Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 157

உன் ரகசிய ரசிகை நான் 157

by Layas Tamil Novel
176 views

EPISODE 157

சாவியைக் கொண்டு வந்து அலுவலகத்தில் வைத்துவிட்டுப் போக வந்த மாதவி, அலுவலக அறையை எட்டிப் பார்க்க… அறை இருட்டாக இருக்கவும் பயந்துகொண்டே உள்ளே சென்ற மாதவி, இருட்டில் தெரிந்த உருவத்தைக் கண்டு பயந்து அப்படியே உறைந்து போய் நின்றாள்.

“யாரு… யாரு நீங்க…” என்று கேட்க… அந்த உருவம் அப்படியே அசையாமல் எதுவும் பேசாமல் நின்று இருந்தது.

பதட்டத்துடனே மாதவி மெதுவாக அந்த உருவத்தின் அருகில் செல்ல… அறையில் தெரிந்த சிறு வெளிச்சத்தை வைத்து அந்த உருவத்தை மாதவி நன்றாக உற்றுப் பார்க்க, அப்போதுதான் அது சிலை என்று கண்டுபிடித்தாள்.

இந்தக் கல்லூரியை நிறுவிய போதியின் தாத்தாவின் சிலைதான் அங்கே முன்னால் நிறுவப்பட்டு இருந்தது. சென்ற முறை வரும்போது கூட மாதவி இந்தச் சிலையை பார்த்து இருந்தால். ஆனால், இருட்டில் அது சிலை என்று தெரியாமல் அதைப் பார்த்துப் பயந்துவிட்டாள்.

“ப்பூ… வெறும் சிலையா! நான் கூட இங்கு யாரும் அப்படியே ரோபோ மாதிரி நின்னுட்டு இருக்காங்கன்னு எல்லாம் நினைச்சுட்டேன்,” என்று நினைத்துச் சிரித்தவள்.

அங்கிருந்த அலுவலக அறைக்குள் வந்தவள், உள்ளே எட்டிப் பார்க்க, அங்கே உள்ளே போதியின் தனி அறையும் (Cabin) அலுவலக அறையோடு சேர்த்து இருந்தது. போதியை ஒரு முறை பார்க்க வந்தபோது இந்த அலுவலக அறைக்கு வந்திருந்தாள் மாதவி. அதன் பிறகு இப்போதுதான் வருகிறாள்.

அலுவலக அறைக்குள் யாரும் இல்லாததால், தயங்கியபடியே கையில் சாவியோடு வந்த மாதவி, அதை எங்கே வைப்பது என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறு இருட்டில் தேடிக்கொண்டே சென்றவள். அங்கே அந்தக் கட்டிடங்களின் சாவிகளை எல்லாம் மாட்டி வைக்க என்று தனியாக ஒரு பலகை நன்கு தொங்கவிடப்பட்டிருக்க… அதில் நிறைய சாவிகள் மாட்டி வைக்கப்பட்டு இருந்தது. அங்கே சென்று சாவியை மாட்டலாம் என்று உள்ளே சென்றால் மாதவி.

அலுவலக அறையின் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு இருக்க… தெரிந்த சிறு வெளிச்சத்தில், தட்டுத் தடுமாறிச் சாவியை மாட்ட அந்தப் பலகைக்கு அருகில் மாதவி சென்றாள். அப்போது அங்கே இருந்த மேஜையில் கால் தடுக்கி கீழே விழுந்தவள். தரையில் தலை சற்று வேகமாக மோதிவிட, ஏற்கனவே சோர்வாக (Tired) இருந்த மாதவிக்கு, தலையில் அடிபட்டதும் தலை கிறுகிறுக்க… அப்படியே மயங்கி கீழே சரிந்தாள்.

கல்லூரி முழுவதும் ஒரு முறை நோட்டமிட்டு வந்த உதவியாளர் (Peon), அலுவலகத்திற்குள் செல்லாமல், வீட்டிற்கு நேரம் ஆனதால், அலுவலக அறையை அப்படியே வெளியே இருந்து பூட்டு போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். மாதவி உள்ளே இருந்தது அவருக்குத் தெரியாது.

தன் தனி அறையில் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பலாம் என்று போதி அலுவலகத்திலிருந்து வெளியே வந்தவன், அலுவலக அறை மிகவும் இருட்டாக இருக்க…

தன் கைப்பேசியில் டார்ச்சை ஆன் செய்து, இருட்டில் எங்கும் விழுந்து விடாமல் இருக்க மெதுவாகப் பார்த்துக் கொண்டே நடந்து வந்தான். கைப்பேசி டார்ச் வெளிச்சத்தில், அந்த அறையில் யாரோ கீழே படுத்து இருப்பது போல போதிக்குத் தெரிய…

‘யார்? இங்கு விழுந்து கிடக்கிறார்கள்?’ என்று நினைத்துத் திடுக்கிட்டவன். அது யார் என்று பார்ப்பதற்காக டார்ச் லைட்டை அடித்துக் கொண்டு அருகில் செல்ல, படுத்து இருந்தவரின் காலில் வெளிச்சம் பட்டது.

அந்த அறை இருட்டில் டார்ச் வெளிச்சத்தில் தெரிந்த அந்தக் காலைப் பார்க்க… காலில் கொலுசு மாட்டி இருப்பதைப் பார்த்தவன், வேகமாக டார்ச் லைட்டைப் படுத்திருந்தவரின் முகத்தில் அடிக்க… மாதவி அங்கே மயக்கம் போட்டுக் தரையில் விழுந்து கிடப்பதைப் பார்த்ததும் அப்படியே அதிர்ந்து போய் நின்றான்.

அவசரமாக மாதவியின் அருகில் வந்தவன், கையில் இருந்த கைப்பேசியை கீழே வைத்துவிட்டு, அவளைத் தூக்கித் தன் மடியில் படுக்க வைத்து, அவள் கன்னத்தைத் தட்டி அழைக்க… மாதவி கண் திறக்காமல் அப்படியே படுத்திருந்தாள்.

அவள் கண் திறக்காததைப் பார்த்துப் பதறிய போதி, அவளைத் தன் கைகளில் ஏந்தி, அவசரமாகத் தன் தனி அறைக்குள் தூக்கிச் சென்றவன், அங்கிருந்த இருக்கைத் துணியில் (Sofa) அவளைப் படுக்க வைத்துவிட்டு, அந்த அறையில் விளக்கை ஆன் செய்தவன், பின்பு சென்று புட்டியில் (Bottle) இருந்த தண்ணீரைக் எடுத்து வந்து, அதை அவள் முகத்தில் தெளிக்க…

மயக்கத்தில் இருந்த மாதவி முகத்தில் தண்ணீர் பட்டதும், கண்களைச் சுருக்கிக் கொண்டு திறந்து பார்த்தவள், தன் எதிரே போதி நின்று இருக்க… மங்கலாக இருக்கவும், அவன் முகம் சரியாகத் தெரியாமல் போக, மாதவி தன் இரண்டு கண்களையும் நன்றாகத் தேய்த்து விட்டுக்கொண்டு, திரும்பவும் தன் எதிரில் இருப்பவர் யார் என்று பார்க்க… போதி கையில் புட்டியுடன் பதட்டமாகக் குனிந்து மாதவியைப் பார்த்து நின்று இருந்தான்.

அவனைப் பார்த்ததும் படுத்திருந்த மாதவி அவசர அவசரமாக எழுந்து, “சார், நீங்க எப்படி இங்க…. நான் எப்படி….” என்று பதட்டத்தில் என்ன கேட்பது என்று தெரியாமல் மாதவி பேச…

“மாதவி, இங்கே பாருங்க. ஒரு நிமிஷம் ஆசுவாசப்படுத்திக்கோங்க (Relax). ஒண்ணும் இல்ல உங்களுக்கு. நான் வீட்டுக்குக் கிளம்பலாம்னு என்னோட அறையில் இருந்து வெளியே வந்தப்போ, நீங்க அலுவலக அறையில் மயக்கம் போட்டு விழுந்திருந்தீங்க. உங்களை தூக்கிட்டு வந்து முகத்தில் தண்ணீர் தெளித்தேன் அவ்வளவுதான். வேற எதுவும் இல்ல. பதட்டப்படாதீங்க,” என்று மாதவியைச் சாந்தப்படுத்தப் பார்த்தான்.

“சரிங்க சார். நான் இருட்டுல நடந்து வந்ததுல மேஜையில் இடித்துக் கீழே விழுந்துட்டேன். அது மட்டும் தான் ஞாபகம் இருக்கு,” என்று சொன்னவள், “சரி நான் கிளம்புறேன். சாவியை வைக்கத்தான் வந்தேன்,” என்று சொல்லிவிட்டு, அந்த அறையை விட்டு வெளியே செல்லப் போக…

“மாதவி, ஒரு நிமிஷம் நில்லுங்க,” என்றான் போதி. வெளியே செல்லப் போனவள் அப்படியே நின்ற இடத்தில் திரும்பிப் போதியைப் பார்த்தாள்.

“ஏன் இவ்வளவு அவசரமா வெளியே போகப் பார்க்கிறீங்க? நான் உங்களை எதுவும் செஞ்சுட மாட்டேன். தயவுசெய்து இப்படி என்னைப் பார்த்துப் பயந்து போகாதீங்க. எனக்குக் கஷ்டமா இருக்கு,” என்றான் போதி.

“ஐயோ!!! அது எல்லாம் இல்ல சார். உங்களைப் பத்தித் தப்பா எல்லாம் நினைக்கல. ஏற்கனவே நான் இன்னைக்கு வீட்டுக்குத் தாமதமாகத்தான் வருவேன்னு சொல்லி இருந்தேன். ஆனா, இப்போ ரொம்பத் தாமதமாகிடுச்சு. வீட்டுக்குப் போனா அப்பாவும் அக்காவும் திட்டுவாங்க,” என்று மாதவி சொன்னாள்.

அவள் ‘அப்பா அக்கா’ என்று சொல்லவும், அவளைப் புரியாமல் பார்த்த போதி, “உங்களுக்குத் தான் சொந்தமே யாருமே இல்லைன்னு சொன்னீங்க… ஆனா, இப்போ அப்பா அக்கான்னு சொல்றீங்களே,” என்று போதி கேட்டான்.

“நான் வேலை பார்க்கிற வீட்டோட உரிமையாளரும் (Owner) அவரோட பொண்ணு தான். நான் அப்பாவும் அக்காவும் கூப்பிடுறேன். இப்படியே சொல்லிப் பழக்கம். அதையே உங்ககிட்டயும் சொல்லிட்டேன்,” என்ற மாதவி.

“சரி சார், நான் கிளம்புறேன்,” என்று சொல்லிவிட்டு வேகமாக அவள் தனி அறையிலிருந்து வெளியே வந்தவள், தட்டுத் தடுமாறி அலுவலக அறையின் கதவு இருக்கும் இடம் திரும்பிப் பார்க்க… அந்தக் கதவு பூட்டப்பட்டு இருந்தது.

அதைப் பார்த்ததும் அதிர்ந்த மாதவி, சென்ற வேகத்தில் திரும்பிப் போதியிடம் செல்லப் போக… தனி அறையை விட்டு வெளியே வந்த போதியின் மேல் மாதவி மோதிவிட… மோதிய வேகத்தில் தடுமாறி மாதவி கீழே விழப் போனாள்.

அவள் கீழே விழுவதைப் பார்த்ததும், அவசரமாகப் போதி அவள் இடுப்பில் கை நுழைத்து, மற்றொரு கையில் அவள் கையைப் பிடித்து இழுத்து, தன்னோடு சேர்த்து நிறுத்திக் கொள்ள… நின்ற வேகத்தில் போதியின் முகத்தில் மாதவியின் முகம் இடித்து நின்றது.

இதை இருவருமே எதிர்பார்க்கவில்லை. இருவரும் மிகவும் அருகில் இருக்க… மாதவியின் விழிகள் படபடக்க போதியின் கண்களைச் சந்திக்க… அதே படபடப்போடு போதியும் மாதவியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததும், மாதவிக்கு உள்ளுக்குள் ஏதோ செய்ய… முதலில் அவள்தான் அதை உணர்ந்தவள், சட்டென்று அவனைத் தன்னிடம் இருந்து தள்ளிவிட்டுப் பின்னால் விலகி நின்றாள்.

அவள் தன்னை விட்டு விலகிச் சென்றது போதிக்குப் பிடிக்கவில்லை. அவள் மீது கோபமாக வந்தது… இருந்தும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட போதி அவளிடம், “நீங்க கீழே விழப் போனீங்கன்னு தான் நான் உங்களைப் பிடிச்சேன். மற்றபடி வேற எதுவும் இல்ல,” என்று சொல்ல…

“சரிங்க சார்,” என்று மாதவி தலையைச் சிறுபிள்ளை போல ஆட்ட, அவள் செய்கையைப் பார்த்து, கோபமாக இருந்த போதிக்குச் சிரிப்புதான் வந்தது.

“ஒரு நிமிஷம் இருங்க,” என்று சொல்லி அந்த அலுவலக அறை விளக்கை ஆன் செய்தவன், கதவைப் பார்க்க கதவு அடைக்கப்பட்டு இருந்தது. அதைப் பார்த்தவன் புருவம் முடிச்சிட, “கதவு பூட்டி இருக்கா?” என்று கேட்டான் மாதவியிடம்.

“எனக்குத் தெரியல சார்,” என்று தலையை இடவலமாக ஆட்டினாள்.

“சரி இருங்க மாதவி. நான் பார்க்கிறேன்,” என்று சொல்லிவிட்டுச் சென்று கதவைத் திறக்கப் பார்க்க, கதவு வெளியே பூட்டி இருந்தது.

உடனே தன் பையிலிருந்து (Pocket) போனை எடுத்து உதவியாளருக்கு அழைக்க… அவர் தொலைபேசி தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் இருப்பதாக வந்தது. இரண்டு மூன்று முறை அவருக்கு அழைத்துப் பார்த்துவிட்டு, அவருக்குத் தொடர்பு போகாமல் இருக்கவே…. என்ன செய்வது என்று போதி யோசித்துக் கொண்டிருக்க…

திடீரென அழும் சத்தம் கேட்க, மாதவி நின்ற இடத்தைத் திரும்பிப் பார்த்தவன், மாதவி கண்களைக் கசக்கிக் கொண்டு அழுதபடி நின்று இருந்தால்.

அவளிடம் அவசரமாக வந்த போதி, “ஏன் அழறீங்க? இப்போ என்ன ஆச்சு? எங்கேயும் அடிபட்டதா? வலிக்குதா?” என்று கேட்டான்.

கண்களைத் தேய்த்துக் கொண்டு உதட்டைப் பிதுக்கி அழுதபடியே, “ம்ஹும்… இல்லை,” என்று தலையாட்டினாள்.

“அப்புறம் ஏன் திடீர்னு அழறீங்க மாதவி? என்னன்னு சொல்லுங்க,” என்று கேட்டான்.

“வீட்டுக்குப் போகணும். நேரம் ஆயிடுச்சு,” என்று அழுதாள் மாதவி.

சிறுபிள்ளை போல உதடு பிதுக்கிக் கொண்டு, வீட்டுக்குப் போக வேண்டும் என்று அடம்பிடிக்கும் பள்ளிப் பிள்ளை போல அழுது கொண்டிருக்கும் மாதவியைப் பார்த்து, உள்ளுக்குள் ரசித்தவன்.

“கொஞ்ச நேரம் காத்திருங்க (Wait) மாதவி. வெளிய கதவு பூட்டி இருக்கு. நீங்களும் தானே பார்த்தீங்க… கதவைத் திறக்க எதுவும் வழி செய்கிறேன்,” என்று சொல்ல… அவன் சொல்வதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், “நான் வீட்டுக்குப் போகணும். தாமதமாகப் போனா… அக்கா என்னத் திட்டுவாங்க… நான் வீட்டுக்குப் போகணும்….” என்று மீண்டும் மீண்டும் சொல்லி அழ ஆரம்பித்தாள்.

அவளை எப்படிச் சமாதானம் செய்வது என்று அவனுக்குத் தெரியாமல் போகவே, மீண்டும் தன் போனை எடுத்து உதவியாளருக்கு அழைக்க, அவருக்குத் தொடர்பு போகவே இல்லை. காவலாளி (Watchman) எண்ணும் போதியிடம் இல்லை.

கதவைச் சென்று வேகமாகத் தட்டி, “வெளியே யாராவது இருக்கீங்களா? உள்ளே நாங்க மாட்டிக்கிட்டு இருக்கோம். யாராவது வந்து கதவைத் திறங்க…” என்று போதி இரண்டு மூன்று முறை சத்தமாகக் கத்தி, கதவைத் தட்டிப் பார்த்தான். ஆனால், வெளியில் இருந்து யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

இப்போது என்ன செய்வது என்று யோசித்தவன், உடனே தன் கைப்பேசியை எடுத்து மித்ரனுக்கு அழைத்தான்.

மித்ரனுக்குத் தொலைபேசி முழுமையாக ஒலித்துத் (Full Ring) துண்டானது (Cut). அவன் எடுக்கவே இல்லை.

‘ச்சே… இந்த இடியட் என்ன பண்றான்? எப்பவும் போன் கையுமாக இருப்பான். இப்போ நம்ம கூப்பிட்டா மட்டும் போன் எடுக்க மாட்டேங்கறானே,’ என்று புலம்பியபடி திரும்பி மாதவியைப் பார்க்க… அவள் இன்னும் அழுகையை நிறுத்திய பாடு இல்லை.

அவளிடம் வந்தவன், “மாதவி ப்ளீஸ், அழாதீங்க….. நம்ம எப்படியும் இங்கிருந்து வெளியே போயிடலாம். இல்லைனா, நீங்க உங்க வீட்டுக்குப் போன் பண்ணி, இந்த மாதிரி மாட்டிக்கிட்டோம்னு அவங்க கிட்ட சொல்லுங்க. சொன்னா புரிஞ்சுக்குவாங்க தானே,” என்று கேட்க…

“என்கிட்டப் போன் இல்லையே. என் அக்காவுக்கு நான் எப்படி கூப்பிடுறது?” என்று சொல்லி மீண்டும் அழ ஆரம்பித்தாள் மாதவி.

அவள் அழுவதைப் பார்க்க அவனால் முடியவில்லை. “சரி, உங்க அக்கா எண் இருந்தாக் கொடுங்க. நான் அவங்களுக்குத் தொலைபேசி செய்து சொல்றேன்,” என்று மாதவியிடம் கேட்க…

“என்கிட்ட அவங்க எண் இல்லை,” என்றால் மாதவி.

“என்ன மாதவி சொல்றீங்க!!! உங்க அக்கா வீட்ல தானே நீங்க தங்கி இருக்கீங்க. குறைந்தபட்சம் (Atleast) ஒரு சின்ன போனாவது உங்களுக்கு வாங்கி கொடுத்து இருக்கலாமே. அவங்க எண் கூட இல்லாம நீங்க எப்படி அவங்க கிட்டப் பேசுவீங்க?” என்று கேட்க…

“இல்ல. நான் கல்லூரி முடிந்ததும் நேராக வீட்டுக்குத் தான் போவேன். வேற எங்கேயுமே போக மாட்டேன். வீட்டில் இருக்கும்போது இதுவரைக்கும் அவங்களுக்கு நான் போன் பண்ணிப் பேசுனது கிடையாது. நான் நேரத்துக்கு வீட்டுக்கு வரலைன்னா, அவங்களே எனக்கு வீட்டுத் தொலைபேசிக்குத் (House Phone) தொலைபேசி செய்து கேட்பாங்க,” என்றால் மாதவி.

‘இந்தக் காலத்தில் இப்படி ஒரு பெண்ணா?’ என்று நினைத்து, அவளை நினைத்து வியந்த போதி, இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் நின்றவன், முதலில் அவளைச் சமாதானம் செய்ய வேண்டும் என்று நினைத்து, “சரி மாதவி, யாராவது வந்து நமக்கு உதவி (Help) பண்ற வரைக்கும் நீங்க இப்படி அழுதுட்டு இருக்கப் போறீங்க?” என்றான்.

அழுது கொண்டிருந்த மாதவி அவனைப் பார்த்து, “என்ன சொன்னீங்க? யாராவது வந்து நமக்கு உதவி பண்ணனுமா? அப்போ நீங்க எனக்கு உதவி பண்ணி இங்கிருந்து கூட்டிட்டுப் போக மாட்டீங்களா?” என்று சொல்லி மீண்டும் சத்தமாக வாய்விட்டு அழ ஆரம்பித்தாள்.

“ஐயோ!!! மாதவி, இப்ப ஏன் அழறீங்க? ப்ளீஸ்… நான் சொல்றது கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க,” என்று போதி கூற…. அப்போதும் மாதவி அழுது கொண்டிருக்க…

‘ஏய் மாதவி… ஏன்டி இப்படிச் சின்னப் பிள்ளை மாதிரி அழுதுட்டு இருக்க? கொஞ்சம் கூடத் தைரியமே இல்லையா உனக்கு?’ என்று மனதிற்குள் அவளைத் திட்டியவன், வேகமாக அவள் அருகில் வந்து. அவள் கையைப் பிடித்துத் தன்னருகில் இழுத்தவன், அவள் கண்களைப் பார்த்து, “மாதவி, இப்போ அழுகையை நிறுத்தப் போறீங்களா? இல்லையா?” என்றான் சற்று அதட்டிய குரலில்.

அவன் அப்படி அதட்டியதும், இவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்த மாதவி அப்படியே உறைந்து போய், அழுத முகத்தோடு போதியைப் பார்க்க….

“நான் சொல்றத கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க. யாராவது வந்து நமக்கு உதவி பண்ற வரைக்கும், நாம இங்கிருந்து வெளியே போக முடியாது. புரிஞ்சுக்கோங்க,” என்றான் போதி.

“அப்போ நீங்க கதவை உடைச்சு என்னை இங்கிருந்து வெளியே கூட்டிட்டுப் போக மாட்டீங்களா?” என்று அப்பாவியாக மாதவி கேட்க..

சொல்வதைக் கேட்டுச் சிரிப்பதா அழுவதா என்று போதிக்குத் தெரியவில்லை. “மாதவி, நீங்களும் நல்லா யோசிச்சுப் பாருங்க. அந்தக் கதவு எவ்வளவு பெருசா இருக்குன்னு…. அந்தக் காலத்துல என் தாத்தா கட்டின கட்டிடம் இது…. சீக்கிரம் இங்க இருந்து ஒரு செங்கலைக்கூட அசைக்க முடியாது. அவ்வளவு வலுவாக (Strong) இருக்கு இந்தக் கட்டடம். அப்படிப்பட்ட இந்தக் கதவை என்னை உடைக்கச் சொல்றீங்களா நீங்க?” என்று கேட்டான் போதி.

மாதவி எதுவும் பேசாமல் போதியையே பார்க்க…. “யாராவது நமக்கு உதவி பண்ற வரைக்கும் வேற வழியே இல்ல. நீங்களும் நானும் இங்கேயே தான் இருக்கணும்,” என்றான் போதி.

“நீங்க நான் மட்டும் இங்கே இருக்கணுமா!!!” என்று மாதவி அதிர்ச்சியாகப் போதியிடம் கேட்க…

“நம்ம ரெண்டு பேரு தானே இங்க இருக்கோம் மாதவி? என்ன இப்படி ஒரு கேள்வி கேக்குறீங்க…. நம்ம ரெண்டு பேரும் தான் வெளியே போகணும். யாராவது வரவரைக்கும் வேற வழியே இல்ல. நீங்க என் கூட தான் இருந்தாகணும்,” என்று சொன்னான்.

தன் கையில் இருந்த பையை மார்போடு சேர்த்து அணைத்தபடி பேசாமல் நின்று அவனைப் பார்த்திருக்க…

“எவ்வளவு நேரம் இங்கேயே நிப்பீங்க? வாங்க, என் தனி அறையில் போயி உட்காரலாம். யாராவது நமக்கு உதவி பண்ணக் கேட்டு நான் மறுபடியும் முயற்சி (Try) பண்றேன்,” என்று போதி சொல்ல…

“இல்ல, நீங்க போங்க. நான் இங்கேயே இருக்கேன்,” என்று என்றால் மாதவி.

‘ஓஹோ! என் கூடத் தனியா அங்கே வந்து இருக்கப் பயந்துட்டு வர மாட்டேன்னு சொல்றியா?’ என்று மனதில் நினைத்தவன், “சரி, நீங்க இங்கேயே இருங்க. நான் உள்ளே போறேன்,” என்று சொல்லிவிட்டுத் தனி அறைக்குள் சென்றான் போதி.

போதி உள்ளே சென்றதும் தன் கணினியை (Computer) ஆன் செய்து, அதில் அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவியை ஆன் செய்து மாதவியைப் பார்க்க, அவள் ஏற்கனவே நின்ற இடத்தில் அப்படியே நின்று கொண்டு இருந்தால்.

கைப்பேசியை எடுத்து மித்ரனுக்கு மீண்டும் போதி அழைப்பு செய்ய, இப்போது மித்ரன் போனை எடுத்தான். அவன் போனை எடுத்ததும், “டேய் முட்டாள், எவ்வளவு நேரம் உனக்குப் போன் பண்றது? எங்கடா இருக்க?” என்று கேட்க….

“டேய், நான் நம்ம வணிக (Business) விஷயமாக ஒரு சந்திப்புக்குப் போறதுக்காக மும்பை விமான நிலையத்தில் (Airport) இருக்கேன் டா,” என்றால் மித்ரன்.

“என்னடா சொல்ற? என்கிட்ட சொல்லவே இல்ல,” என்று போதி கேட்க….

“நீ என்கிட்டக் கேட்கவே இல்லையே,” என்றான் மித்ரன்.

அவன் பதிலில் கடுப்பான போதி பல்லைக் கடித்துக்கொண்டு, “அப்போ நீ சென்னையில் இல்லையா? மும்பையில் இருக்கியா?” என்று கேட்டான்.

“ஏண்டா? இவ்வளவு நேரம் அதைத் தானே நான் சொன்னேன்,” என்றான் மித்ரன்.

“சரி, சீக்கிரமா சொல்லு. எனக்குச் சந்திப்புக்கு நேரம் ஆச்சு. எதுக்காக இப்போ அழைப்பு பண்ண? சீக்கிரம் சொல்லு,” என்றான் மித்ரன்.

யோசனையோடு அமர்ந்திருந்த போதி, மித்ரனிடம் இங்கு நடந்த விஷயத்தைச் சொல்லி, “இப்போது நானும் மாதவியும் மட்டும் அலுவலகத்தில் மாட்டிக் கொண்டு இருக்கிறோம்,” என்று சொல்ல…

“எப்படிடா… உனக்கு மட்டும் இப்படி எல்லாம் வாய்ப்பு (Chance) கிடைக்குது? எனக்கு இன்னும் ஒரு ஆளும் செட் ஆகவே இல்லை. ஆனா, நீ என்னடான்னா காதல் சொல்லாத ஆள் கூடத் தனியா ஒரே ரூம்ல இருக்க. மகிழ்ச்சியாக இரு (Enjoy) பண்ணு,” என்று மித்ரன் சொல்ல…

“டேய்….. என்னக் கடுப்பு ஏத்தாத. நான் ஏற்கனவே அவ என்னைப் படத்தின பாட்டுக்கு டென்ஷனா இருக்கேன். நீ மட்டும் இப்பக் கையில கிடைச்ச, நான் மவனே நீ அவ்ளோதான்,” என்று போதி மித்ரனை மிரட்ட….

இனி போதியிடம் பேசக்கூடாது. பேசினால் தனக்குத்தான் வம்பு என்று நினைத்த மித்ரன், “சரி, இப்ப நான் என்ன பண்ணனும்னு சொல்லு. இங்கிருந்து சென்னை கிளம்பி வந்து உன்னோட அலுவலக அறையைத் திறந்து விடனுமா?” என்று கேட்க…

“ஒரு ஆணியும் புடுங்க வேணாம். நான் பார்த்துக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான் போதி.

‘எனக்கு வந்த சோதனையைப் பாரேன். இவன் கம்பெனிக்கு வேலை பார்க்கப் போறதுக்கு, நான் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியது இருக்கு,’ என்று புலம்பிய மித்ரன் விமான நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றான்.

போனை வைத்துவிட்டு என்ன செய்வது என்று போதி யோசித்துக் கொண்டே, கணினித் திரையில் தெரிந்த மாதவியைப் பார்த்தவாறு அமர்ந்து இருந்தான்.

அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல், அந்த அறையைச் சுற்றி முற்றும் பார்த்தவள். அங்கிருந்த ஒரு இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள். இருக்கையில் வசதியாக அமர்ந்து கொண்ட மாதவி, கையில் இருந்த பையை கீழே வைத்தவள். அந்த அறையை நோட்டமிட்டவாறு கை கால்களை நீட்டி நெட்டி முறித்தாள்.

அவள் உடலைத் தினுசாக வளைத்து… கை கால்களை நீட்டி… இப்படியும் அப்படியும் அசைவதை, தன் தனி அறைக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்த போதிக்கு, அவளை அப்படிப் பார்த்ததும் என்னவோ செய்தது.

தலையில் அடித்துத் தன்னைச் சமன் செய்துகொண்ட போதி, மாதவியைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காகத் தன் போனை எடுத்து நோண்ட… அதில் கவனம் செலுத்த முடியாமல், போனை கீழே வைத்துவிட்டு, தன் மேஜையில் கை வைத்து ஊன்றி அவன் முகத்தை வைத்து, மாதவி என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்று ரசிக்க ஆரம்பித்தான்.

You may also like

2 comments

S joshna November 29, 2025 - 12:32 pm

Inaki episode super akka 💐💗💝

Reply
Layas Tamil Novel November 29, 2025 - 12:50 pm

Thank u ❤️😍

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured