காலையிலிருந்து இலக்கியாவின் அருகிலேயே அவள் முகத்தைப் பார்த்தவாறு மிகவும் கவலையாக அமர்ந்திருந்தான் தமிழ். இலக்கியா இன்னும் கண் விழிக்காமல் உறக்கத்தில் இருக்க… அவளுக்கு என்ன ஆனது, ஏதானது என்று பதட்டத்தில் இருந்தான் தமிழ். அவள் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவன், அப்போதுதான் அவள் புருவத்தின் மேலிருந்த மச்சத்தைக் கவனித்தான். அந்த மச்சத்தைப் பார்த்ததும் புருவம் சுருக்கியவன், யோசனையோடு அவளைப் பார்த்துக் கொண்டு இருக்க… அப்போது திடீரென “தமிழ்!” என்று கத்தும் சத்தம் கேட்டது. அவன் அறைக்கு வெளியே தன் பெயரைச் சொல்லி அழைக்கும் சத்தத்தை வைத்து அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் யார் என்று தமிழுக்குப் புரிந்தது. அது தமிழின் தாத்தா குமரன்னின் குரல் தான். அவர் குரல் வந்த திசையைப் பார்த்தவன் பின் திரும்பி இலக்கியாவைப் பார்த்தான்.
தமிழின் தாத்தாவின் குரல் அவன் அறை வரை கேட்டதும், தூக்கத்தில் இருந்த இலக்கியாவுக்கு உடல் இடைஞ்சலாக அவள் முகத்தைச் சுளித்தவரே அசைய ஆரம்பித்தாள். அவர் மேலும் சத்தமிட்டு இலக்கியாவின் தூக்கத்தைக் கலைத்து விடக்கூடாது என்று அவசரமாக தன் அறையை விட்டு வெளியே வந்தான் தமிழ். அறையை விட்டு தமிழ் வெளியே வரவும், அவனை நோக்கி கோபமாக குமரன்னும், அவர் பின்னால் குருசாமியும், காவேரியும் பதட்டமாகவும் வந்து கொண்டிருந்தனர். தன் தாத்தா கோபமாக வருவதைப் பார்த்த தமிழ், அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த தன் தாயைப் பார்த்து “என்ன?” என்று கண் ஜாடை செய்து கேட்க… தமிழ் தன் அம்மாவிடம் ஜாடை பேசுவதைக் கண்டுவிட்ட குமரன், திரும்பி காவேரியை முறைத்தார். அவர் முறைத்ததும் தமிழிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாகிவிட்டாள் காவேரி.
அவன் தாத்தாவை தமிழ் பார்க்க, அவர் நேராக அவன் அருகில் வந்து கோபமாக “என்ன காரியம் செஞ்சு வச்சிருக்கேடா?” என்று சொல்லி சற்றும் தாமதிக்காமல் தமிழைப் பளார்… என்று அறைந்து விட்டார். இதை சற்றும் அங்கு இருந்தவர்கள் எதிர்பார்க்கவில்லை. குமரன் தமிழை அடித்ததும், அங்கு நின்றிருந்த வேலையாட்கள் அனைவரும் உள்ளே சென்றுவிட… தன்னை இதுவரை அடித்திடாத தாத்தா இப்படி அனைவரும் முன்னிலையிலும் அடித்திட, அந்தக் கோபமான தமிழ் “தாத்தா….!” என்று அந்த அறையே அதிரும்படி கத்தினான். தமிழின் அலறலில் உள்ளே அறை தூக்கத்திலிருந்த இலக்கியா சட்டென விழித்துக் கொண்டாள்.
அறைக்கு வெளியே தமிழ், குமரன்னிடம் “தாத்தா, இப்போ எதுக்காக என்னை அடிச்சீங்க…?” என்று அவரிடம் கோபமாகக் கேட்டான். “நான் உன்னை ஏன் அடிச்சேன்னு உனக்குத் தெரியாதா?” என்றவர், “நம்ம குடும்பத்துக்கே கலங்கத்தை ஏற்படுத்திட்டு வந்திருக்க நீ! மலேசியாவுக்கு உன்னை பிசினஸ் பார்க்கத்தான் அனுப்பி வைத்தேன்.” “ஆனா நீ அங்கே போய் ஏலத்தில் ஒரு பொண்ணை விலைக்கு வாங்கிட்டு வந்திருக்க…” “இது எப்படிப்பட்ட பழக்கம் தமிழ்? நம்ம குடும்பத்துல இந்த மாதிரி எல்லாம் பொண்ணுங்களை விலை கொடுத்து வாங்கிட்டு வரல.” “தெய்வமா மதிக்கிற நம்ம குடும்பத்துல நீ எப்படி ஒரு பொண்ணை அடிமையாக்க நினைத்து விலைக்கு வாங்கிட்டு வந்திருப்பே?” என்றார் குமரன். “அந்தப் பொண்ணை காசு கொடுத்து நீ விலைக்கு வாங்கிட்டு வந்திருக்கிற, அதுக்கு என்ன அர்த்தம்னு என்கிட்ட சொல்லு” என்று கேட்டார் குமரன். “அதை நான் உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று தமிழ் குமரன்னிடம் சொல்லிக் கொண்டிருக்க, தமிழின் அறை கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் இலக்கியா.
அவள் மிகவும் சோர்ந்து தளர்ந்து போய் நடக்க முடியாமல் வெளியே வர… தன் அறைக்கதவு திறந்து வெளியே வந்த இலக்கியாவைப் பார்த்த தமிழ் வேகமாக அவள் அருகில் சென்று அவளை தாங்கிப் பிடித்தான். தன் கண்ணாலேயே வேறொரு பெண்ணை இப்படி பிடித்துக் கொண்டு நிற்கும் தமிழைப் பார்த்து குமரன்னுக்கு ஆத்திரம் அதிகமானது. வேகமாக அவன் அருகில் வந்தவர், அவன் கைக்குள் இருந்த இலக்கியாவைப் பிடித்து கீழே தள்ளி… “ச்சீ…. என்ன மாதிரி பொண்ணு இவ…. இவளை காசு கொடுத்து வாங்கினதும் இல்லாம கோவில் மாதிரி இருக்க நம்ம வீட்டுக்குள்ள இவளை கூட்டிட்டு வந்திருக்க…” என்று இலக்கியாவை ஒரு புழுவைப் போல பார்த்தார் குமரன். அவர் பார்வையின் தாக்கத்தைத் தாங்க முடியாத இலக்கியா தன் தலையைத் தாழ்த்திக் கொள்ள… அதே இப்படி தலை குனிந்து தரையில் விழுந்து கிடப்பதைப் பார்த்த தமிழுக்குத் தன் தாத்தாவின் மேல் தான் கோபம் அதிகமானது. அவர் இலக்கியாவைக் கீழே தள்ளியதில் கோபமான தமிழ். இலக்கியாவைப் பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தவர் முன்பு வந்தவன், இலக்கியாவை மறைத்தவாறு நின்ற தமிழ்.
“இப்போ உங்களுக்கு என்ன வேணும்? இங்கே எதுக்கு வந்தீங்க?” என்றான் அவரிடம் கோபமாக. தமிழைக் கோபமாக முறைத்த குமரன், இலக்கியாவைக் காட்டி “இவளை எதுக்காக நீ காசு கொடுத்து விலைக்கு வாங்குன?” என்றார். “எனக்குப் பிடிச்சிருக்கு நான் வாங்கிட்டு வந்தேன்” என்றான் தமிழ். அவன் அப்படி சொன்னதும் அவன் தந்தை குருசாமி, தமிழின் முன்பு வந்து “தமிழ், நீ என்ன பேசுறேன்னு யோசிச்சுதான் பேசுறியா?” “இதுவரைக்கும் எந்த பொண்ணு கூடயும் பேசாதவன், எந்த பெண்ணுடனும் பழகாதவன் இப்படி ஏலத்துல காசு கொடுத்து ஒரு பொண்ணு வாங்கிட்டு வந்து அந்த பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்ற? இது உனக்கு நியாயமா இருக்கா?” என்றவர். “நீ யாரையாவது காதலிச்சு அந்தப் பெண்ணை பிடிச்சிருக்குன்னு எங்க முன்னாடி கொண்டுவந்து நிறுத்தி இருந்தால், நாங்க எல்லாருமே சந்தோசமா உனக்குப் பிடிச்ச அந்தப் புள்ளையை கல்யாணம் பண்ணி வச்சிருவோம்.” “ஆனா இவ வந்த இடம் சரியில்லை. எப்படிப்பட்ட பொண்ணு? எத்தனை பேர் கூட பழகி இருக்கிறாளோ யாருக்குத் தெரியும்? இந்த மாதிரி இடத்துல வர்ற பொண்ணுங்க எல்லாம் காசுக்காகத்தான் வருவாங்க. அவளுக்கு எவ்வளவு காசு வேணுமோ உன் முகத்தில் தூக்கி வீசி அவளை இந்த வீட்டை விட்டு துரத்தி விடு” என்றார் குருசாமி. “இது எல்லாம் நம்ம குடும்பத்துல நடைமுறையே கிடையாது. நீ நம்ம குடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டு வந்து சேர்த்து இருக்க. உன்னை நம்பி இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தையும் உன்கிட்ட நான் ஒப்படைச்சிருக்கேன். அப்படி இருக்கும்போது நீ எப்படி இந்த மாதிரி ஒரு காரியத்தைச் செஞ்சுட்டு வந்த?” என்று கேட்டார்.
“முதல்ல நீங்க ஒண்ணு புரிஞ்சுக்கோங்க, தொழில் வேற… என்னோட பர்சனல் விஷயம் வேற… இரண்டையும் இணைத்துப் பேசாதீங்க” என்றான். “என்னடா… வேற வேற? நீ பண்ணியிருக்கிற விஷயம் நம்ம குடும்பத்தோட சம்பந்தப்பட்டது.” “நம்ம குடும்பம் எப்படிப்பட்டது, நம்ம தொழிலை பத்தி சொன்னாலே எல்லாருக்கும் நல்லா தெரியும். அப்படி இருக்க… நம்ம குடும்பத்துக்குள்ள இந்த மாதிரி ஒரு தரம் இல்லாத இடத்துல இருந்து வந்தவளை கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்த போறியா? இவ யாரோ என்னவோ? இவ பொறுப்பு எப்படியோ? இவளோட நடத்தை எப்படியோ? இது எல்லாம் எதுவும் தெரியாமலேயே நீ எப்படி இவ கூட குடும்பம் நடத்த போற?” என்று கேட்டார்.
தன்னை இப்படி கேவலமாக பேசும் குமரனைப் பார்த்த இலக்கியா மனம் வருந்தி கண்களில் கண்ணீரோடு தரையில் விழுந்து கிடந்தவள், தன்னை தேற்றிக்கொண்டு எழுந்து குமரனின் முன்னால் வந்து நின்றவள். “நீங்க சொன்னது எல்லாமே சரிதான், நான் தரம் கெட்ட ஒரு இடத்திலிருந்து தான் வந்திருக்கேன். அதுக்காக நான் தரம் கெட்டப் பொண்ணு கிடையாது.” “என் குடும்பம் உங்களை மாதிரி பணக்கார குடும்பம் கிடையாது, ஆனால் மானத்துல உங்களை விட அதிகம் உயர்ந்தவங்களா இருக்கோம்.” “என் அம்மாவோ அப்பாவும் முறையான குடும்பத்தில் இருந்து வந்தவங்கதான். என்கிட்ட காசு பணம் இல்லையே தவிர, என்னம்மா என்ன கௌரவத்தோடுதான் வளர்த்திருக்காங்க.” “போதாத காலம் கொடைக்கானல்ல இருந்த நாங்கள் என்னோட மாமாவோட வார்த்தையை நம்பி குடும்பத்தோடு போய் அங்கே கஷ்டப்பட்டு இருந்தோம்.” “இல்லைன்னா நாங்க இந்த நேரத்துக்கு சந்தோசமான அழகான குடும்பமா இருந்திருப்போம்.” “என்னோட போதாத காலம், என் மாமா காசுக்காக ஆசைப்பட்டு என்னை வலுக்கட்டாயமா கொண்டு வந்து இந்த ஏலத்துல வித்துட்டாரு.” “என் அம்மாவை கொன்னுடுவேன்னு மிரட்டியதால் தான் இந்த ஏலத்துல கலந்துக்கவே நான் சம்மதித்தேன்.”
“என்னால இப்ப கூட இவரை விட்டு போக முடியும். ஏலத்துல ஒரு பொண்ணை விலைக்கு வாங்குனது சட்டப்படி குற்றம். அப்படி குற்றம் செஞ்ச இவரை போலீஸ்ல பிடிச்சு கொடுக்க எனக்கு வெகு நேரம் ஆகாது.” “ஆனால் நான் ஏன் அதை எல்லாம் செய்யல..?” என்றவள், தமிழைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு. “ஏலத்தில் ஒரு பெண்ணை விலை கொடுத்து வாங்குபவர்கள் எதற்காக அந்தப் பெண்ணை விலைக்கு வாங்குவாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.” “அவர் என்னை விலைக்கு கொடுத்து வாங்கினவர், நான் அவரோட அடிமை. அவரே என்னை இந்த வீட்டை விட்டு போகச் சொன்னால் மட்டும் தான் நான் இங்கே இருந்து போக முடியும்.” “உங்க குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லாம என்னை இவர் தான் விலைக்கு வாங்கி இங்கே கூட்டிட்டு வந்திருக்காரு.” “என்னை பற்றியோ என் நடத்தையை பற்றியோ பேச இங்க இருக்கிற யாருக்குமே உரிமை கிடையாது. அவ்வளவு ஏன் இதோ இங்கே நிற்கிறாரே, என்னை காசு கொடுத்து வாங்கினவர், அவருக்கும் அந்த உரிமை கிடையாது.” “நான் இப்போ அவருக்கு உரிமையானவள். என்னை விலைக்கு வாங்கியவருக்கு நான் நியாயமா நடந்துக்கணும். அவர் சொல்றதை செய்வதற்குத்தான் நான் இங்கே இருக்கேன்.” “என்னை காசு கொடுத்து விலைக்கு வாங்கிட்டாரு என்பதற்காக என்னுடைய பிறப்பையும், என் குடும்பத்தையும், என் நடத்தையையும் கேவலமா இவர் மட்டும் இல்ல, இங்கே உள்ளவங்க யார் பேசினாலும் கேட்டுகிட்டு சும்மா இருக்க வேண்டும் என்று எனக்கு எந்த அவசியமும் கிடையாது” என்று குமரனை எரிப்பது போல பார்த்த இலக்கியா.
“உங்களை விட நான் வயசுல ரொம்ப ரொம்ப சின்னவள். எனக்கு 17 வயசுதான் ஆகுது. என்னை உங்க பேத்தியா… இல்லை ஒரு பெண்ணா மதிச்சிருந்தால் கூட, நீங்க இப்படி என்னையும், என் குடும்பத்தையும் பற்றி எதுவும் தெரியாமலேயே எங்களை அவமான படுத்தி பேசி இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அவர் முன்பு கண்ணீரோடு வலிக்கும் பார்வையில் அவரைப் பார்த்தவள். தமிழையும் தன்னைச் சுற்றி இருந்தவர்களையும் பார்த்தவள் “நான் உங்க கிட்டே எதுவும் மரியாதை குறைவா நடந்து இருந்தால் என்னை மன்னிச்சிருங்க” என்றவள். அழுத படியே அவர்களை எல்லாம் தாண்டி வெளியே சென்றாள் இலக்கியா. வீட்டை விட்டு வெளியே வந்தவள், வானத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றவள். தன்னை இப்படி தரை குறைவாக பேசியது எல்லாம் கேட்டுவிட்டு, தான் இன்னும் உயிரோடு இந்த உலகத்தில் நடமாடி கொண்டிருக்கிறேன் என்று தன்னை நொந்து கொண்டவள். தனக்காக அறிந்து பேச இங்கே யாருமே இல்லை. என்னை விலை கொடுத்து வாங்கி வந்தவனுக்கு கூட என் மேல் துளியும் அக்கறை இல்லாத போது… மற்றவர்கள் எப்படி என்னிடம் இரக்கப்பட்டு நடந்து கொள்வார்கள். அவனே எனக்காக பரிந்து பேசாத போது மற்றவர்கள் எல்லாம் எப்படி இருப்பார்கள். அவர்களும் என்னை இப்படித்தான் கேவலமாக பேசுவார்கள். இன்னும் எத்தனை பேச்சுக்களை எல்லாம் தான் கேட்க வேண்டி இருக்கும். இன்னும் எத்தனை கஷ்டமெல்லாம் அனுபவிக்க வேண்டி இருக்கும் என்று தன்னையே நொந்து கொண்டவள் கால் போன போக்கில் சென்றாள்.
