தமிழிடம் பேசிக் கொண்டிருந்த இலக்கியா திடீரென்று மயங்கி கீழே சரிய… அவள் மயங்கியதைப் பார்த்த தமிழ் சட்டென அவள் கீழே விழுந்து விடாமல் தாங்கிப் பிடித்தான். அவள் கன்னம் தட்டி “இலக்கியா… இலக்கியா…” என்று அழைத்தான். அவன் அழைத்ததற்கு இலக்கியா எந்த எதிர்வினையும் காட்டாமல் மயங்கிய நிலையில் அவன் கைக்குள் இருந்தாள். உடனே இலக்கியாவை தன் கைகளில் ஏந்திய தமிழ் அவளை தூக்கிக்கொண்டு தன் படுக்கை அறை நோக்கிச் சென்றான்.
இலக்கியா மயங்கியதையும் அவளைத் தூக்கிக்கொண்டு தமிழ் சென்றதையும் பார்த்த அவன் வீட்டு வேலையாள் தமிழின் அருகில் பதட்டமாக ஓடிவர… அவரிடம் டாக்டரை அழைக்கச் சொல்லிவிட்டு இலக்கியாவை தூக்கிக்கொண்டு அவன் அறையை நோக்கிச் சென்றான். தமிழையும் இலக்கியாவையும் பார்ப்பதற்காக அப்போதுதான் அவன் வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தான் வினித். எப்படியும் கொஞ்ச நேரத்தில் தமிழ் உணவு அறையில்தான் இருப்பான் என்று அவனை காண அங்கே சென்றான் வினித்.
உள்ளே வரவும் தமிழ் இலக்கியாவை தூக்கிக்கொண்டு செல்வதைப் பார்த்த வினித் அதிர்ந்தான். “என்ன ஆச்சு? இலக்கியாவை தூக்கிட்டு போறான். வழக்கம்போல கோபம் வந்து அவளை எதுவும் செஞ்சுட்டானோ? இவனுக்கு கோபம் வந்தாலே யார் என்னன்னு எதையும் பார்க்கிறதில்லை” என்று தமிழைத் திட்டியவாறு வேகமாக தமிழின் முன்பு போய் நின்றவன் தன் கைகள் இரண்டையும் குறுக்கே விரித்து அவனை வழிமறித்து நின்றான்.
தன்னை வழிமறித்து நின்ற வினித்தைத் தமிழ் கோபமாகப் பார்க்க… அவன் கையில் இருந்த இலக்கியாவைப் பார்த்துக் கொண்டிருந்த வினித் தமிழ் தன்னை முறைப்பதைப் கவனிக்கவில்லை. இலக்கியாவைப் பார்த்துவிட்டு நிமிர்ந்து தமிழைப் பார்த்தவன் “டேய் தமிழ்! என்னடா பண்ணிட்டு இருக்க? இலக்கியா மயக்கம் போட்டு விழுந்திருக்கா!” என்றவன், “அவளை என்னடா பண்ணி வச்சிருக்க? வந்த அன்றைக்கே உன் வேலையை காட்டிட்டியா? அவளை என்னடா செஞ்ச?” என்று விடாமல் கேள்வி கேட்டான் வினித்.
ஏற்கனவே இலக்கியா மயங்கியதில் பதட்டமாக இருந்தவன், தன்னை உள்ளே செல்ல விடாமல் கேள்வி கேட்டு வழிமறித்து நின்ற வினித்தக் கண்டு கடுப்பான தமிழ், “டேய்! ஒழுங்கா வழியை விடு!” என்றான்.
“முடியாதுடா… நீ இலக்கியாவை என்ன செஞ்சேன்னு சொல்லு… அவள் ஏன் மயக்கமா இருக்கா?” என்று திரும்பவும் வினித் கேள்வி கேட்க… தன் கையில் மயக்கத்தில் இருந்த இலக்கியாவை ஒரு முறை தமிழ் திரும்பிப் பார்க்க, ஏற்கனவே மயங்கி இருந்த இலக்கியாவின் முகம், கழுத்து, கை, கால்கள் என எல்லாம் திடீரென சிவந்து அங்கங்கே தடித்து வீங்கி இருந்தது.
அதைப் பார்த்து தமிழுக்கு அவளுக்கு என்ன ஆனதோ என்று பதட்டம் அதிகமானது. வினித் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் தமிழ் இல்லாததால் அவனைத் தாண்டி உள்ளே செல்லப் போக, ஆனால் வினித்தோ தமிழை உள்ளே செல்ல விடாமல் அவனை வழிமறித்து நிற்க… வழிமறித்து நின்ற வினித்தைத் அடிக்கலாமா என்று பரபரத்த தமிழின் கைகள் இலக்கியாவைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருக்க… கோபம் வந்த தமிழ், இதில் இரண்டு கைகளும் பிசியாக இருந்ததால் சற்றும் யோசிக்காமல் கைகள் இரண்டையும் குறுக்காக நீட்டி தன் எதிரில் வழிமறித்து நின்றிருந்த வினித்தின் மார்பில் ஓங்கி உதைத்தான்.
தமிழ் தன்னை உதைப்பான் என்று சற்றும் எதிர்பார்க்காத வினித், தமிழ் உதைத்த வேகத்தில் “அம்மா…” என்று அலறியபடி பின்னால் பறந்து போய் தமிழை விட்டு சில அடி தூரம் தள்ளி தரையில் பொத்தென விழுந்தான். தமிழ் தரையில் விழுந்து கிடந்த வினித்தைக் கண்டுகொள்ளாமல் இலக்கியாவைத் தூக்கிக்கொண்டு தன் அறைக்குச் சென்றான். தரையில் விழுந்து கிடந்த வினித் தன் இடுப்பைப் பிடித்துக்கொண்டு “ஐயோ… அம்மா…” என்று வலியில் கதறியவாறே நிமிர முடியாமல் எழுந்து நிற்க… வலியில் தன் இடுப்பைப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்ற வினித் தன் எதிரில் இருந்த தமிழைப் பார்க்க… தமிழ் அங்கு இல்லை. “எங்கடா! என்ன அடிச்சு கீழ தள்ளிட்டு அதுக்குள்ள போயிட்டியா?” என்று அதிர்ச்சியாக தமிழின் அறையைத் திரும்பிப் பார்க்க..
தமிழ் இவன் பேசுவதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான். “இப்படி நண்பனை அடிச்சு கீழ தள்ளிட்டு எப்படி கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம உள்ளே போறான் பாரு” என்று அவனை வினித் திட்டிக் கொண்டிருக்க… அப்போது இலக்கியாவை பார்ப்பதற்காக வந்திருந்த தமிழின் டாக்டர் தமிழின் அறையை நோக்கிச் செல்லப் போக… அவரைப் பார்த்த வினித் வேகமாக அவரிடம் வந்தவன், தமிழின் டாக்டர் மிகவும் பரபரப்பாக அங்கே வந்திருப்பதைப் பார்த்தவன், கண்டிப்பாக இலக்கியாவுக்கு ஏதோ சீரியஸாக இருக்க வேண்டும், அதனால் தான் டாக்டர் இவ்வளவு அவசரமாக உள்ளே செல்கிறார் என்று நினைத்துக் கொண்டான்.
“தமிழ் ஏற்கனவே அவளைப் பழிவாங்கத்தான் விலைக்கு வாங்கியதாகக் கூறியிருந்தான்.
ஒருவேளை அவளைப் பழிவாங்க அவன் எதுவும் செய்துவிட்டானோ? அவன் வந்த தன் வேலையை ஆரம்பித்து விட்டானோ? இவனுக்கு வேறு மூக்கிற்கு மேல் எப்போதுமே கோபம் குடிகொண்டிருக்கும். ஒருவேளை அவள் எதுவும் இவனிடம் பேசி அது இவனுக்குப் பிடிக்காமல் கோபம் வந்து இலக்கியாவை அடித்துவிட்டானோ? சேச்சே… அப்படி எல்லாம் தமிழ் ஒரு பெண்ணை கை நீட்டி அடிக்க மாட்டான். அவன் அப்படிப்பட்டவன் இல்லை” என்று வினித்தின் மனம் தமிழுக்குப் பரிந்து பேச… “யாரு? இவனா? இவனுக்குக் கோபம் வந்தாலே அவன் கண்ணு முன்னாடி இருப்பது ஆம்பளையா பொம்பளையா என்று எல்லாம் பார்க்க மாட்டான். நானே எத்தனை முறை அவனிடமிருந்து எஸ்கேப் ஆக முடியாமல் அடி வாங்கி இருக்கேன்” மற்றொரு மனம் வினித்தற்குப் பரிந்து பேசியது.
“இவன் இலக்கியாவை அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தமிழின் அடியை நம்மாலேயே தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பாவம் அந்த சின்னப் பெண் எப்படி தாங்கிக் கொண்டாளோ?” என்று சற்றுமுன் தமிழிடம் மிதி வாங்கிய தன் மார்பைத் தேய்த்து விட்டுக் கொண்டே இலக்கியாவுக்கு என்ன ஆனதோ என்று யோசித்தபடி தமிழின் அறை முன்பு நின்று இருந்தான்.
இலக்கியாவை பரிசோதிக்க வந்த டாக்டர் அவளை முழுவதுமாகப் பரிசோதித்துவிட்டு, இலக்கியாவுக்கு சாப்பிட்டதில் தான் ஏதோ உணவு ஒத்துக் கொள்ளாமல் அவளுக்கு அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது, அதனால் தான் அவள் மயங்கி இருக்கிறாள் என்று சொன்னார்.
அவர் சொன்னதை புருவம் சுருங்க கேட்ட தமிழ் “ஃபுட் அலர்ஜி…?” என்றவன், “அதனால உடம்பெல்லாம் இப்படி சிவந்து போகுமா?” என்று கேட்டான். “அவங்களுக்கு ஒத்துக் கொள்ளாத உணவை அதிகமாகச் சாப்பிட்டால் இந்த மாதிரி உடம்பெல்லாம் சிவப்பு சிவப்பாகத் தடிப்பு வர மாதிரி இருக்கும். அது அந்த அலர்ஜியோட வீரியத்தை அதிகமாக்கி இருக்கும்” என்று சொன்னார் டாக்டர். “சாப்பிட்ட உணவு ஒத்துக் கொள்ளவில்லையா?” என்று யோசித்தவன், உடனே தன் வேலையாளுக்கு கால் செய்து அவள் சாப்பிட்ட உணவை எதையும் எடுத்துப் போட வேண்டாம் அப்படியே வைத்திருக்கச் சொன்னான் தமிழ்.
டாக்டரிடம், “எப்படி அவள் உடல், முகம் எல்லாம் வீங்கி இருக்கிறது? இது ரொம்ப சீரியஸான கண்டிஷனா? எப்போது சரியாகும்?” என்று கேட்டான்.
“அவங்களுக்கு அவ்வளவாக ஒன்னும் சீரியஸாக இல்லை. இப்போதைக்கு அவங்களுக்கு இன்ஜெக்ஷன் போட்டு இருக்கேன். சீக்கிரமா மயக்கம் தெளிஞ்சிடும். ஆனா உடலில் இருக்கும் வீக்கமும், சிவப்பும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறையும்” என்றவர் சில மருந்துகளை கொடுத்து இலக்கியாவுக்குக் கொடுக்கச் சொன்னார்.
கட்டிலில் மயங்கி உடலெல்லாம் வீங்கிப் போய் படுத்திருந்த இலக்கியாவைப் பார்த்த டாக்டர் தமிழைப் பார்த்து “இவர்களுக்கு மயக்கம் தெளிந்து உடம்பில் இருக்கிற வீக்கம் எல்லாம் வற்றிய பிறகு ஒருமுறை மருத்துவமனைக்கு அழைத்து வாங்க. அவங்களுக்கு என்னென்ன உணவுல அலர்ஜி இருக்குன்னு நம்ம ஒரு முறை டெஸ்ட் பண்ணிப் பார்த்துவிடலாம்” என்றார். பிறகு சில உணவு வழிமுறைகளை தமிழிடம் சொல்லிவிட்டு டாக்டர் தமிழின் அருகிலிருந்து கிளம்பினார்.
தமிழின் அறைக்கு வெளியே நின்று இருந்த வினித், டாக்டர் வெளியே வந்ததும் அவரிடம் அவசரமாகச் சென்று இலக்கியாவுக்கு என்ன ஆனது என்று விசாரித்தான். டாக்டர் வெறுமனே “அலர்ஜி” என்று சொல்லவும். “என்னது!!! அவளுக்கும் அலர்ஜியா!!!” என்று அதிர்ந்த வினித். “ஆமாம் டாக்டர். தமிழை கண்டாலே எல்லாருக்கும் அலர்ஜி தான். அவன் என்ன சொல்லுவான்… இது செய்வான்… என்று அவனை கண்டாலே உடலெல்லாம் பயந்து வரும். தமிழின் பக்கத்துல வந்தாலே உடம்பெல்லாம் தானாகவே பயத்தில் நடுங்க ஆரம்பிச்சுடும். அப்படி நடுங்கினாலே உடம்பெல்லாம் ஏதோ அலர்ஜி வந்த மாதிரி ஆகிடும்” என்றான்.
வினித் என்ன சொல்கிறான் என்று புரியாமல் அவனை டாக்டர் பார்த்துக் கொண்டிருக்க… “எத்தனை வருஷமா அவனோட இருக்கிற எங்களாலேயே அவனைக் கண்டாலே பயத்தைச் சமாளிக்க முடியல. பாவம் அந்த சின்னப் பொண்ணு என்ன பண்ணுவா… பாவம் அவள் சின்னப் பொண்ணு இன்னைக்கு தான் தமிழையே பார்த்திருக்கா. பார்த்ததுமே அவளுக்கும் எங்களை போலவே தமிழைப் கண்டு அலர்ஜி ஆகிடுச்சோ… என்னவோ…” என்று இலக்கியாவை நினைத்து வருந்தினான். வினித் சொல்வதையெல்லாம் கேட்டு வித்தியாசமாக அவனைப் பார்த்த டாக்டர், “என்ன வினித் உளறிட்டு இருக்கீங்க… நீங்க சொல்றது எனக்கு எதுவுமே புரியல” என்றவர், “உள்ளே இருக்கிற நோயாளிகளுக்கு சாப்பிட்ட ஏதோ ஒரு உணவினால் அலர்ஜி வந்திருக்கு” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டு புரிந்த வினித், “அப்போ இலக்கியாவுக்கு சாப்பாட்டினால் தான் அலர்ஜி வந்திருக்கா?” என்று கேட்டான். “ஆமாம்” என்று டாக்டர் தலையாட்ட… வினித் டாக்டர் தன்னை பற்றி என்ன நினைத்து இருப்பார், எப்படி சம்பந்தம் இல்லாமல் எதையோ உளறி வைத்திருக்கிறோமே என்று டாக்டரைப் பார்த்து “இ…” என்று பல்லை காட்டியவாறு “சாரி டாக்டர்” என்று அவரிடம் வழிய… அவன் வழிவதைப் பார்த்த டாக்டர் ஏதோ துஷ்ட சக்தியை விட்டு விலகி இருப்பது போல வினித்தை விட்டு சற்று தள்ளி நின்றவர், “நோயாளியை பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அழைத்து வரச் சொல்லி தமிழிடம் சொல்லி இருக்கேன். அவர் வரும்போது நீங்களும் தமிழோடு வந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.
அவர் சொல்வது புரியாமல் “ஏன்? டாக்டர் நான் எதுக்கு வரணும்?” என்று கேட்டான் வினித். “இதுக்கு முன்னாடி நான் உங்களை பார்த்த வரைக்கும் நீங்கள் நன்றாகத்தான் இருந்தீர்கள். ஆனால் இப்போ உங்க பேச்சும் நடவடிக்கையும் சுத்தமாக சரியில்லை. உங்களை கொஞ்சம் பரிசோதித்துப் பார்க்கணும். அதுதான் உங்களை தமிழோடு மருத்துவமனைக்கு வரச்சொன்னேன்” என்றார் டாக்டர். “டாக்டர் எனக்கு ஒண்ணும் இல்லை. நான் நன்றாகத்தான் இருக்கேன் பாருங்க” என்று அவர் முன்பு இங்குமங்கும் குறுக்காக நடந்து காட்டினான் வினித். “உங்க உடம்பெல்லாம் நன்றாகத்தான் இருக்கு வினித். ஆனா உங்க மூளை…” என்று சொன்னவர். வினித்தின் தோலைத் தட்டிக் கொடுத்து “ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் வினித், கவனமாகப் பார்த்துக்கோங்க” என்று விட்டு அங்கிருந்து கிளம்பினார்.
“எதுக்கு என் மூளையை பத்தி இவரு பேசிக்கிட்டு போறாரு? ஒருவேளை அவரை விட நான் ரொம்ப புத்திசாலியா இருக்கேன்னு நினைச்சு பேசிட்டு போறாரோ?” என்று நினைத்தவன். ப்ச்…. என்றவன் கடைசி வரை அவர் எதற்கு சொன்னார் என்று வினித்திற்கு புரியவே இல்லை. அதை யோசனையோடு “சரி உள்ளே இருந்த இலக்கியாவை போய் நம்ம பாத்துட்டு வருவோம்” என்று தமிழின் அறையைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் வினித்.
தமிழைப் பார்த்து சற்று பயம் தொற்றிக்கொள்ள, அவன் அருகில் செல்லாமல் சற்று தள்ளியே நின்றபடி இலக்கியாவை நின்ற இடத்தில் இருந்து எட்டிப் பார்த்தான். அவள் மருந்தின் வீரியத்தில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தாகி விட்டது இனி நமக்கு வேற என்ன வேலை கிளம்பிப் போகலாம் என்று நினைத்து தமிழைப் பார்த்தவன் அவனிடம் ஏதும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பப் போக… “டேய்….” என்று அழைத்தான் தமிழ்.
“இவ்வளவு நேரம் எதுவும் பேசாமல் கிளம்பியதை பார்த்து கோபமாக கிளம்புகிறேன் என்று நினைத்திருப்பானோ? என்னை அடித்ததற்கு மன்னிப்பு கேட்கவோ அல்லது என்னை சமாதானம் பண்ணத்தான் கூப்பிடுகிறான்” என்று நினைத்த வினித்.
“உன்னோட கெத்தை இப்படியே மைண்டைன் பண்ணு. கொஞ்சம் கூட அவனைக் கண்டு பயந்தோ… இறங்கிப் போகவோ கூடாது” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் தமிழை நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரும்பிப் பார்க்க.. வினித் தமிழைத் திரும்பிப் பார்த்த அடுத்த நொடி அவன் மீது ஒரு கோப்பையை தூக்கிப் போட்டு “போய் மீட்டிங்கை அட்டென்ட் பண்ணிட்டு வா…” என்றான் தமிழ்.
“அதானே பார்த்தேன்! என்னை பார்த்ததிலிருந்து இன்னும் ஒரு வேலையும் சொல்லலையே நெனச்சேன். இவனுக்கு மட்டும் எப்படி யாராவது ஒரு ஆளைப் பார்த்தா வேலை சொல்லியே ஆகணும்னு ஏதாவது ஒரு வேலையை கொடுத்து விடுகிறான்.” தமிழ் தூக்கிப் போட்ட கோப்பையைத் திறந்து பார்த்த வினித் “டேய் தமிழ்! இந்த மீட்டிங்கை நான் போய் அட்டென்ட் பண்ணனுமா? வாய்ப்பே இல்லை. இது ரொம்ப முக்கியமான கான்ட்ராக்ட். நீ வந்தால் தான் சரியாக இருக்கும். நான் வரல நீ போயிட்டு வா” என்று சொன்னான். வினித் சொல்வதை தமிழ் காதில் வாங்கவே இல்லை. வினித்தை முறைத்தவன் “நான் சொல்றது மட்டும் செய்!” என்றான் தமிழ்.
“முடியாதுடா… இது ரொம்ப பெரிய கான்ட்ராக்ட். நான் போய் எதுவும் சொல்லித் தவறாகப் போனால் அப்புறம் உனக்குத்தான் நஷ்டம் ஆகிவிடும். நான் போகல நீயே போயிட்டு வா” என்று வினித். “ஒழுங்கா இந்த மீட்டிங்கை போய் நீ அட்டென்ட் பண்றியா… இல்லை உன்னோட கம்பெனி கான்ட்ராக்ட்டைக் கிழிச்சுப் போட்டுட்டு, அங்கிள் கிட்டே ‘உனக்கு என்னோட கம்பெனியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள விருப்பம் இல்லை. அதனால நம்ம ரெண்டு கம்பெனிக்கும் இடையில் போட்ட கான்ட்ராக்ட்டை நீ கிழிச்சுப் போட்டுட்டேன்னு’ சொல்லி அவர்கிட்ட மாட்டி விட்டு விடுவேன்” என்று வினித்தை பிளாக் மெயில் செய்தான் தமிழ்.
“டேய் அப்பா சாமி! வேற வினையே வேண்டாம். நான் போறேன்” என்று தன் கையில் இருந்த கோப்பையை மூடி, தனக்கு மேலே தன் கையைத் தூக்கி தமிழைப் பார்த்து கும்பிடு போட்டுவிட்டு அங்கிருந்து திரும்பிச் செல்லப் போனவன். பின் திரும்பி இலக்கியாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு தமிழைப் பார்த்தான். தமிழ் “என்ன?” என்று வினித்தை முறைத்துப் பார்க்க… “இவன் ஒருத்தன் வயசுப் பொண்ணை சைட் அடிக்கிற மாதிரி எந்த நேரமும் என்னை முறைச்சு பார்த்துக்கிட்டே இருக்க வேண்டியது” என்று புலம்பினான் வினித்.
“என்னடா போகாமல் என்னை பார்த்துட்டு இருக்க?” என்றான் தமிழ். “இலக்கியாவை பத்திரமாகப் பார்த்துக்கோ. அவள் சின்னப் பொண்ணு” என்றவன். பின் சிறிது யோசித்துவிட்டு “என்கிட்ட கோவமா இருக்குற மாதிரி இவளிடம் நடந்துக்காத… அவளை விலைக்கு வாங்கிட்டோம் என்று உன் இஷ்டத்துக்கு அவளை ஆட்டி வைக்காதே. அவளைப் பார்த்தாலே ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தது போல இருக்கா. தெரிஞ்சோ தெரியாமலோ நீ அவளைக் காசு கொடுத்து விலைக்கு வாங்கிட்ட… அது உன்னோட பொருள். எப்படி உனக்கு பிடிச்ச பொருளை வாங்கினால் அதை பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருப்போமோ, அந்த மாதிரி வைத்துக்கொள்ள முயற்சி பண்ணு. உனக்கு அவளைப் பிடிக்காமல் தான் வாங்கினேன்னு என்கிட்ட சொன்ன. நினைக்காத பொருள் இருந்தாலும் அது காசு கொடுத்து வாங்கின மதிப்புக்காகவாவது அதை பத்திரமாகப் பார்த்துக்குவாங்க…
உன்னை இலக்கியாவை பொக்கிஷம் மாதிரி எல்லாம் வெச்சுப் பாத்துக்க சொல்லல… நல்ல முறையில் மதிச்சு நடந்துக்கிட்டாலே போதும்” என்ற வினித்.
“இலக்கியாவை காசு கொடுத்து விலைக்கு வாங்கிட்டு வந்துட்டா. உனக்கு எதுனா யாரும் கேட்க வர மாட்டாங்கன்னு நினைச்சுக்காத. அவள் கஷ்டப்பட்டா அதை பார்த்துட்டு உன்மேல இருக்கிற பயத்துல யாரும் உன்கிட்டே எதுவும் கேட்க வர மாட்டாங்க. ஆனா நான் வருவேன். இலக்கியாவுக்கு எதுவும் ஒன்னுன்னா… நான் வந்து உன் சட்டையைப் பிடிச்சு கேட்பேன். அந்த உரிமை எனக்கு இருக்கு நான் கேட்பேன்” என்று சொன்ன வினித் தமிழை திரும்பியும் பார்க்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
தன்னிடம் நண்பன் என்ற முறையில் விளையாட்டுத்தனமாகத்தான் இதுவரை வினித் பேசினான். ஆனால் முதல்முறையாக, பார்த்துப் பழகி ஒரு நாள் தான் ஆன இலக்கியாவைத் தன் சொந்தம் போல நினைத்து தன்னையே மிரட்டிச் செல்லும் தன் ஆருயிர் நண்பன் வினித் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தான் தமிழ்.
