Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 134

உன் ரகசிய ரசிகை நான் 134

by Layas Tamil Novel
212 views

நிலானி போன் செய்து மதுவிடம் இங்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறி, நிலானியும் விக்கியும், விக்கியின் அம்மா அப்பாவுடன் அவர்கள் வீட்டிற்குச் செல்வதாகச் சொன்னாள். சிம்லாவில் இருந்து மது வந்த பிறகு மற்றதைப் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு நிலானி போனை வைக்க…

அவளுடன் போன் பேசிவிட்டுத் திரும்பிய மது, அவள் பின்னே சத்தமில்லாமல் வந்து நின்ற பவனைப் பார்த்ததும் திடுக்கிட்டவள் இரண்டு அடி பின்னால் செல்ல… வீட்டிற்கு வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்த மது, அவனைத் திடீரென்று பார்த்து அதிர்ச்சியில் இரண்டடி பின்னால் நகர்ந்தவள் பின் அவனைப் பார்த்து, “இப்படித்தான் சத்தமில்லாமல் வந்து பின்னாடி நிற்கிறதா? எனக்கு ஒரு நிமிஷம் பயமே வந்துவிட்டது!” என்றாள் மது.

“ஏங்க, நான் என்ன பேயா? பூதமா? நீங்க என்னைப் பார்த்துப் பயப்படுவதற்கு?” என்றவன், “நான் சும்மா வெளியே காத்து வாங்கலாம்னு வந்தேன். நீங்க பேசிட்டு இருந்ததைப் பார்த்ததும் என்ன பண்றதுன்னு தெரியாம அப்படியே நின்னுட்டேன்” என்று சிம்லாவில் இருந்து அந்தக் குளிரில் ஷால்வையை இருக்கப் போர்த்திக் கொண்டு மதுவிடம் பொய் சொல்ல…

“எதுக்கு பவன் இப்படி வாய் கூசாமல் பொய் பேசுறீங்க? இங்க இருக்குற குளிருக்கு ரூம்மை விட்டு வெளியே வரவே முடியலை. ஆனா உங்களுக்கு மட்டும் உள்ளே காத்து வரலைன்னு நீங்க வீட்டை விட்டு வெளியே வந்து காத்து வாங்க வந்தீங்களா? இதை என்ன நம்பச் சொல்றீங்களா?” என்று கேட்டாள் மது.

“நான் ஏன் மது உங்க கிட்ட பொய் சொல்லணும்? நீங்க வேணா என் ரூமுக்குள்ள வந்து பாருங்களேன். காத்து வரதுக்கு ஒரு ஜன்னல் கூட இல்லை, உள்ளே கப்புன்னு இருக்கு. உங்க ரூம் மாதிரி என் ரூம் ஒன்றும் விசாலமா இல்லை” என்று சொன்னான் பவன்.

“இதுக்குத்தான் வந்த உடனே வேடிக்கை பார்த்துட்டு நிக்காமல், நமக்கு என்ன வேணும்கிறதுன்னு முதல்ல பார்த்துட்டு, அதுக்கப்புறம் மற்ற வேலை எல்லாம் பார்த்திருக்கணும்” என்று மது உள்ளே செல்ல…

மதுவின் பின்னாலேயே வந்த பவனைத் திரும்பிப் பார்த்த மது, “இப்போ உங்களுக்கு என்ன வேணும்? ஏன் என் பின்னாடியே வந்துட்டு இருக்கீங்க?” என்று கேட்டாள்.

“உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும், அதுக்காகத்தான் உங்க பின்னாடியே வந்தேன்” என்று சொன்னான் பவன்.

“என்கிட்டயா?!! என்கிட்ட கேட்கணுமா?” என்றாள் மது.

“அது வந்து… அது வந்து… நீங்க தப்பா நினைக்கலைன்னா…” என்று இழுத்தவன் மதுவைப் பார்க்க… அவன் பார்வையைச் சரியாக இல்லை என்று நினைத்த மது பவனைப் பார்த்து, “என்ன? சொல்லுங்க” என்றாள்.

“அது ஒண்ணும் இல்லை மது, எனக்கு… எனக்கு… ஒரு கப்பு சூடா டீ போட்டுத் தரீங்களா?” என்றான் பவன்.

“அடப்பாவி! இதுக்குத்தான் இப்படித் தயங்கித் தயங்கிக் கேட்டானா?” என்று நினைத்த மது, “கேட்கிறதுக்குத்தான் இவ்வளவு தயங்கினீங்களா?” என்றவள், “உங்களுக்கு டீ வேணும்னா நீங்க போய் போட்டுக் குடிச்சுக்க வேண்டியதுதானே? என்கிட்ட ஏன் கேட்குறீங்க?” என்றால்.

“எனக்கு டீ போடத் தெரிஞ்சா நான் போட்டு குடிச்சுக்க மாட்டேனா மது? எனக்கு டீ போடத் தெரியாது” என்றான் பவன்.

அவனைத் திரும்பிப் பார்த்தவள், “நான் டீ போட்டு கொடுத்தா நீங்க குடிப்பீங்களா? உங்களுக்குத்தான் என்னைக் கண்டாலே பிடிக்காதே… அன்னைக்கு ஆபீஸ்ல உங்களுக்குச் சாப்பாடு செஞ்சு கொண்டு வந்து கொடுத்தப்பக்கூட, ‘இனிமேல் எனக்காக எதுவும் செய்யிற வேலை எல்லாம் வேண்டாம்’ என்று சொல்லி என்னைத் திட்டிட்டுப் போனீங்கதானே நீங்க… இப்ப மட்டும் ஏன் டீ போட்டுக் கொடுக்கச் சொல்றீங்க?” என்று கேட்டாள்.

“ஐயோ!!! மது அப்படியெல்லாம் இல்லை. அப்போ நான் குழப்பத்துல இருந்தேன். அதனாலதான் நீங்க எனக்கு அக்கறையா சாப்பாடு செஞ்சு கொண்டு வந்து கொடுத்ததை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்” என்றான் பவன்.

“ஏங்க, உங்களுக்கு நான் சாப்பாடுதானே செஞ்சு கொண்டு வந்து கொடுத்தேன், அதுல என்னங்க குழப்பம் இருக்கு?” என்று கேட்டாள் மது.

“ஆமாம், நீங்க தினமும் எனக்குச் சாப்பாடு செஞ்சு கொண்டு கொடுத்துடறீங்க… அதை நான் வாங்கிச் சாப்பிடுறப்ப எல்லாம் என் மனசுல தோன்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்குத்தான் தெரியும்” என்றான் பவன்.

“அப்படி என்னங்க உங்க மனசு உங்ககிட்ட கேள்வி கேட்டுச்சு?” என்றால் மது.

“இப்படி தினமும் வகை வகையா சாப்பாடு செஞ்சு கொண்டு வந்து உனக்கு மது கொடுத்துட்டு இருக்காங்களே… அதே வெட்கமில்லாமல் வாங்கிச் சாப்பிட்டு இருக்கியே… அவங்க உன் வாழ்க்கை முழுக்க உனக்கு இதே மாதிரி சாப்பாடு செஞ்சு வந்து கொடுப்பாங்களான்னு நீங்க எனக்குச் சாப்பாடு கொடுக்கிறப்ப எல்லாம் என் மனசாட்சி என்கிட்ட கேட்டுக்கிட்டே இருந்துச்சு. என் மனசாட்சி கேட்கிற கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்லவே முடியலைங்க” என்றான் பவன் முகத்தை அப்பாவியைப் போல வைத்துக் கொண்டு.

“நீங்களே சொல்லுங்க, நீங்க தினமும் எனக்குச் சாப்பாடு செஞ்சு கொண்டு கொடுக்கிறதை நானும் வெட்கம் இல்லாமல் தானே வாங்கிச் சாப்பிட்டு இருந்தேன். அதே மாதிரிதான் வெட்கமில்லாமல் இப்பொழுதும் கேட்கிறேன். எனக்கு ஒரே ஒரு டீ மட்டும் போட்டுக் கொடுங்க, ரொம்பக் குளிருது இங்கே… என்னால குளிர் தாங்க முடியலை, இந்தக் குளிரில் உறைஞ்சு அப்படியே ஐஸ் கட்டி ஆயிடுவேன் போல இருக்கு… ப்ளீஸ் மது” என்று மதுவிடம் பவன் கெஞ்ச…

அவன் சொல்வதைக் கேட்ட மதுவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. தன் உதடுகளை மடித்து வந்த சிரிப்பை அடக்க முயன்று தோற்றவள் வாய்விட்டுச் சிரித்து விட…

மது பவன் கூறியதைக் கேட்டுச் சிரிப்பதைப் பார்த்த பவன், “ஏன் மது, என்னைப் பார்த்தா உங்களுக்குச் சிரிப்பா இருக்கா?” என்றவன், கோபமாக, “எங்க அம்மா என்கிட்ட அப்பவே சொன்னாங்க” என்று மதுவைப் பார்க்க…

மது சிரித்துக் கொண்டே, “உங்க அம்மா உங்ககிட்ட என்ன சொன்னாங்க பவன்?” என்று கேட்டாள்.

“இந்த வீட்ல எந்த வேலையும் செய்யாமல், எந்த வேலையும் தெரிஞ்சிக்காமல் இப்படியே இரு. நாளைக்கு உன் பொண்டாட்டி வந்து உன்கிட்ட ஒரு டீ போட்டுக் கொடுக்கச் சொல்றான்னு வச்சுக்கோ… அப்போ போய் நீ ‘எனக்கு டீ போடத் தெரியாதுன்னு’ சொல்லு, அவ உன்னைக் கழுவிக் கழுவி ஊத்துவா என்று எங்க அம்மா என்னைத் திட்டுவாங்க. நீங்களும் என் பொண்டாட்டி மாதிரியே என்ன உங்க மனசுக்குள்ள கழுவி ஊத்திட்டுத்தான் சிரிக்குறீங்கதானே… அது மட்டும் நல்லா தெரியுது” என்றான் பவன்.

அவன் அப்படிப் பேசும்போது “என் பொண்டாட்டி மாதிரி” என்று சொல்லவும், அந்த வார்த்தை மதுவை ஏதோ செய்ய… அவன் சொன்ன வார்த்தையைக் கேட்டதும் பவன் முன்னால் நிற்க முடியாமல் மது கிச்சனுக்குள் ஓடிவிட்டாள்.

“ஏன், நான் சொன்னதுக்கு எதுவுமே பதில் பேசாமல் மது உள்ளே போயிட்டாங்க?” நினைத்தவன் மதுவின் பின்னாலேயே கிச்சனுக்குச் செல்ல…

பவன் சொன்னதை நினைத்துச் சிரித்துக் கொண்டு நின்றிருந்தவள், பவன் கிச்சனுக்குள் வரவும், “நீங்க ஏங்க இங்க வந்தீங்க? நீங்க வெளியே போங்க… நான் உங்களுக்கு டீ போட்டுக் கொண்டு வரேன்” என்றாள் மது.

தன் முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு மது பவனை வெளியே செல்லச் சொல்ல, ஆனால் ‘போகணும்’ தான் சொன்னதில் மது கோபித்துக் கொண்டாள் என்று நினைத்த பவன் மதுவின் பக்கத்தில் வந்தவன், “எங்க, நான் எதுவும் தப்பா சொல்லலையே? என்மேல கோவிச்சுக்கிட்டீங்களா?” என்றான் பவன்.

“நீங்க என்ன தப்பா சொன்னீங்க? நான் எதுக்கு உங்ககிட்ட கோவிச்சுக்கணும்? அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நீங்க முதல்ல இங்கிருந்து வெளியே போங்க, நான் உங்களுக்கு டீ போட்டுக் கொண்டு வருகிறேன்” என்று மது சொல்ல…

“அப்போ நான் உங்களை என்னோட பொண்டாட்டின்னு சொன்னது உங்களுக்குக் கோபம் வரலையா?” என்று கேட்டான் அவன்.

அவன் இப்படிக் கேட்டதும் மதுவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அப்படியே அமைதியாக நிற்க…

“மது, ப்ளீஸ் சொல்லுங்க. கோச்சுக்காதீங்க. நான் ஏதோ தெரியாமல் அப்படியே பேசிட்டேன்” என்று பவன் மதுவையே பார்க்க…

“அப்போ நீங்க தெரியாமத்தான் இதெல்லாம் சொன்னீங்க. நிஜமாகவே சொல்லலை அப்படித்தானே?” என்றாள் மது.

அவனும் மதுவைச் சமாதானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, “ஆமாங்க, நான் சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன். நிஜமா எல்லாம் எதுவும் சொல்லலை” என்று பவன் சொல்லவும்.

அவன் மேல் கோபம் வந்த மது, “அதுதான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்னு சொல்லிட்டீங்கள்ல, அப்போ நிஜமா உங்க பொண்டாட்டி யாரோ, அவங்ககிட்ட போய் டீ போட்டுக் கொடுக்கச் சொல்லி கேளுங்க… என்கிட்ட கேட்காதீங்க, நான் எல்லாம் உங்களுக்கு டீ போட்டுத் தர மாட்டேன்” என்று கோபித்துக் கொண்டு கிச்சனிலிருந்து வெளியே சென்றாள் மது.

“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி கோவிச்சுட்டுப் போறாங்க? நான் சும்மா விளையாட்டுக்குத்தான் அவளைப் பொண்டாட்டின்னு சொன்னதுக்கா கோவிச்சுட்டுப் போறாங்க… அவங்க கோவிச்சுட்டுப் போறது நான் விளையாட்டுக்கு என்னோட பொண்டாட்டின்னு சொன்னதுக்கா கோவிச்சுட்டாங்க… அப்போ… அப்போ… அவங்க என் பொண்டாட்டின்னு சொல்லி இருந்தா கோவிச்சிருக்க மாட்டாங்களா?” என்று ஒரு நிமிடம் யோசித்தவனுக்கு ஏதோ அப்படியே உள்ளுக்குள் சந்தோஷம் ஏற்பட, கிச்சனிலிருந்து வேகமாக வெளியே வந்தவன் மதுவைப் பார்க்க…

கிச்சனில் இருந்து சந்தோஷமாக வெளியே வந்த பவனைப் பார்த்து, “நான் இவன்கிட்டே கோவிச்சுட்டு வந்தா… இவன் எவ்வளவு சந்தோஷமா சிரிச்சுகிட்டு வரான் பாரு… கொஞ்சமாவது நான் ஏன் கோவிச்சுக்கிட்டு வந்தேன்னு யோசிச்சானா?” என்று நினைத்தவள், அவனைப் பார்த்து வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவனிடம் கோபித்துக் கொண்டு மது அவள் அறைக்குச் சென்று கதவைச் சாற்றப் போக… வேகமாக மதுவிடம் வந்த பவன் தன் இரண்டு கைகளாலும் கதவைச் சாற்ற விடாமல் பிடித்துக் கொண்டு மதுவைப் பார்க்க…

“இப்ப எதுக்குக் கதவைச் சாத்த விடாமல் பிடிச்சிட்டு நிக்கிறீங்க? முதல்ல தள்ளிப் போங்க” என்று அவனைப் போகச் சொல்லி கோபமாக மது பேச…

“இப்போ எதுக்கு என்கிட்ட கோவிச்சுட்டு வந்த மது?” என்று கேட்டான் சிரித்துக் கொண்டே…

“நான் எதுக்குக் கோவமா வந்தா உங்களுக்கு என்ன? நீங்க போயி உங்க வேலையைப் பாருங்க. வீணா என்கிட்டப் பேசி உங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்க” என்று மது கோபமாகப் பேச…

“நான் விளையாட்டுக்குத்தான் உன்னை என் பொண்டாட்டின்னு சொன்னேன்னு சொல்லித்தானே உனக்குக் கோபம்?” என்றவன் மதுவைப் பார்க்க…

அவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த மதுவைப் பார்த்தவன், மதுவைச் சாத்த விடாமல் பிடித்திருந்த கதவை விட்டுவிட்டுச் சட்டென்று அவள் அறைக்குள் நுழைந்த பவன். மது என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள் அவள் முகத்தைத் தன் இரு கைகளாலும் பிடித்து அவள் உதட்டில் முத்தம் வைத்தான்.


ஏற்கனவே திருமணம் ஆன விக்கிக்கும் நிலானிக்கும், சொந்தங்கள் கூடித் திருமணம் செய்து கொண்ட ஆதிக்கும் துர்காவுக்கும், அதேபோல எதிர்பாராத விதமாகத் திருமணம் செய்து கொண்ட ராதாவுக்கும் சந்தோஷிற்கும் மண்டபத்தில் வைத்து இந்த மூன்று ஜோடிகளுக்கும் திருமணம் முடிந்த பிறகு செய்ய வேண்டிய சடங்குகள் எல்லாம் செய்து முடித்த பிறகு அவரவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

சந்தோஷையும் ராதாவையும் வாசலில் நிற்க வைத்து உள்ளே சென்ற கமலா இருவருக்கும் ஆரத்தி கரைத்து எடுத்து வந்து, இருவரும் ஒன்றாக நிற்கச் சொல்லி, இருவருக்கும் ஆரத்தி சுற்றி, பொட்டு வைத்து இருவரையும் உள்ளே அனுப்பினார்.

சந்தோஷ் ராதா கழுத்தில் தாலி கட்டியதில் இருந்து அவனிடம் ஒரு வார்த்தை கூட ராதா பேசவே இல்லை. மண்டபத்தில் இருவரையும் வைத்து செய்த சடங்குகள் எல்லாவற்றையும் மற்றவர்களுக்காகச் சிரித்துக் கொண்டே செய்தாளே ஒழிய, சந்தோஷைப் பார்த்து ஒரு முறை கூடச் சிரிக்கவில்லை. அவனும் ஏதாவது ராதாவிடம் பேச முயற்சி செய்தாலும் ராதா அவனிடம் பேசுவதைத் தவிர்த்துவிட்டாள்.

தன் மேலும் தவறு இருந்தாலும் அதற்கு ராதாவும் தானே காரணம், அப்படி இருந்தும் நான் இவளிடம் இறங்கி வந்து மன்னிப்புக் கேட்டாலும் என்னுடன் பேச மாட்டேன் என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருக்கிறாளே என்று நினைத்துச் சந்தோஷத்திற்குச் சற்று மனது கஷ்டமாக இருந்தது.

வீட்டுக்குள் வந்த சந்தோஷ் ராதாவிடம் எதுவும் பேசாமல் தன் அறைக்குச் சென்றுவிட… ராதாவிற்குச் சந்தோஷ் தன்னிடம் முறுக்கிக் கொண்டு செல்வதைப் பார்த்தவள்.

“யோவ் வாத்தி… பண்றது எல்லாம் பண்ணிட்டு வீட்டுக்கு வந்ததும் என்னை இப்படி அம்போன்னு விட்டுட்டு ரூமுக்குள்ள நீ மட்டும் போயிட்ட இல்ல… போ… போ… எனக்கென்ன?” என்று நினைத்துக் கொண்டவள் ஹாலில் இருந்த சோபாவில் சென்று அமர்ந்தாள்.

இவர்கள் இருவரும் வந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ளவில்லை என்று கவனித்த முத்து கவலையோடு இருக்க…

அவரிடம் வந்த கமலா, “ஏங்க, முகம் ஒரு மாதிரியா இருக்கு?” என்று கேட்டார்.

“கமலா, நிஜமாவே சந்தோஷும் ராதாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாங்களா? எனக்கு இவங்க ரெண்டு பேரும் நடந்துகிறதைப் பார்த்தால் சந்தேகமா இருக்கு. ஒருவேளை அந்தப் பிள்ளைக்கு நிஜமாவே பிடிக்காமல் தான் சந்தோஷ் கழுத்தில் தாலி கட்டிட்டானோ?” என்று சந்தேகமாக முத்து கமலாவிடம் கேட்க…

“ஏங்க, அப்படி எல்லாம் இருக்காது. நம்ம பையன் கோபத்துல அந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டானே ஒழிய, அதற்காகப் பிடிக்காத பெண்ணை வற்புறுத்திக் கட்டாயத் தாலி கட்டுற அளவுக்கு என் பையன் அவ்வளவு ஒண்ணும் மோசமானவன் கிடையாது. ராதாவுக்குத் திடீர்னு சந்தோஷ் இப்படித் தன் கழுத்துல தாலி கட்டிட்டானே, அவன் மேல கோபமா இருக்கலாம். நானும் மண்டபத்துல இருந்து இவங்க ரெண்டு பேரையும் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். சந்தோஷ் வழி வழிய வந்து ராதாகிட்ட பேச முயற்சிக்கிறான். ஆனா ராதாதான் அவன்கிட்ட பிடி கொடுக்காமல் இருக்கா. ரெண்டு பேரையும் கொஞ்ச நேரம் தனியா விட்டுட்டோம்னா அவங்களே பேசி சமாதானமாயிக்குவாங்க. நீங்க கண்டதையும் போட்டு யோசிச்சு மனசைக் குழப்பிக்காதீங்க” என்று சொன்னார் கமலா.

“நீ சொல்றதும் சரிதான் கமலா. நம்ம எல்லாரும் அவங்க கூட இருக்கிறதனால் இவங்க ரெண்டு பேராலயும் சரியாப் பேச முடியலை போல இருக்கு” என்றவர், “சரி சரி, சீக்கிரமா நீ மற்ற வேலை எல்லாம் முடிச்சுட்டு வா. சிவகாமி நைட் அவ வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கா. இவங்க ரெண்டு பேருக்கும் நைட் செய்ய வேண்டிய சாந்தி முகூர்த்தம் எல்லாம் செஞ்சு வெச்சிட்டு நாம கிளம்பலாம்” என்றார் முத்து.

கமலா சென்று ராதாவையும் சந்தோஷையும் அழைத்து வந்தவர், பூஜை அறையில் இருவரையும் நிற்க வைத்து ராதாவிடம் விளக்கு ஏற்றச் சொன்னார். விளக்கேற்றிப் பூஜை செய்து சந்தோஷும் ராதாவும் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க… வாசலில் கார் ஹாரன் சத்தம் கேட்க, யாரென்று முத்து சென்று பார்க்கவும், துரை, கனகா, ஷிவு மூவரும் வந்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் வாசலுக்குச் சென்று வரவேற்ற முத்து அவர்களையும் வந்து சாமி கும்பிடச் சொல்ல, அனைவரும் சாமி கும்பிட்டுவிட்டு ஹாலில் இருக்க, கமலா வந்திருந்தவர்களுக்குக் காபி போட கிச்சனுக்குள் செல்ல, ராதாவும், “நானும் வரேன் அத்தை” என்று சொல்லி அவருக்கு உதவிக் செய்யக் கிச்சனுக்குள் சென்றுவிட்டாள்.

“தாங்கள் அவளைத்தான் பார்க்க வந்திருக்கிறோம், ஆனால் எங்களைப் பார்க்காமல் அவள் அத்தைக்கு உதவி செய்கிறேன் என்று கிச்சனுக்குள் போய்விட்டாள் பாரு” என்று துரை முத்துவிடம் சொல்லி கிண்டல் செய்ய, “கல்யாணம் ஆனாலே அப்படித்தான் துரை, பொண்ணுங்க எல்லாம் அப்படியே மாறிடுவாங்க” என்று சொல்லி அவரும் பதிலுக்குப் பேசினார்.

பின் அனைவருக்கும் காபி கொண்டு வந்து ராதா கொடுக்க… “எடுத்துக்க கனகா, என் மருமகளே காபி போட்டு இருக்கா” என்று கமலா சொல்ல… காபியை எடுக்க வந்த கனகா, “என்னது, ராதாதான் காபி போட்டாளா?!!” என்று அதிர்ச்சியாகக் கேட்க…

“என்ன கனகா இப்படி அதிர்ச்சியாக? என் மருமகதான் காபி போட்டிருக்கா” என்று கமலா பெருமையாகச் சொல்ல, “அட அண்ணி! இப்படி ஏமாந்துட்டீங்களே! என் பொண்ணுக்குச் சுடுதண்ணி கூட வைக்கத் தெரியாது. அவளை நம்பி இந்தக் காபியை எங்களை குடிக்கச் சொல்றீங்களா? எனக்கு வேண்டாம்” என்று கனகா காபியை எடுக்க மறுக்க…

கனகா சொன்னதைக் கேட்டுச் சந்தோஷ் முதற்கொண்டு அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட, ராதாவிற்குக் கோபம் வந்து, “கனகா! ஒழுங்கா காபி எடுத்துப் பண்ணிக் குடிக்கலைன்னா, இந்த வீட்டை விட்டு நீ வெளியே போக முடியாது, பாத்துக்க!” என்று சொல்லி அவரை மிரட்ட…

“நான் நீ போட்ட காபி எல்லாம் குடிக்க மாட்டேன், எனக்கு வேண்டாம்” என்று சொல்லி கனகா மீண்டும் காபியை எடுக்க மறுக்க….

“அத்தை, உங்க பொண்ணுதான். அதுக்காக நீங்களே இப்படி அவளைப் பழித்துப் பேசலாமா?” என்று சொன்னான் சந்தோஷ்.

“மாப்பிள்ளை, உங்களுக்கு இவளைப் பத்தித் தெரியாது. ஒரு தடவை ஊர்ல இருக்கிறப்போ எங்க எல்லாருக்கும் மேகி செஞ்சு தரேன்னு சொல்லிச் சாப்பிடக் குடிக்காமல் கூழ் மாதிரி செஞ்சு கொடுத்தாள் மாப்பிள்ளை. தண்ணியில் போட்டு வேக வெச்சா ரெண்டு நிமிஷத்துல அது கொதிச்சு நல்லா வந்திருக்கும். இவளுக்கு அது கூடத் தெரியாமல் செஞ்சு கொடுத்த சமையலைச் சாப்பிட்டு அன்னைக்கு எல்லாம் நானும் என் புருஷனும் பட்டப்பாடு எங்களுக்கு மட்டும்தான் தெரியும்” என்று கனகா சொல்ல, அவரை ஏகத்துக்கும் முறைத்தாள் ராதா.

“அப்போ நான் போட்ட காபி நல்லா இருக்காதுன்னு நீ சொல்ற. அப்படித்தானே?” என்று கேட்டாள் ராதா அவள் அம்மாவிடம். “ஆமாண்டி! நான் என்ன பொய்யா சொல்றேன்? உனக்குச் சுடு தண்ணியே ஒழுங்கா வைக்கத் தெரியாது. நீ காபி போட்டுக் கொடுத்து அதை நான் குடிச்சு வீட்டுக்குப் போறதுக்குள்ள எனக்கு எதுவும் ஆகணுமா?” என்று அவர் விடாமல் ராதாவை வாரியிழுக்க…

அவரை முறைத்துக் கொண்டே காபி ட்ரேயைக் கொண்டு சென்றவள், நேராக சந்தோஷின் முன்பு அந்தக் காபி ட்ரேயை நீட்ட… இவ்வளவு நேரம் ராதாவிற்குப் பரிந்து பேசிய சந்தோஷ், காபி தட்டைத் தன் முன் ராதா நீட்டியதும் ஒரு நிமிடம் அதிர்ந்தவன், தயக்கத்தோடு ராதாவைப் பார்க்க…

ராதா சந்தோஷைப் பார்த்து, கண் ஜாடையில் காபி கப்பையும் அவனையும் பார்த்து, எடுத்துக் குடிக்கச் சொல்ல… சந்தோஷ் தயங்கியவாரே அவளைப் பார்த்தான்.

“என்ன பார்க்குற? எனக்குச் சப்போர்ட் பண்ணித்தானே பேசின? அப்ப நீ ஏன் இந்தக் காபியைக் குடி” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சந்தோஷிடம் மெதுவாக ராதா கூற…

“நீ இப்படி எல்லாம் முகத்தை உம்முன்னு வெச்சுட்டுச் சொன்னால் நான் காபியைக் குடிக்க மாட்டேன். நல்லா சிரிச்ச மாதிரி முகத்தை வெச்சுக்கிட்டு, ‘இந்தாங்க மாமா, காபி எடுத்துக்கோங்க’ அப்படின்னு சொல்லு, அப்பத்தான் நான் இந்தக் காபியைக் குடிப்பேன்” என்று சந்தோஷும் அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூற…

அவன் அருகில் அமர்ந்திருந்த துரை, “மாப்பிள்ளை, இப்ப எங்க எல்லாரையும் விட்டுட்டு என் மகள் உங்க பக்கம் திரும்பி இருக்கா. எதுவும் சொல்லாமல் கம்முனு காபி எடுத்துக் கொடுத்துடுங்க. அவ ஏற்கனவே உங்க மேல கோபமா இருக்கான்னு எங்க எல்லாருக்கும் தெரியும். இப்பவும் அவகிட்ட வம்பு இழுத்தீங்கன்னு வைங்க, அப்புறம் உங்களுக்குப் படுக்கை திண்ணையிலதான், ஞாபகத்துல வெச்சுக்கோங்க” என்று துரை சொல்ல…

“அங்க என்னடா என் மருமகன்கிட்ட குசுகுசுன்னு பேசிட்டு இருக்க? என்னம்மா நான் அன்னைக்கே என் மருமகனுக்கு என்ன சொல்லிக் கொடுத்தேன்?” என்று முத்து துரையிடம் கேட்க…

“சும்மா பேசிகிட்டு இருந்தேன்டா முத்து. சந்தோஷை கண் ஜாடை செய்து காபியை எடுத்து குடிக்கச் சொல்ல…”

“அப்பாவும் பொண்ணும் ஒரே மாதிரி கண்ணாலேயே என்னை மிரட்டுறாங்க” என்று நினைத்த சந்தோஷ், அவர் சொன்னதுபோல ராதாவை மறுபடியும் எதுவும் பேசி கடுப்பேத்தாமல், அமைதியாகக் காபியை எடுத்து ஒரு வாய் குடித்தான்.

காபியைக் குடித்துவிட்டு எதுவும் பேசாமல் இருந்த சந்தோஷைச் சுற்றி இருந்தவர்கள் அவனையே பார்க்க…. “என்ன எல்லாரும் என்னையே பார்க்கிறாங்க?” என்று அனைவரையும் சந்தோஷ் பார்க்க…

சந்தோஷ் காபியைக் குடித்துவிட்டு என்ன சொல்லப் போகிறான் என்று அனைவரும் அவனை ஆவலாகப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured