EPISODE 130
ஷிவுவிடம் ஆதி உண்மையைச் சொல்லச் சொல்லி அவளைக் கேட்க… “நீங்கள் என்னை எவ்வளவு வற்புறுத்திக் கேட்டாலும் நான் சொல்வதுதான் உண்மை,” என்றால் ஷிவு.
அவள் அருகில் வந்து, “நான் உன்னிடம் கொஞ்சம் தனியா பேசணும். என்னோடு வா…” என்று சொல்லி, ஷிவுவின் கையைப் பிடித்து அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.
அவன் எதற்கு ஷிவுவைத் தனியே அழைத்துச் செல்கிறான் என்று கேட்கும் தைரியம் அங்கு யாருக்கும் இல்லை. ஏனென்றால், ஆதிக்குக் கோபம் வந்தால் அவன் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலை கொள்ள மாட்டான் என்று அனைவருக்குமே தெரியும். அதனால் யாரும் எதுவும் சொல்லாமல் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தனர்.
ஷிவுவை அறைக்குள் அழைத்து வந்தவன், அவளை உள்ளே விட்டு, கதவைச் சாற்றிவிட்டு அவளைப் பார்த்தவன், ஷிவுவிடம், “நீ இப்படி துர்காவையும் விக்கியையும் பற்றிப் பொய் சொன்னால் தான், சங்கவி உன் வயிற்றில் வளரும் குழந்தையைப் பற்றி எல்லோரிடமும் சொல்லி விடுவேன் என்று உன்னை மிரட்டுகிறாளா?” என்று கேட்டான் ஆதி.
ஆதி சொன்னதைக் கேட்ட ஷிவு, ஆதியை உறைந்துபோய்ப் பார்க்க…
“என்ன ஷிவு அப்படிப் பார்க்கிறே? உன் வயிற்றில் குழந்தை வளரும் விஷயம் எனக்கு எப்படித் தெரியும் என்று தானே பார்க்கிறே… உன்னோட குழந்தைக்குக் காரணம் அந்த ரூபேஷ் தானே?” என்று கேட்டான் ஆதி.
தனக்கும் சங்கவிக்கும் மட்டுமே தெரிந்த இந்த விஷயம் எப்படி ஆதிக்குத் தெரியும் என்று ஷிவு அதிர்ச்சியாக ஆதியைப் பார்க்க…
“அப்படி என்னை அதிர்ச்சியாகப் பார்ப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை ஷிவு. சொல்லு, சங்கவி இதைச் சொல்லித் தான் உன்னை மிரட்டி இந்த மாதிரி பொய் சொல்லச் சொன்னாளே?” என்றான் ஆதி.
எல்லா உண்மைகளையும் தெரிந்துகொண்டு தன்னிடம் இதுவரை எதுவும் கேட்காமல் இருக்கும் ஆதியைப் பார்த்து, “என்னை மன்னிச்சிருங்க மாமா,” என்று ஷிவு தலை குனிந்து நிற்க…
“உன் அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டால், அவர் உன்னை எதுவும் செய்துவிடுவார் என்று தானே அந்தச் சங்கவி சொன்னதைக் கேட்டு இப்போது பேசிக் கொண்டு இருக்கிறாய்?” என்றான் ஆதி.
“இல்லை மாமா. நான் எப்படி இந்த ஒரு சூழ்நிலைக்கு ஆளானேன் என்று தெரிந்தால் அப்பா புரிந்துகொள்வார். ஆனால், என் வயிற்றில் வளரும் குழந்தைக்குக் காரணமானவன், ‘எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை’ என்று என்னை யாரோ போல நடத்துகிறான் மாமா. நான் என்ன செய்வேன்?” என்றால் அழுது கொண்டே ஷிவு.
ஷிவு சொன்னதைக் கேட்ட ஆதி புரியாமல் ஷிவுவைப் பார்க்க…
“மாமா, அந்த ரூபேஷ் சங்கவி அனுப்பினவன் மாமா. அவன் என்கிட்டே நல்லவன் போல நடித்து என்னை ஏமாற்றி விட்டான்,” என்று சொல்லி ஷிவு அழ…
அவளை என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியாமல் ஆதி திகைப்பில் நின்றான். “இந்தச் சங்கவி இன்னும் எத்தனை பேர் வாழ்க்கையை நாசம் பண்ண நினைக்கிறாள்?” என்று அவள் மேல் ஆத்திரம் வர… ஷிவுவிடம், “நீ எதற்கும் கவலைப் படாதே. அந்தச் சங்கவியை நான் பார்த்துக்கிறேன்,” என்று சொல்லி அறையை விட்டு ஆதி வெளியே வர…
__________________
ஆதி வெளியே வந்ததும் அவனிடம் வந்து நின்ற சங்கவி, “என்ன? எல்லாமே விசாரிச்சாச்சா? என்ன சொன்னா உன் அத்தை பொண்ணு?” என்று சொல்லி ஷிவுவை ஓர் ஏளனப் பார்வை பார்க்க…
“அவளை ஏன் பார்க்கிறே சங்கவி? ஷிவுவை, ‘துர்காவுக்கும் விக்கிக்கும் இடையில் தப்பான உறவு இருக்கிறது’ என்று பொய் சொல்லச் சொல்லி நீ அவளை மிரட்டினால், அவள் என்ன செய்வாள்? அவள் சின்னப் பொண்ணு. உன் அளவுக்கு ஷிவுவிற்கு ‘பிளான்’ எல்லாம் போடத் தெரியாது. உனக்குப் பயந்துட்டுப் பொய் சொல்லி இருக்கிறாள். அவ்வளவு தான்,” என்றான் ஆதி.
தான் ஷிவுவைப் பிளாக்மெயில் செய்த விஷயம் எப்படி ஆதிக்குத் தெரிந்தது என்று அதிர்ச்சியான சங்கவி, ஷிவுவைப் பார்த்து, “ஏய்… என்ன? உன் மாமா உன்னைக் காப்பாத்துவான்னு நம்பி எல்லா உண்மையையும் அவன் கிட்டேயே சொல்லிட்டியா?
நீ என்ன சொல்லி யார் கிட்டே உதவி கேட்டாலும், நான் நினைத்தால் மட்டும் தான் உன்னைக் காப்பாற்ற முடியும்,” என்று சங்கவி ஷிவுவிடம் திமிராகப் பேச…
ஷிவு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…
அவள் அருகில் வந்த துரையும் கனகாவும், “என்ன ஆச்சு ஷிவு? இந்தக் கேடுகெட்டவள் உன்னை மிரட்டுற அளவுக்கு நீ என்ன செய்தே?” என்று துரை கேட்டார்.
ஷிவு எதுவும் பேசாமல் ஆதியைப் பார்க்க…
“என்ன ஷிவு? உன் அப்பா தான் கேட்கிறாருல்ல? பதில் சொல்லு. அதை விட்டுட்டு உன் ஆதி மாமாவைப் பார்த்து, ‘அவர் வந்து உன்னைக் காப்பாத்திருவாரு’ன்னு பார்க்கிறியா?” என்ற சங்கவி, ஆதியைப் பார்த்து, “என்ன ஆதி? அமைதியா இருக்கே? உன் அத்தை பொண்ணைக் காப்பாத்துறேன்னு சொல்லித் தானே ரூம்குள்ள பேசிட்டு, அவளைக் கூட்டிட்டு வந்தே? இப்போ என்ன செய்யப் போறே?” என்று சங்கவி ஆதியைக் கடுப்பேற்ற…
அவளை முறைத்த ஆதி, “ஷிவுவை, ‘துர்காவைப் பற்றித் தப்பாப் பேசலைன்னா நீ ராதாவைக் கொன்று விடுவேன்’ என்று அவளைப் பிளாக்மெயில் பண்ணினால், ஷிவு தன் தங்கையைக் காப்பாற்ற, நீ சொல்வதையெல்லாம் கேட்டுத் தானே ஆக வேண்டும்?” என்று ஆதி சொல்ல…
அவனைப் புரியாமல் பார்த்த சங்கவி, “என்ன ஆதி, உளறுறே? நான் எதற்கு ராதாவைக் கடத்தணும்?” என்று சங்கவி அவனிடம் கேட்டாள்.
“அது எனக்கு எப்படித் தெரியும்? நீ தான் சொல்லணும்,” என்று ஆதி சங்கவியைப் பார்த்துக் கேட்க…
“நான் அவளை அப்படி எல்லாம் சொல்லி பிளாக்மெயில் பண்ணலை,” என்றால் சங்கவி.
“நீ அப்படிச் சொல்லி பிளாக்மெயில் பண்ணலைன்னா, ஏன் ராதாவை உன் மாமா பையன் வெச்சு கடத்த வெச்சிருக்க?” என்று ஆதி கேட்க…
அவனைப் புருவம் சுருக்கிப் பார்த்த சங்கவி, “நான் எங்கே அப்படிச் செய்தேன்? இதோ இங்கே தான் ராதா இருந்தால்,” என்று சொல்லி ராதா நின்று இருந்த இடத்தைப் பார்க்க…
அங்கே ராதா இல்லை. பின் திரும்பிச் சந்தோஷைச் சங்கவி தேட, அவனும் அங்கு இல்லை…. இதையெல்லாம் பார்த்துச் சங்கவி குழப்பத்தில் இருக்க…
அவளிடம் வந்த துரை, “என் பொண்ணு ராதாவை எங்கே கடத்தி வெச்சி இருக்கே? சொல்லு,” என்று அவளை முறைக்க…
“நான் உங்க பொண்ணைக் கடத்தச் சொல்லலை,” என்று சங்கவி குழப்பமாக அவரைப் பார்க்க…
“அப்போ இது என்ன?” என்று ஆதி தன் மொபைலில் மண்டபத்தின் வெளியே சிசி டிவி கேமராவை ஆன் செய்து காட்ட…
அதில் ராதாவை வாய் பொத்திச் சந்தோஷ் மண்டபத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தவன், அவளைக் காரில் ஏற்றி மண்டபத்தை விட்டு வெளியே கூட்டிச் சென்றான்.
அதைப் பார்த்த சங்கவி அதிர்ந்து போய் ஆதியைப் பார்க்க…
துரை அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, “ராதாவுக்கும் கதிருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகி இருந்த சமயம் நான் இவனுக்குப் பத்திரிக்கை கொடுக்கப் போனப்போவே, இவன் என் பொண்ணைக் காதலிக்குறேன்னு என்கிட்டயே திமிரா சொன்னான்.
இன்னிக்கு என்னடான்னா என் பொண்ணை மண்டபம் புகுந்து இத்தனை பேர் இருக்கையில் என் பொண்ணைக் கடத்திட்டுப் போயிருக்கான்,” என்று சொல்லிச் சங்கவியை அடிக்க வர…
துரை சங்கவியை அடிக்க வரும்போது அவர் கையைப் பிடித்துத் தடுத்த முத்து, “துரை, ஒரு பொம்பளைப் பிள்ளையைக் கை நீட்டி அடிக்கிறது தப்பு,” என்று சொல்ல…
“அவள் பொண்ணு மாதிரி நடந்துக்குறாளா முத்து? நீ உன் தங்கை பெண்ணுக்கு ‘சப்போர்ட்’ பண்ணிட்டு வராதே. இதுல உன் பையனும் சம்பந்தப்பட்டு இருக்கான்,” என்றார் துரை.
“என் பையன், ஆதி தம்பி சொன்ன மாதிரி சங்கவி பேச்சைக் கேட்டு உன் பொண்ணைக் கடத்தி இருந்தா, அவனை என் கையாலேயே நான் வெட்டிப் போட்டுருவேன்,” என்றார் முத்து ஆவேசமாக.
இங்கே நடக்கும் களேபரத்தில் அனைவரும் சங்கவி துர்கா மேல் சுமத்திய குற்றத்தையே அனைவரும் மறந்து, இப்போது வேறு புறமாகப் பிரச்சனை திரும்ப, சங்கவிக்கு இங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பியவள், “இந்தச் சந்தோஷ் இப்போ எதுக்கு ராதாவைக் கடத்திட்டுப் போறான்? நான் அவன் கிட்டேயே எதுவுமே சொல்லலையே,” என்று சங்கவி தலையைப் பிய்த்துக் கொள்ள…
________________________
சங்கவியிடம் வந்த ஆதி, “என்ன சங்கவி, நாம ஒன்னு நினைச்சு வந்தா இங்கே வேற ஏதோ நடக்குதுன்னு பார்க்கிறியா?” என்றவன், “உன்னோட தில்லாலாங்கடி வேலை எல்லாம் என்கிட்டே வேகாது,” என்றான் ஆதி.
அவனைச் சங்கவி முறைக்க… அப்போது அவளிடம் வந்த கதிர், “நீ துர்காவைப் பற்றியும் விக்கியைப் பற்றியும் காட்டிய போட்டோ பொய். அந்த அறையில் துர்கா, விக்கியோடு சேர்த்து நானும் தான் இருந்தேன்,” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்ட வடிவு, “மாப்பிள்ளை, என்னடா சொல்றீங்க? கொஞ்சம் எல்லாருக்கும் புரியுற மாதிரி தெளிவாச் சொல்லுங்க,” என்று கேட்டார்.
“அத்தை, நான், விக்கி, துர்கா மூணு பேரும் என்னோட ரூம்ல பேசிட்டு இருந்தோம். அப்போ துர்கா ஏதோ சொல்ல வர… அவள் சொல்வதைக் கேட்பதற்கு விக்கி எழுந்து அவள் அருகில் போகும்போது, கால் தடுக்கி விக்கி அவள் மேல் விழப் போனவன் சமாளித்துக்கொண்டு துர்காவின் அருகில் கட்டிலில் விழுந்துட்டான்.
ஆனா, அவன் அவள் மேல விழ வரப்போ ஷிவு தப்பா போட்டோ எடுத்துருக்கா. அதனாலதான் இத்தனைப் பிரச்சனையும் வந்திருக்கு,” என்று கதிர் சொல்ல…
ஷிவு அனைவரையும் பார்த்து, “நான் இப்போ சொன்னது எல்லாம் பொய். கதிர் மாமா சொல்வது தான் நிஜம்,” என்று சொல்லி அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டாள் ஷிவு.
திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் இங்கு நடக்கும் களேபரங்களைப் பார்த்து, ஒவ்வொருவராகக் கிளம்பி விட்டனர்.
சங்கவிக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்க… அவள் அருகில் வந்த விசாலாட்சி, “நாங்க உனக்கு என்ன பண்ணினோம்? ஏன் வீணா என் குடும்பத்து ஆளுங்களை இப்படி கஷ்டப்படுத்துறே?” என்று கேட்க…
“நீங்க எதுவும் பண்ணலை ஆன்ட்டி. உங்க பையன் ஆதி தான் இதற்கு எல்லாம் காரணம்,” என்று சொல்லி ஆதியைச் சங்கவி கை காட்ட…
ஆதி சங்கவியைப் பார்த்து, “நீ நினைச்சது எதுவும் நடக்கலைன்னு சொன்னதும், இப்போ உன்னோட அடுத்த குறியை என் பக்கம் திருப்புறயா?” என்றான் ஆதி.
“நான் எதுவும் வேணும்னு சொல்லலையே,” என்றவள், தன் போனை ஆன் செய்து அதில் ஆதியும் சங்கவியும் ஒன்றாக ஒரே படுக்கையில் இருந்த போட்டோவை விசாலாட்சியிடம் காட்டி, “உங்க பையன் என் கூட ஸ்விட்சர்லாந்தில் இருந்த போது நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே அறையில தங்கின அப்போ எடுத்த போட்டோ இது,” என்று சொல்லிக் காட்ட…
அவள் காட்டிய புகைப்படத்தில் ஆதி சட்டை இல்லாமல் கண் மூடிப் படுத்து இருப்பது போலவும், அவன் கைக்குள் சங்கவி படுத்துக் கொண்டு, போர்வையை உடல் மறைக்கும் அளவு போர்த்தி, அவன் அருகில் படுத்து அவனோடு சேர்ந்து இருப்பது போல அந்தப் போட்டோ இருந்தது.
அதைப் பார்த்ததும் விசாலாட்சி முகம் சுழிக்க… சங்கவி கையில் இருந்த போனைப் பிடுங்கிய ஆதி அந்தப் போட்டோவைப் பார்த்தவன், சங்கவியைப் பார்த்து, “என்ன இது சங்கவி? என்னோட பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு,” என்ற ஆதி.
“இந்தப் போட்டோவைக் காட்டி, இதில் இருப்பதை வைத்து நீயும் நானும் ஒன்றாக இருந்தோம் என்று நீ சொன்னால் நான் அப்படியே நம்பி விடுவேன் என்று நினைத்தாயா?” என்றான் ஆதி.
“நம்பித் தான் ஆகணும் ஆதி. நீயும் நானும் ஒண்ணா இருந்ததுக்கு ஆதாரம் இருக்கு என்கிட்ட. உன்னால என் வாழ்க்கையே வீணாகி விட்டது. இதற்கு நீ என்ன பதில் சொல்லப் போற?” என்று சங்கவி கேட்டாள்.
“நீ எது சொன்னாலும் அப்படியே நம்புவதற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை,” என்றான் ஆதி.
“அப்போ என் பொண்ணு சொல்றது எல்லாம் பொய்ன்னு சொல்றியா ஆதி?” என்று வேதாச்சலம் ஆதியிடம் சண்டைக்கு வந்தார்.
“அங்கிள், உங்க பொண்ணு என்ன சொன்னாலும் நீங்க அப்படியே நம்பலாம். ஆனா இதையெல்லாம் நம்பும் அளவுக்கு எனக்குப் புத்தி கெட்டுப் போகவில்லை,” என்றான் ஆதி.
சங்கவி நேராக வெங்கடாசலத்திடம் வந்து, “அங்கிள், நீங்களே சொல்லுங்க. எந்த ஒரு எந்த ஒரு பெண்ணும் இந்த மாதிரி ஒரு காரியத்தைச் செய்யத் துணிவாளா? அதுவும் ஏற்கனவே கல்யாணம் ஆன ஆதியுடன் நான் ஒரே படுக்கையைப் பகிர்ந்து இருக்கிறேன் என்றால், ஆதி என்னுடன் ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் போது எப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு மட்டுமே தெரியும்,” என்றவள்.
ஆதியுடன் சங்கவி சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களைக் காட்டி, “இதைப் பாருங்க அங்கிள். நானும் ஆதியும் எவ்வளவு அன்னியோன்யமாக இருந்தோம் என்று நீங்களே பாருங்கள்,” என்றவள் அந்தப் போட்டோக்களைக் காட்ட… அதில் டென்மார்க்கில் ஆதியுடன் ஷாப்பிங் சென்றது, ஸ்விட்சர்லாந்தில் இருவரும் ரெஸ்டாரண்ட்களுக்குச் சென்று ஒன்றாகச் சாப்பிட்டது, கஸ்டமர்களைச் சந்தித்து ஒன்றாகப் பார்ட்டிக்குச் சென்றது என்று இருவரும் மிகவும் நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோக்கள் இருக்க…
அதை எல்லாம் பார்த்த ஆதி, “இது எல்லாம் எப்படி?” என்று அவளிடம் கேட்க…
“என்ன ஆதி, ‘எப்படி’னு கேட்கிறே? நீ இந்த இடத்துக்கு எல்லாம் என் கூட வந்தேன்னு சொல்றதுக்கு என்கிட்டே நிறைய ஆதாரம் இருக்கு. நாம் மீட் பண்ணின ‘கிளைண்ட்’ எல்லாருக்கும் தெரியும்,” என்றால் சங்கவி.
“அவர்களுக்கு நீயும் நானும் ‘பிசினஸ் பார்ட்னர்ஸ்’ என்று மட்டும் தான் தெரியும். நீ சொல்வது போல எல்லாம் கிடையாது,” என்றான் ஆதி.
“அப்போ இந்தப் போட்டோவில் இருந்த இடத்துக்கு எல்லாம் நீ என்னுடன் வரவே இல்லை என்கிறாயா?” என்று கேட்டால் சங்கவி.
“நான் இந்த இடத்துக்கு எல்லாம் உன்னுடன் வந்தது உண்மைதான். ஆனால்…” என்று ஆதி பேச வரும்போது குறுக்கே வந்த வெங்கடாசலத்திடம், “பாருங்க அங்கிள், ஆதி என் கூட இங்கே எல்லாம் வந்தேன் என்று சொன்னதை நீங்க இப்போ கேட்டீங்க தானே?” என்றால் சங்கவி.
அவளிடம் “ஆம்,” என்று தலையை ஆடிய வெங்கடாசலம், ஆதியைப் பார்த்து, “ஆதி, என்ன இதெல்லாம்? இங்கே என்ன நடக்கிறது?” என்று அவனிடம் கேட்க…
அவர் அப்படி கேட்டதும், ஆதிக்குத் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டிய அப்பாவே இப்போது சந்தேகமாகத் தன்னைப் பார்க்க… ஆதி உள்ளுக்குள் உடைந்து போய் அப்படியே நின்று இருக்க… அப்போது தன் சக்கர நாற்காலியில் அமர்ந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த துர்கா தன் சேரைத் தள்ளிக் கொண்டு வந்து ஆதியின் அருகில் வந்தவள், அவன் கையைத் தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்த துர்கா, “ஏன் ஆதி, ஒரு மாதிரியா இருக்கே? இவங்க யாரு? ஏன் உன்னைப் பற்றி என்னவோ சொல்லிட்டு இருக்காங்க?
நீ என்னோட புருஷன்னு தானே சொன்னே? அப்புறம் எப்படி நீ இவங்க கூட ஒண்ணா கட்டிலில் அவங்க பக்கத்துல படுத்துத் தூங்கி இருப்பே?
இல்லை தானே? எனக்குத் தெரியும், நீ என்கூட மட்டும் தான் பக்கத்துல படுத்துத் தூங்குவேன்னு அன்னிக்குப் சொன்னேல்ல?” என்றவள் சங்கவியைப் பார்த்து, “ஏய்.. நீ போ… இது என்னோட ஆதி. அவன் உன் கூட எல்லாம் வர மாட்டான்,” என்று துர்கா சங்கவியைப் பார்த்து சிறு பிள்ளை போலப் பேச…
தன்னையே யார் என்று தெரியாத நிலையிலும் கூட துர்கா அவளிடம் வாய்மொழியாக, “அவளுடைய கணவன் நான் தான்,” என்று சொன்னதை வைத்து, இன்று இந்த நிலையிலும் தனக்கு ஆதரவாகப் பேசும் துர்காவை நினைத்து ஆதி தனக்குள் பெருமைப்பட்டுக் கொண்டான
_____________________
துர்கா பேசியதை எல்லாம் கேட்ட சங்கவி, “ஏய்…. நீ யாரு இதெல்லாம் சொல்றதுக்கு?” என்று துர்காவை அதட்ட…
சங்கவி துர்காவிடம் கோபமாகப் பேசவும், துர்கா பயந்து போய் ஆதியின் பின்னால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு நின்றாள்.
வேதாச்சலம் ஆதியிடம் வந்தவர், “ஆதி, என் பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்துறாத. நீ என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோ,” என்று வேதாச்சலம் ஆதியை கெஞ்சுவது போல நடிக்க…
“என்ன வேதாச்சலம் இது? ஆதி ஏற்கனவே துர்காவைக் கல்யாணம் பண்ணி இருக்கான்னு உனக்குத் தெரிஞ்சும் நீ இப்படி அவன் கிட்டே பேசுறே?” என்றார் வெங்கடாசலம்.
“ஆமாம் வெங்கடாசலம். ஆனா உன் மகன் ஆதி ஏன் கல்யாணம் பண்ணி இவ்வளவு நாட்கள் ஆகியும் துர்காவுடன் தன் வாழ்க்கையை ஆரம்பிக்காமல் இருந்தான்னு கேட்ட்டியா?
துர்காவுடன் தன் வாழ்க்கையை ஆரம்பிக்காமல் ஏன் கல்யாணம் பண்ணாம என் பொண்ணு கூட ஒரே படுக்கையை உன் மகன் பகிர்ந்திருக்கானே. அதை என்னவென்று நீ கேள்,” என்று வேதாச்சலம் கேட்டார்.
அவர் அப்படிச் சொன்னதும் அனைவரும் திரும்பி ஆதியைப் பார்க்க, அவனால் எதுவும் இப்போது பேச முடியவில்லை.
அவனிடம் வந்த விசாலாட்சி, “வேதாச்சலம் அண்ணா சொன்னது எல்லாம் உண்மையா ஆதி?” என்று கேட்டார்.
ஆதி, “அம்மா, அது.. வந்து.. நானும் துர்காவும்…” என்று ஆதி பேச வர…
“அப்போ துர்கா கூட நீ இதுவரை உன் வாழ்க்கையை ஆரம்பிக்கவே இல்லையா?” என்றார் விசாலாட்சி அதிர்ச்சியாக.
ஆதி “ஆம்,” என்று தலையை ஆட்டியதும், விசாலாட்சி ஆதியின் கன்னத்தில் பளார் என்று அரைந்துவிட்டார்.
இதை அங்கு இருந்த யாரும் எதிர்பார்க்கவே இல்லை. “அப்போ நீ துர்கா கூட ஒண்ணா உன் வாழ்க்கையை ஆரம்பிக்காமல் இருக்கக் காரணம், நீ இன்னமும் சங்கவியை உன் மனசுல நினைச்சிட்டு இருக்கியா?” என்று கேட்டார்.
அவர் அப்படி கேட்டதும் ஆதி அவரை அதிர்ச்சியாகத் திரும்பிப் பார்த்தவன், “அம்மா, நான் என்னிக்கு துர்கா கழுத்தில் தாலி கட்டினேனோ, அப்பவே சங்கவியை மறந்துட்டேன். இப்படி எல்லாம் பேசாதீங்க,” என்று அவன் அம்மாவை கலங்கிய விழிகளோடு ஆதி பார்க்க…
“அப்புறம் ஏன் ஆதி இப்படி எல்லாம் நடக்குற அளவுக்குக் கொண்டு வந்து விட்டு இருக்கே?” என்று விசாலாட்சி அழுதப்படியே ஆதியிடம் கேட்க…
அவரிடம் வந்த சங்கவி, “ஆன்ட்டி, இப்போவாவது புரிஞ்சுதா? ஆதி என் கூட இருந்தது உண்மை என்று. அவன் உங்க கிட்டே பொய் சொல்றான், ‘அவன் மனசுல நான் இல்லைன்னு’. அப்படி இருந்து இருந்தால், என்னை இந்த அளவுக்குப் பார்த்துக் கொள்வானா? ஒரே படுக்கையை என்னோடு பகிர்ந்து கொள்வானா?” என்று சங்கவி கேட்டாள்.
அவள் கேட்டதற்கு அங்கிருந்த யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. ஏன், ஆதி கூட அமைதியாக நிற்க…
அங்கிருந்த அனைவரையும் பார்த்து, “இப்போ சொல்லுங்க. நான் சொன்னது பொய்யா?” என்று சங்கவி கேட்க…
யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…
ஆதியைத் திரும்பிப் பார்த்த சங்கவி அவன் அருகில் வந்து, ஆதியின் அருகில் வந்து, “எப்படி ஆதி? என்னோட ‘பிளான் ஒர்க் அவுட்’ ஆகிருச்சா? என்ன சொன்னே… ‘என்னோட தில்லாலாங்கடி வேலை எல்லாம் உன்கிட்டே வேகாது’ன்னு சொன்னே… இப்போ பார்த்தியா? நீ என்கூடப் படுக்கையில் ஒண்ணா இருக்காமலே, இங்க இருக்க எல்லாரையும் நீயும் நானும் ஒண்ணா இருந்ததா நம்ப வெச்சிட்டேன்,” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி ஆதியின் காதில் மெதுவாகச் சொன்ன சங்கவி, மறுபடியும் அங்கிருந்தவர்களைத் திரும்பிப் பார்த்து…
“சொல்லுங்க. ‘நான் சொன்னது பொய்’ன்னு சொல்லி இங்க ஒருத்தர் சொல்லுங்க. நான் இப்பவே இந்த மண்டபத்தை விட்டு வெளியே போறேன்,” என்று சங்கவி கத்த…
“நீ சொன்னது பொய் தான். இப்பவே இந்த மண்டபத்தை விட்டு வெளியே போ…” என்று சத்தம் வர…
சத்தம் வந்த திசையைத் திரும்பி அனைவரும் பார்க்க… சங்கவியும் திரும்பி, யார் தான் “பொய்” என்று சொல்கிறார்கள் என்று திரும்பிப் பார்த்தவள், அங்கே நின்று இருந்தவர்களைப் பார்த்து, “நீயா?” என்று புருவம் சுருக்கிப் பார்த்தாள்.
சங்கவியின் சவாலுக்குப் பதில் சொன்னது யார்? அடுத்து என்ன நடக்கும்?
படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க
