துர்கா ஆதிக்கு போன் செய்து தன் வீட்டில் தனியாக இருப்பது போர் அடிக்கிறது என்று சொல்லி அவனை ஆபீஸில் இருந்து சீக்கிரம் வரச் சொல்ல… அவளை வேண்டுமென்றே வம்பு இழுப்பதற்காகத் தனக்கு வேலை இருக்கிறது, வருவதற்கு இரவு ஒரு மணிக்கு மேல் ஆகிவிடும் என்று ஆதி துர்காவிடம் சொன்னான்.
அவன் மீது கோபம் கொண்டு போனை வைத்து விட்டாள் துர்கா. போனை வைத்த துர்கா கைகளைக் கட்டிக்கொண்டு முகத்தை உம்மென்று தூக்கி வைத்துக்கொண்டு கோபமாக அமர்ந்திருந்தால்.
‘நான் இங்கே தனியா இருக்கப் போர் அடிக்குதுன்னு சொல்ற… என்னைப் பார்க்க வரேன்னு சொல்றானா? இப்பவும் வேலை இருக்குன்னு தானே சொல்றாங்க’ என்று துர்கா ஆதியின் மீது கோபப்பட…
ஆதி துர்கா அவனுக்குக் கால் செய்திருக்கும்பொழுது வீட்டிற்கு வந்து விட்டான். ஹாலைத் தாண்டி மேலே வரும்பொழுது தான் துர்கா அவனுக்குக் கால் செய்ய, அவளிடம் வேண்டுமென்று தான் வருவதற்கு நேரம் ஆகும் என்று அவளிடம் வம்பிழுத்துக் கொண்டு இருந்தான்.
அந்தக் கோபத்தில் துர்கா அமர்ந்திருக்க… அப்போது அவள் அறை கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் யார்? என்று துர்கா திரும்பிப் பார்க்கவும்.
ஆதி அவள் அறை கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர…. இவ்வளவு நேரம் துர்காவுக்கு இருந்த கோவங்கள் எல்லாம் மறைந்து, ஆதியைப் பார்த்ததும் சந்தோஷமாக, “ஆதி, நீ வரதுக்கு லேட்டாகும் என்று சொன்ன சீக்கிரமா வந்துட்டே” என்று சொல்லி அவனைப் பார்த்துச் சிரித்தவாறு தன் கைகள் இரண்டையும் நீட்டி அவனைத் தன் அருகில் அழைக்க…
தன்னைச் சிரித்த முகமாக அழைப்பதைப் பார்த்ததும் கையில் இருந்த போனைப் பாக்கெட்டில் வைத்த ஆதி வேகமாக துர்காவின் அருகில் வந்து அவளைக் கட்டிக் கொண்டான்.
அவன் கைக்குள் தன்னைப் போர்த்திக் கொண்ட துர்கா, ஆதியைக் கட்டிக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்க்க…
ஆதியின் கண்களில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்ப்பதற்கு துர்காவுக்குப் பிடித்திருக்க, அவன் கண்களில் தெரிந்த சந்தோஷம் அவன் மனதில் வெளிப்பாடு என்று துர்காவுக்குப் புரியவில்லை.
ஆதியின் மனநிலையைப் புரிந்து கொள்ளும் நிலையில்தான் துர்கா இப்போது இல்லையே.
அவளுக்குச் சீக்கிரமாகப் பழைய நினைவுகள் வரவேண்டும் என்று ஆதி நினைக்காத நாளில்லை. அவளோடு தன் வாழ்க்கையைச் சந்தோஷமாக ஆரம்பிக்க வேண்டும் என்று, துர்காவின் பழைய நினைவுகள் திரும்புவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறான் ஆதி.
இந்த நிலையில் கூட துர்கா அவனைக் காதலிப்பதை உணர்ந்த ஆதிக்கு, என்ன சொல்லித் தன் உணர்வுகளை வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை.
ஆதியின் கண்களை மட்டும் பார்த்த துர்காவுக்கு அவன் முகபாவம் எப்படி இருக்கிறது என்று தெரியாமல் போகவே, அவன் அணிந்திருந்த மாஸ்க்கை தன் கையை உயர்த்தி கழற்றியவள் அவன் முகத்தைப் பார்க்க….
சிறு புன்முறுவலோடு ஆதி அவளைப் பார்த்து, “என்ன?” என்று கேட்டான்.
“ம்ஹும்… நீ மாஸ்க்கு இல்லாம இருக்கிறப்போ எவ்வளவு அழகா இருக்கு. ஆனா ஏன் மாஸ்க் போட்டுட்டே இருக்க எப்போதுமே?” என்று கேட்டால் துர்கா.
“என்னோட முகம் இப்படி இருப்பது உனக்குப் பிடிச்சிருக்கா? இந்த மாதிரி முகத்தை யாரும் பார்த்து எதுவும் சொல்லிடக் கூடாதுன்னு தான் நான் மாஸ்க் போட்டு இருக்கேன்” என்றான் ஆதி.
“உன் முகத்தை யாரும் பார்த்து எதுவும் சொல்லிடுவாங்களா?” என்று கேட்டால் துர்கா.
“ஆமாம் துர்கா, இப்போது என் முகம் இருப்பதைவிட முன்பு மிகவும் மோசமாக இருந்தது. அப்போது எல்லாம் என்னைக் கண்டால் எல்லோரும் முகத்தைச் சுழித்துக் கொண்டு என்னிடம் பேசவே யோசிப்பார்கள். என் முகத்தைப் பார்க்கும்போது அருவருப்பாக இருப்பது போலத் தங்கள் முகத்தை வைத்துக் கொள்வதைப் பார்க்க எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் அவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பதற்காகவே நான் இந்த மாஸ்க் போட்டு எப்போதுமே தள்ளி இருக்க ஆரம்பித்தேன்.”
“இப்போது வரை எனக்குப் பழக்கமாகிவிட்டது. ஏன் உன் முகத்துல இருக்குற புண்ணு எல்லாம் மருந்து போட்டுச் சரி செய்ய முடியாதா? எனக்கு உடம்பில் இருக்கிற புண்ணை எல்லாம் மருந்து போட்டுத் தானே சரி செஞ்சாங்க. அது மாதிரி உனக்குச் செய்ய முடியாதா?” என்று கேட்டால் துர்கா.
“சரி செஞ்சுட்டு எல்லாம் துர்கா. அதுக்காக நான் ட்ரீட்மென்ட்டும் எடுத்துட்டு தான் வந்திருக்கேன். ஆனா இடையில் உனக்குத் திடீர்னு உடம்பு சரியில்லாமல் போனதால, அந்த ட்ரீட்மென்ட் நான் பாதியிலேயே இருந்தும் தொடராம விட்டுட்டேன்” என்றான் ஆதி.
“அதான் இப்போ எனக்கு உடம்பு சரி ஆயிடுச்சே, நீ ஏன் இன்னும் உனக்கு ட்ரீட்மென்ட் எடுத்துக்காம இருக்க…. நான் மட்டும் உடம்பை நல்லாக் கவனமா பாத்துக்கணும்னு சொல்றியே… நீ மட்டும் ஏன் உன்னைக் கவனிச்சுக்க மாட்டேங்குற…” என்று துர்கா சிறுபிள்ளை போல ஆதியிடம் கேட்க..
“உன்னைக் கவனிச்சுக்க இவ்வளவு பேர் இருக்காங்க… ஆனா என்னை யாரு கவனிச்சுக்குவா?” என்று ஆதி வேண்டும் என்று தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு துர்காவிடம் கேட்க..
“ஆதி என்னைப் பாத்துக்க இங்க நர்ஸ் எல்லாம் வச்சிருக்கேல்ல? அதே மாதிரி உன்னைப் பார்த்துக்க யாரையாவது ஏற்பாடு செய்யலாம் இல்ல? அவங்க உன்னைக் கவனமா பாத்துக்குவாங்க தானே?” என்று கேட்டால் துர்கா.
“அவங்களை எல்லாம் வச்சு என்னைப் பாத்துக்க எனக்குப் பிடிக்கல” என்றான் ஆதி. “யாரை வச்சு உன்னைப் பாத்துக்கிட்டா உனக்குப் பிடிக்கும்?” என்று கேட்டால் துர்கா.
“நீ என்னைப் பாத்துக்கிட்டா எனக்கு ரொம்பப் பிடிக்கும் துர்கா” என்று சொன்னான் ஆதி.
அவன் அப்படிச் சொன்னதும் துர்காவுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் ஆதியையே பார்க்க…
“என்ன பாக்குற துர்கா? நீ என்னைப் பாத்துக்க மாட்டியா?” என்று கேட்டான் ஆதி.
“நானே பெட்ல படுத்து இருக்கேன்னு எப்படி நான் வந்து உன்னை பார்க்கிறது?” என்று கேட்டால் துர்கா.
“நீ எழுந்து வந்து என்னைப் பாத்துக்கணும்னு அவசியம் இல்ல துர்கா… எனக்கு மருந்து போடுற நேரம் எல்லாம் நான் உன்கிட்டக் கொண்டு வந்து தரேன். அப்போ நீ எனக்கு அவங்க கொடுத்து ஆயின்மென்ட் தடவி விட்டாலே போதும்” என்றான் ஆதி.
“அவ்வளவுதானா? நான் கூட எதுவும் நிறைய வேலை செய்யணும்னு நினைச்சேன். அம்மாவுக்கு கூடத் தலைவலிக்குதுன்னு சொன்னப்போ நான் தான் அவங்களுக்குத் தைலம் தேய்ச்சு விட்டேன் தெரியுமா!!!” என்று சொன்ன துர்கா, “சரி உனக்கு மருந்து எப்ப எல்லாம் போடணும்னு சொல்லு, அப்ப நான் போட்டு விடுறேன்” என்று சொன்னாள்.
“நான் குளிச்சிட்டு வந்த பிறகு தினமும் நைட் மறக்காமல் 15 நாள் அந்த மருந்தை போடச் சொல்லி இருக்காங்க. நான் மருந்தை வாங்கிட்டு வந்ததோடு சரி. அதை இன்னும் பிரிக்கவே இல்லை. அப்படியே இருக்கு” என்று ஆதி சொல்ல…
“அப்போ நீ போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா. இது எனக்கு அந்த மருந்து எடுத்துக் கொடு. நான் உனக்குப் போட்டு விடுறேன்” என்று துர்கா சொல்ல…
“இன்னைக்கு வேண்டாம் துர்கா. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. கதிரும் விக்கியும் ஹனிமூன் கிளம்பிப் போயிட்டதால ஆபீஸில் நிறைய எனக்கு வேலை ரொம்ப ஜாஸ்தியா இருந்தது. எனக்குத் தூக்கம் வருது துர்கா” என்று ஆதி மிகவும் டயர்ட் ஆகப் பேச…
“ரொம்ப டயர்டா இருக்கா?” என்று கேட்டால் துர்கா.
“ஆமாம்” என்று பாவமாகத் தலையாட்டினான் ஆதி.
“சரி அப்போ போய்த் டிரஸ் மாத்திட்டு வா. வந்து படு. ரெண்டு பேரும் தூங்கலாம்” என்று துர்கா சொல்ல…
“சரி” என்று சொன்ன ஆதி சென்று உடை மாற்றி விட்டு வந்து துர்காவின் அருகில் படுக்க வர…
ஆதி, “ஒரு நிமிஷம் இரு” என்று சொன்ன துர்கா தன் அறையில் படுக்க வரும் ஆதியின் இடத்தை முதலில் தலையணை வைத்துச் சரி செய்தவள், பின்பு அவளும் படுத்துக்கொண்டு தன் அருகில் வந்து ஆதியைப் படுக்கச் சொன்னாள்.
தனக்காகப் படுக்கையைச் சரி செய்யும் துர்காவைப் பார்த்துக் கொண்டே வந்த ஆதி சற்றுச் சோர்வாக வந்து துர்காவின் அருகில் படுக்க…
அவனுக்குப் போர்வை எடுத்து ஆதிக்கு மார்பு வரை போர்த்தி விட்ட துர்கா தானும் போர்த்திக் கொண்டு அவன் அருகில் படுத்தாள்.
தன் அருகில் படுத்த துர்காவைப் பார்த்து, “துர்கா, இங்கே வந்து படுத்துக்கோ…” என்று சொல்லி தன் கையை நீட்டித் தன் புஜத்தைத் தொட்டுக் காட்டி, “இங்கே தலை வைத்துப் படுத்துக்கோ” என்று சொல்ல, துர்கா ‘சரி’ என்று தலையாட்டிவள், படுத்தவாறே நகர்ந்து வந்து அவன் கை மேல் தலை வைத்து ஆதியைப் பார்த்துத் திரும்பிப் படுத்துக்கொள்ள…
அவள் மீது தன் மற்றொரு கையைப் போட்டு அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துப் படுத்த ஆதி, தன் மார்போடு சேர்த்து துர்காவை அணைத்துக் கொண்டு கண்கள் மூடி உறங்க ஆரம்பித்தான். துர்காவுக்கும் ஆதியின் இந்த அருகாமை அவளுக்கு நன்றாக இருக்க… துர்காவும் அவனோடு சேர்ந்து உறங்கி விட்டாள்.
போதி தன் ஆபீஸில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்க.. அவன் அறை கதவைத் தட்டி விட்டு அவனுடைய பி.ஏ. மித்ரன் உள்ளே வந்தான்.
போதியின் முன் வந்து நின்ற மித்ரன் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க…
ஃபைலில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்த போதி நிமிர்ந்து மித்ரனைப் பார்த்து, “என்ன மித்ரா? வந்ததிலிருந்து எதுவும் பேசாமல் அமைதியா இருக்க… எதுவும் முக்கியமான விஷயமா?” என்று கேட்டான்.
“ஆமாம் சார். ஒரு பிரச்சினை” என்றான் மித்ரன்.
“நீ என்னைக்காவது சந்தோசமான விஷயத்தைக் கொண்டு வந்திருக்கியா? என்கிட்ட எப்ப வந்தாலும் ஏதாவது ஒரு பிரச்சினையைத்தான் கொண்டு வர…. இல்லைன்னா நீயே ஏதாவது ஒரு பிரச்சினையை இழுத்துட்டு வந்துடுற” என்றான் போதி சலிப்பாக.
“நான் என்ன செய்வேன் சார்? என்கிட்ட வரதெல்லாம் பிரச்சினையாகவே இருக்கு. எனக்கு என்ன ஆசையா வேணும்னே பிரச்சினையை இழுத்துட்டு வருவதற்கு” என்றால் மித்ரனும் விடாமல்.
அவனை முறைத்த போதி, “சரி சொல்லு. இப்ப என்ன பிரச்சினையோடு வந்திருக்க?” என்று கேட்டான்.
“அது… அது வந்து…” என்று இழுத்தான் மித்ரன்.
“நம்மளோட மெடிக்கல் காலேஜ்ல ஒரு சின்ன பிரச்சினை” என்றான் மித்ரன்.
“நம்ம காலேஜ்ல என்னடா பிரச்சினை?” என்று யோசித்த போதி கேள்வியாக மித்ரனைப் பார்க்க…
“நம்ம காலேஜ்ல ஏற்கனவே இருக்கிற லேப் உடன் சேர்ந்து புதுசா ஒரு மெடிக்கல் லேப் எக்ஸ்டெண்ட் பண்ணிக் கட்டிடம் கட்டிட்டு இருக்கோம் இல்லையா? அந்தக் கட்டிடத்தைக் கட்டக் கூடாது என்று சொல்லி ஸ்டே ஆர்டர் வாங்கி இருக்காங்க” என்றான் மித்ரன்.
“வாட்!!! யாருடா? இது செஞ்சது?” என்று கேட்டான் போதி கோபமாக.
“வேற யாரும் இல்ல. உன்னோட அத்தையும் அவங்க கணவரும் தான்” என்றான் மித்ரன்.
“என்னடா சொல்ற? என்னோட அத்தையா? நம்ம கட்டிட்டு இருக்குற மெடிக்கல் லேப் அதுக்கு மேல கட்டக்கூடாதுன்னு ஸ்டே வாங்கி இருக்காங்க?” என்று கேட்டான் போதி அதிர்ச்சியாக.
“ஏன் அவங்க இப்படித் திடீர்னு நடந்துக்குறாங்க?” என்று போதி கேட்க..
“ஏன்னா… அவங்க இந்தக் கட்டிடத்தைக் கட்ட விடாம நிறுத்துனதுக்குக் காரணமே நீதான்” என்றான் மித்ரன்.
“நானா? நான் என்னடா பண்ணுனேன்? நான் எதுவுமே செய்யலையே. அவங்க வருத்தப்படும்படியா நான் எதுவுமே நடந்துக்கலையே” என்று புரியாமல் கேட்டான் போதி.
“நீதான் எதுவுமே செய்யலையே. அது தான் இப்போ பிரச்சினை” என்றான் மித்ரன்.
“அவங்க பொண்ணு ரதியை கல்யாணம் பண்ணிக்க சொல்லி உங்ககிட்ட எவ்வளவு முறை கேட்டு இருப்பாங்க… நீங்களும் முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டீங்க.. உங்களை அவங்க வழிக்குக் கொண்டு வருவதற்கு தான் இந்த வேலையைச் செய்திருப்பார்கள் போல” என்றான் மித்ரன்.
“எப்படிடா ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணை உனக்குப் பிடிக்குது. ஆனா உனக்காக உன்னையே நினைச்சுட்டு சுத்திட்டு இருக்குற உன்னோட அத்தை பொண்ணைப் பிடிக்காமல் போயிடுச்சு” என்று போதி துர்காவை ஏற்கனவே விரும்பியதைப் பற்றிச் சொல்லிக் காட்டிய மித்ரன் போதியைப் பார்க்க…
மித்ரனை முறைத்த போதி, “இதுக்கெல்லாம் காரணம் நீ தான்டா.. ராஸ்கல். உன்னோட கேர்லெஸ் மிஸ்டேக் மேல தான் நான் கல்யாணமானது தெரியாமலே அவளை விரும்பினேன். நல்ல வேளையாக சங்கவி, ஆதிக்கும் துர்காவுக்கும் திருமணமான விஷயத்தை எனக்குச் சொல்வதற்கு முன்பே நான் ஆதியுடன் சுவிட்சர்லாந்து செல்லும்போது பிளைட்லயே ஆதி எனக்கு எல்லாம் உண்மையையும் சொல்லிவிட்டான்.”
“ஆதியின் கல்யாணம் எந்தச் சூழ்நிலையில் துர்கா உடன் நடந்தது என்று அவன் எனக்கு எடுத்துச் சொல்லவும், அந்தச் சங்கவியால் துர்காவுக்கு எவ்வளவு பெரிய ஆபத்துகள் வரப் போகிறது என்பதையும் எனக்கு முன்கூட்டியே ஆதி சொன்னதால், அந்தச் சங்கவியிடம் நான் எச்சரிக்கையாக இருந்து விட்டேன். இல்லையென்றால் இந்த நேரம் அவளுடைய சரி திட்டத்திற்கு என்னையும் அறியாமல் நான் அவளுக்கு உடந்தையாக இருப்பேன்” என்று போதி மித்ரனிடம் கூறினான்.
“சரி இப்போது அந்த துர்காவுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு உனக்குத் தெரிஞ்சிடுச்சு. பேசாமல் உன்னோட அத்தை பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே?” என்றான் மித்ரன்.
போதி அவனை முறைக்க, “சரி சரி இது ஆபீஸ்ல. மறந்துட்டு நான் உங்கள உரிமையோடு டா போட்டு பேசிட்டேன்” என்று மித்ரன் கூற…
போதி, “நீ என்ன சொன்ன? துர்காவை மறந்துட்டேன், என் அத்தை பொண்ணு ரதியைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி தானே கேட்ட… ஒரு பொண்ணைப் பார்த்தா அவ நமக்கானவன்னு ஒரு ஃபீல் நமக்கு மனசுல தோணும். அது எல்லாம் இல்லாம யாரோ சொன்னாங்க என்பதற்காக எல்லாம் என்னால அந்த ரதியைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. புரிஞ்சுதா?” என்றவன், “சரி வா நாம காலேஜ் போலாம்” என்று சொல்லி போதி தன்னுடைய பிபி மெடிக்கல் காலேஜ்க்கு மித்ரனுடன் சென்றான்.
