Home Uncategorizedஅயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் 2-7

அயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் 2-7

by Layas Tamil Novel
388 views

EPISODE 7

இரவு எப்படி உறங்கினானோ அதே நிலையில் கண்விழித்து, விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான் ராக்கி. காலையில் எழும்போதே அவன் மனம் லேசாக இருப்பது போல உணர்ந்தான். ஒரு முடிவோடு எழுந்தவன், குளிக்கச் செல்லலாம் என்று வாட்ரோப்பைத் திறந்து துண்டை எடுத்துக்கொண்டு சென்றான்.

குளித்து முடித்து வெளியே வந்தவன், உடை அணிந்துகொள்ள அங்கிருந்த சூட்கேஸை எடுத்து மெத்தை மேல் வைத்தான். அதைத் திறந்தவனுக்கு புருவம் சுருங்கியது. அவன் வீட்டு டி.வி-யின் முன் பிரிக்கப்படாமல் இருந்த ரதி கொடுத்த கிஃப்ட் பாக்ஸ், இப்போது அவன் சூட்கேஸில் இருந்தது. ‘பேக் செய்யும்போது இந்த பெட்டியை எடுத்து வைக்கவில்லையே’ என்று யோசித்தவனுக்கு, அப்போதுதான் மாரீஸும் ஓவியாவும் தங்களுக்குள் ரகசியம் பேசிக்கொண்டது நினைவுக்கு வந்தது. ‘இது அவர்கள் வேலையாகத்தான் இருக்கும்’ என்று நினைத்தவன், அந்தப் பரிசைத் தூக்கி அருகில் போட்டுவிட்டு உடை எடுக்கப் போனான். ஆனால், அவன் மனம் அந்தப் பரிசுப் பெட்டியின் மீது நின்றிருந்தது. கையில் வைத்த உடையை மெத்தையில் வைத்துவிட்டு, அந்தப் பரிசை எடுத்தான்.

“உண்மையாவே நீ என்னை மிஸ் பண்ணினால், கண்டிப்பா இந்த பெட்டியைத் திறந்து பார்” என்று ரதி சொன்ன வார்த்தைகள் நினைவில் வர, யோசனையோடு நின்றவன் கட்டிலில் அமர்ந்தபடி வேக வேகமாக அந்தப் பரிசைப் பிரிக்க ஆரம்பித்தான். அதனுள், வளையல்களை வைக்கும் ஒரு நகைப்பெட்டி இருந்தது. அதைத் திறந்து பார்க்க, அதற்குள் மூன்று தங்கக் காப்புகள் இருந்தன.

அவனுக்கு முதலில் விளங்கவில்லை. மூன்றையும் ஒன்றாக எடுத்துப் பார்த்ததும் அவன் முகம் பிரகாசமானது. ஒன்று ராக்கியின் அளவிலும், மற்றொன்று ரதியின் அளவிலும் இருந்தன. அடுத்ததாக இருந்த காப்புதான் அவன் முகத்தில் பிரகாசத்தைக் கொண்டு வந்தது. அது குழந்தைகள் அணியும் சிறிய காப்பாக இருக்க, ரதி தந்த பரிசைப் பார்த்தவனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும் போலிருந்தது. தன்னுடைய உயிர், ரதியின் வயிற்றில் வளர்கிறது என்று தெரிந்ததும் அவனுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.

“அப்பவே இந்தப் பரிசைத் திறந்து பார்த்திருந்தால், இந்த நேரம் எனக்கும் அவளுக்கும் இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்காதே! நான் ஒரு சரியான முட்டாள்” என்று தன்மீது கோபப்பட்ட ராக்கி, ரதியை உடனே காண வேண்டும் என்ற உந்துதலை அடக்க முடியாமல், அரைக்கதவைத் திறந்து கொண்டு நேராக கமலின் அறைக்குச் சென்றான்.

படபடவென நிற்காமல் கதவைத் தட்ட, அப்போது குளித்து தயாராக இருந்த ரதியும் கமலையும் ஒருவரை ஒருவர் கேள்வியாகப் பார்த்தனர். “இரு, நான் போய் கதவைத் திறக்கிறேன்” என்று கமலி வந்து கதவைத் திறந்தாள். மலர்ந்த முகத்தோடு நின்றிருந்த ராக்கியைப் பார்த்த அவளுக்கு கோபம் தான் வந்தது.

இரவு முழுவதும் ரதி அழுது கொண்டே இருந்ததால், அவள் தூங்கவே இல்லை. கமலி எவ்வளவு சமாதானம் செய்தும் ரதியை அவளால் சமாளிக்க முடியவில்லை. அந்த கோபம்தான் கமலிக்கு. ‘இரவு அவளை அப்படிப் பேசிவிட்டு, இப்படி இப்போது பல்லைக் காட்டிக்கொண்டு பார்க்கிறானே’ என்று அவளுக்கே கோபம் வந்தது. அதுவும் இல்லாமல், அவன் குளித்து முடித்த கையோடு, இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு அப்படியே வந்திருந்தான். உடை மாற்ற மறந்தவனாக.

அவனை அப்படிப் பார்க்க கூச்சப்பட்டபடியே வேறு பக்கம் திரும்பிக்கொண்டவள், “உங்களுக்கு இங்கு என்ன சார் வேலை? அதான் என் ஃபிரெண்டை எவ்வளவு காயப்படுத்தணுமோ காயப்படுத்தி அனுப்பிட்டீங்களே! இன்னும் அவளை என்னவெல்லாம் பேசி கஷ்டப்படுத்தணும்னு வந்திருக்கீங்க? அதுவும் இப்படியே வருவீங்க?” என்று கேட்டாள். அப்போதுதான் தன் உடலைக் குனிந்து பார்த்தான் ராக்கி. விரிந்த மார்புடன், இடையில் துண்டு கட்டி நின்றவன், “அவசரத்துல டிரஸ் போடக்கூட மறந்துட்டேன்” என்று நினைத்தான்.

“நீ வழியை மறிச்சு நிக்காதே, முதல்ல நகரு” என்று அவள் கையைப் பிடித்து அறைக்கு வெளியே இழுத்துவிட்டவன், உள்ளே வந்து கதவை அடைத்துக் கொண்டான்.

“என்னடா இது அநியாயமா இருக்கு! என்னை வெளியே தள்ளி, இவர் உள்ளே போய் கதவை சாத்திட்டாரு” என்று கமலி திகைத்து நின்றாள்.

வெளியே ராக்கியின் குரல் கேட்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டபடி நின்றிருந்த ரதி, தடாலடியாக அவன் அறைக்கதவை சாத்திவிட்டு உள்ளே வருவதைப் பார்த்தாள். அவன் வந்த கோலத்தையும் பார்த்தவள், அவனை கண்டும் காணாமல் லேப்டாப்பை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.

“நீ கர்ப்பமா இருக்கேன்னு ஏன்டி என்கிட்ட முதல்லயே சொல்லல? சொல்லியிருந்தா நமக்குள்ள இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்குமா?” என்று அவள் அருகில் வந்து நின்றான்.

அவன் பேசியதில் இருந்தே, ரதி கொடுத்த பரிசைப் பிரித்துப் பார்த்துவிட்டான் என்று அவளுக்கு விளங்கியது. இருந்தும் பதில் பேசாமல், மற்ற பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.

“என்னடி நான் பேசிக்கிட்டே இருக்கேன், நீ என்ன பண்ணிட்டு இருக்க? அதெல்லாம் அப்புறம் எடுத்து வைக்கலாம்” என்று அவள் கையில் இருந்து பொருட்களைப் பிடுங்கி கட்டிலில் போட்டவன், அவள் முகத்தைப் பிடித்து தன் பக்கம் திருப்பி தன்னை பார்க்க வைத்தான். “நான் இன்னைக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? இதை ஏன் இத்தனை நாளா நீ என்கிட்ட சொல்லாம மறைச்ச?” என்று அவள் கண்களைப் பார்த்துப் பேசினான்.

அவள் கர்ப்பமான விஷயத்தை முதல் முதலில் ராக்கிக்குச் சொல்லி, அவன் முகத்தில் விழும் சந்தோஷத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்றுதானே இந்த நாளுக்காகக் காத்திருந்தாள்? ஆனால், இப்படியா இந்த நாள் வரவேண்டும் என்று அவள் மனம் வருந்தியது. கண்கள் இரண்டும் குளமாக அவனைப் பார்த்தவள், “உன் குழந்தை என் வயித்துல வளருதுன்னு தெரிஞ்சதும், என் மேல இருக்கிற வெறுப்பு, கோபம் எல்லாம் உனக்கு போயிடுச்சா? இப்பவும் நீ உன் குழந்தைக்காகத்தான் என்னை தேடி வந்திருக்க, அப்படித்தானே ராக்கி?” என்றாள்.

“ஏய்! என்னடி இப்படிப் பேசுற? ‘உன் குழந்தை’, ‘என் குழந்தை’ன்னு பிரிச்சுப் பேசுற? அது ‘நம்ம’ குழந்தைடி” என்றான் சந்தோஷமாக.

“நேத்து என்ன அவ்வளவு பேசின? அப்போ இதெல்லாம் தோணலையா? ‘நீயும் நானும் ஒண்ணு’ன்னு அப்போ உனக்கு தோணலையா? என்னை எவ்வளவு கேவலப்படுத்தின? அப்போ தோணாதது இப்போ அந்தக் குழந்தை பற்றி தெரிஞ்சதும் திடீர்னு மனசு மாற உன்னால எப்படி முடிஞ்சது ராக்கி?” என்றாள்.

“ஐயோ ரதி! நான் பேசினதெல்லாம் தப்புடி. என்னை மன்னிச்சிடு. நான் ஏதோ கோவத்துல, ‘நீ என்கிட்ட இப்படி சொல்லாம செஞ்சிட்டேன்’ங்கிற ஆத்திரத்துல அப்படிப் பேசிட்டேன். தயவு செய்து என்னை மன்னிச்சிடுடி. என்னை கொஞ்சமாவது புரிஞ்சுக்கோ. என் மேல தப்புதான். நான் இல்லைன்னு சொல்லல. எனக்கு எல்லாமே புரிஞ்சிடுச்சு. வேணும்னா என்னை ரெண்டு அடி கூட அடிச்சுக்கோ. இப்படிப் பேசாதடி” என்றான் வருத்தமாக.

“நான் ஏன் உங்க மேல கோபப்படணும்? நான் ஏன் உங்களை அடிக்கணும்? உங்களுக்கும் எனக்கும் என்ன உறவு இருக்கு? அதான் நேத்தே எல்லாம் முடிஞ்சிடுச்சு. தயவு செய்து என்னை விடுங்க, இங்கிருந்து முதலில் போங்க” என்றாள்.

“நீ கோபமா இருக்கிறது எனக்குப் புரியுதுடி. தயவு செய்து இப்படி ‘வாங்க’, ‘போங்க’ன்னு யாரும் மூன்றாவது மனுஷன் மாதிரி என்கிட்டப் பேசாதே. என்னால நீ இப்படிப் பேசுறதை தாங்கிக்க முடியல” என்றான்.

“எனக்கும் நீங்க என்னை ஒதுக்கி வெச்சப்போ இப்படித்தான் வலிச்சுது, மிஸ்டர் ராக்கி. நேத்து நீங்க என்னை எவ்வளவு தூரம் கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்திட்டீங்க. இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவுசெய்து இந்தக் குழந்தையை காரணம் காட்டி என் கூட ஒண்ணு சேரனும்னு நினைக்காதீங்க. அது கனவுலயும் நடக்காது” என்று தன் முகத்தைப் பிடித்திருந்த அவன் கையை விலக்கியவள், லேப்டாப் பையையும் ஹேண்ட் பேக்கையும் எடுத்துக்கொண்டு அறைக்கதவைத் திறந்து வெளியே வந்தாள்.

அவர்கள் தங்கியிருந்த சுற்றுவட்டாரப் பகுதியில் சிவராத்திரியின் பிரச்சாரத்திற்குச் செல்வதற்காக, அவரவர் அறையிலிருந்து அனைவரும் தயாராகி வெளியே வந்திருந்தனர். ரதியின் அருகில் கமலி நின்றிருப்பதைக் கண்டதும் ராஜு அவளிடம் பேச வந்தான். ஆனால், அறைக்கதவைத் திறந்து கொண்டு ரதி கோபமாக வெளியே வருவதும், அவள் பின்னால் கெஞ்சிக்கொண்டு ராக்கி வருவதையும் பார்த்தவன், “என்னடா நடக்குது இங்க?” என்பது போல நின்றிருந்தான்.

கமலியிடம், “என்ன ஆச்சு ரதிக்கு? நைட்டு உன் ரூம்லதான் இருந்தாளா?” என்றவன், ராக்கியைப் பார்த்து, “இவர் என்ன இப்படிப் போறாரு?” என்று கேட்டான்.

“நேத்து போன கையோடயே அவங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ சண்டை வந்துருச்சு போல. ரதி திரும்பி ரூமுக்கு வந்துட்டா. இப்ப என்ன நடக்குது, எதுவுமே எனக்கு விளங்கல” என்ற கமலி, உள்ளே சென்று தன் பொருட்களையும் எடுத்துக்கொண்டு கதவை பூட்டிவிட்டு வெளியே வந்தாள்.

“ரதி! நான் பேசினது தப்புதாண்டி. என்னை மன்னிச்சிடு. தயவுசெய்து, ‘நான் வேண்டாம்’ என்று மட்டும் சொல்லாதே. உன்னை இத்தனை நாள் ‘வேண்டாம்’னு நான் சொன்னப்போ, உனக்கு எவ்வளவு வலிச்சிருக்குன்னு இப்பதான் எனக்குப் புரியுது. என்னை மன்னிச்சிடுடி” என்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு அவளைச் செல்லவிடாமல் நிறுத்தி ராக்கி கெஞ்சினான்.

அவனிடமிருந்து தன் கையை விடுவித்தவள், “போதும். இனிமேலும் நான் நீ சொல்ற எதையும் கேட்கிறதா இல்லை. நேத்து நீ பேசினதே போதும். உன்னை நான் வெறுத்து ஒதுக்கிட்டேன். இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீ யாரோ, நான் யாரோ. நான் இங்க என் வேலைக்காக வந்திருக்கேன். நீங்களும் போய் தயவுசெய்து உங்க வேலையைப் பாருங்க” என்றாள். திரும்பி தன் குழுவைப் பார்த்தவள், “என்ன எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க? இப்ப வரப்போறீங்களா இல்லையா?” என்றாள்.

முகுந்த், சந்தோஷ், ராஜு என அவள் குரலில் வேகமாக ஓடிவர, கமலையும் வந்தாள். “பாரதி” என்றாள். ரதி தலையாட்டிவிட்டு அவள் முன்னே செல்ல, மற்றவர்களும் அவளோடு சென்றனர். ராக்கி செய்வதறியாமல் ரதியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

சிவராஜனின் அறைக்குள் இருந்து வெளியே வந்த செல்வி, “நீ பேசின பேச்சுக்கு அவ லேசா சமாதானம் ஆக மாட்டா. வேற வழியே இல்லை. அவள் கண்ணில் சாகுற வரைக்கும் அவ காலில் நீ விழுந்துதான் ஆகணும்” என்றவர், தன் கோபம் மறந்து ராக்கியின் முகத்தை வருடி கொடுத்தார். “போடா! இப்படியே நிக்காதே. போய் டிரஸ் மாத்திட்டு வா. பிரச்சாரத்துக்கு நேரம் ஆச்சு. ஐயா ரெடி ஆகிட்டாரு. கிளம்பலாம்” என்றார்.

ராக்கியும், “என்ன நடந்தாலும் சரி, ரதியை ஒரு நிமிடம் கூடப் பிரியக் கூடாது. அவளை எப்படியாவது பேசி சமாதானம் செய்ய வேண்டும்” என்ற முடிவோடு கிளம்பி சிவராஜனோடு பிரச்சாரத்திற்குச் சென்றான்.

ரதியை எப்படி சமாதானம் செய்தான்னு யோசிக்குறீங்களா? அதை அடுத்த எபிசோடில் சொல்றேன். part-1 ல முடியாம விட்டதை தொடர்ந்து  பாக்கலாம்.

ரதிக்கும், ராக்கிக்கும் சமாதானம் எப்படி ஆச்சு?

நம்ம ராகவ் கல்யாண மேடை வரை வந்ததுக்கான காரணம் என்ன?

முதலமைச்சருக்கு எப்படி உடம்பு சரி இல்லாம போய்டுச்சு. அவர் பிரச்சாரத்தை கெடுக்க தீர்த்தம் போட்ட பரமசிவம், உதயமூர்த்தி போட்ட பிளானை எப்படி ?

யாரை வெச்சு எக்ஸிகியூட் பண்ணினாங்க எல்லாமே அடுத்தடுத்து பார்க்கலாம்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured