EPISODE 9
நம்ம ராக்கியா இது என்பது போல ஓவியா ஒரு பக்கம் , மாரிஸ் மறுபக்கமும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர் .
“இப்ப எதுக்கு வந்ததிலிருந்து ரெண்டு பேரும் என்னையே பாத்துட்டு இருக்கீங்க . என் கூட வந்துட்டு நீங்களே என்னை ரவுடின்னு என்னை காட்டிக் கொடுத்துவிடுவீங்க போல இருக்கு ” என்று இருவரின் காதையும் கடித்தான் ராக்கி .
“பின்னே.. எப்பவும் கெத்தா கருப்பு சட்டை போட்டுட்டு கழுத்துல சங்கிலி எல்லாம் மாட்டி திமிரா வர்ற எங்க ராக்கியா இதுன்னு எங்க ரெண்டு பேருக்குமே சந்தேகமா இருக்கே…” என்றான் மாரீஸ் .
“ஏன் டா.. ஒருத்தவங்கள பாக்க போறோம். அதனால கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டுமேன்னு வெள்ளை சட்டை போட்டேன் அது ஒரு குத்தமா ” என்றான் ராக்கி.
“நான் உன்கிட்டே எவ்ளோ சட்டை எடுத்துது வந்து கொடுத்து இதை போடுண்ணா உனக்கு சூப்பரா இருக்கும்னு சொன்னேன். அப்போ எல்லாம் வேணாம் சாக்கோ.. இதெல்லாம் போட்டா என் தொழிலுக்கு செட் ஆகாது.. எனக்கும் செட் ஆகாதுன்னு டயலாக் அடிப்ப.. ஆனா இப்போ என்னடான்னா உங்க CM போடற மாதிரி வெள்ளை சட்டை போட்டு டிப் டப்பா ரொம்ப நீட்டா பொண்ணு பக்க போறவன் மாதிரி வந்திருக்கியே.. ” என்றாள் ஓவியா.
“ஆமா பொண்ணு பாக்க தானே வந்திருக்கோம் ஓவிம்மா.. நீ வேற அண்ணியை பார்க்க போறேன் அண்ணியை பார்க்க போறேன்னு நேத்துல இருந்து பினாத்திட்டு இருக்க.. ” என்றான் மாரீஸ்.
“டேய் கொஞ்ச நேரம் சும்மா இருக்க முடியாதா உன்னாலா .. ஓவியாவுக்காக தான் நான் உன்னை என் கூட கூட்டிட்டு வந்தேன். இல்லேன்னா உன்னை வீட்லையே விட்டுட்டு வந்திருப்பேன் ” என்று மாரீஷை அதட்டினான் ராக்கி .
“என்ன ராக்கி நீ இப்படி காரியம் முடிஞ்சதும் என்னை கழட்டி விட பாக்குறியே… நான் தானே என் சிஸ்டர் வீட்டை உனக்கு கஷ்டப்பட்டு தேடிக் கண்டு பிடிச்சு சொன்னேன் . என்னை பார்த்து இப்படி பேசிட்டியே… ” என்று மாரீஸ் வருந்துவது போல நடித்தான்.
“போதும் டா… ரொம்ப நடிக்காத ஏற்கனவே அந்த பொண்ணு அட்ட்ரஸ் வேணும்னு நான் கேட்டு வாங்கி வெச்சிருக்கேன். அதை வெச்சு GOOGLE MAP போட்டு இந்த அட்ட்ரெஸ்ஸை இப்போ இருக்க பச்சை புள்ளை கூடட கண்டு பிடிச்சிருக்கும். நீ ரொம்ப சீன போடாத” என்றான் ராக்கி .
“கரெக்ட்தான் நீ சொல்றதும் வாஸ்தவம் தான். ஆனா இப்போ எல்லாம் GOOGLE MAP போட்டுட்டு போய் வழி தெரியாம நிறைய பேர் காட்டுக்குள்ள.. மரத்துக்குள்ள பொய் எல்லாம் சொருகிட்டு இருகாங்க தெரியுமா.. நான் எவ்ளோ அலைஞ்சு திரிஞ்சு உனக்கு அட்ரெஸ்ஸை கண்டு பிடிச்சு சொன்னா.. என்னை இப்படி டேமேஜ் பண்றியே.. நீ.. இனிமேல் இங்க இருந்தா எனக்கு செட் ஆவாது . நீங்க ரெண்டு பெரும் அண்ணனும் , தங்கச்சியா பொண்ணை பார்த்துட்டு வாங்க நான் போறேன் ” என்று அவர்கள் சாப்பிடுவதற்காக வைத்திருந்த பஜ்ஜியை எடுத்து வாயில் போட்ட படி எழுந்து வெளியே சென்றான்.
“டேய்.. டேய்.. நில்லு டா.. .யார் இப்போ பொண்ணு பார்க்க வந்தா விட்டா ரெண்டு பேரும் சேர்ந்து என்னக்கு கல்யாணமே பண்ணி வெச்சிருவீங்க போல இருக்கு…” என்று ராக்கி பேச…
அவன் அருகில் அமர்ந்து இருந்த ராக்கியை தோளை தாட்டி அழைத்த ஓவியா.. “இப்போ இவங்க வந்து அண்ணியை நீ கல்யாணம் செய்துகிரியான்னு கேட்டா நீ வேணம்னா சொல்லுவ ..” என்றாள் நக்கலாக.
“அதெப்படி அவங்களே வந்து கேக்கும்போது நான் வேணாம்னு சொல்லுவேனா… ” என்று கெத்தாக பேசினான் ராக்கி .
“பார்ப்போம் என்ன அவன்கிட்டே சண்டை அதான் பஜ்ஜி காலியானதும் மாரீஸ் போய்ட்டான் இல்ல .. அண்ணி வர வரைக்கும் நீ பேசாம இரு சரியா ” என்று அவனை அதட்டி அமைதியாக அமர வைத்தாள் ஓவியா.
இவர்கள் மீவரும் தங்களுக்குள் ரகசியம் பேசுவதை சமையல் அறையில் இருந்து பார்த்து கொண்ட்னு இருந்த சோபனா.. “வந்திருக்குற ஆளுங்க யாருன்னே தெரியல.. இவங்களை நான் முன்ன பின்ன எங்கையும் பார்த்ததும் இல்ல… ஆனா நம்ம ரதியை பார்த்துட்டு தான் போவேன்னு ஹால்ல பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் சாப்டு உக்கார்ந்திருக்காங்க ” என்று போனில் மூர்த்தியிடம் சொல்லிக்கொண்டு இருந்தார் சோபனா.
“ரதிகிட்டே முதல்ல போன் பண்ணி சொல்லிட்டியா… அவ வந்துட்டு இருக்காளா.. கேட்டியா ” என்றார் மூர்த்தி.
“சொல்லிட்டேங்க … அவ தான் ரயில்வே ஸ்டேஷன் போயிருக்காளே.. போன வேலை முடிஞ்சதும் வந்துடறேன் . யாரா இருந்தாலும் அவங்களை நல்ல படியா கவனிச்சுக்கோன்னு உங்க மக வேற போன்ல எனக்கு ஆர்டர் போடுறா..” என்று சோபனா பேசிக்கொண்டு இருக்க…
“ஆன்டி!! ” என்று பின்னால் இருந்து ஓவியா குரல் கேட்கவும் சட்டென்று போனை அனைத்துவிட்டு திரும்பியவர்.
“அஹ் !! என்ன.. என்னம்மா… சொல்லு ” என்றார்.
“ஆன்டி கொஞ்சம் தண்ணி கிடைக்குமா… ” என்றாள் .
“உள்ள வாம்மா.. ” என்று அவளுக்கு தண்ணீர் எடுத்துக்கொண்டே ஓவியாவை சமையல் கட்டிற்குள் அழைத்தார்.
“என்ன ஆன்டி சமைச்சிட்டு இருக்கீங்களா.. நாங்க வந்து உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டோமா… ” என்று கிச்சனை நோட்டம் விட்டபடி தண்ணீரை வாங்கி குடித்தாள் ஓவியா.
“ஆமா ம்மா.. எல்லாரும் சாப்பிட வர நேரம் ஆச்சு அதான் ” என்றார் அவர்.
“சரிங்க ஆன்டி .. நீங்க வாங்கி வெச்சிருக்க ஐட்டம் எல்லாம் பார்த்தா இன்னிக்கு ஒரு விருந்தே ரெடி பண்ணுவீங்க போல இருக்கு.. ” என்று அடுப்பு பக்கத்தில் வந்தவள் அங்கே பொரித்து வைத்து இருந்த மீன் துண்டை பிட்டு வாயில் போட்டவள் .
“ப்பா… ஆன்டி செம்மையா இருக்கு.. எப்படி இவ்ளோ டேஸ்ட்டா செயிரிங்க.. நான் எப்படி சமைச்சாலும் இந்த மாதிரி ருசியா எனக்கு வர மாட்டேங்குது.. ” என்றாள் ஓவியா .
“நான் மசாலா எல்லாம் கடையில் வாங்குறதே இல்ல ம்மா.. எல்லாமே வீட்ல வறுத்து அரைக்கிறுது தான்.. அதனால தான் இவ்ளோ ருசியா இருக்கு.. ” என்றார் சோபனா தன் சமையலை புகழ்ந்த ஓவியாவை சந்தோசமாக பார்த்து .
“உங்க வீட்ல இருக்கிறவங்க எல்லாம் ரொம்ப லக்கி ஆன்டி.. டெய்லி இப்டி ருசியா சமைச்சு தருவிங்க தானே அவங்களுக்கு ” என்றாள் ஏக்கமாக.
“ஆமாம்மா .. அதானே என் வேலையே.. ஏன் நீயும் உன் அம்மாகிட்டே சொல்லி இந்த மாதிரி ருசியா செய்து குடுக்க சொல்ல வேண்டியது தானே.. ” என்றார் சோபனா .
“அவங்க இருந்திருந்தா சொல்லி இருப்பேனே.. என் அம்மாவும் அ’ப்பாவும் என் அண்னனையும், என்னையும் விட்டுட்டு எப்பவோ போய்ட்டாங்க.. ” என்றாள் .
“எங்கம்மா போய்ட்டாங்க’ என்றார் சோபனா வெள்ளந்தியாக.
“அவங்க ரெண்டு பேரும் நானும் என் அண்ணனும் ரொம்ப சின்ன வயசா இருக்கும்போதே இறந்து போய்ட்டாங்க ஆன்டி ” என்றாள் .
அவள் அப்படி சொன்னதும் வருத்தமான சோபனா “அச்சோ சாரி ம்மா.. எனக்கு தெரியல… “என்று அவளை பார்த்தவர்.
“உங்க அண்ணாவுக்கு தான் எங்க ரதியை நல்லா தெரியுமே.. அவ உங்களை பத்தி ஒரு வார்த்தை கூட என்கிட்டே சொன்னது இல்லம்மா… “என்றார்.
“பரவால்ல விடுங்க ஆன்டி அவங்க இதையெல்லாம் என்னனு வந்து சொல்லுவாங்க ” என்றவள்,
“ஆன்டி தள்ளுங்க நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். என்ன செய்யணும்னு சொல்லுங்க நான் உங்களுக்கு சமைச்சு தரேன் ” என்றாள் .
“உனக்கு சமைக்க தெரியுமா ” என்றார் சோபனா ஆச்சர்யமாக.
“நான் 8 வயசுல இருந்து சமையல் செய்றேன் ஆன்டி. என் அண்ணனுக்கு நான் தான் சமைச்சு போடறேன். இத்தனை வருசத்துல என் அண்ணன் ஒரு முறை கொடாஅ என் சமையலை குறை சொன்னதே இல்லை.. ” என்றவள் அருகில் கழுவி வைத்திருந்த சிக்கனை காட்டி..
“இதுல என்ன செய்ய போறீங்க ஆன்டி..” என்றாள் .
“அவர் மட்டன், சிக்கென் , மீன் எல்லாமே வாங்கி கொடுத்துட்டு ஆபீஸ் போய்ட்டார். நான் எனக்கு தெரிஞ்சதை ஒன்னு ஒண்ணா செய்துட்டு இருக்கேன் ” என்றார் சோபனா.
“தனியாவா இத்தனையும் செயிரிங்க .. ” என்றவள் “அப்போ நான் இதுல பேப்பர் சிக்கென் செய்து தரேன் ஆன்டி . என் அளவுக்கு ரொம்ப பிடிக்கும் நீங்களுக் என் சமையலை டேஸ்ட் பண்ணி பாருங்க… ” என்றவள் சுடிதார் ஷாலை கழட்டி அருகில் போட்டுவிட்டு…
பொருட்களை கேட்டு வாங்கி சமைக்க துவங்கி இருந்தாள் ஓவியா.
சோபனாவும் சீக்கிரத்திலேயே ஓவியாவுடன் நல்லபடியாக பழக ஆரம்பித்துவிட்டார்.
“எனக்கு தண்ணி குடிக்குறேன்னு போன சாக்கி இன்னும் வெளியே வராம இருக்கா ” என்று யோசித்தபடி தனியாக ஹாலில் அமர்ந்திருந்த ராக்கி .மெல்ல எழுந்து அந்த ஹாலில் டிவிக்கு பின்னால் ஃபேமிலி போட்டோ சுவற்றில் மாட்டப்பட்டு இருந்தது.
அது ரதி சிறுவயதில் இருந்தபோது எடுத்த போட்டோ போல என்று நினைத்துக் கொண்டவன் அந்த போட்டோவில் இருந்த குழந்தைகளை உற்றுப் பார்த்து அதில் யார் ரதி என்று பார்த்தான் .
சோபனாவும் மூர்த்தியும் அமர்ந்திருக்க மூர்த்தியின் மடியில் ஒரு கையை ஊன்றி கன்னத்தில் வைத்துக்கொண்டு சிரித்த முகமாக நின்றிருந்த பெண் தான் ரதி என்று போட்டோவை பார்த்ததுமே கண்டுபிடித்து விட்டிருந்தான்.
ரதியின் குட்டி முகத்தை உற்று பார்த்தவன் தன் மொபைலை எடுத்து அவள் சிறுவயது போட்டோவை தன் மொபைலில் படம் பிடித்துக்கொண்டான். ரதியின் மீதிருந்த பார்வையை மெல்ல இடது பக்கம் திருப்ப …
மூர்த்திக்கும் சோபனாவிற்கும் பொதுவாக மடியில் சிறிய குழந்தை அமர்ந்திருந்தது.
“அட!! இது யார் கொலுக்கு மொலுக்குன்னு நம்ம 250 பீடாவை குட்டி பொண்ணா பார்த்த மாதிரியே ஒரு குட்டி பேபி” என்று யோசனையோடு இடது பக்கம் தன் பார்வையை செலுத்தியவன் . அந்த போட்டோவில் இருந்த வித்தியாசத்தை அப்போது தான் உணர்ந்தான்.
சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த அந்த போட்டோவையே உற்று பார்த்துக்கொண்டு இருந்தான் ராக்கி .
அப்போது வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்கவும் ராக்கி திரும்பி வாசலை பார்த்தான்.
மாரிஸ் பயந்த முகத்தோடு முன்னே வர… அவன் பின்னால் ரதியும் அவளோடு ஒரு போலீஸ் ஆஃபீசரும் உள்ளே வந்தனர் . ரதியை பார்த்ததும் முகம் மலர்ந்த ராக்கிக்கு அவள் அருகில் வந்த அந்த போலீஸ் ஆஃபீசரை கண்டதும் முகம் இறுகியது. தானாகவே அவன் கைகள் முறுக்கிக்கொண்டு வர…
“ராக்கி!! நம்ம இந்த புள்ளைய தூக்கினது பெரிய தப்பா போயிடுச்சு. பாரு நம்ம அவ வீட்டுக்கே வந்துட்டோம்னு சொல்லி நம்மள பத்தி போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி கையோடபோலீஸ வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டா.. இப்போ என்ன பண்றது” என்று மாரிஸ் பதற..
“டேய் இப்ப எதுக்கு இப்படி பயப்படுற . அந்த 250 பீடா நம்மளை பத்தி என்ன கம்பளைண்ட் பண்ணினான்னு பாக்கலாம்” என்று மாரீஸை பேசி அமைதிப் படுத்தியவன் . எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அவனை நோக்கி வந்த இருவரையும் தைரியமாக எதிர்கொண்டான் ராக்கி.
