Home Uncategorizedஅவளுடன்(அகலியுடன்) ஒரு நாள்! தொடருமா? தீரனே! FLING 33

அவளுடன்(அகலியுடன்) ஒரு நாள்! தொடருமா? தீரனே! FLING 33

by Layas Tamil Novel
118 views

FLING 33

சென்னை வந்து சேர்ந்த தீரனுக்கு, இந்த ஊரின் வெப்பமும், சுறுசுறுப்பும் ஒவ்வாமையைத் தந்தன. அவன் ஒரு காலத்தில் நேசித்த இந்தச் சென்னை, இன்று அவனுக்கு ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாகத் தெரிந்தது.

அகலிகாவை அங்கிருந்து அனுப்பிவைக்கும்போது, ‘அவள் சந்தோஷமாக இருப்பாள்’ என்று ஒரு கணக்கு போட்டான். ஆனால், அவள் சென்ற நிமிடத்திலிருந்து தீரனின் கணக்குகள் அனைத்தும் தடம் புரண்டன. பிடிவாதக்காரன், முரட்டுத்தனமானவன் என்று பெயர் எடுத்த தீரன், இப்போது ஒரு சாதாரணக் காதலனாகத் தன் அறைக்குள் முடங்கிக் கிடந்தான்.

தீரனின் வீட்டின் வரவேற்பறையில் பேச்சுவார்த்தைகள் மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருந்தன. தீரனின் அப்பா ஆதித்யாவும், ரியாவின் அப்பா சிவகுமாரும் அமர்ந்து ‘மெர்ஜர்’ ஒப்பந்தங்களைப் பேசி முடித்தனர்.

“தீரன், ரியா… ரெண்டு பேருக்கும் அடுத்த மாசம் 15-ம் தேதி முகூர்த்தம் குறிச்சாச்சு. லண்டன் ப்ராஜெக்ட் முடிஞ்ச கையோட இந்தத் திருமணத்தை நடத்திட்டா, நம்ம ரெண்டு கம்பெனியும் ஒன்னா சேர்ந்துடும். மார்க்கெட்ல நாம தான் நம்பர் ஒன்!” என்று ஆதித்யா உற்சாகமாகச் சொன்னார்.

தீரன் அங்கேதான் அமர்ந்திருந்தான். ஆனால் அவன் காதுகளில் அந்த வார்த்தைகள் விழவே இல்லை. அவன் கையில் இருந்த டேப்லட்டில்  பழைய ஃபைல்களைப் பார்ப்பது போலப் பாவனை செய்துகொண்டிருந்தான். ஆனால் அவனது விரல்கள் தேடியது அகலிகாவின் அந்த ஒரு புகைப்படத்தைத்தான்.

“தீரன்! என்னடா பதிலே சொல்ல மாட்டேங்கிற? ரியா உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கா,” என்று ஆதித்யா அதட்டினார்.

ரியா அவன் தோளைத் தொட்டு, “தீரன்! நம்ம வெட்டிங் கார்டு டிசைன் பாரு… கோல்டன் தீம்  நல்லாருக்கும்ல?” என்றாள்.

தீரன் மெல்லத் தலை நிமிர்ந்தான். ரியாவின் கண்களில் அந்தத் திருமணத்திற்கான உற்சாகம் இருந்தது. ஆனால் அவனுக்கு அது ஒரு ‘பிசினஸ் டீல்’  மட்டுமே.

“உன் இஷ்டம் ரியா… உனக்கு எது பிடிக்குமோ அதையே பண்ணு,” என்று சொல்லிவிட்டு எழுந்தான்.

“எங்க கிளம்பிட்டே தீரன்?”

“தலை வலிக்குதுப்பா… நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்,” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டான்.

அறைக்குள் நுழைந்ததும் தீரன் சட்டையை கழட்டி தூக்கி எறிந்தான். கண்ணாடியின் முன் நின்று தன் முகத்தைப் பார்த்தான். கண்கள் சிவந்து, தூக்கமில்லாமல் தளர்ந்து போயிருந்தான்.

“என்னடா பண்ணி வச்சிருக்கே தீரன்? அவளை மறந்துடலாம்னு தானே நினைச்ச..? இப்போ ஏன் அவ நினைப்பு உன்னைச் சாகடிக்குது?” என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டான்.

அகலிகா அவனை ஒதுக்கியது, அவனிடம் சண்டையிட்டது, பின்னர் அவனிடம் முழுமையாகச் சரணடைந்தது என ஒவ்வொரு காட்சியும் அவன் கண் முன்னே வந்து போயின.

‘ஜஸ்ட் ஒரு பிளிங் … ஒரு தற்காலிக ஈர்ப்புன்னு தான் ஆரம்பிச்சேன். ஆனா அந்தப் பெண் எப்படி என் மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டா? அவளோட அந்த ‘பரு_1’ன்ற பெயரும், அவளோட அந்தத் தவிப்பான பார்வையும் இல்லாம ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியலையே!’

அவன் மொபைலை எடுத்தான். அவளது நம்பரை டயல் செய்தான். ஆனால் ‘கால்’ பட்டனை அழுத்தத் துணிவு இல்லை. ‘அவள் முகேஷ் கூடச் சந்தோஷமா இருப்பாள்… அவளை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்?’ என்று நினைக்கும்போதே அவன் நெஞ்சு கனத்தது.

சிறிது நேரம் கழித்து ரியா அவன் அறைக்குள் வந்தாள். அவளுக்குத் தீரனின் மாற்றங்கள் புரிந்தன.

“தீரன்… நாம பேசலாமா?” என்று கட்டிலில் அமர்ந்தாள்.

தீரன் ஜன்னல் வழியாக வெளியைப் பார்த்தபடி, “சொல்லு ரியா,” என்றான்.

“லண்டன்ல இருந்து வந்ததுல இருந்து நீ ஒரு மாதிரியாவே இருக்கே. என்கிட்ட சரியாப் பேசுறது இல்ல. நாம கல்யாணம் பண்ணிக்கப் போறோம் தீரன். இது வெறும் ரெண்டு கம்பெனிக்கான பந்தம் மட்டும் இல்ல… நாம ரெண்டு பேரும் ஒன்னா வாழப்போறோம். ஆனா உன் மனசு இங்க இல்லையே?” என்றாள் ரியா கவலையுடன்.

தீரன் அமைதியாக இருந்தான்.

“தீரன்… உனக்கு என்னைப் பிடிக்கலையா? உனக்கு இந்த கல்யாணத்துல இன்டெரெஸ்ட் இல்லையா?”

இந்தக் கேள்வி தீரனைச் சுருக்கென்று தைத்தது. ‘கல்யாணத்தில் இன்டெரெஸ்ட்’ என்று கேட்டால்   ‘ஆமாம்’ என்று கத்தத் தோன்றியது. ஆனால், அந்த உண்மை ரியாவையும், முகேஷையும், மொத்தக் குடும்பத்தையும் சிதைத்துவிடும் என்று அவனுக்குத் தெரியும்.

“அப்படியெல்லாம் இல்ல ரியா. கொஞ்சம் ஒர்க் டென்ஷன் …  டயர்டா இருக்கேன். மத்தபடி வேற ஒன்னும் இல்ல,” என்று ஒரு பெரும் பொய்யைச் சொன்னான்.

ரியா அவன் கையைப் பற்றினாள். “நிஜமாவா? எனக்கு உன் மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு தீரன். நாம ஒரு பவர் கப்பிளா இருப்போம்னு நான் நம்புறேன்.”

ரியா போன பிறகு தீரன் தன் கையைப் பார்த்தான். அவளது தொடுதல் அவனுக்கு எந்த உணர்வையும் தரவில்லை. ஆனால் அகலிகா அவனது விரல் நுனியைத் தொட்டாலே அவன் உடலில் மின்னல் பாயுமே!

‘இப்படி ஒரு பிணமான வாழ்க்கையை நான் வாழணுமா? ரியாவை ஏமாத்திக்கிட்டு, எனக்குப் பிடிக்காத ஒரு பந்தத்துல நான் ஏன் சிக்கிக்கணும்? ஆனா இந்த ‘பிசினஸ் மேரேஜ்’-ஐ முறிச்சா… என் அப்பாவோட கௌரவம் என்னாகும்? முகேஷோட நிலைமை என்னாகும்?’

தீரன் அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். அவனது பிடிவாதம் காதலாக மாறியிருந்தது. அந்தக் காதல் அவனது அதிகாரத்தைச் சிதைத்துவிட்டிருந்தது.

“நான் அவளைத் தொலைச்சிட்டேன்… அவளோட சந்தோஷத்துக்காக இதை நான் செய்திருக்கேன். ஆனா அவ இல்லாத என் உலகம் இவ்வளவு இருட்டா இருக்கும்னு நான் நினைக்கவே இல்லையே!”

அவன் மதுக் கோப்பையை எடுத்தான். ஆனால் மதுவும் அவனது வலியைப் போக்கவில்லை. அவன் மனதிற்குள் அகலிகாவின் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. ‘நீங்களும் என்னை மறக்கக் கூடாது தீரன்’ என்று அவள் விமான நிலையத்தில் சொன்ன அந்த வார்த்தைகள் அவனது இதயத்தில் இன்னமும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது

தீரன் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தான். ஒருபுறம் குடும்ப கௌரவம், பிசினஸ், ரியா. மறுபுறம் அவனது உயிர் போன்ற அகலிகா.

“இந்தக் கல்யாணத்தை என்னால நடத்த முடியாது… ஆனா இதை எப்படி நிறுத்துறது? அகலிகா, நீயாவது என்கிட்ட ஓடி வந்துடக்கூடாதா?” என்று அவன் கதறினான்.

சென்னையின் அந்த நள்ளிரவில், ஒரு பெரும் தொழிலதிபர், ஒரு ஆதிக்கம் செலுத்தும் மனிதன், ஒரு பெண்ணின் நினைவிற்காகத் தன் மொத்தக் கர்வத்தையும் இழந்து அழுதுகொண்டிருந்தான். காதல் அவனை முழுமையாகச் சிதைத்திருந்தது.

முகேஷின் பிரம்மாண்டமான வீட்டின் வரவேற்பறையில் ஒரு அமைதியான சூழல் நிலவியது. அகலிகா, முகேஷ் மற்றும் ரியா மூவரும் ஷாப்பிங் சென்றிருக்க, தீரன்  ரியாவுடன் இங்கே கிளம்பி வந்துவிட்டான், தூரத்தில் இருந்தாவது அகலிகாவை பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் அவனுக்கு.

தீரன் மட்டும் ஹாலில்  தன் லேப்டாப்பில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தான். தாகமாக இருந்ததால் தண்ணீர் குடிக்க கிச்சன் பக்கம் சென்றவன் , அங்கே டைனிங் டேபிளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அகலிகாவின் அம்மா ஜானகியும், முகேஷின் அம்மா விஜயாவின் குரல் அவனது கவனத்தை ஈர்த்தது.

அவர்கள் பேசுவது அகலிகாவைப் பற்றித்தான் என்பதால், தீரன் அறியாமலேயே அங்கேயே நின்று கேட்கத் தொடங்கினான்.

“நிஜமாவே விஜயா… நான் போன ஜென்மத்துல என்ன புண்ணியம் பண்ணேனோ தெரியல. முகேஷ் மாதிரி ஒரு மருமகன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்,” என்றார் ஜானகி கண்கள் கசிய.

விஜயா சிரித்துக்கொண்டே, “என்ன ஜானகி இது… இப்போ எதுக்கு இதெல்லாம்?” என்றார்.

“இல்ல விஜயா… எங்க குடும்பம் ஒரு பெரிய கடன்பிரச்சனையில சிக்கி, வீடே ஏலத்துக்கு வர்ற நிலைமையில இருந்தப்போ, ஒரு வார்த்தை கூடத் தயங்காம முகேஷ் வந்து நின்னானே… அதை என்னால மறக்கவே முடியாது. அந்தப் பல கோடி ரூபாய் கடனை அவன் மட்டும் அடைக்கலன்னா, இன்னைக்கு எங்க நிலைமை என்ன ஆகியிருக்கும்? அதுமட்டுமில்லாம, அகலிகாவோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தப்போ,  அவரோட டிரீட்மெண்டுக்காக மொத்த பணத்தையும் செலவு செய்து அவரைக் காப்பாத்தினதும் நம்ம முகேஷ் தான்,” என்று ஜானகி சொல்லச் சொல்ல, தீரனின் இதயம் ஒரு நிமிடம் நின்றது.

தீரன் அதிர்ச்சியில் உறைந்து போனான். ‘முகேஷ் இவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறானா? அப்படின்னா…?’ என்று அவன் மனம் கணக்கு போட ஆரம்பித்தது,

ஜானகி தொடர்ந்தார், “அகலிகா ரொம்ப உணர்ச்சிவசப்படமாட்டாங்க விஜயா. ஆனா அவளுக்கு நன்றிக்கடன் ரொம்ப அதிகம். ‘அம்மா… முகேஷ் நமக்காக எவ்வளவோ பண்ணியிருக்காரு. அவர் இல்லைன்னா நமக்கு இந்த வாழ்க்கையே கிடையாது. அதனால அவர் என்ன சொன்னாலும் நான் கேட்பேன்’னு சொல்லுவா. அவளுக்குத் தன் வாழ்க்கையை விட, இந்த வீட்டுக்குச் செய்ய வேண்டிய நன்றிக்கடன் தான் பெருசா தெரியுது. அதனால தான் அவங்க அப்பா இந்த கல்யாண பேச்சை எடுத்ததும் எதுக்குவும் சொல்லாம எல்லாத்தையும் விட்டுட்டு இந்தத் திருமணத்துக்குச் சம்மதிச்சா,” என்றார்.

விஜயா நெகிழ்ச்சியாக, “முகேஷ்  அகலிக்கான்னா ரொம்ப பிடிக்கும்  ஜானகி. அவளும் அவனை அப்படித்தான் நேசிக்கிறான்னு நான் நம்புறேன், ஏன்னா ரெண்டு பெரும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா விளையாடி , ஒண்ணா வளர்ந்தவங்க தானே ” என்றார்.

“கண்டிப்பா… ஆனா அவளோட கண்ணுல நான் ஒரு சின்ன சோகத்தைப் பார்க்கிறேன் விஜயா. ஒருவேளை அவளோட தனிப்பட்ட ஆசைகளை இந்த நன்றிக்கடனுக்காக அடக்கி வச்சிருக்காளோன்னு எனக்குத் தோணும். ஆனா என்ன பண்றது? இந்த உலகத்துல அன்பை விட நன்றிக்கடனுக்கு பலம் அதிகம்  ஆச்சே!” என்றார் ஜானகி

இந்த உரையாடலைக் கேட்ட தீரனுக்குத் தலை சுற்றியது. அவன் மெதுவாகத் தன் அறைக்குத் திரும்பினான். அவன் மனதில் ஒரு பெரிய மின்னல் வெட்டியது போல இருந்தது.

‘மை காட்! இப்போ தான் எனக்குப் எல்லாம் புரியுது. அகலிகா ஏன் என்னிடம் இருந்து விலகத் துடித்தாள்? ஏன் ஒவ்வொரு முறையும் “இது தப்பு, இது துரோகம்” என்று கத்தினாள்? அது முகேஷ் மீதான காதல் என்பதை விட, அவன் செய்த அந்தப் பெரிய உதவிக்கு அவள் கொடுக்க நினைக்கும் பிரதிபலன்!’ என்று அவனுக்கு உரைத்தது.

தீரன் தன் தலையை  பிடித்துக்கொண்டான். ‘அவள் தன்னைத் தானே பலிகொடுத்துக் கொள்கிறாள்! முகேஷுக்குச் செய்ய வேண்டிய நன்றிக்கடனுக்காக, அவள்  உண்மையான உணர்ச்சிகளையும், என்னிடம் அவளுக்கு இருந்த அந்தத் தவிப்பையும் அவள் கொன்றுவிட்டாள். அகலிகா ஒரு கைதி! நன்றிக்கடன் எனும் தங்க விலங்கால் பூட்டப்பட்ட கைதி! அப்படிப்பட்டவளை நான் மேலும் மேலும் கஷ்டப்படுத்திருக்கேன் ” என்று தன்னை நினைத்தே நொந்துகொண்டாள்.

அவனுக்கு அகலிகாவின் மேல் இருந்த கோபம் இப்போது அனுதாபமாகவும், அதீத காதலாகவும் மாறியது. ‘அகலிகா… நீ எவ்வளவு பெரிய சுமையை உன் சின்ன மனசுல சுமந்துட்டு இருக்கே? ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லல?’ என்று அவளிடம் கேட்க தோன்றியது அவனுக்கு

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured