Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 115

உன் ரகசிய ரசிகை நான் 115

by Layas Tamil Novel
204 views

கீர்த்திகா யாரிடமும் சொல்லாமல் தன் பெற்றோரை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு கிளம்பி விட…

துர்கா தான் காணாமல் போன தன் சொந்தம் எனத் தெரிந்த பிறகு அனைவரும் துர்காவைச் சூழ்ந்துகொள்ள.. இவ்வளவு நேரம் மற்றவர்களை கவனித்துக் கொண்டு இருந்த கதிருக்கு கீர்த்திகாவின் நினைவு வர.. அவளைத் தேட.. கீர்த்திகா அந்த அறையில் இல்லாமல் போகவே…

ஆதியிடம் வந்து “அண்ணா கீர்த்திகாவையும் அத்தை மாமாவையும் காணோம்” என்று சொல்ல… கதிர் சொன்ன பிறகு தான் மற்றவர்களும் தாங்கள் இவ்வளவு நேரம் துர்காவை இவ்வளவு நாள் எடுத்து வளர்த்து, பார்த்துக் காப்பற்றிய வடிவையும் மற்றவர்களையும் மறந்து விட்டோமே என்று தங்கள் தவறை தாங்களே உணர்ந்து கொண்டனர்.

ஆதி கனகாவிடம் “பாத்தியா அத்தை? இதற்காகத் தான் நான் கொஞ்ச நாள் கழிச்சு சொல்லலாம் என்று இருந்தேன். இப்போது பார் வடிவு அத்தையும் மற்றவர்களும் சங்கடத்துடன் இங்கிருந்து சென்று விட்டார்கள்” என்று சொன்னான் ஆதி.

“ஆமா ஆதி. நீ சொன்னது சரி தான். வடிவு நிஜமாவே ரொம்ப பாசம்! அவ துர்கா மேல உயிரையே வெச்சிருக்கா. இப்போ துர்காவைப் பற்றிய உண்மை எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சுன்னு அவ ரொம்ப சங்கடப்படுவா இல்லே? வடிவு ஏதோ சொல்ல வந்தப்போ கூட நான் எதுவும் கேட்காம விட்டுட்டோம். முதல்ல வடிவை நேரில் பார்த்து பேசி அவளை சமாதானம் செய்யணும் ஆதி. இத்தனை நாள் நம்ம துர்காவை பத்திரமா பார்த்துக்கிட்டது நம்ம வடிவும் அவங்க வீட்டு ஆளுங்களும் தானே ஆதி? நாம இப்படியே அவங்களை விட்டுடக் கூடாது. அவங்களுக்கு முன் இந்த வீட்டில் என்ன உரிமை இருந்ததோ அதே உரிமை எப்பவும் இருக்கணும்” என்று கனகா சொல்ல…

“நீ சொல்றதும் சரி தான் அத்தை. நான் வடிவு அத்தையைப் பார்த்துட்டு வந்துடறேன். நீங்க துர்கா பக்கத்துல இருந்து அவளை கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க அத்தை” என்று சொல்லி விட்டு ஆதி கிளம்ப, “அண்ணா நானும் வரேன்” என்று கதிரும் கிளம்ப, அவனோடு சேர்த்து விக்கியும் கீர்த்திகாவின் வீட்டிற்கு கிளம்பினர்.

அவர்கள் கிளம்பியதும் கனகாவிடம் வந்த செண்பகமும் விசாலாட்சியும் கனகாவிடம் வந்து, “எங்க கிட்டே கூட நீ துர்கா தான் உன் பொண்ணுன்னு சொல்லலை பாத்தியா” என்று கனகாவிடம் கோபித்துக் கொள்ள..

“ஐயோ ….அண்ணி அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. முழுசா எந்த விஷயமும் தெரியாம உறுதி படுத்தாம யார் கிட்டேயும் சொல்லக் கூடாதுன்னு ஆதி சொல்லியிருந்தான். நானும் சரின்னு சொல்லிட்டேன். என்னை யாரும் தப்பாய் நினைக்க வேண்டாம்” என்று அவர்கள் இருவரின் கை பிடித்து கனகா கூற…

“அவங்க கிட்டே சொல்லலை சரி. ஆனா கட்டின புருஷன் கிட்டே கூட சொல்லணும்னு உனக்கு தோணலையா கனகா?” என்று குரல் தழுதழுக்க துரை அவரிடம் கேட்க..

துரை சாரிகா மீது எவ்வளவு பாசம் வைத்து இருந்தார் என்று மற்றவர்களை விட கனகாவிற்கு நன்றாக தெரியும். அப்படி இருந்தும் அவர் தன்னிடம் சொல்லவில்லை என்று துறைக்கு சிறு வருத்தம் இருந்தது.

அதை தான் இப்போது ஆதங்கத்துடன் கனகாவிடம் இப்போது கேட்டார் துரை.

அவர் அப்படி கேட்டதும் கனகா அவரிடம் வந்து துரையின் கையைப் பிடித்து “என்னை மன்னிச்சிருங்க… நான் வேணும்னு உங்க கிட்ட இருந்து இந்த விஷயத்தை மறைக்கலை. ஒருவேளை துர்கா தான் நம்ம சாரிகாவா இல்லாம போய்ட்டா… வீணா உங்க மனசுல ஆசையை வளர்த்துட்டா அது உங்களுக்கு இன்னும் வலியைக் கொடுக்கும்னு தான் நான் உங்க கிட்டே சொல்லலை” என்று அவர் அழ…

“கனகா அழாதே. நான் உன்னை எதுவும் தப்பாய் நினைக்கலை. எனக்கு தெரியாம போய்டுச்சேன்னு ஒரு ஆதங்கத்துல தான் உன் கிட்டே கேட்டேன்” என்றவர். துர்காவைப் பார்த்து அவளிடம் வந்தவர், “அம்மாடி சாரிகா, உனக்கு இந்த அப்பாவை அடையாளம் தெரியுதா? இவ்வளவு வருஷம் ஆச்சும் நீ என்னையும் உன் அம்மாவையும் மறக்காம அடையாளம் கண்டு பிடிச்சு எங்க ரெண்டுபேரையும் கூப்பிட்டியே” என்று சந்தோஷப்பட்டுக் கொண்டே துர்காவிடம் கேட்டார் துரை.

“நான் எப்படி அப்பா உங்களையும் அம்மாவையும் மறப்பேன்? எனக்கு தான் உங்க ரெண்டுபேரையும் ரொம்ப பிடிக்குமே” என்றால் துர்கா குழந்தை போலவே.

அவள் தங்களை இன்னமும் பிடிக்கும் என்று சொன்னதும் கனகாவிற்கும் துறைக்கும் தங்கள் சந்தோசத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் கண்களில் கண்ணீரோடு நின்று இருக்க…

அவர்கள் அருகில் வந்த வெங்கடாச்சலம், “என்னோட ரெண்டு பசங்களில் யாருக்காவது உன்னோட பொண்ணை கொடுத்து என்கூட சம்மந்தம் வெச்சுக்கணும்னு நினைச்சிருந்தேன்… இப்போ பாரு என்னோட ரெண்டு ஆசைகளுக்கும்மே உன் வீட்டில் இருந்து பொண்ணு எடுத்திருக்கேன் பாத்தியா” என்று துரையிடம் வெங்கடாச்சலம் சொல்ல…

“எனக்கு உங்க சம்மந்தி ஆகணும் அவ்வளவு தான் மாமா.. மற்ற படிக்கு வேற எதுவும் எனக்கு வேண்டியதில்லை. என் பொண்ணு எனக்கு திரும்ப கிடைச்சுட்டா மாமா. இதை விட எனக்கு இப்போ வேற எந்த விஷயமும் பெருசா தோணலை” என்றார் துரை.

அப்போது சரியாக ஷிவு வெளியே போய்விட்டு வீட்டிற்கு வர, வேலை ஆட்கள் அனைவரும் துர்காவைப் பார்க்க போய்விட்டதாக கூற…

துர்கா வந்துவிட்டாள் என்றதும் முதலில் துர்காவை நேரில் பார்த்து தான் இத்தனை நாள் துர்காவை உதாசீனப் படுத்தி பேசியதற்கு துர்காவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்த ஷிவு துர்காவைப் பார்க்க அவள் அறைக்கு வந்தவள், அங்கிருந்த அனைவரும் பேசிக்கொண்டு இருந்ததை கேட்ட ஷிவுவிற்கு காணாமல் போன தன்னுடைய அக்கா சாரிகா துர்கா தான் என்பது தெரிந்ததும் ஒரு புறம் ஷிவுவிற்கு சந்தோசமாக இருந்தாலும் மறுபுறம் தன் சொந்த அக்காவையே நான் பழிவாங்க நினைத்து விட்டேனே என்று தன்னையே நினைத்து வெட்கப்பட்டாள் ஷிவு.

ஷிவுவைப் பார்த்த விசாலாட்சி “அடடே.. நீயும் வந்துட்டியா ஷிவு? இங்கே வா…” என்று அழைத்து துர்காவைக் காட்டி நடந்த விபரங்களை எல்லாம் கூறி “இவ தான் உன்னோட அக்கா சாரிகா” என்று சொல்ல…

“தெரியும் அத்தை. நீங்க பேசியதை எல்லாம் கேட்டுட்டு தான் நான் உள்ளே வந்தேன்” என்றவள் அவள் அப்பாவை பார்க்க… அவர் ஷிவுவை அழைத்துக் கொண்டு போய் துர்காவின் முன்பு நிறுத்தி “நீ உன் அம்மா வயித்துல இருந்த பாப்பா எங்கேன்னு கேட்டியே அந்த பாப்பா தான் இவ” என்று துரை சொல்ல…

“அப்பா பாப்பா என்ன இவ்வளவு பெருசா இருக்கு?” என்றால் துர்கா ஷிவுவை பார்த்து.

“அதுவா… நீயும் இப்போ முன்னே விட பெருசாகிட்டியே? அது போலவே உன் அம்மா வயிற்றில் இருந்த குட்டி பாப்பா இப்போ பெருசாகிடுச்சு” என்றார் துரை.

அவர் அப்படி சொன்னதும் தன்னை ஒரு முறை குனிந்து பார்த்துவிட்டு “ஆமா அப்பா ….அப்போ நானும் இவ மாதிரியே பெரிய பொண்ணா ஆகிட்டேனா?” என்றால் துர்கா ஆச்சர்யமாக.

அவள் சிறுபிள்ளை போல பேசுவதை பார்த்து சிரித்த துரை … “ஆமா நீ இப்போ பெரிய பொண்ணுதான்” என்றார்.

“நீங்க எல்லாரும் சேர்ந்து நான் ஒருத்தி இங்கே இருப்பதையே மறந்துட்டீங்க இல்ல” என்று தான் அமர்ந்து இருந்த வீல் சேரில் இருந்து தடுமாறி எழுந்து அவர்கள் அருகில் வந்த ராதா அனைவரையும் முறைக்க…

“அச்சோ உன்னை அப்படியெல்லாம் விட்டுருவோமா நாங்க” என்ற கனகா ராதாவை தன் அருகில் அழைத்து அவளை துர்காவிடம் காட்டி “இவ தான் உன்னோட இன்னொரு தங்கச்சி துர்கா” என்றார் கனகா.

அவர் சொன்னதை கேட்ட துர்கா “ஹையா… எனக்கு அப்போ ரெண்டு குட்டி தங்கச்சிங்க இருக்காங்க” என்றால் தன் கைகளை தட்டிக்கொண்டு.

அவள் சிறு பிள்ளை போல பேசுவதும் அழகாகவே இருக்க.. அனைவரும் துர்காவுடன் சந்தோசமாக அன்றைய பொழுதை களித்தனர்.

❤️

மது உள்ளே நுழையவும் லிஃப்ட் கதவு மூடவும் சரியாக இருந்தது. அவள் இப்படி அவசரமாக உள்ளே வருவதைப் பார்த்து பவன், “ஏன் மது இவ்வளவு அவசரமா உள்ள வரீங்க…. என்கிட்ட சொல்லி இருந்தா நான் லிஃப்ட் நிறுத்தி வைத்திருப்பேன் இல்ல” என்றான்.

மது பவன் முகத்தைப் பார்த்து “இல்லை பரவாயில்லை. நான் தான் உள்ளே வந்துட்டேனே….” என்று மது சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் முகம் திடீரென்று அதிர்ச்சியில் உறைந்தது. மது எதையோ பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறாள் என்று தெரிந்த பவன் “மது என்ன ஆச்சு? ஏன்? உன் முகம் இப்படி இருக்கு…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

திடீர் என்று மது தன் காதுகளை பொத்திக் கொண்டு “ஆ….” என அலறிய வாறே பவனை பார்க்க…. பவனும் மதுவை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு அப்படியே நின்று இருந்தான்.

மது லிஃப்ட்டிற்குள் நுழைந்ததும் லிஃப்ட் கதவு சாத்திக் கொள்ள… அவள் லிஃப்ட்டிற்குள் வரும்போது மதுவின் முகம் சரி இல்லாமல் இருப்பதை கவனித்த பவன் மதுவை பார்க்க…

அவன் பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் மது அலறிய படி தன் காதை பொத்திக் கொண்டு அலற…

பவன் என்ன என்று சுதாரிப்பதற்குள் லிஃப்ட் கதவு மூடும் போது மதுவின் சேலை தலைப்பு லிஃப்ட் கதவில் மாட்டி விட…

லிஃப்ட் இயங்க ஆரம்பித்து சர்ரென்று கீழே வர… மதுவின் சேலையும் லிஃப்ட்டில் மாட்டிக் கொண்டதால் சேலையோடு சேர்த்து மதுவையும் லிஃப்ட் கதவோடு சேர்த்து இழுக்க…

அதில் பயந்த மது என்ன செய்வது என்று தெரியாமல் கத்திக் கொண்டு இருக்க… அவள் லிஃப்ட்டோடு சேர்த்து கதவில் மாட்டிக் கொண்டு கதவின் முனையின் மேலே மதுவின் சேலையோடு சேர்த்து அவளும் சிக்கிக் கொண்டு அந்தரத்தில் மது தொங்க…

முதலில் அங்கே என்ன நடக்கிறது என்று சுதாரித்து அறியவே பவனுக்கு நேரம் பிடித்தது. பின் சட்டென்று சிந்தித்து முதலில் எமர்ஜென்சி பட்டனை அழுத்தி லிஃப்டை நிறுத்திய பவன்,

கதவோடு சேர்த்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மதுவின் காலோடு சேர்த்து அவளை அணைத்து பிடித்தவன். லிஃப்ட்டில் அவள் சேலை மொத்தமும் மாட்டிக் கொள்ள… வேறு வழி இல்லாமல் அவள் சேலையை கிழித்து மதுவை மீட்டான்.

இடுப்பில் மட்டும் கிழிந்த சேலை ஒட்டி இருக்க… வெறும் ப்ளௌஸுடன் அவன் முன் நின்றிருந்த மதுவைப் பார்த்தவன் வேகமாக தன் சட்டையை கழற்றி அவளிடம் கொடுத்து போடச் சொன்னான்.

மதுவும் எதுவும் பேசாமல் பவன் சட்டையை வாங்கி திரும்பி நின்று போட்டுக் கொண்டாள். அவள் சட்டை மாட்டும் வேளையில் லிஃப்ட்டில் இருந்த போனை உபயோகித்து செக்யூரிட்டிக்கு கால் செய்து தாங்கள் லிஃப்ட்டில் மாட்டிக் கொண்டதை சொல்லிவிட்டு சீக்கிரம் அவர்கள் இருவரையும் மீட்க ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டு போனை வைத்தான்.

தன் போனில் இருந்து வெளியே ரியாவுக்கோ அல்லது வேறு யாருக்கேனும் கால் செய்யலாம் என்றால் . சிக்னல் சரியாக கிடைக்காமல் பவனின் போன் வேலை செய்ய வில்லை.

லிஃப்ட்டில் தன்னுடன் இருந்த மதுவைப் பார்த்து “மது உனக்கு எதுவும் ஆகலையே ….எங்கேயும் அடி பட்டிருக்கா?” என்று கேட்டான். “இல்லை பவன்” என்று மட்டும் பதில் சொல்லிவிட்டு லிஃப்ட்டின் மூலையில் அமர்ந்து தன் கால்களை மடக்கிக் கொண்டு அவள் முட்டியில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அவள் சென்று அப்படி அமர்ந்ததும் பவனுக்கு ஏதோ போல இருக்க.. அவள் அருகில் சென்று அவள் முன் ஒரு காலை மடக்கி மற்றொரு காலை ஊன்றி அமர்ந்தவன் மதுவிடம் குனிந்து “மது உங்களுக்கு எதுவும் ஆகிருச்சா? ஏன் ஒரு மாதிரியா உட்கார்ந்து இருக்கீங்க” என்று கேட்டான்.

அவள் பவன் பேசியதை கேட்டுவிட்டு ஒன்றும் இல்லை என்பது போல தலையை ஆட்டினாள்.

ஒரு வேளை மது பயத்தில் இருக்கலாம் என்று நினைத்தவன் வேகமாக தன் பைக்கில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மதுவிடம் வந்து அவளை அழைக்க…

மது அமைதியாக தலையை தொங்க போட்டவள் அமர்ந்து இருக்க..

“மது… ஒரு நிமிஷம் என்னை பாருங்க ப்ளீஸ்” என்றான்.

அவனை நிமிர்ந்து மது பார்க்க அவள் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. அதை பார்த்ததும் பவன் பதறியவன் மதுவின் முன் அமர்ந்து “மது என்ன ஆச்சு? ஏன் அலறிங்க? உங்களுக்கு எதுவும் ஆகிருச்சா?” என்றான் அவள் கை கால்களை பார்த்துக் கொண்டே..

அவள் இல்லை என்று தலையை ஆட்டியதும்…

“அப்புறம் ஏன் மது உங்க கண்ணில் கண்ணீர்?” என்றான்.

அவள் மறுபடியும் எதுவும் பேசாமல் தலையை இட வலமாக ஆட்ட…

“அப்புறம் ஏன் இப்படி அழறீங்க மது?” என்றான் பவன் கவலையாக.

மது எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. அவளிடம் மறுபடியும் அவளுக்கு என்ன ஆனது என்று பவன் கேட்க வர …அப்போது லிஃப்ட்டிற்குள் இருந்த போன் அலறியது.

அவளை ஒருமுறை பார்த்துவிட்டு எழுந்து சென்றவன் போனை அட்டென்ட் செய்து காதில் வைத்து “ஹலோ…” என்று பேச…

அவர்களின் ஆஃபீஸில் செக்யூரிட்டி தான் அழைத்து இருந்தார். “சொல்லுங்க அண்ணா என்ன ஆச்சு? யாரையும் எங்களை லிஃப்ட்டிலிருந்து காப்பாற்ற வர சொன்னீங்களா?” என்று கேட்டான்.

அவர் “தம்பி லிஃப்ட்டை நீங்களா நிறுத்துனீங்களா இல்லை அதுவா நின்னு போயிருக்கா?” என்று கேட்டார்.

“ஏன் செக்யூரிட்டி அண்ணா.. அதை கேட்டு நீங்க என்ன பண்ண போறீங்க…” என்றான் பவன்.

அவன் பேசுவதைய எல்லாம் மது கேட்டுக் கொண்டு இருக்க… அவளை ஓரக்கண்ணால் பார்த்த படி பேசினான் பவன்.

“நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க தம்பி” என்றார் செக்யூரிட்டி.

“நான் தான் ஒருத்தவங்க போட்டுட்டு இருந்த துணி லிஃப்ட்டில் மாட்டிருச்சுன்னு சொல்லி எமர்ஜென்சி பட்டனை அழுத்தி லிஃப்ட்டை ஆஃப் பண்ணினேன்” என்றான் பவன் “ஆமா நீங்க கேட்டு என்ன பண்ண போறீங்க?” என்றவன் “ஓ …ஒரு வேளை நீங்களே லிஃப்ட்டை சரி செய்ய போறிங்களா?” என்றான் பவன்.

“நான் எதுவும் செய்ய வேண்டியதில்லை. நீங்க அமுக்கின எமர்ஜென்சி பட்டனுக்கு பக்கத்துல ஒரு பச்சை பட்டன் இருக்கா?” என்று கேட்டார் செக்யூரிட்டி.

அவன் அங்கிருந்த பட்டனை பார்க்க “ஆமா அண்ணா இருக்கு. அதை என்ன செய்ய?” என்றான் பவன்.

“அந்த பட்டனை ஒரு வாட்டி பிரஸ் பண்ணிட்டு திரும்ப லிஃப்ட்டை ஆன் பண்ணினா லிஃப்ட் எப்பவும் போல வேலை செய்யும் தம்பி” என்றார் அந்த செக்யூரிட்டி.

அவர் சொல்வதை கவனமாக கேட்ட பவன் “சரி” என்று சொல்லி விட்டு மதுவை பார்க்க ..அவள் இன்னமும் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு அழுதவாறு அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவளைப் பார்த்ததும் என்ன தோன்றியதோ பவனுக்கு, செக்யூரிட்டியிடம் பேசிக் கொண்டு இருந்தவன் திடீர் என்று “ஐயோ!! அண்ணா என்ன சொல்றிங்க? லிஃப்ட் இப்போதைக்கு சரி ஆகாதா….” என்றான் மதுவைப் பார்த்தவாறு.

அந்த பக்கம் செக்யூரிட்டி பவன் பேசியதை கேட்டவர் “என்ன தம்பி பேசுறீங்க… நான் அப்படி உங்க கிட்ட சொல்லவே இல்லையே…” என்றார் பவனிடம்.

அவர் பேசியதை பவன் காதில் வாங்காதவன் மேலும் “அண்ணா அந்த லிஃப்ட்டை சரி பாக்குறவங்க எப்போ வருவாங்க இங்கே? நாங்க தனியா மாட்டிட்டு இருக்கோம் லிஃப்ட்டிற்குள்ள .. அவங்க இப்படி பொறுப்பே இல்லாம பேசினா என்ன ஆகுறது? எங்களுக்கு இங்கே தனியா இருக்க பயமா இருக்கே … இங்கே லிஃப்டுக்குள்ள என்னை எதுவும் யாரும் செஞ்சுட்டாங்களான்னா… நான் என்ன அண்ணா பண்ணுவேன்? எனக்கு இங்கே தனியா இருக்க பயமா இருக்கு. உடனே யாரையாவது அழைச்சுட்டு வந்து சீக்கிரம் சரி பண்ணற வழியை பாருங்க” என்று பயந்தவன் போல பேசினான்.

“என்ன தம்பி உங்களோட வம்பு இருக்கு? நான் தான் எல்லாம் சரியாய் இருக்கு. நீங்க அந்த பச்சை பட்டனை அழுத்தின போதும் லிஃப்ட் ரெடி ஆகிறும்னு நான் தான் சொன்னேனே” என்றார் அவர் புரியாமல்.

அவர் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டு மதுவும் பவன் பார்த்துக் கொண்டு இருக்க… அவளோ அவன் பேசியதை கேட்டதும் எங்கே லிஃப்ட்டிற்குள்ளேயே மாட்டி விடுவோமோ என்று பயந்து அவனையே பார்த்துக் கொண்டு இருக்கா… அடுத்து பவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டவள் நேராக எழுந்து அவனிடம் வந்து “என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? நான் உங்களை எதுவும் செஞ்சிருவேன்னா? இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் அதிகமா தெரியலை?” என்று பவனிடம் கோபமாக பேசினாள்.

“ஆஹ்…. வாங்க மது மேடம். இவ்வளவு நேரம் ஏன் நீங்க அழுதுட்டு இருக்கீங்கன்னு உங்க கிட்டே எவ்வளவு முறை கேட்டேன்? அதுக்கு நீங்க பதில் சொல்லாம குத்து கல்லாட்டம் உக்காந்துட்டு… இப்போ இவங்களை நான் சும்மா ஒரு பேச்சுக்கு எதுவும் செஞ்சிருவேன்னு சொன்ன உடனே மேடம் தானாவே வந்து என்கிட்டே பேசுவாங்கலாமா? இது நல்ல கதையா இருக்கே… நான் வந்து பேசினா பேசாதவங்க கிட்டே நான் ஏன் பேசணும்?” என்றான் பவன்.

“நானா உங்க கூட பேச மாட்டேன்னு சொன்னேன்? நீங்க தானே என் கூட பேசாம போனீங்க… என்கூட பேசாதீங்கன்னு சொல்லிட்டு என்னை பாக்குறதையே முழுசா தவிர்த்துட்டு போறவங்க கூட தேவை இல்லாம நானா வந்து இப்படி லிஃப்ட்டுக்குள்ள மாட்டிகிட்டு முழிக்குறேன்” என்று சொல்லி அழுதாள் மது.

“ஓ ….. இதனால தான் லிஃப்ட்டுக்குள்ளே வந்ததுலிருந்து மேடம் என் முகத்தை கூட பாக்காம பேசாம இருந்தார்களோ” என்று நினைத்தவன். தன் மீதும் தவறு இருக்கத்தான் செய்கிறது என்று நினைத்தவன். மதுவைப் பார்த்து “சாரி மது. நான் இப்போவும் உங்க கூட பேசணும்னு நினைக்கலை. ஆனா உங்களை இப்படி பார்க்க எனக்கு கஷ்டமா இருக்கு. நீங்க இப்படி அழுதுட்டு இருக்கறதை பார்த்துட்டு நான் எப்படி எதுவும் கேட்காமல் இருக்க முடியும்? அதனால தான் கேட்டேன்” என்றான் பவன்.

அவன் இப்போது இந்த இக்கட்டான நிலையில் கூட தன்னிடம் பேச விரும்பவில்லை என்று கூறியதும் பவன் மீது கோபம் வர… “உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி மிஸ்டர் பவன்” என்று சொன்னவள் “எனக்கு உங்க உதவி எதுவும் தேவை இல்லை. உங்க அனுதாபமும் தேவை இல்லை” என்றவள்,

“நீங்க உங்க கொள்கையை விட்டுவிட்டு வந்து என்னுடன் பேசணும் என்ற எந்த அவசியமும் இல்லை பவன். நான் அழுதா உங்களுக்கு என்ன? இல்லை இந்த லிஃப்ட்டிலேயே மூச்சு முட்டி இறந்தால் உங்களுக்கு என்ன.. இத்தனை வருடம் கழித்து என்மீது அக்கறை காட்ட எனக்கு ஒரு ஜீவன் கிடைச்சிருக்கு என்று நான் நினைத்தது தவறு என்று நீங்கள் எனக்கு ப்ரூவ் பண்ணிட்டிங்க மிஸ்டர் பவன். என்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை எல்லாம் இவ்வளவு சீக்கிரம் மறந்து உங்களை விரும்பினேன் இல்லையா? எனக்கு இது தேவை தான்” என்றவள் அவனை தன் எதிரில் இருந்து தள்ளி விட்டு லிஃப்ட்டில் இருந்த போனை எடுத்தவள் செக்யூரிட்டிக்கு கால் செய்ய..

அவர் போனை எடுத்ததும் பவன் தான் அவருக்கு கால் செய்திருக்கிறான் என்று நினைத்து “ஏன் தம்பி உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது? அந்த பச்சை பட்டனை அழுத்தி லிஃப்ட்டை ஆன் செஞ்சா லிஃப்ட் தானா ஓடும்னு சொன்னேன் இல்லா? மறுபடி மறுபடி கேட்டாலும் நான் இதைத் தான் சொல்லுவேன்” என்றவர் போனை துண்டித்து விட…

அவர் பேசியதை எல்லாம் கேட்ட மது செக்யூரிட்டி சொன்னது போல லிஃப்ட்டை இயக்கி விட்டு திரும்பி பவனை முறைத்தவள் இவ்வளவு நேரம் ஏற்கனவே அவன் மீது ஆத்திரமாக இருந்தவள், அவன் வேண்டும் என்றே லிஃப்ட் வேலை செய்யாது என்று சொல்லி அவளை பயமுறுத்தியது வேறு சேர்ந்து கொள்ள அவன் மீது இன்னும் கோபம் அதிகம் ஆக, அவனிடம் வந்தவள் பவன் சற்றும் எதிர் பாரா நேரம் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

ஆனால் அவள் அறையும் வரை பவன் இந்த உலகிலேயே இல்லையே. ஏன் என்று கேக்குறீங்களா பிரெண்ட்ஸ் ….அவனை மது விரும்புறேன்னு இப்போ சொன்னாளே அதை கேட்டதில் இருந்து அய்யா வானத்தில் மிதந்துட்டு இருந்தாரு.

இவ்வளவு நேரம் காதல் வானில் பறந்து கொண்டு இருந்த பவன் மது அடித்ததும் காற்று போன பலூன் போல… அப்படியே சுய நினைவிற்கு வந்தான்.

தன் கன்னத்தை தேய்த்துக்கொண்டே மதுவை பார்க்க… “இடியட்” என்று அவனை திட்டி விட்டு திரும்ப, லிஃப்ட்டும் சரியாக கீழ் தளத்திற்கு வந்துவிட்டது.

அவள் எதுவும் பேசாமலே ஆஃபீசை விட்டு கிளம்ப வெளியே வந்தவள் அங்கே ஒரு ஆட்டோ ஒன்று செல்லவும், அதை கைகாட்டி அதில் ஏறிக் கொள்ள… அவள் பின்னாலேயே மந்திரித்துவிட்டவன் போல வந்த பவன் அவனும் மது செல்லும் ஆட்டோவில் ஏறிக்கொள்ள..

அவனைப் பார்த்து முறைத்தவள் “நீங்க ஏன் மிஸ்டர் என்கூட வரீங்க? உங்களுக்கு பேச பிடிக்காதவங்க கூட ஒண்ணா பிரயாணம் பண்ணினா நல்ல இருக்காது. நீங்க இறங்குங்க” என்று அவனிடம் சொல்ல…

“அது ஒன்னும் இல்லை மிஸ் மது .. நான் ஒன்னும் வேண்டும் என்று உங்க கூட வரலை. நீங்க என்னோட ஷர்ட் போட்டுட்டு போறீங்களே ..எங்கே என் சட்டையை தூக்கிட்டு ஓடிருவிங்களோன்னு பயத்துல தான் நான் உங்க கூடயே வரேன்” என்றான் அவளை வம்பிழுக்க நினைத்து.

அவன் சொன்னதை கேட்டதும் மதுவிற்கு கோபம் இன்னும் அதிகம் ஆகா ….அவனை முறைத்தவள் “வீட்டிற்கு போனதும் உங்க சட்டையை கொடுத்துட்றேன்” என்றவள் ஆட்டோ டிரைவரிடம் அட்ரெஸ்ஸை சொல்லி விட்டு அவனை பார்க்காதவாறு அமர்ந்து கொண்டாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured