Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 129

உன் ரகசிய ரசிகை நான் 129

by Layas Tamil Novel
240 views

EPISODE 129

மணமேடையில், கீர்த்திகாவின் கழுத்தில் தாலி கட்ட மாட்டேன் என்று சொல்லி கதிர் பிரச்சினை செய்ய… அவனைத் தாலி கட்டச் சொல்லி விக்கி வற்புறுத்தினான்.

திடீரென்று மணமேடையில் கதிர் இப்படிச் செய்யவும், கீர்த்திகாவிற்கும் மற்ற அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.

கீர்த்திகா, கதிரிடம் திரும்பி, “எதுக்குடா தாலி கட்ட மாட்டேன்னு சொல்றே?” என்றாள்.

“அதை நான் உன்கிட்டே சொல்ல மாட்டேன்,” என்றவன், அவன் அம்மாவிடம் திரும்பி, “அம்மா, இங்கே வா,” என்றான் கதிர். அவர், “இவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்?” என்று நினைத்தவர், “என்னடா? ஏன் இப்போ தாலி கட்ட மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறே?” என்றார்.

“விசாலாட்சி அம்மா, நானும் கீர்த்திகாவும் கல்யாணம் செய்வதை நம்ம குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் பார்த்துட்டு இருக்காங்க. ஆனா, எங்க ரெண்டு பேருடைய கல்யாணத்தைப் பார்த்துச் சந்தோஷப்படுற முதல் ஆள் துர்கா தான். அவள் இல்லாமல் எனக்குத் தாலி கட்ட விருப்பம் இல்லை அம்மா.”

“துர்காவிற்கு மட்டும் இப்போது உடல் நிலை நன்றாக இருந்தால், அவள் இந்த நேரம் எங்கள் கல்யாணத்தில் எவ்வளவு வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள் என்று அனைவருக்குமே தெரியும். அப்படி இருக்க, துர்கா இல்லாமல் நான் கீர்த்தியின் கழுத்தில் தாலி கட்ட மாட்டேன். அதுவும் இல்லாமல், கீர்த்தியின் கல்யாணத்தில் துர்கா இல்லை என்றால், நாளை துர்காவிற்கு உடல் நிலை சரியான பிறகு அவள் வந்து, ‘என்னை விட்டுவிட்டு என் தங்கைக்கு எல்லாரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்து விட்டார்கள்’ என்று கேட்டால் எல்லோரும் அவளுக்கு என்ன பதில் சொல்வது?” என்றான் கதிர்.

அவன் சொல்வதை யோசித்த விசாலாட்சியும் வெங்கடாசலமும், கதிர் சொல்வதும் சரிதான் என்று நினைத்தவர்கள், ஆதியிடம் சொல்லி துர்காவை அழைத்து வரச் சொன்னார்கள்.

அவர்கள் சொன்னதும், துர்காவை அழைத்து வரச் சொல்லி ஆதி, துர்கா அவளறையில் இருந்த லதாவிடம் சொல்ல… அவள் விவேக்குடன் துர்காவை ஒரு சக்கர நாற்காலியில் அமர வைத்து, கீழே லிப்ட் வழியாக அழைத்து வந்தாள்.

______

துர்காவை அழைத்துக்கொண்டு வந்து ஆதியிடம் நிற்க வைக்க, அவள் அனைவரையும் பார்த்துப் பயந்தவள், ஆதியின் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டாள்.

அவள் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்ட ஆதி, “நீதானே வெளியே வந்து எல்லார் கூடவும் ஒண்ணா இருக்கணும்னு சொன்னே? இப்போ இப்படிப் பயந்தால் எப்படி?” என்று சொன்ன ஆதி, அவள் கையில் அர்ச்சதை கொடுத்து, “அவங்க ரெண்டு பேரும் இப்போ கல்யாணம் பண்ணப் போறாங்க. அப்போ நீ இந்த அர்ச்சதையை அவங்க மேல போடணும். சரியா?” என்றான். அவளும் “சரி,” என்று சொல்லி, ஆதி கொடுத்த அர்ச்சதையை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு மேடையைப் பார்க்க…

அங்கே கீர்த்தி, துர்காவை நெகிழ்ச்சியோடு, கண்களில் கண்ணீருடன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

கதிர் ஏற்கனவே அடிக்கடி அவள் அறைக்குச் சென்று, துர்காவிடம் கீர்த்தியைப் பற்றிக் கூறி இருந்தான்.

கீர்த்திகா பார்க்கும் போது, அவளைப் பார்த்து துர்கா சினேகமாகப் புன்னகைக்க…

“கீர்த்தி, எப்படி உன் அக்காவை நான் உன்னைப் பார்த்துச் சிரிக்கும் அளவுக்கு உன்னைப் பற்றிச் சொல்லி வைத்து இருக்கிறேன், பார்த்தியா?” என்று கீர்த்தியிடம் சொல்லவும்…

அவன் தான் தனக்காக துர்காவிடம் தன்னைப் பற்றிச் சொல்லி இருக்கிறான் என்று தெரிந்ததும், கீர்த்தி கதிரைப் பார்த்து கண்ணீரோடு, “ரொம்ப தேங்க்ஸ் கதிர்!” என்றால்.

“உன்னோட தேங்க்ஸ் எனக்கு வேணாம்,” என்றவன், “இப்ப கூட நீ என்னை ‘மாமா’ன்னு கூப்பிட மாட்டியா?” என்றான் எதிர்பார்ப்போடு. அவன் அப்படிச் சொன்னதும், அவனைக் கழுத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, “தேங்க்ஸ் கதிர் மாமா!” என்றால் கீர்த்தி.

அதில் மகிழ்ந்து போன கதிர், “நான் சொன்னது போலவே உன் கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன் என்னை ‘மாமா’ன்னு கூப்பிட வெச்சுட்டேன் பார்த்தியா?” என்றான் அவள் காதில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி.

“ஆமாம்,” என்று கீர்த்தி தலையை ஆட்ட… “அடடா! இதையெல்லாம் நைட் போய் உங்க ரூம்ல வெச்சுக்கோங்கப்பா… முதல்ல ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணுங்க,” என்ற விக்கி அவர்கள் இருவரையும் பிரித்து விட…

அவன் பேசியதைக் கேட்டு அனைவரும் சிரிக்க… இப்போது தான் தாங்கள் அனைவர் முன்னிலையிலும் அணைத்துக் கொண்டு இருப்பதை இருவரும் உணர்ந்து அசடு வழியச் சிரிக்க…

ஐயர், “அம்பி, அசடு வழிஞ்சது போதும். முதல்ல தாலியைக் கட்டுங்கோ…. நேரம் ஆகுது,” என்றார். கதிர் சிரித்துக் கொண்டே தன் காதலி கழுத்தில் தாலி கட்டித் தன் தாரமாக்கினான்.

____________________

கதிர் கீர்த்தியின் கழுத்தில் தாலி கட்டியதும், அவர்களை வாழ்த்த வந்த சொந்தங்கள் அர்ச்சதை தூவி, தம்பதிகள் இருவரையும் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்தினர்.

16 செல்வங்கள் என்பது கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை, முயற்சி, வெற்றி என்பவைதான். இந்த அனைத்துச் செல்வங்களும் பெற்றுத் தம்பதிகள் சந்தோஷமாக வாழ வந்திருந்தவர்கள் வாழ்த்தினர்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சிவகாமி, சங்கவியிடம், “உன்னோட கல்யாணத்தையும் இதே மாதிரி சீரும் சிறப்புமாகச் செய்யணும். வந்திருக்கவங்க எல்லாரும் மனசார வாழ்த்தணும்,” என்று சிவகாமி சொன்னார்.

“சரிம்மா, இங்கே வந்து இருக்கிறவங்க எல்லாரும் எங்களை வாழ்த்தத் தான் வாங்க,” என்று சங்கவி சொல்ல…

“என்னம்மா சொல்றே?” என்று சிவகாமி புரியாமல் பேச…

“இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு என்னனு புரியும். நீ அமைதியா இருந்து இங்க நடக்குறதை எல்லாம் கவனி,” என்றாள் சங்கவி.

அவள் சிவகாமியிடம் பேசிவிட்டு வேதாசலத்திடம் திரும்பிச் சைகை காட்ட… “எல்லாம் ரெடி,” என்றார் வேதாச்சலம்.

கதிர்-கீர்த்தி திருமணம் முடிந்ததும், வந்திருந்தவர்கள் மணமேடை ஏறி அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டும், அவர்கள் இருவரையும் வாழ்த்தியும் விட்டு வந்தனர்.

இது எல்லாம் அங்கிருந்த டிவி வழியாக அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்க… அப்போது டிவியில், துர்காவும் விக்கியும் கடைத்தெருவில் சந்தித்துக் கொண்ட போட்டோக்களும், பின் துர்கா கட்டிலில் படுத்து இருக்க, அவள் மேல் விக்கி சாய்ந்து இருப்பது போல சங்கவிக்கு ஷிவு அனுப்பி இருந்த போட்டோக்களும் டிவியில் போடப்பட்டு இருந்தது.

இதையெல்லாம் பார்த்த விக்கி, “இது… இந்தப் போட்டோ…” என்று சொல்ல வர… ஆதி, விக்கியைப் பார்த்துக் கண் ஜாடை செய்து அமைதியாக இருக்கும்படி சொல்ல, விக்கி அப்படியே அமைதியாக இருந்துவிட்டான்.

இந்தப் போட்டோக்களைப் பார்த்த வடிவும் முத்தும், விக்கியைப் பார்த்து, “தம்பி, இந்தப் போட்டோவில் நீங்களா?” என்று கேட்க… விக்கி “ஆமாம்,” என்று தலையை ஆடியவன், “அது வந்து அம்மா…” என்று விக்கி விளக்கம் கூற வர…

அவனைப் பேச விடாமல் தடுத்த வடிவு, “இந்தப் போட்டோவை யாரோ தப்பா எடுத்து இருக்காங்க தம்பி. என் பொண்ணோ, அல்லது நீங்களோ இந்த மாதிரி தப்பான காரியம் செய்பவர்கள் கிடையாது,” என்றார் வடிவு.

அவர் சொன்னதைக் கேட்ட விக்கியின் கண்களில் கண்ணீர் வந்துவிட, “அம்மா!” என்று சொல்லி வடிவின் கைகளைப் பிடித்து நெகிழ்ந்து போனான்.

“நீங்க இப்படிச் சொன்னா, இந்தப் போட்டோவில் இருப்பது பொய் என்று ஆகிவிடுமா?” என்றால் சங்கவி.

அவள் அப்படிச் சொன்னதும், “வடிவு சொன்னது போல இந்தப் போட்டோவை யாரோ தவறாக எடுத்து இருக்கிறார்கள்,” என்று சொல்லிக் கொண்டு அவர்கள் முன் வந்து துரை கூற…

“வேற யாரோ இந்தப் போட்டோக்களை எடுக்கலை அங்கிள். உங்க பொண்ணு ஷிவு தான் இந்தப் போட்டோவை எல்லாம் எடுத்தாள். வேண்டும் என்றால் நீங்களே அவளிடம் கேட்டுக் பாருங்களேன்,” என்று சொல்லி சங்கவி, ஷிவுவைப் பார்த்து, “என்ன ஷிவு, அமைதியா நிக்கிறே? நீயே இந்தப் போட்டோவை எல்லாம் எடுத்தது யார் என்று சொல்,” என்றால் சங்கவி.

சங்கவி சொன்னதைக் கேட்டு துரை, சங்கவியின் அருகில் வந்தவர், சங்கவியின் அருகில் இருந்த ஷிவுவின் கையைப் பிடித்து இழுத்துத் தன் அருகில் நிற்க வைத்தவர், “சொல்லு ஷிவு, இந்தக் கேடுகெட்டவ சொல்றது எல்லாம் உண்மையா? நீதான் இந்தப் போட்டோக்களை எல்லாம் எடுத்தியா?” என்று கேட்டார்.

“யாரைப் பார்த்து ‘கேடு கெட்டவள்’னு சொல்றீங்க? வார்த்தையை அளந்து பேசுங்கள்!” என்று துரையிடம் சங்கவி சண்டைக்கு வர…

அவளைத் திரும்பி துரை ஒருமுறை முறைக்கவும், சங்கவி அப்படியே அமைதியாகிவிட்டாள்.

ஷிவு எதுவும் பேசாமலே அமைதியாக நிற்க, அவள் அருகில் வந்த கனகாவும் வடிவும், “சொல்லு ஷிவு! இந்தச் சங்கவி சொல்வது போல நீ தான் இந்தப் போட்டோவை எல்லாம் எடுத்தியா? இந்தப் போட்டோவில் இருப்பது உண்மையா?” என்று இருவரும் ஷிவுவிடம் கேட்க…

அப்போதும் எதுவும் பேசாமல் நின்ற ஷிவுவைப் பார்த்து, “ஏன்டி எதுவும் பேசாமலே அமைதியா நிக்கிறே? துர்கா உன் கூடப் பிறந்த அக்கான்னு தெரிஞ்சு அவளை இந்த மாதிரி எல்லாம் போட்டோ எடுத்தியா?” என்று கனகா ஷிவுவின் தோளைப் பிடித்து உலுக்கிக் கேட்க…

“அம்மா, அப்போ துர்கா என் கூடப் பிறந்த அக்கான்னு எனக்குத் தெரியாது,” என்று ஷிவு சொல்ல…

“அவ உன் கூடப் பிறந்தவளாகவே இல்லையென்றாலும், நீ ஒரு பொண்ணை எப்படி போட்டோ எடுத்து இதையெல்லாம் இந்தச் சங்கவிக்குக் கொடுத்து இருப்பே?” என்று சொல்லி ஷிவுவை அவர் முறைக்க…

அவர் கோபத்தைக் கண்டு ஷிவு அமைதியாக இருக்க… இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருந்த சங்கவி, “துர்கா எப்படி ஷிவுவிற்கு கூடப் பிறந்தவளாக இருக்க முடியும்?” என்று யோசித்தவள். பின், “இந்த விஷயத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் இப்போது நடக்கப் போகும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்,” என்று நினைத்த சங்கவி…

ஷிவுவைப் பார்த்து, “உங்கள் பிரச்னையை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். உங்க பொண்ணு தான் இந்தப் போட்டோவை எடுத்தாள்னு உங்க பொண்ணே ஒப்புக்கொண்டாள்.”

“துர்காவும் விக்கியும் ஒன்றாக ஒரே கட்டிலில் இருந்ததைப் பார்த்துவிட்டுத் தான் ஷிவு இந்தப் போட்டோவையே எடுத்தாள்,” என்று கூறிய சங்கவி, ஷிவுவை கண் காட்டி, “என்ன அமைதியா இருக்க? நீ வாயைத் திறந்து சொல்லு,” என்று ஷிவுவிடம் மெதுவாகச் சொல்ல…

சங்கவியை ஒருமுறை பார்த்துவிட்டு, “அம்மா, இந்தப் போட்டோவை எடுத்தது நான் தான். அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருந்ததைப் பார்த்துட்டுத் தான் இதை நான் எடுத்தேன்,” என்று ஷிவு சொல்ல, அவள் சொல்வதைக் கேட்டு மொத்தக் குடும்பமும் ஆடிப் போனது.

அவள் அருகில் வேகமாக வந்த ஆதி, ஷிவுவிடம், “நல்லா யோசிச்சுச் சொல்லு. நீ இங்க இருக்கிற யாருக்கும் பயப்பட வேண்டாம். என்ன நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்றவன், சங்கவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “இந்தப் போட்டோவில் இருப்பது பொய்ன்னு எனக்கு முன்னாடியே தெரியும் ஷிவு. நீ இப்படித் தேவையில்லாமல் பொய் சொல்லி வீணா குழப்பத்தை உண்டு பண்ணாத. உண்மையைச் சரியா சொல்லு,” என்று ஆதி கேட்க…

“மாமா, நான் பொய் சொல்லலை. உண்மையைத்தான் சொல்றேன். துர்கா விக்கி கூட ஒன்றாக ஒரே பெட்டில் இருந்ததைப் பார்த்துவிட்டுத் தான் நான் பொறுக்க முடியாமல் இந்தப் போட்டோவை எடுத்து, உங்களுக்கு அனுப்பப் பயந்துட்டுச் சங்கவிக்கு அனுப்பி உங்களுக்குக் காட்டச் சொன்னேன்,” என்று சொன்னாள்.

ஷிவுவின் அருகில் வந்து அவள் கையைப் பிடித்து இறுக்கிய ஆதி, “ஷிவு…” என்று கோபத்தில் கண்கள் சிவக்க ஆதி அவளை அதட்ட…

தன் கையைப் பிடித்து இருந்த ஆதியின் கையைப் பிரித்துவிட்ட ஷிவு, “மாமா, நான் பொய் சொல்லவில்லை. துர்காவுக்கும் விக்கிக்கும் இடையில் தப்பான உறவு இருக்கிறது,” என்று ஷிவு உறுதியாகச் சொல்ல…

மீண்டும் பொய் சொல்லித் தேவையில்லாமல் துர்காவிற்கு களங்கம் விளைவித்த ஷிவுவின் மீது ஆத்திரம் வர, ஓங்கி அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்தான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஷிவு, தன் கன்னத்தில் கை வைத்து அழுந்தத் தேய்த்தவள், “நீங்க என்னை என்ன அதட்டி உருட்டி மிரட்டினாலும் நான் சொல்றது பொய் இல்லை,” என்றாள் ஷிவு.

அவள் பேசியதைக் கேட்டு ஆதி, செய்வதறியாது திகைத்துப் போய் நின்றான்.


ஆதியின் அறை, துர்கா-விக்கி பற்றிய ஷிவுவின் குற்றச்சாட்டு மற்றும் அடியின் விளைவு என்னவாக இருக்கும்?

படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured