Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 211

உன் ரகசிய ரசிகை நான் 211

by Layas Tamil Novel
106 views

ஷிவுவிற்கு கார்த்திக்கின் வீட்டில் மறுவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அனைவரும் ஏற்கனவே வந்துவிட விக்கி மட்டும் இன்னும் காணவில்லை என்று கார்த்திக்கும் மற்றவர்களும் விக்கியின் வரவுக்காக காத்திருந்தனர்.

ஏனென்றால் அவர்கள் வீட்டில் எப்போது விசேஷம் என்று நடந்தாலும் விக்கி இல்லாமல் எதுவுமே அங்கே நடக்காது.

இவர்களெல்லாம் விக்கி காணவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க…

அந்த நேரம் வாசலில் நின்று கொண்டு கார்த்திக், கதிர், சந்தோஷ், ரூபேஷ் இவர்களைப் பார்த்து மச்சான்…. என்று கத்திக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் விக்கி.

விக்கியின் குரல் கேட்டதும் நால்வருக்கும் முகம் பிரகாசமாகி விட நால்வரும் ஒரு சேரத் திரும்பி வாசலைப் பார்த்தனர்.

விக்கி, நிலானி உடனும் தன் பெற்றோருடனும், மாதவியுடனும் வீட்டுக்குள் வந்து கொண்டு இருந்தான்.

எப்போதுமே தனியாக வீட்டிற்குள் வரும் விக்கியை இன்று ஒரு முழு குடும்பமாகப் பார்த்த அனைவருக்கும் மனதிற்குள் அவ்வளவு சந்தோசமாக இருந்தது.

இப்படிப் பார்க்கத்தான் வெங்கடாசலம், விசாலாட்சி முதல் கொண்டு அனைவருமே ஆசைப்பட்டனர்.

விக்கி, அம்மா, அப்பா, தங்கை, மனைவி என ஒரு முழுமையான அட அழகான குடும்பத்துடன் வீட்டிற்குள் நுழைய…

அவர்களை வாசலிலேயே நிற்கச் சொன்ன விசாலாட்சி வேகமாக ஆரத்தித் தட்டை எடுத்து வந்து குடும்பத்தோடு அவர்களுக்கு ஆரத்தி எடுத்து அதன் பிறகு அவர்களை வீட்டிற்குள் அழைத்து வந்தார்.

விசாலாட்சி ஆரத்தி எடுப்பதைப் பார்த்து ஆச்சரியமாக விக்கி, “என்னம்மா இன்னைக்கு அதிசயமா எனக்கு ஆரத்தி எல்லாம் எடுத்து கூப்பிடுறீங்க? நான் என்ன இந்த வீட்டுக்கு முதல் முறையாவா வரேன்?” என்று கேட்டான் விக்கி.

“நீ தினமும் இந்த வீட்டுக்கு வருகிறவன்தான்டா. ஆனா இன்னைக்குதான் ஒரு குடும்பமா உனக்குன்னு ஒரு சொந்தத்தோட இந்த வீட்டுக்குள்ள வர… அது எப்பவும் நிலைச்சு சந்தோசமா இருக்கணும் இல்லையா? உன்னை இப்படிப் பார்க்கிறப்போ எங்களுக்கே கண்ணு பட்டுடும் போல இருந்துச்சு. அதனாலதான் ஆரத்தி எடுத்து திருஷ்டி சுத்தி உன்னை வீட்டுக்குள்ள அழைச்சிட்டு வந்தேன்” என்றார் விசாலாட்சி.

தன்மீது எப்போதுமே தனி அக்கறை காட்டும் விசாலாட்சியை விக்கி நெகிழ்ந்தான். அவரை கட்டிக் கொண்ட சிவகாமி, “எப்போதுமே விசாலாட்சிக்கு பெரிய மனசுதான். யாரையுமே பிரிச்சுப் பார்க்கிற பழக்கமே அவளுக்குக் கிடையாது” என்று சொல்லிக் கொண்டே அவர்களோடு உள்ளே வர…

சங்கவி, கனகாவின் அருகில் அமர்ந்திருந்தவள், “பாத்தீங்களா ஆன்ட்டி? உள்ள வந்ததும் வராததுமா இத்தனை வருஷமா என்ன வளர்த்தவங்க என்னைக் கூட பார்க்காமல் அந்த விசாலாட்சி ஆண்டியை கொஞ்சிக்கிட்டு இருக்காங்க” என்று சொன்னவள், கனகாவின் முகத்தைப் பார்த்தாள். கனகாவின் முகம் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போலத்தான் இருந்தது.

அதைப் பார்த்த சங்கவிக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது.

அதற்கு மேலும் தூபம் போடும் விதமாக, “இன்னைக்கு உங்க பொண்ணுக்குத்தானே மறுவிருந்து நடக்குது. ஆனா அங்க பாருங்க… இதையெல்லாம் கவனிக்கிறதை விட்டுட்டு அவங்க கூட நின்னு வெட்டிக்கதை பேசிட்டு இருக்காங்க” என்று விசாலாட்சியைப் பற்றி கனகாவிடம் மேலும் கோள் மூட்டினாள் சங்கவி.

உடனே கனகா, “என் பொண்ணு விருந்துக்கு அவங்க என்ன போய் கவனிக்கிறது? நானே என் பொண்ணையும் மாப்பிள்ளையையும் கவனிச்சிக்கிறேன். மத்தவங்களைப் பத்தி எனக்கு என்ன வந்துச்சு?” என்று சொன்னவர், சங்கவியிடம் இருந்து எழுந்து உள்ளே வேலை செய்து கொண்டிருந்த துர்காவிடம் சென்றார்.

“எல்லா வேலையும் முடிந்துவிட்டதா? மாப்பிள்ளையும் ஷிவுவும் வந்து ரொம்ப நேரம் ஆச்சு…. அவங்களுக்கு விருந்து போட வேண்டாமா? ஷிவுவுக்கு ரொம்பப் பசிக்கும். அவ இப்போ ரெண்டு உயிர் ஆச்சே. நேரம் நேரத்துக்கு அவளுக்குச் சாப்பாடு கொடுக்க வேண்டாமா?” என்று கனகா, துர்காவை அவசரப்படுத்தினார்.

விருந்திற்காக வீட்டில் நான்-வெஜ் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் மீனை எண்ணெயில் பொரித்துக் கொண்டிருந்த துர்கா, கனகா அவளை அவசரப்படுத்தவும் பதட்டத்தில் மீனைப் பொறித்துக் கொண்டிருந்தவள், கரண்டியில் இருந்த மீனைத் தவறவிட…

கரண்டியில் இருந்த மீன் துண்டு கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயில் விழுந்து அப்படியே அந்த எண்ணெய் துர்காவின் கைகளில் தெரித்துவிட்டது.

இதைச் சற்றும் எதிர்பாராத துர்கா, கையில் எண்ணெய் சூடாகப்பட்டதும் வலியில் அலற ஆரம்பித்தாள்.

துர்காவின் கையில் எண்ணெய் பட்டதும் அவள் அருகில் நின்ற கனகா அப்படியே அவள் கையைப் பிடித்து தண்ணீரில் காட்டியவர், “என்னம்மா நீ இப்படித்தான் கவனமில்லாமல் வேலை பார்ப்பாயா? இப்பொழுது பாரு உன் கையில எப்படி காயமா ஆயிடுச்சு” என்று சொல்லி அவர் துர்காவின் கையில் எண்ணெய் சூடாகப் பட்டு புண்ணாகிப் போயிருந்த இடத்தைப் பார்த்துச் சங்கடப்பட்டார் கனகா.

துர்கா அலறிய சத்தம் கேட்டு கார்த்திக்கும் மற்றவர்களும் கிச்சனுக்கு ஓடி வர, அங்கே அவள் கையில் எண்ணெய் தெரித்து பெரிதாகக் காயம் ஆகி இருப்பதைப் பார்த்ததும் கார்த்திக் மிகவும் பதறிப் போனான்.

வேகமாக துர்காவின் அருகில் வந்து அவள் கையைப் பிடித்தவன், “உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை? வீட்ல இத்தனை பேர் வேலைக்கு இருக்கும்போது நீயேதான் எல்லா வேலையும் இழுத்துப் போட்டுச் செய்யணுமா?” அவளைக் கடிந்து கொண்டவன், “வா முதலில்” என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு மருந்து போட தன்னறைக்கு அழைத்துச் சென்றான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கவி, “பரவாயில்லையே! இன்னைக்கு நான் வச்ச குறியில ரெண்டு மாங்கா விழுந்துடுச்சு” என்று நினைத்துக் கொண்டு உள்ளுக்குள் சிரித்தாள்.

துர்கா சென்றதும் சமையலறையில் வேலைகள் எல்லாம் அப்படியே நின்றுவிட…

விசாலாட்சி வந்து துர்கா விட்டு வைத்திருந்த மீதமிருந்த சமையல் வேலைகளைச் செய்யப் போனார்.

அவர் இழுத்துப்போட்டு வேலை செய்து கொண்டு சமையலறையில் இங்கும் அங்கும் பரபரப்பாக வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கவி, கனகாவிடம் வந்தவள், “என்ன ஆன்ட்டி நீங்க… இப்படி இருக்கீங்க” என்றாள்.

“ஏன் சங்கவி? என்ன ஆச்சு? நான் என்ன செய்தேன்?” என்று கேட்டார் கனகா.

“பின்னே என்ன ஆன்ட்டி? இவ்வளவு நேரம் துர்கா சமையல் வேலை எல்லாம் செய்துட்டு இருந்தா. அவ உங்க குடும்பம்… உங்களோட மூத்த மகள். உங்க பொண்ணு ஷிவுவுக்காக துர்கா அவளோட அக்காவா உரிமையோட வேலை செஞ்சுட்டு இருந்தா. ஆனா இப்போ நீங்களே பாருங்க, கிச்சன்ல விசாலாட்சி ஆன்ட்டிதான் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்கிற மாதிரி சீன் போட்டுட்டு இருக்காங்க” என்றாள்.

சங்கவி சொன்னதைக் கேட்டு சமையல் கட்டில் கனகா பார்க்க, அவள் சொன்னது போலவே விசாலாட்சி அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தார்.

ஆனால் அது நல்ல விதமாக கனகாவிற்குத் தெரியாமல், ஏதோ துர்கா முடித்து வைத்திருந்த வேலையை இவர் வேண்டுமென்றே செய்வது போல, விசாலாட்சி நடிப்பது போல அவருக்குத் தோன்றும் அளவிற்கு அவர் மனதைக் கெடுத்து வைத்து இருந்தாள் சங்கவி.

“ஆமா சங்கவி, நீ சொல்றது சரிதான். இவ்வளவு நேரம் என் பொண்ணு வேர்த்து விறுவிறுக்க அத்தனை வேலையும் செஞ்சா. அப்போ எல்லாம் கிச்சனுக்குப் போய் அவளுக்கு ஹெல்ப் பண்ணாம, இப்போ இவர்களே வேலை செய்கிற மாதிரி நடிச்சிட்டு இருக்காங்க” என்றார் கனகாவும்.

“ஆமா ஆன்ட்டி, நீங்களே பாக்குறீங்க தானே? இவ்வளவு நேரம் வேலை செஞ்சது என்னவோ துர்காதான். ஆனா கடைசியில இருக்கிற கொஞ்ச வேலையை செஞ்சுட்டு விசாலாட்சி ஆன்ட்டி இப்போ நல்ல பேரு வாங்கிக்கப் போறாங்க… போங்க… உங்களுக்கு எங்கே எப்படி நடந்துக்கணும்னு தெரியவே இல்லை” என்று சலித்துக் கொண்டாள் சங்கவி.

“என்னம்மா என்னைப் பார்த்து இப்படி கேட்டுட்ட? நான் எங்கேயுமே என்னோட வேலையை விட்டுக் கொடுக்கவே மாட்டேன்” என்றவர், “இப்போ பாரு” என்று சொல்லிவிட்டு, நேராக கிச்சனுக்குச் சென்ற கனகா, “அண்ணி நீங்க விலகிக்கோங்க. நான் எல்லா வேலையும் பார்த்துக்கிறேன்” என்று விசாலாட்சியைச் செய்யவிடாமல் தடுத்தார் கனகா.

“பரவால்ல கனகா, நீ போய் மாப்பிள்ளையையும் ஷிவுவையும் கவனி. நானே எல்லா வேலையும் பார்த்துக்கிறேன். உனக்கு எதுக்குச் சிரமம்” என்று விசாலாட்சி பெருந்தன்மையாக கனகாவிடம் பேச…

அவர் பெருந்தன்மையாகச் சொன்னதைக் கனகா கருத்தில் எடுத்துக் கொள்ளாமல், அனைவரிடமும் நல்ல பெயர் வாங்குவதற்காகத்தான் விசாலாட்சி வேலை செய்வது போல நடித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்ட கனகா, “நீங்க வேலை செஞ்சதெல்லாம் போதும். என் பொண்ணுக்கு நானே வேலை செஞ்சுகிறேன். முதல்ல சமையல் கட்டில் இருந்து நகருங்க” என்று சற்று அதட்டலாகக் கனகா சொல்ல…

அவர் குரலில் இருந்த கடுமையைக் கண்ட விசாலாட்சி, கனகாவிற்கு என்ன ஆனது என்று யோசித்தபடி தான் செய்து கொண்டிருந்த வேலையில் இருந்து பின்வாங்கி விட…

அவர் வேலையைக் கனகா இழுத்துப் போட்டுச் செய்து கொண்டு இருந்தார். தன் கைகளைக் கழுவி விட்டு முந்தானையில் கையைத் துடைத்துக் கொண்டு சமையல் கட்டில் இருந்து கனகாவைப் பற்றிய யோசனையோடு விசாலாட்சி வெளியே வர …

அவர் குழப்பத்தோடு வருவதைப் பார்த்த சங்கவி நேராக விசாலாட்சி இடம் சென்று, “ஏன் ஆன்ட்டி ஒரு மாதிரியா வரீங்க?” என்று கேட்டாள் மிகவும் நல்லவள் போல….

கனகாவைப் பற்றிய யோசனையோடு வந்த விசாலாட்சி, சங்கவி விசாலாட்சியிடம் என்ன ஆனது என்று கேட்டதும் கனகாவைப் பற்றிப் பேச விரும்பாமல், “ஒன்னும் இல்லம்மா சும்மாதான்” என்று சொல்லிவிட்டு, “நீ வா. சிவகாமியும் அண்ணாவும் உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்காங்க. நம்ம அங்க போகலாம்” என்று சங்கவியை அழைத்துக் கொண்டு விக்கி இருந்த இடத்திற்குச் சென்றார்.

விசாலாட்சி குழப்பமாக வருவதைப் பார்த்த சங்கவி, கனகாவைப் பற்றி ஏதேனும் சொல்லி அவர் மனதை மேலும் குழப்பி விடலாம் என்று நினைத்து அவரிடம் வந்தவளுக்குச் சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது.

“பரவாயில்லை, இப்போதைக்கு இது போதும். பின்பு மற்றதைப் பார்த்துக் கொள்வோம்” என்று நினைத்தவள் அவருடன் சிவகாமியையும் வேதாச்சலத்தையும் பார்க்கச் சென்றாள்.

விசாலாட்சி சங்கவியை அழைத்துக் கொண்டு வந்தவர் அவள் கையின் அருகில் அமர வைத்து விட்டு வேதாச்சலத்திடம் அவர் உடல்நலம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார்.

சிவகாமி சங்கமியிடம் வந்தவர் அவள் கையைப் பிடித்துக் கொண்டு, “நல்லா இருக்கியா சங்கவி?” என்று கேட்டார்.

அவள் மிகவும் நல்லவள் போல “ம்ம்ம்…” என்று மட்டும் தலையாட்டினாள். “நீ எப்படிமா இருக்க? அப்பாவுக்கு உடம்பெல்லாம் பரவாயில்லையா?” என்று உண்மையாக அக்கறை இருப்பவள் போல நடித்தாள்.

நீண்ட நாட்களுக்குப் பின்பு சங்கவியைப் பார்த்த சந்தோஷத்தில் சிவகாமிக்கும் வேதாச்சலமும் இருக்க…

ஆனால் அவளுக்கோ இவர்களெல்லாம் எதற்காக இங்கே வந்து நம்மைத் தொந்தரவு செய்கிறார்கள் என்று இருந்தது.

ஆனால் அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிவகாமியின் அருகில் அமர்ந்திருந்த மாதவியைப் பார்த்த சங்கவி, “என் இடத்துக்கு நீ வந்துட்ட. என்னை விட உன்னை நல்லா கவனிச்சுப்பாங்களே” என்று குத்தல் பேச்சாக மாதவியைப் பார்த்துக் கேட்டாள் சங்கவி.

அவள் மாதவியிடம் பேசியதின் அர்த்தம் புரியாமல், “அப்படி எல்லாம் இல்ல அக்கா” என்றாள் மாதவி.

“இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் நீ என்னோட இடத்தில இருக்கப் போற…. இதுவரைக்கும் நான் இத்தனை வருஷமா கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதித்த சொத்தையெல்லாம் ஆண்டு அனுபவிச்சுக்க.. கொஞ்ச நாள் தான். அதன் பிறகு நீ நினைச்சாலும் எதுவும் உனக்குக் கிடைக்காது” என்று சங்கவி மாதவியைப் பார்த்து மனம் முழுவதும் விஷத்தை வைத்துக் கொண்டு பேச….

அவள் இப்படிப் பேசியதும் மாதவியும் முகம் மாறிவிட… சங்கவியைப் பார்த்து புரியாமல், “அக்கா என்ன சொல்ல வரீங்க?” என்று கேட்க…

“ஒன்னும் இல்ல மாதவி. இன்னும் கொஞ்ச நாள்ல உனக்குக் கல்யாணம் ஆகப் போகுது இல்லையா… நீ உன்னோட பிறந்த வீட்டை விட்டுட்டுப் புகுந்த வீட்டுக்குப் போகப் போற.. அதனாலதான் நீங்க இருக்கும்போதே அம்மா, அப்பா கூடச் சந்தோசமா நேரத்தைச் செலவழிச்சுக்கோ.. அங்க போயிட்டா உன் புருஷனையும் அவரோட குடும்பத்தையும் பார்க்கவே உனக்கு நேரம் சரியா இருக்கும் இல்லையா… அதைத்தான் சொன்னேன்” என்று சங்கவி அப்படியே மாற்றிப் பேசி, மாதவிக்கும் அவள் அருகில் அமர்ந்து சங்கவி பேசியதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சிவகாமிக்கும் வேதாச்சலத்திற்கும் சந்தேகம் வராதபடி அப்படியே மாற்றிப் பேசினாள்.

“சரி அக்கா, நான் எங்கே போகப் போறேன்? இங்கேதான் இருக்கு அவரோட வீடு. நெனச்சா நான் அம்மா, அப்பாவைப் போய் பார்த்துக்கிறேன்” என்று மாதவி எதுவும் புரியாமல் சங்கவிக்கு பதில் சொல்கிறேன் என்று அவளைக் கடுப்பேற்றினாள்.

“நான் என்ன சொல்றேங்கிறது கூடப் புரியாம இந்த லூசு நான் சொன்னதுக்குத் தேவை இல்லாம பதில் பேசிக்கிட்டு இருக்கு” என்று மாதவிக்கு சங்கவி மனதில் திட்டினாள்.

கனகா சமையல் வேலையை எல்லாம் வேர்த்து விறுவிறுக்கச் செய்து முடித்தவர் அனைவரையும் அழைத்துச் சாப்பிட அமர வைத்தார்.

அதற்குள் துர்காவும் கைக்கு மருந்து போட்டு கார்த்திக்குடன் கீழே வர… கனகா வேகமாக துர்காவையும் கார்த்திக்கையும் அழைத்து வந்து டைனிங் டேபிளில் அமர வைத்தவர், அவளோடு ஷிவு, ரூபேஷ், ராதா, சந்தோஷ் மற்றும் துரையை இவர்களை மட்டும் அமர வைத்து அவர்களுக்கு மட்டும் இலை போட்டு உணவு பரிமாற ஆரம்பித்தார்.

இத்தனை நாள் இந்த வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிடும் பழக்கம் இருந்தது. ஆனால் இப்போது கனகா தன்னுடைய குடும்பத்தை மட்டும் தனியாக அமர வைத்து அவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்ததைப் பார்த்த விசாலாட்சிக்குக் கோபம் வர… கனகாவை நோக்கி டைனிங் டேபிளுக்குச் சென்றார்.

மாதவியுடன் பேசிக் கொண்டிருந்த சங்கவி தூரத்தில் அமர்ந்தவாறு இங்கே நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துச் சந்தோசப்பட்டு கொண்டிருந்தாள் சங்கவி.

கனகா வந்திருந்த மற்றவர்களையெல்லாம் புறக்கணித்துவிட்டுத் தன் குடும்பத்தை மட்டும் அமர வைத்து உணவு பரிமாறிக் கொண்டிருக்க….

அதைப் பார்த்து விசாலாட்சி கோபமாக அவரை நோக்கிச் செல்வதையும் பார்த்தவள், “இன்று சரியான வேடிக்கை காத்திருக்கிறது” என்று நடக்கப் போவதை ஆவலாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


You may also like

1 comment

S joshna December 17, 2025 - 2:49 pm

Ayooo intha sangaviya 😒enna panrathu u theriyala kadupaguthu 😵😣

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured