மதுவிடம் திருமணம் குறித்து பவன் பேசினான்.
“நாம் எதற்குத் திருமணம் செய்ய வேண்டும்? இப்படியே இருந்துகொள்ளலாமே,” என்றாள் மது.
அவள் சொன்னதைக் கேட்டு குழம்பிய பவன், “நீ என்ன சொல்றேன்னு புரிஞ்சுதான் பேசுறியா மது?” என்றான்.
“நான் நல்லா யோசிச்சுதான் சொல்றேன் பவன். எனக்குக் கல்யாணத்தில் துளியும் விருப்பம் இல்லை. நம்ம இப்படியே இருக்கணும்னு தான் நினைக்கிறேன். கல்யாணம்ங்கிற உறவுக்குள்ளே போய் நான் என்னோட வாழ்க்கையை ஒரு வட்டத்துக்குள்ள முடிச்சுக்கணும்னு நினைக்கலை. நம்ம ரெண்டு பேரும் இப்படியே எத்தனை வருஷம் வேணும்னாலும் வாழலாம். ஆனால், கல்யாணம்ங்கிற பந்தம் மட்டும் வேண்டாம்,” என்றாள் மது முடிவாக.
“மது, நீ என்ன சொல்றன்னு புரிஞ்சுதான் சொல்றியா? திருமணத்துக்குப் பிறகு நடக்க வேண்டிய விஷயம் அதுக்கு முன்னாடியே நடந்திருச்சு. இதுக்குப் பிறகும் எப்படி நீ நமக்குக் கல்யாணம் வேண்டாம்னு சொல்ற? நியாயப்படி பார்த்தா, நீதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு என்கிட்ட கேட்டு இருக்கணும். இங்கே எல்லாமே தலைகீழா இருக்கே!” என்றான் பவன் குழப்பமாக.
“நீ கேட்கிறது நியாயம் தான், எனக்குப் புரியுது. உன்னை ஏமாத்திட்டுப் போகப் போறது இல்லையே நானும்? நீயும் என்னை ஏமாத்தப் போறது கிடையாது. என்னைக்கு இருந்தாலும் நீயும் நானும் ஒண்ணுதான். உன்னை நான் மனப்பூர்வமா நேசிக்கிறேன். நீயும் அப்படித்தானே என்னை விரும்புற?” என்று கேட்டாள் மது.
“ஆமாம் மது, எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். உன்கூடத்தான் என்னோட வாழ்க்கை முழுவதும் நான் கழிக்கணும்னு நினைச்சு இருக்கேன். ஆனா இப்படி, உறவுக்கு எந்தப் பெயரும் இல்லாம நம்மளால வாழ முடியாது,” என்றான் பவன்.
“ஏன் பவன் வாழ முடியாது? இங்கே எத்தனை பேர் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் அவங்களோட வாழ்க்கையைச் சந்தோஷமாத்தானே வாழ்ந்துட்டு இருக்காங்க? நீ மட்டும் ஏன் முடியாதுன்னு சொல்ற?” என்றால் மது.
மது பேசுவதை பவனால் நம்பவே முடியவில்லை. அவளிடம் என்ன சொல்லிப் புரிய வைப்பது என்று அவனுக்குத் தோன்றவில்லை.
“மது, எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. அம்மா, தங்கை எல்லாருமே இருக்காங்க. அப்படி இருக்கிறப்போ, நான் எப்படி உன்கூட இந்த மாதிரி லிவிங் ரிலேஷன்ஷிப்பில் ஒண்ணா ஊரறிய வாழ முடியும்னு நீ நினைக்கிற? நமக்கான ஒரு வெளிப்படையான உறவு இருந்தா தானே இந்த வாழ்க்கை நல்லா இருக்கும்?” என்றான் பவன்.
“அப்போ, உன் தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணி முடிச்சுட்டு, உன் அம்மாகிட்ட நம்ம ரெண்டு பேரும் இப்படித்தான் வாழப் போறோம்னு சம்மதம் வாங்கிட்டு என்கூடச் சேர்ந்து வாழ வா… இல்லைன்னா நீ உன் வீட்டிலேயே இரு. நான் என் வீட்டிலேயே இருக்கிறேன். இப்படியே நம்ம லைஃப் போகட்டும். என்னால கண்டிப்பா உன்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது பவன்,” என்றாள் மது முடிவாக.
பவனுக்குத் தலையே வெடித்துவிடும் போல இருந்தது. மதுவை என்ன சொல்லித் திருமணத்திற்குச் சம்மதிக்க வைப்பது என்று தெரியவில்லை. தன் தங்கைக்குத் திருமணம் செய்துவிட்டு, அம்மாவிடம் தாங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருக்கப் போகிறோம் என்று எப்படி நான் சம்மதம் வாங்க முடியும்? அதை நம்முடைய சமூகம் எப்படி எடுத்துக் கொள்ளும் என்று பவன் யோசித்தான்.
மேலை நாடுகளில் வேண்டுமானால் இந்தக் கலாச்சாரம் சரியாக இருக்கலாம். ஆனால் நம்முடைய நாட்டில் இப்படியான கலாச்சாரங்கள் பற்றி என்றோ பவன் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் அது தன்னுடைய வாழ்க்கையிலேயே நுழையும் என்று அவன் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. அவனுக்கு என்று ஊர் அறியத் திருமணம் செய்து, தனக்கான குடும்பம், தனக்கான வாழ்க்கை என்று சந்தோஷமாக வாழ வேண்டும் என்று பவன் நிறைய கனவுகள் கண்டிருக்கிறான்.
ஆனால் மது இப்படித் தனக்குத் திருமணமே வேண்டாம், நம்ம இப்படியே இருந்து கொள்ளலாம் என்று சொல்லவும், அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளை விட்டு விலகவும் மனது வரவில்லை. அவளை இப்போது எந்த உரிமையில் தன்னுடன் வாழ வைப்பது என்றும் அவனுக்குப் புரியவில்லை என்று யோசித்தவாறு குழப்பத்திலேயே அமர்ந்திருந்த பவன் முகத்தைப் பார்த்த மது.
“பவன், நான் என்னோட மனசுல இருக்கிறதை வெளிப்படையா உங்ககிட்ட சொல்லிட்டேன். நீங்க உடனே பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை. பொறுமையா நிதானமா யோசிச்சு எனக்குப் பதில் சொல்லுங்க. எவ்வளவு நாள் வேணும்னாலும் நான் உங்க பதிலுக்காகக் காத்திருக்கிறேன். ஆனால், என்னுடைய முடிவு ஒண்ணுதான். எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிறதுல சுத்தமா இஷ்டம் இல்லை,” என்ற மது சோபாவில் இருந்து எழுந்து உள்ளே சென்றாள்.
மது சென்ற பிறகும் பேய் அறைந்தவன் போல சோபாவில் அமர்ந்திருந்த பவன், இவளிடம் இப்படிப் பேசி கண்டிப்பாகத் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள வைப்பது சாத்தியம் இல்லை என்று உணர்ந்தவன், “முதலில் ஊருக்குச் செல்வோம். அதன் பிறகு ஏதாவது வழி செய்து மதுவைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்க வேண்டும்,” என்று நினைத்துக்கொண்டான்.
மதியம் போல உணவருந்திவிட்டு, பவனும் மதுவும் அலுவலக காரில் விமான நிலையத்திற்குச் சென்றனர்.
தேனிலவு முடிந்து மூன்று ஜோடிகளும் இந்தியா திரும்பிவிட, அவர்கள் இந்தியா வருவதற்குள் ஆதி மூவரின் வீட்டிற்குத் தேவையான பொருட்கள், அலங்காரம் (Decoration) என்று எல்லா வேலையும் முடித்து, அவர்கள் வரும் அன்று மூவரின் வீட்டிற்கும் ஒரே நேரத்தில் கிரகப்பிரவேசம் ஏற்பாடு செய்திருந்தான்.
ராதாவின் வீட்டிற்கு முத்துவும், துரையும் தேவையானதைப் பார்த்துக்கொள்ள…
கதிர் வீட்டிற்கும், விக்கி வீட்டிற்கும் விசாலாட்சியும், சிவகாமியும் வேண்டியதை வாங்கி வைத்தனர்.
ஷிவு மூன்று வீட்டிற்கும் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் எல்லாவற்றையும் வாங்கி வைத்திருக்க…
ஆதி கிரகப்பிரவேசத்திற்கான ஏற்பாடுகளைத் தடபுடலாகச் செய்திருந்தான்.
மூன்று தோழிகளும் அருகருகே ஒரே தெருவில் இருக்கப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் கிரகப்பிரவேசத்திற்குத் தயாராகி வர…
முறைப்படி பூஜைகள் செய்து, பால் காய்ச்சி, இனிதே பூஜைகள் செய்து மூவரும் தங்கள் புது வீட்டிற்கு குடி பெயர்ந்தனர்.
இத்தனை குறுகிய காலத்தில் தாங்கள் எல்லோரும் குடும்பத் தலைவிகள் ஆகிவிட்டோம் என்று மூவருக்குமே இன்றும் நம்ப முடியவில்லை. இன்னும் இவர்களின் கல்லூரிப் படிப்பு முடிய ஒரு ஆண்டு இருக்கிறது. அதற்குள்ளாகத் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தாகிவிட்டது என்று பேசிக்கொண்டனர் மூவரும்.
கதிர் கீர்த்தியுடன் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வருவதாக விசாலாட்சியும், வெங்கடாச்சலமும் சொல்லிவிட… அவர்களோடு சேர்ந்து வடிவும், முருகனும் அங்கேயே இருப்பதாகக் கூறிவிட்டனர்.
துரை, கனகா, ஷிவு ராதாவுடன் இருப்பதாகக் கூறிவிட, அவர்களுடன் சந்தோஷின் அம்மா, அப்பா, ஸ்ரீ மூவரும் தங்கிவிட்டனர்.
விக்கி, நிலானியுடன் மது, சிவகாமி இருந்துவிட…
ஆதியும், துர்காவும் மட்டும் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி அனைவரிடமும் விடை பெற்றுத் தங்கள் வீட்டிற்குக் கிளம்பினர்.
தங்களோடு இருக்கச் சொல்லி அனைவரும் எவ்வளவோ சொல்லியும் பார்த்தும் ஆதி அங்கிருந்து கிளம்பிவிட… துர்காவிற்கு அவர்களோடு தங்கவேண்டும் என்று ஆசையாக இருந்தது. அவளையும் இருக்க விடாமல் தன்னுடன் அழைத்துக்கொண்டான் ஆதி.
அனைவருக்கும் ஆதி துர்காவுடன் தனியாக இருக்க வேண்டும் என்று தான் அவளை இங்கே இருக்க விடாமல் தன்னுடன் அழைத்துச் செல்கிறான் என்று புரிந்தது. அதனால் யாரும் அவர்கள் இருவரையும் வற்புறுத்தவில்லை.
அனைவரும் தனித்தனியாகத் தங்கள் வீட்டிற்குச் சென்றதால், ஆதியும் தன் அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டு, அவனுக்காக அவர்கள் வாங்கிக் கொடுத்த வீட்டிற்குத் துர்காவை அழைத்துப் போவதாகவும், இனிமேல் தாங்கள் இருவரும் அங்கேயே இருந்து கொள்வதாகவும் சொல்ல…
துர்காவை இந்த நிலையில் எப்படி அங்கே தனியாக விடுவது என்று விசாலாட்சியும் கனகாவும் கேட்க…
செண்பகம் தான் வீட்டில் தனியாகத்தான் இருக்கிறேன். அதனால், இன்று இங்கிருந்து விட்டு நாளை நான் ஆதியின் வீட்டிற்குச் சென்று விடுகிறேன். ஆதி அலுவலகம் சென்ற பிறகு துர்காவை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று செண்பகம் சொல்ல…
இவர்கள் வேறு வழி இல்லாமல் ‘சரி’ என்று ஒப்புக்கொண்டனர். அனைவரிடமும் சொல்லிக்கொண்டு துர்காவும் ஆதியும் கிளம்பினர்.
காரில் ஏறியதிலிருந்து துர்கா முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்க… காரை ஓட்டிக்கொண்டே அவள் கோபமாக இருப்பதை ரசித்துக் கொண்டு வந்தான் ஆதி.
ஒரு ஒற்றை ரோஜாவைக் கையில் வைத்திருந்த துர்கா, ஆதியைப் பார்க்காமல் அந்த ரோஜாவையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அதைக் கவனித்த ஆதி, “என்ன துர்கா? கையில ஒரு ரோஜா பூ வச்சுட்டு அதையே பார்த்துட்டு வர. என்கிட்ட எதுவுமே பேச மாட்டியா? காரில் ஏறினதிலிருந்து எதுவுமே பேசாமல் போறியே” என்று கேட்டான்.
அவன் பேசியதும் ஆதியைத் திரும்பிப் பார்த்து முறைத்த துர்கா, “ம்ஹும்…” என்று சொல்லி முகத்தைத் திருப்பிக்கொண்டு, “நான் உன்மேல கோபமா இருக்கேன். என்கூட நீ பேசாதே” என்று சொன்னாள்.
“நான் ஏன் உன்கூடப் பேசக்கூடாது? நீதானே என்மேல கோபமா இருக்க? நீ வேணா என்கூடப் பேசாமல் இரு. ஆனா, நான் உன்கிட்டப் பேசிட்டுத் தான் வருவேன்,” என்றான் ஆதி.
“என்கூடப் பேசாதேன்னு சொன்னேன் இல்ல? ஏன் மறுபடி மறுபடி என்கூடப் பேசுற?” என்றாள் துர்கா.
“நீதான் துர்கா என்மேல கோபமா இருக்க. அப்போ நீ என்கூடப் பேசாமல் வா,” என்றான் ஆதி.
அவன் சொன்ன பிறகு துர்கா எதுவும் பேசாமல் மீண்டும் அந்த ரோஜாவைப் பார்த்துக் கொண்டிருக்க…
“என்ன துர்கா, உனக்கு அந்த ரோஸ் ரொம்பப் பிடிச்சிடுச்சா? அதையே பாத்துட்டு வர,” என்று கேட்டான் ஆதி.
இப்போது ஆதி கேட்டதற்குத் துர்கா பதில் அளிக்காமல் அமைதியாக இருக்க…
‘ஓஹோ! கோபமா இருந்தா என்கூடப் பேசக்கூடாது, எனக்குப் பதில் பேசக்கூடாது என்கிற அளவுக்கு இப்போ உனக்குப் புரியுதா?’ என்று நினைத்த ஆதி மீண்டும் துர்காவிடம் பேச்சு கொடுத்தான்.
“உன் கையில இருக்கிற ரோஸ் ரொம்ப அழகா இருக்குல்ல துர்கா? எங்கே, அதைக் கொடு நான் பார்த்துட்டுத் தரேன்,” என்று சொல்லி காரை ஓட்டிக்கொண்டு இடது கையை அவள் அருகில் நீட்ட…
அவனிடம் தர மாட்டேன் என்பதுபோல அவனுக்கு எட்டாதவாறு சற்றுத் தள்ளி, இருக்கையில் ஓரமாக அமர்ந்துகொண்டாள் துர்கா.
அவள் செய்கையை ரசித்தவன், தாங்கள் ஏற்கனவே தங்கியிருந்த, இவர்கள் இருவருக்காகவும் வெங்கடாசலம் பரிசளித்த வீட்டிற்குத் துர்காவை அழைத்துச் சென்றான்.
காரை நிறுத்திவிட்டுக் காரிலிருந்து இறங்கிய ஆதி, சக்கர நாற்காலியை எடுத்து வந்து துர்காவின் கதவருக்கே வைத்து, அவளைத் தூக்கி அதில் அமர வைத்தான். இதுவும் பேசாமல் துர்காவை அழைத்துக்கொண்டு செல்ல… துர்காவும் அந்த வீட்டிற்கு முதல் முறை வருவதுபோல சுற்றும் முற்றும் பார்த்தபடியே அவனுடன் சென்றாள்.
காரை நிறுத்திவிட்டு, துர்காவை வீட்டிற்குள் அழைத்துச் செல்லாமல், அங்கிருந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான்.
துர்கா வேடிக்கை பார்த்தவாறு ஆதியுடன் சென்றவள். அங்கிருந்த தோட்டத்தைப் பார்த்ததும் அவள் முகம் பிரகாசமானது.
தோட்டத்தில் வண்ண வண்ண ரோஜாக்கள் பல வகைகளில் பூத்துக் குலுங்கி இருந்தது. அதையெல்லாம் பார்த்ததும் துர்காவிற்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. இத்தனை வகையான ரோஜாக்களையும் அவள் பார்த்ததும் தன்னிச்சையாகத் திரும்பி ஆதியைப் பார்த்துச் சிரிக்க…
தோட்டத்திற்கு அருகில் வரை கூட்டிச்சென்ற ஆதி, அவள் ரோஜாக்களைப் பார்த்துச் சந்தோஷமாவதைக் கவனித்தவன், தன்னையும் பார்த்துச் சிரிப்பதைக் கவனித்துவிட்டு, எதையுமே கண்டுகொள்ளாதவன் போல, தோட்டத்திற்குள் அழைத்துச் செல்லாமல், அவள் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு திரும்பி வீட்டிற்குள் கூட்டிச் செல்லப் போக…
தன்னைத் தோட்டத்திற்கு ஆதி அழைத்துச் செல்வான் என்று நினைத்திருந்த துர்காவிற்கு, ஆதி திரும்பி வீட்டிற்குள் அழைத்துச் செல்லவும் ஏமாற்றம் ஆகிவிட…
ஆதியைப் பார்த்தவாறு திரும்பிப் பார்த்து, “ஆதி, ஏன் என்னைப் வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போற? அங்கே கூட்டிட்டுப் போ…” என்று தோட்டத்தைக் கை காட்டிச் சொல்ல…
“கொஞ்ச நேரம் முன்னாடி காரில் வரப்போ, யாரோ என் கூடப் பேச மாட்டேன்னு முகத்தைத் திருப்பிட்டு இருந்தாங்க. ஆனா, இப்ப மட்டும் என்கிட்ட பேசுறாங்க! அவங்களுக்கு மட்டும்தான் என்மேல கோபம் வருமா? எனக்கு இப்போ அவங்க மேல கோபம். நான் அவங்க கூடப் பேச மாட்டேன்,” என்று யாரிடமோ பேசுவதுபோல ஆதி கூற…
ஆதி என்ன சொல்கிறான் என்பது முதலில் துர்காவிற்குக் புரியவில்லை.
“ஆதி, நான் உன்கிட்டத்தான் பேசுறேன். என்னைக் கார்டனுக்குக் கூட்டிட்டுப் போ. உள்ளே வேண்டாம். நம்ம கொஞ்ச நேரம் அங்கே இருந்துட்டு அப்புறமா வீட்டுக்குள்ள போகலாம்,” என்றாள் துர்கா.
“நீதான் என் கூடப் பேச மாட்டேன்னு சொன்னே இல்ல துர்கா? அப்புறம் நீ ஏன் என்கிட்டப் பேசுற?” என்றான் ஆதி.
சற்றுமுன் காரில் வரும்போது துர்கா ஆதியுடன் பேச மாட்டேன் என்று சொன்னது இப்போது ஆதி திருப்பி துர்காவிடம் சொல்ல… துர்காவிற்குக் என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை.
அவள் கைகளைப் பிசைந்து கொண்டு, தலை குனிந்து சோகமாக அமர்ந்திருக்க… அதைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்த ஆதி, “உனக்குக் கார்டனுக்குப் போகணுமா?” என்று கேட்டான்.
தலை குனிந்து சோகமாக இருந்த துர்கா, சிரித்துக்கொண்டே ஆதியைப் பார்த்து, “ஆமாம்” என்று வேக வேகமாகத் தலையை ஆட்ட…
“அப்போ, நீ என்கூட இனிமேல் எப்பவும் கோபப்படக்கூடாது. என் கூட நீ பேசினாத்தான் நான் உன்னைக் கார்டனுக்கு ரோஸ் பார்க்கக் கூட்டிட்டுப் போவேன்,” என்றான்.
உடனே துர்கா தலையை ‘சரி’ என்பதுபோல ஆட்டி, “நான் இனிமேல் உன் கூடச் சண்டையே போட மாட்டேன் ஆதி. நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுக்குறேன். ப்ளீஸ்… ப்ளீஸ்… என்னை இப்போ கார்டனுக்குக் கூட்டிட்டுப் போயேன்” என்று ஆதியின் கையைப் பிடித்துச் சிறு பிள்ளை போல துர்கா கெஞ்ச…
ஆதி சிரித்துக்கொண்டே, “சரி வா…” என்று அவளைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான்.
துர்காவைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றவன், ஒவ்வொரு செடியாக அருகில் அவளை அழைத்துக்கொண்டு போய், அதிலிருந்து ஒவ்வொரு மலராகப் பறித்துத் துர்காவின் கையில் கொடுத்துக்கொண்டே தோட்டத்தையும் சுற்றிக் காட்டினான் ஆதி.
இப்போது தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வேலையாட்கள், துர்கா நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கே வந்ததும், அவளிடம் சென்று அவள் நலம் விசாரிக்க… அவளுக்கு அவர்கள் எல்லாம் பார்த்துச் சற்றுப் பயமாக இருக்க, ஆதியின் கையை இறுக்கிப் பற்றிக்கொண்டு ஆதியைப் பார்க்க…
அவள் கையை ஆதரவாகப் பற்றிக்கொண்ட ஆதி, வேலையாட்களிடம், “இன்னும் கொஞ்ச நாள்ல துர்காவுக்குச் சரியாயிடும். அதுவரைக்கும் அவளை நீங்க யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். யாரும் அவளுடன் பேச வேண்டாம். அவ தலைல அடிபட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் போகல. அதனால்தான் யாரைப் பார்த்தாலும் பயந்துக்கிறாள்,” என்று சொல்லி ஆதி சமாளித்தான்.
பிறகு ஆதி தோட்டத்திலிருந்து அவளை வீட்டிற்குள் அழைத்து வர…
ஆதியும் துர்காவும் உள்ளே வருவதைப் பார்த்து சமையலறையில் இருந்து வந்த முத்துத் தாத்தா அவர்கள் இருவரையும் வாசலிலேயே நிற்கச் சொல்லிவிட்டு, வேகமாக அங்கிருந்த பெண்களை அழைத்து, ஆரத்தி கரைத்து எடுத்து வந்து இருவருக்கும் ஆரத்தி எடுத்த பிறகு வீட்டிற்குள் வரச் செய்தார்.
அவரைப் பார்த்துச் சிரித்த ஆதி, “எதுக்கு தாத்தா இது எல்லாம்?” என்று கேட்க…
“தம்பி, நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நாள் கழிச்சுத் திரும்ப இந்த வீட்டுக்கு வந்து இருக்கீங்க. அதுவும் இல்லாம, பாப்பா பெரிய ஆபத்திலிருந்து தப்பிச்சு ரொம்ப நாள் கழிச்சு இங்கே வந்து இருக்கு. அதனால நீங்க ரெண்டு பேரும் இங்கே வந்த பிறகு எந்தக் கஷ்டமும் இல்லாம நிம்மதியா சந்தோஷமா வாழணும் இல்லையா? அதனாலதான் உங்களுக்குத் திருஷ்டி சுத்தி ஆரத்தி கரைச்சு உங்களை உள்ளே கூப்பிட்டேன்,” என்றார்.
முத்துத் தாத்தாவிற்கு எப்போதுமே ஆதியின் மீது தனி அக்கறை உண்டு. ஒரு சின்ன விஷயத்தைக் கூட அவர் ஆதிக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்வார். துர்காவையும் உள்ளே அழைத்துச் சென்ற முத்துத் தாத்தா, அவர்களை நேராகச் சாப்பிடத்தான் அழைத்துச் சென்றார். ‘பிறகு சாப்பிட்டுக் கொள்கிறோம்’ என்று ஆதி சொல்ல, கேட்காமல் முதலில் சாப்பிட்டுவிட்டு, அதன் பிறகு இருவரையும் சென்று ஓய்வு எடுக்கச் சொன்னார்.
ஆதிக்கும் துர்காவிற்கும் பிடித்த உணவுகளாகப் பார்த்துப் பார்த்துச் சமைத்து வைத்திருந்தார் முத்துத் தாத்தா.
இருவரும் திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு, மின்தூக்கியில் (Lift) துர்காவை அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றான் ஆதி.
ஆதியிடம் தயங்கிக்கொண்டு தான் குளியலறை செல்ல வேண்டும் என்று கூற…
“இதுக்கு ஏன் துர்கா தயங்குற? வா… நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன்,” என்று சொல்லி சக்கர நாற்காலியில் இருந்து அவளைத் தூக்கிக்கொண்டு சென்றவன். உள்ளே அவளை விட்டுவிட்டு வெளியே வந்து குளியலறை கதவைச் சாத்திவிட்டு, அதன் முன்னாடியே நின்று இருக்க…
அந்த நேரத்தில் துர்கா ஆதியை உள்ளிருந்து அழைக்கவும், கதவைத் திறந்து உள்ளே சென்றான். துர்காவைத் தூக்கிக்கொண்டு வந்து உடை மாற்றும் அறையில் (Dressing Room) சோபாவில் அமர வைத்து, அவள் இரவு மாற்றிக்கொள்ள எப்போதும் அணியும் பனியனையும், டிராயரையும் எடுத்துக்கொண்டு வந்து துர்காவிடம் கொடுத்து, “நான் உனக்கு மாட்டி விடட்டுமா?” என்று கேட்க…
உடனே அவன் கையிலிருந்த துணியைப் பிடுங்கிக்கொண்டு துர்கா, “நீ வெளியே போ. நானே உடை மாத்திக்கிறேன். என்னால இதெல்லாம் செய்ய முடியும். எனக்குக் கால் தான் உடைந்திருக்கு, எல்லாம் ஒண்ணும் இல்லை,” என்று அவனிடம் முறுக்கிக்கொண்டு துர்கா பேச…
“நீங்க மட்டும் ஏன் தான் இப்படி இருக்கீங்களோ? புருஷனை உடை மாத்தும்போது கூடப் பக்கத்துல இருந்து உதவி செய்ய விட மாட்டேங்குறீங்க. பொண்ணுங்களே இப்படித்தான்,” என்று புலம்பிய ஆதி, உடை மாற்றும் அறையை விட்டு வெளியே சென்று கதவைச் சாத்திக்கொண்டான்.
உடை மாற்றிவிட்டு உள்ளிருந்து ஆதியை அழைக்க…
கதவைத் திறந்து முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு உள்ளே வந்த ஆதி, துர்காவைத் தூக்கிக்கொண்டு படுக்கையில் படுக்க வைக்க…
அவன் தன்னிடம் முகம் கொடுத்துப் பேசாமல், முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த துர்கா, வைத்துவிட்டுச் செல்லப்போன ஆதியின் கையைப் பிடிக்க… அவன் ‘என்ன?’ என்பது போலத் துர்காவைத் திரும்பிப் பார்த்தான்.
“ஏன் ஆதி முகத்தை இப்படி வச்சிருக்க? என்மேல கோபமா இருக்கியா?” என்று கேட்டாள் துர்கா.
“ஆமாம், நான் உன்மேல கோபமா இருக்கேன்,” என்றான் ஆதி.
“ஏன் கோபமா இருக்க?” என்றாள் துர்கா.
“நான் உனக்கு உடை மாத்த உதவி பண்றேன்னு சொன்னப்போ நீதானே வேண்டாம் என்று சொல்லி என்னை வெளியே அனுப்புன. அதனாலதான் நான் கோபமா இருக்கேன்,” என்றான் ஆதி.
அவன் சொன்னதைக் கேட்டதும் துர்காவிற்குக் என்ன சொல்வது என்று தெரியவில்லை. முன்பு போலப் பழைய துர்காவாக இருந்திருந்தால் அவள் இந்த நேரம் பேசியதற்கு வெட்கப்பட்டு முகம் சிவந்திருப்பாள். ஆனால் இப்போது ஆதிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் துர்கா விழித்துக் கொண்டிருக்க…
“என் கையை விடு. நான் போறேன்,” என்று ஆதி மீண்டும் துர்காவிடம் வம்பிழுக்க…
அவன் கையைப் பிடித்த துர்கா, ஆதியைப் பார்த்து, “ஆதி ப்ளீஸ், இப்படி என் கூடப் பேசாமல் இருக்காத ஆதி. எனக்கு என்னவோ பண்ணுது” என்று துர்கா சோகமாகப் பேச…
அவள் சோகமாக இருப்பதைப் பார்த்த ஆதி, அவளுக்கு ஏதோ செய்ய அவள் அருகில் வந்தான். அவள் முகத்திற்கு அருகில் தன் முகத்தைக் கொண்டு வந்து, தன் நெற்றியால் அவள் நெற்றியை முட்டியவன்.
“இப்போ நீ உடை மாத்த உனக்கு உதவி பண்ணா என்னை உள்ளே விடுவியா?” என்று கேட்டான்.
துர்காவுக்குள் அவள் உணர்வுகள் மெல்ல எட்டிப் பார்க்க, அவனைப் பார்க்க முடியாமல் வெட்கப்பட்டுத் தலை குனிந்தவள் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க…
“என்ன துர்கு, எதுவும் சொல்ல மாட்டேங்குற?” என்றான் ஆதி.
“என்ன? உதவி செய்ய விடுவியா? மாட்டியா?” என்றான் ஆதி.
துர்கா அவனை நிமிர்ந்து பார்க்காமல் தலையை ‘மாட்டேன்’ என்பது போல அசைக்க…
“அப்போ நானும் உன்மேல கோபமா இருக்கேன். உன் கூடப் பேச மாட்டேன் போ…” என்று ஆதி அவள் அருகில் இருந்து எழுந்து செல்லப் போக…
இப்போது துர்கா வேகமாக ஆதியின் கையைப் பிடித்துத் தன் அருகில் இழுத்தாள். ஆதி ‘என்ன?’ என்று யோசிப்பதற்குள், அவன் முகத்தைப் பிடித்து அவளைப் பார்த்திருந்தவனின் உதட்டைப் பார்த்த துர்காவிற்குக் அவள் இதயம் எக்குத்தப்பாகத் துடிக்க ஆரம்பிக்க… அவன் உதட்டைப் பார்த்து எச்சில் விழுங்கியபடி குனிந்து முத்தம் வைத்தாள்.
கதையை படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க ப்பா.. யாருமே கமெண்ட் பண்ண மாட்டேங்குறீங்க இப்படி பண்ணினா எப்படி அடுத்த ஏபி எழுத, போஸ்ட் பண்ண மனசு வரும். ஒரு மோட்டிவேஷனே இல்ல

2 comments
Inaki episode super 😍 sis iam waiting for next episode 😍💕❤️
Thank u ❤️😍 keep support