Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 154

உன் ரகசிய ரசிகை நான் 154

by Layas Tamil Novel
250 views

EPISODE 154

பவன் மற்றும் மதுவைத் தன் தனி அறைக்கு (Cabin) அழைத்துச் சென்ற விக்கி, நிலானியைப் தொலைபேசியில் வரச் செய்திருந்தான்.

நிலானி, மதுவும் பவனும் சொல்வதையெல்லாம் கேட்டவள், ‘இவர்கள் இருவருக்கும் நடுவில் ஏன் தான் வந்தேனோ’ என்று ஆகிவிட்டது. அவள் தன் அக்காவுக்குப் பரிந்து பேசுவதா? இல்லை பவனுக்குப் பரிந்து பேசுவதா? என்று தெரியாமல் விக்கியைப் பார்த்தாள்.

தன் மனைவி படும் அவஸ்தையை இவ்வளவு நேரம் அருகில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தவன், எழுந்து வந்து மதுவும் பவனும் அமர்ந்திருந்த சோபாவுக்கு எதிரே நிலானியின் அருகில் அமர்ந்த விக்கி, மதுவிடம், “இப்போ முடிவா நீ என்ன சொல்ற மது?” என்று கேட்டான்.

“நான்தான் ஏற்கனவே என் முடிவைச் சொல்லிட்டேனே விக்கி. எனக்குக் கல்யாணம் பண்ணி, மறுபடியும் அந்த குழிக்குள்ள போய், தெரிஞ்சே நான் போய் அந்த வலைக்குள் சிக்கிக் கொள்ள விரும்பல. இப்படியே பவன் கூட வாழச் சம்மதம் தான். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த ஒரு கடமையும் (Commitment) இல்லாமல், ‘அவனுக்கு நான், எனக்கு அவன்’ என்கிற ஒரு உறவோடு வாழணும்னு நான் நினைக்கிறேன். கல்யாணம் என்கிற பந்தத்துக்குள்ள போயிட்டா அது வற்புறுத்தலாக மாறிடும், கடமையா மாறிடும். காதலாக இருக்காது,” என்றாள் மது.

அவள் சொல்வதையெல்லாம் கேட்ட விக்கி திரும்பிப் பவனைப் பார்க்க…

“சார், மது சொல்ற மாதிரி லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்றது எல்லாம் வெளிநாடுகளுக்கு வேணாச் சரியா வரலாம். நம்மளோட கலாச்சாரத்துக்கு இதெல்லாம் கண்டிப்பா ஒத்துவராது. அதுவும் இல்லாம, கல்யாணமாகாத என் தங்கச்சியை வீட்ல வச்சுக்கிட்டு, நான் இப்படி லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்னா, நாளைக்கு அவளை யாரு கல்யாணம் பண்ணிக்குவா?” என்று கேட்டான் பவன்.

இப்போது அவர்கள் அறைக்கதவைத் தட்டிக்கொண்டு ரியா உள்ளே வந்தாள். ரியாவை அனைவரும் ‘என்ன’ என்பது போலப் பார்க்க…

ரியா விக்கியைப் பார்த்து, “சார், இவ்வளவு நேரம் நான் உங்களோட தனி அறைக்கு வெளியே நின்னு நீங்க பேசுறது எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன்,” என்றாள்.

“ஒட்டு கேட்டுட்டு இருந்தேன்னு சொல்லு,” என்றான் விக்கி.

“எப்படி வேணா வெச்சுக்கோங்க. நான் இப்போ எதுக்கு உள்ளே வந்தேன்னு சொல்லிட்டு நான் போயிட்டு இருக்கேன் சார்,” என்றால் ரியா.

“கொஞ்சம் இடம் கொடுத்தா தலை மேலேயே ஏறி உட்கார்ந்துக்குவீங்களே! கொஞ்சம் கூட ஒரு முதலாளி (Boss) என்கிற மரியாதையே வரவர இந்த அலுவலகத்துல எனக்கு இல்லாமப் போச்சு,” என்று வாய்விட்டுப் புலம்பிய விக்கி, “சரி, என்ன சொல்ல வந்தியோ அதை சொல்லிட்டு கிளம்பு,” என்றான்.

பவனைப் பார்த்து, “இப்போ உனக்கு மது கூட லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறது பிரச்சனையா? உன்னோட தங்கச்சிக்குக் கல்யாணம் ஆகாதது பிரச்சினையா?” என்று கேட்டாள் ரியா.

அவள் கேட்டதற்கு எதுவும் பதில் கூறாமல் பவன் அமைதியாக ரியாவைப் பார்க்க…

“அதானே! இதை நான் யோசிக்கவே இல்லையே!” என்ற விக்கி பவனிடம், ரியா கேட்ட அதே கேள்வியைக் கேட்டான். “சொல்லு பவன். உன்னோட தங்கச்சிக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னா, உனக்கு மது கூட லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்றதுல எந்தப் பிரச்சினையும் இல்லையா?” என்று கேட்டான்.

அவன் மதுவை ஒரு முறை பார்த்துவிட்டு, விக்கியைப் பார்த்து, “இவளை என் பொண்டாட்டியா நான் எப்பவோ என் மனசுல ஏத்துக்கிட்டேன் சார். தாலி கட்டித் தான் மது கூட வாழணும்னு நான் நினைக்கல. என்கூட மது இருந்தாலே போதும். ஆனால், இதை என் அம்மாவும் தங்கச்சியும் ஒத்துக்கணும். என் தங்கைக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும். ஆனா எங்க வீட்ல நான் கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் தான் என் தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணணும்னு என் அம்மா பிடிவாதமா இருக்காங்க. அப்படி இருக்கிறப்போ, என்னோட கல்யாணம் ஆகாம எப்படி நான் என் தங்கச்சியுடைய கல்யாணத்தை செய்ய முடியும்?” என்றான் பவன்.

“அப்போ உனக்கு மது கூட லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்றதுல எந்தப் பிரச்சினையும் இல்லை. உன்னோட தங்கச்சியையும் அம்மாவையும் சமாளிக்கணும் அவ்வளவுதான், அப்படித்தானே?” என்றான் விக்கி.

‘ஆமாம்’ என்பது போலப் பவன் தலையாட்ட… மதுவிற்குப் பவனின் இந்த முடிவு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவனுடைய தரப்பில் இருந்து யோசித்துப் பார்த்தால், அவன் இவ்வளவு நாள் பிடிவாதமாக இருந்ததும் சரி தான் என்று நினைத்த மது, பவனிடம், “எவ்வளவு நாள் வேண்டுமானாலும் நான் உனக்காகக் காத்திருக்கிறேன் பவன். நீ உன் அம்மாகிட்ட சம்மதம் வாங்கி, உன்னோட தங்கைக்குக் கல்யாணம் முடிஞ்ச பிறகு, நம்மளோட வாழ்க்கையை நம்ம ஆரம்பிக்கலாம்” என்று சொன்னாள்.

“என்ன சொல்ற பவன்? அப்போ உனக்கு மது சொல்றதில் சம்மதமா?” என்று கேட்டான் விக்கி.

“சம்மதம் தான் சார். ஆனால், எப்படி என் தங்கைக்குக் கல்யாணம் செய்து வைக்க வீட்ல என் அம்மாகிட்ட சம்மதம் வாங்குவது என்றுதான் தெரியல,” என்றான் பவன்.

பவன் பேசியதைக் கேட்டு குறுக்கிட்ட ரியா, “சார், எனக்கு ஒரு யோசனை (Idea). நான் சொல்றதக் கேட்டுப் பாருங்க. ஓகேன்னா அதுபடி செய்வோம். அப்படி இல்லைன்னா, நீங்க என்ன சொல்றீங்களோ அப்படிப் பண்ணிக்கலாம்,” என்று விக்கியைப் பார்த்து ரியா பேச…

“சரி சொல்லு. நீ ஏதோ யோசனையோடு தான் இருக்கேன்னு பேசுறத வெச்சு நல்லாத் தெரியுது,” என்றான் விக்கி.

“பவன் அம்மாகிட்ட முதல்ல அவன் தங்கைக்குக் கல்யாணம் பண்ண சம்மதம் வாங்குவதைக் விட… அவனோட தங்கைக்கு ஒரு நல்ல இடத்துல மாப்பிள்ளை வந்திருக்கு. அதனால பவன், ‘தங்கைக்கு முதலில் கல்யாணம் பண்ணிட்டு, அதன் பிறகு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு’ அவங்க அம்மா கிட்டச் சொல்ல சொல்லுங்க. முதல்ல பவனோட தங்கச்சிக்குக் கல்யாணம் முடிச்ச பிறகு, அப்புறம் மது பத்தியும் பவனைப் பத்தியும் அவங்க அம்மாகிட்டப் பொறுமையாக எடுத்துச் சொல்லி சம்மதம் வாங்கிக்கட்டும்,” என்றால் ரியா.

“இந்த யோசனை நல்லா இருக்கே! ‘தங்கைக்குக் கல்யாணம் பண்ண பிறகு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு’ சொல்றதை விட, ‘பவனோட தங்கச்சிக்கு மாப்பிள்ளை ரெடியா இருக்கு. அதனால முதல்ல தங்கச்சி கல்யாணம் முடிச்சுட்டு, அதுக்கப்புறம் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு’ சொல்லலாமே? இதுவும் நல்லாத் தானே இருக்கு,” என்றான் விக்கி.

“நீயா சொல்ற யோசனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, முதல்ல பவனோட தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ண மாப்பிள்ளைக்கு எங்க போறது?” என்றால் நிலானி.

“ஆமால்ல!” என்றான் விக்கி.

“ஆமாம் இல்லை இல்லைங்க. ஆமாம் மட்டும் தான்,” என்றால் நிலானி.

“சரி சரி. ஆமாம் தான். சரி சொல்லு ரியா, இதுக்கும் நீயே எதுவும் யோசனை வச்சிருக்க?” என்று விக்கி ரியாவைப் பார்த்துக் கேட்க…

“சார்… அது…அது வந்து…” என்று ரியா இழுக்க…

“என்ன ரியா? வந்து போய் இழுக்கிற? என்ன சொல்ல வந்தியோ அதைச் சட்டுன்னு சொல்லிடு,” என்றான் விக்கி.

ரியா தங்களுக்கு என்ன யோசனை சொல்லப் போகிறாள் என்று அனைவரும் ரியாவின் முகத்தையே பார்க்க…

“அது ஒண்ணும் இல்லை சார். இப்போ பவனுக்கு ஒரு தங்கச்சி இருக்கா…” என்றாள்.

“தங்கச்சி இருக்கு,” என்றான் விக்கி.

“அப்போ, நம்ம திட்டம் படி நம்ம பவனோட தங்கச்சிக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்கணுமா?” என்றாள் ரியா.

“ஆமாம், பார்க்கணும்னு நீ தானே இப்ப சொன்ன?” என்றான் விக்கி.

“எனக்கு வேற ஒரு அண்ணன் இருக்கானா…” என்றால் ரியா.

“சரி, இருக்கட்டும். அதுக்கு என்ன இப்போ?” என்றான் விக்கி.

“ஐயோ சார்! இப்படி நான் சொன்னதுக்கெல்லாம் திருப்பி நீங்க பதில் இப்படிப் பேசிட்டு வந்தா, நான் எப்படித்தான் உங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்கிறது?” என்று கையைப் பிசைந்து கொண்டு நின்றாள் ரியா.

பவனும் மதுவும் ரியா என்ன சொல்லப் போகிறாள் என்று ஆர்வமாக அவளைப் பார்க்க…

விக்கியும் ரியாவும் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு இடையில் வந்த நிலானி, “ஒரு நிமிஷம்” என்று இடையில் புகுந்தவள், “இப்போ நீ என்ன சொல்ல வரேன்னு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டாள்.

“சொல்லுங்க மேடம்,” என்றால் ரியா.

“பவன் சார் வீட்ல தங்கச்சி இருக்கு… உன் வீட்ல அண்ணன் இருக்காங்க அப்படின்னு தானே நீ சொன்ன?” என்றாள் நிலானி.

“ஆமாம்” என்று தலையை ஆட்டினாள் ரியா.

“என்னங்க, ரியா என்ன சொல்ல வரான்னு எனக்கு இப்போ நல்லா புரிஞ்சிருச்சு,” என்று நிலானி விக்கியைப் பார்க்க…

“என்ன நிலாக் குட்டி? உனக்குப் புரிஞ்சிருச்சு?” என்று அவளைக் கொஞ்சிக் கொண்டே விக்கி கேட்க…

“அது ஒண்ணும் இல்லைங்க. பவன் சாருடைய தங்கச்சியை ரியாவோட அண்ணாவுக்கு ஏன் கல்யாணம் பண்ணி வைக்க கூடாதுன்னு அவ கேட்க வரா,” என்றால் நிலானி.

நிலானி சொன்னதைக் கேட்ட மூவரும் திரும்பி ரியாவின் முகத்தைப் பார்க்க, ரியா ‘ஆமாம்’ என்று தயங்கியபடியே தலையை ஆட்டினாள்.

“அப்புறம் என்ன? பிரச்சினை தீர்ந்தது (Problem Solved)! அப்போ ரியாவோட அண்ணனைப் பவனோட தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணி வச்சுடுவோமா?” என்றான் விக்கி.

உடனே ரியா, “சார், அதுல ஒரு சிக்கல் இருக்கு,” என்றாள்.

“என்னம்மா நீ? இப்பதான் பிரச்சினை தீர்ந்ததுன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள மறுபடியும் ஒரு பிரச்சினை இருக்குன்னு சொன்னா என்னதான் பண்றது?” என்று விக்கி சலித்துக் கொண்டான்.

“ஒண்ணும் இல்லை சார். என் வீட்ல என் அண்ணனுக்காக வரன் பார்த்துட்டு இருக்காங்க. நான் போய் இந்த மாதிரி அலுவலகத்துல என்கூட வேலை பார்க்கிறவருடைய தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்கன்னு சொன்னா, என்னை ஏதோ விளையாட்டுத்தனமா சொல்றேன்னு நினைச்சுப்பாங்க. அதனால, முதல்ல எங்க வீட்ல என் அம்மா அப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்கணும். அதுக்கு பிறகு தானே பவன் அவங்க வீட்ல பேச முடியும்?” என்றாள் ரியா.

“அதுக்கு என்ன? பேசியே சம்மதம் வாங்கிட்டா போச்சு!” என்ற விக்கி பவனைப் பார்த்து, “என்ன பவன், உன்னோட தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்கப் போலாமா?” என்றான்.

“சார், ரியா சொன்னதுல எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதுக்கு முன்னாடி நான் என் தங்கச்சி கிட்டப் பேசி, அவளுக்கு முதல்ல கல்யாணம் பண்ணிக்க இஷ்டமானு கேட்டு, அதுக்கப்புறம் தான் நான் எந்த முடிவும் எடுக்க முடியும் சார். என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க,” என்றான் பவன்.

“இதுல நான் தப்பா எடுத்துக்க என்ன இருக்கு பவன்? உன் தங்கச்சி தான் வாழப் போறவ. அவளோட சம்மதம் கண்டிப்பா முக்கியம். பொறுமையா உன் தங்கச்சி கிட்டப் பேசி சம்மதம் வாங்கு. அதுக்கு பிறகு நம்ம ரியாவோட அண்ணனை மாப்பிள்ளை கேட்டு அவங்க வீட்ல பேசலாம்,” என்ற விக்கி, “இப்போதைக்கு இந்தப் பிரச்சினை ஓரளவுக்கு முடிஞ்சதுன்னு நினைக்கிறேன். சரி… சரி… எல்லாரும் போய் அவங்க அவங்க வேலையைப் பாருங்க. எனக்கு இங்கே ரொம்ப முக்கியமான வேலை இருக்கு,” என்று தன் அறையில் இருந்தவர்களை எல்லாம் வெளியில் அனுப்பி விட்டான் விக்கி.

அனைவரும் வெளியே சென்று விட… இப்போது விக்கியும் நிலானியும் மட்டும் அந்த அறையில் இருக்க…

நிலானி விக்கியிடம், “சரிங்க, நீங்க ஏதும் முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னீங்களே. அதை பாருங்க. நானும் வீட்டுக்குக் கிளம்புறேன்,” என்று சொல்லி சோபாவில் இருந்து எழுந்திருக்கப் போக…

“ஏன் நிலாக் குட்டி? நீ எங்கடி போற? உன்னைக் கொஞ்சறதுக்காகத் தானே அவங்க கிட்ட முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லி வெளியே அனுப்பி வைத்தேன்,” என்றவன்.

நிலானியைச் சோபாவில் தள்ளி, அவள் மேல் படுத்துக் கொண்டே சொன்னான் விக்கி. அவன் மீசையை முறுக்கியவாறு, “சரியான ஆளுதாங்க நீங்க,” என்று சொல்லி நிலானி வெட்கப்பட…

“என் பொண்டாட்டி கூடத் தனியா நேரம் கிடைச்சா, அதை ஒரு நிமிஷம் கூட நான் வீணாக்க மாட்டேன்,” என்று சொல்லி அவளுக்கு முத்தமிட ஆரம்பித்தான்.


இரண்டு நாட்கள் கழித்து செண்பகம், துர்காவைப் பார்த்துக் கொள்ள அவர்களுடனே வந்து தங்கி கொண்டார்.

ஆதி அலுவலகம் சென்ற பிறகு, துர்காவுடன் நேரம் செலவிடுவது செண்பகத்தின் வேலையாகி போனது. துர்காவுடன் உடன் சேர்ந்து அவளுக்குத் தேவையானதைச் செய்தவர், துர்காவுடன் தன் பொழுதைக் கழித்தார்.

முன்பை விட துர்காவிற்கு இப்போது ஓரளவுக்கு உடல்நிலை தேற ஆரம்பித்து இருந்தது. அதற்கு முக்கிய காரணம் செண்பகம் என்று சொல்லலாம். ஆதி அவளுடன் இல்லாத நேரத்தில் துர்காவுக்குத் துணையாக செண்பகம் இருக்கவே, துர்காவின் மனநிலை நன்றாக முன்னேற்றம் அடைய ஆரம்பித்ததால், அவள் உடல் நலனும் அதனுடனே சேர்ந்து குணமாக ஆரம்பித்தது.

ஏறக்குறைய துர்கா விபத்துக்கு உள்ளாகி இரண்டு மாதங்களைக் கடந்து, இப்போது கால் கட்டுகளை எல்லாம் பிரித்து, கொஞ்சம் கொஞ்சமாக நடக்க ஆரம்பித்திருந்தாள். முழுவதுமாகத் துர்கா குணமடையவில்லை என்றாலும், நடக்க உதவும் கருவியின் (Walker) உதவியுடன் துர்கா மெது மெதுவாக நடக்க ஆரம்பித்திருந்தாள்.

அப்போது அவளை வந்து விசாலாட்சியும் கனகாவும் பார்த்துவிட்டுச் சென்றனர். அதேபோல வடிவும் முருகனும் அவ்வப்போது துர்காவைப் வந்து பார்த்துவிட்டு, அவள் நலன் விசாரித்துவிட்டுச் செல்வர்.

துர்கா இப்போது சிறிது சிறிதாக நடக்க ஆரம்பித்ததிலிருந்து, அந்த வீட்டில் ஒரு இடம் விடாமல், நடக்க உதவும் கருவியின் உதவியுடன் அடிக்கடி இங்கும் அங்கும் உலாவி கொண்டிருப்பதை அவள் வேலையாகிப் போய்விட்டது.

ஓரிடத்தில் இருந்து அவளை ஓய்வு எடுக்கச் சொல்லி ஆதி எவ்வளவோ முறை சொல்லிவிட்டான். ஆனால், அவன் செல்லும் வரை நல்ல பிள்ளை போல அமைதியாகத் தன் அறையிலேயே இருப்பவள், ஆதி அந்தப் பக்கம் சென்றதும், வேகமாகத் தன் அறையை விட்டு வெளியே வந்து மின்தூக்கியின் (Lift) மூலம் கீழே வந்து, செண்பகத்துடனும் மற்ற வேலையாட்களுடன் தன் பொழுதைக் கழிக்க ஆரம்பித்தாள்.

இன்றும் அப்படித்தான் தன் அறையில் இல்லாமல் துர்கா தோட்டத்தில் (Garden) முத்துத் தாத்தாவுடன் ரோஜா பூக்களைப் பார்த்து, அவரோடு சேர்ந்து செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள்.

எவ்வளவோ முறை துர்காவை வீட்டிற்குள் வரச் சொல்லி அழைக்க, அவள் “கொஞ்ச நேரம் மட்டும் இங்கே இருந்துவிட்டு வருகிறேன்” என்று செண்பகத்திடம் கெஞ்ச… வேறு வழியில்லாமல் அவரும், “சரி, கொஞ்சம் பத்து நிமிடம் தான் உனக்கு நேரம். அதற்குள்ளே உள்ளே வரவேண்டும்,” என்று சொல்லிவிட்டுப் பூஜை அறைக்குச் சென்றுவிட…

உள்ளே சென்று பூஜை முடித்து வரும் வரை துர்கா தோட்டத்தை விட்டு உள்ளே வரவே இல்லை. துர்காவிற்குத் தோட்டத்தில் இருந்தாலே நேரம் போவதே தெரியாது.

அலுவலக விஷயமாக ஏதோ ஒரு கோப்பைப்ை (File) எடுக்க ஆதி வீட்டிற்கு வர… தான் வருவது தெரியாமல் துர்கா தோட்டத்தில் இருக்க… காரை நிறுத்திவிட்டு இறங்கி வீட்டுக்குள் செல்லப் போனவன், தோட்டத்தில் சிரித்துப் பேசும் சத்தம் கேட்கவும், துர்காவின் குரல் போல இருக்கத் தன்னிச்சையாக ஆதி திரும்பித் தோட்டத்தைப் பார்க்க…

சிவப்பு நிறப் புடவையை உடுத்தி இருந்த துர்கா, தரையில் குறையாமல் இருக்கப் புடவையைத் தூக்கி இடுப்பில் செருகிக்கொண்டு, ஒரு கையால் நடக்க உதவும் கருவியைப் பிடித்தபடியும், மறு கையால் ரோஜா பூக்களைக் கையில் ஏந்திய படி முத்துத் தாத்தாவிடம் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு துர்காவை இப்படிப் பார்த்ததில் ஆதிக்குப் பெரிய ஆச்சர்யமே.

முத்துத் தாத்தா துர்காவிடம் பேசியவர், “நீ இங்கேயே இரு பாப்பா… நான் போய் சமையல் அறையில் வேலை எல்லாம் முடிஞ்சுதான்னு பார்த்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்லப் போக… முத்துத் தாத்தா வருவதைப் பார்த்த ஆதி, அவர் கண்களில் படாதவாறு ஓடிச்சென்று காரின் பின்னால் மறைந்து கொண்டான்.

அவர் உள்ளே சென்றதும் ஆதி துர்காவுக்குத் தெரியாமல் அவளிடம் சென்றான்.

முத்துத் தாத்தா வீட்டிற்குள் வந்தார். அவர் மட்டும் உள்ளே வருவதைப் பார்த்த செண்பகம், “என்ன நீங்க மட்டும் வரீங்க? துர்கா வரலையா?” என்றவர்.

“துர்கா பாப்பா தோட்டத்துல தான் இருக்கு. நான் தான் பாப்பாவை அங்கே இருக்க சொல்லிட்டு, சமையலறை வேலை எல்லாம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்னு வந்தேன்,” என்று சொன்னார் முத்துத் தாத்தா.

“சரி, நீங்க சமையலறையில வேலையைப் பாருங்க. நான் வேணா போய்த் துர்காவுக்குத் துணையாத் தோட்டத்துல இருக்கேன். அவள் தனியா இருக்கா,” என்று செண்பகம் சொல்லிக்கொண்டு சோபாவில் இருந்து எழுந்து தோட்டம் நோக்கிச் செல்லப் போக…

“அம்மா ஒரு நிமிஷம் நில்லுங்க. போகாதீங்க. ஆதி தம்பி வந்திருக்கு. அதனாலதான் நான் சமையலறைக்கு வரேன்னு துர்கா பாப்பாகிட்ட சொல்லிட்டு அவங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு உள்ளே வந்துட்டேன். நீங்க போக வேண்டாம்,” என்று சொல்ல…

“ஆதி வந்திருக்கானா? அப்போ சரி,” என்று சொல்லி சோபாவிலேயே அமர்ந்துவிட்டார் செண்பகம்.

“ஆமாம்மா. ஆதி தம்பி எனக்குத் தெரியக் கூடாதுன்னு சொல்லி காருக்குப் பின்னாடி ஒளிஞ்சிகிச்சு. ஆனால் நான் ஆதி தம்பி வந்ததைப் பார்த்துட்டு தான் துர்கா பாப்பாவை மட்டும் தோட்டத்துல விட்டுட்டு உள்ள வேலை இருக்குன்னு சொல்லி வந்துட்டேன்,” என்று சொல்லிவிட்டு முத்துத் தாத்தா சிரிக்க…

அவர் சொன்னதைக் கேட்டு செண்பகம், “சின்னஞ்சிறுங்க தனியாக இருக்கட்டும். நம்ம எதுக்கு குறுக்கே போய்க்கிட்டு?” என்று சொல்லி தன் கையில் இருந்த புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார்.


துர்காவிற்குக் பழைய நினைவுகள் எல்லாம் மறந்துவிட்டது என்று சங்கவிக்குத் தெரிந்த நாளிலிருந்து, அவளைத் தனியாகச் சந்திக்க எவ்வளவோ முறை சங்கவி முயற்சி செய்து பார்த்துவிட்டாள். ஆனால், அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

துர்காவை வீட்டை விட்டு ஆதி எங்கும் அழைத்துச் செல்வதில்லை. அப்படியே அழைத்துச் செல்வது என்றால் அவளைச் சுற்றி ஏகப்பட்ட பாதுகாவலர்களும் (Body Guards) அவளுடன் ஆதியும் சேர்ந்தே வருகிறான்.

ஆதியுடன் சேர்ந்து டென்மார்க், சுவிட்சர்லாந்து என்று சென்ற சங்கவிக்கு, அவர்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலைப் பற்றி ஓரளவுக்கு விவரம் தெரிய ஆரம்பித்திருந்தது.

ஆதியின் நிறுவனத்துடன் ஆன சங்கவியின் நிறுவனத்திற்கு உண்டான ஒப்பந்தம் (Contract) இன்னும் முடியாத காரணத்தால், அதை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு ஆதியின் நிறுவனத்துக்குள் மீண்டும் நுழைய சங்கவி திட்டம் (Plan) செய்து கொண்டிருந்தாள்.

தன் தனி அறையில் இருந்து அவள் அப்பாவைப் பார்க்க அவர் அறைக்குச் சென்ற சங்கவி, உள்ளே வந்தவள் அவள் அப்பாவிடம் ஆதியின் நிறுவனத்தில் இருக்கும் தங்களுடைய ஒப்பந்தம் பற்றி அவரிடம் சொல்ல…

“எனக்கு இந்தக் ஒப்பந்த விஷயம் ஏற்கனவே தெரியும் சங்கவி. ஆனால், நம்ம அவங்களுக்குச் செய்த துரோகத்தை எல்லாம் தெரிஞ்ச பிறகு, எப்படித் திருப்பி அவங்க நம்ம கூடச் சேர்ந்து ஒண்ணா வேலை பார்ப்பாங்க?” என்று கேட்டார் வேதாச்சலம்.

“நீங்க சொல்றதும் சரிதான் அப்பா. அவங்க கம்பெனிக்குள்ள நுழைய ஏதாவது ஒரு காரணம் கண்டிப்பா வேணுமே,” என்று சங்கவி யோசிக்க…

உடனே வேதாச்சலம் சங்கவியிடம், “நம்ம ஆதியோட சேர்ந்து ஏற்கனவே ஒரு ப்ராஜெக்ட் பண்ணும் போது ஞாபகம் இருக்கா சங்கவி?” என்று கேட்டார்.

“எந்தப் ப்ராஜெக்ட் அப்பா? நம்ம அவங்க கூட நிறைய ப்ராஜெக்ட் சேர்ந்து வேலை பார்த்து இருக்குமே?” என்று சங்கவி கேட்டாள்.

“அதுதான்! அந்தத் துர்கா கூட அந்தப் பிராஜக்ட்ல தானே முதல் முறையா விளம்பர மாடல் ஆனா? அந்தப் ப்ராஜெக்ட் தான்,” என்றார் வேதாச்சலம்.

“ஆமாம்ப்பா. அந்தப் ப்ராஜெக்ட் தான் எப்பவோ முடிஞ்சிடுச்சு. அதுக்கு என்ன இப்போ?” என்றால் சங்கவி.

“ப்ராஜெக்ட் முடிஞ்சிடுச்சுமா. ஆனா, அந்தப் ப்ராஜெக்ட் மூலமா நமக்கு உலகம் பூரா வந்து குவிந்திருக்கிற ஆர்டர்கள் எல்லாம் இன்னும் ஆதியின் நிறுவனத்துடன் சேர்ந்து நம்ம நிறுவனமும் செய்துவிட்டுத் தான் இருக்கு,” என்றார் வேதாச்சலம்.

“ஆமாம்ப்பா. நான் அந்தப் ப்ராஜெக்ட் முடிஞ்ச கையோட டென்மார்க் போயிட்டதால அதைப் பத்தி யோசிக்காமயே விட்டுட்டேன். இப்போ அந்தப் ப்ராஜெக்ட் எந்த நிலையில் இருக்கு?” என்று கேட்டாள் சங்கவி.

“அந்தப் ப்ராஜெக்ட் ரொம்பப் பெரிய வெற்றியை அடைந்துவிட்டதால, அதனுடைய ஆர்டர் நம்மளுக்கு வந்துகிட்டே தான் இருக்கு சங்கவி. அதனால, ஆதியோட நிறுவனத்துடன் இருக்கிற நம்ம ஒப்பந்தம் இப்போதைக்கு நம்மால் முடிவுக்குக் கொண்டு வர முடியாது. அப்படியே முடிவுக்குக் கொண்டு வர்ற மாதிரி இருந்தாலும், இன்னும் ஒரு ஆறு மாசத்துக்கு மேல தான் ஆகும். என்ன… அந்த அளவுக்கு ஆர்டர் வந்து குவிந்துகிட்டே இருக்கு. ஆதியின் நிறுவனம் விடாமல் அதனுடைய வேலையைப் பார்த்துட்டு இருக்காங்க. நம்ம சும்மா என்னன்னு பார்த்தா போதும். முழு வேலையும் அவங்க தான் பார்த்துட்டு இருக்காங்க,” என்று வேதாச்சலம் சொல்ல…

“ஓகே அப்பா. இந்தப் ப்ராஜெக்ட்டைக் காரணமாக வைத்து நான் ஆதி கூட கம்பெனிக்குள்ள போயிடலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று வேதாச்சலத்திடம் கேட்க…

“அதற்காகத்தான் சங்கவி நான் உனக்கு அந்தப் ப்ராஜெக்ட் பத்தியே சொன்னேன்,” என்ற வேதாச்சலம், “நீ இதையே காரணமா வெச்சு ஆதி கூட கம்பெனிக்குள்ள போய் விடலாம். உன்னை யாரும் எதுவும் கேட்க முடியாது,” என்று சொன்னார் வேதாச்சலம்.

“சரிப்பா. நான் நாளையிலிருந்து ஆதியோட கம்பெனியில் நடந்திருக்க நம்ம ப்ராஜெக்டைக் கவனிக்கிறதுக்காகப் போகப் போறேன்,” என்று சங்கவி சொல்ல, அவரும் ‘சரி’ என்று தலையாட்டினார்.

You may also like

2 comments

S joshna November 28, 2025 - 9:19 am

Intha sangavi ku vera velaye illa evlo patalum thiruntha mata pola akka inaki episode super 😍💕

Reply
Layas Tamil Novel November 28, 2025 - 9:32 am

வில்லிக்கு அதானே வேலை. தேங்க்ஸ் சிஸ்டர் கமெண்ட் பண்ணினதுக்கு 😄😍

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured