Home Uncategorizedஅஸ்க்..லஸ்கா..காதல் 17

அஸ்க்..லஸ்கா..காதல் 17

by Layas Tamil Novel
308 views

EPISODE 18

இலக்கியாவும் அனுவும் வீட்டிற்கு வர, அங்கே குமரனும் தமிழும் பேசிக்கொண்டு இருந்தனர். தமிழின் வளர்ப்புத் தாய் காவேரி, அவளை சங்கடப்படுத்தும் விதமாக “போட்டு விட்டால்” என்று ஜாடையாகப் பேசினாள்.

காவேரியைக் கண்டிக்க முயன்ற குமரன், “எனக்கு என்ன வந்தது?” என்று கூறி உள்ளே சென்றுவிட்டார். அதன்பிறகு குமரன், இலக்கியா கல்லூரியில் எந்தத் துறையில் சேர்ந்திருக்கிறார் என்று விசாரிக்க, தமிழும் அதையே அவளிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தான். அவள் படிக்க வேண்டும் என்று அனுமதி வாங்கியபோதே, அவளுக்கு என்ன படிப்பதில் விருப்பம் என்று தெரிந்துகொள்ள தமிழ் ஆர்வமாக இருந்தான்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், அனு இலக்கியாவை தான் படிக்கும் பிசினஸ் மேனேஜ்மென்ட் துறையில்தான் சேர்த்து விடுவதாக இருந்தது. அதற்குள்ளாக வினித் வந்து, இலக்கியா படிப்பதற்கான விண்ணப்பத்தை மாற்றி எழுதி கொடுத்துவிட்டதாகச் சொன்னான்.

வினித் சொன்னதைக் கேட்ட குமரன், அவனிடம் திரும்பி “இலக்கியா என்ன டிபார்ட்மென்ட்ல ஜாயின் பண்ணியிருக்கா?” என்று கேட்டார்.

“நான் சொல்லி தெரிஞ்சுக்கிறதைவிட இலக்கியாவே சொல்லி தெரிஞ்சுக்கோங்க” என்றான் வினித்.

“என்ன இவன் பீடிகை எல்லாம் ரொம்ப பலமா போடுறான். அப்படி என்ன டிபார்ட்மென்ட்ல இவ ஜாயின் பண்ணியிருக்கான்னு ஓவரா பில்டப் கொடுக்கிறான்?” என்று யோசித்தவாறே தமிழ் இலக்கியாவைப் பார்க்க, குமரன் இலக்கியாவைப் பார்த்து, “சொல்லு இலக்கியா, என்ன டிபார்ட்மென்ட்ல ஜாயின் பண்ணியிருக்க? உன் அண்ணன்” என்று கேட்டார்.

இலக்கியா வினித்தைப் பார்த்து சிரித்துவிட்டு, திரும்பி குமரனிடம் “கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தாத்தா” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான தமிழ், திரும்பி வினித்தைப் பார்க்க, வினித் தமிழைப் பார்த்து சிரித்தபடி, “அது ஒன்னும் இல்லைடா மச்சான். நீ இல்லாதப்போ ஒரு முறை நான் வீட்டுக்கு வந்தேன். என் தங்கச்சி நான் அவளைப் பார்க்க வந்தேன். அவள் கையாலேயே எனக்கு ஒரு டீ போட்டு கொடுத்தா பாரு… அப்பப்பா…. என்ன ருசி… என்ன ருசி… அதைக் குடிச்சதுக்குப் பிறகு நான் இந்த முடிவை எடுத்தேன்” என்றான் வினித்.

வினித் சொன்னதைக் கேட்டு, “ஓஹோ… இவனும் என்ன மாதிரியே பாயசம் குடிச்சு… ச்சே…. போல டீ குடித்திருப்பான் போல இருக்கு” என்று தமிழ் தன் மனதில் நினைத்துக்கொண்டான்.

“ஏன்டா, பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்தால் ஆவது இலக்கியா தமிழின் பிசினஸ்ல எதுவும் ஹெல்ப் பண்ணுவாளே! அதை விட்டுட்டு ஏன் இப்படி கேட்டரிங் கோர்ஸ்ல சேர்த்துவிட்ட?” என்று கேட்டார் குமரன்.

“அதுக்கு இல்ல தாத்தா! இன்னும் ஆறு மாசத்துல இலக்கியாவுக்கும் தமிழுக்கும் கல்யாணம் ஆகப்போகுது. அவளுக்குக் கொஞ்சமாவது சமைக்க கத்துத்தர வேண்டாமா? கல்யாணம் ஆன பிறகு இலக்கியாவும் தமிழும் ஒரே வீட்டில் ஒண்ணாதானே இருக்கப் போறாங்க. அப்போ புருஷனுக்குப் புடிச்ச சாப்பாட்டை பொண்டாட்டி கையால சமைச்சுப் போட்டா தானே நல்லா இருக்கும்?” என்று சொல்ல, “நல்ல காரியம் பண்ணிட்ட… வினித்” என்ற தமிழ் அவன் தோளில் கை வைத்து தட்டிக்கொடுத்தான்.

“ஏன் இலக்கியா… வினித் இவ்வளவு தூரம் சிலாகித்து சொல்ற அளவுக்கு நீ போடுற டீ அவ்வளவு நல்லா இருக்குமா?” என்று கேட்டவர், “எங்கே ஓடிப்போய் தாத்தாவுக்கு ஒரு டீ போட்டு எடுத்துட்டு வா பார்க்கலாம்” என்றார் குமரன்.

அவர் தனக்கு டீ போட்டு வரும்படி இலக்கியாவிடம் சொன்னதும், பதறிய தமிழும் வினித்தும் “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்” என்று ஒரு சேர சத்தமிட, இவர்கள் இருவரும் இப்படி அதிர்ச்சியாகி கத்தும் அளவிற்கு தான் இப்போது என்ன சொல்லிவிட்டோம் என்று புரியாமல் குமரன் அவர்கள் இருவரையும் பார்த்தவர், திரும்பி “நீ போய் டீ போட்டு எடுத்துட்டு வா” என்று சொன்னார்.

வினித் இலக்கியாவின் கையைப் பிடித்து அமர வைத்தவன், “தாத்தா, அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அவ இப்பதான் வெளியே எல்லாம் சுத்திட்டு ரொம்ப டயர்டா வந்திருப்பா… வந்ததும் வேலை வாங்குறீங்களே, அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் ஆன்டி கிட்ட சொல்லி உங்களுக்கு ஒரு நல்ல டீ போட்டு எடுத்துட்டு வர சொல்றேன்” என்றான்.

“அதெல்லாம் முடியாது. நீ மட்டும் இலக்கியா போட்ட டீ அருமையா இருக்குன்னு சொல்லி குடிச்ச இல்ல? நானும் என் பேத்தி எப்படி டீ போடுகிறாள் என்று குடிச்சுப் பாக்கணும். அந்த டீயில அப்படி என்ன அவ்வளவு ருசி இருக்குன்னு சொல்லி நானும் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார் குமரன் விடாமல்.

“ஐயோ தாத்தா, நான் சொல்றத கேளுங்க! இன்னொரு நாள் இலக்கியாவே கண்டிப்பா டீ போட்டு கொடுக்க சொல்றேன், இப்ப வேண்டாம்” என்று சொன்ன வினித்.

“ஐயோ கிழவா…. சொன்ன பேச்சைக் கேளுய்யா…. இலக்கியா போடுற டீதான் வேணும்னு கேட்டா, அதுக்கு பிறகு நீ அதைக் குடிச்ச உடனே அப்போ தெரியும். ஏற்கனவே உடம்பு பூரா சக்கரையா வெச்சிட்டு இருக்க…. இதுல இவ போடுற பாயசம் கேட்டு உன் ஃபுல்லா சக்கர மூட்டையாகவே மாறிடும். அப்புறம் உன்னை தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்குதான் கிழவா… போகணும்” என்று தன் மனதிற்குள்ளேயே பேசிக்கொண்டவன் அவரை பாவமாகப் பார்க்க, வினித் ஏன் தன் தாத்தாவை டீ குடிக்க விடாமல் தடுக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டு, தமிழ் அவசரமாக அவன் தாத்தாவிடம் “தாத்தா, டைம் ஆச்சு, நமக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு இல்ல? நீங்க டீ குடிச்சிட்டு எப்ப வந்து மீட்டிங் அட்டென்ட் பண்றது? வாங்க போகலாம்” என்று அவரை தன்னுடைய ஸ்டடி ரூமிற்கு அழைத்துச் சென்றான்.

குமரன் அங்கிருந்து கிளம்பியதும் தான் வினித்திற்கு “அப்பாடா…” என்று இருந்தது. “ஒரு வழியா தாத்தாவை இலக்கியா போடுற டீயைக் குடிக்கிறதுல இருந்து தப்பிக்க வெச்சாச்சு” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

அப்போது இவ்வளவு நேரம் இவர்கள் பேசியது எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அனு, இலக்கியா போடும் டீ எப்படி இருக்கும் என்று குறித்து பார்க்க வேண்டும் என்று யோசித்தவள் இலக்கியாவிடம் திரும்பி, “இலக்கியா, இவங்க எல்லாம் சொல்றத பார்த்தா எனக்கும் நீ போடுற டீயைக் குடிக்கணும் போல ரொம்ப ஆசையா இருக்கு. எனக்கு ஒரு டீ போட்டுக் கொண்டு வா” என்று அனு அவளிடம் கெஞ்ச, “இதோ இப்பவே உனக்கு டீ போட்டு எடுத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு இலக்கியா எழுந்து சமையலறை நோக்கிச் செல்லப் போக, முதலில் இலக்கியாவை டீ போட சொல்ல வேண்டாம் என்று தடுக்க நினைத்த வினித், அனு இலக்கியாவிடம் டீ கேட்டதும் அமைதியாகிவிட்டான். “அவள் போடும் டீயைக் குடித்து சாகட்டும்” என்று அனு தன்னை இத்தனை நாள் டார்ச்சர் செய்ததற்கெல்லாம் வட்டியும் முதலுமாக அவளைப் பழிவாங்க நினைத்தவன் அமைதியாக அமர்ந்துகொண்டான்.

உள்ளே சென்ற இலக்கியா, நேரத்தில் கையில் டீக்கப்புடன் வெளியே வந்து, இலக்கியா ஒன்றை அனுவிடமும் மற்றொன்றை வினித்திடமும் நீட்டி குடிக்கச் சொல்லி தந்தாள். அனுவிற்கு மட்டும் டீ போட்டு எடுத்து வருவாள் என்று நினைத்த வினித், “தான் அனுவிற்காக விரித்த வலையில் தானே மாட்டி விட்டோமே” என்று தன்னை நொந்துகொண்டு, இலக்கியா கொடுத்த டீயை வாங்கி கையில் வைத்துக் கொண்டு அதைக் குடிக்கப் பயந்தவாறே திருதிருவென விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

இலக்கியா கொடுத்த டீயை ஆவலாக வாங்கி அனு ஒரு மடக்கு குடிக்க… “என் வாயில் வைத்ததுமே இலக்கியா போட்டு வந்தது டீயில்லை, பாயசம் என்ற பெயரில் விஷத்தை வைத்துக் கொடுத்திருக்கிறாள்” என்று தெரிந்து, அனு அதற்கு மேல் அந்த டீயை குடிக்க முடியாமல் தன் எதிரில் சுட்டி, இன்னமும் டீ குடிக்காமல் அமர்ந்திருந்த வினித்தைப் பார்க்க… அவனும் அனுவைப்போலவே, கையில் டீ கிளாஸ் வைத்துக் கொண்டு விழித்துக் கொண்டிருந்தான். அவனை முறைத்த அனு, “அடப்பாவி…. இந்த டீயைத்தான் ஆகா ஓகோன்னு அப்படி புகழ்ந்து தள்ளுனியா?… நீ சொன்னத நம்பி நான் வேற டீ போட்டுத்தரச் சொல்லி இவகிட்ட வாங்கிட்டேனே. இப்போ முழுசா இந்த டீயைக் குடிக்கலைன்னா இலக்கியா வருத்தப்படுவாளே” என்று யோசித்த அனு.

“ஆண்டவா… எனக்கு எதுவும் ஆகாமல் நீங்கதான் காப்பாத்தணும்” என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு… வினித்தை முறைத்தவாறு கையில் வைத்திருந்த டீயை அப்படியே ஒரே மடக்கில் முழுவதுமாக குடித்து முடித்தாள். தான் போட்டு வந்த டீயை எப்படி ஒரே மடக்கில் முழுவதுமாக அனு குடித்துவிட, அதைப் பார்த்து இலக்கியா “ஏய் அனு…. பார்த்து மெதுவா குடி! இப்படி சூடா குடிச்சா உடம்புக்கு எதுவும் வந்துடப் போகுது” என்று பதறினாள் இலக்கியா.

“சூடா குடிச்ச நாள் எல்லாம் அவளுக்கு ஒண்ணும் ஆகாது. உன் டீயைக் குடிச்சதுக்கு அப்புறம் இனி என்ன ஆகப்போகுதோ…” என்று அனுவையும் இலக்கியாவையும் மாறி மாறி பார்த்தான் வினித்.

“அதெல்லாம் எனக்கு ஒண்ணும் ஆகாது இலக்கியா. நீ போட்டுக் கொடுத்த டீ ரொம்ப டேஸ்டா இருந்தது. இதுவரைக்கும் நான் இப்படி ஒரு டீயை என் வாழ்க்கையில கொடுத்ததே இல்ல” என்று அனு இலக்கியாவிற்கு மனம் நோகாதபடி பேசியவள். “இலக்கியா, உன்னோட டீ இவ்வளவு ருசியா இருந்ததுனால நான் அப்படியே குடிச்சிட்டேன். அங்க பாரு வினித் இன்னும் டீ குடிக்காமல் நீ கொடுத்ததை கையில வச்சுட்டு அப்படியே உட்கார்ந்து இருக்கான்” என்று வினித்தை இலக்கியாவிடம் போட்டுக்கொடுக்க, “அடிப்பாவி! நான் உனக்கு என்னடி துரோகம் செஞ்சேன்? இப்படி என்ன வசமா அவகிட்ட மாட்டிவிட்டுட்டியே!” என்று வினித் கண்களாலேயே அனுவிடம் சண்டைக்குச் செல்ல, “நீ ஏற்கனவே இலக்கியா போட்ட டீயை குடிச்சுதானே இருக்க. நான் எனக்கு டீ… வேணும்னு கேட்டப்போ வேண்டாம்னு சொல்லி எனக்கு ஜாடை செஞ்சிருந்தா நான் உஷார் ஆகியிருப்பேனே! இப்படி என்ன மாட்டிவிட்டுட்ட… இல்ல அதுக்குத்தான் நான் உன்னை இலக்கியா கிட்ட மாட்டி விட்டேன்” என்றால் அணுவும் வினித்திடம் கண்களாலேயே பேசி.

இலக்கியா கொடுத்த டீ டம்ளரை கையில் வைத்துக் கொண்டு முழித்தபடி அணுவையும் இலக்கியாவையும் மாற்றி மாற்றிப் பார்க்க, “என்ன பார்க்கிற வினித்? சீக்கிரம் குடி! டீ ஆறிரப் போகுது அப்புறம் நல்லா இருக்காது” என்றால் அனு.

“இப்போ மட்டும் என்ன சூடா குடிச்சா மட்டும் அப்படியே அமுதம் மாதிரி ருசியாவா இருக்கப் போகுது” என்று அனுவைப் பார்த்தவாறு, தன் கையில் இருந்த டீயை வாயில் வைத்து ஒரு சிப் குடித்தவன். அப்படியே தன் கண்களை பட்டென்று மூடிக்கொள்ள… இதைப் பார்த்து அனு “என்ன பார்ட்டி? குடிச்சதும் கண்ணை மூடிருச்சு! ஒருவேளை டீயைக் குடிச்சு பரலோகம் போயிட்டானோ?” என்று வினித்தையே பார்க்க, கண்கள் மூடி மூச்சை நன்றாக இழுத்து விட்டு, வினித் அடுத்த நொடி கையில் இருந்த சூடான டீயை மடமடவென தன் வாயில் ஊற்றிக் கொடுத்துவிட்டு தன் வாயைத் திறக்க, அவன் வாயிலிருந்து சூடாகக் குடித்த டீயின் ஆவி வெளியேறியது.

அதைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் அனு கஷ்டப்பட்டவள். வினித்திடம் திரும்பி “என்ன மாதிரியே உன் அண்ணனுக்கும் நீ போட்ட டீ ரொம்ப புடிச்சிட்டு போல இருக்கு பாரு! எவ்வளவு சூடா இருந்தாலும் பரவாயில்லை என்று அப்படியே முழுசா வாயில ஊத்திக்கிட்டான்” என்று சொல்லி சிரித்தாள்.

“தான் போட்ட டீ என்ன அவ்வளவு நன்றாகவா இருந்தது?” என்று யோசித்தவாறு அனுவையும் வினித்தையும் பார்த்தாள் இலக்கியா.


இலக்கியாவை ஏலத்தில் விற்ற பணத்தை வைத்து அவளுடைய தாய் மாமன் ராமலிங்கம் மிகவும் சொகுசு வாழ்க்கை வாழ ஆரம்பித்தார். இதுவரை அவர் கனவிலும் கண்டிராத பணத்தை அவளை விற்றதன் மூலம் கிடைத்திருக்க, அதை பொக்கிஷம் போல வைத்து பாதுகாத்துக்கொண்டு இருந்தார் ராமலிங்கம்.

இலக்கியாவுடன் அன்று வெளியே சென்றதோடு சரி. திரும்ப வீடு வரும்போது ராமலிங்கம் மட்டுமே தனியாக வந்திருக்க, தன் பெண்ணிற்கு என்ன ஆனதோ எது ஆனதோ என்று ஒரு தாய்க்கே உண்டான கவலையில் ராமலிங்கத்திடம் “என் பொண்ண என்ன செஞ்ச? அவ எங்க இருக்கா? எப்படி இருக்கா? அவ உயிரோடுதான் இருக்காளா? இல்ல அவளைக் கொன்னுட்டியா?” என்று தன் தம்பியை கேள்விகளால் நச்சரித்துக்கொண்டே இருந்தார். இவரும் வந்த நாளிலிருந்து இலக்கியாவை என்ன செய்தோம் என்று ஒரு முறை கூட அவள் அம்மாவிடம் சொல்லவே இல்லை.

ராமலிங்கம் என்றும் வழக்கம்போல வெளியில் பார்க்கச் சென்று மூச்சு முட்ட குடித்துவிட்டு வீட்டிற்கு வர, அவர் வருவதற்காக காத்திருந்த இலக்கியாவின் அம்மா, ராமலிங்கம் வீட்டிற்குள் வந்ததும் “ராமா… என் பொண்ண என்ன செஞ்சா? தயவு செய்து சொல்லிடு! அவ உயிரோடு இருக்காளா? இல்லையா? அதையாவது சொல்லு…. நான் கொஞ்சம் நிம்மதியாய் இருப்பேன். ஏன் என்னையும் என் குடும்பத்தையும் இப்படி கஷ்டப்படுத்திட்டே இருக்க? நாங்க உனக்கு என்ன பாவம் செஞ்சோம்? உன்ன நம்பி இந்த ஊருக்கு வந்தது குற்றமா? பேசாமல் என் கணவருடனே நான் கொடைக்கானலில் இருந்திருந்தால் இந்த நேரம் கூலோ… கஞ்சியோ… குடித்துக்கொண்டு என் குடும்பத்தோடு நான் நிம்மதியாக இருந்திருப்பேன். உன்னிடம் வந்து என் குடும்பத்தோடு நான் மாட்டிக்கொண்டது மட்டும் போதாது என்று நான் பெற்ற பிள்ளைகளும் சேர்ந்து உன்னிடம் இவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கிறது” என்று ராமலிங்கத்திடம் புலம்பினார் இலக்கியாவின் அம்மா.

ராமலிங்கம் சிரித்தவாறு “எனக்கு உன்ன கஷ்டப்படுத்தனும்னு என்ன ஆசையா….?” என்றவர் தன் அக்காவைப் பார்த்து சிரிக்க, அவரை புரியாமல் பார்த்த இலக்கியாவின் அம்மா, “என்ன சொல்ற ராமா? எனக்கு எதுவுமே புரியல” என்று கேட்டார்.

“உனக்கு எதுவும் புரியாம இருக்கிறதே நல்லது அக்கா… இத்தனை வருஷம் கழிச்சு அதை பத்தி தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போற?… நீ சொன்ன மாதிரி பேசாம கொடைக்கானலயே இருந்திருந்தா இந்த நேரம் உன் புருஷன் கூட குடும்பம் குழந்தைன்னு அவரோட குடும்பத்தோடு சேர்ந்து சந்தோஷமா வாழ்ந்து இருக்கலாம். அதை விட்டுட்டு இங்கே வந்து என்கிட்ட கஷ்டப்பட்டு இருக்க.. ஒழுங்கா சொன்ன பேச்சைக் கேட்டுட்டு கொடைக்கானல் இருந்திருந்தால் இந்த நேரம் நீ ராணி மாதிரி வாழ்ந்து இருக்கலாமே” என்று சொல்லி சிரித்த ராமலிங்கம்.

“நீயும் இத்தனை வருஷமா நான் ஏன் உன்னை கொடுமைப்படுத்திட்டு இருக்கேன்னு கேட்டுட்டுதான் இருக்க… இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். அதனால இத்தனை வருஷமா நீ கேட்ட கேள்விக்கு நான் இப்போ பதில் சொல்லப் போறேன்” என்றான் ராமலிங்கம்.

இலக்கியாவின் அம்மா இவ்வளவு நேரம் அழுது சோர்ந்து போனவர், ராமலிங்கம் சொல்வதைக் கேட்பதற்காக அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்க, “இத்தனை வருஷம் இல்லாம இப்போ ஏன் நான் நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன்னு பாக்குறியா… ஏன் தெரியுமா? உன் பொண்ண நான் ஒரு ஏலத்துல வித்துட்டேன்… அதுவும் இந்தியாவிலேயே மிக பணக்காரனான ஒருத்தன் உன் பொண்ண இதுவரைக்கும் யாருமே விலை கொடுத்து வாங்காத பணத்தைக் கொடுத்து ஏலத்துல எடுத்துட்டான்.”

ராமலிங்கம் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான இலக்கியாவின் அம்மா, “அடப்பாவி! என்ன காரியம் செய்து வச்சிருக்க…. ஒரு தாய்மாமனா…. என் பொண்ணுக்கு பாதுகாப்பா இருக்க வேண்டிய நீயே இப்படி அவளை எவனோ ஒருத்தனுக்கு காசுக்காக விட்டுட்டு வந்து நிக்கிறியே! நீ எல்லாம் நல்லா இருப்பியா?” என்று ராமலிங்கத்தை சபிக்க, அவரைப் பார்த்து சத்தமாக சிரித்த ராமலிங்கம், “கொஞ்ச நாளா நீ வசதியான ஒரு வீட்ல கொஞ்சம் நிம்மதியா இருக்கிறியே அது எப்படின்னு நினைச்ச…. உன் பொண்ண வித்து வந்த பணத்தை வச்சுதான் உன்ன நான் இப்போ நல்லா பார்த்துட்டு இருக்கேன். அவளை விட்டு வந்த பணத்துல பாதி எனக்கு கமிஷனா கிடைச்சுச்சு. இது எல்லாம் உன்னாலையும் உன் பொண்ணாலையும் தான் நடந்தது. அதனால்தான் நான் இத்தனை நாளா உன்கிட்ட சொல்லாம இருந்த ஒரு ரகசியத்தை இப்போ சொல்லப் போறேன் நல்லா கேட்டுக்கோ” என்றார் ராமலிங்கம்.

இத்தனை நாளாக ராமலிங்கத்திடம் எவ்வளவோ கெஞ்சி, அவர் காலில் விழுந்து எல்லாம் இலக்கியாவின் அம்மா கேட்டிருக்கிறார். தங்களை எதற்காக இப்படி கொடுமைப்படுத்துகிறாய் என்று அப்போதெல்லாம் சொல்லாமல் இப்போது சொல்லப் போகிறான் என்றதும், அவர் என்ன சொல்லப் போகிறான் என்று கேட்பதற்காக இலக்கியாவின் அம்மா ராமலிங்கத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்.

“உன்னையும் உன் புருஷனையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுமைப்படுத்தி, உன் பசங்களை எல்லாம் வளர விடாம ஆளுக்கு ஒரு பக்கமா வித்துட்டு, இன்னைக்கு நான் சொகுசா இருக்க காரணம் வேற யாரும் இல்லை” என்று சொன்னவர். “நீங்க எந்த காரணத்துக்கும் கொண்டும் சந்தோசமா இருக்கக் கூடாதுன்னு சொல்லி எனக்கு மாசா மாசம். இத்தனை வருஷமா என்னோட அக்கவுண்ட்ல காசு போட்டுட்டு வராங்க.. உன் குடும்பமும் தினம் தினம் கஷ்டப்பட்டு அழுகிறத பார்த்து பார்த்து அங்கே ரசிச்சிட்டு இருக்காங்க” என்றார் ராமலிங்கம்.

“இப்படி கஷ்டப்படுத்தி பாக்குறது யாரு? நாங்க கஷ்டப்படுறதுனால அவங்களுக்கு என்ன சந்தோசம் வந்துர போகுது? அதுல அவங்களுக்கு என்ன லாபம் இருக்கு…? கேவலம் காசுக்காக என்னையும் என் குடும்பத்தையும் நீ எதற்காக இப்படி கஷ்டப்படுத்துற…? தினம் தினம் எங்களை கஷ்டப்படுத்திட்டு இருந்ததுக்கு ஒரேடியா எங்களுக்கு கொன்னு இருந்தா, நீயும், உன்னை இப்படி செய்ய சொன்னவனும் சந்தோஷமா இருந்திருக்கலாமே…? அதை விட்டுட்டு எங்களை ஏன் இப்படி அணு அணுவா சித்திரவதை பண்றீங்க..? உன்னை யார் இப்படி எல்லாம் செய்ய சொல்லி தூண்டி விட்டதே?” என்று இலக்கியா அம்மா ராமலிங்கத்துடன் கேட்க, “உங்கள இப்படி கஷ்டப்படுத்த சொல்லி என்னிடம் பணம் கொடுத்தவன்” என்று அந்த நபரின் பெயரை இலக்கியாவின் அம்மாவிடம் சொல்ல, இவ்வளவு நேரம் கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டிருந்த இலக்கியாவின் அம்மா, ராமலிங்கம் சொன்ன பெயரைக் கேட்டதும் அப்படியே உறைந்து போய் விட்டார்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured