Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 139

உன் ரகசிய ரசிகை நான் 139

by Layas Tamil Novel
203 views

மதுவும் பவனும் இருந்த இடத்தில் போன் செய்ய சிக்னல் கிடைக்காமல் போகவே, மதுவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, அந்தக் குடோனில் இருந்து வெளியே செல்ல வேறு எதுவும் வழியிருக்கிறதா அல்லது போன் செய்துவிட்டு வரலாம் என்று அங்கிருந்து சென்ற பவன் திரும்பி வர வெகு நேரம் ஆகவே…

தனியாக மது மட்டும் அந்த இடத்தில் இருக்க, சீக்கிரமே அங்கே இருட்டிவிட்டதால் அவள் பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தால்.

தன் மொபைலில் இருந்து பவனுக்கு அழைக்கலாம் என்றால், அவள் மொபைலிலும் சிக்னல் இல்லாமல் போகவே, என்ன செய்வது என்று தெரியாமல் அருகில் இருந்த துணி மூட்டையின் மேல் அமர்ந்து இருந்தாள் மது.

அவள் இருந்த இடத்திலிருந்து இரண்டு மூன்று முறை சத்தம் போட்டு அழைத்துப்பார்க்க, அவனிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

ஒரு புறம் பயங்கரக் குளிராக இருக்க… மறுபுறம் தான் அங்கு தனியே தனியாக மாட்டிக் கொண்டோம் என்று நினைத்துப் பயத்தோடு மது அமர்ந்திருக்க….

இப்போது அவள் பின்னால் இருந்து ஏதோ சத்தம் கேட்க… இருட்டில் பயத்தில் இருந்தவளுக்கு அந்தச் சத்தம் மீண்டும் பயத்தை அதிகரிக்க… மது தன் பின்னால் என்ன இருக்கிறது என்று மெதுவாகத் திரும்பிப் பார்க்க, சரியாகச் சத்தம் வந்த திசையிலிருந்து ஒரு பூனை கத்திக்கொண்டே வந்து மதுவின் மேல் வேகமாக வந்துவிட, மது பயத்தில் திடுக்கிட்டு மயங்கி கீழே சரிந்தாள்.

மது மயங்கி விழுந்தது தெரியாத பவன், அந்தக் குடோனில் இருந்து தேடிக் கண்டுபிடித்து, தன் கையிலிருந்த சாவிக்கொத்தில் இந்த ஆபீஸ் ரூம் பூட்டுக்கு எது பொருந்தியது என்று பார்த்துத் தேடி, ஆபீஸ் ரூமைத் திறந்து, அங்கிருந்த லேண்ட் லைனில் அவனது மேனேஜருக்கு அழைத்து, இங்கே மாட்டிக்கொண்டிருந்த விஷயத்தைச் சொல்ல, அவர் சீக்கிரமாக அவர்களை அழைத்துச் செல்ல ஆட்களை அனுப்புவதாகச் சொல்லி போனை வைத்தார். அவரிடம் பேசிவிட்டுப் போனை வைத்த பவன், ஆபீஸ் ரூமைப் பூட்டிவிட்டு மது இருந்த இடத்திற்கு வர, அங்கே மது தரையில் விழுந்து கிடப்பதைப் பார்த்ததும் பதறி அடித்துக்கொண்டு மதுவிடம் வந்தவன், அவளைத் தூக்கித் தன் மடியில் படுக்க வைத்து அவள் கன்னத்தைத் தட்டி..

“மது… மது… கண்ணைத் திற. என்ன ஆச்சு உனக்கு?… நீ எப்படி இப்படி மயக்கம் போட்டு விழுந்த? என்ன ஆச்சு?” என்று பவன் பதறிக் கொண்டே மதுவை எழுப்ப, அவள் கண் திறக்கவே இல்லை.

பவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளை அப்படியே தன் இரு கைகளிலும் ஏந்தியவன், அப்போதுதான் உணர்ந்தான்… அவள் இவ்வளவு நேரம் தரையில் இருந்ததில் குளிரில் அவள் உடல் எல்லாம் ஜில்லென்று ஆகியிருந்தது.

மதுவைத் தூக்கிக்கொண்டு நேராக ஆபீஸ் ரூமுக்கு வந்தவன், அவளைக் கீழே கிடத்திவிட்டு, ஆபீஸ் ரூமைத் திறந்து உள்ளே கொண்டுபோய், அங்கிருந்த சோபாவில் மதுவைப் படுக்க வைத்து, அந்த ரூமில் இருந்த ஹீட்டரை ஆன் செய்துவிட்டு மதுவிடம் வந்தவன், அவள் கைகளையும் கால்களையும் சூடு பறக்கத் தேய்த்து விட்டான்..

பிறகு அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் முகத்தில் தெளிக்க, மது சில்லென்று நீர் முகத்தில் படவும் கண்ணை மெதுவாகத் திறக்க…

அவள் கண் திறந்ததைப் பார்த்த பவன், “அப்பாடா ஒரு வழியா கண்ணைத் திறந்துட்டியா! என்னாச்சு மது உனக்கு? எப்படி மயக்கம் போட்டு விழுந்த? எனக்கு ஒரு நிமிஷம் கையும் ஓடல, காலும் ஓடல. உனக்கு என்னமோ ஆயிடுச்சுன்னு நான் ரொம்பப் பதறிவிட்டேன் தெரியுமா!” என்று படபடப்பாக பவன் பேச ….

சோபாவில் இருந்து மெல்ல எழுந்து அமர்ந்த மது, பவனைப் பார்த்து, “எனக்கு ஒண்ணும் இல்ல. நான் அங்க தனியா இருட்டுல நின்னுட்டு இருந்தேன்னா, திடீர்னு என் மேல் வந்து ஏதோ விழுந்துச்சு. ஏற்கனவே பதட்டத்தில் இருந்ததுனால, அது வந்து விழுந்ததோட எனக்கு மயக்கம் வந்துருச்சு போல” என்று மது சொல்ல..

“நான் உன்னை அங்க தனியா விட்டுட்டுப் போயிருக்கக் கூடாது. என்கூடயே அழைச்சிட்டு வந்து இருக்கணும்” என்றான் பவன்.

பவன் மது உடன் பேசிக் கொண்டிருக்க, அப்போது குடோன் வாசலில் சத்தம் கேட்கவும், அவன் ஆபீஸ் ரூமில் இருந்து வெளியே வந்து பார்க்க, குடோன் வாசலின் முன்னால் இருந்த பனியைச் சுத்தம் செய்து கதவைத் திறந்து கொண்டு அவர்களின் வேலையாள் உள்ளே வந்தான்.

குடோன் வாசல் கதவு திறந்ததும், மதுவை அழைத்துக் கொண்டு முதல் வேலையாக பவன் அங்கிருந்து வெளியேறினான்.

நேராக அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தவர், வரும்பொழுதே மதுவிற்கு காய்ச்சல் வர ஆரம்பித்திருந்தது. குளிரான தரையில் வெகு நேரம் படுத்திருந்ததால், அந்தக் குளிர் ஒத்துக் கொள்ளாமல் அவளுக்குக் காய்ச்சல் வந்திருந்தது.

வரும் வழியிலேயே இருவரும் ஹாஸ்பிடலுக்குச் சென்றுவிட்டுதான் வீட்டிற்கு வந்தனர்.

அவளை அவள் அறையில் கைதாங்கலாக அழைத்துச் சென்று படுக்க வைத்துவிட்டு வந்தவன், அவளுக்குச் சுடு தண்ணீர் வைத்துக்கொண்டு போய் மாத்திரை சாப்பிடக் கொடுத்தான். மது அவனிடம் மாத்திரையை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, “பவன், எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன். நீ என் பக்கத்தில் இருக்கியா? என்னை விட்டுப் போயிடாதே. எனக்கு என்னவோ போல இருக்கு” என்று மது பவனின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்க…

“சரி மது, நீ படு. நான் போய் வாசல் கதவைச் சாத்திவிட்டு, லைட் எல்லாம் ஆஃப் பண்ணிவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

பவன் வாசல் கதவைச் சாத்திவிட்டுத் திரும்ப வந்து பார்க்க, அவன் வருவதற்குள் மது மாத்திரையின் வீரியத்தில் உறங்கிப் போயிருந்தாள்.

அவள் கண்மூடிப் படுத்திருப்பதைப் பார்த்தவன், அவள் சாந்தமான முகத்தைப் பார்த்து, ‘பாவம்! எதிர்பார்த்துப் பயந்தாளோ தெரியல’ என்று நினைத்தவன், அவள் அருகில் ஒரு சேரை இழுத்துப்போட்டு அமர்ந்து, மதுவின் கையைப் பிடித்துக் கொண்டு அவள் முகத்தைப் பார்த்தவாறு அமர்ந்து விட்டான்.


கதிரின் திருமண விஷயத்தினால் ஆபீஸிற்குச் சில நாட்களாகச் சரியாகச் செல்லாத ஆதி, இன்றுதான் ஆபீஸிற்கு வந்தான்.

எப்படியும் கதிரும் விக்கியும் இன்னும் சில நாட்களுக்கு ஆபீஸிற்கு வரமாட்டார்கள் என்று தெரிந்ததால், அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளையும் சேர்த்து ஆதியே கவனித்துக் கொண்டிருந்தான்.

ரியாவை அழைத்து, அவளிடம் சில முக்கியமான ஃபைல்களைக் கொடுத்து, அதில் சில திருத்தங்களைச் சொல்லி மாற்றி வருமாறு அனுப்பி வைத்தவன், மணியைப் பார்க்க, மணி இரண்டைத் தாண்டிவிட்டது.

துர்கா இப்போதெல்லாம் தான் இல்லாமல் சாப்பிடுவது இல்லை. மணி வேறு இரண்டாகிவிட்டது. தான் வீட்டிற்குப் போகாமல் அவள் சாப்பிட்டாளா? என்ன செய்கிறாள்? என்று தெரியாமல் போகவே, தன் மொபைலை எடுத்துத் தன் அம்மாவிற்கு அழைத்தான் ஆதி.

விசாலாட்சி ஆதி அழைத்ததும் போனை அட்டென்ட் செய்து, “சொல்லு ஆதி” என்றார்.

“ஒன்னும் இல்லம்மா. நான் சும்மாதான் கால் பண்ணுனேன். துர்கா என்ன பண்ணிட்டு இருக்கா?” என்று கேட்க, “அவ என்ன பண்ணுவா? அவளோட ரூம்ல தாண்டா இருக்கா. ஏன் ஆதி?” என்றார் விசாலாட்சி.

“ஒன்னும் இல்லம்மா. அவ சாப்பிட்டாளா? என்ன பண்ணினாள்னு கேட்பதற்காகத்தான் உங்களுக்குக் கால் பண்ணுனேன்” என்றான் தயங்கிக் கொண்டு.

“இதுக்கு ஏம்பா தயங்குற? துர்கா முதல்ல நீ வந்தா தான் சாப்பிடுவேன்னு ரொம்ப அடம் பிடிச்சா. ஆனா கீர்த்திகா தான், ‘நீ ஒரு முக்கியமான விஷயமா வெளியே போயிருக்கிறதாவும், நைட் வந்து அவளுக்கு நீ ஊட்டி விடுவேன்னு’ ஏதேதோ சொல்லிச் சமாளிச்சு, துர்காவுக்குச் சாப்பாடு ஊட்டி விட்டா” என்றார்.

“சரிமா, நான் அதைக் கேட்கத்தான் கால் செய்தேன்” என்றான் ஆதி.

“சரிப்பா” என்று சொல்லி விசாலாட்சி போனை வைத்தார்.

ஆதி போன் பேசிவிட்டு நிமிர, சரியாக அவன் அறைக் கதவைத் தட்டிவிட்டு, விக்கி ஸ்ரீயுடன் உள்ளே வந்தான்.

விக்கியைப் பார்த்ததும் ஆதி, “என்னடா! உன் அம்மா அப்பாவைப் பார்த்ததும் எங்களை எல்லாம் ஒரேடியா மறந்துட்டுப் போல. அங்கே போனதிலிருந்து ஒரு போன் இல்ல” என்று கேட்டான் ஆதி.

“அட ஏன்டா ஆதி! நானே நொந்து போயிருக்கேன். இதுல உனக்குப் போன் வேற பண்ணலன்னு என்னைக் கேக்குற நீ?” என்று விக்கி டல்லாகப் பேச…

“ஏண்டா ஒரு மாதிரி பேசுற? என்ன ஆச்சு?” என்று கேட்டான் ஆதி.

“அதுவா? அது ஒரு பெரிய கதை” என்று சொன்னவன், அவன் உடம்பில் போட்டிருந்த சோபாவில் அமர்ந்து, ஸ்ரீயையும் அமரச் சொல்ல… தன் சேரில் இருந்து எழுந்து வந்த ஆதி, விக்கி அருகில் அமர்ந்து, “சொல்லுடா என்ன ஆச்சு?” என்றான்.

“அந்தச் சங்கவியும், என் அப்பா வேதாச்சலமும் லேசுபட்ட ஆளுங்க கிடையாது. நான் கூட என் அப்பா திருந்திட்டாருன்னு நினைச்சேன். ஆனா அவர் இன்னும் மாறவே இல்லை. அப்படித்தான் இருக்காரு” என்று சொன்னான் விக்கி.

“என்ன சொல்ற விக்கி? கொஞ்சம் புரியும் படியா சொல்லு” என்றால் ஆதி.

“சொல்றேன்டா” என்றவன், நேற்று அவன் வீட்டிற்குச் சென்றதிலிருந்து இன்று அந்த வீட்டை விட்டு வெளியேறியது வரை அனைத்து விஷயங்களையும் ஆதியிடம் மறைக்காமல் விக்கி சொல்ல…

அது எல்லாம் கேட்ட ஆதிக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. சங்கவியின் குணம் எப்படியும் மாறப்போவதில்லை என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், வேதாச்சலம் இப்படிச் செய்வார் என்று ஆதி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

“சாரிடா. அவங்களுக்கு நீதான் அவங்களோட பையன்னு உண்மை தெரிஞ்ச உடனே நான் உன்னை அவங்க கூட அனுப்பி இருக்கக் கூடாது. கொஞ்ச நாள் கழிச்சு அவங்க எல்லாம் எப்படி உன்னிடம் நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்துட்டு நான் அனுப்பி இருக்கணும். என்னை மன்னிச்சிடுடா” என்று ஆதி உண்மையாக வருந்திக்கொண்டு மன்னிப்புக் கேட்க.

“டேய் ஆதி, இதுக்கு எதுக்கு நீ மன்னிப்புக் கேட்கிற? அதெல்லாம் எதுவும் இல்ல. நான் இதையெல்லாம் பெருசாவே எடுத்துக்கல. ரொம்ப வருஷம் கழிச்சு என் குடும்பத்தோடு கூடச் சேர்ந்து ஒரே வீட்ல சந்தோசமா இருக்கலாம்னு நினைச்சேன். ஆனா என்ன பண்ண? எனக்கு அவ்வளவுதான் கொடுப்பினை போல. அதிலும் ஒரு நல்ல விஷயம் என்னன்னா, அம்மா என் கூடவே வந்துட்டாங்க. அந்த வகையில எனக்கு அது ஒரு ஆறுதல் தான்” என்றான் விக்கி.

“சரி விடுடா. எல்லாம் கொஞ்ச நாள்ல சரியா போகும்னு நம்புவோம். வேற என்ன பண்ண முடியும்?” என்றான் ஆதி.

“ஆமா ஆதி. நானும் அப்படி நினைச்சுட்டுத் தான் அமைதியா இருக்கேன். என்னால தேவையில்லாம எதுவும் பிரச்சினை வந்திரக்கூடாதுன்னு பொறுமையா இருக்கேன்” என்றான் விக்கி.

“சரி, அப்போ நீயும் சந்தோஷ் ஃபேமிலியும் உன்னோட அப்பார்ட்மெண்ட்டிலேயே இருந்துட்டீங்களா? இல்லை வேற எதுவும் கொஞ்சம் வசதியா வீடு பார்த்துத் தரணுமா?” என்று கேட்டான் ஆதி.

“ஏண்டா, அந்த அப்பார்ட்மெண்ட் அப்பா என் பேருல எழுதி வச்சதுதான். அது எவ்வளவு பெரிய அப்பார்ட்மெண்ட்ன்னு உனக்குத் தெரியும். அங்க வசதிக்கு என்னடா குறைச்சல் இருக்கு? அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல. நாங்க சௌகரியமாகத்தான் இருக்கோம்” என்றான் விக்கி.

“சரிடா. இன்னைக்கு நைட்டு நம்ம வீட்ல டின்னருக்கு அரேஞ்ச் பண்ணி இருக்கேன். நீ எல்லாரையும் கூட்டிட்டு நைட் வந்திடு. துரை மாமா கிட்டச் சொல்லி நானும் எல்லார்கிட்டயும் சொல்ல சொல்றேன்” என்றான் ஆதி.

“சரிடா வந்துடுறோம்” என்று சொன்ன விக்கி, தன் அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீயைப் பார்த்து. “டேய், நேத்து அப்பா உன்கிட்ட ஸ்ரீயைப் பத்தி சொன்னார் இல்லையா? அதனால தான் அவனை இன்னிக்கு வேலைக்கு ஜாயின் பண்ணி விட்டுடலாம்னு நானே கூட்டிட்டு வந்தேன்” என்றான் விக்கி.

“ஆமாடா” என்ற ஆதி, ஸ்ரீரிடம் கொண்டுவந்த பயோடேட்டாவை வாங்கிப் பார்த்தவன். “மது ஃபேப்ரிக்ல நல்லா எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறதுனால, நாம மதுவை நம்ம டிசைனிங் செக்ஷனுக்கு மாத்தலாம்னு நினைக்கிறேன் விக்கி. என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான் ஆதி.

“ஏய், சரியான முடிவு தான்டா எடுத்து இருக்க. மதுவுக்கு மெட்டீரியல் விஷயத்துல நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. அவங்க இருந்தாங்கன்னா ஃபேப்ரிக் சூஸ் பண்றதுல நல்ல திறமையா வேலை பார்ப்பாங்கன்னு எனக்குத் தோணுது” என்றான் விக்கி.

“ஆமாடா. அப்போ மது செஞ்சிட்டு இருந்த வேலைக்கு நாம ஸ்ரீயை அப்பாயிண்ட் பண்ணிடலாமா?” என்று கேட்டான் ஆதி.

“சரிடா. நீ சொன்ன மாதிரியே செஞ்சிடலாம்” என்று விக்கி சொல்ல…

ஆதி எழுந்து தன் இன்டர்காமில் ரியாவை அழைக்க… அவள் பெயரைக் கேட்டதும் ஸ்ரீக்கு கதிர் திருமணத்தில் பார்த்த ரியாவின் நினைவு வர, ‘ஒரு வேலை அவள் இங்கு தான் இருக்கிறாளோ?’ என்று யோசித்தான்.

அவன் நினைத்தது வீண் போகவில்லை. அவன் நினைத்தது போலவே ரியா, ஆதியின் அறைக் கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே வர…. அவளைப் பார்த்ததும் ஸ்ரீக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

ரியாவும் சோபாவில் அமர்ந்திருந்த ஸ்ரீயைப் பார்த்ததும் அவளுக்கும் சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ஸ்ரீயைப் பார்த்ததும் முதலில் அடையாளம் தெரிந்துவிட, ரியாவின் முகம் பிரகாசமாவதைக் கவனித்த ஸ்ரீ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

அன்று திருமணத்தில் பார்த்த பெண் ரியா என்று தன்னுடன் வேலை செய்யப் போகிறாள் என்று நினைத்த ஸ்ரீக்கு மிகவும் மகிழ்ச்சியாகி போனது.

தன் அருகில் அமர்ந்திருந்த விக்கியின் கையை ஸ்ரீ சுரண்ட… அவனைப் புரியாமல் பார்த்த விக்கி, “என்னடா?” என்றான் மெதுவாக. “மாமா, அன்னிக்கு கதிர் மாமா கல்யாணத்துல நான் ஒரு பொண்ணைப் பார்த்தேன். அந்தப் பொண்ணுதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு நேற்று உங்ககிட்ட சொன்னேனே, ஞாபகம் இருக்கா?” என்றான் ஸ்ரீ.

“ஆமாடா, ஞாபகம் இருக்கு. ஏன்?” என்று கேட்டான் விக்கி. “அந்தப் பொண்ணு வேற யாரும் இல்ல. அதோ உங்க முன்னாடி நின்னுட்டு இருக்கே ரியா, இந்தப் பொண்ணு தான் மாமா” என்றான் ஸ்ரீ சிரித்துக் கொண்டே.

ஸ்ரீ தன்னைப் பார்த்துவிட்டு விக்கியிடம் ஏதோ சொல்வதைக் கவனித்த ரியா, அவனை கண்டுகொள்ளாதவள் போல ஆதியின் டேபிளுக்கு முன்பு வந்தவள், “சார் சொல்லுங்க” என்று கேட்க….

“ரியா, இவர் பேரு ஸ்ரீ. மதுவோட போஸ்டிங்க்கு புதுசா இவரை அப்பாயின்ட் பண்ணி இருக்கோம். நீ அவர்கிட்ட என்ன வேலைன்னு கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ணிடு” என்று சொன்னான்.

ஸ்ரீயைப் பார்த்ததும், ‘வாடி, நீ எங்க கிட்ட தான் வந்து இருக்கியா? அன்னிக்கு என்னோட நிக் நேம் கேட்டதுக்குச் சொல்ல மாட்டேன்னு கிளம்பிப் போனியே. இப்போ என்கிட்டேயே வந்து நல்ல வசமா மாட்டிக்கிட்டியே’ என்று மனதில் நினைத்தவள்.

“வாங்க மிஸ்டர் ஸ்ரீ” என்று அவன் பெயரை அழுத்தமாகச் சொல்லி அழைத்து அவள் முன்னே செல்ல….

ஸ்ரீ விக்கி இடம் திரும்பி, “மாமா, நீங்க நேத்து சொன்னது ஞாபகம் வச்சுக்கோங்க. எனக்கும் ரியாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது உங்க பொறுப்பு” என்று சொன்னவன், “சரி மாமா, என் ஆளு என்னைக் கூப்பிடுறா. நான் போயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டுச் சோபாவில் இருந்து எழுந்தவன், ஆதியிடமும் சொல்லிவிட்டு ரியாவின் பின்னால் சென்றான்.

ஸ்ரீயை அதிர்ச்சியாகப் பார்த்த விக்கி, ‘சரி சரி, அடுத்த காதல் ஜோடி ரெடி ஆயிடுச்சு போல’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன், ஆதியிடம் சொல்லிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

ஸ்ரீயை மதுவின் கேபினுக்கு அழைத்து வந்த ரியா, “மிஸ்டர் ஸ்ரீ, இதுதான் உங்களோட கேபின். ஒரு 10 டேஸ்க்கு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. ஏன்னா இங்க இருக்கிற ஃபைல்ஸ் எல்லாம் மது மெயின்டெயின் பண்ணிட்டு இருந்தாங்க. அவங்க நம்ம ஆபீஸ் விஷயமா சிம்லா போயிருக்காங்க. அவங்க வந்ததும் இந்த ஃபைல் பத்தி விவரம் எல்லாம் உங்களுக்குச் சொல்லச் சொல்றேன். அதுவரைக்கும் மற்ற வேலை எல்லாம் நீங்க பாருங்க” என்று சொல்லிவிட்டு அவள் கேபினுக்குச் செல்லப் போக…

“மிஸ் ரியா ஒரு நிமிஷம்” என்று அழைத்தான் ஸ்ரீ.

‘என்ன?’ என்பது போல ரியா திரும்பிப் பார்க்க… “உங்களை நான் திரும்ப இங்கே சந்திப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு உங்களை இங்கு பார்த்ததில் ரொம்பச் சந்தோசம்” என்று சொன்னான் ஸ்ரீ.

“ஓஹோ… அப்படியா?” என்று ரியா அவனிடம் வேறு எதையும் காட்டிக் கொள்ளாமல் அவள் கேபினுக்குச் சென்று விட்டாள்.

‘என்னைப் பார்த்ததும் முகத்துல பிரகாசமா பல்பு எரிஞ்சது. ஆனால் இப்போ நானும் வந்து பேசுனதும் என்னைக் கண்டுக்காம அவ பாட்டுக்குப் போற பாரு’ என்று நினைத்த ஸ்ரீ, ‘இரு இரு, இங்கே தானே இருக்கப் போற. உன்னை நான் பிறகு பார்த்துக்கிறேன்’ என்று நினைத்தவன் அவன் கேபனுக்குச் சென்று விட்டான்.


மாத்திரையின் வீரியத்தில் மது நன்றாகத் தூங்கி இருக்க…. அவள் அருகில் அமர்ந்திருந்த பவனும் மதுவின் கையைப் பிடித்துக்கொண்டே கட்டிலில் சாய்ந்து உறங்கி விட்டான்.

நள்ளிரவு போல மாத்திரையின் வீரியம் குறைந்து மதுவிற்கு உடல் குளிரில் உதறல் எடுக்க….. அவள் நடுங்கிக் கொண்டே முனகும் சத்தம் கேட்டுத் தூக்கம் கலைந்து பார்த்த பவனுக்கு மதுவின் நிலையைப் பார்த்துப் பதட்டம் ஆகிவிட்டது.

அவள் இப்படித் திடீரென்று நடுங்குவதைப் பார்த்த பவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சேரில் இருந்து எழுந்த பவன், கட்டிலில் மதுவின் அருகில் அமர்ந்து, அவள் கையைப் பிடித்துக் கொண்டு மதுவின் கன்னம் தட்டி அவளை எழுப்ப…. அவள் தன் நிலையிலேயே இல்லை.

மதுவிற்கு மிகவும் உடல் உதறல் எடுக்க… அப்போது அவன் அந்த ரூமில் ஹீட்டரின் அளவை மேலும் அதிகப்படுத்திவிட்டு, அவளுக்கு மேலும் ஒரு போர்வை கொண்டு வந்து பவன் போர்த்தி விட, அப்போதும் அவள் உடல் குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்தது. அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவள் அருகில் அமர்ந்திருந்தான்.

மதுவின் கையை, கையையும் காலையும் மாற்றி மாற்றிச் சூடு பறக்கத் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தான் பவன்.

மதுவின் உடல் சில்லென்று இருந்ததே ஒழிய, சிறிது கூட அவள் உடல் வெப்பமடையவில்லை. அவனுக்கு என்ன செய்வது என்று புரியாமல் இருக்க, சட்டென்று அவனுக்கு ஒரு யோசனை வரவும், அவள் மேல் போர்த்தியிருந்த போர்வையை எடுத்து அதன் உள் புகுந்து, அவளைத் தன்னோடு சேர்த்து கட்டிக்கொண்டு படுத்தான் பவன்.

ஏற்கனவே குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த மது, தன்னருகில் அவன் படுத்ததும், அவன் உடல் சூடாக இருக்கவும், தன்னிச்சையாகத் தன் அருகில் படுத்திருந்த பவனை மதுவும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.

அவன் உடல் சூடு தந்த வெப்பத்தில் மதுவின் உடல் உதறலில் இருந்து சற்று வெப்பம் கிடைத்ததும் அவள் நடுக்கம் மட்டுப்பட்டது.

அவனுடல் தந்த கதகதப்பில் மது பவனைக் கட்டிக் கொண்டே உறங்கிவிட… மது நன்றாக உறங்குவதைக் கவனித்த பவன், தன்னைக் கட்டிக் கொண்டிருந்த அவள் கையைத் தன் மேலிருந்து எடுத்து விட்டவன், அவளிடம் இருந்து எழுந்து செல்லப் போக…

அப்போது மது தன்னிடமிருந்து எழுந்து சென்ற பவனின் கையைப் பிடித்து, வேகமாக இழுத்துத் தன் மேல் போட்டுக் கொண்டாள்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத பவன் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போயிருந்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured