Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 273

உன் ரகசிய ரசிகை நான் 273

by Layas Tamil Novel
64 views

EPI 273

வெங்கடாச்சலம் அபி, சங்கவி இருவருக்கும் தான் கொடுக்க இருக்கும் சொத்துக்கள் முழுவதுமாக அவர்களுக்கு வந்து சேரவேண்டும் என்றால் அவர்கள் இருவரும் இங்கேயே இப்போதே தான் சொல்லும் நபரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

“என்ன இது? எங்க கிட்ட கேட்காமலேயே இப்படி ஒரு முடிவை நீங்க எப்படி எடுக்கலாம்? இந்த முடிவுக்கு நான் ஒரு காலம் சம்மதிக்க மாட்டேன்” என்று அபி அவரிடம் பிடிவாதமாகப் பேச.

சங்கவியின் நிலை என்னவென்று அவளுக்கே புரியவில்லை. வெங்கடாச்சலம் சொல்வதை நம்ப முடியாமல் அதிர்ச்சியோடு அவரையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

மரகதமும் வெங்கடாச்சலத்தின் முன் வந்து நின்றவர், “என் பொண்ணைப் பார்த்தா உங்களுக்கு ஒன்னும் இல்லாதவள் மாதிரியா தெரியுது? திடீர்னு நீங்களா முடிவு பண்ணி யாரோ ஒருத்தனைப் பிடிச்சு என் பொண்ணு தலையில கட்டிவைக்கப் பார்க்குறீங்களா?” என்று பொரிந்து தள்ளினார்.

“இங்க பாரு மரகதம். அபி மேல உனக்கு இருக்க அக்கறையை விட எங்க அதிகமாவே இருக்கு. அவளுக்கு நீ நினைச்சதை விட நல்ல மாப்பிள்ளையைத் தான் நான் பார்த்திருக்கேன்” என்றார் வெங்கடாச்சலம்.

“ஏம்மா வெங்கடாச்சலம் வேணும்னே அவர் பொண்ணோட வாழ்க்கையில விளையாடுவாரா? நீ தேவை இல்லாம பேசாத” என்று அவரை விசேஷத்திற்கு வந்து இருந்தவர் அதட்ட… மரகதம் அதன் பின் வாயையே திறக்கவில்லை.

“செண்பகம்! நீ ஏன் எதுவும் பேசாம அமைதியா இருக்க? உன் அண்ணன் எடுத்து இருக்க முடிவைப் பத்தி நீ எதுவுமே சொல்லலையே மா?” என்றார் மரகதத்தை அதட்டிய அதே நபர்.

“இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? என் அண்ணன் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியா தான் இருக்கும்” என்றவர். “என் பெண்ணுக்காக என் அண்ணன் பார்த்திருக்க பையனையே அவளுக்குக் கல்யாணம் செய்து வைக்க எனக்குச் சம்மதம்” என்றார்.

“நீ மட்டும் சம்மதம் சொன்னால் போதுமா மா? உன் பொண்ணு என்ன நினைக்கிறாள்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?” என்றவர் சங்கவியைப் பார்க்க… அவளோ என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்று இருந்தால்.

அதைப் பார்த்த வெங்கடாச்சலம் சங்கவியிடம் வந்தவர், “என்னம்மா… எதுவும் பேசாம அமைதியா இருக்க? உன் மனசுல நீ என்ன நினைச்சு இருந்தாலும் அதைத் தைரியமா என்கிட்டே சொல்லு” என்றார் அவள் தலையை வாஞ்சையாகத் தடவிக்கொடுத்து.

“நான் இத்தனை நாளா என்னோட கல்யாணத்தைப் பத்தி யோசிச்சதே இல்லை” என்று வெங்கடாச்சலத்திற்குப் பின்னால் நின்று இருந்த ஆதியையும் அவன் பக்கத்தில் நின்று இருந்த துர்காவையும் பார்த்த படி கூறினாள் சங்கவி.

அவள் பார்வை சென்ற திசையைத் திரும்பி பார்த்த வெங்கடாச்சலம், “யார் யாருக்கு யாருன்னு அந்தக் கடவுள் என்ன முடிச்சு போடுறாரோ, அது தான் நடக்கும் மா… நீ இன்னும் பழசை எல்லாம் மனசுல வெச்சிட்டு இருக்குறது சரி இல்லை” என்று வெங்கடாச்சலம் நிதர்சனத்தைச் சங்கவிக்கு எடுத்துக் கூற… அவளோ தன் அருகில் நின்று இருந்த செண்பகத்தைப் பார்த்தாள்.

மீண்டும் சங்கவியை அழைத்த வெங்கடாச்சலம், “சங்கவி, நானா உனக்காகப் பார்த்திருக்க மாப்பிள்ளையைப் பார்த்துட்டு நீ சொல்லு” என்றவர் தன் அருகில் நின்று இருந்த ஆதியைப் பார்த்து, “ஆதி, அபி, சங்கவிக்கு ஏற்பாடு செய்து இருந்த மாப்பிள்ளைங்களை அழைச்சிட்டு வாப்பா…” என்றார்.

ஆதியும் தலையை ஆட்டிவிட்டு மேடையை விட்டு கீழே செல்ல… மேடையில் நின்று இருந்த அபியும், சங்கவியும் ஆதி யாரை அழைத்து வந்து தங்கள் தலையில் கட்டப் போகிறான் என்பது போல இருவரும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.

நேராக மேடைக்கு கீழே வந்த ஆதி, அங்கே இரண்டாவது வரிசையில் தன் குடும்பத்தோடு அமர்ந்து இருந்த இரு மாப்பிள்ளைகளையும் சென்று அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு மேலே வந்தான்.

ஆதி அழைத்து வந்த மாப்பிள்ளைகளில் ஒருவனைப் பார்த்த சங்கவிக்கு ஆச்சர்யமானது. அது அவளது நீண்ட நாள் தோழன் கபிலன் அங்கு வந்தான். அவனைப் பார்த்தவள், “கபிலா நீ…” என்று அவனைப் பார்க்க… அவன், “எனக்கு ஏதும் தெரியாது. எதுவா இருந்தாலும் நீ உன் அப்பாகிட்டேயே கேட்டுக்கோ” என்றான்.

அவர்கள் இருவரும் பேசுவதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் சங்கவிக்கு கபிலனை ஏற்கனவே தெரிந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டனர்.

மற்றொரு மாப்பிள்ளை கபிலனின் தம்பி கமலன். இருவரும் ஒரே வீட்டைச் சேர்ந்த பிள்ளைகள் தான்.

அவர்கள் இருவரையும் அழைத்துத் தன் அருகில் நிற்க வைத்த வெங்கடாச்சலம், “இவங்க ரெண்டு பேரையும் உங்க ரெண்டு பேருக்கும் திருமணம் செய்து வைக்க எனக்குச் சிபாரிசு பண்ணினதே வேதாச்சலம் தான் மா… இந்த குடும்பத்துல இருக்க ரெண்டு பசங்களில் ஒருத்தரைத் தான் உன் அப்பா உனக்கு ஏற்கனவே திருமணம் செய்து வைக்கப் பார்த்து இருந்ததா சொன்னான்.

அதனால் நான் அபியையும் அதே வீட்டில் பெண் கொடுக்கலாம்னு நான் முடிவு பண்ணினேன்” என்றவர். “அபிக்கு உன்னை விட வயது கொஞ்சம் அதிகம் என்பதால் அவளுக்கு மூத்தவனான கபிலனையும், உனக்கு இளையவன் கமலனையும் திருமணம் செய்து வைக்க உங்க வீட்டில் உங்களைப் பத்தி எல்லா விஷயத்தையும் சொல்லி உங்க திருமணத்திற்குச் சம்மந்தம் வாங்கினது நான் தான். என்றாலும் வேதாச்சலம் சங்கவிக்குக் கல்யாணம் செய்து வைக்க முழு மூச்சாக இறங்கி அவர்களிடத்தில் பேசி புரிய வைத்தான்” என்று வெங்கடாச்சலம் கூற…

சங்கவியின் கண்கள் தானாக வேதாச்சலத்தைத் தேடியது. அவர் மேடைக்குக் கீழே விக்கி, நிலானியுடன் நின்று இருக்க… மேடையில் இருந்த சிவகாமி சங்கவியை நோக்கி வந்தவர், “எங்க மேல இருக்க கோபத்தினால் உனக்கு வந்த நல்ல வரனை வேணாம்னு சொல்லிடாதே சங்கவி. என்னதான் செண்பகம் தான் உன்னோட அம்மா என்றாலும் உன்னை இத்தனை வருசமா என்னோட சொந்தப் பொண்ணா தான் நினைச்சு வளர்த்தேன். இப்பவும் விக்கி, மாதவி எனக்கு எப்படியோ, அவங்களை விட நீதான் எனக்கு எப்பவும் பெருசு சங்கவி” என்று கண்களில் கண்ணீரோடு அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு சிவகாமி நின்றார்.

இன்று தனக்கு என்ன ஆனது? இவர்கள் எல்லாம் என்னிடம் காட்டும் பாசம் எல்லாம் பொய் என்று சொல்லித் தன்னால் எதையும் உதாசீனப்படுத்த முடியவில்லையே என்று உள்ளுக்குள் குமுறிக்கொண்டு இருந்தால். அவளால் இங்கு நடப்பதை எதிராகவும் முடியவில்லை. ‘சரி’ என்று சம்மதமும் சொல்ல முடியவில்லை. அப்படியே நின்று இருந்த சங்கவி செண்பகத்தைப் பார்க்க… “உன்மேல உண்மையான பாசம் வெச்சிருக்க எங்களை நீ நம்பனும் சங்கவி. ஏற்கனவே உனக்கும் ஆதிக்கு மேடை வரை வந்து உங்க கல்யாணம் நின்னு போனதுக்கு கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும். நீ அப்போ எடுத்த முடிவு சரி தப்புன்னு சொல்ல நாங்க வரல. ஆனா இப்போ நீ தப்பான முடிவை எடுத்துரக்கூடாதுனு தான் சொல்றேன்.

உன்னை இத்தனை வருசமா பெத்து வளர்த்து ஆளாகின இவங்க ரெண்டு பேருக்கும் எங்க எல்லாரையும் விட உன்னை நல்லாப் புரிஞ்சு வெச்சிருப்பாங்க. நீ இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதம் சொல்லணும் சங்கவி” என்றார் செண்பகம்.

சிவகாமி சங்கவியிடம், “நீ செண்பகத்துக்குச் சேர வேண்டிய சொத்துக்களை எல்லாம் உனக்கு வரணும்னு தானே இவ்வளவு நாள் கஷ்டப்பட்டுட்டு இருந்த? அது இப்போ தானாவே உன் கைக்கு வருதே… அதுவும் போதலையா? விக்கி உன்னை அவனோட கூடப் பிறந்தவளா நினைச்சி அவன் சம்பாரிச்சு வாய்த்த சொத்தில் சரி பாதியை உனக்கு எழுதி தந்து இருக்கான். இங்கே பாரு” என்று தன் சேலையில் படித்து வைத்து இருந்த பத்திரத்தை எடுத்து அவளிடம் நீட்டினார் சிவகாமி.

அதைப் பார்த்த சங்கவிக்கு பதில் சொல்ல வார்த்தைகளே இல்லை. ஏற்கனவே பேச முடியாமல் வாய் அடைத்து போய் இருந்தவள் இப்போது பேச்சிழந்தவளாக மேடையில் நின்று இருந்தால்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த அபி, “என்ன ஆள் ஆளுக்கு அவளையே குறிவெச்சு சமாதானம் பேசிட்டு இருக்கீங்க… அவள் என்ன அவ்வளவு உசத்தியா? அதுவும் என்னை விட…” என்றால்.

அவளை ஏளனமாக ஒரு பார்வை பார்த்த சங்கவி அமைதியாக நின்று இருக்க…

அவளிடம் திரும்பிய வெங்கடாச்சலம், “தேவை இல்லாம பேசி நேரத்தை வீணடிக்காதே அபி. உனக்கு இந்தத் திருமணத்திற்குச் சம்மதமா?” என்றார்.

“மாட்டேன்னு சொன்னா என்னை விடவா போறீங்க? நீங்க எந்தக் கழுதையை கட்டிக்க சொன்னாலும் நான் கல்யாணம் செய்துக்கிறேன்” என்று அவளுக்காகப் பார்த்திருந்த ஆறடி ஆண்மகன், யாருக்கும் அடங்காதவன், ஆதியைப் போலச் சாந்தமான முகமாக இருந்தாலும் பார்ப்பவர்களைத் திரும்பி பார்க்க வைக்கும் அழகில் திடகாத்திரமான உடல் அமைப்போடு அங்கே நின்று இருந்தான் கபிலன்.

அபி தன்னைக் கழுதை என்றதும் அவனுக்குக் கோபம் வரத்தான் செய்தது. இருந்து சபை நாகரிகம் கருதி அமைதியாக நின்று இருந்தான் கபிலன்.

“சரி அப்புறம் என்ன? அதுதான் அபி மூத்தவன் கபிலனைத் திருமணம் செய்துக்க சம்மதம் சொன்னாளே… சங்கவி நீ இளையவன் கமலனை கல்யாணம் செய்துக்கச் சம்மதிக்குறியா?” என்றார் வெங்கடாச்சலம்.

கபிலன் அருகில் நின்று இருந்த அவன் தம்பி கமலனைப் பார்த்தவள், சிறுவயதில் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவனோடு சேர்ந்து விளையாடியது அவளுக்கு நினைவுக்கு வந்தது. பிறகு திரும்பி வெங்கடாச்சலத்தைப் பார்த்தவள். “எனக்குக் கமலனை கல்யாணம் செய்துக்கச் சம்மதம் இல்லை” என்றாள்.

சங்கவியிடம் இத்தனை பேர் பேசி அவளை எப்படியும் இன்று இந்தத் திருமணத்திற்குச் சம்மதம் வாங்கி விடலாமா என்று ஆதி, கதிர், வேதாச்சலம், வெங்கடாச்சலம், துர்கா என அனைவரும் இவ்வளவு பிளான் செய்து ஏற்பாடு செய்திருந்த இந்தத் திருமணத்திற்கு அவள் சம்மதம் இல்லை என்று சொன்னதும், எடுத்த முயற்சிகள் எல்லாம் வீண் போய்விட்டது என்று விரக்தியடைந்தவர்களா ஒருவரை ஒருவர் செய்வதறியாது பார்த்துக் கொள்ள…

கீழே வேதாச்சலத்திடம் நின்று இருந்த விக்கி… “அப்பா… இவளை எப்படி நீ இந்த அளவுக்கு வளர்த்து வெச்சிருக்க… எந்த மாதிரியான அஸ்திரத்தையும் இவ மேல பண்ண முடியலையே… நல்லவேளை சங்கவி எனக்கு உண்மையாவே கூடப் பிறந்தவளா வரலை. இல்லையின்னா இவளை நான் எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி வந்து இருக்குமோ?” என்று புலம்பினான்.

வேதாச்சலம் சிரித்துக் கொண்டே, “கொஞ்சம் பொறு விக்கி. சங்கவி இன்னும் முழுசா பேசி முடிக்கல. அவள் என்ன சொல்லுறாள்னு பார்க்கலாம். வெயிட் பண்ணு” என்றார்.

“உனக்கு என்ன நீ என்னை வெயிட் பண்ணத் தான் சொல்லுவ… ஆனா நீயும் அம்மாவும் சொன்னீங்கன்னு உங்க பேச்சைக் கேட்டுட்டு ஆதி அவனுக்குச் சேர வேண்டிய சொத்தில் இருந்து நான் கொடுத்தா மாதிரி சங்கவிக்கு எழுதி கொடுத்திருக்கானே. அதை என்ன செய்யப் போகிறாளோ தெரியலையே” என்றான் விக்கி.

“கொஞ்சம் நேரம் பேசாம இரு விக்கி. அங்கே பாரு சங்கவி அக்கா ஏதோ சொல்லிட்டு இருக்காங்க” என்று அவன் கையைப் பிடித்து அமர்த்தினால் நிலானி.

விக்கி புலம்புவதை நிப்பாட்டிவிட்டு மேடையில் நின்று இருந்த சங்கவியைப் பார்க்க… அவளிடம் வந்த செண்பகம், “என்ன சங்கவி இப்படிச் சொல்லுற? என் அண்ணன் உனக்காக எவ்வளவு பெரிய இடத்துல இருந்து மாப்பிள்ளை பார்த்திருக்காரு. தவிர நீ கேட்ட சொத்துக்களை விடமும், அதிகமா உனக்கு நம்ம விக்கியும் சேர்த்து எழுதி கொடுத்திருக்கானே. இதுக்கு மேல என்ன வேணும்?” என்றவர்.

“இவ்வளவு நேரம் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்த அபி கூட அந்தத் தம்பியை பார்த்ததும் கல்யாணம் செய்துகிறேன்னு சம்மதம் சொல்லிட்டா. ஆனா நீ என்ன இப்படி ஒரே அடியா அந்தத் தம்பியை வேணாம்னு சொல்லுற?” என்றார்.

“அம்மா! நான் எனக்குக் கல்யாணமே வேண்டாம்னு சொல்லலையே. வெங்கடாச்சலம் அங்கிள், வேதாச்சலம் அப்பா, சிவகாமி அம்மா, நீங்கன்னு எல்லாரும் சேர்ந்து எனக்காக இவ்வளவு யோசிச்சு ஒரு வாழ்க்கையை அமைச்சு கொடுத்தா, அதை நான் வேணாம்னு சொல்லுற அளவுக்கு முட்டாள் இல்லை” என்றால் சங்கவி.

அவள் பேசுவதைப் பார்த்த கதிர் ஆதியிடம், “அண்ணா, இவள் இவ்வளவு நேரம் எதுவும் பேசாம அமைதியா இருந்த அப்பவே நினைச்சேன் ஏதோ யோசிக்கிறான்னு… ஆனா இப்போ இவ என்ன சொல்ல வரான்னே எனக்குப் புரியலையே… இப்போ சங்கவி இந்தக் கல்யாணம் வேணும்னு சொல்லுறாளா? இல்லை வேணாம்னு சொல்லுறாளா?” என்றான் குழப்பமாக.

“எனக்கும் அதே டவுட் தான் கதிர். பொறு சங்கவி என்ன சொல்லுறாள்னு பார்க்கலாம்” என்ற ஆதி. சங்கவியிடம், “இப்போதான் உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லையான்னு சொன்ன… இப்போ மறுபடியும் ‘கல்யாணம் வேணாம்னு சொல்ல நான் என்ன முட்டாளா’ன்னு கேக்குற… எதுவா இருந்தாலும் நேரடியா விசயத்துக்கு வா” என்றான் ஆதி சற்று எரிச்சலாக.

அவனையும் அவன் அருகில் நின்று இருந்த துர்காவையும் பார்த்த சங்கவி, “என்னை கல்யாணம் செய்து இந்த வீட்டில் இருந்து துரத்துறதுல உங்க ரெண்டு பேருக்கும் அவ்ளோ அவசரம்… ம்ம்…” என்று அவர்களை முறைத்தவள் வெங்கடாச்சலத்தைப் பார்த்து.

“நான் கல்யாணம் செய்துக்கச் சம்மதிக்குறேன். ஆனா எனக்கு நீங்க பார்த்து வெச்சிருக்க கமலை இல்ல… அவனோட அண்ணன் கபிலனை நான் கல்யாணம் செய்துகிறேன்” என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டு அனைவரையும் முழி பிதுங்க வைத்தாள் சங்கவி.

சங்கவி… “என்ன இது கபிலனா? நம்ம அபிக்குத் தானே பேசி இருக்கு? இப்போ நீ வந்து இப்படி சொன்னா என்ன மா அர்த்தம்? அந்தத் தம்பி உன்னைப் பத்தி என்ன நினைக்கும்? ‘நம்ம தம்பியை கல்யாணம் செய்துக்கப் பேசின பொண்ணு இப்போ அவனை கல்யாணம் செய்துக்காம அவன் அண்ணனான தன்னை கல்யாணம் செய்துக்குறேன்னு சொல்லுராலே’னு உன்னைத் தப்ப நினைக்க மாட்டாரா?” என்று செண்பகம் கூற.

“இல்லை… நான் சங்கவியைப் பத்தித் தப்பாவே நினைக்கல… சங்கவியைக் கல்யாணம் செய்துக்க எனக்குச் சம்மதம் தான்” என்றான் கபிலன்.

இதை யாருமே எதிர்ப்பார்க்கவே இல்லை. அபிக்கு இப்போது சபையில் இத்தனை பேர் முன்னிலையில் தன்னை மூக்கை உடைத்தது போல உணர்ந்தாள்.

“எனக்கு ஏற்கனவே தெரிஞ்ச பொண்ணு சங்கவி. அவளைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அவளுக்கும் என்னை, சங்கவிக்கும் என்னை நல்லா தெரியும்னு நினைக்குறேன்” என்ற கபிலன். “நீங்க சொன்னவங்களை நான் கல்யாணம் செய்துக்கிட்டா அவங்களுக்கும் எனக்கும் ஒத்து வருமா என்னவென்று எனக்குத் தெரியாது. அதற்கு நான் சங்கவியையே திருமணம் செய்துகொள்வேன்” என்றான்.

கபிலனின் பதில் கேட்டு அங்கிருந்தவர்கள் எல்லாம் குழப்பத்தில் அவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்று இருக்க… இங்கே அபிக்கோ கபிலன் பேசியது கேட்டு எரிமலையாய் கொதித்து எழுந்தாள்.

வேகமாக அவன் முன் வந்து நின்ற அபி, “டேய்! உனக்கும் எனக்கும் தானே கல்யாணம் செய்துவைக்க என் அப்பா பேசி இருந்தார்? இப்படி திடீர்ன்னு இதோ இங்கே நிக்குறாளே, எல்லார் குடியையும் கெடுக்குறதுக்குன்னே இருக்குறாளே இந்தச் சங்கவியையா நீ கல்யாணம் செய்துக்குறேன்னு சொல்றே… அவ உன் தம்பியை விட்டுட்டு உன்னைக் கல்யாணம் செட்கிறேன்னு காரணம் என்ன தெரியுமா? நீ அவனை விட அழகா இருக்க… அவனை விட நீ திறமையானவனா அவ கண்ணுக்குத் தெரிஞ்சிருக்க. அதனால் தான் அவ உன்னைக் கல்யாணம் செய்துக்கச் சம்மதிச்சு இருக்கா” என்றாள் சங்கவியின் மேல் இருந்த பொறாமையில்.

அவள் பேசியதைக் கேட்டு அவள் பொறாமையில் தான் அப்படியா பேசுகிறாள் என்று அனைவர்க்கும் தெரிந்து இருக்க…

“இங்கே பாருங்க. சங்கவி எப்படிப்பட்டவள், அவள் யார் குடியைக் கெடுத்தாள்னு எல்லாம் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்ச சங்கவி என்னோட ஒரு நல்ல தோழி… அவள் என்கிட்டே பழகும்போது என்கிட்டே அப்படி நடந்துக்கலை. அவளை நான் அப்படிப் பார்க்கவும் இல்லை” என்று சங்கவியை விட்டுக் கொடுக்காமல் பேசினான் கபிலன்.

இது சங்கவிக்கே ஆச்சர்யம் தான். அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதைக் கண்டுகொள்ளாமல் செண்பகத்தைப் பார்த்து, “அம்மா! நான் நீங்க சொன்ன மாதிரி கல்யாணம் செய்துக்கச் சம்மதம் சொல்லிட்டேன். அதே போல எனக்கு யாரைப் பிடிச்சிருக்கோ அவங்களை கல்யாணம் செய்து வையுங்கன்னு தானே நான் கேக்குறேன்? அதுவும் கபிலன் வெங்கடாச்சலம் அங்கிலும், என் அப்பாவும் பார்த்த மாப்பிள்ளை தானே கபிலன்?” என்றாள்.

அவள் பேசுவதும் சரிதான் என்று தோன்றினாலும், இப்போது அபியின் நிலை என்னவாக இருக்கும் என்று அவளை கேள்விக்குறியோடு அனைவரும் பார்க்க… அபியின் பார்வை இப்போது கமலனின் மேல் விழுந்தது.

அபி தன்னைப் பார்த்ததும், “எனக்கு இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம். இப்போ நடந்துட்டு இருக்க விஷயம் எல்லாம் எனக்கு ரொம்பக் குழப்பத்தைக் கொடுக்குது. என் அண்ணாவுக்கு முதலில் கல்யாணம் நடக்கட்டும்” என்றவன், “என்னோட மனநிலையை நீங்க எல்லாரும் புரிஞ்சுப்பீங்கனு நம்புறேன்” என்றவன் மேடையில் இருந்த தன் பெற்றோரைப் பார்த்து, “அப்பா… என்னை மன்னிச்சிடுங்க. நான் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சதே உங்களுக்காகவும் அம்மாவுக்காகவும் தான். எனக்கு இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம்” என்றான்.

அவர்களும் தன் மகனை வற்புறுத்த எண்ணாமல் அமைதியாக இருந்துவிட…

இங்கு நடப்பதை எல்லாம் பார்த்து வெங்கடாச்சலத்திடம் வந்த மரகதம், “இப்போ உங்களுக்குச் சந்தோசமா? என்னையும், என் பொண்ணையும் கூப்டு வெச்சு அவமானப் படுத்திட்டீங்க இல்லை… இவங்க எல்லாரும் சேர்ந்து என்னையும் என் பொண்ணையும் ஏமாத்திட்டாங்க.. உங்க யாரையும் நான் சும்மா விட மாட்டேன்” என்றவர், “வாடி.. இனி நாம இங்கே இருக்குறது நமக்கு தான் அசிங்கம்” என்றவர் அங்கிருந்து அபியை அழைத்துக்கொண்டு செல்லப் போக…

“அம்மா ஒரு நிமிஷம் இருங்க” என்ற அபி அவர் பிடியைத் தன் கையில் இருந்து விலக்கிவிட்டு சங்கவியை நோக்கி வந்தவள். “இத்தனை நாளா நீ இங்கே இருக்கறவங்களுக்குக் குடைச்சல் கொடுத்து, அவங்க நிம்மதியைக் கெடுத்து, அவங்களை எவ்வளவு தூரம் கஷ்டப்படுத்தணுமோ… எவ்வளவு தூரம் கீழ்த்தரமான வேலை செய்யணுமோ அத்தனையும் செய்துட்டு வந்தே…”

“இப்போ அதை எல்லாம் பெருசா எடுத்துக்காம உனக்கு ஒரு நல்ல வசதியான குடும்பத்துல சம்மந்தம் வந்ததும். அதை விட இந்தச் சொத்துக்கள் எல்லாம் உனக்கு வரப்போகுதுனு தெரிஞ்சதும் நீ இப்படி இவங்க பேச்சைக் கேட்டு மனசு மாறி இவனைக் கல்யாணம் செய்துக்கப் போற… அப்போ நீ நல்லவளா மாறிட்டியா? என்னால இதை நம்பவே முடியலை. நீயா இது?” என்றால் அபி புரியாமல் சங்கவியிடம்.

அவளைப் பார்த்துச் சிரித்த சங்கவி, “இந்தச் சொத்துக்காகவோ… இல்லை இவங்க எல்லாம் என்மேல காட்டுன பாசத்துக்காகவும் தான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன் அது உண்மைதான். ஆனா நான் கமலைக் கல்யாணம் செய்துக்காம அவனோட அண்ணன் கபிலனை கல்யாணம் செய்துக்கக் காரணமே நீதான்” என்றாள் சங்கவி.

“என்னது நானா?” என்று ஆச்சர்யமாக அபி கேட்க..

“ஆமா நீதான்! உன்னாலதான்” என்றவள், “நீயே யோசிச்சு பாரு. ஒரே வீட்டில் நீயும் நானும் கல்யாணம் செய்துட்டு போனா அது நல்லவா இருக்கும்? எனக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை.

அதே போல எங்கே இருந்தாலும் அதில் நான் தான் முதல் ஆள், நம்பர் one ஆஹ் இருக்கணும். இப்போ நீ கபிலனை கல்யாணம் செய்துகிட்டா நீ அந்த வீட்டுக்கு மூத்த மருமகளா வந்திருவா. உனக்கு அடுத்துத் தான் நான்னு நினைக்கும்போதே எனக்கு என்னவோ போல இருக்கு. அதை என்னால சகிச்சிக்கு முடியாது. அதனால் தான் நான் கபிலனை கல்யாணம் செய்துக்கச் சம்மதம் சொன்னேன். ஆனா நானே எதிர்பார்க்காதது அவனும் என்னைக் கல்யாணம் செய்துக்கச் சம்மதம் சொன்னது தான்” என்று தன் மனதில் உள்ளதை அப்படியே அபியிடமும், அனைவர்க்கும் தெரிவித்து விட்டாள்.

அபிக்கு சங்கவி சொன்னதை எல்லாம் கேட்டு ஆத்திரமாக வந்தது. “ஏய் உன்னை நான் சும்மாவே விட மாட்டேன் டி… இதுவ்வாரை எத்தனை பேரோட வாழ்க்கையை அளிக்கணும்னு நீ கங்கணம் கட்டிக்கிட்டு சுத்திட்டு இருந்த. இனிமேல் என்னோட முதல் வேலையே உன் வாழ்க்கையைக் கெடுத்து இந்தச் சொத்து எதையும் உனக்குக் கிடைக்க விடாம செய்றது தான்” என்றாள் அபி.

“அப்படியா? இந்தச் சங்கவிக்கே சவாளா? இந்த மேகமோ அவள் ஸ்டோரியில் ஆரம்பத்துல இருந்து இப்போவரை என்னைப் பத்திப் படிச்சு நல்லா தெரிஞ்சுகிட்ட ரீடர்ஸ் கிட்டே போய் என்னைப் பத்தி கேட்டுப் பாரு. அவங்க சொல்வாங்க நான் யாரு எப்படின்னு. உன்னால என்னோட” என்று தலை முடியைத் தடவிக் காட்டிய சங்கவி, “ஒன்னும் பண்ண முடியாது” என்று அபியிடம் சவால் விட…

“ஏய்! யாரு உன்னை என்ன சொன்னாலும் எப்படி நினைச்சாலும் எனக்குக் கவலை இல்லை. ஆனா நான் உன்னை ஒரு வழி பண்ணாம ஓய மாட்டேன்” என்றவள் அங்கே இருந்து தன் அம்மாவை கூட்டிக்கொண்டு கிளம்பப் போக…

அபியைப் பார்த்துச் சொடுக்கிட்டு அழைத்த சங்கவி, “ஏய்! இந்தக் ஸ்டோரியில் ஏற்கனவே துர்கா ஹீரோயின்னா இருக்கா. அவளைத் தவிர இங்கே நிறைய ஹீரோ, ஹீரோயின்ஸ் சும்மா பூந்து விளையாடிட்டு இருக்காங்க.

உனக்கும் எனக்குமான சண்டையில் நான் தான் இங்கே ஹீரோயின், என்னோட ஹீரோ கபிலன். நீ தான் வில்லின்னு கன்பார்ம் ஆகிருச்சு. அதனால் நம்ம சண்டையை மேகமோ அவளில் வெச்சுக்காம நமக்குன்னு தனியா ஒரு ஸ்டோரியை தயார் செய்து வெச்சிருக்காங்க. அங்கே நாம ரெண்டு பேரும் நம்ம சண்டையை வெச்சுப்போம்மா” என்றாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured