Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 135

உன் ரகசிய ரசிகை நான் 135

by Layas Tamil Novel
242 views

EPISODE 135

ராதா போட்டுக்கொண்டு வந்த காபியை கனகா வாங்க மறுக்க, அதை வாங்கி சந்தோஷ் குடிக்கவும், அவன் ராதாவின் காபியைக் குடித்துவிட்டு என்ன சொல்லப் போகிறான் என்று அவனை அனைவரும் பார்க்க…

“என்ன மாப்பிள்ளை, காபி குடிச்சீங்களே! ஏன் எதுவும் பேசாமல் ஒரு வாய் காபியைக் குடிச்சிட்டு அமைதி ஆயிட்டீங்க… என் பொண்ணோட காபி எப்படி இருந்ததுன்னு நான் சொன்னேனா?” என்று கனகா கேட்க…

அவர் கேட்டதும் சந்தோஷ், “காபி சூப்பரா இருக்கு அத்தை! என் பொண்டாட்டி காபி நல்லாத்தான் போட்டிருக்கா. நீங்கதான் ஏதோ சொல்லி எங்க எல்லாரையும் பயமுறுத்துட்டீங்க. தைரியமாகக் காபி எடுத்துக் குடிங்க” என்று சந்தோஷ் சொல்ல…

கனகாவைத் திரும்பி ராதா பெருமையோடு பார்த்தவள், “எப்படி?” என்று தன்மையோடு புருவம் உயர்த்தி கேட்க, “இவருக்கு வேற வழி? இன்னைக்கு காலத்துக்கும் உன் கையாலதானே சாப்பிடணும்? அதனாலதான் ஏதோ சொல்லிச் சமாளிக்கிறார்” என்று சொல்லிவிட்டு கனகாவும் காபியை எடுத்துக் குடிக்க…

காபி நன்றாகத்தான் இருந்தது. ஆச்சரியமாக கனகா திரும்பி ராதாவைப் பார்க்க…

“என்ன பார்க்குற அத்தை? நீங்க சொல்லச் சொல்ல நான் அதே மாதிரி காபி போட்டேன். அதனாலதான் நல்லா இருக்கு. தைரியமாகக் குடி, உனக்கு ஒண்ணும் ஆகாது” என்றால் ராதா.

அனைவரும் பேசிச் சிரித்துக் கொண்டு காபியைக் குடித்து முடித்துவிட்டு, ராதாவையும் சந்தோஷையும் மற்ற அனைவரையும் மறு வீட்டிற்கு அழைத்தனர்.

பின் அனைவரையும் இரவு சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று கமலா வற்புறுத்த, கனகாவும் கமலாவும் சென்று சமையல் வேலைகளைச் செய்யவும், ஆண்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்க, ஷிவு ராதாவை முதல்முறையாகப் பிரிந்து இருக்கப் போகிறோம் என்று வருத்தப்பட, “அக்கா, நான் எங்கே போகப் போறேன்? நம்ம வீடு இன்னும் ரெண்டு தள்ளித்தானே இருக்கு. நீ என்னைப் பார்க்கணும்னா சொல்லு, நான் வந்துடறேன். இல்லைன்னா என்னைப் பார்க்க நீ இங்கே கிளம்பி வந்துடு” என்று ராதா சொல்ல, தனக்குத் தைரியம் சொல்லும் ராதாவைப் பார்த்துச் சந்தோஷப்பட்ட ஷிவு அவளைக் கட்டிக்கொண்டாள்.

அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் சந்தோஷிற்கும் ராதாவிற்கும் முதலிரவு ஏற்பாடுகளைச் செய்தவர்கள், சந்தோஷை அவன் அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு, ராதாவை அழைத்த கனகாவும் கமலாவும் பூஜை அறையில் அவளை விளக்கேற்றச் சொல்லிச் சாமி கும்பிட வைத்துவிட்டு, அவளிடம் வெள்ளிச் செம்பில் பாலைக் கொடுத்துவிட்டு, “சரி தாப்பா போட்டுக்கோமா. நாங்க எல்லாரும் கிளம்புறோம். எங்க அண்ணி வீட்டுக்குத்தான் போறோம். காலையில வந்துருவோம்” என்று சொல்லிவிட்டு, கமலாவும், “மகளிடம் இனிமேலும் சிறுபிள்ளை போல நடந்துகொள்ளாதே. உனக்குத் திருமணமாகிவிட்டது, மாப்பிள்ளையை நன்றாகக் கவனித்துக் கொள்” என்று சொல்லிவிட்டு, கனகாவும் பிறகு மற்றவர்களும் கிளம்பி விட…

அவர்களை வழி அனுப்பி வைத்துவிட்டுக் வாசல் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்த ராதா சோபாவில் வந்து படுத்துக்கொண்டாள்.

தன்னை முதலிரவு அறைக்குள் அனுப்பி வைத்துவிட்டு அனைவரும் வெளியே சென்றுவிட… தன் ஆசை மனைவி வருவாள் என்று நீண்ட நேரமாகக் காத்து இருந்தான் சந்தோஷ். வெளியில் இருப்பவர்கள் எல்லாம் கிளம்பிப் போய் வெகு நேரம் ஆகிவிட்டது. வீடே அமைதியானது.

எல்லோரையும் அனுப்பி வைத்துவிட்டு ராதா வருவாள் என்று நினைத்து இருந்த சந்தோஷ் அவளுக்காகக் காத்திருக்க… வெகு நேரம் ஆகியும் ராதா அவன் அறைக்கு வரவே இல்லை.

“என்ன ஆச்சு இந்நேரம்? என் ஆள் உள்ளே வந்திருக்கணுமே!” என்று யோசித்தவன், பெட்ரூம் கதவைத் திறந்து கொண்டு வெளியே வர… ராதா ஹாலில் உள்ள சோபாவில் கண் மூடிப் படுத்திருந்தாள்.

“அங்கே நான் ஒருத்தன் இவளுக்காக ஆசையாய்க் காத்துட்டு இருந்தா, இவ என்னடான்னா உள்ளே வராமல் இங்கே படுத்துட்டு இருக்கா!” என்று நினைத்தவன், அவள் அருகில் வந்தவன் அவள் தோளைத் தொட்டு, “ராதா…” என்று அழைக்க…

அவள் எதுவும் பேசாமல் அமைதியாகப் படுத்திருந்தாள். மறுபடியும் அவள் தோளைத் தொட்டுச் சுரண்டியவன், “ஏய் குட்டச்சி….” என்றான்.

சந்தோஷ் அப்படி கூப்பிட்டதும் சட்டென்று கண் திறந்தவள், சோபாவில் இருந்து எழுந்து அவன் முன் இடுப்பில் கை வைத்து, அவனை முறைத்தவாறு, “என்ன டா…” என்றாள்.

“என்ன டி குட்டச்சி, ‘டா’ போட்டுப் பேசுற? நான் இப்போ உன் புருஷன் டி! இப்பவும் நீ என்னைத் ‘டா’ போட்டு கூப்பிடுறே. ஒழுங்கா ‘மாமா…’, ‘அத்தான்…’, ‘என்னங்க…’, ‘வாங்க…’, ‘போங்கன்னு’ கூப்பிடணும். சரியா?” என்றான் சந்தோஷ்.

“என்னது ‘மாமா’, ‘அத்தான்’னு கூப்பிடணுமா உன்னை? போய்யா… போய்யா…. நல்ல எதுவும் சொல்லிடப் போறேன் உன்னை” என்றவள் அவனைத் தாண்டி ராதா செல்ல…

“என்ன டி… நான் பேசிட்டு இருக்கேன், நீ திமிரா பேசிட்டுப் போறே?” என்று சொல்லி அவள் கையைப் பிடித்து இழுத்துத் தன் முன் நிறுத்தி அவளைப் பார்க்க…

“யோவ்… வாத்தி… என்ன ரொம்ப ஓவரா பேசுறே! செய்ற வேலை எல்லாம் செஞ்சுட்டு எதுவும் தெரியாதவன் மாதிரி வந்து புருஷன் கிருசன்னு பேசிட்டு இருக்கே… என் கழுத்துல தாலி கட்டிட்டா நீ சொல்றது எல்லாம் நான் கேட்கணுமா என்ன?” என்ற ராதா.

“இங்க பாரு வாத்தி, என் அப்பா உன்னை அடிக்க வந்தாருன்னு தான் நான் குறுக்க வந்தேன். மத்தபடி நீ எனக்கு செஞ்சதை மன்னிச்சுட்டேன்னு நினைச்சுட்டு என் பக்கத்துல வராதே” என்றவள், அவனை கீழிருந்து மேல் வரை பார்த்தவள், நக்கலாக ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சிரித்துவிட்டு அவனைத் தாண்டிச் சென்றாள்.

அவள் பார்த்த பார்வையின் அர்த்தம் புரியாமல் நின்றிருந்த சந்தோஷ், “இவளுக்கு வர வரக் கொழுப்பு அதிகம் ஆகிடுச்சு. இவ கொழுப்பைக் கரைக்கலைன்னா இன்னிக்கு ராத்திரி எனக்குத் தூக்கமே வராது” என்று நினைத்தவன் திரும்பி ராதாவைப் பார்க்க…

அவள் சந்தோஷைப் பார்த்துச் சிரித்தவள், தன் புடவை முந்தானையை இடது கையால் பிடித்துச் சுற்றிக் கொண்டே, திரும்பித் தன் இடுப்பை வெடுக் வெடுக்கென்று ஆட்டிக் கொண்டே சென்றாள்.

அவள் இடையை இங்கும் அங்கு வேண்டுமென்றே அசைத்து நடப்பதைப் பார்த்த சந்தோஷிற்கு, இவ்வளவு நேரம் அவளிடம் வம்புக்குச் சென்றவன் அப்படியே ராதா நடக்கும் அழகைப் பார்த்து சொக்கிப் போனான்.

ராதாவைப் பார்த்து எச்சில் விழுங்கியவன், நேராக அவளிடம் வந்து அவள் முன் நிற்க…

“என்னய்யா?” என்று எரிந்து விழுவது போல நடித்தாள்.

“ஏய் ராதாக்குட்டி…” என்றான் சந்தோஷ்.

“உம்ம்… என்ன? சீக்கிரம் சொல்லு. எனக்குத் தூக்கம் வருது” என்றாள் ராதா.

“என்ன டி? இன்னிக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட்! நீ தூங்குறேன்னு சொல்ற?” என்றான் சந்தோஷ் ஏமாற்றமாக…

“அதனால என்ன இப்போ? நமக்கு ஃபர்ஸ்ட் நைட்னா நான் தூங்கக் கூடாதா என்ன?” என்றாள்.

“என்ன டி இப்படிப் பேசுறே? ஃபர்ஸ்ட் நைட் அப்போ தூங்கினா அப்பறம் எப்படி மத்தது எல்லாம்?” என்று சொல்லி அவள் கையில் இருந்த சேலைத் தலைப்பைப் பிடித்துத் தன் விரல்களில் சுற்றிக் கொண்டே வெட்கப்படுவது போல சந்தோஷ் பேச…

“யோவ் வாத்தி, என்ன இது? நாம் செய்ய வேண்டியதை எல்லாம் நீ செஞ்சுட்டு இருக்கே… ச்சீ… ச்சீ… நல்லாவே இல்லை. முதல்ல என் சேலையை விடுயா…” என்று சொல்லி அவன் கையில் இருந்த தன் சேலைத் தலைப்பை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு செல்ல…

“நானும் பாவமே, சின்னப் பொண்ணுன்னு கொஞ்சம் பொறுமையாப் போகலாம்னு பார்த்தா, ரொம்பத்தான் டி பண்றே நீ…” என்று சொன்னவன், தன்னைத் தாண்டிச் சென்றவளின் கையைப் பிடித்து இழுத்துத் தன் அருகில் நிற்க வைத்து, அவளை அப்படியே தன் கைகளில் ஏந்தியவன், “இன்னிக்கு நீ எப்படித் தூங்குறேன்னு நான் பார்க்குறேன் டி குட்டச்சி” என்று சொல்லி ராதாவைத் தூக்கிக்கொண்டு பெட்ரூமிற்குள் செல்ல…

“யோவ் வாத்தி… ஒழுங்கா என்னைக் கீழே இறக்கிவிடு… இல்லைன்னா நடக்குறதே வேற பாத்துக்கோ” என்று சொல்லி அவன் கையில் இருந்து துள்ளப் போக…

அதற்குள் பெட்ரூமிற்குள் வந்த சந்தோஷ், ராதாவைக் கொண்டு வந்து மெத்தையில் பொத்தென்று போட்டவன். “என்ன டி? ரொம்ப ஓவராப் பண்றே. உன்னை இப்படியே விட்டால் சரியா வராது” என்றவன், அவளை நகர விடாமல் ராதாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அவள் மேல் வந்தவன், குனிந்து ராதாவின் இதழில் முத்தமிட வர…

அவனிடம் சிக்காமல் இருக்கத் தன் உடலை இப்படியும் அப்படியும் ராதா ஆட்டிக்கொண்டு இருக்க… அவள் மேல் படுக்க வந்த சந்தோஷின் கால்களுக்கு இடையில் அடி வயிற்றில் ராதாவின் முட்டி பலமாக அடித்துவிட…

“ஐயோ… அம்மா….” என்று அலறிக்கொண்டு சந்தோஷ் மெத்தையில் சரிந்தான்.

சந்தோஷ் இப்படி அலறிக்கொண்டு படுக்கையில் விழுந்ததும் பதற்றமடைந்த ராதா, மெத்தையில் படுத்திருந்தவள் எழுந்து சந்தோஷைப் பார்த்து, “என்ன ஆச்சு… என்னாச்சு… சந்தோஷ்?” என்று பதட்டமாகக் கேட்க…

அவன் தன் இரு கைகளையும் தன் அடி வயிற்றில் வைத்துப் பிடித்துக் கொண்டு, “என்ன ஆச்சா? ஏண்டி, நான் அவசரமா கழுத்துல தாலி கட்டினேன் என்பதற்காக, நம்ம சந்ததியை விருத்தி பண்றவனை இப்படிப் கொலை பண்ணப் பார்க்கிறியே! இது உனக்கே நியாயமா?” என்று தன் அடிவயிற்றில் கையை வைத்து அழுத்திக்கொண்டு ராதாவிடம் பேச…

அவன் சொல்வதைப் புரிந்துகொண்ட ராதா, “யோவ் வாத்தி, நான் என்ன வேணும்னா அங்கே இடிச்சேன்? தெரியாமத்தானே இடிச்சிட்டேன். அதுக்கு என்னவோ நான் உன்னைக் கொல்ல வந்த மாதிரி இப்படி கத்துற. ரொம்ப வலிக்குதா?” என்று கேட்க…

“வலிக்குதாவா? ரொம்ப வலிக்குதுடி குட்டச்சி… இனிமே நான் உன் பக்கத்துல வந்தா, என்னை என்னன்னு கேளு” என்று சொல்லி, வலியைத் தாங்கிக்கொண்டே அவளிடம் பல்லைக் கடித்துப் பேசியவன், அந்த அறையில் இருந்து எழுந்து, அந்த ரூமை விட்டு வெளியே செல்ல….

அவன் வழியில் நடக்க முடியாமல் கால்கள் இரண்டையும் குறுக்கிக் கொண்டு நடந்து செல்வதைப் பார்த்துச் சிரித்த ராதா, “யோவ் வாத்தி, எங்க போற? ஃபர்ஸ்ட் நைட் இன்னைக்கு நடத்தியே ஆகணும்னு சொல்லி என்னைத் தூக்கிட்டு வந்த… இப்ப ஏன் வெளியே போற?” என்று நக்கலாக ராதா கேட்க…

வாசல் பக்கம் சென்றவன் நின்று அவளைத் திரும்பிப் பார்த்து, “ஏன் டி…. பேச மாட்ட? செய்யறதையும் செஞ்சுட்டு எதுவும் தெரியாதவன் மாதிரி கேக்குறியா? உன்னை வந்து வச்சிக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டு அறையை விட்டு வெளியே சென்றான்.

அவன் சென்றதும், அவனையே பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த ராதா, “கொஞ்சம் ஓவராத்தான் பண்ணிட்டோமோ? ஒரு நாளைக்குப் பிகு பண்ணிப் பார்க்கலாம் என்று பார்த்தேன். இப்படிப் படாத இடத்துல பட்டுடுச்சு. பாவம் அவனுக்கு ரொம்ப வலிக்கும். போய் எதுவும் ஹெல்ப் பண்ணுவோம்” என்று நினைத்தவள் பெட்ரூமில் இருந்து வெளியே செல்ல….

ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த சந்தோஷ், அந்த இடத்தில் ஐஸ் பேக்கை ஒரு கையால் பிடித்தவாறு, மறு கையால் சோபாவில் ஓரமாக உட்கார முடியாமல் திணறிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அவனை அப்படிப் பார்த்ததும் ராதாவிற்குக் சிரிப்பு வந்துவிட… அவனிடம் வந்தவள், “சாரி வாத்தி. நான் வேணும்னே பண்ணலை. தெரியாமல் இடிச்சிட்டேன்” என்று ராதா சொல்ல…

“என்னது வேணும்னு பண்ணலையா? நீ இடிச்ச இடியில என் வம்சமே அழிஞ்சு போயிருக்கும்! இப்படி ஒரு அடியைக் கொடுத்துட்டு ‘தெரியாமல் அடிச்சேன்’னு சொல்ற. தெரியாமல் அடிச்சிருந்தா எப்படி டி எனக்கு இவ்வளவு வலிக்கும்?” என்றான் சந்தோஷ்.

“யாருக்குத் தெரியும்? ஒருவேளை நீ வீக்கா இருப்பியோ என்னவோ?” என்று சொல்லி அவனின் அந்த இடத்தைப் பார்த்து நக்கலாகச் சிரிக்க…

அவள் அந்த வார்த்தைச் சொன்னதும் கடுப்பான சந்தோஷ், “ஒழுங்கா மரியாதையா இந்த இடத்தை விட்டுப் போயிடு. இப்படி எல்லாம் பேசி என்னைக் கடுப்பேத்துனா, எனக்கு வலிச்சாலும் பரவாயில்லைன்னு உன்னை இப்பவே வந்து ரேப் பண்ணிடுவேன், பாத்துக்கோ! போடி….” என்று அங்கிருந்து விரட்டினான்.

“ஆமாமா, அப்படியே வந்து நீ என்ன ரேப் பண்ணிட்டாலும்… சரி சரி, ரொம்ப நேரம் ஹாலிலேயே உட்கார்ந்துட்டு இருக்காத. உள்ளே வந்து படு. எனக்குத் தூக்கம் வருது. நான் போய்த் தூங்குறேன்” என்று சொல்லிவிட்டு ராதா உள்ளே சென்றுவிட….

“எனக்கு வலி சரியாகட்டும். அப்புறம் இருக்கு உனக்கு! அதுவரைக்கும் நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ” என்று சந்தோஷ் சொல்ல…

“பார்க்கலாம்.. பார்க்கலாம்..” என்று சொன்னவள் அவனைத் திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டாள்.


விக்கியும் நிலானியும் ஆதியின் குடும்பத்திடம் சொல்லிவிட்டு, வேதாச்சலத்துடன் சிவகாமியின் வீட்டிற்குச் சென்றனர்.

காரை விட்டு இறங்கியதும் சிவகாமி வேதாச்சலத்திடம், “ஏங்க, அவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு நீங்க வாசல்ல வந்து நில்லுங்க. என் மகன் முதன்முதல்ல நம்ம வீட்டுக்கு வரான். நான் போய் ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு சிவகாமி உள்ளே போக, “அண்ணி, நீங்க எதுக்கு உள்ளே போறீங்க? எல்லாம் தயாராத்தான் இருக்கு. நீங்களும் அவங்க கூட சேர்ந்து நில்லுங்க. உங்க நாலு பேரையும் சேர்த்து நான் ஆரத்தி சுத்துறேன்” என்று சொல்லிக்கொண்டே கையில் ஆரத்தித் தட்டுடன் கமலா, முத்து, ஸ்ரீ மூவரும் வாசலுக்கு வந்தனர்.

அவர்கள் மூவரையும் பார்த்துச் சந்தோஷமடைந்த சிவகாமி, “நீங்க எல்லாம் எப்ப வந்தீங்க?” என்று கேட்க….

“கொஞ்ச நேரம் தான் ஆச்சு அண்ணி, நாங்க வந்து சமையல் ஆளுகிட்ட கேட்டோம். நீங்க இன்னும் வரலைன்னு சொன்னாங்க. சரி, எப்படியும் நீங்க வந்து ஆரத்தி கரைச்சுதானே உங்க மகனை உள்ளே அழைச்சிட்டு வருவீங்க. அதனாலதான் நானே எல்லாத்தையும் ஏற்கனவே ரெடி பண்ணி வெச்சுட்டேன். நீங்க எல்லாரும் சேர்ந்து நில்லுங்க, நான் ஆரத்தி சுத்துறேன்” என்று சொல்லி அனைவரையும் சேர்த்து நிற்க வைத்த கமலா, அவர்கள் நால்வருக்கும் ஆரத்தி சுற்றி, பொட்டு வைத்து உள்ளே செல்லச் சொல்லி, வேலையாளிடம் ஆரத்தித் தட்டை வெளியே ஊற்றச் சொல்லிவிட்டு அவர்களோடு கமலாவும் மற்றவர்களும் உள்ளே வந்தனர்.

விக்கி நிலானியை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தவன். அவன் வீட்டைச் சுற்றிப் பார்க்க, அவனைப் பார்த்த சிவகாமி, “என்னப்பா அப்படியே நிக்கிற? என் மருமகளை அழைச்சிக்கிட்டு வா உள்ளே வா” என்று சொல்லி அவனின் கைப்பிடித்து ஹாலுக்கு அழைத்து வந்தவர், சோபாவில் அமர வைத்துவிட்டு, “ரெண்டு பேரும் இருங்க. மொத மொதல்ல நம்ம வீட்டுக்கு வந்து இருக்கீங்க. சாப்பிட இனிப்பு எடுத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்கு ஓட…

முத்து சிவகாமியிடம், “சிவகாமி, பார்த்து மெதுவா போகுமா. இப்படிச் சின்னப் பொண்ணு மாதிரி இங்கேயும் அங்கேயும் ஓடிக்கொண்டிருக்காதே. உடம்புக்கு ஆகாது” என்று சொல்ல…

“டேய் முத்து! உன் தங்கச்சி சும்மாவே பம்பரமா வேலை பார்ப்பா. இப்பக் காணாமல் போன அவ மகன் கிடைச்சதும் அவ கால்ல சக்கரத்தைக் கட்டிக்கிட்டுச் சுத்துவா… நீ அவளைத் தடுக்காதே. அவ இருக்கிற சந்தோஷத்துக்கு அவளுக்கு இப்போ 10 வயசு குறைஞ்ச மாதிரி இருக்கும்” என்று சொல்லி வேதாச்சலம் சிரிக்க….

முத்துவும், “ஆமாம் வேதா, எனக்கு என் தங்கச்சி இப்படிப் பார்க்க ரொம்பச் சந்தோஷமா இருக்கு” என்று குரல் தழைத்துச் சொன்னார் முத்து.

கிச்சனுக்குச் சென்ற சிறிது நேரத்தில் சிவகாமி கையில் இனிப்புடன் வர… அமர்ந்திருந்த விக்கியிடம் இனிப்புத் தட்டை நீட்ட… அதில் நிறைய இனிப்பு வகைகள் இருந்தது. அவரைப் பார்த்துச் சிரித்த விக்கி, “அம்மா, இத்தனை பலகாரம் எனக்கு எதுக்குமா?” என்று சொல்ல…

“அப்படிச் சொல்லாதைய்யா. சின்ன வயசா இருக்கும்போது நீ இந்தப் பலகாரம் எல்லாம் விரும்பிச் சாப்பிடுவ. உனக்கு எது பிடிக்குதோ அதை எடுத்துச் சாப்பிடு. இப்போ உனக்கு என்ன பிடிக்கும்னு எனக்குத் தெரியலை, அதனாலதான் இருக்கிற எல்லா இனிப்பையும் உனக்கு எடுத்துட்டு வந்து கொடுத்துட்டேன்” என்று சிவகாமி சிரித்த முகமாகச் சொல்ல…

அவரைப் பார்த்துச் சிரித்த விக்கி, “நீ கொடுத்தால் எனக்கு எல்லாமே பிடிக்குமா” என்று சொல்லிக்கொண்டு அதிலிருந்து ஒரு ஸ்வீட்டை எடுத்து விக்கி சாப்பிட்டான்.

அவன் சாப்பிடுவதையே ஆர்வமாகப் பார்த்த சிவகாமி, “பலகாரம் நல்லா இருக்காப்பா…?” என்று கேட்டார்.

“சூப்பரா இருக்குமா” என்று சொன்ன விக்கி, தன் கையில் இருந்த பலகாரத்தை அவன் அம்மாவிற்கு ஊட்டி விட்டு, “நீங்களும் சாப்பிடுங்க” என்று சொல்ல, சிவகாமி கண்களில் கண்ணீரோடு விக்கி ஊட்டி விட்ட இனிப்பைச் சாப்பிட்டார்.

“அது சரி… அம்மாவும் பிள்ளையும் வந்ததிலிருந்து பேசிக்கிட்டு இருக்கீங்க. சுத்தி இருக்கிற எங்களையெல்லாம் மறந்துட்டீங்களா?” என்று சொன்ன வேதாச்சலம், தட்டில் இருந்து இனிப்பை எடுத்து விக்கிக்கு ஊட்டி விட…

வேதாச்சலத்தை இத்தனை நாள் அவன் பிசினஸ் விஷயமாக ஆதியுடன் சந்தித்து இருக்கிறான். அப்போதெல்லாம் வேதாச்சலத்தைப் பார்த்தால் சற்று வில்லன் போல விக்கிக்குத் தோன்றும். ஆனால், இன்று தன் மகனுக்கு ஆசையாக ஊட்டி விடும் வேதாச்சலத்தைப் பார்த்த விக்கிக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

வேதாச்சலம் ஊட்டி விட்ட இனிப்பைச் சாப்பிட்ட விக்கி, தட்டில் இருந்த இனிப்பை எடுத்து அவருக்கு ஊட்டி விட்டான்.

இதை அவர்கள் அருகில் இருந்து பார்த்த முத்து, “இப்பதான் இந்தக் குடும்பம் நிறைவா இருக்கு. எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு. என் தங்கச்சி உன்னைத் தொலைச்சதிலிருந்து, அவள் எவ்வளவு மனக் கஷ்டத்தில் இருந்தான்னு நான் நேரா பார்த்திருக்கேன் விக்கி. இன்னிக்கு என் தங்கச்சி இப்படிப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு” என்று சொன்னார் முத்து.

அவரைப் பார்த்துச் சிரித்த விக்கி, “இனிமேல் நான் என் அம்மாவைச் சந்தோஷமாப் பார்த்துக்கிறேன் மாமா. நீங்க கவலைப்படாதீங்க” என்று அவரை முறை வைத்து கூப்பிட…

முத்துவிற்குச் சந்தோஷமாக இருந்தது. “இப்படி நீங்க மூணு பேருமே இனிப்பு ஊட்டிவிட்டுச் சாப்பிட்டுக்கிட்டு இருந்தா என்ன பண்றது? பக்கத்துல என் மகள் உங்க மூணு பேர் வாயையும் பார்த்துக்கிட்டு உட்கார்ந்து இருக்கா…. என் மகளுக்கு முதல்ல ஊட்டி விடுங்க” என்று முத்து சொல்ல….

இதுதான் அவர்கள் மூவருக்கும் நிலானியின் நினைவு வர, அவளைத் திரும்பிப் பார்க்க…

நிலானி கண்களில் கண்ணீரோடு அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் கண்ணீரைப் பார்த்ததும் பதறியே விக்கி, “ஏன் நிலா குட்டி? ஏன் அழற? உனக்குக் கொடுக்காமல் நாங்க மூணு பேரும் சாப்பிட்டுட்டோம்னு அழறியா?” என்று கேட்க, அவனை அழுது கொண்டே முறைத்த நிலானி, “இதுக்காக நான் ஒண்ணும் அழலை” என்று சொன்னவள், முத்துவைப் பார்த்து, “அவர் என்ன அவரோட பொண்ணுன்னு சொன்னாரு. எனக்கு என் அப்பா அம்மா ஞாபகம் வந்திருச்சு” என்று சொல்லி நிலானி மேலும் அழ…

அவள் அருகில் வந்த கமலா நிலானியின் தோளை ஆதரவாகப் பற்றி, “எனக்குப் பொண்ணு இல்லையேன்னு நான் ரொம்ப வருத்தப்பட்டு இருப்பேன். அந்தக் குறையை நாங்க இப்போ உன்னை மகளா நினைச்சுத் தீர்த்துக்கிறோம்” என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தம் வைத்தவர்.

“இனிமேல் நீ என்னையும் அவரையும் ‘அம்மா அப்பான்னு’ தான் கூப்பிடணும். என் மருமகப் பிள்ளை உன்னை எதுவும் திட்டினா, அல்லது எங்க அண்ணனும் அண்ணியோ உன்னை எதுவும் சொல்லிட்டாங்கன்னா, நேரா நீ எனக்கு போன் பண்ணிடு இல்லைன்னா என் வீட்டுக்கு வந்துவிடு, நான் உன்னைப் பார்த்துக்கிறேன்” என்று கமலா சொல்ல…

“ஏய் கமலா! என்னடி வந்ததும் வராததுமா எங்க எல்லாரையும் கெட்டவன் மாதிரி என் மருமகள் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க? என் மருமகள் உன் வீட்டுக்கு வர மாட்டா! அவளை நான் என் மகள் மாதிரி, இந்த வீட்டு ராணி மாதிரி, அவளுக்குக் குறையில்லாமல் நான் பார்த்துக்குவேன்” என்று சிவகாமி சொல்ல…

“அப்போ இந்த வீட்டில நான் யாரு?” என்று கேட்டுக் கொண்டே தள்ளாடியபடி சங்கவி வீட்டுக்குள் வந்தாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured