Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 125

உன் ரகசிய ரசிகை நான் 125

by Layas Tamil Novel
261 views

EPISODE 125

மதுவும் பவனும் சிம்லாவிற்கு வர அதிகாலை 5 மணி ஆகிவிட்டது. ஏர்போர்ட்டுக்கு வந்த இருவரையும் கதிரின் ஆபீஸிலிருந்து பிக்கப் செய்து கொள்ள கார் வந்திருக்க, அதில் ஏறி இருவரும் கிளம்பினர்.

ஃப்ளைட் ஏறியதில் இருந்து மது பவனிடம் பேசவே இல்லை. அவனும் அவளிடம் பேச முயற்சிக்க, பவன் பேச வரும்போதெல்லாம் மது பேசுவதைத் தவிர்த்தாள்.

இங்கிருந்து அவர்கள் தங்கப் போகும் இடத்திற்குச் செல்வதற்குள் மதுவிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று நினைத்த பவன், மதுவைப் பார்த்து, “மது, ரொம்பக் குளிருது இல்ல? எங்கேயாவது டீக்கடை இருந்தா டீ குடிச்சிட்டுப் போலாமா? எனக்கு ஒரு மாதிரியா இருக்கு,” என்று பவன் அவளிடம் பேச…

அவன் தனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என்று சொன்னால் தான் மது “சரி” என்று தலையாட்ட… தங்களை அழைத்துப் போக வந்திருந்த டிரைவரிடம், “எங்கேயாவது ஒரு டீக்கடை இருந்தா வண்டியை நிறுத்துங்க. நாங்க ரெண்டு பேரும் டீ சாப்பிடணும்,” என்று பவன் பேச…

இவருக்கு ஹிந்தி மட்டுமே தெரியும் என்பதால் பவன் பேசியது அவருக்குப் புரியவில்லை. அவனைப் பார்த்து “புரியலை” என்று அவர் சொல்ல…

அவர் பேசிய பாசை பவனுக்குத் தெரியவில்லை. திரும்பவும் ஆங்கிலத்தில் பவன், “டீக்கடை எங்காவது இருந்தா நிறுத்துங்க. டீ சாப்பிட்டுப் போகலாம்,” என்று சொல்ல… அவருக்கு ஆங்கிலமும் தெரியவில்லை.

இவர்கள் இருவரும் பேசுவதைப் பின்னால் நின்று கேட்டுக் கொண்டிருந்த மது, அவன் என்ன செய்கிறான் என்று அவனைக் கவனிக்க…

“அடேய் டிரைவர், வண்டியை நிறுத்து,” என்று பவன் சைகை செய்து காட்ட…

இவர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு பவனைப் பார்த்து “என்ன?” என்று கேட்க…

பவன் சைகையாலேயே ஒரு கையை மேலும் ஒரு கையை கீழும் தூக்கி டீ ஆற்றுவது போல ஆற்றிக் காட்டி, “டீ… ஷாப், டீ… ஷாப் எங்கே இருக்கிறது?” என்று கத்தினான்.

“ஓ…. டீ…” என்று அந்த டிரைவர் புரிந்துகொண்டு பவனைப் பார்த்துக் கேட்க…

“அட அப்பா… ஒரு வழியா புரிஞ்சுகிட்டான்டா! ஆமா.. ஆமா… டீ ஷாப் தான்,” என்றவன், “நாங்க ரெண்டு பேரும் டீ குடிக்கணும்,” என்று மதுவையும் தன்னையும் காட்டிச் சைகை செய்ய…

அவர்கள் இருவரும் டீ குடிக்க வேண்டும் என்று பவன் சைகையால் சொன்னதும் அந்த டிரைவருக்குப் புரிந்துவிட, “அச்சா சாப்…” என்று சொல்லிவிட்டு நேராக ஒரு டீக்கடை முன்பு போய் வண்டியை நிறுத்தினான்.

கார் நின்றதும் பவன் காரை விட்டு இறங்கி, பின்னால் இருந்த மதுவைப் பார்த்து, “மது, உங்களுக்கு டீ மட்டும் போதுமா? இல்லை வேற எதுவும் சாப்பிடுறீங்களா?” என்று கேட்க, “இல்லை வேண்டாம். எனக்கு டீ மட்டும் போதும்,” என்று மது சொல்ல…

“சரி இருங்க, நான் போய்ப் டீ வாங்கிட்டு வரேன்,” என்று பவன் செல்லப் போக, “இருங்க, நானும் வரேன். தனியாத் தான் நான் இங்க இருக்கணும்,” என்று சொல்லிவிட்டு மது காரில் இருந்து இறங்கி பவனுடன் டீ கடைக்குச் சென்றாள்.

இருவருக்கும் டீ சொல்லிவிட்டுக் அவன் மது அருகில் வந்து, “அது, பிஸ்கட் எதுவும் வேணுமா? பன் எதுவும் டீ தொட்டுச் சாப்பிடுறீங்களா?” என்று கேட்டான்.

“இல்லை வேண்டாம். இந்த நேரத்துல எதுவும் சாப்பிட்டால் எனக்கு ஒத்துக் கொள்ளாது,” என்றால் மது.

“அப்போ உங்களுக்கு வேண்டாமா?” என்றான் பவன்.

“வேண்டாம்,” என்று தலையாட்டினால் மது.

“சரி, அப்போ நான் எனக்கு ஒரு பன் மட்டும் சொல்லிக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு டீ கடைக்காரரிடம் சென்று பன்னைக் கைகாட்டி “ஒன்று வேண்டும்” என்று சைகை செய்ய, அவர் ஒரு பன்னை எடுத்து அவனிடம் கொடுக்க, எடுத்துக்கொண்டு வந்து டீ வந்ததும் அதில் தொட்டுச் சாப்பிட்டான் பவன்.

அவன் சாப்பிடும் வேகத்தைப் பார்த்தால் பவனுக்கு நன்றாகப் பசி எடுத்திருக்கும் போல என்று நினைத்துக் கொண்டாள் மது.

திரும்ப வந்து பவன் காரில் ஏறி, அந்த டிரைவரிடம், தாங்கள் தங்கப் போகும் வீட்டிற்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்க…

மறுபடியும் அவன் பேசுவது இந்த டிரைவருக்குப் புரியாமல் போகவே.. அப்போதும் மது அந்த டிரைவரைப் பார்த்து, பவன் சொன்னதையே அவரிடம் சொல்லிக் கேட்க…

அவர் இன்னும் அரை மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்று மதுவிடம் பேசினார்.

அவர்கள் இருவரும் ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த பவன் மதுவைப் பார்த்து, “ஏங்க, உங்களுக்கு ஹிந்தி தெரியும்னு முதலிலேயே சொல்லி இருந்தா, இவ்வளவு நேரம் ஒரு டீக்கடைக்காக இவன்கிட்ட நான் கெஞ்சிக்கிட்டு இருந்திருக்க மாட்டேன். இப்படி என்னைப் பேசவிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்களே,” என்று பவன் கேட்க…

அவனைப் பார்த்துச் சிரித்த மது, “நீங்க எப்படி அவர்கிட்ட பேசுறீங்கன்னு பார்க்குறதுக்காகத் தான் நான் எதுவுமே சொல்லவில்லை,” என்று சொல்லிச் சிரித்தாள்.

“ஓஹோ… அப்போ என்னைப் பேசவிட்டு ரசிக்கிறீங்களா மது?” என்று பவன் மதுவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு கேட்க… அவனை முறைத்தவள் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

இருவரும் அரை மணி நேரத்தில் தங்கி இருந்த இடத்திற்கு வர, டிரைவர் அவர்களுக்கு வீட்டிற்குச் சாவியைக் கொடுத்து, “மாடம, நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ரெடியாகுங்க. நான் ஒன்பது மணி போல உங்களை வந்து ஆபீஸ்க்கு கூட்டிட்டுப் போறேன்,” என்று சொல்லிவிட்டு டிரைவர் கிளம்பினார்.

அவரிடம் சாவியை வாங்கிக் கொண்ட பவன் மதுவைப் பார்க்க… டிரைவர் சொன்னதை மது சொல்லவும், “சரி மது, அப்போ நாம போய்க் கொஞ்ச நேரம் தூங்கலாமா?” என்று அவன் சொல்ல…

“என்னது? நாம போய்த் தூங்கலாமாவா? என்ன பேசுறீங்க பவன்? நான் உங்க கூடத் தூங்கணுமா?” என்று மது கோபமாக அவனிடம் கேட்டாள்.

“ஹலோ… ஹலோ… மது, ஒரு நிமிஷம் இருங்க. இப்ப எதுக்கு இவ்வளவு கோபப்படுறீங்க? நான் சொன்னது, நீங்க தனியாத் தூங்கணும், நான் தனியாத் தூங்கணும்னு தான் சொன்னேன்.”

“ரெண்டு பேரும் ஒண்ணா தூங்குறதா நான் சொல்லவே இல்லை. பொதுவா போய்த் தூங்கலாமான்னு தான் கேட்டேன்.”

“என்ன சொல்றேன்னு முதல்ல புரிஞ்சிட்டு அப்புறம் கோவப்படுங்க…. எவ்வளவு கோவம் வருது உங்களுக்கு,” என்று சொன்னவன், வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு அவளைப் பார்த்து, “வலது காலை எடுத்து வச்சு உள்ளே வாங்க,” என்று பவன் சொல்ல…

“இது என்ன என் மாமியார் வீடா? வலது காலை எடுத்து வச்சு உள்ள வான்னு கூப்பிடுறீங்க? நீங்க பேசுறது சரி இல்ல பவன்,” என்று மறுபடியும் அவனிடம் மது கோவித்துக் கொள்ள.

“அடடா! என்னங்க உங்களோடது பெரும் தொல்லையா போச்சு! நான் என்ன சொன்னேன், நீங்க என்ன புரிஞ்சுட்டீங்க? வலது காலை எடுத்து வச்சு உள்ள வாங்கன்னு சொன்னது, இது என்ன என் வீடா, உங்க மாமியார் வீட்டுக்குள்ள வாங்கன்னு சொல்றதுக்கு இல்ல…”

“ஒரு இடத்துக்கு முதன் முதலாப் போறோம்னா, நம்ம போற வேலை நல்லபடியா முடியணும், நம்ம அங்க இருக்கிற வரைக்கும் எல்லாமே நல்லதா நடக்கணுங்கறதுக்காகத் தான் எங்க போனாலும் வலது கால் எடுத்து வச்சுப் போறோம். இது கூடத் தெரியாதா உங்களுக்கு?” என்று பவன் சொல்ல, அவனை முறைத்துக் கொண்டே தன் வலது காலை எடுத்து இந்த வீட்டில் வைத்து உள்ளே சென்றாள்.

**”அப்பாடா! கோபத்துல **’இது என்ன என் வீடா, மாமியார் வீட்டுக்குள்ள வலது கால் எடுத்து வச்சு வாங்கன்னு சொல்லி கூப்பிடுறதுக்கு’ன்னு நான் சொன்னத மது கவனிக்கவே இல்ல,” என்று நினைத்துக் கொண்டு மனதுக்குள் சிரித்தவாறு பவனும் அவள் பின்னால் சென்றான்.

இருவரும் சென்று அந்த வீட்டைப் பார்க்க, அந்த வீடு மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. வீட்டினைப் போய்ப் பார்த்து பவன் வாயடைத்து நின்று இருக்க, அவன் அருகில் நின்றிருந்த மது அவன் நிற்பதைப் பார்த்துவிட்டுச் சிரித்தவள். அவனைச் சட்டை செய்யாமல் தனக்கு ஏதாவது ரூம் இருக்கிறதா என்று பார்க்க…

வந்ததும் ஒரு ஹால், அந்த ஹாலை ஒட்டி அருகருகே இரண்டு பெட் ரூம் இருந்தது.

அதில் ஒரு அறையைத் திறந்து கொண்டு மது உள்ளே சென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.

“இங்க கூட ஒருத்தன் துணைக்கு வந்திருக்கேனே, அவனுக்கு எதுவும் வேணுமா? அல்லது ஏதாவது பேசிட்டாவது போறாளா பாரு. கல்நெஞ்சக்காரி! கொஞ்சம் கூட இரக்கமே இல்லை என் மேல்.”

“ஏதோ அன்னைக்கு ஒரே ஒரு தடவை இவகிட்ட அப்படி பேசிட்டேன். அதுக்காக இப்போ வரைக்கும் மூஞ்சியைத் தூக்கி வெச்சிட்டு இருக்கா பாரு,” என்று மதுவைத் திட்ட…

அப்போது அறை கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த மது, “என் மூஞ்சி நான் அப்படித்தான் தூக்கி வச்சுட்டு இருப்பேன். உனக்கு என்ன வந்துச்சு? நீ தானே என் கிட்ட அன்னைக்குச் சண்டை போட்டுட்டுப் போன. அந்த ஒரு சட்டையை நான் போட்டுட்டு வந்துட்டேன்னு என்னை எவ்வளவு பாடுபடுத்தின… நான் ஒண்ணும் கல்நெஞ்சக்காரி இல்ல. நீ தான் கல்நெஞ்சக்காரன்,” என்று அவனைத் திட்டிவிட்டு மறுபடியும் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள் மது.

மது உள்ளே சென்றுவிட்டாள் என்று நினைத்துத் தான் பவன் சற்றுச் சத்தமாக ஆதங்கத்தில் மதுவைத் திட்டினான். அது அவள் அறைக்குள் வரை கேட்கும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. இப்படி வெளியில் வந்து தன்னைத் திட்டிவிட்டுச் சென்றவளை, “பரவாயில்லை, என் ஆளு கோவத்துல ரொம்ப அழகா இருக்கா,” என்று நினைத்துக் கொண்டவன், தன் அறைக்குச் சென்று கதவைச் சாத்தியவன், சூட்கேஸைத் திறந்து அதில் மது அன்று அணிந்திருந்த பவனின் சட்டையை எடுத்து, அதை அங்கிருந்த ஒரு தலையணையில் மாட்டியவன், அதைக் கட்டிப்பிடித்து அந்தச் சட்டைக்கு முத்தம் கொடுத்தவன், அந்தத் தலையணையை மதுவை நினைத்துக் கட்டிப்பிடித்துத் தூங்க ஆரம்பித்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured