Home Uncategorizedஅஸ்க.. லஸ்கா..காதல் 10

அஸ்க.. லஸ்கா..காதல் 10

by Layas Tamil Novel
405 views

மீட்டிங்கை நல்லபடியாக முடித்துவிட்டு வினித், தமிழிடம் சொல்வதற்காக அவன் வீட்டிற்கு வர… அங்கே தமிழ் அவன் தாத்தாவிடம் கோபமாகப் பேசிக்கொண்டிருந்தான்.

தாத்தா, “எப்போ நீங்க என்கிட்ட என்ன நடந்துச்சுன்னு ஒரு வார்த்தைகூட கேட்காம நீங்களா முடிவெடுத்து இலக்கியாவை வாய்க்கு வந்தபடி பேசி அவளைக் கஷ்டப்படுத்தினீர்களோ, அதுக்கு பிறகு உங்களுக்கும் எனக்கும் எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. என் வாழ்க்கையை எப்படி அமைச்சுக்கணும்னு எனக்குத் தெரியும். நீங்க ஒண்ணும் என்மேல் அக்கறைப்படுற மாதிரி காட்டிக்க வேண்டாம்,” என்றான் கோபமாக.

“டேய் தமிழ், தாத்தா கிட்ட என்ன பேசணும்னு தெரிஞ்சுதான் பேசுறியா?” என்று தமிழின் அப்பா குருசாமி அவனிடம் கேட்க… “நான் தெரிஞ்சுதான் பேசுறேன் அப்பா. என்னோட தாத்தா இப்படி எந்தக் காரணமும் தெரியாம வாய்க்கு வந்தபடி பேசி, தெரியாம கூட யாரையும் கஷ்டப்படுத்தினது இல்லையே. ஆனா, யாரு என்னன்னு தெரியாம இப்படித்தான் வாய்க்கு வந்ததெல்லாம் பேசி அவங்களை நோகடிப்பாரா? இனிமே இவர் மட்டும் இல்லை, நீங்க யாரும் என் விஷயத்துல தலையிடக் கூடாது,” என்றவன் அவர்களைத் தாண்டி வெளியே தேடிக்கொண்டு சென்றான்.

இத்தனை வருடங்களில் தமிழ் ஒருமுறைகூட தன்னிடம் எதிர்த்துப் பேசியதோ அல்லது கோபமாகக்கூடப் பேசியது கிடையாது. அப்படி இருக்க, தன்னையும் தன் குடும்பத்தையுமே வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு தமிழ் சொல்வதைப் பார்த்த குமரன்னுக்கு… ‘நான் அவசரப்பட்டு அந்தப் பெண்ணைத் தரக்குறைவாகப் பேசி விட்டோமோ… தமிழுடன் ஒரு வார்த்தையாவது என்ன நடந்தது என்று கேட்டிருக்கலாமோ… அவள் யார், என்ன என்று விவரத்தையாவது கேட்டிருக்கலாமோ…’ என்று அப்போதுதான் யோசித்தார் குமரன்.

வீட்டிற்குள் வந்த வினித் இவர்கள் பேசுவதைப் பார்த்துவிட்டு அப்படியே நின்று இருக்க… இவர்களிடம் பேசிவிட்டு வந்த தமிழ் தன் எதிரே குழப்பமாக இருந்த வினித்தைப் பார்த்தவன் அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு காரை நோக்கிச் சென்றான். “என்னடா அது இங்கே?” என்று யோசித்தவாறே வினித், தமிழ் இழுத்த வேகத்திற்கு அவன் பின்னால் சென்றான். ‘ஏதோ லவ்வரைப் பிடித்து இழுத்துட்டு போற மாதிரி என் கையைப் பிடிச்சு இழுத்துட்டு போறான், நானும் இவன் பின்னாடியே வெட்கம்கெட்டுப் போறேன் பாரு,’ என்று யோசித்துக் கொண்டிருக்க…

காருக்கு வந்த தமிழ் அவன் கையை விட்டவன், “வினித், காரை எடு,” என்று சொல்லிவிட்டு டிரைவர் சீட்டுக்கு அருகில் இருந்த சீட்டின் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்துகொண்டான். ‘அதானே பார்த்தேன், டிரைவர் வேலைக்குத்தான் என்னை இழுத்துட்டு வந்திருக்கான்,’ என்று நினைத்தவன் காரை ஸ்டார்ட் செய்துவிட்டு தமிழைப் பார்க்க… கடுப்பில் இருந்த தமிழ் அதே கடுப்பில் “என்னடா என் முகத்துல என்ன இருக்கு? வண்டியை எடு,” என்றான். ‘ஆமா… இவன் சின்ன பொண்ணு, இவன் முகத்தை அப்படியே மெய் மறந்து பாக்குறாங்க,’ என்று நினைத்தவன். “எங்கே போறதுன்னு சொல்லுடா… நீ பாட்டுக்கு வண்டியை எடுன்னு சொன்னா எங்கே போறது?” என்றான் வினித். “எங்கேயாவது போய் தொலை,” என்றவன் பின், “இலக்கியா வீட்டை விட்டு வெளியே வந்தா எங்கே போனான்னு தெரியலை. ஏற்கனவே அவளுக்கு உடம்பு வேற சரி இல்லை, அவளைத் தேடணும்,” என்றான் தமிழ். “என்னது இலக்கியா வீட்டில் இல்லையா?!” என்று அதிர்ச்சியானவன், “அவளுக்கு என்ன ஆச்சுடா? எங்கே போனா அவ?” என்று கேட்டான் வினித். “அவ எங்க போயிருக்கான்னு தெரிஞ்சா நான் கூட்டிட்டு வந்திருக்க மாட்டேனா? நான் கொடுத்த கான்ட்ராக்ட்டப் படிச்சு பார்த்து கையெழுத்துப் போட்ட பிறகும் வீட்டை விட்டுப் போயிருக்காளா, அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? அவ மட்டும் என் கையில சிக்கட்டும், அப்புறம் இருக்கு,” என்று தமிழ் புலம்பிக்கொண்டிருக்க…

“டேய்… என்னடா சொல்ற!! கான்ட்ராக்ட் போட்டு இருக்கியா? என்னடா சொல்ற…. எதுக்கு கான்ட்ராக்ட்? யார் கூட கான்ட்ராக்ட் போட்டு இருக்க?” என்றான் வினித். “வேற யார் கூட? உன் தங்கச்சி இலக்கியா கூடத்தான் கான்ட்ராக்ட் போட்டு இருக்கேன்,” என்றவன், “நீ முதல்ல தேவையில்லாத கேள்வி கேட்டுட்டு இருக்காத, சீக்கிரம் கிளம்பு. அவளுக்கு இந்தியாவ பத்தி முன்ன பின்ன எதுவும் தெரியாது, அவ எங்கே போய் என்ன பண்ணிட்டு இருக்காளோ…” என்று தமிழ் டென்ஷனாகக் கூற… அடுத்த நொடி வினித் காரைக் கிளப்பிக்கொண்டு வெளியே கேட்டுக்கு வர, தமிழ் உடனே அவனை காரை நிப்பாட்ட சொன்னான். “ஏன்டா..” என்று வினித் காரை சடன் பிரேக் போட்டு நிறுத்த… தமிழ் “அங்க பாரு,” என்று திறந்து இருந்த கேட்டுக்கு வெளியே காட்டினான்.

தமிழ் காட்டிய திசையை வினித் பார்க்க… அங்கே தமிழின் வீட்டு வாசலுக்கு வெளியே எதிரில் குத்துக்காலிட்டு அமர்ந்து முகத்தைத் தன் கால்களுக்கு இடையில் புதைத்துக் கொண்டு இலக்கியா அமர்ந்திருந்தாள். அவர்கள் இருப்பது மிகவும் பணக்காரர்கள் வாழும் இடம் என்பதால், அவ்வளவாக வாகனங்கள் செல்லாது. அது மாலை நேரம் என்பதால் லேசாக இருட்டிருக்க சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வீதி வெறிச்சோடி இருந்தது. தமிழ் காரில் இருந்து இறங்கியவன் வினித்திடம் திரும்பி, “காரை உள்ளே பார்க் பண்ணிட்டு கிளம்பு,” என தன் வீட்டில் இருந்து இறங்கி சாலையை நோக்கி நடக்க… தமிழ் காரில் இருந்து இறங்கி தனியாக நடந்து செல்வதைப் பார்த்து அவனுடைய கார்டுகள் வேகமாக தமிழின் அருகில் வர… அவர்களை எல்லாம் கையைக்காட்டி நிறுத்திய தமிழ் தன் பின்னால் அவர்களை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு திரும்பி இலக்கியாவை நோக்கிச் சென்றான்.

இலக்கியா தலையைக் குனிந்துகொண்டு அமர்ந்திருக்க… “இங்க என்ன பண்ற?” என்று கேட்டபடி அவள் முன்னால் வந்து நின்றான் தமிழ். தமிழின் குரல் கேட்டு அவனை நிமிர்ந்து பார்த்த இலக்கியா, “பார்த்தா தெரியலையா? நான் உங்க வீட்டை விட்டு கோபமாக வெளியே வந்திருக்கேன்,” என்றால். “வீட்டை விட்டு கோபமா கிளம்பி வந்தா எங்கேயாவது கண்காணாத இடத்துக்குத்தானே போவாங்க? நீ என்ன என் வீட்டு முன்னாடியே இருக்க?” என்று கேட்டான் தமிழ். “நானும் வீட்டை விட்டு கோபமாதானே வெளியே வந்தேன், எங்கேயாவது போயிடலாம்னு… ஆனா இந்தக் கேட்ட தாண்டி வெளியே வந்து பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு, எங்க போறதுன்னு தெரியலை. இதுவே மலேசியாவா இருந்தா எனக்கு நிறைய இடம் தெரியும், எங்கேயாவது போய் இருந்துக்குவேன். அப்படி இல்லையா என் பிரண்டு வீட்டுக்குப் போய் இருப்பேன். ஆனா இங்கதான் எனக்கு உங்களை விட்டால் வேறு யாரையும் தெரியாதே… அப்புறம் நான் எங்கே போறது?” என்று குழந்தை போல முகத்தை வைத்துக்கொண்டு தமிழிடம் கேட்டாள்.

அவள் பேசியதை ரசித்த தமிழ் தன் கையை அவள்முன் நீட்ட… ஒரு நிமிடம் இலக்கியா தமிழைப் பார்த்தவள் தன் கையை உயர்த்தி அவன் கையைப் பிடித்து எழுந்து அவன் முன்பு நின்றாள். தமிழின் கையைப் பிடித்துபடி இலக்கியா எழுந்து நிற்க… அப்போது வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த குமரன், குருசாமி, காவேரி, அவர்களுடன் சேர்ந்து வினித்தும் அங்கு வந்து நின்றான். அவர்களைப் பார்த்தவுடன் இலக்கியா, தமிழைப் பிடித்திருந்த தன் கையை விலக்கிக்கொண்டாள். தன் கையைப் பிடித்தவள் விலகி நிற்பதைப் பார்த்தவன், அவளை இழுத்துத் தன் அருகில் நிறுத்திக்கொண்டவன், “வா உள்ளே போகலாம்,” என்று அவளை அழைக்க… இலக்கியா “ம்ஹும்…” என்று உள்ளே வர மறுத்துத் தலையை இட வலமாக ஆட்டியவள், அவன் பின்னால் குமரன்னைப் பார்த்து அவர் தன்னை எதுவும் சொல்லிவிடுவாரோ என்று பயந்து தமிழின் பின்னால் ஒளிந்துகொண்டாள். தன்னை பார்த்து பயந்த பெண்ணைப் பார்த்த குமரன் எதுவும் பேசாமல் அங்கிருந்து காரில் ஏறிச் செல்ல… அவருடன் குருசாமியும் காவேரியும் தமிழையும் இலக்கியாவையும் மாறி மாறி பார்த்தபடி கிளம்பிச் சென்றனர்.

அவர்கள் அனைவரும் சென்ற பிறகு வினித், தமிழின் அருகில் வந்தவன், அவனை தாண்டி அவன் பின்னால் நின்று இருந்த இலக்கியாவைப் பார்க்க… “உனக்கு அங்கேயெல்லாம் பார்த்தா பயமா இருக்கா?” என்று கேட்டான் வினித். “ஆமாம்,” என்று இலக்கியா தலையை ஆட்ட… “அவங்க உன்னை எதுவும் சொன்னாங்களா?” என்று கேட்டான். இலக்கியாவுக்கு அவர்களைப் பற்றி வினித்திடம் என்ன சொல்வது என்று தெரியாமல் அவள் விழிக்க… இலக்கியா அப்புறம் பதில் சொல்லத் தடுமாறுவதைப் பார்த்த தமிழ், “வா…. உள்ளே போகலாம்,” என்று இலக்கியாவின் கையைப் பிடித்து தமிழ் வீட்டுக்குள் அழைத்துச் செல்லப் போக… இலக்கியாவின் பயந்த முகத்தைப் பார்த்த வினித். தமிழின் தாத்தா இலக்கியாவை ஏதோ சொல்லியிருக்க வேண்டும், அதனால்தான் அவள் அவர்களைப் பார்த்து பயந்து ஒதுங்கி நின்றாள் என்று புரிந்துகொண்டவன்.

தமிழின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்திய வினித். “நீ உள்ளே போ, நான் இலக்கியா கூட கொஞ்ச நேரம் பேசிட்டு அவளை உள்ளே அழைச்சிட்டு வரேன்,” என்றான் வினித். தமிழ் வினித்தை முறைத்தவன், “அவ யார் கூடயும் பேச மாட்டாள்,” என்று இலக்கியாவைப் பிடித்து இழுத்துக்கொண்டு அவன் வீட்டிற்குள் செல்லப் போக… ஆனால் இலக்கியாவோ தமிழின் பின்னால் போகாமல் அப்படியே நிற்க… அவளைத் திரும்பி முறைத்தவன் அவள் கையை விட்டுவிட்டு கோபமாகத் தன் வீட்டிற்குள் சென்றான். தமிழ் கோபமாகச் செல்வதைப் பார்த்த இலக்கியாவுக்கு தான் உள்ளே வரமாட்டேன் என்று சொன்னதால் தன்மீது அவனுக்கு எதுவும் வருத்தம் இருக்குமோ என்று உள்ளே செல்லும் தமிழையே பார்த்தபடி நிற்க… “அவன் அப்படித்தான்மா, எதுக்கெடுத்தாலும் கோச்சிக்குவான், எதுக்காக கோவப்படுறோம்னு அவனுக்கே தெரியாது,” என்றவன், “சரி வா, நம்ம ரெண்டு பேரும் அப்படியே கொஞ்சம் நடந்துட்டு வருவோம்,” என்று இலக்கியாவை அழைத்துக்கொண்டு அந்தக் காலியாக இருந்த வீதியில் நடக்க ஆரம்பித்தான் வினித்.

இலக்கியாவும் வினித்துடன் நடந்து செல்ல… இருவரும் சிறிது நேரம் அந்தச் சாலையில் எதுவும் பேசிக்கொள்ளாமல் நடந்து சென்றனர். இலக்கியாவிடம் வினித் திரும்பி, “நீ எப்படி அந்த ஏலத்துக்கு வந்தேன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டான். அவனைப் பார்த்துச் சிரித்த இலக்கியா, “அதைத் தெரிஞ்சு நீங்க என்ன அண்ணா பண்ண போறீங்க?” என்று கேட்டாள் இலக்கியா. “உன்னை காசு கொடுத்து ஏலம் எடுத்தது என்னவோ தமிழ்தான். ஆனா முதன்முதலில் நான் உன்னை அழைச்சிட்டு வந்தபோ உனக்கு என்ன பத்தியோ தமிழைப் பற்றியோ எதுவும் தெரியாது. ஆனால் என்னை நம்பி நீ என் கூட வந்து பார்த்தாயா. அப்படி வந்த உன்ன பத்தி எதுவுமே தெரிஞ்சுக்காம நான் எப்படி இருக்கிறது? அதுவும் இல்லாம நீ என்னை அண்ணான்னு வேற கூப்பிட்டுட்டே… அப்போ என் தங்கச்சி எப்படி இருக்கா? என்ன ஏதுன்னு நான் தெரிஞ்சுக்க வேண்டாமா?” என்றான் வினித்.

வினித் தன்மீது அக்கரையாகத் தான் தன்னைப் பற்றி விசாரிக்கிறான் என்று தெரிந்த இலக்கியா அவனைப் பார்த்துச் சிரித்தவள். “அண்ணா, என் அம்மாவை அடைச்சு வச்சு அவங்களை கொடுமைப்படுத்துறதா சொல்லி என் அம்மாவுடைய தம்பி அந்த ஏலத்துக்கு என்ன வலுக்கட்டாயமாக கூட்டிட்டு வந்துட்டாரு. எனக்கு என் அம்மாவைக் காப்பாத்திக்க வேற வழியே தெரியல, அதனால்தான் நான் இந்த ஏலத்துக்கு வர சம்மதித்தேன்,” என்றால் இலக்கியா. “அப்போ இந்த ஏலத்துக்கு நீ விருப்பப்பட்டு வரல… அப்படித்தானே. ஏன்னா அங்க வர பொண்ணுங்க எல்லாம் இந்த ஏலத்துல விருப்பப்பட்டுதான் கலந்துக்குறாங்க,” என்று கேட்டான் வினித். “என் அம்மாவைக் காப்பாற்ற வழி தெரியாம என் தாய் மாமா கூட வலுக்கட்டாயத்துலதான் நான் அந்த ஏலத்திலேயே கலந்து கொண்டேன் அண்ணா, மற்றபடி எனக்கு அதுல துளியும் விருப்பமில்லை,” என்றால் இலக்கியா.

“சரிம்மா, அப்போ உனக்கு அந்த ஏலத்துல விருப்பம் இல்லாத போது. நான் உன்னை என் கூட அழைச்சிட்டு வந்ததும் எந்த மறுப்பும் சொல்லாம எப்படி என் கூட வந்த?” என்று கேட்டான் வினித். “எனக்கு அந்த ஏலத்துல விருப்பம் இல்லைனாலும் என்ன காசு கொடுத்து ஒருத்தர் வாங்கி இருக்காரு. என் மாமாவும் என்னை விக்கிறதா எழுதி கொடுத்துட்டாரு, அப்படி இருக்கிறப்போ எனக்கு உங்க கூட வர்றதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லையே,” என்று சொன்னாள். “உனக்கு கூடப் பிறந்தவங்க, உன்னோட அம்மா, அப்பா எல்லாம் மலேசியாவில் தான் இருக்காங்களா?” என்று கேட்டான் வினித்.

“எனக்கு அப்பா இல்லை அண்ணா. அம்மா மட்டும்தான் நாங்க சின்ன வயசுலேயே குடும்பத்தோட அப்பா, அம்மா, நான் மூணு பேரும் மலேசியா வந்துட்டோம். இங்கே வந்த பிறகுதான் எங்களுக்கு, எனக்கு தம்பி பிறந்த கொஞ்ச நாள்ல என் தாய்மாமா அவனை கூட்டிட்டு வெளியே போனவர் அவனை எங்கேயோ வித்திட்டு வந்துட்டாரு. என் அப்பாவும் எங்களைக் காப்பாத்த முடியாமல், என் தம்பியையும் காப்பாற்ற முடியவில்லை என்று வருத்தத்திலேயே அவரும் இறந்து போயிட்டார்,” என்று தன் குடும்பத்தை நினைத்து சோகமாக வினித்திடமும் கூற…. ஏற்கனவே தமிழின் தாத்தா திட்டியதில் பயந்திருந்தவளை சமாதானம் செய்யலாம் என்று அவளுடன் பேச அழைத்து வந்தவன். இப்போது அவள் குடும்பத்தைப் பற்றிக் கேட்டு அவளை சங்கடப்படுத்தி விட்டோம் என்று வருந்திய வினித்.

இலக்கியாவிடம் “ஆமா, காலையிலேயே உன்னை ஷாப்பிங் அழைச்சிட்டு போக தமிழ் வரச் சொல்லியிருந்தால், நான் வந்தா நீ மயக்கம் போட்டு விழுந்து கிடந்தாய், உனக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டான் வினித். “அதுவா அண்ணா, நான் காலையில உனக்குச் சாப்பிட்டுக்கொடுத்த உணவுகளில் எனக்கு அலர்ஜி ஆகும் சாப்பாடையும் சேர்த்து அது கூட வந்திருச்சு.. அது தெரியாம நான் சாப்பிட்டேன், அதனால்தான் நான் சாப்பிட்ட உணவு ஒத்துக்காம அலர்ஜியில மயக்கம் போட்டு விழுந்துட்டேன்,” என்று சொன்னாள். “என்னம்மா சொல்ற, சாப்பாட்ல அலர்ஜி எல்லாம் இருக்கா?” என்று வினித் கேட்க… “ஆமாம் அண்ணா, எனக்கு சில பொருட்கள் சாப்பிட்டால் இப்படித்தான் வாந்தி மயக்கம்னு எனக்கு ஏதாவது வந்துடும்,” என்றாள்.

அப்போது வினித்திடம் பேசிக்கொண்டிருந்தவனுக்கு குளிர் எடுக்க ஆரம்பிக்க… தன் கைகளை பரபரவென தேய்த்துக்கொண்டு உடலை சுருக்கியபடி நடந்து வந்தாள். “என்னம்மா உனக்குக் குளிருதா?” என்ற வினித். அவன் அணிந்திருந்த கோட்டைக் கழட்டி இலக்கியாவுக்குப் போட்டு விடப் போக… அப்போது அவள் மேல் யாரோ சால்வையைக் கொண்டு வந்து போர்த்தி விட… இலக்கியா சட்டென தனக்கு சால்வையைப் போர்த்தி விட்டவரை நிமிர்ந்து பார்க்க, அங்கே தமிழ் அவள் அருகில் நின்றிருந்தான்.

அவனைப் பார்த்ததும் அவன் போர்த்தி விட்ட சால்வையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட இலக்கியா, தமிழை விட்டு விலகி நிற்க… தான் இவ்வளவு நேரம் வினித்திடம் நன்றாக சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவள் தன்னைப் பார்த்ததும் ஒதுங்கி நிற்பதைக் கண்ட தமிழுக்கு இலக்கியாவின்மேல் கடுப்பாக வந்தது. இலக்கியாவைக் கடுப்பாகப் பார்த்துவிட்டு அப்படியே திரும்பி வினித்தைப் பார்க்க… ‘இதற்கு மேல் தான் இலக்கியாவுடன் இருந்தால் சரியாக இருக்காது,’ என்று நினைத்தவன் இலக்கியாவிடம், “இலக்கியா, நீ போன் வச்சிருக்கியா?” என்று கேட்டான். இலக்கியா இல்லை என்று தலையை இட வலமாக ஆட்ட… “அப்போ அண்ணா நாளைக்கு வரும்போது உனக்கு புது மொபைல் வாங்கிட்டு வரேன். நீயும் நானும் அடிக்கடி போன்ல பேசிக்கலாம். இவன் கூட இருந்தா நம்ம ரெண்டு பேரும் ஃப்ரீயா பேச முடியாது,” என்றான். “நீ ஒண்ணும் அவளுக்கு எதையும் வாங்கித் தர வேண்டாம், அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்,” என்று தமிழ் கோபமாக வினித்திடம் கூறினான். அவன் சொல்வதைக் கேட்டு தமிழைப் பார்த்து முறைத்த வினித், இலக்கியாவிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து சென்றான்.

வினித் தன்னை தமிழிடம் தனியாக விட்டுவிட்டுச் செல்கிறானே என்று கவலையாக வினித்தையே பார்த்துக் கொண்டு இலக்கியா நிற்க.. வினித் அவள் வீட்டிற்குச் சென்று காரை எடுத்துச் செல்லும் வரை எதுவும் பேசாமல் அமைதியாக இலக்கியாவின் அருகிலேயே தமிழ் நின்று இருந்தான். இலக்கியாவுக்கும் தமிழிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு அவன் அருகில் எங்கும் செல்லாமல் நின்று இருக்க… வினித் தமிழின் வீட்டைத் தாண்டிச் செல்லும்வரை பொறுமையாகக் காத்திருந்த தமிழ் அடுத்த நொடி திரும்பி இலக்கியாவைப் பார்த்தவன். அவளை அப்படியே குண்டுகட்டாகத் தூக்கித் தன் தோளில் போட்டு தமிழ் தன் வீட்டை நோக்கி நடந்து சென்றான்.

You may also like

1 comment

Mehala July 11, 2025 - 3:17 pm

Super super super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured