Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 111

உன் ரகசிய ரசிகை நான் 111

by Layas Tamil Novel
201 views

EPISODE 111

ராதா-கதிர் திருமணத்திற்கு நாட்கள் நெருங்கிக் கொண்டு இருந்ததால், அவளை வெளியே எங்கும் அனுப்ப வேண்டாம் என்று துரை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டார். அதுவும் இல்லாமல் துர்காவிற்கு நேர்ந்த விபத்தினால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் அப்செட் ஆகி இருப்பதால் ராதாவால் திரும்பவும் தன்னை வெளியே அனுப்பச் சொல்லிக் கேட்கவும் முடியவில்லை.

அவளால் சந்தோஷைப் பார்க்காமலும், அவனுடன் பேசாமலும் இருக்கவே முடியவில்லை. தன் திருமணத்தை நிறுத்த அவன் என்ன ஏற்பாடு செய்திருக்கிறான் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தாள். ‘சரி இங்கிருக்கும் பிரச்சினைகள் எல்லாம் ஓரளவுக்குச் சரியான பிறகு அவனிடம் பேசிக் கொள்ளலாம்’ என்று இரண்டு நாட்களாக ராதா சந்தோஷுடன் பேசவே இல்லை.

துர்கா ஆபத்துக்கட்டத்தில் இருந்து வந்துவிட்டாள் என்று ஆதி சொன்னதை கதிர் அனைவரிடம் கூறவும் அனைவருக்கும் இப்போதுதான் நிம்மதியாக இருந்தது. வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் ஒரு அளவு நார்மல் ஆகிவிட ராதா இப்போதுதான் நிம்மதி அடைந்தாள்.

எப்போது இரவாகும், சந்தோஷுடன் நிம்மதியாகப் பேசலாம் என்று இரவுக்காகக் காத்திருந்தவள் இரவு 10 மணி போலச் சந்தோஷுக்குக் கால் செய்தால். ராதா கால் செய்த அடுத்த ரிங்கிலேயே ஃபோனை எடுத்த சந்தோஷ், “என்னடி குட்டச்சி! ரெண்டு நாளா அவ்வளவு போன் பண்றேன், மெசேஜ் பண்றேன், எதுக்குமே ரிப்ளை பண்ணாமல் அப்படி என்னடி பண்ணிட்டு இருக்க அங்க,” என்று எடுத்ததுமே அவளிடம் வம்பு பேசினான் சந்தோஷ்.

“ம்ம்ம்ம்…. இங்க நாங்க எல்லாம் கல்யாண வேலையில ரொம்பப் பிஸியா இருந்தோம். அதனால்தான் நீ போன் பண்ணப்ப எடுக்க முடியாமல் போயிடுச்சு,” என்றால் ராதா. அவளும் அவனுக்குச் சளைத்தவள் அல்ல என்பது போலவே பேசினாள்.

“உனக்கு வாய் கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சுடி…. என்கிட்டயே உன் கல்யாணத்தைப் பத்தி பேசுறனா உனக்கு எவ்வளவு லொள்ளு இருக்கும்,” என்று கேட்டான் சந்தோஷ். “அப்படித்தான் பேசுவேன். என்னடா பண்ணுவ நீ மட்டும் என்னைக் குட்டச்சின்னு சொல்ற,” என்றால் ராதா.

“சரி சரி ஆரம்பத்திலேயே சண்டைக்கு வராத…. அங்க நிலவரம் எல்லாம் எப்படி இருக்கு,” என்று கேட்டான் சந்தோஷ். “அதை ஏண்டா கேட்குற வாத்தி! இங்கே சூழ்நிலையே ரொம்ப மோசமா இருக்கு… யார்கிட்டயும் போய் என்னால எதுவுமே பேச முடியல. நான் அப்படியே சொன்னாலும் அதை காது கொடுத்து கேட்குற நிலைமையில் இங்கு யாருமே இல்ல,” என்று சொன்னால் ராதா.

“ஏன் குட்டி! என்ன ஆச்சு? அப்படி என்ன அங்க நிலைமை சரியில்ல,” என்று கேட்டால் சந்தோஷ். “அதுவா,” என்று துர்காவிற்கு நேர்ந்த விபத்தையும், அதனால் வீட்டில் உள்ள அனைவரும் சரியான மனநிலையில் இல்லை என்பதையும், அங்கு நடந்த அனைத்து விஷயங்களையும் எடுத்துச் சொன்னாள் ராதா. “இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கா! அதனால தான் நீ நான் போன் பண்ணியும் எடுக்கலையா?” என்று கேட்டான் சந்தோஷ். “ம்ம்ம்… ஆமா,” என்று சொன்னால் ராதா.

“நீ எப்படி இருக்க? உன் கால் எப்படி இருக்கு?” என்று கேட்டான் சந்தோஷ். “பரவாயில்ல. முன்ன விட இப்போ கொஞ்சம் நான் நல்லா இருக்கேன். இன்னும் ரெண்டு நாள்ல நான் ஹாஸ்பிடல் போறேன் கட்டுப் பிரிக்கிறதுக்காக… எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கு வாத்தி. நீ எப்படியாவது ஹாஸ்பிடலுக்கு வந்துடுறியா? அங்க யாருக்கும் தெரியாமல் நான் எப்படியாவது உன்னைப் பார்க்க வரேன்,” என்று கேட்டால் ராதா.

“சரி. எத்தனை மணிக்கு நீ ஹாஸ்பிடல் வரேன்னு எனக்கு முன்னயே சொல்லிடு. நான் உன்னைப் பார்க்க வந்துடுறேன்,” என்று சொன்னான் சந்தோஷ். “சரி. நான் ஹாஸ்பிடல் கிளம்புவதற்கு முன்னாடி உனக்கு மெசேஜ் பண்றேன்,” என்று சொன்ன ராதா. “சரி நீ… என் கல்யாணத்தை நிறுத்துவதற்கு என்ன பிளான் பண்ணி வச்சிருக்க,” என்று கேட்டாள் ராதா.

“பிளானா…. என்கிட்ட என்ன பிளான் இருக்கு? நான் எல்லாம் எந்தப் பிளேன் யோசிச்சு வைக்கலப்பா,” என்று சொன்னான் சந்தோஷ். “டேய்… வாத்தி! என்னடா சொல்றே! என் கல்யாணத்தை நிறுத்த எதுவுமே யோசிக்கலையா? அப்போ நான் வேணாமாடா எருமை… உனக்கு,” என்று கேட்டாள் ராதா.

“நீ தானே கல்யாணத்துக்கு ஓகே சொன்ன. அப்போ நீதான் எதுவும் செய்து கல்யாணத்தை நிறுத்தணும். எனக்கு இந்த மாதிரிப் பிளான் போட்டு ஏதாவது பண்ணி உன் கல்யாணத்தை நிறுத்துறது எல்லாம் ரொம்பப் போரிங்கான விஷயம். என்னால எல்லாம் அவ்வளவு வேலை எல்லாம் பண்ண முடியாது,” என்றவன். “நீ என்ன பண்ற… உன்னோட கல்யாணத்தை ஏதாவது பிளான் போட்டு நிறுத்திடு…. அதுக்கு அப்புறம் நான் வந்து உனக்குத் தாலி கட்டிடுறேன் ஓகேவா,” என்று கேட்டான் சந்தோஷ்.

அவன் பேசியதை எல்லாம் கேட்ட ராதா, “டேய்… டேய்…. பார்த்தாலும் பார்த்தேன். உன்னை மாதிரி ஒரு ஆளை நான் பார்த்ததே இல்லை. என்ன சொன்னே… என்ன சொன்னே… நான் எதுவும் பிளான் பண்ணி என் கல்யாணத்தை நிறுத்தணுமாம்… இவரு எதுவுமே செய்யாமல் வந்து என் கழுத்துல தாலி கட்டுவாராம். அப்படி எல்லாம் நான் அவ்வளவு ஈஸியா என்னைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சுட்டு இருக்கியா என்ன.”

“டேய் வாத்தி! இப்போ சொல்றேன் கேட்டுக்கோ… நீயா வந்து என் கல்யாணத்தை நிறுத்தினா மட்டும் தான் நான் உனக்குக் கிடைப்பேன். அதை ஞாபகத்துல வெச்சுக்கோ,” என்றாள் ராதா. “நான் வரலைன்னா என்ன பண்ணுவே… என் கல்யாணம் முடியலைன்னு தப்பா எதுவும் முடிவு எடுத்துடாத,” என்றான் சந்தோஷ்.

“நான் ஏன்டா வாத்தி எதுவும் பண்ணிக்கணும்? நீ மட்டும் என் கல்யாணத்தை நிறுத்த வரலைன்னு வெச்சுக்கோ… நான் என்ன மத்தப் பொண்ணுங்க மாதிரி லவ் பண்ணினவன் கிடைக்கலையேன்னு சொல்லிட்டு எதுவும் தப்பான முடிவு எடுத்துட்டுப் போயிடுவேன்னு நினைச்சுட்டியா.. அதே சமயம் நீ என்னை வேணாம்னு சொல்லிட்டுச் சந்தோசமா இருக்கலாம்னு மட்டும் நினைச்சிடாதா… அதுக்கு அப்புறம் நீ நிம்மதியாவே இருக்க முடியாது ஞாபகம் வெச்சுக்கோ,” என்றவள். “ஆமா! என்ன சொன்னே? நீ என் கல்யாணத்தை நிறுத்த வரலைன்னா நான் என்ன பண்ணுவேன்னு தான கேட்டே.. நல்லாக் கேட்டுக்கோ.. நீ என் கல்யாணத்தை நிறுத்த வரலைன்னா நான் என் கதிர் மாமாவையே கல்யாணம் பண்ணிட்டு உன்னை அதுக்கு அப்புறம் தலை முழுகிருவேன் போடா….,” என்று சொல்லிவிட்டுக் கோபமாகப் போனை வைத்தாள்.

அவள் போனை வைத்ததும் சிரித்துக் கொண்டவன். ‘நான் இல்லைன்னா அவளால் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. ஆனா அதைக் வாய் திறந்து சொல்ல மாட்டா குட்டச்சி,’ என்று நினைத்துக்கொண்டே திரும்ப…. தன் முன்னே நின்று இருந்தவரைப் பார்த்து ஒரு நிமிடம் திடுக்கிட்டவன் தன் எதிரே சிரித்த முகமாக நின்று இருந்த ராதாவின் அப்பாவைப் பார்த்தவன் ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் அவரையேப் பார்க்க…

“என்ன தம்பி அப்படிப் பாக்குறீங்க… உங்க அனுமதி இல்லாமல் உள்ளே வந்துட்டேன் மன்னிச்சுக்கோங்க,” என்றார். “ஐயோ… என்ன அங்கிள் இப்படி எல்லாம் பேசுறீங்க… இது உங்க வீடு மாதிரி நீங்கள் உள்ளே வரதுக்கு பெர்மிஷன் கேட்கணுமா என்ன… வாங்க.. அங்கிள் வந்து உக்காருங்க,” என்று அவரைச் சோபாவில் அமர வைத்து விட்டு, “இருங்க அங்கிள் சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்,” என்று சொல்லி உள்ளே செல்லப் போக…

“தம்பி… தம்பி… அதெல்லாம் எதுவும் வேணாம். நீங்க வாங்க வந்து இங்கே உக்காருங்க…,” என்றவர் தன் கையில் வைத்து இருந்த இன்விடேசனை சந்தோஷ் இடம் நீட்டி, “இந்தாங்க தம்பி! என் பொண்ணுக்குக் கல்யாணம். கண்டிப்பா நீங்கள் வரணும்,” என்றார்.

அவரிடம் இன்விடேசனை வாங்கியவன் அதைப் பிரித்துப் பார்த்தான். அதில் இருந்த ராதாவின் பெயரைப் பார்த்தவன் அதைத் தன் விரலால் தடவியவன் அப்படியே இருக்க… “என்ன தம்பி அமைதியா இருக்கீங்க? நீங்க கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்திருங்க தம்பி… உங்க அப்பாகிட்டயும் கூப்பிட்டு சொல்லிட்டேன். அவனும் கண்டிப்பா வந்துடுறேன்னு சொல்லிட்டான். நீங்களும் வந்திருங்க தம்பி,” என்றார்.

“நான் கண்டிப்பா வந்துடுறேன் அங்கிள். நான் இல்லாம உங்க பொண்ணு கல்யாணம் நடக்காது,” என்றான். சந்தோஷ் பேசியதைக் கேட்டவர், “ஆமா… ஆமா…. தம்பி. நீங்க தானே அவளுக்குக் குரு. நீங்க இல்லாம என் பொண்ணு கல்யாணம் நடக்குமா என்ன,” என்றவர், “சரி தம்பி நான் கிளம்புறேன்,” என்று அவர் செல்லப் போக… “அங்கிள் ஒரு நிமிஷம்,” என்றான் சந்தோஷ்.

“சொல்லுங்க தம்பி…,” என்று சந்தோஷைப் பார்த்தார் துரை. “நான் அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்குற குரு அப்டிங்குறனால ஒன்னும் சொல்லலை. நீங்க நானும் ராதாவும் பேசினதை எல்லாம் என் பின்னால் இருந்து கேட்டுட்டு இருந்திங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் அங்கிள். ஆனா நீங்க அதை என்கிட்டேக் காட்டிக்காத மாதிரி இவ்வளவு நேரம் நல்லாவே நடிச்சீங்க… நானும் உங்க பொண்ணு ராதாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம். அவளுக்குக் கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது என் கூடவா தான் இருக்கும். நீங்களாவே இந்தக் கல்யாணத்தை நிறுத்திட்டீங்கன்னா நல்லா இருக்கும். அப்படி இல்லைன்னா நீங்க ராதாவுக்குக் கல்யாணம் பண்ணக் குறித்த தேதியில் வந்து அத்தனை பேர் முன்னாடியும் அவ கழுத்தில் தாலியை கட்டி கூட்டிட்டு வந்திடுவேன்,” என்றான் சந்தோஷ்.

இவ்வளவு நேரம் சந்தோஷ் பேசியதைக் கேட்ட துரைக்கு பயங்கரமாகக் கோபம் வந்தது. கையில் இருந்த பத்திரிக்கையை கீழே போட்டுவிட்டு வந்துச் சந்தோஷின் சட்டையைப் பிடித்தவர். “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்திருவேன்னு சொல்றே. உன் அப்பா முகத்துக்காக உன்னைச் சும்மா விடுறேன் இல்லைன்னா உன்னை இந்த இடத்திலயே கண்டந்துண்டாமா வெட்டி போட்டுடுவேன்,” என்றார் துரை.

தன் சட்டையைப் பிடித்திருந்த அவர் கையை எடுத்துவிட்ட சந்தோஷ். “என்ன அங்கிள்! உங்க வருங்கால மாப்பிள்ளை மேல கை வெக்குறீங்க. இது நல்லாவா இருக்கு….” என்றவன். “அங்கிள்! வீணா நீங்க டென்ஷன் ஆகாதீங்க… எனக்கும் ராதாவுக்கும் தான் கல்யாணம் நடக்கும்,” என்றான் சந்தோஷ் துரையை நேருக்கு நேராகப் பார்த்து.

சந்தோஷ் அப்படிச் சொன்னதும் கோபம் அதிகம் ஆன துரை. “வேணாம் தம்பி. நீங்க பேசுறது சரி இல்லை. உன் அப்பாகிட்ட சொல்ல வேண்டி இருக்கும்,” என்றார் துரை. “அங்கிள்! நீங்க என் அப்பாகிட்ட நான் சொன்னதைப் போய்ச் சொன்னா அவரே நேரா வந்து ‘என் மருமகளை ஏன் இன்னோருத்தனுக்குக் கட்டி வெக்குறேன்னு’ சொல்லி அவரே ராதாவை என்கூட சேர்த்து வெச்சிருவாரு. அதனால பேசாமல் நீங்கள் இந்தக் கல்யாணத்தை நிறுத்துறது நல்லது,” என்றான் சந்தோஷ்.

அவனை முறைத்துவிட்டு அவன் முன் தன் கைகள் இரண்டையும் கூப்பிக் கும்பிடுவது போல… துரை நிற்க.. “ஐயோ… அங்கிள்! என்ன இது? நீங்க போய் என்கிட்டே இப்படி கை எடுத்துக் கும்பிட்டு எல்லாம் கெஞ்சலாமா.. நான் சொல்றதை கேளுங்க அங்கிள்,” என்று சந்தோஷ் அவர் கையைப் பிடிக்க…

“தம்பி… இந்த துரை எதுக்காகவும் யார்கிட்டயும் கெஞ்சி நின்னுப் பழக்கம் இல்லை,” என்றவர் அவன் கையைத் தட்டி விட்டுவிட்டு. மீண்டும் அவன் முன் கை எடுத்துக் கும்பிட்டவர். “என் பொண்ணுக்கும் என் அக்காப் பையன் கதிருக்கும் கல்யாணம். நீங்க மறக்காமல் உங்க அப்பா… என் நண்பன் முத்துவோட கல்யாணத்துக்கு வந்திருங்க… இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும். நீங்க என் பொண்ணை மறக்குறது தான் நல்லது,” என்றவர் அங்கிருந்து விருட்டெனச் சென்று விட்டார்.

அவர் பேசிவிட்டுச் சென்றதையேப் பார்த்தவன், ‘என் மாமனார் ரொம்பக் கோபக்காரரா இருப்பார் போலவே…,’ என்று நினைத்தவன். ‘மாமா! உன் பொண்ணு எனக்குத் தான்,” என்று சொல்லித் தன் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டான்.


துர்காவை ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து நேராக ஏர்போர்ட் அழைத்து அவளுக்கென்று ஸ்பெஷல் விமானம் மூலம் துர்காவை அழைத்துக் கொண்டு ஆதியும் அவனுடன் விக்கி, லதா, விவேக் என அனைவரும் கிளம்பி இந்தியா வந்துவிட்டனர்.

துர்கா வீட்டிற்கு வருவதற்குள் அவள் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு வரலாம் என்று விசாலாட்சி, கனகா, செண்பகம், வடிவு நால்வரும் சென்று இருந்தனர். லதாவையும் விவேக்கையும் ஏர்போர்ட்டில் இருந்து அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்த ஆதி. விக்கியை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டு துர்காவோடு அவன் வீட்டிற்குச் சென்றான்.

கோவிலில் துர்காவுக்காக ஏற்பாடு செய்திருந்த பூஜைகள் முடிந்து விட…. விசாலாட்சி மணியைப் பார்க்க துர்கா வீட்டுக்கு வரும் நேரம் ஆகிவிட்டதால் ஐயரிடம் சொல்லிப் பிரசாதத்தை மட்டும் வாங்கியவர். மற்ற அனைத்தையும் செண்பகத்தையும் கனகாவையும் கோவிலில் இருந்து எடுத்துக் கொண்டு பின்னால் வரச் சொல்லிவிட்டு விசாலாட்சி வடிவை மட்டும் தன்னோடு அழைத்துக் கொண்டு முதலில் வீட்டிற்குச் சென்றார்.

விசாலாட்சி வடிவுடன் வீட்டுக்கு வந்தவர் துர்காவை வரவேற்பதற்காக ஆரத்தி கரைத்து வைத்துக்கொண்டு துர்காவுக்காகக் காத்திருக்க….. அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் அனைவரும் வேகமாக வாசலில் நோக்கி வந்தனர்.

துர்காவை ஏர்போர்ட்டுக்கு அழைத்து வந்தவர் அனுப்பி இருந்த கார் தான் வந்திருந்தது. காரின் முன் சீட்டில் இருந்து கதவைத் திறந்து கொண்டு விக்கி இறங்கினான். அவனைப் பார்த்த அனைவரும் ஆதி எங்கே என்று விக்கியிடம் கேட்க… அப்போது சரியாக ஒரு ஆம்புலன்ஸ் அவர்கள் வீட்டின் வாசல் முன் வந்து நின்றது.

துர்காவை நேராக ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லாமல் அவளை ஒரு ஆம்புலன்ஸ் உதவியுடன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர். இப்போது துர்காவிற்கு இருக்கும் ஆபத்திற்கு ஹாஸ்பிடலில் வைத்து அவளுக்கு மருத்துவம் பார்ப்பது சரியாக இருக்காது என்று வீட்டிலேயே வைத்து அவளுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து ஆதி அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டான்.

பிரபலமான ஹாஸ்பிடல் ஆம்புலன்ஸில் இருந்து இறங்கிய ஆதி அவனுடன் ஒரு மருத்துவரையும் அவர்களுடன் இரண்டு நர்ஸ்களையும் அழைத்து வந்திருந்தான். ஸ்ட்ரெச்சரில் துர்காவை அழைத்து வந்தவர்கள் வாசலில் துர்காவை ஆதியுடன் நிறுத்த இருவரையும் சேர்த்து வைத்து ஆரத்தி எடுத்த விசாலாட்சியும் வடிவும். ஆரத்தி எடுத்துத் துர்காவிற்குக் போட்டு வைத்தவர் துர்காவின் தலையை வாஞ்சையாகத் தடவிக்கொடுக்க… துர்கா அவரைப் பயந்தவாரே பார்த்தாள். துர்காவை இந்த நிலையில் பார்த்தது இருவருக்கும் அழுகை வந்திட..

அவர்கள் இருவரையும் சமாதானம் செய்த விக்கி, “இதற்கே இவ்வளவு வருத்தப்பாடுகிறார்களே… இவர்களுக்கு மட்டும் துர்கா பழசை எல்லாம் மறந்துவிட்டாள் என்று தெரிந்தால் என்ன செய்வார்களோ,” என்று ஆதியிடம் வந்து மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் சொன்னான்.

“எப்படியும் இந்த விஷயம் தெரிந்து தானே ஆக வேண்டும். பார்த்துக்கலாம் வா…” என்று துர்காவை அழைத்துக்கொண்டு அனைவருடனும் உள்ளே சென்றான் ஆதி. ஆதியுடன் உள்ளே சென்ற அனைவரும் துர்காவைச் சுற்றி நின்று கொண்டு அவளிடம் எல்லோரும் பேச… அவர்களை எல்லாம் பார்த்துப் பயந்து கொண்ட துர்கா ஆதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “இவங்க எல்லாம் யாரு ஆதி? எனக்கு இவங்க என்னைக் கேட்குறாங்கனே தெரியலை,” என்று ஆதியிடம் கேட்டாள்.

துர்கா தங்களைப் பார்த்து யார் என்று கேட்டதும் அனைவரும் அதிர்ந்து போய் எல்லோரும் ஆதியைப் பார்த்தனர்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured