EPISODE 159
ஆதியுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே ஷிவு திடீரென்று மயக்கம் போட்டுக் கீழே விழ… அவளைத் தூக்கிக்கொண்டு ஆதியும் அவனுடன் துரையும் கனகாவும் மருத்துவமனைக்குச் சென்றனர்.
அவசரச் சிகிச்சை வார்டில் ஷிவுவுடன் துரையையும் கனகாவையும் இருக்கச் சொல்லிவிட்டு, மருத்துவரிடம் சென்று ஷிவு திருமணமாகாமல் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதைத் தெரிவித்து, அதை அவள் பெற்றோருக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளும்படி மருத்துவரிடம் வேண்டுகோள் வைத்தான் ஆதி.
ஷிவுவைப் பரிசோதித்த மருத்துவர், அவள் உடலில் சத்துக் குறைபாடு காரணமாகத்தான் திடீரென மயங்கி விழுந்திருக்கிறாள். நன்றாகச் சாப்பிட்டு உடலைப் பார்த்துக் கொண்டாலே போதும் என்றவர், அவளுக்குச் சிகிச்சை (Drip) செலுத்திவிட்டு, மாலை விடுவிப்புச் (Discharge) செய்து அழைத்துச் செல்லும்படி கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
தன் அறைக்கு வந்த மருத்துவர், “ஷிவு கர்ப்பமாக இருப்பதால், அவருக்குத் தேவையான சத்துக்கள் உடலில் இல்லாமல் போனதால் தான் அவர் மயக்கம் போட்டுக் விழுந்திருக்கிறார். அதுவும் இல்லாமல் அவர் சரியாகச் சாப்பிடுவதில்லை என்று நினைக்கிறேன். அவரை கூட இருந்து இந்த நேரத்தில் நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்,” என்று சொல்லி, ஷிவு சாப்பிட மாத்திரைகள் எழுதி ஆதியிடம் கொடுத்தார்.
அதை வாங்கிவிட்டு மருத்துவர் அறையில் இருந்து ஆதி வெளியே வர… அப்போது கையில் மருந்துகளுடன் ரூபேஷ் ஒரு அறைக்குள் சென்றான்.
அவனை யோசனையாகப் பார்த்துவிட்டு, ஷிவு இருக்கும் அறைக்குள் வந்த ஆதி. கனகாவிடமும் துரையிடமும், “ஷிவுவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவளை நல்லா பார்த்துகிட்டா போதும்ன்னு சொன்னார்,” என்றவன். கனகாவிடம், “அவ சரியா சாப்பிடறது இல்லையா அத்தை? மருத்துவர் ஷிவு சரியா சாப்பிடவில்லை என்று சொல்கிறார்,” என்று கேட்டான்.
“ஆமாம் ஆதி. கொஞ்ச நாளாவே ஷிவு சரியா சாப்பிடறது இல்ல. நானும் கவனிச்சுக்கிட்டுத் தான் இருக்கேன். அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. ‘ஏண்டி சரியா சாப்பிட மாட்டேங்குற?’ன்னு கேட்டா எதுவும் சொல்ல மாட்டேங்குறா,” என்றார் கனகா வருத்தமாக.
ஏன் ஷிவு சரியாகச் சாப்பிடுவதில்லை என்று ஆதிக்குத் தெரியும். இருந்தும் வேறு எதுவும் காரணம் இருக்குமோ என்று தான் கனகாவிடம் கேட்டான்.
அவர்களை ஷிவுவிடம் இருக்கச் சொல்லிவிட்டு வந்த ஆதி, ஷிவுவின் அறையில் இருந்து வந்தவன், நேராக ரூபேஷ் சென்ற அறைக்குச் சென்றான்.
கதவைத் திறந்து கொண்டு ஆதி உள்ளே செல்ல… ரூபேஷின் அம்மாவிடம், “ஒழுங்கா சொன்னா கேட்க மாட்டியா? ஏன் இப்படி எதுவும் சாப்பிடாம என் உயிரை எடுக்குற?” என்று அவன் அம்மாவிடம் கத்திக் கொண்டு இருந்தான்.
“நான் இதையெல்லாம் சாப்பிட்டு என்ன செய்யப் போறேன்? இப்படி ஒரு கேடு கெட்டவனைப் பிள்ளையா பெத்ததுக்கு, நான் இன்னும் உயிரோட இருந்து என்ன செய்யப் போறேன்?” என்று அவன் வாங்கி வந்த மருந்துகளையெல்லாம் தள்ளிவிட்டார் அவன் அம்மா.
“ஆமாம், நான் கேடுகெட்டவன் தான். அதுக்கு என்ன இப்போ…. உன்னை இவ்வளவு நாளும் நல்லா தானே வச்சிருந்தேன். அப்ப எல்லாம் நான் கேடு கெட்டவனா உனக்குத் தெரியலையா? அவளைக் கர்ப்பமாக்கி நான் ஏமாத்திட்டது மட்டும்தான் உனக்குப் பெருசா தெரியுதா?” என்று கேட்டான் ரூபேஷ்.
“இவ்வளவு நாளும் நீ இப்படிப் புத்தி கெட்டவனா இருப்பன்னு எனக்குத் தெரிந்திருந்தால், என்னைக்கோ நான் இந்த உலகத்தை விட்டுப் போய் இருப்பேன். ‘எப்படிப்பட்ட ஒரு பையனையா நான் என் மன வயித்துல சுமந்தேன்’னு நான் இப்பவும் உள்ளுக்குள்ள செத்துட்டு இருக்கேன்,” என்றார் ரூபேஷ்.
“ஒரு பெண்ணோட சாபம் அந்தப் பரம்பரையையே அழிச்சிடும்னு சொல்லுவாங்க. அப்படிப்பட்ட சாபம் நமக்கு எதுக்குடா? அந்தப் பொண்ணு பார்த்தா ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி தான் தெரியுது. அவ அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்தபோது நாங்க கூடப் பேசிப் பழகுனதுல தெரிஞ்சது. அவ கிட்ட நல்லா தானே பேசிப் பழகிட்டு இருந்த… அப்புறம் ஏன் அந்தப் பொண்ணை இப்படி ஏமாத்தின?” என்று கேட்டார் ரூபேஷின் அம்மா.
“எனக்கு ஒருத்தவங்க பணம் கொடுத்து அந்தப் பொண்ணை இப்படிச் செய்யச் சொன்னாங்க. நான் செஞ்சிட்டேன். என் வேலை முடிஞ்சது. நான் எதிர்பார்த்த காசு எனக்கு வந்துருச்சு. இனி எனக்கு அவளுக்கும் என்ன சம்பந்தமும் கிடையாது. இனிமேல் அவளைப் பத்தி நீ பேசாத. ஒழுங்கா உன் உடம்பை பார்க்கிற வழியைப் பாரு,” என்றான் ரூபேஷ்.
“ஒரு கிருஷ்ணனை (பெண்ணை) ஏமாத்துறது உனக்கே நியாயமா இருக்கான்னு கொஞ்சமாவது யோசிச்சுப் பாரு. இந்த பொண்ணை யாரோ பழிவாங்க நினைச்சு உன்கிட்ட காசு கொடுத்து, நீ அந்தப் பொண்ணைப் பழி வாங்குறதா நினைச்சு, அவள் வயிற்றில் ஒரு குழந்தை கொடுத்து, அந்தக் குழந்தையும் சேர்த்துதான் நீ இப்போ கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்க. நாளைக்கே அது பிறந்து வளர்ந்து அதோட அப்பா யாருன்னு தெரியாம இந்தச் சமூகத்துல உன் குழந்தை எவ்வளவு கஷ்டப்படும்னு நீ கொஞ்சமாவது யோசிச்சியா?” என்றார் ரூபேஷின் அம்மா.
“நீ சொல்லு. அவள் வயிற்றில் வளர குழந்தை உன்னோட குழந்தை தானே? அதுக்காகவாது உனக்குக் கொஞ்சம் கூட அந்தப் பொண்ணு மேல இரகமே வரலையா? அந்தப் பொண்ணு நீ கொடுத்த குழந்தையை வயிற்றில் சுமந்துகிட்டு, மனசுல எத்தனை வலியோட இருக்கோ, யாருக்குத் தெரியும்?” என்றார் ரூபேஷின் அம்மா.
“அவளுக்கெல்லாம் எந்த வழியும் இல்லை. அவ சந்தோசமா தான் இருக்கா. என்னோட அலுவலகத்தில் தான் எனக்கு பொது மேலாளரா (General Manager) இருக்கா… கொஞ்சம் கூட நான் அவளை ஏமாத்திட்டேங்கிற வலி அவகிட்ட இல்லவே இல்லை. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது அவ,” என்றான் ரூபேஷ்.
“எந்தப் பொண்ணும் வலியோடு இருக்கிறதை அவ்வளவு சீக்கிரம் வெளியே காட்டிக்க மாட்டாங்க ரூபேஷ். உன் முன்னாடி வேணா அந்தப் பொண்ணு தைரியமாக இருக்கிற மாதிரி காட்டிக்கலாம். ஆனா உள்ளுக்குள்ள அவ எவ்வளவு கஷ்டப்படுறான்னு யாருக்குத் தெரியும்?” என்றவர், “இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல ரூபேஷ். என்ன அந்தப் பொண்ணு கிட்ட கூட்டிட்டுப் போ…. இல்லை அந்தப் பொண்ணு எங்க இருக்குதுன்னு சொல்லு. நானே போய் அந்தப் பொண்ணு கிட்டப் பேசி, உனக்கும் அந்தப் பெண்ணுக்கும் திருமணம் பண்ணி வைக்கிறேன். அவள் வீட்ல இருக்குறவங்க எல்லாருக்கும் அந்தப் பொண்ணு இப்படித் திருமணம் ஆகாமயே வயிற்றில் குழந்தையோட இருக்கிறது நினைச்சு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க. அடுத்தவங்களைப் பத்தி நீ கொஞ்சம் கூட யோசிக்காம எப்பவும் இப்படிச் சுயநலமாக இருக்கிறயே? இதுக்குத்தான் நான் உன்னை இவ்வளவு வருஷம் வளர்த்தேனா?” என்று கேட்டார்.
“அடுத்தவங்களைப் பத்தி நான் எதுக்குமா யோசிக்கணும்? இப்படி நீயே அப்பாவை யோசிச்சு யோசிச்சு தான் நம்ம கிட்ட இருக்கிற சொத்தை எல்லாத்தையும் வித்து அழிச்சிட்டீங்க…. பணம் இல்லாம எப்படி வாழ முடியும்னு உங்களுக்குத் தெரியுமா? வீட்டுக்குள்ளேயே இருக்கிறவங்களுக்கு என்ன தெரியும்? வெளியே போய் ஒரு இடத்தில இருந்து பார்த்தா தான் என்னோட கஷ்டம் எல்லாம் உங்களுக்குப் புரியும். நான் என்ன சொன்னாலும் உங்களுக்குப் புரியப் போறதில்லை. நீங்க போய் அவகிட்ட தேவையில்லாம பேசுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க. எனக்கு அவர் ஒத்துவார மாட்டா (Set ஆக மாட்டா),” என்றான் ரூபேஷ்.
“நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா, என்னை விட அதிக அளவு பணம் வைத்திருக்கிற ஒரு பணக்காரியைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். இந்த ஷிவு அவளோட மாமா கம்பெனியில் வேலை தான் பார்க்கிறா. அது இன்னும் அவள் கம்பெனி கிடையாது. அவ கிட்டப் பணம் காசு நிறைய இருக்குன்னு உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க. அப்போ நான் அவளையே கல்யாணம் பண்ணிக்கிறேன்,” என்றான் ரூபேஷ்.
“ஏண்டா இப்படிப் பணம் பணம் என்று காசுக்காக அலையுற… அந்தப் பணத்தால தான் உன்னோட வாழ்க்கையே வீணா போகப் போகுது,” என்றார் ரூபேஷின் அம்மா.
“அந்தப் பணம் மட்டும் இல்லேன்னா, நீங்க எல்லாரும் உயிரோடு இருந்திருக்கவே முடியாது. உங்களுக்குச் சிகிச்சை செலவு (Operation செலவு) செய்வதற்கு மொத்தம் 12 லட்சத்துக்கு மேல ஆயிடுச்சு உங்களுக்குத் தெரியுமா? இவ்வளவு பணத்தை நானே எப்படிச் சம்பாதிச்சேன்னு நினைச்சீங்க? நான் வேலை பார்க்கிற இடத்திலிருந்து எனக்கு இந்த பணம் கொடுப்பார்கள் என்று நினைத்தீர்களா? அதெல்லாம் ஒண்ணும் இல்ல. அந்த ஷிவுவை நம்ப வச்சு ஏமாத்தினதுக்காக எனக்கு வந்த வெகுமானம் இது,” என்றான் ரூபேஷ்.
“ச்சி…. நீ எல்லாம் ஒரு மனுஷனா? ஒரு பொண்ணை ஏமாத்தி, அதுல வந்த காசு வச்சு தான் என் உயிரை காப்பாற்றின அப்படின்னா, அப்படிப்பட்ட உயிர் எனக்கு வேண்டாம்,” என்று கோபமாகச் சொன்ன ரூபேஷின் அம்மா. அவர் கையில் இருந்த சிகிச்சைச் செருகியை (Drip) பிடுங்கித் தூர எறிந்து, “நான் இப்பவே சாகப் போறேன். அந்தக் காசுல தான் என் உயிர் வாழ்ந்துட்டு இருக்குன்னா… அப்படிப்பட்ட உயிர் எனக்குத் தேவையில்லை,” என்று கட்டிலில் இருந்து கீழே இறங்கி, அருகில் இருந்த கத்தியை எடுத்து தன் கையைக் கிழிக்கச் செல்ல…
ஆதி, கையில் கத்தியோடு நின்ற ரூபேஷின் அம்மாவைப் பார்த்துவிட்டு உள்ளே வரலாம் என்று நினைப்பதற்குள், ரூபேஷ் அவர் கையில் இருந்த கத்தியைப் பிடுங்கித் தூர வீசியவன்.
“அம்மா… இப்படி மறுபடியும் மறுபடியும் என்னக் கஷ்டப்படுத்தாதீங்க. தயவு செய்து பேசாம இருங்க… உங்களை காப்பாற்றுவதற்கு நான் எவ்வளவு காசு செலவு பண்ணி இருக்கேன்னு தெரியுமா? மறுபடியும் எதுவும் பண்ணிட்டிங்கனா, இன்னும் காசுக்கு நான் போய் இந்தச் சங்கவி கிட்ட பிச்சைதான் எடுக்கணும்,” என்றான் ரூபேஷ்.
“இப்போ கூட நான் செத்துப் போயிடுவேன்னு நீ கவலைப்படல. உனக்குக் காசு செலவாகிடும்னு தானே கவலைப்படுற…. அப்படித்தானே ரூபேஷ்?” என்று மனம் வருந்திக் கட்டிலில் அமர்ந்து அழ ஆரம்பித்தார் ரூபேஷின் அம்மா.
ரூபேஷின் குணமும் அவன் அம்மாவின் குணமும் கொஞ்சம் கூட ஒத்துப் போகாமல் இருக்கிறது என்று யோசித்தவாறே கதவிற்கு அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆதி, வந்த இடம் தெரியாமல் கதவைச் சாற்றி விட்டு அப்படியே வெளியே வந்தான்.
நேராக ஷிவுவின் அறைக்கு வந்தவன், கனகாவிடமும் துரையிடமும் சொல்லிவிட்டு, மாலை விடுவிப்புச் செய்யும் பொழுது தானே வந்து ஷிவுவைக் கூட்டிச் செல்கிறேன். அதுவரை அவளுடன் அவர்கள் இருவரையும் இருக்கச் சொல்லிவிட்டு, அலுவலகத்திற்குச் கிளம்பினான் ஆதி.
நள்ளிரவு போல ரதி போதியின் கல்லூரி உதவியாளரைப் பிடித்து, ரதி சாவியை வாங்கிக்கொண்டு கல்லூரிக்கு வந்தாள்.
காரை விட்டுச் சாவியுடன் இறங்கிய ரதி, ‘இந்த மித்ரன் மனசுல என்னைப் பத்தி என்னதான் நினைச்சிட்டு இருக்கான்… கண்ட நேரத்தில் போன் பண்ணி, ‘போய் அவங்க கிட்ட அதை வாங்கிட்டு வா. இவன்கிட்ட இத வாங்கிட்டு வா. பாதுஷா பண்ணு… பாயசம் பண்ணுன்னு…. எப்பப் பாரு என் உயிரை வாங்கிட்டு இருக்கான்’ என்று புலம்பியவாறு போதியின் அலுவலகத்தை நோக்கி வந்தவள், சாவியை கொண்டு பூட்டைத் திறந்து அறைக்கு உள்ளே வர…
மின்சாரம் இல்லாததால் எங்கும் இருட்டாக இருந்தது. தன் கைப்பேசியில் இருந்து டார்ச் லைட் ஆன் செய்து, தட்டுத் தடுமாறி அறைக்குள் பார்த்துக் கொண்டே சென்றவள், அலுவலக அறையில் யாரும் இல்லாததைக் கண்டு, போதியின் தனி அறைக்குச் சென்றாள்.
போதியின் தனி அறை கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவள், டார்ச் வெளிச்சத்தை அந்த அறை முழுவதும் யாரும் இருக்கிறார்களா என்று சுத்திப் பார்க்க, ஒருவரையும் காணோம்.
“இங்கே யாரையுமே காணோமே,” என்று புலம்பியபடியே டார்ச் லைட்டைத் திருப்ப… அந்த வெளிச்சத்தில் கண்ட காட்சிப் பார்த்து அப்படியே நின்று விட்டாள் ரதி.
இருக்கைத் துணியில் போதி படுத்திருக்க…. அவன் மேல் ஒரு பெண் அவனைக் கட்டிக்கொண்டு படுத்திருக்க, அவளைப் போதியும் கட்டிக்கொண்டு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.
இந்தக் காட்சியைப் பார்த்துத் தான் ரதி அதிர்ச்சியானது… ‘என்னடா நடக்குது இங்க? அந்த மித்ரன் என்னவோ என் மாமா தனியா உள்ள மாட்டிக்கிட்டான்னு சொன்னான். ஆனா, இங்கே வந்து பார்த்தா மாமா கூட யாரோ ஒரு பொண்ணு கட்டிப் பிடிச்சிட்டுப் படுத்து இருக்கு…’ யோசித்தவாறே, டார்ச் லைட்டை அவர்கள் முகத்தில் அடித்துக் கொண்டு அவர்களை நெருங்கி வந்தால் ரதி.
இருவர் முகத்திலும் வெளிச்சம் பட்டதும் முகம் சுருக்கி இருவரும் தூக்கம் கலைந்து கண்விழிக்க….. அவர்கள் இருவரும் கண்விழித்ததால் இதைப்பார்த்ததும், வேகமாக ரதி தன் டார்ச் லைட்டை அணைத்துவிட்டு, இருட்டோடு இருட்டாக ஓரமாகப் போய் நின்று விட்டாள்.
இருவரும் கண்விழித்தவர்கள், ‘வெளிச்சம் பட்டது போல இருந்ததே? அறை மறுபடியும் இருட்டாக இருக்கிறது,’ என்று யோசித்தவாறே மாதவி திரும்ப….. இருட்டில் அவள் முகத்திற்கு மிக அருகில் போதியின் முகம் தெரியவும், அவள் இவ்வளவு நேரம் போதியின் மேல் தான் படுத்து இருந்தால் என்ற நினைவு மாதவிக்கு மறந்து விட்டிருந்தது. யாரோ ஒருவருடைய முகம் மிக அருகில் தெரிகிறது என்று பயந்து அடித்துப் பிடித்துக் கொண்டு கத்திக் கொண்டே இருந்தாள் மாதவி.
அதே தன் மேலிருந்து பயந்துகொண்டே எழுந்ததைப் பார்த்த போதி, அவசரமாக இருக்கைத் துணியிலிருந்து எழுந்தவன், “மாதவி இப்போ எதுக்குக் கத்துறீங்க? நான் தான் போதி. இருட்டுல என்னத் தெரியலையா?” என்று கேட்டான்.
மாதவி எதுவும் பேசாமல் இருக்க… தன் பையில் இருந்த போனை எடுத்து, அதில் டார்ச்சை ஆன் செய்து, அவன் எதிரே நின்றிருந்த மாதவியின் முகத்தில் அடித்து, “இங்க பாருங்க, நான் தான் நிற்கிறேன். ஏன் எதுவும் பேச மாட்டேங்கிறீங்க?” என்றான் போதி.
போதியைப் பார்த்ததும் தான் மாதவிக்கு உயிரே வந்தது. “நீங்கதானா? நான் கூட இவ்வளவு பக்கத்துல யாருன்னு பயந்தே போயிட்டேன்,” என்றால் மாதவி.
“அப்போ நான் உங்க பக்கத்துல இருந்தா பரவாயில்லையா உங்களுக்கு?” என்று கேட்டான் போதி. டார்ச் லைட்டின் மூலம் சிறிதான வெளிச்சத்தில் தெரிந்த மாதவியின் முகத்தைப் பார்த்துப் போதி இந்தக் கேள்வியைக் கேட்க… அவன் இப்படி கேட்டது மாதவிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அவள் எதுவும் பேசாமல் இருக்க…
“என்ன மாதவி? எந்தப் பதிலும் சொல்ல மாட்டேங்கிறீங்க?” என்றான்.
“இல்ல, இருட்டுல எனக்கு நீங்க தாங்கறது மறந்து போயிடுச்சு. நான் வேற நல்லா தூங்கிட்டேனா…. உங்க குரல் கேட்டதுக்கு அப்புறம் தான் எனக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. அதனால்தான், ‘நீங்கதானா’ன்னு சொன்னேன். வேற எதுவும் இல்ல,” என்றால் மாதவி.
“ஆமாமா! நல்லா படுக்கையில் படுத்துச் சுகமாத் தூங்குற மாதிரி இல்ல, என் மேல படுத்துத் தூங்குனீங்க,” என்றான் போதி.
போதி சொன்னதைக் கேட்டவள், “என்னது? நான் உங்க மேல படுத்துத் தூங்கினேன்? ஏன் பொய் சொல்றீங்க?” என்றால் மாதவி.
“நான் ஏன் மாதவி பொய் சொல்லணும்? இடி இடிச்சதும் பயந்து ஓடி வந்து நீங்க தானே என்னைக் கட்டிப்பிடிச்சு கீழே தள்ளுனீங்க… இருக்கைத் துணியில் விழுந்த வேகத்துல நீங்க என் மேல இருந்து எழுந்திருக்கவே இல்லை. மறுபடி மறுபடி இடி இடிச்சிட்டே இருந்ததுனால, நீங்க என்ன விட்டுப் பிரியவே இல்லை… நானும் இருட்டுல பயந்துட்டு இருக்குற ஒரு பொண்ணுக்கு உதவி பண்ணுவேன்னுதான் உங்களை என் மேல இருந்து எழுப்பி விடல. நீங்களும் பயத்துல கண்ணு மூடிப் படுத்தவங்க, அசதியில் அப்படியே தூங்கிட்டிங்க…. சரி, நமக்குத் தெரிஞ்ச பொண்ணாச்சே, போனா போகுது. என் மேல படுத்துத் தூங்கக் கொஞ்ச நேரம் இடம் கொடுத்தா, நான் பொய் சொல்றேன்னு சொல்லிட்டீங்களே,” என்றான் போதி.
‘இப்படிப் பேசுறான் பாரு! ‘போன போதும்’னு ஏதோ இடம் கொடுத்தான் அம்மா. நல்ல ஒரு பொண்ணு வந்து கட்டிப் பிடிச்சுப் பார்த்ததும், வசதியா என்கூடச் சேர்ந்து கட்டிப் பிடிச்சுப் படுத்துத் தூங்கிட்டு, இப்ப எதுவுமே தெரியாதவன் மாதிரி பேசுறான் பாரு,’ என்று தன் மனதிற்குள் போதியைத் திட்டியவள்.
“அதெல்லாம் விடுங்க சார். என்னை எப்படியாவது இங்கிருந்து வீட்டுக்கு அனுப்பி விடுங்க. இந்த நேரம் என் அக்காவும் அப்பாவும் என்னைக் காணோம்னு பதறிப் போயிருப்பாங்க. எனக்குப் பயமா இருக்கு,” என்று பழைய புராணம் பாட ஆரம்பித்தாள் மாதவி.
“உங்க முன்னாடி தானே நானும் எனக்குத் தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் போன் பண்ணினேன். ஆனா, யாருமே நமக்கு உதவ வர முடியாத சூழ்நிலையில் இருக்காங்க. ஒண்ணும் பண்ண முடியாது. காலைல வரைக்கும் நீங்களும் நானும் இந்த அறையில் தான் இருந்தாகணும்,” என்றான் போதி.
“என்னது!!! காலையில வரைக்கும் இங்கேயே இருக்கணுமா?” என்று அதிர்ச்சியாக மாதவி சொல்ல…
“என் கூடத் தனியா இருக்க உங்களுக்குப் பயமா இருக்கா?” என்று கேட்டான் போதி.
“பயம் எல்லாம் ஒண்ணும் இல்ல,” என்று மாதவி இழுக்க….
“அப்புறம் ஏன் இருக்கீங்களா இருந்தாலும் சொன்னது அதிர்ச்சியா நீங்க?” என்றான் போதி.
“அதெல்லாம் அப்படித்தான். அதெல்லாம் உங்க கிட்ட சொல்ல முடியாது,” என்றாள் மாதவி.
இருவரும் பேசிக் கொண்டிருப்பதை, இருட்டில் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்த ரதி, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே, ‘அப்போ போதி மாமாவுக்கு அந்தப் பொண்ணு மேல ஆசை இருக்கு போல. மாமா பேசுறது எல்லாம் வச்சுப் பார்த்தா அப்படித்தான் தெரியுது,’ என்று நினைத்துக் கொண்டாள். ‘இந்த அறைக்குள்ள இவங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இருக்காங்கன்னு நெனச்சிட்டு இருக்காங்க. சின்னதா ஒரு விளையாட்டு விளையாடலாமா?’ என்று நினைத்தவள். தன் அருகில் இருந்த பொருளை முதலில் தட்டி விட்டாள் ரதி.
போதியும் மாதவியும் மட்டும் இருக்கும் அறையில் திடீரென பொருட்கள் கீழே விழவும் மாதவி பயந்துவிட்டாள். அவள் பதட்டத்துடனே அருகில் வந்து நின்று கொண்டவள், “சார், இந்த அறைக்குள்ள யாராவது இருக்காங்களா?” என்று கேட்டாள்.
“நம்ம ரெண்டு பேர் மட்டும் தானே இருக்கும். இங்கே வேற யாருமே இல்லையே மாதவி,” என்றான் போதி.
“ஏதோ ஒரு பொருள் இப்போ கீழே விழுந்துச்சு. அது எப்படி விழுந்துச்சு?” என்றால்.
“அது எதுவும் காத்துல விழுந்திருக்கும்,” என்றான் போதி.
“இங்கதான் நான் காத்து வர்றதுக்கு வழியே இல்லையே. உங்க அறை முழுக்க அடைச்சுத் தானே வச்சிருக்கீங்க?” என்று கேட்டாள் மாதவி.
‘இது எல்லாம் விவரமாக் கேட்கத் தெரியுது இவளுக்கு. என் மேல படுத்து இருந்ததைப் பத்தி மட்டும் பேசணும்னா எதுவும் சொல்ல மாட்டாள்,’ என்று நினைத்துக் கொண்டான் போதி.
அப்போது போதியின் பின்னால் திடீரென ஒரு சிறு வெளிச்சம் பரவ, வெளிச்சம் வந்த இடத்தைப் மாதவி பயத்துடனே பார்க்க… ரதி தன் முகத்திற்குக் கீழே கைப்பேசியில் டார்ச் லைட்டை வைத்து, அவள் முகத்தில் மட்டும் வெளிச்சம் தெரியுமாறு அடிக்க, அது இருட்டில் அவளைப் பயமுறுத்துவது போலக் காட்டவும், அடுத்த நிமிடம் மாதவிக்குப் பயம் பிடித்துக் கொள்ள…
தன் அருகில் இருந்த போதியின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, “சார், அங்க… அங்க… என்னமோ இருக்கு,” என்று கையை நீட்டி அவன் பின்னால் காட்ட…. அவள் காட்டிய திசையைப் போதி திரும்பிப் பார்க்க, ரதி அதே நிலையில் அமர்ந்திருந்தவள், போதியையும் பார்த்தாள்.
திடீரென ரதியை இங்கு பார்த்த போதிக்கு அதிர்ச்சியாக இருந்தது. பின் சுதாரித்துக் கொண்ட போதி மாதவியிடம் திரும்பி, “அது வேற யாரும் இல்லைங்க. என் அத்தை பொண்ணு ரதிதான்,” என்று சொன்னவன். “ஏய் ரதி, இருட்டுல என்ன விளையாட்டு இது?” என்று போதி ரதியைத் திட்டினான்.
சிரித்தவாறே இருட்டில் இருந்து தடுமாறிக் கொண்டே வந்த ரதி, கால் இடறி கீழே விழப் போக… போதி ‘என்ன?’ என்று சுதாரிப்பதற்குள் ரதி போதியின் மீது விழ… ரதி விழுந்ததில் நிலை தடுமாறி போதியும் அவளோடு சேர்ந்து விழப் போக… அவன் அருகில் நின்று இருந்த மாதவியின் மீது போதி விழ…
இருவரின் எடையைத் தாங்க முடியாத மாதவி தரையில் விழ… அவள் மேல் போதியும்… போதியின் மேல் ரதியும் விழுந்தனர். விழுந்த வேகத்தில் வலியில் மாதவி “அம்மா…” என்று அலற….
இரவெல்லாம் மாதவியை எங்குத் தேடியும் கிடைக்காமல் போகவே, எதற்கும் அவளைப் படிக்கும் கல்லூரியிலேயே மாதவியைத் தேடலாம் என்று சங்கவி கல்லூரிக்குள் தேடி, மாதவியைக் எங்கும் காணோம் என்று வந்துகொண்டு இருக்க…. அப்போது ஒரு கார் கல்லூரிக்குள் நுழைவதைப் பார்த்தவள், கார் நின்ற இடத்தைச் சுற்றி வந்தவள், காரில் வந்தவர்கள் எங்கே போயிருப்பார்கள் என்று யோசித்தபடி தேடிக் கொண்டு இருக்க…
அலுவலக அறையில் ஒரு பெண் கத்தும் சத்தம் கேட்கவும், அது மாதவியின் குரல் போலவே இருக்கிறதே என்று அலுவலக அறையை நோக்கிச் சங்கவி வந்து கொண்டு இருந்தாள்.
