Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 132

உன் ரகசிய ரசிகை நான் 132

by Layas Tamil Novel
202 views

தன்னைப் பற்றிய எல்லா விவரங்களும் ஆதிக்குத் தெரிந்திருக்கிறது என்ற விஷயம் சங்கவிக்குத் தெரிய வர, அவள் ஆதியை எதிர்கொள்ள முடியாமல் பயத்திலும் பதட்டத்திலும் மண்டபத்திலேயே மயக்கம் போட்டுக் கீழே விழ…

சங்கவி மயக்கம் போட்டுக் விழுந்ததைப் பார்த்துப் பதறியடித்துக் கொண்டு அவள் அருகில் வந்த வேதாச்சலம், அவளைத் தூக்கித் தன் மடியில் படுக்க வைத்து அவள் கன்னத்தில் தட்டிச் சங்கவியை எழுப்ப முயற்சித்தார்.

சங்கவி கண் திறக்காமல் போகவே, பதறிய வேதாச்சலம் தன்னருகில் நின்றிருந்த சிவகாமியிடம், “ஏய் சிவகாமி, என்ன அப்படியே பார்த்துட்டு நின்னுட்டு இருக்க? நம்ம பொண்ணு மயக்கம் போட்டுக் விழுந்துட்டா, சீக்கிரம் போய்த் தண்ணி கொண்டு வா…” என்று சொல்ல, சிவகாமி அங்கிருந்து நகராமல் அப்படியே சிலை போல நின்றிருந்தார்.

சிவகாமி எங்கும் நகராமல் வேதாச்சலம் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அப்படியே நிற்பதைப் பார்த்த வேதாச்சலத்திற்கு ஆத்திரமாக வந்தது. இப்போது கோபப்படுவதற்கு நேரமில்லை என்று உணர்ந்தவர், மண்டபத்தில் தன்னைச் சுற்றி நின்றிருந்தவர்களிடம், “தயவுசெய்து யாராவது தண்ணீர் கொண்டு வந்து கொடுங்க… என் பொண்ணு மயக்கம் போட்டுட்டு விழுந்து கிடக்கிறா பாக்குறீங்களே! இப்படி யாரும் உதவி பண்ணாம இருக்கிறது சரியில்லை,” என்று இருந்தும் சுற்றி இருந்தவர்களைப் பார்த்து உதவி கேட்க…

ஆனால் அவரைச் சுற்றி இருந்தவர்கள் அனைவருமே சங்கவி செய்த காரியங்களை நினைத்து அவளுக்கு உதவ முன் வராமல் தங்கள் மனதை கல்நெஞ்சு ஆக்கிவிட்டு நின்றனர்.

இதை வேதாச்சலம் எதிர்பார்க்கவே இல்லை. தன் மகள் இப்படி ஆபத்தான நிலையில் மயக்கமும் போட்டுக் விழுந்திருக்கும் வேளையில்கூட, அங்கிருக்கும் யாருக்குமே அவளுக்கு உதவ வேண்டும் என்று எண்ணம் வரவில்லையே என்று மனதில் அடித்துக்கொண்டவர், இருந்தும் தன் மகள் செய்த காரியத்திற்கு இவர்கள் இப்படி இருப்பது நியாயம்தானே என்று ஒருபுறம் யோசிக்கவும் செய்தார்.

வேதாச்சலம் சங்கவியை மடியில் கிடத்திக் கொண்டே மீண்டும் அனைவரிடமும் கெஞ்சினார். “தயவுசெய்து யாராவது தண்ணி கொண்டு வந்து கொடுங்கள்,” என்று வேதாச்சலம் கெஞ்சிக் கொண்டிருக்க, அப்போது அவர் முகத்தருகே தண்ணீர் பாட்டிலை ஒரு கை நீட்டியது.

அவர் இருந்த பதட்டத்தில் அந்தத் தண்ணீரை யார் கொண்டு வந்து கொடுத்தார்கள் என்று பார்க்கவில்லை. வேகமாகத் தண்ணீர் பாட்டிலை வாங்கி, அதைத் திறந்து, அதில் சிறிது தண்ணீரை எடுத்துச் சங்கவியின் முகத்தில் தெளிக்க…

முகத்தில் சில்லென்று தண்ணீர் பட்டதும் சங்கவி மயக்கம் தெளிந்து லேசாகக் கண் விழித்துப் பார்த்தாள். அவள் கண் விழித்ததும் சந்தோஷம் அடைந்த வேதாச்சலம், தனக்குத் தண்ணீர் கொடுத்து உதவியவரிடம், “நன்றி,” சொல்லிக்கொண்டே அவரைப் பார்த்துப் பாட்டிலை நீட்டியவர், தன் எதிரில் அவருக்குத் தண்ணீர் கொடுத்த நபர் நின்று இருக்க, அவரைப் பார்த்ததும் வேதாச்சலத்திற்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது.

அவர் எதிரிலே துர்கா சிரித்த முகமாக வீல் சேரில் அமர்ந்திருந்தாள். துர்காவைப் பார்த்ததும் வேதாச்சலத்திற்குக் குற்ற உணர்ச்சியாகப் போய்விட்டது. ‘இவனை ஆதியிடமிருந்து பிரிப்பதற்காகத்தானே என் மகள் இத்தனை வேலை செய்தாள். இவளைக் கொல்வதற்குக்கூடத் துணிந்தாளே! ஆனால் இருந்தும் சங்கவிக்கு துர்கா உதவி இருக்கிறாளே!’ என்று நினைத்தவர், அவளின் பெருந்தன்மையை நினைத்து ஆச்சரியப்பட்டார்.

“என் துர்காவைப் பார்த்தீங்களா அங்கிள்? பழசு எல்லாம் மறந்துட்டு, என்னைக் கூடச் சரியா அடையாளம் தெரியாமல், அவளையே அவளுக்கு யாருன்னு தெரிஞ்சுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கா. அப்படி இருந்தும் அவ உங்க பொண்ணுக்கு உதவி இருக்கான்னா, அவளோட மனசு எப்படிப்பட்டது என்று நீங்கள் இப்போது புரிந்துகொள்ளுங்கள்,” என்று சொன்ன ஆதி, துர்காவிடமிருந்து தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டவன், “போதும் சொல்லிட்டாங்க துர்கா, வா…” என்று துர்காவின் வீல் சேரைத் தள்ளிக் கொண்டு போக…

அப்போது வீல் சேர் நகர முடியாமல் அப்படியே நின்றது.

வீல் சேரை நகர்த்த ஆதி முயற்சிக்க, அது நகராமல் போகவே, “என்ன?” என்பது போலக் குனிந்து அதன் சக்கரங்களைப் பார்க்க, சங்கவி வேதாச்சலத்தின் மடியில் படுத்தவாறு ஒரு கையால் துர்காவின் வீல் சேரை நகர விடாமல் பிடித்துக் கொண்டிருந்தாள்.

ஆதி புருவம் சுருக்கிச் சங்கவியைக் கேள்வியுடன் பார்க்க… சேரை விடாமல் பிடித்துக்கொண்டு ஆதியைப் பார்த்தவள், “இவளுக்காகத் தானே என்ன வேண்டாம் என்று சொன்னே? இவளுக்காகத் தானே என்னை இத்தனை பேர் முன்னாடி அவமானப்படுத்தினே? இவளே இல்லைன்னா நீ என்ன பண்ணுவ?” என்று சொன்ன சங்கவி, வேகமாக வேதாச்சலத்தின் மடியிலிருந்து எழுந்தவள், துர்காவின் கழுத்தைப் பிடித்து நெரிக்க ஆரம்பித்தாள்.

இதை அங்கிருந்தவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. சங்கவி இப்படித் திடீரென்று துர்காவின் கழுத்தைப் பிடித்து நெரிப்பதைப் பார்த்து அனைவரும் பதறிப் போக… ஆதி சங்கவியின் நோக்கம் அறிந்து அவளிடமிருந்து வீல் சேரை நகர்த்த முயற்சிக்க… சங்கவி வீல் சேரை விட்டு விட்டு, தன் இருக்கையிலும் துர்காவின் கழுத்தைப் பிடித்து நெரித்தாள்.

இதை எதிர்பாராத ஆதி வீல் சேரை விட்டு விட்டு, நேராகச் சங்கவியிடம் வந்தவன், துர்காவின் கழுத்தில் இருந்த சங்கவியின் கையைப் பிடித்து இழுக்க…

தன் அருகில் வந்த ஆதியின் சட்டையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு துர்கா ஆதியைப் பார்த்து, “ஆதி… எனக்கு… பயமா இருக்கு,” என்று சொல்ல…

“நீ பயப்படாதே துர்கா…” என்றவன், சங்கவியின் கையை ஒரே இழுப்பில் துர்காவின் கழுத்திலிருந்து இழுத்தவன், அவளை ஓங்கி ‘பளார்’ என்று அறைய… தன் கன்னத்தில் கை வைத்து கன்னத்தைத் தேய்த்துவிட்டுக் கொண்டே சங்கவி ஆதியைப் பார்த்தாள்.

துர்காவைச் சங்கவி அதிகமாக இறுக்கியதில் மூச்சுத் திணறி துர்கா அப்படியே மயங்கி விழுந்தாள். துர்கா மயக்கம் போட்டுக் சேரிலேயே விழுந்ததும், பதறியடித்த விக்கிரம் அவளிடம் வந்து அவள் முகத்தைத் தட்டி துர்காவை எழுப்பப் பார்க்க, துர்கா கண் விழிக்கவில்லை.

துர்காவைப் பார்த்துக் கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்த நர்சுகள் துர்கா மயங்கியதும் அவளிடம் அவசர அவசரமாக வந்தவர்கள், “சார், நாங்க இவங்களைப் ரூமுக்குக் கூட்டிட்டு போய்ப் பார்க்கிறோம்,” என்று சொல்லிவிட்டு மற்றவர்கள் உதவியுடன் துர்காவை மேலே அவள் ரூமுக்கு அழைத்துச் செல்ல, துர்காவுடன் கீர்த்திகாவும் ஷிவுவும் சென்றனர்.

துர்காவை அறைக்குக் கொண்டு செல்லும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதி, திரும்பிச் சங்கவியைப் பார்த்து, “இவ்வளவு பட்டும் உனக்கு இன்னும் புத்தி வரவில்லையா சங்கவி?” என்றவன், “நானும் ஒரு பெண் என்று பொறுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், நீ என் பொறுமையை மிகவும் சோதிக்கிறாய்,” என்றவன்.

“இனியும் நான் பொறுமையாக இருக்கப் போவதில்லை,” என்று சொல்லிவிட்டுத் தன் மொபைலை எடுத்து போலீசுக்கு அழைக்கப் போக…

அவனிடம் வந்த வேதாச்சலம், “ஆதி, இந்த ஒரு தடவை என் பொண்ணை மன்னிச்சு விட்டுடு ஆதி. இனிமேல் அவ நீ இருக்கிற இடம் பக்கமே, உன் குடும்பத்து பக்கமே வராமல் நான் பார்த்துக்கிறேன். அவள் செய்த எல்லா விஷயத்துக்கும் நான்தான் முழு காரணம். என்னாலதான் அவள் இந்த அளவுக்கு மாறி இருக்கா. சங்கவியை மன்னிச்சு விட்ரு ஆதி. அவளை நான் பார்த்துக்கிறேன்,” என்று வேதாச்சலம் கெஞ்ச…

“உங்களுக்கு உங்க பொண்ணு பத்தி இன்னும் சரியா தெரியல அங்கிள். கொஞ்சம் திரும்பி அவள் முகத்தைப் பாருங்க. அவளுக்காக நீங்க என்கிட்ட எவ்வளவு கெஞ்சிகிட்டு இருக்கீங்க… அவள் அம்மா அவள் மேல கோபமா அவளைத் திரும்பி கூடப் பார்க்காம இருக்காங்க… இத்தனையும் பார்த்து கூட இன்னும் அதே கெட்ட எண்ணத்தோடையே இருக்கா. அவளுக்குச் சரியான ஒரு தண்டனையை கொடுத்தாத்தான் அவளுக்குக் கொஞ்சமாவது புத்தி வரும்,” என்று சொன்ன ஆதி.

“சங்கவி சுவிட்சர்லாந்தில் இருந்துகிட்டு டென்மார்க்கில் ஷூட்டிங்கில் இருந்த துர்காவைக் கொலை செய்ய ஏற்பாடு பண்ணியிருக்கா… நாடு விட்டு நாடு இருக்கும்போதே இத்தனை விஷயம் செய்றவ நம்ம எல்லாம் ஒரே ஊர்ல, ஒரே குடும்பமா இருக்கும்போது இவளை நம்பி எப்படி விட்டு வைக்கச் சொல்றீங்க?” என்று ஆதி சொல்ல…

“ஆதி, நீ சொல்றது கொஞ்சம்கூட நம்பும்படியா இல்லை… அவளுக்கு டென்மார்க்கில் யாரைத் தெரியும்? சங்கவி யாரை வச்சு துர்காவைக் கொல்லத் திட்டம் போட்டா?” என்று வேதாச்சலம் புரியாமல் கேட்க…

“நீங்க சொல்றது கரெக்ட்தான் அங்கிள். டென்மார்க்கில் சங்கவிக்கு யாரையும் தெரியாது. அப்படி இருந்தும் அவள் துர்காவைக் கொல்ல நினைச்சிருக்கான்னா, அவளோட எண்ணம் எப்படிப்பட்டது என்று நீங்களே புரிந்துகொள்ளுங்கள். சங்கவி டென்மார்க்கில் யாரை வச்சு துர்காவைக் கொலை செய்யத் திட்டம் போட்டாள் என்று உங்களுக்கு ஆதாரத்தோட நான் நிரூபித்துக் காட்டுகிறேன். அப்போவாவது உங்க பொண்ணோட குணத்தைப் பத்தி நீங்க புரிஞ்சிக்குவீங்க,” என்று ஆதி சொல்ல…

வேதாச்சலம் என்ன சொல்வது என்று தெரியாமல் ஆதியைப் பார்க்க… “இப்பவே இந்த இடத்திலேயே துர்காவைக் கொல்ல சங்கவி யாரை ஏற்பாடு செய்தாள் என்று நான் உங்களுக்குக் காட்டுகிறேன்,” என்று சொன்னவன், அவரிடம் இருந்து நேராக லதாவிடம் வந்தவன் லதாவைப் பார்க்க…

இங்கிருந்த அனைவரும் ஒரு நிமிடம் ஆதி லதாவின் அருகில் போய் நின்றதும், லதா தான் துர்காவைக் கொல்லச் சங்கவி ஏற்பாடு செய்த ஆள் என்று நினைத்து விட…

அவள் தான் நின்று இருந்த இடத்தை விட்டுச் சற்று விலகி நிற்கவும், அவளைப் புரியாமல் மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்க… இதுவரை இங்கு நடந்தது எல்லாம் லதாவின் பின் நின்று பார்த்துக் கொண்டிருந்த விவேக், எப்போது ஆதி தன் எதிரில் வந்து நிற்பதைப் பார்த்ததும்… விவேக்கின் முகம் ஆதியின் சிவந்த கோபமான கண்களையும் அவன் முகத்தையும் பார்த்ததும் பயத்தில் விவேக்கின் முகம் வெளிறிப் போய்விட்டது.

விவேக்கைப் பார்த்த ஆதி, “என்ன விவேக், என்னைப் பார்த்ததும் உன் முகம் ஏன் இப்படி வெளிறிப் போச்சு?” என்று கேட்டான்.

“சார்… அ… அது… அது வந்து…” என்று விவேக் வார்த்தைகளை விழுங்கித் திக்கித் திணறிப் பேச…

“ஏன் விவேக், என்கிட்ட பேச உனக்கு என்ன பயம்? நீ எதுவும் தப்பு செஞ்சிருந்தா தானே என்கிட்ட பயப்படணும்?” என்ற ஆதி கேட்க…

ஆதியின் எதிரில் நின்று இருந்த விவேக் ஆதியின் இந்த முகத்தைப் பார்த்து அரண்டு போனவன், பயத்தில் நடுங்க…

“சொல்லு… விவேக், நீ எதுவும் தப்பு செஞ்சிட்டயா? அதனால்தான் நீ என்னைப் பார்த்து இப்படிப் பயந்து நடுங்கறியா?” என்று ஆதி கேட்டான்.

“சார்… என்ன மன்னிச்சிடுங்க,” என்று சொல்லி விவேக் கதறியப்படியே ஆதியின் காலில் விழுந்து கெஞ்ச…

இங்கிருந்தவர்கள் விவேக் ஆதியின் காலில் விழுந்து கெஞ்சுவதைப் புரியாமல் பார்க்க… கதிர் ஆதியிடம் வந்தவன் ஆதியின் தோளைத் தொட்டு, “அண்ணா, இங்க என்ன நடக்குது?” என்றான். “சங்கவிக்கும் நம்ம விவேக்கும் என்ன சம்பந்தம்? நீங்க ஏன் விவேக்கிட்ட இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க?” என்று கதிர் கேட்க…

“நீதான் கதிர், இவனை நம்ம விவேக் அப்படின்னு சொல்ற. ஆனா இவன் நம்ம யாரையுமே அப்படி நினைக்கவே இல்லை. அந்தச் சங்கவி கொடுக்கிற காசுக்காக இவன், துர்கா டென்மார்க்கில் நடித்துக் கொண்டிருந்த ஷூட்டிங்கில் அவள் இருபது அடியிலிருந்து குதிக்க இருந்தபோது, அவளைக் கட்டியிருந்த கயிற்றை யாருக்கும் தெரியாமல் விவேக் அறுத்துவிட்டு இருக்கிறான். அது உனக்குத் தெரியுமா?” என்று சொன்னான் ஆதி.

ஆதி சொன்னதைக் கேட்டு அதிர்ந்த கதிர் விவேக்கைப் பார்த்து அவன் சட்டையைப் பிடித்து அவனைத் தள்ளிக்கொண்டு போய்ச் சுவற்றில் மோதி நிறுத்தியவன், சுவற்றோடு சேர்த்து அழுத்தி விவேக்கை மேலே தூக்கியவன். “டேய் விவேக், அண்ணா சொல்றது எல்லாமே உண்மையா? அண்ணா சொன்ன மாதிரி நீதான் துர்கா கீழே விழக் காரணமா இருந்தியா? இந்தச் சங்கவி சொல்றத கேட்டுட்டு நீ இப்படி எல்லாம் நடந்துகிட்டியா?” என்று கதிர் ஆத்திரமாக அவன் சட்டையைப் பிடித்து உலுக்கிக் கேட்க…

விவேக் கதிர்இன் முகத்தைப் பார்க்க முடியாமல் தலை குனிந்தவன், “என்ன மன்னிச்சிடுங்க சார். நான் ஏதோ அப்போ எனக்கு இருந்த கஷ்டத்துல அதெல்லாம் யோசிக்காம அவ கொடுக்கிற காசுக்காக இப்படி நடந்துகொண்டேன். ஆனா அதன் பிறகு தினம் தினம் நான் செய்த தவறுக்காக நான் எவ்வளவு வருந்தினேன் என்று எனக்கு மட்டுமே தெரியும்,” என்ற விவேக் கதிர்இடம் மன்னிப்பு கேட்க…

“ச்சி… நாயே! என்கிட்ட வந்து மன்னிப்புக் கேட்க உனக்கு என்ன தகுதி இருக்கு?” என்று சொன்னவன். “உன்னால இப்போ துர்கா எந்த நிலையில் இருக்கிறாள் என்று நீ பார்த்தாய் தானே! அவளை இப்படி செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது? துர்கா உன்னையும் லதாவையும் எவ்வளவு நல்லா நடத்தினாள்னு எங்களை விட உனக்கு நல்லா தெரியும். அப்போ அவளுக்கு இந்த மாதிரி ஒரு காரியத்தைச் செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது? எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் இது போன்ற தப்பான ஒரு காரியத்தைச் செய்ய உனக்கு எப்படித் தைரியம் வந்தது?” என்று கதிர் விவேக்கின் சட்டையைப் பிடித்து உலுக்க…

இங்கு நடப்பதெல்லாம் பார்த்த சங்கவி, என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே நின்றாள்.

ஆதியிடம் வந்த வேங்கடாச்சலம் ஆதியின் தோளைத் தொட்டு, “ஆதி, இங்கு என்னப்பா நடக்குது? இத்தனை விஷயம் எங்களைச் சுற்றி நடந்திட்டு இருக்கு. இத்தனை விஷயம் நடந்திருக்கு நீ அத்தனை கஷ்டத்தையும் உன்னோட மனசுக்குள்ள போட்டு அழுத்தி வச்சுக்கிட்டு எங்க முன்னாடி எப்படி உன்னால இவ்வளவு சகஜமா இருக்க முடிஞ்சது?” என்று கேட்டார் வேங்கடாச்சலம்.

“இதையெல்லாம் எங்களுக்கு எதுவுமே தெரியாம பார்த்துக்கிட்டு, எப்படி நீ எங்க முன்னாடி இவ்வளவு சந்தோசமா உன்னைக் காட்டிக்க முடிஞ்சுது?” என்று சொல்லி விசாலாட்சி ஆதியிடம் கேட்டார்.

“நானும் இந்தச் சங்கவி சரியாயிடுவா… சரியாயிடுவான்னு… அவள் செய்கிற ஒவ்வொரு விஷயமும் தெரிஞ்சும் எதையும் கண்டுக்காம இருக்கணும்னு நினைச்சேன். அவளே தன்னைத் திருத்திக்குவா. அவளைத் தண்டிக்க எனக்கு ஒரு நிமிஷம் போதும்பா… ஆனா சிவகாமி அத்தைமுகத்துக்காகத் தான் நான் பொறுமையா இருந்தேன். ஆனா அவ எப்போ இத்தனை பேர் முன்னாடி என் துர்காவைப் தப்பா பேசினாளோ, இதுக்கு மேலயும் என்னால பொறுத்துட்டுப் போக முடியாதுப்பா. இதுவே துர்காவுக்குப் பழைய நினைவுகள் எல்லாம் இருந்து, அந்தச் சங்கவி பேசுறது எல்லாம் துர்கா கேட்டா, அவள் இந்த நேரம் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க,” என்ற ஆதி.

“அவ செஞ்ச எல்லா விஷயமும் சிவகாமி அத்தைக்கு நல்லாவே தெரியும். நான் ஏற்கெனவே சங்கவி செய்த அத்தனை விஷயங்களையும் அவங்க கிட்டே முன்னமே சொன்னேன். முதல்ல அவங்க சங்கவி இப்படி எல்லாம் செய்திருக்க மாட்டான்னு நான் சொன்ன விஷயங்களை நம்ப மறுத்தாங்க. பிறகு நான் இப்போ உங்க எல்லாருக்கும் காட்டின அந்த வீடியோவை ஆதாரமா சிவகாமி அத்தைகிட்ட காட்டித்தான் சங்கவி எப்படிப்பட்டவள் என்று அவர்களுக்குப் புரிய வச்சேன். அத்தை சங்கவிக்காக என்கிட்ட மன்னிப்புக் கேட்டு, இந்த ஒரு தரம் அவளை மன்னிச்சிடுப்பா… இனிமேல் அவள் எதுவும் இந்த மாதிரி காரியம் எல்லாம் செய்யாம நான் பார்த்துக்கிறேன்னு அவங்க எனக்கு உத்தரவாதம் கொடுத்தாங்க. அதுவும் இல்லாம, அவளுக்கு அவங்க அப்பா மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கிறதாவும், சங்கவி எல்லோரையும் போலக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமான வாழ்க்கையை வாழப் போறா… அப்படி இருக்கும்போது அவளோட பேரு இப்படிக் கெட்டுச்சுன்னா, நாளைக்கு யாரு அவளைக் கல்யாணம் பண்ணிக்குவாங்கன்னு சொல்லி அவங்க ரொம்ப வருத்தப்பட்டு என்கிட்ட கேட்டுக்கிட்டதனால தான் நான் இந்த விஷயங்கள் எல்லாம் சொல்லல. ஆனா அவள் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சிவகாமி அத்தைகிட்ட சொன்னது என்னைப் பற்றித்தான். அது அவங்களுக்குத் தெரியாம போயிடுச்சு. இங்க வந்த பிறகு அவங்க புரிஞ்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்,” என்று சொல்லி ஆதி சிவகாமியைப் பார்க்க…

இவ்வளவு நேரம் எதுவும் பேசாமல் அமைதியாகக் கல் போல நின்றிருந்த சிவகாமி ஆதி பேசியதெல்லாம் கேட்டவர், “நீ சொன்னது சரிதான் ஆதி. என் பொண்ணு என்ன பண்ணினாலும் என்னால திருத்தவே முடியாதுன்னு இப்போ அவ இத்தனை பேர் இருந்தும் துர்கா கழுத்தை நெரித்துக் கொல்லப் பார்க்கிறான்னா, அவளைத் திருத்துவது கஷ்டம் ஆதி. அவளுக்கு அந்த மாதிரி புத்தி எப்படி வந்தது என்று எனக்கும் தெரியல. அவளை நான் நல்லவிதமாகத் தான் வளர்த்தேன்,” என்று சொன்ன சிவகாமி.

“இதுக்கு எல்லாம் முதல் முக்கிய காரணம் என் புருஷன்தான். எங்ககிட்டே எவ்வளவு வசதிகள் இருந்தும், அவர் அடுத்தவர் பொருளுக்கும் சொத்துக்கும் ஆசைப்பட்டு என் பொண்ணை இப்படி வளர்த்துட்டாரு. அவர் செய்த இந்தக் காரியத்துக்காக நான் உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்புக் கேட்கிறேன். என் பொண்ணை மன்னிச்சு விட்டுடுங்க. என் வீட்டுக்காரர் சொன்னது போல, நீங்க இருக்கிற பக்கமே என் பொண்ணு தலை வச்சு கூடப் படுக்க மாட்டாள். அதுக்கு நாங்க ரெண்டு பேரும் பொறுப்பு,” என்று சொல்ல…

இவ்வளவு நேரம் சிவகாமி பேசியதெல்லாம் கேட்டுக் கொண்டு நின்றிருந்த வேதாச்சலம் சிவகாமியிடம் வந்து, “என்ன மன்னிச்சிடு சிவகாமி. நம்ம பொண்ணு இப்படி ஆனதுக்கு முக்கிய காரணமே நான் தான். எதற்காக நீ எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்க தயாரா இருக்கேன்,” என்று சொன்னவர் சிவகாமியின் கையைப் பிடித்துக் கெஞ்சினார்.

அவர் கையை உதறிய சிவகாமி, “இந்நேரம் காணாமல் போன நம்ம பையன் மட்டும் இருந்திருந்தால், நம்ம பொண்ணை இப்படி இத்தனை பேர் முன்னாடி அவமானப்பட்டு நிற்க விட்டிருப்பானா? அவள் எண்ணிக்கைக்குத் தப்பு செய்கிறான்னு தெரிஞ்சதோ, அப்பவே அவளை கண்டித்துத் திருத்தி இருப்பான். நீங்க செய்ற தப்பையும் கண்டிப்பா அவன் சுட்டிக்காட்டி உங்களையும் கண்டிப்பா மாற்றி இருப்பான். நீங்க இப்படிப் பணம் பணம்னு அடுத்தவங்களுக்குக் கெடுதல் நினைத்தால் தான் அந்த விதி என் பையனை என்கிட்ட இருந்து பிரிச்சுடுச்சு,” என்று சொல்லி அழுதவர்.

அங்கிருந்த அனைவரையும் பார்த்து சிவகாமி கைகூப்பிக் கும்பிட்டு, “என் பொண்ணு உங்க எல்லாருக்கும் செய்த கெடுதலுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன். இந்த ஒரு தடவை அவளை மன்னிச்சு விட்டுடுங்க. இனிமேல் அவளை உங்க பக்கமே நெருங்க விடாமல் பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. என் பொண்ணு செய்த காரியத்திற்காக நான் உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்புக் கேட்கிறேன்,” என்று சொன்னவர் அப்படியே தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து, கைகளைத் தன் தலைக்கு மேல் கூப்பி, “எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க,” என்று சொல்லி அனைவரிடமும் சிவகாமி மன்னிப்புக் கேட்க…

யார் இப்படிச் சிறியவர் பெரியவர் என்று பார்க்காமல் அத்தனை பேர் முன்னிலையிலும் தங்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும் சிவகாமியைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் நிற்க…

விசாலாட்சி, கனகா, செண்பகம் மூவரும் பதறி அடித்துக் கொண்டு சிவகாமியிடம் சென்றவர்கள், அவரைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி, “சிவகாமி, என்ன காரியம் செய்துட்டே…” என்று சொல்லி விசாலாட்சி சிவகாமியைக் கட்டிக் கொண்டு அழ…

“என் பொண்ணு செய்த தப்புக்கு வேற என்ன செஞ்சு உங்க எல்லார்கிட்டயும் எப்படிப் பிராயச்சித்தம் தேடுவது என்று தெரியவில்லை விசாலாட்சி எனக்கு,” என்று சொல்லி விசாலாட்சியைக் கட்டிக்கொண்டு அழ…

அவரிடம் வந்த ஆதி சிவகாமியிடம், “அத்தை, உங்க பொண்ணுக்குத்தான் நான் தண்டனை கொடுக்கணும்னு நினைச்சேன். உங்க ரெண்டு பேருக்கும் கிடையாது,” என்று ஆதி சொல்ல…

“நீ என் பொண்ணுக்குத் தண்டனை கொடுக்கிறதும், எங்களுக்குத் தண்டனை கொடுக்கிறதும் ஒண்ணு தானே ஆதி. அவள் கஷ்டப்படுவதைப் பார்த்து நாங்களும் அவளோடு சேர்ந்து கஷ்டப்படுவோம்,” என்று சிவகாமி சொல்ல…

“இனியும் நீங்க கஷ்டப்பட வேண்டாம் அத்தை,” என்று சொன்ன ஆதி. “உங்க பையன் உங்க கூட இருந்திருந்தால் உங்க பொண்ணைக் கண்டிச்சு வளர்த்திருப்பான் என்று சொன்னிங்களே… நீங்க உங்க காணாமல் போன பையனை உங்க கூட உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லுங்க, நான் சங்கவியை மன்னிச்சு விடுறேன்,” என்றான் ஆதி.

“உங்க மூத்த பையன் சங்கவியைப் பார்த்துக்கோவான்னு நான் நம்புகிறேன்,” என்று சொல்லி ஆதி சிவகாமியைப் பார்க்க…

இவ்வளவு நேரம் சங்கவி செய்த காரியத்திற்காகச் சோகமாக இருந்த சிவகாமி, ஆதி அவரின் காணாமல் போன பையனைத் தன்னுடன் அனுப்புகிறேன் என்று சொன்னது ஆச்சரியமும் சந்தோஷமும் கலந்த உணர்வுகளுடன் ஆதியைப் பார்த்து, “என்ன சொல்ற? ஆதி, நீ என் பையனைக் கண்டுபிடிச்சிட்டியா? நீ எனக்கு வாக்கு கொடுத்தது போலவே என் பையனைக் கண்டுபிடிச்சிட்டியா?” என்று கேட்டுக் கொண்டே ஆதியிடம் வந்தவர் அவன் கையைப் பிடித்துக் கொண்டு, “என் பையன் எங்க இருக்கான் ஆதி? தயவுசெய்து அவனை இப்பவே என் கண்ணில் காட்டிடு. இனியும் என்னால என் பையனைப் பார்க்காமல் இருக்க முடியாது,” என்று ஆதியிடம் அவர் கெஞ்ச…

அப்போது, “அம்மா…” என்று கத்திக் கொண்டு சிவகாமியிடம் வந்த விக்கி, “உங்க மகன் நான் இங்குதான்மா இருக்கேன்,” என்று சொல்லி அவரைக் கட்டிக் கொண்டான்.

விக்கி தன்னைக் கட்டிக் கொண்டு “அம்மா” என்று சொல்லவும், விசாலாட்சி ஆதியைத் திரும்பிப் பார்க்க… அவன், “என்ன அத்தை பார்க்குறீங்க? விக்கிதான் உங்க மகன்,” என்று சொன்னதும், அவனை நம்ப முடியாமல் பார்த்தவர். பின் விக்கிதான் தன் மகன் என்று தெரிந்ததும் சிவகாமியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரும் விக்கியைக் கட்டிக் கொண்டு அவன் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தவர்.

ஆதியைப் பார்த்து “நன்றி,” சொன்னவர் வேதாச்சலத்திடம் விக்கியைக் காட்டி, “ஏங்க, நம்ம பையன் கிடைச்சுட்டான்,” என்று சொன்னவர், அனைவரிடமும் “என் பையன் கிடைத்துவிட்டான்,” என்று மகிழ்ச்சியோடு சொல்லிச் சந்தோஷப்பட்டார்.

வேதாச்சலம் முதற்கொண்டு அங்கிருந்த அனைவருக்கும் விக்கிதான் சிவகாமியின் தொலைந்து போன மகன் என்று தெரிந்ததும் ஆச்சர்யமாக அவர்கள் இருவரையும் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

விக்கியிடம் வந்த வேதாச்சலம், தன் காணாமல் போன மகன்தான் விக்கி என்று தெரிந்ததும் விக்கியைக் கட்டிக் கொண்டு வேதாச்சலம் அழ…

அங்கு நின்று இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சங்கவி, தன்னை யாரும் இப்போது கவனிக்கும் நிலையில் இல்லை என்று உணர்ந்தவள், யாருக்கும் தெரியாமல் மண்டபத்தை விட்டு வெளியேறினாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured