Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 131

உன் ரகசிய ரசிகை நான் 131

by Layas Tamil Novel
209 views

சுவிட்சர்லாந்தில் ஆதி தூங்கும்பொழுது அவனுக்குத் தெரியாமல் அவனுடன் போட்டோ எடுத்திருந்த சங்கவி, அதை மண்டபத்தில் இருந்த அனைவரிடமும் காட்டி அவர்களை நம்ப வைத்துவிட்டாள்.

அனைவரையும் பார்த்து, “நான் சொன்னது பொய் என்று யாராவது சொன்னால், நான் இப்போதே இந்த மண்டபத்தை விட்டு வெளியே போகிறேன்!” என்று சங்கவி திமிராகப் பேசினாள்.

“இப்போது நீ சொன்னது எல்லாமே பொய். இப்பவே இந்த மண்டபத்தை விட்டு வெளியே போ!” என்று ஒரு குரல் வர, குரல் வந்த திசையை அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

சங்கவியும், “யார் நான் சொன்னது பொய் என்று இத்தனை பேர் முன்னிலையில் சொல்வது?” என்று திரும்பிப் பார்த்தவள், அங்கே வாசலில் நின்றவர்களைப் பார்த்து, “நீயா?” என்று அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

அனைவரும் திரும்பிப் பார்க்க மண்டபத்திற்குள் போதி வந்து கொண்டிருந்தவன், நேராக சங்கவியிடம் வந்து, “நீ சொல்றது எல்லாமே பொய்!” என்று சங்கவியைப் பார்த்துச் சொன்னான்.

“நான் பொய்தான் சொன்னேன்னு உனக்கு எப்படித் தெரியும்? நானும் ஆதியும் சுவிட்சர்லாந்தில் ஒன்றாக இருக்கும்போது நீ அங்கே இல்லை. பிறகு எப்படி உனக்கு நான் சொல்றதெல்லாம் பொய்ன்னு தெரியும்?” என்று கேட்டாள் சங்கவி.

“நீ சொல்றது உண்மைதான் சங்கவி. நீயும் ஆதியும் சுவிட்சர்லாந்தில் ஒண்ணா இருக்கும்போது நான் உங்க கூட இல்லை. பிறகு ஆதியுடன் நான் பிசினஸ் விஷயமாக சுவிட்சர்லாந்து வந்தபோது, உன்னையும் என்னையும் மட்டும் சுவிட்சர்லாந்தில் விட்டுவிட்டு ஜெர்மனிக்கு ஆதி சென்றது ஞாபகம் இருக்கிறதா உனக்கு?” என்று கேட்டான் போதி.

போதி சொன்னது நினைவுக்கு வந்தவள், “ஆமாம், ஞாபகம் இருக்கு. அதுக்கு என்ன இப்போ?” என்று கேட்டாள்.

“சரி, அப்போ ஒரு நிமிஷம் இதைப் பாரு,” என்று சொல்லிவிட்டு, தன் மொபைலை எடுத்து மண்டபத்தில் டி.வி.யில் திருமண நிகழ்ச்சியை ஒலிபரப்பிக் கொண்டிருந்தவரிடம் கொண்டுபோய்க் கொடுத்து, “இந்த வீடியோவை டி.வி.யில் போடுங்க,” என்று போதி கொடுக்க…

போதி கொடுத்த போனைக் வாங்கிய அந்த நபர் ஆதியைத் திரும்பிப் பார்க்க… ஆதி கண் அசைத்து, “சரி,” என்று சம்மதம் சொல்லி, அதை டி.வி.யில் போடச் சொன்னான்.

டி.வி.யில் போதி கொடுத்த வீடியோ ஓட ஆரம்பித்தது. அதில் சங்கவியும் போதியும் ஒரு ரெஸ்டாரன்ட்டில் ஒன்றாக அமர்ந்து ட்ரிங்க்ஸ் சாப்பிட்டதும், ட்ரிங்க்ஸ் சாப்பிட்டுக் கொண்டே துர்காவைப் பற்றியும் ஆதியைப் பற்றியும் தவறாகப் பேசியதும், பிறகு ஆதியைத் தான் அடைய நினைப்பதைப் பற்றிப் போதியிடம் சொன்னதும் ரெக்கார்டு ஆகி இருந்தது.

அதைப் பார்த்த அனைவரும் ஆதியையும் சங்கவியையும் பார்க்க… சங்கவி, “நான் கல்யாணம் பண்ணிக்க இருந்த ஆதியை அந்த துர்கா எப்படியோ ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டா. அந்தச் சோகத்தில்தான் நான் இப்படி நடந்துகொண்டேன். ஆனால் சுவிட்சர்லாந்தில் ஆதி என்னுடன் மிகவும் நெருங்கிப் பழகியது உண்மைதான். இந்த ஃபோட்டோவில் இருப்பது உண்மைதான். ஆதியும் நானும் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டோம். நாங்கள் இருவரும் ஒரே அறையில் ஒன்றாக ஒரு இரவு முழுவதும் இருந்தது உண்மைதான்,” என்று சங்கவி வெட்கமில்லாமல் சொல்ல…

“அதைத்தான் நான் பொய்யின்னு சொல்றேனே சங்கவி. மறுபடியும் நீ ஏன் அந்தப் பொய்யை உண்மைங்கிற மாதிரியே எல்லார்கிட்டயும் சொல்லி நடிச்சிட்டு இருக்கே?” என்று கேட்டான் போதி.

“அது பொய்யின்னு உன்னால நிரூபிக்க முடியுமா?” என்று கேட்டாள் சங்கவி.

“ஏன் முடியாது? அதையும் நான் இப்பவே நிரூபிக்கிறேன்,” என்று சொன்ன போதி, தான் கொடுத்த போனை வாங்கி வேறொரு வீடியோவைப் பிளே செய்யச் சொல்ல…

போதி சொன்ன அந்த வீடியோ டி.வி.யில் ஓட… அதில் சங்கவி மறுநாள் காலை தன் அப்பாவிடம், அவள் தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள ரெஸ்டாரன்ட்டில் இருந்து தன் அப்பாவுடன் போன் பேசிக் கொண்டிருந்த உரையாடல் ஓட ஆரம்பித்தது.

அதில் சங்கவி தன் அப்பாவிடம், ஆதிக்கு அருகில் அவனுக்குத் தெரியாமல் எப்படி அந்தப் போட்டோக்களை எடுத்தாள் என்பதையும், வெங்கடாசலத்தை எப்படி அந்தப் போட்டோக்களைக் காட்டி அவரை மிரட்டி ஆதியைத் திருமணம் செய்யப் போகிறேன் என்றும், அவளிடம் தான் போட்ட பிளானைச் சொல்லிக் கொண்டிருந்தது – அவள் பேசிய அனைத்தும் அந்த வீடியோவில் டி.வி.யில் ஓடியது.

அவள் அப்பாவிடம் பேசிய அந்த வீடியோவை எப்படிப் போதி எடுத்திருப்பான்? அவள் போன் பேசிவிட்டு வரும்போது அவன் தன் டேபிளில்தானே அமர்ந்திருந்தான்? என்று சங்கவி குழப்பமாகப் போதியைப் பார்க்க…

சங்கவி அவள் அப்பாவிடம் பேசும்போது அவளுக்குத் தெரியாமல் போதிதான் அந்த வீடியோவை எடுத்திருந்தான்.

“என்ன சங்கவி, ஒரே குழப்பமா இருக்கா? நான் என்னோட டேபிளில்தானே உட்கார்ந்திருந்தேன். ஆனா யார் இந்த வீடியோவை எடுத்தாங்கன்னு யோசிக்கிறியா?” என்றும் போதி கேட்க…

ஆமாம் அன்று சங்கவி தலையை ஆட்டினாள்.

“நான் என்னோட டேபிளில் இருந்து கொண்டே அங்கிருந்த பேரருக்குப் பணம் கொடுத்து நீ பேசிக்கொண்டு இருக்கும்போது இந்த வீடியோவை உனக்குத் தெரியாமல் எடுக்கச் சொன்னேன்,” என்றவன், “எப்படி, வீடியோ நல்லா தெளிவா வந்திருக்கு தானே?” என்று போதி நக்கலாகச் சங்கவியைப் பார்த்துக் கேட்க…

இவ்வளவு நேரம் வாய் கிழிய அனைவரிடமும் பேசியவள் இப்போது போதியிடம் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்றாள்.

சிறிது நேரம் என்ன பேசுவது என்று யோசித்தவள், பிறகு எதையோ கண்டுபிடித்தவள் போல, “அதில் நான் அந்தப் போட்டோவை வைத்து ஆதியைத் திருமணம் செய்து கொள்ள என்ன செய்யப் போகிறேன் என்றுதானே என் அப்பாவிடம் சொன்னேன். ஆனால் ஆதியின் அறைக்குள் உண்மையில் நடந்தது என்ன என்று ஆதிக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்,” என்று சங்கவி சொல்ல…

இப்போது அவள் பேசியதற்குப் போதியால் பதில் பேச முடியாமல் போகவே, போதி ஆதியைப் பார்க்க…

அப்போது, “என் அறைக்குள் உனக்கும் எனக்கும் என்ன நடந்தது என்று நான் உனக்குச் சொல்கிறேன்!” என்றான் ஆதி.

அவனைப் பார்த்து, “என்ன ஆதி, அறைக்குள் நடந்தது எல்லாம் இப்படி எல்லோர் முன்பும் பொதுவெளியில் சொல்வதா?” என்று கூறி சங்கவி ஆதியிடம் வெட்கப்பட…

அவள் வெட்கப்படுவதைப் பார்க்கச் சகிக்காமல் எல்லோரும் முகம் சுளித்தபடி அங்கு நின்று இருந்தனர்.

“இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ செய்த காரியத்திற்கு நீ இங்கு இருக்கும் ஒருவரையும் பார்க்க முடியாமல் அவமானத்தில் வெட்கப்பட்டுத் தலை குனிந்து நிற்கப் போகிறாய்,” என்று ஆதி சங்கவியிடம் சொன்னவன், தன் மொபைலை எடுத்து ஒரு வீடியோவைப் போட்டு அனைவரிடமும் காட்டினான்.

அதில் ஆதி மதுபோதையில் ஹோட்டலிற்குள் வருவது போலவும், அவனை கைத்தாங்கலாகத் தன் தோள்களில் அவன் கையைப் போட்டு ஆதியைத் தாங்கிப் பிடித்தவாறு சங்கவி ஆதியை அழைத்துக் கொண்டு ஆதியின் அறைக்குள் செல்லும் வீடியோ இருந்தது.

அதைப் பார்த்த சங்கவி ஆதியிடம், “பார்த்தியா… பார்த்தியா… நான் தான் போதையில் இருந்த உன்னைக் கைத்தாங்கலாக உன் அறைக்குள் கூட்டிச் சென்றேன்!” என்றாள் சங்கவி.

“இரு சங்கவி, அவசரப்படாதே! இன்னும் வீடியோ இருக்கு,” என்றவன் ஆதி அவளைப் போனைப் பார்க்கச் சொல்லிச் ஜாடை செய்ய…

அவன் பார்வையில் இருந்த திமிரைக் கண்டு பயந்த சங்கவி, ஆதியின் கையிலிருந்த போனைப் பார்க்க…

அவன் அறைக்குள் ஆதியை அழைத்து வந்து, அவனை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, அந்த அறையை விட்டு வெளியே வந்தவள் ஆதியின் அறைக்கதவை மூடி லாக் செய்தவள், தன் அறைக்குச் சென்றாள்.

அவள் அறைக்குச் சென்ற சிறிது நேரத்தில் இரண்டு ஆட்கள் சங்கவியின் அறைக்கதவைத் தட்ட, சங்கவி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவள், அந்த ஆட்களிடம் ஏதோ சொல்லி, கையில் சாவியைக் கொடுக்க…

அந்த ஆட்கள் சங்கவியிடம் சாவியை வாங்கிக் கொண்டு நேராக ஆதியின் அறைக்குள் நுழைந்தனர். அவர்கள் அறைக்குள் வந்தது வரை அந்த வீடியோவில் இருந்தது.

ஆதி சங்கவியைப் பார்த்து, “என்ன சங்கவி, அடுத்த வீடியோவைப் பார்க்கத் தயாரா?” என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும் இதுவரை தைரியமாக இருந்த சங்கவி, ஏற்கனவே ஆதி காட்டிய வீடியோவைப் பார்த்துப் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தவள், இப்போது அடுத்த வீடியோ ப்ளே செய்கிறேன் என்று ஆதி சொன்னதும் மேலும் சங்கவிக்கு உடல் உதறல் எடுக்க ஆரம்பித்தது.

ஆதி அடுத்த வீடியோவை ஓட விட… அதில் சங்கவி அனுப்பிய ஆட்கள் இருவரும் ஆதியின் அறைக்குள் வந்து கதவைச் சாற்றிவிட்டு, ஆதியின் பெட்ரூமிற்குள் நுழைய, அங்கே ஆதி கட்டிலில் இல்லாதது கண்டு குழம்பி நிற்க…

அப்போது அவர்கள் அருகில் யாரோ வருவது போல இருக்க… யார் என்று திரும்பிப் பார்த்தவர்கள், ஆதி அவர்கள் பின்னால் நின்றிருந்ததைப் பார்த்ததும் பயத்தில் இரண்டு அடி பின்னால் நகர…

அப்போது கார்டைன் பின்னால் ஒளிந்திருந்த ஆதியின் பாடி கார்டுகள் வெளியே வர, அவர்களைப் பார்த்ததும் சங்கவி அனுப்பிய ஆட்கள் ஆதியின் பாடி கார்டுகளைக் கண்டு அதிர்ச்சியில் அந்த அறையை விட்டு ஓடப் பார்க்க…

ஆதியிடம் இருந்து தப்பிக்க நினைத்த அந்த இரண்டு பேரின் கழுத்தில் கையை வைத்துக் பிடித்து அவர்களை அந்த இடத்திலிருந்து நகர விடாமல் பிடிக்க… அவர்கள் இருவரும் ஆதியின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சிக்க…

அவர்களால் ஆதி ஒருவனைச் சமாளிக்க முடியவில்லை. அதற்குள் ஆதியின் பாடி கார்டுகள் வந்து அந்த இரு ஆட்களையும் ஆதியின் கைகளில் சிக்கி இருந்தவர்களைப் பிடித்து இழுத்துத் தங்கள் அருகில் நிற்க வைத்து அவர்கள் பின்னால் நகர்ந்து நின்று கொண்டனர்.

அவர்களைப் பார்த்த ஆதி, “சங்கவி என்ன சொன்னாள்?” என்று அவள் சொன்ன விவரங்களை எல்லாம் சங்கவி அனுப்பிய ஆட்களிடம் கேட்க…

அவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க…

ஆதியின் கார்டுகள் அவர்கள் இருவரையும் தங்கள் பாணியில் கவனிக்க…

அவர்களிடம் அடி வாங்க முடியாத அந்த இருவரும் சங்கவி கூறிய அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஆதியிடம் சொல்ல…

அவர்கள் சொன்னதை எல்லாம் கேட்ட ஆதி, அங்கிருந்த இருவரில் ஒருவனிடம் இருந்த போனை வாங்கித் தன் கார்டிடம் கொடுத்தவன். மற்றோருவனுடைய போனில் இருந்து தன் எண்ணிற்கு அழைத்து அதை அட்டென்ட் செய்தவன், அவர்களிடம் சங்கவி சொன்னது போலவே செய்துவிட்டதாக அவளிடம் போய் சொல்லச் சொன்னான். அப்படிச் சொல்லாவிட்டால் என்று சொன்னவன், அதில் ஒருவனை அழைத்து அவனிடம் ஒரு செல்போனைக் கொடுத்தவன், இதை அவன் பேண்டிற்குள் ஒளித்து வைக்கச் சொன்னான். ஆதி சொன்னது போலவே அந்த ஆள் செய்ய… “நீங்கள் எதுவும் நான் சொன்னதை மீறிச் செய்தால், நான் கொடுத்த மொபைலில் போம் செட் செய்திருக்கிறேன். நான் இங்கிருந்தபடியே அதை வெடிக்கச் செய்து விடுவேன்,” என்று ஆதி சொன்னதும் இருவரும் பயந்து போய் ஆதியைப் பார்க்க…

“ஆடு தானா வந்து மாட்டும் போது அதை விட்டு விடுவதற்கு நான் ஒன்றும் அவ்வளவு நல்லவன் இல்லை,” என்ற ஆதி, அவர்கள் இருவரையும் சங்கவியின் அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அவர்கள் பின்னாலேயே தன் கார்டுகள் சிலரை அனுப்பி வைத்தவன்.

சங்கவி செய்யச் சொன்னது போலத் தன் மேல் சட்டையைக் கழற்றிவிட்டுப் பெட்டில் படுத்துக்கொண்டு, தன் இடுப்புவரை போர்த்திக் கொண்டு தூங்குவது போல நடிக்க ஆரம்பித்தான்.

ஆதியின் பாடி கார்டுகள் அந்த அறையில் வேறு பக்கம் யாருக்கும் தெரியாமல் சென்று மறைந்து நின்று கொண்டனர்.

சிறிது நேரத்தில் ஆதியின் அறைக்குள் வந்த சங்கவி, ஆதியின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்து முகம் சுளித்தவள், பின் தன் சட்டையைக் கழற்றிவிட்டு உள்ளே போடும் பனியனுடன் ஆதியின் அருகில் நெருங்கிப் படுத்தவள், ஆதியுடன் சேர்ந்து படுத்து விதவிதமாக ஆதியுடன் தன்னையும் சேர்த்துப் போட்டோ எடுத்துக் கொண்டாள்.

பிறகு அவனிடம் இருந்து எழுந்து அவன் உடலில் பட்ட தன் கைகளை அருவருப்பாக, “அவனைத் தொட்டு விட்டோம்,” என்று தேய்த்துவிட்டுக்கொண்டவள், அந்த அறையை விட்டுச் சென்றுவிட்டாள்.

அவள் சென்ற சிறிது நேரத்தில் சங்கவியின் ஆட்கள் ஆதியின் அறைக்குள் வந்து அவனிடம் மன்னிப்புக் கேட்க…

அவர்கள் இருவரையும் தன் பாடி கார்டுகளிடம் சொல்லி வெளியே அழைத்துச் செல்லச் சொன்ன ஆதி, “அவர்களை நான் சொல்லும் வரை வெளியே எங்கும் விடக்கூடாது,” என்று உத்தரவிட்டு அவர்களை அனுப்பி வைத்தவன்.

அதுவரை அந்த அறையில் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருந்த காமிராவை எடுத்து, அதில் இங்கு நடந்தது எல்லாம் சரியாக விழுந்திருக்கிறதா என்று சரி பார்த்த ஆதி, அந்த காமிராவை ஆஃப் செய்வது வரை அந்த வீடியோவில் ரெக்கார்டு ஆகி இருந்தது.

இவ்வளவு நேரம் ஆதி காட்டிய வீடியோக்களைப் பார்த்த சங்கவியும், அவளைச் சுற்றியிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க…

ஆதி சங்கவியைப் பார்த்து, “என்ன சங்கவி, போதுமா நான் காட்டிய ஆதாரம்?” என்று கேட்டான்.

அவள் மிரண்டு போய் ஆதியைப் பார்க்க…

“எப்படிடா நாம கொடுத்த மருந்தைச் சாப்பிட்டு இவ மயக்கம் போடாம இத்தனை வேலை பண்ணினான்?” என்று பார்க்கிறாயா? “நீ கொடுத்த ஜூஸ் நான் குடிக்கவே இல்லை. நீ சொன்னது போல அந்த பேரர் மருந்து கலந்த ஜூஸை எனக்குக் கொடுக்கவில்லை. அவன் கொடுத்தது என் ஆட்கள் அவனுக்குக் கொடுத்து, என்றும் கொடுக்கச் சொன்ன ஜூஸ்,” என்று சொன்ன ஆதி.

“இதற்கு மேலும் உனக்கு ஆதாரம் எதுவும் தேவை இருக்காது என்று நான் நினைக்கிறேன்,” என்றான் ஆதி.

இப்போது சங்கவி எதுவும் பேச முடியாமல் அங்கு நிற்க, அவளைச் சுற்றியிருந்த ஆதியின் சொந்தங்கள் அனைவரும் சங்கவியைத் திட்ட…

அவர்கள் திட்டுவதைக் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. அவ்வளவு மோசமாக அங்கிருந்தவர்கள் சங்கவியைத் திட்ட ஆரம்பித்தனர்.

“நான்தான் ஆட்களை வைத்து அப்படிச் செய்யச் சொன்னேன் என்று தெரிந்ததும் ஏன் நீயும் அதற்கு ஒத்துழைத்து என்னிடம் நடித்தாய்?” என்று ஆதியிடம் கேட்டாள் சங்கவி.

“நானும் உன்னை ஒரு பெண் என்று நினைத்துத் தான் நீ எது செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அமைதியாக இருந்தேன். ஆனால் எப்போது நீ எனக்குத் தூக்க மாத்திரை கொடுத்து, எனக்கே தெரியாமல் என்னுடன் அப்படி இருக்கத் துணிந்தாயோ, அதன் பிறகு என்னுடைய பொறுமை எல்லாம் காற்றில் பறந்து விட்டது. அதனால் தான் நீ எந்த அளவுக்குச் செல்கிறாய் என்று எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்று நான் பொறுமையாக இருந்தேன்,” என்றான் ஆதி.

“இப்போது மண்டபத்திற்கு வந்து நாம் இருவரும் இருந்த போட்டோவை காட்டி நான் உன்னைப் பிளாக்மெயில் செய்தபோது கூட ஏன் நீ அமைதியாக இருந்தாய்?” என்று கேட்டாள் சங்கவி.

“நீ என் துர்காவை இத்தனை பேர் முன்னிலையிலும் அவமானப்படுத்தும்பொழுது எனக்கு எப்படி இருந்தது என்று தெரியுமா? அதே போன்ற வழியை நீயும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான். வலியை அனுபவிக்கும் முன் உனக்குச் சிறிது நேரம் சந்தோஷமாக இருந்து விட்டுப் போகட்டும் என்று நான் வேண்டுமென்றே பொறுமையாக இருப்பது போல நடித்தேன்,” என்றான் ஆதி.

“இனியும் நான் உன்னைச் சும்மா விட்டு வைக்கப் போவதில்லை ஆதி. நான் இப்போதே போலீசுக்கு அழைத்து உன்னைப் போலீஸிடம் ஒப்படைக்கப் போகிறேன்,” என்று சொன்னாள்.

இப்போது சங்கவியின் தந்தை வேதாச்சலம் ஆதியிடம் வந்து, “ஆதி, என் பொண்ணு பண்ணது எல்லாம் தப்புதான். உனக்காக நான் உன்கிட்ட மன்னிப்புக் கேட்கிறேன். தயவுசெய்து அவளை மன்னிச்சு விட்டுடுப்பா,” என்று அவனிடம் கெஞ்ச…

அவர் கெஞ்சுவதைப் பார்த்து விரக்தியாகச் சிரித்த ஆதி. “அங்கிள், துர்காவும் சங்கவி போல ஒரு பெண்தானே? அப்படி இருக்க அவள் மேல் பழி போட உங்க பொண்ணுக்கு எப்படி மனசு வந்தது? அவள்தான் இப்படி எதுவும் புரியாமல் நடந்துக்கிறான்னா, அவளுக்குப் புத்திமதி சொல்ல வேண்டிய நீங்களே அவளோடு சேர்ந்து இப்படி எனக்கு எதிராத் தூண்டிவிட்டு, அவள் வாழ்க்கையையே நீங்க கெடுத்துட்டீங்க. அவ இப்படி ஆனதுக்கு முக்கிய காரணமே நீங்கதான்,” என்று வேதாச்சலத்தை ஆதி குற்றம் சொல்ல…

வேதாச்சலத்தால் எதுவும் பேச முடியாமல் தலை குனிந்து நின்றார். அவரிடம் வந்த ஆதி, “உங்க பொண்ணை நான் இந்தச் சம்பவத்தோடு மன்னிச்சு விட்டுடலாம்னுதான் அன்றே நினைச்சேன். ஆனால் அதன் பிறகு அவள் செய்த காரியம் தான் நான் சங்கவியை மன்னிக்க முடியாமல் போய்விட்டது,” என்று ஆதி சொல்ல…

ஆதி சொல்வதைப் புரியாமல் வேதாச்சலம் நிமிர்ந்து பார்க்க…

“என்ன அங்கிள் பார்க்குறீங்க…” என்று கேட்ட ஆதி, நேராக துர்காவிடம் சென்று அவள் வீல் சேரைத் தள்ளிக்கொண்டு வந்து வேதாச்சலம் முன்பு நிறுத்தியவன், “உங்க முன்னாடி இருக்கிறது இப்போ பழைய துர்கா கிடையாது. தன்னுடைய பழைய நினைவுகள் எல்லாம் மறந்துட்டு, தன்னுடைய சிறுவயது ஞாபகங்களை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கும் துர்கா இவள்,” என்றான் ஆதி.

“என்னை உயிருக்கு உயிராக் காதலிச்ச என் துர்கா… எனக்கு எப்படிப்பட்ட நோய் இருந்தாலும் பரவாயில்லை என்று என்னுடனே சாகும்வரை வாழ நினைத்த என்னுடைய துர்கா… எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்த என்னுடைய துர்கா… எனக்காக அவள் உயிரைக் கூட விடத் தயாராக இருந்த என்னுடைய துர்காவை… உங்க பொண்ணு கொல்லப் பார்த்தாள் தெரியுமா?” என்றான் ஆதி.

வேதாச்சலம் எதுவும் பேசாமல் ஆதியைப் பார்க்க…

“என்ன அங்கிள் அப்படிப் பார்க்குறீங்க? நான் சொன்னதை உங்களால் நம்ப முடியலையா? இதுக்கும் உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் ஆதாரம் வேணும்னு சொன்னா, அந்த ஆதாரத்தையும் நான் இப்போ உங்க எல்லார் முன்னாடியும் காட்டத் தயாராத்தான் இருக்கிறேன்,” என்று சொல்ல…

ஆதி சொன்னதைக் கேட்டு சங்கவியும் வேதாச்சலமும் குலை நடுங்கிப் போய் நிற்க…

“சொல்லுங்க அங்கிள், உங்களுக்கு ஆதாரம்தானே தேவைப்படுது?” என்றவன், “என்னால இங்கேயே இப்பவே இந்த இடத்திலேயே துர்காவை இப்படி ஆக்கினதுக்கு சங்கவி யாரை வைத்து இந்தக் காரியத்தைச் செய்தாள் என்று என்னால் ஆதாரத்தோட நிரூபிக்க முடியும். பார்க்குறீங்களா?” என்று ஆதி சொல்ல…

தான் செய்த அனைத்து விஷயங்களையும் ஆதி தெரிந்து வைத்திருந்ததைப் பார்த்த சங்கவிக்கு ஈரக் குலையே நடுங்கியது.

முகத்தில் அத்தனை ஆத்திரத்துடனும் கோபத்துடனும் சங்கவியின் அருகில் வந்த ஆதி, சங்கவியைப் பார்த்து, “என்ன சங்கவி, பயமா இருக்கா?” என்றான்.

உடல் நடுங்க ஆதியின் முகத்தைப் பார்த்த சங்கவி, அவன் பார்வையில் இருந்த குரூரத்தைக் கவனித்தவள் உடல் மேலும் நடுங்க…

சங்கவி நின்ற இடத்திலேயே தலை சுற்றி மயங்கிக் கீழே விழுந்தாள்.

சங்கவி திடீரென்று மயங்கிக் கீழே சரியவும், அவளிடம் வேகமாக வந்த வேதாச்சலம், அவளைத் தூக்கித் தன் மடியில் கிடத்தி, “சங்கவி… சங்கவி…” என்று அவள் கன்னத்தைத் தட்டி அவளை அழைக்க…

சங்கவி கண் விழிக்காமல் போகவே… அவளை அப்படிப் பார்க்க முடியாமல் வேதாச்சலம் பதற… அவர் அருகில் நின்றிருந்த சிவகாமியைப் பார்த்து, “ஏய் சிவகாமி, ஏன் அப்படியே நின்னுட்டு இருக்க? நம்ம பொண்ணு மயக்கம் போட்டு விழுந்துட்டா பாரு! சீக்கிரம் போய்த் தண்ணி கொண்டு வா,” என்று வேதாச்சலம் சிவகாமியிடம் கத்த…

சிவகாமி அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே சிலை போல நின்று இருக்க…

சிவகாமியின் மேல் வேதாச்சலத்திற்குக் கோபம் வந்தாலும் இப்போது சங்கவி இருக்கும் நிலையில் அவரால் சிவகாமியிடம் சண்டை போட முடியவில்லை.

“ஐயோ… என் பொண்ணு மயக்கம் போட்டு இப்படிக் கிடக்கிறாளே! சுத்தி நின்னு எல்லாரும் இப்படி வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க! யாராவது கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்களேன்,” என்று வேதாச்சலம் கெஞ்ச…

அங்கிருந்த யாருமே அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அனைவரும் தங்கள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு அப்படியே நிற்க…

அப்போது வேதாச்சலத்தின் முன்பு தண்ணீர் பாட்டிலுடன் கொண்டு வந்து ஒரு கை நீட்ட… அதை வாங்கி அவசர அவசரமாக பாட்டிலின் மூடியைத் திறந்து தண்ணீரைச் சங்கவியின் முகத்தில் தெளிக்க…

தன் முகத்தில் சில்லென்று தண்ணீர் பட்டதும் மயக்கத்தில் இருந்த சங்கவி மெல்லக் கண் விழித்தாள். சங்கவி கண் விழித்ததும் சந்தோஷப்பட்ட வேதாச்சலம், தன் கையில் இருந்த பாட்டிலை தனக்கு அவசரத்தில் தண்ணீர் கொடுத்து உதவியவரிடம், “நன்றி,” என்று சொல்லிக் கொண்டே பாட்டிலை அவரிடம் நீட்டிக் கொண்டே அவர் முகத்தைப் பார்க்க…

தன் மகளுக்கு உதவியவரின் முகத்தைப் பார்த்ததும் வேதாச்சலம் அப்படியே உறைந்து போய் தரையில் அமர்ந்து விட்டார்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured