Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 64

உன் ரகசிய ரசிகை நான் 64

by Layas Tamil Novel
500 views

EPISODE 64

சந்தோஷ் மேப்பில் தான் செல்ல வேண்டிய காலேஜின் பெயரைப் போட்டு காரை ஓட்ட… அவன் ஓட்டிய வேகத்தைப் பார்த்து சங்கவிக்கு மலைப்பாக இருந்தது.

ஊரில் எருமை மாடு மேய்த்துக் கொண்டிருந்தவன் இன்று காரைக் கையாளும் விதத்தைப் பார்த்த சங்கவி. அவனைப் பார்த்து ஆச்சரியமாக வாய் பிளந்து அவன் அருகில் அமர்ந்து கொண்டு யோசித்துக் கொண்டு இருந்தாள்.

கிட்டத்தட்ட கார் ஓட்டும் ஒரு வல்லுநரைப் போலவே சந்தோஷ் காரைக் கையாண்டு கொண்டிருந்தான். அவன் போகும் வேகத்திற்கு எங்கே யார் மீதாவது மோதிவிடுவான் என்று பயந்து கொண்டு அமர்ந்திருந்தாள் சங்கவி.

ஆனால் அவன் காரை ஸ்டார்ட் செய்ததிலிருந்து தான் செல்ல வேண்டிய இடம் வரும் வரை ஒரு சிறு தவறு கூடச் செய்யாமல் காரை ஓட்டிக்கொண்டு வந்தான்.

வி. ஆர். காலேஜ் வந்ததும் காரைப் பார்க்கிங்கில் போட்டுவிட்டு இறங்கிய சந்தோஷ் தன் அப்பாவை அழைத்துக்கொண்டு செல்லப் போக…

சங்கவி இன்னும் காருக்குள்ளேயே அமர்ந்து இருப்பதைப் பார்த்தவன் “ஏய்..” என்று அவள் முன்னாடி சொடக்கிட்டு அழைக்க.. “என்னடா…” என்றால் கடுப்பாக…

“என்ன யோசிச்சுட்டு இருக்கே… காரை விட்டு இறங்கி எங்க கூட வரதா இருக்கியா… இல்லை நாங்க மட்டும் போய்ட்டு வரட்டுமா..” என்றான்.

“அது ஒண்ணுமில்லடா… ஊருல எருமை மாடு கூட உனக்குச் சரியா மேய்க்கத் தெரியாது. ஆனா… இப்போ இவ்ளோ நல்லா கார் ஓட்டுறியே… அதான் எப்படின்னு ஆச்சர்யமா யோசிச்சுட்டு இருந்தேன்” என்று சந்தோஷை வார.

அவள் சொன்னதைக் கேட்டு கடுப்பானவன். “அது ஒண்ணுமில்லை, சின்ன வயசுல மூக்கு ஒழுக்கிட்டு எப்போ பாரு செக்கு மாடு மாதிரி தின்னுட்டு… பன்னி மாதிரி வீங்கிப் போயிருந்த நீ எல்லாம் இன்னிக்கு இவ்வளவு மாடர்னா… மாறி சுத்திகிட்டு இருக்கே. அப்போ… நானும் பழைய ஆளாவே இருக்க முடியுமா என்ன.. உன் அளவுக்கு இல்லைனாலும் ஒரு அளவுக்கு மாறி ஆகணும் இல்லை” என்று பதிலுக்கு சந்தோஷ் சங்கவியை வார…

அவன் சொன்னதைக் கேட்டு கடுப்பான சங்கவி, “முத்து… அவனைப் பேசாம இருக்கச் சொல்லு. தேவை இல்லாம என்னை டென்ஷன் பண்ணிட்டு இருக்கான்” என்று சொல்ல…

“டேய் சந்தோஷ், எதுக்குடா… வந்ததிலிருந்து சங்குமாவை வம்பிழுத்துட்டே இருக்க… பாவம்டா… அவ பேசாம வா…” என்றவர். சங்கவி அமர்ந்து இருந்த காரின் கதவைத் திறந்து விட்டு, “நீ வா சங்கு… நான் பார்த்துக்கிறேன்” என்று கூறி அவளை அழைத்துக்கொண்டு சந்தோஷுடன் ஆபீஸ் ரூமிற்கு சென்றார்.

ஆபிஸ் ரூம் எங்கே இருக்கிறது என்று கேட்டுவிட்டு மூவரும் ஆபிஸிற்குள் நுழைய…. அங்கே இவர்களுக்கு முன் அமர்ந்து இருந்த மூன்று பெண்களைப் பார்த்ததும் சந்தோஷ் ஒரு நிமிடம் நின்றவன், மூவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே செல்ல…

அவன் பின்னால் வந்த சங்கவி அங்கே அமர்ந்து இருந்தவர்களைப் பார்த்ததும் ஒரு நிமிடம் அப்படியே நின்றவள், அவர்களைப் பார்த்துவிட்டுக் கடுப்பானாள்.

அங்கே துர்கா, கீர்த்தி, ராதா… மூவரும் அமர்ந்து இருக்க, அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு சங்கவி சென்று ஒரு இருக்கையில் அமர…

சங்கவியுடன் வந்த முத்துவும் இவர்களைப் பார்த்துவிட்டு அவர்களைத் தாண்டிச் செல்லப் போக… அப்போது அவர்கள் அருகில் வந்தவர் ராதாவைப் பார்த்து…. “நீ… நீ… துரையோட பொண்ணா?” என்று கேட்டார்.

தன் அப்பாவின் பெயரைச் சொன்னதும், எழுந்து நின்று “ஆமா அங்கிள், என் அப்பா பேரு துரை தான்.. நீங்க… உங்களுக்கு எப்படி எங்க அப்பாவைத் தெரியும்?” என்று கேட்டாள்.

“நீ அவனோட ரெண்டாவது பொண்ணு ராதா தானே..” என்றார். “ஆமாம் அங்கிள்” என்றால் ராதா..

“அங்கிள் நீங்க” என்று ராதா எடுக்க, “என்னமா, என்னத் தெரியலையா? நான் தான்மா முத்து….. உங்க ஊருக்குப் பக்கத்து ஊர்ல தான் நான் இருக்கேன். உங்க வீட்டுக்குக் கூட நான் வந்திருக்கேன்மா. என் பையன் படிப்பு விஷயமாக் கேட்டு வந்திருக்கேன்.”

“உங்க அப்பாவும் நானும் ஒரே ஸ்கூல்ல ஒண்ணாப் படிச்சவங்க… உங்க வீட்டுக்கு நான் வந்த அப்போ கூட.. நீயும் உன் அக்காவும் பயங்கரமா முடி எல்லாம் பிடிச்சுட்டுச் சண்டை போட்டுட்டு இருந்தீங்களே…” என்று சொல்ல..

அவர் சொன்னதை எல்லாம் கேட்டு சிறிது நேரம் யோசித்த ராதா…. “**அங்கிள்! நீங்களும் என் அப்பாவும் சேர்ந்து உங்க கணக்கு டீச்சர் சேலைல பட்டாசு கட்டி விட்டு அவங்க கிட்ட மாட்டிகிட்டு அடி வாங்குனீங்களே… அந்த முத்து மாமாவா…. நீங்க…?” என்றால்.

அவள் அப்படிச் சொன்னதும், “அம்மாடீ! மாமாவை… இப்படி எல்லார் முன்னாடியும் போட்டுக் கொடுக்கலாமா” என்று பாவமாகச் சொல்ல…

“ஐயோ… சாரி மாமா… ஒரு ஆர்வத்துல சொல்லிட்டேன்” என்று தலை சொரிந்தாள். “பரவாயில்லை மா… நீதானே சொன்னே…” என்றவர் அவளிடம் நலம் விசாரித்தவர். “அப்போ நீங்க குடும்பமா இங்கேயே மாறி வந்துட்டீங்களா…” என்று கேட்டார். “ஆமா மாமா. அக்காவுக்கு இங்கேயே வேலை கிடைச்சதுனால நாங்க இங்கேயே வந்துட்டோம்.”

“அப்பா மட்டும் அப்போ.. அப்போ.. ஊருக்குப் போய் வரதா சொல்லி இருக்காரு” என்று சொல்ல, “சரிம்மா… நான் உங்க அப்பா கிட்டப் பேசிக்கிறேன்” என்று சொன்னவர். “நீ இங்க என்னமா பண்றே..” என்று சொல்ல… “நான் இங்க படிக்கிறதுக்காக ஜாயின் பண்ண வந்திருக்கேன்” என்று சொன்னாள் ராதா…

பின் முத்துவிடம், “ஆமா மாமா…. எங்க உங்க புள்ளை… என்ன பண்றாரு இப்போ…. எங்க வீட்டுக்கு அவர் கூட வந்த அப்போவே… சரியான பயந்தாங்கோலியா இருந்தாரே…”

“நானும் என் அக்காவும் சண்டை போடுறதைப் பார்த்து பயந்து போய் பொண்ணு மாதிரி உங்க பின்னாடி ஒளிஞ்சுட்டு வீட்டுக்குள்ளயே வராம வெளிய எருமை மாடுங்க கட்டி வெச்சிருந்த இடத்துல அதுங்க கூடப் போய் பேசிட்டு இருந்தாரே… அவர் எப்படி இருக்காரு இப்போ… நல்லா இருக்காரா… நீங்க இங்க எதுக்கு வந்திருக்கீங்க?” என்று கேட்டாள்.

அவள் சொல்வதை எல்லாம் கேட்ட சங்கவிக்கு சந்தோஷைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை… எழுந்து வந்து அவனிடம் “என்னடா… உன் பெருமை பக்கத்து ஊரெல்லாம் பரவி இருக்கு போல” என்று சொல்லி சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்க…

“அம்மாடீ… பார்த்துப் பேசுமா… என் புள்ளை இங்கே தான் இருக்கான்” என்று சொல்லி சந்தோஷ் இருக்கும் இடம் பார்த்து அவனை ஜாடை காட்ட…

ராதா… முத்து சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாகி அவர் சொன்ன பக்கம் திரும்பிப் பார்க்க… அங்கே கைகளைக் கட்டிக்கொண்டு ராதாவை ஏகத்துக்கும் முறைத்துக்கொண்டு நின்றிருந்தான்.

அவனைப் பார்த்ததும் முதலில் அதிர்ச்சி ஆனவள். பின் அவன் இவ்வளவு கம்பீரமாக இருப்பதைப் பார்த்து ஆச்சர்யம் ஆனவள். சந்தோஷைப் பார்த்து அசடு வழியச் சிரித்தவள். முத்துவிடம் திரும்பி, “என்ன மாமா இப்படி மாட்டி விட்டுட்டீங்களே..” என்று சொல்ல..

“என்னை எங்கமா நீ பேச விட்டே… நீயா பேசிட்டு இருந்தே…” என்று சொல்ல… அப்போது “ராதா…” என்று பியூன் அழைக்கவும், “சரி மாமா நான் உள்ளே போயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு, சந்தோஷை ஒரு பார்வை ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு, துர்காவையும், கீர்த்தியையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றால்.

ராதாவை முறைச்சுக்கொண்டே வந்து அமர்ந்த சந்தோஷ்… அவன் அப்பாவிடம் ராதாவைப் பற்றி விசாரித்தவன் அமைதியாக அமர்ந்து விட… அவன் அருகில் அமர்ந்த சங்கவி… சந்தோஷை ஏகத்துக்கும் கிண்டல் செய்ய… அவளை முறைத்தவன், “வில் யூ சட் அப்?” என்று கத்த…

அவள் “ஓகே ஓகே… கூல்…” என்றவள் அமைதியாக போன் நோண்ட ஆரம்பித்தாள்.

உள்ளே வந்த பெண்களைப் பார்த்த பிரின்சிபல், கீர்த்திகாவைப் பார்த்து “நீ இங்கே தான் படிக்கிறே?” என்று சந்தேகமாகக் கேட்க… “ஆமாம் மேடம்” என்று தான் படிக்கும் டிபார்ட்மென்ட் பற்றிச் சொன்னாள்.

சேரில் அமர்ந்து இருந்த விக்கியும், கதிரும் பிரின்சிபல் இடம் ஏற்கனவே ராதாவைப் பற்றிச் சொல்லி இருக்க… அவளைப் பிரின்சிபலுக்கு அறிமுகம் செய்து வைத்தான் கதிர்.

பின் அட்மிஷன் ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடித்துவிட்டு ஐவரும் வெளியே வர… ஏற்கனவே சங்கவி சந்தோஷை வெறுப்பேற்றி இருக்க…. வெளியே வந்தவர்களை நிமிர்ந்து பார்த்தவன், அனைவருக்கும் மத்தியில் சிவப்பு நிற தாவணி அணிந்து, முடியை லூஸாக விட்டு, ஒரு கிளிப் மட்டும் போட்டு, முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லாமல், கண்களுக்கு மை மட்டும் இட்டு, ஒரு சிறிய பொட்டு மட்டும் வைத்து வெளியே வந்த ராதாவைக் கண்டு, இவ்வளவு நேரம் அவனை மறந்து ரசித்தவன் பின் முன்பு தன் தந்தையிடம் கூறியதை நினைத்து அவள் மீது அளவுக்குக் கடந்து கோபம் ஆனது.

அவளை முறைச்சுக்கொண்டே அமர்ந்து இருக்க.. வெளியே வந்த விக்கியும், கதிரும் சங்கவி அமர்ந்திருப்பதைப் பார்த்து… “இவ என்னடா.. எங்கே போனாலும் வந்துடறா…” என்று கதிரிடம் சொல்ல…

அவர்கள் அருகில் வந்த கீர்த்தி, “அண்ணா, பார்த்துப் பேசுங்க. சங்கவி கூட வந்திருக்கிறது நம்ம ராதாவுக்குத் தெரிந்தவர்கள்” என்று அவர்கள் இருவரையும் எச்சரிக்க…

“ஐயோ… இது வேறையா… நான் எதுவும் சொல்லலை” என்ற விக்கி வெளியே செல்லப் போக….

ராதா வெளியே வந்ததும் முத்துவிடம் சென்று “மாமா நான் போயிட்டு வரேன்” என்று சொன்னவள் அருகில் இருந்த சந்தோஷை ஒரு பார்வை ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு, சங்கவியைப் பார்த்து, “அக்கா போயிட்டு வரேன்” என்று சொல்ல…

முத்து, “சங்குமா… உனக்கு ராதாவை தெரியுமா…” என்று கேட்க… “தெரியும் மாமா அதை அப்புறம் சொல்றேன் வாங்க நாம உள்ளே போகலாம்” என்று அவரையும் சந்தோஷையும் அழைத்துக்கொண்டு உள்ளே போக…

அவர்கள் மூவரும் செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்த விக்கி… “**டேய் கதிர்… அந்தப் பிசாசோட செல்லப் பெயரை கேட்டியா… சங்குமா…….வாம். இவ விட்டா ஒரு ஊருக்கே சங்கு ஊதிருவா… இவளுக்குச் செல்லப் பேரு சங்குவாமா…?” என்று கூறி சிரித்தவன். “அவளுக்குச் சரியா தான் பேர் வெச்சிருக்காரு சங்குஊ…. ன்னு” என்று நக்கல் செய்தான் விக்கி.

“டேய் விக்கி சும்மா இருக்க மாட்டியா? பேசாம வாடா….” என்று துர்கா அவன் தலையைத் தட்ட….

“ஆமாமா…. வாங்க போகலாம். நமக்கு முக்கியமான வேலை இருக்குல்ல” என்று விக்கி முன்னே நடக்க… அவன் பின்னால் புரியாமல் மற்றவர்கள் சென்றனர்.

சிறிது தூரம் சென்றதும் விக்கி, “கீர்த்திமா .. உன்னோட டிபார்ட்மென்ட் எது?” என்று கேட்டான். “எதுக்கு அண்ணா… நமக்குத் தான் வேலை முடிஞ்சுதே…” என்றால் கீர்த்தி.

“என்னது வேலை முடிஞ்சுதா… இனிமேல் தான் வேலையே இருக்கு” என்றவன். “ராதாவை இங்கே காலேஜ்ல சேர்த்தாச்சு… அவளுக்கு உன்னோட டிபார்ட்மென்ட் எதுன்னு காட்ட வேண்டாமா…” என்று கேட்க.

“அதெல்லாம் நீங்க காட்ட வேண்டாம். நாங்க எப்படியும் ஒரே பஸ்ல தான் வருவோம். நான் காட்டிக்கிறேன் என்னோட டிபார்ட்மென்டை” என்றால் கீர்த்தி.

அவள் அப்படிச் சொன்னதும், “ஐயோ… தங்கச்சி… அப்படி எல்லாம் சொல்லாத… என் பிளான்ல மண்ணை அள்ளிப் போட்டுறாதே” என்று அவன் கெஞ்ச.

அவன் கெஞ்சுவதைப் பார்த்து அனைவரும் சிரிக்க… “அண்ணா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் வாங்க நாம கேன்டீன் போய்த் டீ குடிக்கலாம்” என்று கீர்த்தி அவன் கையை வலுக்கட்டாயமாக மறுக்க மறுக்க… இழுத்துக்கொண்டு கேன்டீன் சென்றாள்.

முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு அவர்களுடன் கேன்டீன் சென்றான். விக்கியின் தோளில் கை போட்டு கதிர், “என்ன மச்சான் மூஞ்சியைத் தொங்கப் போட்டுட்டு வர்றே” என்று கதிர் கேட்டான்

“உனக்கு என்னப்பா… உன் ஆள் கூடவே சைட் அடிச்சுட்டு சுத்திட்டு இருக்க… ஆனா எனக்கு இப்படி ஏதாவது வாய்ப்பு வந்தால் தான் என் ஆளைப் பார்க்கவே முடியும்” என்று சோகமாகச் சொல்ல…

“ஓஹோ… அப்போ உன் ஆளைப் பார்க்கத் தான் வந்தியா…. நம்ம ராதாவைக் காலேஜ்ல சேர்க்க வரல அப்படித்தானே” என்றான் சத்தமாக.

அவன் அப்படிச் சொன்னதும் முன்னே பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்த மூவரும் திரும்பி அவர்கள் இருவரையும் பார்க்க…

“டேய் மாப்பிள்ளை… நீ கொஞ்சம் வாயை வச்சுட்டு சும்மா இருடா…” என்று கதிரிடம் கெஞ்சுவது போல விக்கி சொல்ல. “சரி சரி.. வா மச்சான் நாம போய்த் டீ… சாப்பிடலாம்” என்று முன்னே சென்றான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured