EPISODE 12
கீர்த்திகாவிடம் பேசி அவளைச் சமாதானம் செய்வதற்காக அவளை இறக்கிவிடச் சென்ற கதிர், அவளைச் சமாதானப்படுத்த முடியாமல் போக, அவள் நடந்துகொண்ட விதத்தால் வருத்தமடைந்தான். ஆனாலும், அவன் அவளைப் பாதியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுவிட்டான்.
வீட்டில் துர்காவையும், ஆதியையும் அழைத்த விசாலாட்சி, “நாளைக்கு துர்கா வீட்டிற்கு மறுவீடு வர வேண்டும்” என்று சொல்லி, அவர்கள் இருவரையும் அழைத்த பிறகு, துர்காவின் பெற்றோர் தங்கள் வீட்டிற்கு கிளம்பினர். அவர்களைப் பார்த்த விசாலாட்சி, “ஏன் சம்மந்தி உடனே கிளம்புறீங்க? இங்கேயே இருங்களேன், இன்னும் கொஞ்ச நேரம் கழித்துப் போகலாம்” என்று கேட்டார்.
அதற்கு துர்காவின் தந்தை, “இல்லை சம்மந்தி அம்மா. கீர்த்திகா வீட்டிற்குப் போய்ப் ரொம்ப நேரம் ஆகிவிட்டது. அவள் தனியாக இருக்கப் பயப்படுவாள். நாங்க கிளம்புகிறோம்” என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர். துர்காவின் அப்பா ஒரு நிமிடம் நின்றவர், திரும்பி ஆதியைப் பார்த்து, “தம்பி, என் பொண்ணு வெளி உலகம் எதுவும் தெரியாமல் வளர்ந்தவள். அவளை உங்க எல்லாரையும் நம்பிதான் விட்டுட்டுப் போறேன். உங்க வசதிக்கும், தகுதிக்கும் எங்களிடம் பணம், காசு எதுவும் இல்லை என்றாலும், அவள் தன் கூட இருப்பவர்களுக்கு எந்தக் கஷ்டமும் கொடுக்க மாட்டாள். அவர்களைப் புரிந்துகொண்டு சந்தோஷமாக வைத்துக்கொள்வாள். இவளால் யாருக்கும் கஷ்டம் வராது. அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கைகூப்பி வணங்கினார்.
அவர் அவ்வாறு செய்ததும், ஆதி வேகமாக அவர் அருகில் வந்து, “ஏன் மாமா இப்படி எல்லாம் சொல்றீங்க? துர்காவைப் பற்றி நீங்க கவலைப்படாதீங்க. அவளை நான் நன்றாகப் பார்த்துக்கொள்வேன். இனி அவள் என் பொறுப்பு” என்றான்.
ஆதியிடம் ஒரே நாளில் இவ்வளவு மாற்றத்தைப் பார்த்த அவனின் பெற்றோருக்கு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவன் துர்காவைப் பார்த்துக்கொள்வதாகக் கூறியதும், அவனை மாமா என்று உரிமையோடு அழைப்பதையும் பார்த்த துர்காவின் அப்பாவிற்குப் பேச வார்த்தைகளே வரவில்லை. தன் மகளைப் பிரிய மனம் இல்லாமல் இருவரும் கிளம்பினர். அவர்கள் செல்லும் வரை சிரித்த முகத்தோடு அவர்களை வழி அனுப்பி வைத்த துர்கா, அவர்கள் இருவரும் தன் கண்களில் இருந்து மறைந்ததும், அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் அவளுடைய கண்களில் இருந்து வெளிவந்தது. யாராவது பார்த்துவிடப் போகிறார்கள் என்று வேகமாக அங்கிருந்து தன் அறைக்கு ஓடினாள்.
அவள் ஏன் அப்படி ஓடுகிறாள் என்று அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது. ஆதியின் அம்மா அவனிடம், “நான் சொன்னேன் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் அவள் இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கலை ஆதி. அவள் இந்த குடும்பத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். உன்னுடைய கோபத்தால் அதை இழந்துவிடாதேடா. நான் துர்காவையும் சேர்த்துதான் சொல்கிறேன். உனக்கு விருப்பம் இல்லாமல் இந்தக் கல்யாணம் நடந்திருந்தாலும், நீ நன்றாக யோசித்துப் பார்த்தால், உன்னைச் சுற்றி இருப்பவர்களுடைய அருமை உனக்குத் தெரியும்” என்றார்.
“அவள் அழுதுகொண்டே மேலே போயிருக்கிறாள். நாம யாரும் அவள் அழுவதைப் பார்க்கக் கூடாது என்றுதான் அவள் ரூமிற்குப் போனாள். நீ அவளுக்கு ஆறுதல் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவளைக் கஷ்டப்படுத்தாமல் பார்த்துக்கொள், சரியா?” என்றவர், “ஏங்க, வாங்க போகலாம்” என்று இருவரும் கிளம்பினர். அப்போது ஆதியின் அப்பா, “இன்றிலிருந்து உன் வாழ்க்கை உன் கையில் ஆதி. இன்னும் பத்து நாள் கழித்து நீ அலுவலகம் வந்தால் போதும். இவங்க இருவரும் அலுவலகத்தைப் பார்த்துக்கொள்வார்கள். நீ கொஞ்சம் துர்கா கூட நேரம் செலவழித்து அவளைப் புரிந்துகொள்ள டைம் எடுத்துக்கோ” என்றவர், கதியையும், விக்கியையும் வரச்சொல்லிவிட்டு கிளம்பினர்.
விக்கியும் கதிரும் ஆதியிடம் சொல்லிவிட்டு துர்காவைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கிளம்பினர். அனைவரும் கிளம்பிவிட, ஆதி மட்டுமே ஹாலில் நின்றிருந்தான்.
“எனக்குத் தெரியாத துர்காவா…? கல்லூரியிலிருந்து அவள் என்னுடன் தான் இருக்கிறாள். அவளைப் புரிந்துகொள்ளச் சொல்லி என்கிட்ட எல்லாரும் சொல்லிட்டுப் போறாங்க” என்று நினைத்தவன், வேலை ஆட்களைக் கிளம்பச் சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்றான்.
உள்ளே சென்று பார்க்க, விளக்குகள் எதுவும் போடாமல் அறை முழுவதும் இருட்டாக இருந்தது. உள்ளே வந்தவன், லைட்டை ஆன் செய்துவிட்டு முதலில் துர்காவைத்தான் தேடினான்.
அவள் படுக்கையில் படுத்து அழுதுகொண்டிருந்தாள். வெளிச்சம் வரவும் வேகமாக கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தவள், ஆதியைப் பார்த்து, “நான் போய் அத்தை, மாமாவுக்கு எதுவும் வேணுமான்னு கேட்டுட்டு வரேன்” என்று அவன் முகத்தைப் பார்க்காமல் அங்கிருந்து எழுந்து செல்ல, “அவங்க கிளம்பிட்டாங்க” என்றான் ஆதி.
அவன் கூறியதும் அப்படியே நின்றாள். அவனைத் திரும்பிப் பார்க்க, ஆதி அவளிடம் தகவலைச் சொல்லிவிட்டு அவள் என்ன செய்கிறாள் என்று கூடப் பார்க்காமல் குளியலறைக்குள் சென்றுவிட்டான்.
அவன் தன்னைப் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை, ஏன் அழுகிறாய் என்று ஒரு ஆறுதலுக்குக்கூட ஆதி அவளிடம் கேட்கவில்லை என்று நினைத்த அவளின் மனம் ஏனோ மேலும் வலிக்க, அடக்கி வைத்த கண்ணீர் மறுபடியும் வெளிப்பட, சென்று படுக்கையில் பொத்தென விழுந்தவள் அழுதுகொண்டே உறங்கிப்போனாள்.
குளியலறைக்குச் சென்று குளித்துவிட்டு வந்தவன், துர்கா கட்டிலில் மீண்டும் படுத்திருந்ததைப் பார்த்தான். அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க, அவள் உறங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. மெல்ல அவள் அருகில் சென்று அவளைப் பார்த்தான். கண்களில் கண்ணீர் வழிந்து காய்ந்துவிட்ட தடம் அவள் கன்னத்தில் இருக்க, அவள் கண் இமைகளில் ஒரு துளி கண்ணீர் காயாமல் ஒட்டிக்கொண்டு இருந்தது.
அதை தன் ஒற்றை விரலால் தொட்டு எடுத்தவன், தன் விரல்களில் இருந்த அவள் கண்ணீர்த் துளியைப் பார்க்க, ஏனோ அவனுக்கு வலித்தது. பின் அவள் அருகில் அமர்ந்து சிறிது நேரம் என்ன நினைத்தானோ, அவளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
தூக்கத்தில் புரண்டு படுத்த துர்காவின் கைகள் கட்டிலில் எதையோ தேடுவதுபோல அலைபாய்ந்தன. “என்ன தேடுகிறாள்?” என்று ஆதி பார்க்க, அவள் சட்டென அவன் தொடையில் கைவைக்க, ஆதிக்கு ‘பக்கென்று’ ஆனது.
அவள் தலையணை என்று நினைத்து அவன் போட்டிருந்த நைட் பேண்ட்டைப் பிடித்து இழுக்க, அது வரவில்லை என்று நினைத்தவள், தூக்கத்திலேயே எக்கி அவன் தொடையில் கைபோட்டு, தலையணை போல அதில் தன் தலையை வைத்து கட்டிக்கொண்டு படுத்தாள்.
இதை எதிர்பார்க்காத ஆதி, என்ன செய்வது என்று தெரியாமல் அவளையே பார்க்க, துர்கா நன்கு வசதியாக அவன் மடியில் படுத்து உறங்கி இருந்தாள். ஆதிக்கு அவளைத் தன்னிடம் இருந்து விலக்க முடியாமல் தர்மசங்கடமாக உணர்ந்தான்.
பின் மெல்ல அவள் முகத்தைத் தன் மடியில் இருந்து விளக்கி, ஒரு தலையணையை எடுத்து அவள் தலைக்குக் கொடுத்து படுக்க வைத்துவிட்டு எழ, அவன் தொடையில் ஏதோ ஈரம் இருக்க, “என்ன?” என்று பார்த்தான். துர்கா படுத்திருந்த இடத்தில் ஈரம் இருக்க, “தூக்கத்தில் அசுத்தப்படுத்தி இருப்பாள் போல” என்று நினைத்திடும்போது, அவளைப் பார்க்க, அவள் தன் வாயில் வழியும் எச்சிலைத் துடைத்துக்கொண்டு புரண்டு படுக்க, அவள் வாயில் இருந்த எச்சில் தான் அவன் மடியில் வந்திருக்கிறது என்று பார்த்தவன், தன் முகத்தைச் சுழித்துவிட்டு, “துர்கா…” என்று அவளைப் பார்த்துக் கத்தினான். அது அவள் காதிலேயே விழாமல் அவள் நன்கு தூங்கிக்கொண்டிருக்க, “இவளை…” என்று கோபம்கொண்டவன், சென்று தன் உடையை மாற்றிக்கொண்டு வந்து படுத்தான்.
படுத்து வெகுநேரம் ஆகியும் தூக்கம் வராமல் தவிக்க, புரண்டு படுத்துக்கொண்டிருந்தான். இது போதாதென்று துர்கா வேறு தூக்கத்தில் அவன் மேல் கையையும், காலையும் தூக்கிப் போடுவதும், அதை அவன் விலக்கி விடுவதுமாகத் தொடர, ஒரு கட்டத்தில் எழுந்து சென்று அந்த அறையை விட்டு வெளியே சென்று தன் படிப்பு அறையில் படுத்துவிட்டான்.
விக்கியும் கதிரும் காலையில் அலுவலகம் செல்ல, இருவரும் அலுவலகத்திற்குள் நுழையும்போதே ஒரே சத்தமாக இருந்தது. என்னவென்று பார்க்க, அங்கே அவர்களுக்கு முன் வந்து அங்கிருக்கும் ஊழியர்களை அதிகாரம் செய்துகொண்டிருந்தாள் சங்கவி.
அலுவலகத்தின் நடுநாயகமாக நாற்காலியைப் போட்டு அதில் அமர்ந்துகொண்டு, அங்கிருந்த மேலாளரை அழைத்து, அவளுடைய திட்ட சம்பந்தமான அனைத்து கோப்புகளும் அவளுடைய கேபினுக்குக் கொண்டு வரச் சொல்லி அதிகாரம் செய்தாள்.
அந்த மேலாளர் எதுவும் பேசாமல் அவளையே பார்க்க, “என்ன, நான் சொன்னது உன் காதில் விழவில்லையா? போ… போய் நான் சொன்ன கோப்புகள் எல்லாம் எடுத்துட்டு வா…” என்று கேட்டாள்.
அவர் அவள் அருகில் வந்து, “மேடம், அதெல்லாம் ஆதி சார் பார்த்துட்டு இருக்கிற திட்டக் கோப்புகள். அவர் சம்மதம் இல்லாமல் யாருக்கும் காட்டக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்” என்று அந்த மேலாளர் சொல்லி வாய் மூடவில்லை. அவரை ‘பளார்’ என்று அறைந்துவிட்டு, “இந்தத் திட்டத்தில் எங்கள் நிறுவனமும் தான் வேலை செய்துகொண்டிருக்கிறது. அது எப்படி நீ நான் கேட்டு முடியாது என்று சொல்லலாம்?” என்று அவனை மீண்டும் அறையக் கையை ஓங்க, ஓங்கிய அவள் கைகளைப் ஒரு கரம் பிடித்து அவளை ‘பளார்’ என்று அறைந்தது.
அறை விழுந்த வேகத்தில் சங்கவி ஒரு சுற்று சுற்றி நாற்காலியில் போய் விழுந்தாள். தன்னை அறைந்தது யார் என்று நிமிர்ந்து பார்க்க, அங்கே விக்கி நின்றுகொண்டிருந்தான்.
அவளை முறைத்துக்கொண்டு நின்றிருந்தவனைப் பார்த்து சங்கவிக்கு ஒரு நொடி பயத்தில் அவனையே பார்த்தவள், பின் தன் பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “ஏய் யூ… எவ்வளவு தைரியம் இருந்தால் இந்தச் சங்கவி மேலேயே கை வைத்திருப்பாய்?” என்று அவன் முன் கை நீட்டிப் பேசினாள்.
“நீ எவ்வளவு தைரியம் இருந்தால் எங்க அலுவலகத்திற்கு வந்து எங்க ஊழியர் மேலேயே கைவைப்பாய்?” என்று கூறி மறுபடியும் அவள் கன்னத்தில் அறைந்தான். “உனக்கு உன்னுடைய திட்ட சம்பந்தமாக என்ன வேண்டும் என்றாலும் என்னையோ அல்லது கதிரையோதான் கேட்க வேண்டும். எல்லாரிடமும் கேட்கணும் என்று இங்கு சுற்றிக்கொண்டிருந்தால் நடப்பதே வேறு, புரியுதா? போறது ஒழுங்காக உன் கேபினுக்குப் போ…” என்று அவளை மிரட்ட, அவன் பேச்சில் அரண்டுபோனவள் வேகமாகத் தன் அறைக்குச் சென்றாள்; இல்லை, இல்லை ஓடினாள்.
அவள் சென்றதும், அதே கோபத்தோடு தன் அறைக்கு விக்கி செல்ல, அவன் பின்னே வந்த கதிர் உள்ளே வந்ததும், விக்கியைக் கட்டி அணைத்து, “சூப்பர் டா விக்கி” என்று கூறிச் சிரித்தான்.
தன்னைக் கட்டி இருந்த கதிரை விலக்கியவன், அதுவரை முகத்தை இறுக்கமாக வைத்திருந்த விக்கி, கதிரைப் பார்த்துச் சிரிக்க, கதிரும் அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்க, இருவரும் ‘ஹை ஃபை’ அடித்துக்கொண்டனர்.
அலுவலகத்திற்குள் நுழைந்த இருவரும், சங்கவி “தாட் பூட்” என்று கத்திக்கொண்டிருப்பதைப் பார்த்தவர்கள், “இவளை…” என்று கதிர் அவளை அடிக்கப்போக, அவன் கையைப் பிடித்து இழுத்த விக்கி, “ஒரு நிமிஷம் இருடா. இப்ப நீ போய் அவள் மேல் கை வைத்தாய் என்றால், அவங்க அண்ணனை வேண்டாம்னு சொன்னதுக்காகத்தான் மனசில் வைத்துக்கொண்டு நீ அவளை அடிக்கிறாய் என்று சொல்லி அவள் உன் மேல் பழியைப் போட்டுவிடுவாள். பேசாமல் இரு, அவள் என்ன செய்கிறாள் என்றுதான் பார்ப்போம்” என்று கூற, அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே ‘பளார்’ என்று ஒரு அறை கேட்க, இவர்கள் திரும்பிப் பார்க்க, சங்கவி அவர்கள் மேலாளரை அடித்திருந்தாள்.
அதன் பிறகு விக்கிக்கும் கோபம் வந்துவிட, “இவளை…” என்று சொன்னவன், “இப்போ இவளை எல்லார் முன்னாடியும் எப்படி அவளைப் பாவிக்கணுமோ, அதே மாதிரி நான் ட்ரீட் பண்ணப் போறேன். இன்னைக்கு நைட் எனக்கு நீ பார்ட்டி வைக்கிற, டீலா?” என்று கேட்டான் விக்கி.
“டீல்டா! நீ செய் முதல்ல. அவளை எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தினால் தான் எனக்குக் கொஞ்சமாவது மனசு ஆறும்” என்று கூறிய கதிர், “நீ அவளை என்ன செஞ்சாலும் நான் வந்து உன்னைத் தடுக்க மாட்டேன். ‘என்ன?’ என்று கேட்க மாட்டேன்” என்று கேட்டான். கதிரிடம், “ஓகே, டீல். இன்னைக்கு நைட் ட்ரீட்டுக்கு ரெடியாயிரு” என்று சொல்லிவிட்டுச் சென்றுதான் விக்கி அவளை ‘லெப்ட், ரைட்’ என்று வெளுத்து வாங்கி இருந்தான்.
“இனிமேல் அந்தச் சங்கவி, அலுவலகத்துக்குள்ள நம்ம ஊழியர்களைப் பார்த்து ‘யார், யார்?’ என்று அதிகாரம் பண்ணணும் அல்லது வேற ஏதாவது பேசணும்னு வாயைத் திறக்குறதுக்கு முன்னாடி நான் அவளுக்குக் கொடுத்த அறைதான் அவளுக்கு ஞாபகம் வரும். பேச வாய் திறந்த உடனே இந்த விக்கிதான் ஞாபகத்துக்கு வரணும்” என்று சொன்னான் விக்கி.
“கல்யாண மேடையில அத்தனை பேரும் முன்னாடி அவள் ஆதியை வேண்டாம்னு சொன்னப்ப ஆதியோட முகத்தை நீ பார்த்திருக்கணுமே. அவன் முகம் எப்படி துடிச்சுப்போயிருச்சு தெரியுமா? அவ்வளவு ஆசையாக முதன்முதலில் தான் நேசித்த பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ங்கிற ஒரு சந்தோஷத்துல அவன் எப்படி இருந்தான் தெரியுமா? அத்தனையும் இவள் பாழாக்கிவிட்டாள். இவள் எல்லாம் நல்லாவே இருக்க மாட்டாள்” என்றான் விக்கி.
“சரி விடு விக்கி, எல்லாம் சரியாகிவிடும். அண்ணன் தான் இப்போ துர்காவை கல்யாணம் பண்ணி இருக்கானே. நம்ம துர்கா அவனை நல்லா பார்த்துக்கொள்வாள். இவளைவிட அவதான் அண்ணனுக்கு நல்ல சாய்ஸ். நீ வேண்டுமானால் பார், அண்ணனும் துர்காவைப் புரிந்துகொண்டு அவளுடன் கண்டிப்பா வாழ்வான் என்று நான் நம்புகிறேன்” என்றான் கதிர்.
“சரிடா, நானும் அதைத்தான் எதிர்பார்த்துட்டு இருக்கேன். நம்ம துர்காவை அவன் புரிஞ்சுக்கணும். துர்கா எத்தனை வருஷமா அவன் மேல் உயிரையே வச்சிருக்கா. அவள் எந்த நிலைமையில் இருந்தாலும் அவளுக்கு அவனைப் பிடிக்கும். அது உன் அண்ணனுக்கு அப்போதான் அவனுக்கு துர்காவைப் பற்றித் தெரிந்து கொண்டு அவளுடன் சந்தோஷமாக இருப்பான்” என்று விக்கி சொல்ல, “ஆமா விக்கி, அதுக்கு முதல்ல அண்ணாவுக்குத் துர்காவைப் புரிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பத்தை நம்ம இரண்டு பேரும் இருந்தா ஏற்படுத்தி கொடுக்கணும். அவன்கிட்ட போய் நேரடியாக ‘துர்கா இப்படி, அப்படி’ என்று நம்ம என்ன அவளைப் பத்தி நல்லதா சொன்னாலும் அவன் நம்ப மாட்டான். அவனாக அதை உணர்ந்தால் தான் அவனுக்கு அது புரியும்” என்றான் கதிர்.
“வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதை நம்ம பயன்படுத்திக்கொள்வோம், சரியா?” என்று கூறிவிட்டுத் தங்கள் வேலையைப் பார்க்கச் சென்றனர்.
