குப் போகலாம்னு வெளியே சென்றாள்.

அங்கே தோட்டத்துல செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வேலை ஆள்கிட்ட வம்படியாகப் பைப்பைப் பிடுங்கி செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.

இதையெல்லாம் தூரத்தில் ஜாக்கிங் சென்றுவிட்டு வந்து, தூரத்தில் நின்று உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த ஆதி பார்த்துக்கொண்டிருந்தான்.

துர்கா செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்க… அப்போது அங்கே துர்காவைத் தேடிக்கொண்டு வந்த கீர்த்திகாவும், ராதாவும் தோட்டத்துக்கு வந்தவர்கள், துர்கா பாட்டுப் பாடிக்கொண்டே செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டு இருப்பதைப் பார்த்தவர்கள், துர்காவிடம் செல்லப் போக,

கீர்த்திகா ராதாவைப் பிடிச்சு அவள் காதில் ஏதோ சொல்ல… அவளும் கீர்த்திகா சொன்னதைக் கேட்டுத் தலையை ஆட்டியவள், “ஓகே டன்” என்று தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்.

இருவரும் மெதுவா துர்காவின் அருகில் சென்றவர்கள், “ரெடியா?” என்று கீர்த்திகா கேட்க,

அதைப் பார்த்த ராதா, “ஓகே” என்று சிக்னல் காட்ட… கீர்த்திகா மிக மெதுவா “ஒன்… டூ… த்ரீ…” என்று எண்ணிவிட்டு, இருவரும் ஒன்றாகச் சேர்ந்து துர்காவின் இடுப்பை ஆளுக்கு ஒரு புறம் பிடிச்சு நறுக்கென்று கிள்ளி வைக்க… அவர்கள் கிள்ளி வைத்ததில், வலியில “அம்மா…” என்று அலறிய துர்கா, கையில் இருந்த தண்ணீர்ப் பைப்பை கீழே போட்டுவிட்டுத் திரும்ப…

தன் எதிரே சிரிப்பை அடக்க முடியாமல் வாயில் கை வச்சுச் சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்த இருவரையும் பார்த்த துர்கா, “ஏய்! ஏன்டீ… ரெண்டு பேரும் என் இடுப்பைப் பிடிச்சு இப்படி வலிக்கிற மாதிரி கிள்ளி வச்சீங்க?” என்று தன் இடுப்பை இரண்டு கைகளாலும் தேய்ச்சுக்கொண்டே கேட்டாள் துர்கா.

“அதுவா அக்கா… சும்மாத்தான்… ஒரு ஜாலிக்கு” என்று கீர்த்திகா சொல்ல, “ஏன்டீ… நீங்க ரெண்டு பேரும் ஜாலியா இருக்குறதுக்கு என் இடுப்பு தான் கிடைச்சுதா?” என்று கோபமாக துர்கா கேட்க… “ஆமாம்” என்று இருவரும் கோரஸாகச் சொல்ல,

“உங்களை…” என்று கோபப்பட்ட துர்கா அவர்கள் இருவரையும் துரத்த, இருவரும் துர்காவிடம் இருந்து தப்பிச்சு ஓட… “ஏய்! நில்லுங்கடீ… என்கிட்ட வாங்கடீ… ரெண்டு பேரும்” என்று அவர்களைத் துரத்திக்கொண்டு துர்கா ஓட…

“போ அக்கா… நாங்க நின்னா நீ எங்க ரெண்டு பேரையும் சும்மா விட மாட்டே” என்று அவளிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பிச்சு ஓட, அவர்கள் இருவரையும் துரத்திக்கொண்டு துர்காவும் ஓட, கீர்த்திகாவும் ராதாவும் ஓடிச் சென்று அங்கே உடற்பயிற்சி செய்துகொண்டு இருந்த ஆதியின் பின்னே போய் நின்று கொண்டு, ராதா, “மாமா… மாமா! அக்கா எங்க ரெண்டு பேரையும் அடிக்க வராங்க. எங்க ரெண்டு பேரையும் காப்பாத்துங்க…” என்று ஆதியிடம் இருவரும் தஞ்சம் அடைய,

அவர்கள் இருவரையும் ஒரு முறை திரும்பிப் பார்த்த ஆதி, அவர்கள் இவனிடம் கெஞ்சுவது போல நின்றிருக்க, அவர்கள் இருவரையும் பாதுகாப்பது போல தன் கைகளை துர்காவுக்குக் குறுக்காக நீட்டி, ஆதி துர்காவை அவர்கள் இருவர் அருகிலும் வராமல் நின்றான்.

அவன் அப்படி நின்னதும் துர்கா ஆதியைப் பார்க்க, அவன் எதுவும் பேசாமல் துர்காவையே பார்க்க… “நீ இந்தப் பக்கம் வந்திரு ஆதி. இவங்க ரெண்டு பேரும் ஓவரா குறும்பு பண்றாங்க” என்று சொல்லி அவனை விலகச் சொல்ல,

“மாமா… எங்க அக்கா சொல்றதைக் கேட்டு, எங்க ரெண்டு பேரையும் அவ கிட்ட மாட்டி விட்டுறாதீங்க மாமா. நாங்க ரெண்டு பேரும் சின்னப் பொண்ணுங்க தானே? நாங்க பாவமில்லையா?” என்று கீர்த்திகா கெஞ்ச…

“யாரு? நீங்க ரெண்டு பேரும் சின்னப் பிள்ளைங்களா? உங்க ரெண்டு பேரையும் இப்படியே விட்டா, எங்க துர்காவை ஒரு வழி பண்ணிருவீங்க” என்று சொல்லிக்கொண்டே அங்கு வந்த விக்கி, “டேய் கதிர்! நீ வாடா. நாம ரெண்டு பேரும் துர்காவுக்கு ஹெல்ப் பண்ணலாம்” என்று துர்காவின் அருகில் வந்து நிக்க…

“ஓஹோ… நீங்க ரெண்டு பேரும் எங்க ரெண்டு பேரையும் பிடிச்சு துர்கா அக்காகிட்ட பிடிச்சுக் கொடுக்கப் போறீங்களா?” என்று ராதா கேட்க,

“ஆமாம்” என்று விக்கியும் கதிரும் தலையை ஆட்ட… “உங்க ரெண்டு பேருக்கும் எங்க ஆதி மாமாவைக் தாண்டி வந்து எங்க மேல கை வைக்க முடியும்னு நினைப்போ?” என்று கீர்த்திகா சொல்ல…

“உங்க ஆதி மாமாவுக்கு ஆபீஸ் விட்டா வீடு… வீடு விட்டா ஆபீஸ் இது மட்டும் தான் தெரியும். இந்த மாதிரி விளையாடுறது எல்லாம் எங்களுக்குத் தான் கைவந்த கலை” என்ற விக்கி… “வாடா! நாம சின்ன வயசுல இருந்து கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்குவோம்” என்று கதிரைத் துணைக்கு அழைக்க,

“நான் எப்பவோ ரெடிடா மாப்பிள்ளை” என்று கதிர் கீர்த்திகாவைப் பார்க்க… விக்கி ராதாவைப் பார்க்க… துர்காவும், “நானும் ரெடி” என்று ஆதியைப் பார்க்க…

இவர்கள் மூவரையும் பார்த்த ஆதி, தன் புஜங்களை இருக்கினவன், “கேர்ள்ஸ், ஆர் யூ ரெடி?” என்றான். “எஸ் மாமா! நாங்க ரெடி தான். இவங்க கையில நாம யாருமே சிக்கக் கூடாது” என்று இருவரும் சொல்ல…

“லெட்ஸ் ஸ்டார்ட் த கேம்…” என்று ஆதி சொல்ல… ஆதி, கீர்த்திகா, ராதா மூவரும் ஒரு அணியாகவும். துர்கா, விக்கி, கதிர் மூவரும் ஒரு அணியாகவும் எதிர் எதிரே நின்றிருந்தனர்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured