விக்கியின் முகத்தை நேருக்கு நேராக பார்க்க வெட்கப்பட்ட நிலானி, அவனை ஒரு முறை பார்த்துவிட்டு, “ம்ம்ம்…” என்று வெட்கப்பட்டுக் கொண்டே தன் தலையை மட்டும் ஆட்டினாள்.
“என்ன, பார்க்க மாட்டியா நிலா குட்டி? உன்னைப் பார்க்கணும்னு தானே இவ்வளவு ஆசையா வந்தேன். என் முகத்தைக் கூட பார்க்க மாட்டேங்கறியே, போ…” என்று அவளிடம் போய் கோபம் காட்டினான்.
விக்கி கோபப்பட்டு விட்டானோ என்று பதறிய நிலானி, வேகமாக நிமிர்ந்து விக்கி முகத்தைப் பார்க்க, விக்கியும் அவள் கண்டிப்பாகத் தன்னைப் பார்ப்பாள் என்பது போல எதிர்பார்த்தவன். நிலானி தன்னை பார்த்ததும் சட்டென நிமிர்ந்து, அவள் முகத்தைத் தன் கைகளால் பிடித்து, வாசலிலேயே அவள் இதழில் முத்தம் ஒன்றை பதித்தான்.
நிலானிக்கு விக்கி இப்படி திடீரென்று முத்தம் கொடுத்ததும் என்ன செய்வது என்று தெரியாமல், அவன் முத்தத்தில் திணறிக் கொண்டிருக்க… அவள் படும் அவஸ்தையை ரசித்தவாறு, மிகவும் தீவிரமாக விக்கி நிலானிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான்.
“சார், வீடு வந்திருச்சு…” என்று ஒரு குரல் கேட்கவும், காரின் பின் சீட்டில் அமர்ந்து கண்களை மூடி நிலானிக்கு முத்தம் கொடுப்பது போல கனவு கண்டுகொண்டிருந்த விக்கி, டிரைவர் தன்னை அழைக்கும் சத்தம் கேட்டு கண்களை விழித்துப் பார்க்க, தன் கைகள் இரண்டையும் தன் முகத்திற்கு நேராகத் தூக்கி, நிலானியின் முகத்தைப் பிடித்திருந்தது போல, கண்கள் மூடி, முத்தமிடுவது போல உதட்டைக் குவித்து இருந்தான்.
கண்களைத் திறந்து பார்த்ததும் டிரைவர் விக்கியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு அமர்ந்திருப்பதை கவனித்த விக்கிக்கு ஏதோ போல ஆகிவிட்டது. “அடடா!!! இவ்வளவு நேரம் என் நிலா குட்டிக்கு கனவில்தான் முத்தம் கொடுத்துட்டு இருந்தேனா?” என்று ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்ட விக்கி.
டிரைவரைப் பார்த்த விக்கி, “இங்கே என்ன சிரிப்பு? நீ எல்லாம் கல்யாணம் பண்ணி ரொமான்ஸ் பண்ணாமலா இரண்டு குழந்தை பெத்துக்கிட்ட? இதெல்லாம் கண்டும் காணாம போயிடணும், சரியா?”
“நான் இப்ப பண்ணினதை எங்கேயாவது யார்கிட்டயாவது நீ சொன்னேன்னு எனக்கு மட்டும் தெரிஞ்சது, அப்பவே உன்னை வேலையை விட்டுத் தூக்கிடுவேன்!” என்று அவரை மிரட்ட…
“சரி… சரி… தம்பி, நான் யார்கிட்டயும் சொல்லல,” என்று அவனுக்குத் தெரியாமல் சிரித்துக்கொண்டவர், “காரை விட்டு இறங்கி வாங்க, போலாம்,” என்று விக்கியின் கார் கதவைத் திறந்துவிட…
காரை விட்டு இறங்கிய விக்கி, நிலானியைப் பார்க்கும் ஆர்வத்தில் லிஃப்ட்டை நோக்கிச் செல்ல, டிரைவர் அவன் பின்னே அவனுடைய லகேஜை எல்லாம் எடுத்துக்கொண்டு வந்தார்.
லிஃப்ட் வந்ததும் இருவரும் லிஃப்ட்டில் ஏறிக்கொள்ள, லிஃப்ட் முதல் தளத்திற்குச் சென்றது.
லிஃப்ட்டின் சத்தம் கேட்டதும் நிலானி வேக வேகமாகத் தன் வீல்சேரைத் தள்ளிக்கொண்டு வாசல் கதவருகில் வந்து, விக்கிதான் வருகிறானா என்று ஆவலோடு எட்டிப் பார்க்க…
அவன் நினைத்தது போலவே, தன் மனைவி அவனுக்காகக் காத்திருந்ததை லிஃப்ட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த விக்கிக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது.
இத்தனை நாள் தனக்கான உறவுகள் என்று எத்தனையோ பேர் இருந்தாலும், தன்னுடைய வாழ்க்கை முழுவதும் ஒன்றாகப் பயணம் செய்யப் போகும் தன் புது மனைவியைப் பார்த்து, மிகவும் சந்தோஷத்தோடு அவளை நோக்கிச் சிரித்த முகமாக வந்தான் விக்கி.
விக்கியைப் பார்த்ததும் நிலானி வெட்கப்பட்டுக் கொண்டே தன் வீல்சேரைத் தள்ளிக்கொண்டு, அவன் வந்து கொண்டிருந்த திசையை நோக்கிச் சென்றவள், சிரித்த முகமாக அவனைப் பார்த்தபடி…
அப்போது திடீரென்று நிலானி முகம் கலவரம் அடைய, அவளை நோக்கிச் சிரித்துக்கொண்டே வந்த விக்கி, திடீரென்று நிலானியின் முகத்தைப் பார்த்ததும், அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று பதட்டமானவன். தன் பின்னால் பார்த்துதான் நிலானி அப்படிப் பதட்டம் அடைகிறாள் என்று தன் பின்னால் சரியாகத் திரும்பிப் பார்க்க…
அப்போது ரவி, இவ்வளவு நேரம் யாருக்கும் தெரியாமல் அந்த அப்பார்ட்மென்டில் இருந்த இன்னொரு வீட்டிற்கு அருகில் இருந்த இடத்தில் மறைந்திருந்தவன்.
விக்கி லிஃப்ட்டுக்குள்ள இருந்து வெளியே வந்ததும், நேராக நிலானியைப் பார்க்கச் சென்றதும், அவன் வந்ததைப் பார்த்த ரவி, தன் கையில் கத்தியுடன் விக்கியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தான்.
ரவி கையில் கத்தியோடு வருவதைப் பார்த்துத்தான் நிலானி அதிர்ச்சியாகி அப்படியே நின்றுவிட்டாள்.
விக்கி சரியாக ரவியைத் திரும்பிப் பார்க்க… ரவி, விக்கி தன்னை பார்த்துவிட்டான் என்றதும் வேக வேகமாகக் கத்தியை ஓங்கிக்கொண்டு, விக்கியைக் குத்த வர…
தன்னைக் குத்த வரும் ரவியைப் பார்த்து விக்கி, அவனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, அவனைத் தடுப்பதற்காகத் தன் கைகளை முகத்திற்கு மேலே தூக்கி, ரவியைத் தடுக்கப் போக…
ரவி வேகமாகக் கத்தியை உயர்த்திக் கொண்டே, விக்கியின் அருகில் வந்தவன், மேலே தூக்கி இருந்த கையை கீழே இறக்கி, விக்கியின் வயிற்றுக்கு நேராகக் கத்தியை ஓங்கி விக்கி வயிற்றில் குத்த வர…
ரவி கத்தியை ஓங்கி விக்கியைக் குத்த வருவதைப் பார்த்த நிலானிக்கு என்ன செய்வது என்று தெரியாமல், பயத்தில் காதுகளைப் பொத்திக்கொண்டு கண்களை மூடி கத்த…
அவள் கத்திய சத்தம் கேட்டு, அந்த அப்பார்ட்மென்டில் இருந்தவர்கள் எல்லாம், “யாரோ கத்தும் சத்தம் கேட்கிறது,” என்று வீட்டை விட்டு வெளியே வர…
மதுவும் பத்மாவும் சமையலறையில் இருந்து நிலானி கத்தும் சத்தம் கேட்டதும், அவசர அவசரமாக வெளியே வர…
அதேபோல பவனும் அவன் வீட்டில் இருப்பவர்களும் வெளியே வர…
அங்கே அவர்கள் ரவி விக்கியைக் குத்த வரும் காட்சியைக் கண்டதும் பயந்து கத்திக்கொண்டே விக்கியை நோக்கி பவனும் மதுவும் ஓட…
“உன்னால தான்டா என் பொண்டாட்டி, “என்ன வேண்டான்னு சொல்லி டைவர்ஸ் பண்ணிட்டு இப்போ வீட்ல வந்து இருக்கா. இதுக்கு எல்லாம் காரணமான உன்னை நான் சும்மா விடமாட்டேன்!” என்று சொல்லிக் கொண்டே…
ரவி ஓங்கிய கையை வேகமாக விக்கியின் வயிற்றில் சொருக்கினான்.
இதையெல்லாம் பயத்தில் வீல்சேரில் அமர்ந்து கொண்டு பின்னால் இருந்து பார்த்த நிலானி, ரவி விக்கியின் வயிற்றில் கத்தியால் குத்தியதைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சியாகி அப்படியே அந்த இடத்திலேயே மயங்கிவிட்டாள்.
கீர்த்திகாவுக்கும் கதிருக்கும் நிச்சயம் திருமணம் நடக்கும். ராதாவிற்கும் கதிருக்கும் திருமணம் நிச்சயம் செய்த அந்த நாளிலேயே, இவர்கள் இருவருக்கும் திருமணம் கண்டிப்பாக நடக்கும் என்று விசாலாட்சி கீர்த்திகாவிடமும் அவள் பெற்றோரிடமும் வாக்கு கொடுத்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பினார்.
துர்காவைத் தூங்க வைத்துவிட்டு, கனகாவும் துறையும் ஹாலில் அமர்ந்திருக்க… அப்போது வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டதும் கனகா வேகமாக எழுந்து வாசலுக்கு வந்தவர்.
அதை விட்டு இறங்கிய விசாலாட்சி, கனகாவைப் பார்த்ததும் வேகமாக அவரிடம் வர…
கனகா விசாலாட்சியைப் பார்த்து, “அண்ணி, வடிவி கிட்ட பேசிட்டீங்களா? அவர் சமாதானம் ஆகிட்டாளா? நம்ம மேல எதுவும் வருத்தத்துல வடிவு இருக்காளா? நீங்க எதுவும் பேசினீங்களா?” என்று மிகவும் ஆர்வமாக விசாலாட்சியிடம் கேட்க…
“வடிவு வருத்தத்தில் இருந்து சரியாகறதும், அவள் சமாதானம் ஆகறதும் உங்க கையிலதான் இருக்குது கனகா,” என்று சொல்லிவிட்டு, அவர் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார் விசாலாட்சி.
விசாலாட்சியின் இந்த முகம் அவருடன் பின்னால் வந்தவர்களுக்குச் சற்று முன்புதான் பழக்கப்பட்டு இருக்க, கனகாவிற்கு விசாலாட்சி அப்படிப் பார்ப்பதற்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
“அண்ணி இப்போ இப்படி இருக்காங்க,” என்று ஏதோ யோசனையோடு கனகா விசாலாட்சியுடன் உள்ளே வந்தார்.
ஹாலில் இருந்தபடியே துரை இதையெல்லாம் கவனித்துக் கொண்டு இருக்க, விசாலாட்சி உள்ளே வரவும், “அக்கா, என்ன ஆச்சு? ஏன் வரும்போது ஒரு மாதிரியா? வேற எதுவும் பிரச்சனையா? வடிவு எதுவும் சங்கடப்படும்படி நடந்துக்கிட்டாங்களா?” என்று கேட்டார் துரை.
“வடிவு எப்பவுமே நம்ம சங்கடப்படுகிற மாதிரி நடந்துக்க மாட்டா துரை,” என்றவர். “நீ வா, நான் உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு,” என்று சொன்னவர், வேலையாட்களை அனுப்பி ஷிவுவையும் ராதாவையும் கீழே அழைத்து வரச்சொல்லி, ஹாலில் விசாலாட்சி கனகாவுடன் அமர…
அவர் பின்னே வந்த கதிர், ஆதி, வெங்கடாசலம் மூவரும் விசாலாட்சி என்ன பேசி, துரையிடமும் கனகாவிடமும் கதிருக்குக் கீர்த்திகாவைத் திருமணம் செய்து வைக்கச் சம்மதம் வாங்கப் போகிறார் என்று ஆவலில் அவரைப் பார்த்தவாறு சோஃபாவில் அமர்ந்தனர்.
சற்று நேரத்தில் ஷிவுவும் ராதாவும் கீழே வர… அவர்கள் இருவரையும் அழைத்தவர், “இங்கு வந்து உட்காருங்கள்,” என்று பாசமாக அழைத்து, விசாலாட்சி தன் பக்கத்தில் இருவரையும் அமர வைத்துக் கொண்டவர்.
“இப்போ நான் உங்ககிட்ட சொல்றதை நீங்க எல்லாரும் பொறுமையா… கோவப்படாம… அவசரப்படாம… நான் சொல்லி முடிக்கிற வரைக்கும் முழுசா கேளுங்க…”
“அதன் பிறகு நீங்க என்ன நினைக்கிறீங்களோ, அதை மனசுல வச்சுக்காம அப்படியே என்கிட்ட வெளிப்படையா உடைச்சு சொல்லிடுங்க,” என்று சொன்னார் விசாலாட்சி.
அவர் அப்படிப் பேசவும், அவரைப் பார்த்துக்கொண்டிருந்த கனகாவுக்கோ, துரைக்கோ எதுவுமே புரியவில்லை. ஷிவுவுக்கும் ராதாவுக்கும் அதே நிலைதான்.
அவர் என்ன சொல்லப் போகிறார் என்பது போல விசாலாட்சியையே அவர்கள் நால்வரும் பார்த்துக் கொண்டு இருக்க…
ராதாவைப் பார்த்து அவள் கைகளைப் பிடித்துக் கொண்ட விசாலாட்சி, “இந்த அத்தை உன்கிட்டே ஒன்னு கேட்பேன், அதுக்கு மறுப்பு சொல்லாம சரின்னு சொல்லணும். சொல்லுவியா ராதா?” என்று கேட்டார் விசாலாட்சி.
“என்னத்தை என்கிட்ட நீங்க இப்படி எல்லாம் கேக்குறீங்க? நீங்க என்ன கேட்டாலும் நான் அதுக்குச் சரி என்று தான் சொல்லப் போறேன். நான் எப்பவுமே உங்க செல்ல மருமகள் ராதா தான்,” என்று சொல்லி அவர் கண்ணம் கிள்ளினாள் ராதா.
அவள் அப்படிச் செய்ததும், இவ்வளவு நேரம் இறுக்கமாக இருந்த விசாலாட்சி சற்று நிம்மதி அடைய…
துரையைப் பார்த்த விசாலாட்சி, “உனக்கு உன் பொண்ணுங்கள்ல யாரோ ஒருத்தரை என் பசங்கள்ல ஒருத்தனுக்குக் கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு தானே ஆசை?” என்று கேட்டார்.
“ஆமாம் அக்கா. எனக்கும் நம் சொந்தம் விட்டுப் போகக்கூடாது. அதனால்தான் நான் என் பொண்ணை உன் பையன்கள் யாரோ ஒருத்தருக்குக் கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு உன்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பேன்.”
“இப்போ அதுதானே நடந்திருக்கு? என் பொண்ணு ராதாவை தானே உன் பையன் கதிருக்குக் கல்யாணம் பண்ணி கொடுக்கப் போறோம்? என்னோட ஆசையும் நிறைவேறப் போகுது,” என்று சிரித்துக் கொண்டே சொல்ல…
“அப்போ என் மூத்த பையன் ஆதிக்கு உன்னோட மூத்த பொண்ணு சாரிகாவைத் தானே கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கு… அப்போ நீ உன்னோட ரெண்டு பொண்ணுங்களையும் என் வீட்டுக்கு மருமகளா அனுப்பப் போறியா?” என்று கேட்டார் விசாலாட்சி.
“எனக்கு ரொம்ப பெரிய ஆசை எல்லாம் கிடையாது. உன்னோட ரெண்டு பசங்கள்ல யாரோ ஒரு பையனுக்கு என் பொண்ணுங்கள்ல ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி வைக்கணும், அது மட்டும் தான் என்னோட ஆசை. இத்தனை நாள் துர்கா தான் என் பொண்ணு சாரிகா தான்னு எனக்குத் தெரியாம இருந்தது.”
“அதனாலதான் நான் துர்கா கிட்ட கொஞ்சம் கோபமா இருந்தேன். என் பொண்ணு ஷிவுவிற்கு ஆதிக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு ஆசையில இருந்தப்போ, நீ திடீர்னு எங்களுக்குச் சொல்லாம வேற ஒரு பொண்ணை ஆதிக்காகப் பார்த்ததும், நான் கோபத்துல அப்படி நடந்துக்கிட்டேன்.”
“ஆனா இப்போ துர்கா தான் என் பொண்ணு தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் சந்தோஷமா தான் இருக்கேன்,” என்று சொன்னார் துரை.
“துர்காவை என் பெரிய பையன் ஆதி கல்யாணம் பண்ணிக்கிட்டதும், உன்னோட ஆசை நிறைவேறிருச்சு அப்படித்தானே துரை?” என்று கேட்டார் விசாலாட்சி.
“ஆமாம் அக்கா, இதில் என்ன சந்தேகம்?” என்று கேட்டார் துரை.
“அப்போ என்னோட இரண்டாவது பையன் கதிருக்கு நான் கீர்த்திகாவை கல்யாணம் பண்ணி கொடுக்கிறதா வாக்கு கொடுத்துட்டு வந்துட்டேன்.”
“நீ என்னோட வாக்கைக் காப்பாற்றுவேன்னு நம்பித்தான் நான் அவங்க வடிவு கிட்ட சொல்லிட்டு வந்து இருக்கேன். உன்னோட முடிவு என்ன துரை?” என்று நேரடியாகக் கேட்டார் விசாலாட்சி.
விசாலாட்சி கதிருக்கும் கீர்த்திகாவுக்கும் திருமணம் செய்து வைப்பதாகச் சொல்வதைக் கேட்டதும், ராதாவிற்குத் தான் எந்த முயற்சியும் எடுக்காமலேயே இந்தக் கல்யாணம் நிற்கப்போவதை நினைத்துச் சந்தோஷப்பட்டவள், மனதிற்குள்ளேயே குத்தாட்டம் போட்டாள்.
துரையை கேட்டுவிட்டு ராதாவிடம் விசாலாட்சி திரும்ப… விசாலாட்சி சொன்ன விஷயத்தைக் கேட்டு மகிழ்ச்சியாக இருந்த ராதாவின் முகம், விசாலாட்சி தன்னைப் பார்க்கிறார் என்று தெரிந்ததும் முகத்தை அப்படியே சோகமாக வைப்பது போல மாற்றிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அதைப் பார்த்த விசாலாட்சி, “ராதா, அத்தை உனக்குக் கேட்காமலேயே, உன்னோட சம்மதம் இல்லாமலேயே நான் கீர்த்திகாவோட அம்மா அப்பா கிட்ட வாக்கு கொடுத்துட்டு வந்துட்டேன்.”
“கீர்த்திகாவிடம், ‘என் பையனைக் கல்யாணம் பண்ணிக்க உனக்குச் சம்மதம் தானா?’ என்று நான் கேட்டதற்கு, அவள் என்ன சொன்னா தெரியுமா ராதா?”
“அவ, ‘நான் ராதாவுடன் பழகி கொஞ்ச நாள் ஆனாலும், அவள் என்னோட நெருங்கிய தோழி… அவளோட வாழ்க்கையை நான் கெடுக்க விரும்பல. இந்தக் கல்யாணம் ராதாவோட முடிவு என்னவோ, அதுக்கு நான் சம்மதிக்கிறேன்,’ என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடிச்சிட்டா.”
“நீ சொல்லு ராதா, உன் மனசுல என்ன இருக்கு? நீ உன் மனசுல இருக்குறத வெளிப்படையா இந்த அத்தை கிட்ட சொல்லு. நீ என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு நான் கட்டுப்படுறேன்,” என்று விசாலாட்சி ராதாவின் பதிலுக்காகக் காத்திருக்க…
அப்போது துரை, “அக்கா, நீ என்ன காரியம் பண்ணிட்டு வந்து இருக்கேன்னு தெரியுமா? என் பொண்ணுக்கும் கதிருக்கும்தான் கல்யாணம்னு நம்ம எல்லாரும் பேசி பத்திரிக்கை அடிச்சு முடிவு பண்ணி, நான் எல்லாருக்கும் பத்திரிக்கை கொடுத்துட்டேன்.”
“கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறப்ப, நீ வந்து இப்படி என்னைக் கேட்காம வாக்கு கொடுத்துட்டு வந்துட்டியே,” என்று வருத்தப்பட்டார் துரை.
துரையைப் பார்த்த விசாலாட்சி, “நீ நான் சொன்னா சம்மதிப்பேங்கிற நம்பிக்கையில் தான் நான் வாக்கு கொடுத்துட்டு வந்தேன் துரை.”
“இப்ப சொல்லு. உனக்கு கதிர்-கீர்த்திகா கல்யாணத்துல விருப்பம் இருக்கா? இல்லையா? என் வாக்குக்கு நீ மதிப்பு கொடுக்கிறியா?” என்று கேட்டார் விசாலாட்சி.
அவர் இப்படிக் கேட்டதும் துரையால் எதுவும் விசாலாட்சியை மறுத்துப் பேச முடியவில்லை. அவர்கள் அனைவரையும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த கனகா, “அண்ணி, நீங்க எதுக்காக வடிவிடம் கீர்த்திகாவைக் கதிருக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வாக்கு கொடுத்துட்டு வந்தீங்கன்னு எனக்குப் புரியுது.”
“இந்த வீட்டில வடிவு எப்பவும் போல உரிமையா இருக்கணும் என்பதற்காகத் தான் நீங்க இதைச் செஞ்சுட்டு வந்து இருக்கீங்கன்னு தெரியுது அண்ணி.”
“அதனால இந்த விஷயத்துல நான் உங்க பக்கம் தான் இருக்கப் போறேன். யாரு என்ன சொன்னாலும் நான் கேட்க போறதில்லை,” என்று துரையைப் பார்த்துக் கனகா சொல்ல…
என் தம்பியை விட தம்பியின் மனைவி கனகா தன் மனதில் நினைத்ததை அப்படியே புரிந்துகொண்டு தனக்குச் சாதகமாகப் பேசியதைக் கேட்ட விசாலாட்சிக்கு மிகவும் சந்தோஷமாக இருக்க…
கனகாவைக் கட்டிக்கொண்ட விசாலாட்சி, “ரொம்ப ரொம்ப நன்றி கனகா. நீ என்னைப் புரிஞ்சிக்கிட்டதற்கு,” என்று சொல்ல…
“என்ன அண்ணி இப்படி எல்லாம் பேசுறீங்க? நீங்க வேற நான் வேறயா? என்கிட்ட எதுக்கு நன்றி எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க… பேசாம இருங்க,” என்று சொல்லி அவரைச் சமாதானம் செய்தார் கனகா.
இப்போது விசாலாட்சி துரையையும் ராதாவையும் பார்த்து, “உங்களோட சம்மதம் தான் ரொம்ப முக்கியம். நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு வெளிப்படையா சொல்லுங்க,” என்று கேட்க.
உடனே ராதா, “அத்தை, எனக்கு என் அம்மாவை ரொம்ப பிடிக்கும்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். என் அம்மா என் வாழ்க்கைக்காக நல்ல முடிவுதான் எடுப்பாங்கன்னு நான் நம்புறேன்.”
“அதனால என் அம்மா என்ன சொல்றாங்களோ, அதுக்கு நான் கட்டுப்படுறேன்,” என்று ஒரே வார்த்தையாக, கீர்த்திகாவும் கதீரும் திருமணம் செய்து கொள்ளத் தனக்குச் சம்மதம் என்று மறைமுகமாகச் சொல்லிவிட்டாள் ராதா.
அவள் பேசியதைக் கேட்ட துரைக்கு, “உங்க அம்மாவுக்காகத் தான் நீ கதிரும் கீர்த்திகாவும் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொல்றியா? நீ எதுக்கு இந்தக் கல்யாணத்துக்கு இவ்வளவு சந்தோசமா சம்மதம் சொல்றேன்னு எனக்குத் தெரியாதா? இந்தக் கல்யாணம் நின்றால் தானே உனக்கும் சந்தோஷுக்கும் கல்யாணம் நடக்கும்? நீ அந்தச் சந்தோஷை காதலிக்கிறது இங்கு இருக்கிறவங்க யாருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எனக்குத் தெரியும். நீ உன் மனசுல நினைக்கிறது நான் நடக்க விட மாட்டேன் ராதா,” என்று மனதிற்குள் நினைத்த துரை, அவளை முறைத்துக்கொண்டு அமர்ந்து இருக்க…
விசாலாட்சி திரும்பி துரையைப் பார்த்து, “துரை, நீ சொல்லு. இப்போ உன்னோட சம்மதம் தான் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். ஏற்கனவே ராதாவும் கனகாவும் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லிட்டாங்க. உன்னோட சம்மதம் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். நீ சரின்னு சொன்னா மட்டுமே நான் கீர்த்திகாவுக்கும் கதிருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு செய்வேன்,” என்று கேட்டார் விசாலாட்சி.
“எனக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதம் இல்லைன்னு சொன்னா நீ என்ன அக்கா செய்வே?” என்று இறுக்கமாக வைத்துக் கொண்டு கேட்டார் துரை.
“சம்மதம் இல்லாதப்போ அதை மறுத்து நான் எதுவும் செய்யமாட்டேன் துரை. என்ன… நான் கொடுத்த வாக்கை மீறிட்டேன் என்கிற ஒரு மன வருத்தம் மட்டும்தான் எனக்கு இருக்கும்,” என்று விசாலாட்சி சொன்னார்.
துரை இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொன்னதும், இவ்வளவு நேரம் மனதுக்குள் குத்தாட்டம் போட்டுக்கொண்டு சந்தோஷமாக இருந்த ராதாவின் முகம், சொன்னதைக் கேட்டதும் அப்படியே சுருங்கிப் போய்விட்டது.
துரை சற்று நேரம் அமைதியாக இருந்தவர், விசாலாட்சியைப் பார்த்து, “அக்கா, எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லை. இதுதான் என்னோட முடிவு,” என்று விசாலாட்சியிடம் சொல்ல.
துரை பேசியதைக் கேட்டு ராதாவிற்கு மிகவும் வருத்தமாக இருக்க… இங்கே இவ்வளவு நேரம் அவர்கள் அனைவரும் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கதிருக்கு…
எப்படியாவது அனைவரிடமும் பேசி, அம்மா இந்தத் திருமணத்திற்குச் சம்மதம் சொல்ல வைத்து விடுவார் என்று நினைத்தவன், துரை இப்படிப் பேசவும், தனக்கு இருந்த ஒரு சிறு நம்பிக்கையும் தன் கை விட்டுப் போய்விட்டது என்று இடிந்து போய் அமர்ந்து இருந்தான்.
துரையின் முடிவைக் கேட்ட அங்கு இருந்தவர்களுக்கு அவரை மறுத்துப் பேச எதுவும் இல்லாமல் போகவே, அவரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே அமர்ந்து இருந்தனர்.
