Home Uncategorizedஅஸ்க்..லஸ்கா..காதல்.. 31

அஸ்க்..லஸ்கா..காதல்.. 31

by Layas Tamil Novel
257 views

EPISODE 31

இலக்கியாவிடம் தமிழ் போன் பேசிவிட்டு சென்றதிலிருந்து அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. ஆறு மாதத்திற்கு பிறகுதான் அவனை நேரில் பார்க்க முடியும் என்று நினைக்கையில், அவசரப்பட்டு அவனிடம் சொல்லிவிட்டோமோ என்று வருத்தப்பட்டாள். இப்போது வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? தமிழிடம் பேசுவதற்கு முன்பே யோசித்து பேசியிருக்க வேண்டும்.

இவர்கள் நினைத்ததுபோல ஆறு மாதம் வரை ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே இருந்துவிட விதி இவர்கள் நினைத்ததுபோல வேலை செய்யுமா என்ன? இந்த ஆறு மாதத்தில் அவனைப் பற்றியும் அவள் குடும்பத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள தனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாக இலக்கியா இதை எண்ணினாள்.

இதே யோசனையோடு ஆரவுடன் கிளம்பி கல்லூரிக்குச் சென்றபோது, தன் வகுப்பறைக்குள் சென்று அவள் அமரும் இடத்திற்கு நேராகச் செல்ல… அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த தேவியும் சுனித்தும் அதைப் பார்த்ததும் மிகவும் பவ்யமாக அமர்ந்திருந்து பெஞ்சில் இருந்து எழுந்து வெளியே வந்தவர்கள், இலக்கியாவே உள்ளே சென்று அமரும்படி அவளை மிகவும் மரியாதையாக நடத்தினர்.

இவர்கள் இருவரும் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று புரியாமல் இலக்கியா பெஞ்சில் சென்று அமர… இலக்கியாவைப் பார்த்த தேவி, “எப்படி இருக்கீங்க இலக்கியா? நல்லா இருக்கீங்களா? உங்களுக்கு இந்தப் பெஞ்ச் சௌகரியமா இருக்கா? அப்படி இல்லைன்னா சொல்லுங்க, நான் வேற நல்ல பெஞ்சா உங்களுக்கு அரேஞ்ச் பண்ணி கொண்டு வரேன்” என்றாள்.

“ஏய் தேவி, என்ன ஆச்சு? ஏன் நீ ஒரு மாதிரியா பேசுற? எனக்கு இங்கேயே நல்லாதான் இருக்கு, வேற பெஞ்செல்லாம் எதுவும் வேண்டாம்” என்றாள் இலக்கியா அவசரமாக.

“என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும்? ஏன் ஒரு மாதிரியா என்கிட்ட பேசுறீங்க?” என்று இலக்கியா கேட்க… “அதெல்லாம் ஒண்ணுமில்ல இலக்கியா மேடம்” என்றாள் தேவி.

“என்ன ஆச்சு? இலக்கியா மேடம் அப்படியெல்லாம் கூப்பிடாதே… என்ன ரெண்டு பேரும் அங்கேயே நிக்கிறீங்க? வாங்க… வந்து என் பக்கத்தில் உட்காருங்க” என்று இலக்கியா தள்ளி அமர்ந்து அவர்களுக்கு இடம் தர… “வேண்டாம் இலக்கியா மேடம். நீங்க எவ்வளவு பெரிய ஆள். நாங்க எல்லாம் உங்க பக்கத்துல போய் உட்கார்ந்தா நல்லா இருக்காது. நாங்க இங்கேயே நிற்கிறோம்” என்றாள் தேவி.

தன்னிடம் அந்நியம் போல இருவரும் நடந்துகொள்வதைப் பார்த்த இலக்கியாவுக்குக் கஷ்டமாக இருந்தது. தேவியின் அருகில் நின்றிருந்த சுனித்திடம், “சுனித், இவளுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி நடந்துக்கிற? நீயும் என்னிடம் ஏன் சரியா பேச மாட்டேங்குற?” என்று கேட்டாள்.

“என்ன இலக்கியா மேடம்? நீங்க எவ்வளவு பெரிய ஆள். உங்ககிட்ட நாங்க எல்லாம் பேசுறது எங்க பாக்கியமா நினைக்கிறோம். எங்களுக்கு தெரிஞ்ச இந்த விஷயம் மட்டும் இந்தக் கிளாஸுக்கு ஏன் இந்தக் கல்லூரிக்கு தெரிஞ்சதுன்னா அவ்வளவுதான், உங்களை எல்லாரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவாங்க” என்றான் சுனித்.

இருவரும் பேசுவது இலக்கியாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் இருவரையும் பாவமாக இலக்கியா பார்க்க… “ஐயோ இலக்கியா மேடம், இப்படி எல்லாம் பார்க்காதீங்க. நீங்க இப்படிப் பார்க்குறது யாராவது பார்த்தா அப்புறம் எங்களை இந்தக் கல்லூரி விட்டு துரத்தி விட போறாங்க” என்றான் சுனித்.

பெஞ்சில் அமர்ந்திருந்த இலக்கியா கோபமாக எழுந்து, “டேய் சுனித், இப்போ என்ன நடந்துச்சுன்னு ஒழுங்கா சொல்ல போறியா இல்லையா? நடக்கிறது வேற” என்று அவன் சட்டையைப் பிடித்து மிரட்ட… அதுவரை இவர்களைக் கண்டுகொள்ளாமல் தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் இலக்கியாவிலிருந்து சற்று சத்தமாக பேசவும் என்ன என்பதுபோல அனைவரும் திரும்பி அவளைப் பார்த்தனர்.

சுனித்தின் சட்டை காலரை விட்ட இலக்கியா, “சுனித் என்ன ஆச்சு? கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு. நீங்க ரெண்டு பேரும் என்கிட்ட நடந்துகுறது, பேசுறது எதுவுமே எனக்குப் புரியவில்லை” என்றாள் இலக்கியா.

“நேத்து கிளாஸ் முடிஞ்சதும் நீங்க வீட்டுக்கு யார் கூட கிளம்புனீங்கன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா?” என்றாள் தேவி.

அவர்கள் சொன்னதை யோசித்தவள், “ஏன், நான் கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொன்னேனே, அவரோட தங்கச்சி கூடத்தான்” என்றாள் இலக்கியா.

“நீ கல்யாணம் பண்ணிக்கப் போறவரோட தங்கச்சி கூடத்தான் நீ கிளம்புனே அப்படின்னா, உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவரோட பேரு மிஸ்டர் தமிழ் தானே?” என்று கேட்டான் சுனித்.

தமிழ் பெயரை கேட்டதும், “டேய் சுனித், உனக்கு எப்படி அவர் பெயர் தெரியும்?” என்றால் ஆச்சரியமாக இலக்கியா.

“என்ன மேடம் இப்படி கேட்டுட்டீங்க? அவர பத்தி யாருக்குத்தான் தெரியாது?” என்றவன், “இந்தக் கல்லூரி சேர்மன் குமரன் ஐயாவுடைய பேரன் தானே நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போற தமிழ்?” என்றான் சுனித்.

இலக்கியாவுக்கு, அப்புறம் தேவி, சுனித் இருவருக்கும் தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் தமிழையும், அவன் குடும்பத்தைப் பற்றியும் நன்றாகவே தெரிந்திருக்கிறது என்பதால், அவளால் உண்மையை மறைக்க முடியாமல், “ஆமாம்” என்று தலையைக் குனிந்துகொண்டு சொன்னாள் இலக்கியா.

“இதை என்கிட்ட இருந்து நீ மறைச்சிட்ட இல்ல? ஏன் இந்தக் கல்லூரி சேர்மனுடைய பேரனை என்னதான் நீ கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு எங்க கிட்ட சொல்லல?” என்று கேட்டாள் தேவி.

“நாங்க இதை வேணும்னே உங்ககிட்ட சொல்ல கூடாதுன்னு நினைக்கல. நம்ம மீட் பண்ணியே ஒரு நாள் கூட முழுசா ஆகலையே. அதுக்குள்ள என்ன சொல்றதுன்னு தெரியாமத்தான் நான் சொல்லாம விட்டுட்டேன்” என்றாள் இலக்கியா.

“எப்படி சொல்லாம விட்ட? நேத்து நானும், உன் சுனித்தும் எங்களைப் பத்தி அத்தனையும் உன்கிட்ட சொன்னோமே. ஆனா நீ உன்னைப் பத்தி ஒரு வார்த்தை எதுவும் சொன்னியா?” என்று அவளைக் கோபமாகப் பார்த்துக் கேட்டாள் தேவி.

“தேவி இப்படி எல்லாம் கோபப்படாதேடி ப்ளீஸ்… நான் வேணும்னே உங்ககிட்ட அவரைப் பத்தி சொல்லாம விட்டுட்டேன்னு நினைக்காதீங்க. நம்ம கொஞ்சம் கொஞ்சமா இப்போதானே பேச ஆரம்பித்திருக்கோம். பொறுமையா சொல்லிக்கலாம்னுதான் நான் விட்டுட்டேன். மத்தபடி அவரைப் பற்றி உங்ககிட்ட சொல்லாம மறைக்கணும்னு நினைக்கல” என்றாள் இலக்கியா.

“சரி சரி, ஏதோ சொல்ற. அதனால நாங்க ரெண்டு பேரும் உன்னை மன்னித்து விடுவோம்” என்ற தேவி இலக்கியாவின் அருகில் வந்து அமர்ந்துகொள்ள சுனித்தும் அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

“ஆமா, உங்களுக்கு அவர பத்தி எப்படி தெரியும்?” என்று கேட்டாள் இலக்கியா.

“ஏய், நீ என்னடி லூசா? நீ கல்யாணம் பண்ணிக்கப் போறவரு கட்டிடக்கலையில் எவ்வளவு பெரிய உயரத்தில் இருக்காருன்னு உனக்குத் தெரியுமா? அவர் மட்டும் இல்ல, அவர் தாத்தா, அந்தத் தாத்தாவோட தாத்தா முதற்கொண்டு எல்லாருமே இந்தத் துறையில் மிகப்பெரிய ஜாம்பவான்கள். அப்படிப்பட்ட ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கப் போற நீ, ஆனா அவரைப் பத்தி எதுவுமே தெரியாம இப்படி இருக்கியே?” என்றாள் தேவி.

இன்று இவர்களிடம் என்ன சொல்வது? தன்னை இந்தியாவுக்கு அழைத்து வந்ததிலிருந்து வெளியே எங்குமே யாருமே அழைத்துச் செல்லவில்லை. அவனைப் பற்றி தனக்கு எப்படித் தெரியும்? அவனாகவே சொன்னால் மட்டும் தானே தமிழைப் பற்றி தனக்குத் தெரியும் என்று நினைத்தபடி அவர்கள் இருவரையும் பாவமாகப் பார்க்க…

“இங்கே இருக்க சிவில் இன்ஜினியரிங் அண்டு ஆர்க்கிடெக்சர் டிபார்ட்மென்ட்க்கு எல்லாம் உங்க தமிழ் சார் இருக்கார்ல, அவர் அடிக்கடி வந்து லெக்சர் கொடுப்பாரு. கிளாஸ் எடுக்க வர்றாருன்னு சொன்னாலே, அன்னைக்கு எல்லா ஸ்டுடென்ட்டும் கரெக்டா கிளாஸுக்கு ஆஜர் ஆகி இருப்பாங்க. அந்த அளவுக்கு தமிழ் சார் மேல இங்கே இருக்கப் பொண்ணுங்களுக்கு எல்லாம் அவர் மேல அவ்ளோ பைத்தியம், அது தெரியுமா உனக்கு?” என்றாள் தேவி.

அவள் சொன்னதைக் கேட்டதும், பெண்களுக்கு எல்லாம் தமிழை மிகவும் பிடிக்கும் என்று தெரிந்ததும் இலக்கியாவுக்கு அவளை அறியாமலேயே பொறாமை எட்டிப் பார்க்க..

“அவர் இங்கே கிளாஸ் எடுக்க வர்றது உனக்கு எப்படித் தெரியும்? நீயும் என்ன மாதிரி இந்தக் கல்லூரிக்கு புதுசுதானே?” என்றாள் இலக்கியா.

“அடியம்மா… என்னோட அக்கா இந்தக் கல்லூரியில் தான் படிக்கிறா. அதுவும் ஃபைனல் இயர் சிவில் ஸ்டுடென்ட் தான்டி… அவ சொல்லித்தான் எனக்கே தெரியும். இல்லையின்னா எனக்கு எப்படி உன்னோட அவரைப் பற்றி எல்லாம் இவ்ளோ டீடெயில்ஸ் தெரிஞ்சிருக்கும்? நேத்து நீ காரில் ஏறிப் போகும்போது என்னோட அக்கா, நான், இவன் மூணு பேரும் வீட்டுக்குக் கிளம்பி போய்ட்டு இருந்தோம். நான் தான் நீ உன் ஆளோட தங்கச்சி கூட பேசிட்டு வண்டி ஏறினதை பார்த்துட்டு சுனித் கிட்டே சொல்லிட்டு இருந்தேன். என் அக்காவும் உன்னைப் பார்த்துட்டு, உன் கூட பேசிட்டு இருந்த அந்தப் பொண்ணைப் பார்த்துட்டு இத்தனை விவரமும் சொன்னாங்க” என்றாள்.

“ஓ…” என்று அவள் சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்டவள், “அப்போ அவர் அடிக்கடி இங்கே கிளாஸ் எடுக்க வருவாரா?” என்று ஆர்வமாக இலக்கியா அவர்கள் இருவரிடமும் கேட்டாள்.

“ஆமா, போன ரெண்டு மூணு வாரமா சார் கிளாஸ் எடுக்க வரலை. அநேகமா இந்த வாரம் கிளாஸ்க்கு வருவாருனு நினைக்கிறேன்” என்றாள் தேவி.

“ஏய், அவர் வருவாரா வர மாட்டாரா?” என்றாள் இலக்கியா.

“என்னடா இவ இப்படி இருக்கா? அவர் எப்போ கல்லூரி வருவாருனு என்கிட்டே கேட்டுட்டு இருக்கா… ஏன்டி அவரு உன்னைத்தானே கல்யாணம் பண்ணிக்கப் போறாரு? உனக்குத் தெரியாதா? இல்லை நீயே அவர்கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்க வேண்டியது தானே?” என்று தேவி.

“அது எனக்குத் தெரியாதாடி… நான் வேற அவரை ஆறு மாசத்துக்குப் பார்க்க கூடாதுனு சொல்லி வெளியே அனுப்பிட்டேன். அப்புறம் எப்படி நான் அவரைப் பார்த்துக் கேட்டுக்கிறது?” என்றாள் சோகமாக இலக்கியா.

“என்னடி சொல்றே? ஆறு மாசத்துக்கு அவரைப் பார்க்க கூடாதா? ஏன்டி என்ன ஆச்சு?” என்றாள் தேவி.

“அது ஒண்ணும் இல்லைடி…” என்று ஆரம்பித்த இலக்கியா, நேற்று தமிழிடம் சொன்னதையும், இன்று காலை தமிழ் பேசியதையும் தேவியிடம் சொல்ல…

“சரியா போய்டுச்சு போ… நீ என்ன லூசாடி? இந்தக் காலத்துல போய் இப்படி இருக்க… உன் ஆள் இருக்க அழகுக்கும் அறிவுக்கும் அவரை கொத்திட்டுப் போக நான்… நீன்னு போட்டி போட்டுட்டு சுத்திட்டு இருப்பாளுங்க… நீ வேற இப்படி சொல்லிட்டு வந்து இருக்கே” என்றாள் தேவி.

“ஏய் என்னடி ஏதேதோ சொல்றே… எனக்கு இங்கே அவரை விட வேற யாரையும் தெரியாது. நான் இங்கே வந்ததில் இருந்து அவர் மூலமாத்தான் எனக்குப் பல உறவுகள் கிடைச்சிருக்கு. அப்படி இருக்க, இப்போ நீ சொல்றதை எல்லாம் கேட்ட எனக்கு பயமா இருக்கு” என்று இலக்கியா பதட்டமாக…

“பின்னே என்னடி? இந்தக் காலத்துல தினம் தினம் பார்த்து பேசி பழகுறவங்களுக்குலயே ஆயிரத்தெட்டு பிரச்சனை வந்து வேண்டாம்னு பிரிச்சிட்டு போய்டுவாங்க… ஆனா நீ இப்படி பண்ணி வெச்சு இருக்கியே… உனக்கு இந்த ஆம்பளைங்களைப் பற்றி எதுவுமே தெரியாது” என்றாள் தேவி.

“ஏய் என்னடி என்னை வெச்சுகிட்டு ஆம்பளையை பத்தி பேசிட்டு இருக்க?” என்று எகிறினான் சுனித்.

“டேய் சீ… வாயை மூடு. உன்னை எல்லாம் அந்த லிஸ்ட்லையே நான் சேர்க்கல” என்றவள் இலக்கியாவிடம் திரும்ப.

“ஏய்…” என்று அவளை முறைத்தான் சுனித். அவனை கண்டுகொள்ளாமல் இலக்கியாவிடம், “இங்கே பாருடி… இந்த ஆம்பளைங்க நம்ம கூட இருந்தாலே பொண்ணுங்களை சைட் அடிக்கிறேன்னு அவங்க பின்னாடி ஜொள்ளு ஊத்திட்டு சுத்துவாங்க. நீ வேற ஆறு மாசம் கழிச்சுதான் பார்ப்பேன்னு சொல்லிட்டு வந்து இருக்க… இந்த ஆறு மாச கேப்ல உன் ஆளு வேற எந்த பொண்ணையும் உஷார் பண்ணிட்டா நீ என்ன பண்ணுவ?” என்றாள் தேவி.

அவள் சொன்னதை நினைத்துப் பார்த்த இலக்கியாக்குப் பயம் தொற்றிக்கொண்டது. அதே பயத்தோடு தேவியைப் பார்க்க… இலக்கியாவின் முகம் குழப்பத்தில் இருப்பதைப் பார்த்த சுனித், “ஏய் இலக்கியா, நீ இவ சொல்றதை எல்லாம் கேட்டுட்டு அப்படியே எல்லா ஆம்பளைகளும் இருப்பாங்கன்னு நினைக்காத… அப்படி எல்லாரும் இவ சொல்ற மாதிரி இருக்க மாட்டாங்க” என்றவன், “நீ இதை எல்லாம் நினைச்சிட்டு குழப்பிக்காத” என்று அவளுக்கு ஆறுதல் சொல்ல முயன்றான்.அதற்குள் வகுப்பு ஆரம்பித்துவிட… அனைவரும் பாடத்தைக் கவனிக்க ஆரம்பித்தனர். ஆனால் இலக்கியாவுக்கு தான் தேவி சொன்னதெல்லாம் தலைக்குள் ஓடிக்கொண்டு இருந்தது

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured