EPISODE 163
போதியின் கல்லூரியில் நடந்த கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொண்டு, பாட்டுப் போட்டியில் முதல் பரிசை வென்ற மாதவி, ஒருபுறம் போட்டியில் வென்ற சந்தோஷத்தோடும், மறுபுறம் தன் மனதில் இருந்ததைப் போதியிடம் சொன்ன சந்தோஷத்தோடும் வீட்டிற்குள் நுழைய… அங்கே வரவேற்பறையில் (Hall) அமர்ந்து வேதாச்சலமும், சங்கவியும் அலுவலகக் கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருக்க…
மாதவி மிகவும் சந்தோஷமாகச் சிரித்த முகத்துடன் வீட்டுக்குள் வருவதை முதலில் சங்கவிதான் கவனித்தாள். அவள் சந்தோஷமாகச் சிரித்து வருவதைப் பார்த்த சங்கவிக்கும் லேசாகச் சிரிப்பு எட்டிப் பார்த்தது. இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு மாதவியைப் பார்த்து, “இதுதான் நீ வீட்டுக்கு வர நேரமா… காலைல போகும் போது என்கிட்ட என்ன சொன்ன? கல்லூரி முடிந்ததும் நேரா வீட்டுக்கு வரேன்னு வாக்குறுதி (Promise) பண்ணிட்டுத் தானே போன?.. ஆனா இப்போ மணி பாரு, மணி எட்டு ஆகுது. கல்லூரி முடிஞ்சு உனக்கு வீட்டுக்கு வர இவ்வளவு நேரமா?” என்று சிடுசிடுவென சங்கவி மாதவியிடம் கேட்டாள்.
அவளிடம் நேராக வந்த மாதவி தன் கையில் வைத்திருந்த பணப் பரிசை நீட்டி, “அக்கா, இந்தாங்க. நான் பாட்டுப் போட்டியில் கலந்து முதல் பரிசு வாங்கிட்டேன்,” என்று சந்தோஷமாகச் சிரித்தபடி மாதவி அவள் முன்பு தன் கையில் இருந்த காசோலையைச் (Cheque) நீட்ட….
இதற்கு மேலும் அவளிடம் கடுமையாக இருக்க முடியாத சங்கவி, அவள் கையில் இருந்த காசோலையை வாங்கி, அதில் போட்டிருந்த தொகையைப் பார்த்தவள். “நிஜமாவே நீ பாட்டுப் பாடி இந்தப் பணத்தை ஜெயிச்சியா?” என்று வேண்டுமென்றே அவள் மீது நம்பிக்கை இல்லாதவள் போல் கேட்க..
“அக்கா…. என்ன இப்படிச் சொல்லிட்டீங்க! அங்க பாடினவங்களிலேயே நான்தான் நல்லா பாடினதா எல்லாரும் சொன்னாங்க. நான் பாட்டுப் போட்டியில் முதல் பரிசு வாங்கிட்டேன் அக்கா,” என்று சொன்னாள்.
“ஆமா, உனக்கு இதுதான் பரிசா கொடுத்தாங்களா? வேறு எதுவும் கொடுக்கலையா?” என்று சங்கவி பொதுவாகக் கேட்க..
எங்கே போதி மாதவிக்குக் கொடுத்த பரிசு ஒருவேளை சங்கவிக்குத் தெரிந்து விட்டதோ என்று பதட்டம் அடைந்த மாதவி, “அது… அது… வந்து அக்கா, வேற எதுவும் கொடுக்கல. இது மட்டும் தான் கொடுத்தாங்க,” என்று சொல்லி, தன் கையில் இருந்த போதி கொடுத்தப் பரிசைச் சங்கவிக்குத் தெரியாமல் தன் பைக்குள் வைத்து விட்டாள்.
“இல்லையே, இவ்வளவு நேரம் நீ கையில எதையோ வெச்சிருந்த மாதிரி இருந்துச்சு,” என்று சங்கவி சொல்ல…
“அதுவா? அது ஒன்னும் இல்லக்கா. புத்தகங்கள் தான் கையில வச்சிருந்தேன். அதைத்தான் நான் இப்போ என் பைக்குள்ள வச்சேன்,” என்று சொல்லிச் சமாளித்தாள் மாதவி.
“சரி சரி, என்னமோ சொல்ற,” என்று சொன்ன சங்கவி, “அப்பா, அது கொடுங்க,” என்று அவள் அப்பாவிடம் கையை நீட்ட… வேதாச்சலம் ஒரு பெரிய பெட்டியும் அதனுடன் ஒரு சின்னப் பெட்டியும் தன் அருகில் இருந்து எடுத்து சங்கவியிடம் நீட்டி… சிரித்தவாறு, “எப்படியும் நீ பாட்டுப் போட்டியில் கண்டிப்பா முதல் பரிசு வாங்கிடுவேன்னு சங்கவிக்குத் தெரியும். அதனாலதான் உனக்குச் சர்ப்ரைஸா பரிசு வாங்கி ஏற்கனவே வச்சிட்டா,” என்று சொல்லிச் சிரித்தார்.
தான் உள்ளே வந்து பாட்டுப் போட்டியில் ஜெயித்து விட்டதாகச் சொல்லி, தான் வாங்கிய பரிசை அவளிடம் கொடுத்த போது… அதைக் கையில் வாங்கிய சங்கவி மாதவியைச் சந்தேகமாகப் பார்த்து, ‘நிஜமாகவே நீ இந்தப் பாட்டுப் போட்டியில் முதல் பரிசு வாங்கினியா?’ என்று கேட்டவள், தான் இப்படியும் நீ முதல் பரிசு வாங்கி விடுவேன் என்று நம்பிக்கையோடு தனக்கு ஏற்கனவே பரிசு வாங்கி வைத்திருந்ததாகச் சொல்லவும், அதை நினைத்துச் சந்தோஷப்பட்டாள் மாதவி.
சங்கவியைப் பார்த்து, “அக்கா, எனக்கா இந்தப் பரிசு?” என்று கேட்க…
“ம்ம்ம்… ஆமாம், உனக்குத் தான் இந்தப் பரிசு,” என்று சொல்லி, தன் கையில் இருந்தப் பெட்டியை மாதவியிடம் நீட்டி, “நீ பாட்டுப் போட்டியில் முதல் பரிசு வாங்கினதுக்காக என்னோட இந்தப் பரிசு,” என்று சொல்லி, “வாழ்த்துக்கள்,” என்று சொன்னாள் சங்கவி.
சங்கவி கையில் இருந்தப் பரிசுப் பொருளை ஆசையாக வாங்கிய மாதவி, அவள் கொடுத்த இரண்டு பரிசுப் பொருட்களையும் அங்கிருந்த மேஜை மேல் வைத்து, தரையில் முட்டி போட்டு அமர்ந்து அதை ஆர்வமாக வேகமாகத் திறந்தாள் மாதவி.
முதலில் அவள் திறந்த சிறிய பெட்டியில் ஒரு நிறுவனத்தின் (Branded) கைப்பேசி (Mobile Phone) இருந்தது. அதை எடுத்துப் பார்த்த மாதவிக்கு மிகவும் ஆச்சரியமாகிப் போனது. “அக்கா, எனக்கா இந்தப் போன்?” என்று கேட்க… “ஆமாம்,” என்று சங்கவி ஒரு மெல்லிய புன்னகையோடு தலையை ஆட்டினாள். “எனக்கு எதுக்குக்கா இந்தப் போன்? ஒரு சின்ன பட்டன் போன் வாங்கிக் கொடுத்திருக்கலாமே… இதை பார்த்தால் விலை ரொம்ப அதிகமா இருக்கும் போலையே. என் கல்லூரியில ரொம்பப் பணக்கார வீட்டுப் பசங்க தான் இந்தப் போனை வெச்சிருப்பாங்க,” என்று சொல்லித் தன் கையில் இருந்த நிறுவனத்தின் ஆப்பிள் (Apple) போனைப் காட்டி சங்கவியிடம் கேட்க…
“ஏன், அவங்க தான் அந்தப் போனை வெச்சிருக்கணுமா? நீ வெச்சிருக்கக் கூடாதா?” என்றால்.
“இல்லக்கா, உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? இவ்வளவு செலவு எனக்காக ஏன் பண்ணணும்?” என்று மாதவி கேட்க….
அவளை முறைத்த சங்கவி, “நீ தேவையில்லாம ரொம்பப் பேசுற. உனக்கு இந்தப் பரிசு எல்லாம் எதுவும் வேண்டாம். முதல்ல கொடு,” என்று அவள் கையில் இருந்த கைப்பேசியையும் பிரிக்காமல் வைத்திருந்த இன்னொரு பெரிய பெட்டியையும் எடுக்கப் போக… “ஐயோ அக்கா! நான் தெரியாம சொல்லிட்டேன். எனக்காக வாங்கிட்டு வந்தது இது. திருப்பி நீங்க வாங்கக் கூடாது,” என்று சொல்லி அந்தப் பெரிய பெட்டியைக் கட்டிக்கொண்டு சங்கவியைப் பார்க்க…
சிறுபிள்ளையிடம் இருந்து பொம்மையைப் பறிக்கப் போகும் போது, அதைக் கட்டிக்கொண்டு பேசும் குழந்தையைப் போல மாதவி பேசுவதைப் பார்த்துச் சிரித்த சங்கவி, “இவ்வளவு ஆசை இருக்கு இல்ல. அப்புறம் எதுக்கு தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்க?” என்று சொன்னவள், “சரி, அந்த இன்னொரு பெட்டியையும் திறந்து பார்,” என்று சொல்ல…
“சரி,” என்று சிரித்தவாறு தலையாட்டிய மாதவி, தன் கையில் இருந்த போனை மேஜை மேல் வைத்துவிட்டு, மற்றொரு பெரிய பெட்டியைத் திறக்க… அதனுள் ஆப்பிள் மடிக்கணினி (Laptop) இருந்தது. ஏற்கனவே ஆப்பிள் போன் பார்த்தே சந்தோஷக் கடலில் ஆழ்ந்திருந்த மாதவிக்கு, இப்போது மடிக்கணினியும் அதே பிராண்டில் வாங்கிக் கொடுத்திருக்க… அதையெல்லாம் பார்த்த மாதவிக்கு மிகவும் சந்தோஷமாகப் போய்விட்டது. இந்த மாதிரிப் பிராண்டுகள் எல்லாம் தன் கூடப் படிக்கும் சக மாணவர்கள் உபயோகப்படுத்துவதைப் பார்த்திருக்கிறாள்.
இன்று அதே போன்று கைப்பேசியில் மடிக்கணினியையும் தனக்குச் சங்கவி பரிசாக அளித்திருப்பதைப் பார்த்த மாதவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கண்களில் கண்ணீரோடு சங்கவியைப் பார்க்க…
அவள் அழுவதைப் பார்த்துப் பதறிய சங்கவி அவள் அருகில் வந்து அவளோடு சேர்ந்து முழங்காலிட்டு அமர்ந்தவள், “என்ன ஆச்சு? இப்ப எதுக்கு நீ கண்ணுல தண்ணி வடிச்சிட்டு இருக்க?” என்று கோபமாகக் கேட்க…
“அக்கா! நானும் இதுவரைக்கும் எத்தனையோ வீட்ல வேலை பார்த்து இருக்கேன். அங்க எல்லாம் சில இடத்துல எனக்குப் புதுசா ஒரு துணி எடுத்துக் கொடுத்தாலே அது பெரிய விஷயம். என்ன தான் என்னை நல்லா நடத்தினாலும், உங்க அளவு யாரும் என்னை அவங்க குடும்பமா நினைச்சதில்ல. நான் ரொம்பக் கொடுத்து வச்சிருக்கேன் அக்கா உங்களையும் அப்பாவையும் பார்த்ததுக்கு,” என்று சொல்லி மாதவி கண்ணீர் வடிக்க…
அவள் கண்ணீரைத் துடைத்து விட்ட சங்கவி, “இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. நீ இதுக்காக எல்லாம் எதுக்கு வீணா கவலைப்பட்டுக்கொண்டிருக்க? சரி போ. ஏற்கனவே ரொம்ப நேரம் ஆயிடுச்சு. சாப்பிட்டுவிட்டுப் போய் சீக்கிரம் படு. மணி பாரு, 9 மணிக்கு மேல ஆயிருச்சு,” என்று சொல்ல…
“சரி,” என்று தலையாட்டி விட்டு எழுந்து உள்ளே சென்றால் மாதவி. சங்கவி தனக்குக் கொடுத்த பரிசுப் பொருட்களை எடுத்துச் சென்று தன் அறையில் வைத்தவள், அதை ஒரு முறை தொட்டுப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டவள், நேராகக் குளியலறை சென்று புத்துணர்ச்சி அடைந்துவிட்டு (Refresh) வெளியே வர…
அப்போது அவள் அறைக்குள் திடீரென்று ஒரு சத்தம் கேட்டது… குளித்துவிட்டு வெளியே வந்த மாதவி, அந்த அறைக்குள் ஏதோ வினோதமாகச் சத்தம் கேட்கப் பதறி அடித்துக் கொண்டு அது என்ன என்று சுற்றிலும் தேட, அந்தச் சத்தம் அவள் கல்லூரியில் இருந்து கொண்டு வந்த பையில் (Bag) இருந்து தான் அடித்தது. தன் கையில் இருந்த ஈரத் துண்டைக் கீழே போட்டுவிட்டு, தன் பையை எடுத்து அதற்குள் துலாவ… போதி கொடுத்தப் பரிசில் இருந்துதான் அந்தச் சத்தம் வந்து கொண்டிருந்தது.
அப்போதுதான் மாதவிக்குப் போதி, சரியாக அந்தப் பரிசை பத்து மணிக்குத் திறந்து பார்க்கச் சொன்னது நினைவிற்கு வர, தன்னிச்சையாக நிமிர்ந்து தன் அறையில் மாட்டி இருந்த கடிகாரத்தைப் பார்க்க அது சரியாக மணி பத்து என்று காட்டியது.
அதைப் பார்த்தவள், ‘இதை எப்படி நான் மறந்து போனேன்?’ என்று யோசித்து விட்டு, வேகமாகத் தன் கையில் இருந்த போதி கொடுத்தப் பரிசைத் திறக்க… அதனுள் சத்தம் எழுப்பிக் கொண்டு அழகாக ஒரு குட்டி டெடி பியர் (Teddy Bear) பொம்மையும், அதனுடன் சேர்த்து ஒரு ஸ்மார்ட் வாட்சும் (Smart Watch), கூடவே ஒரு சிறிய கைக்கு அடக்கமாகப் பரிசு மூட்டப்பட்ட ஒரு உறையும் (Cover) இருந்தது.
சத்தம் போட்டுக் கொண்டிருந்த அந்த டெடி பொம்மையை எடுத்துப் பார்த்த மாதவி, அதை எப்படி நிறுத்துவது என்று பார்த்து அதிலிருந்த விசையை (Switch) அணைத்தவள். ஸ்மார்ட் வாட்சையும் அந்தப் பொம்மையையும் அருகில் வைத்துவிட்டு ஒரு சிறு உறையில் இருந்த மற்றொரு பரிசை எடுத்துத் திறந்தாள்.
‘ஒரு பரிசு கொடுத்தேன்னு சொல்லிட்டு இந்தக் குட்டிப் பெட்டிக்குள் எத்தனை வச்சிருக்காரு,’ என்று போதியை மனதிற்குள் நினைத்தவள், அந்தக் குட்டிப் பெட்டியைத் திறக்க… அதைப் பார்த்ததும் கண்கள் இமைக்காமல் அப்படியே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தால்.
அவள் கையில் இருந்த அந்தக் குட்டிப் பெட்டியைத் திறந்து பார்த்த மாதவி, அதில் ஒரு குட்டி புகைப்படச் சட்டம் (Photo Frame) இருந்தது. அந்தப் புகைப்படச் சட்டத்தில் மாதவி இடி இடித்த போது, போதியின் அலுவலக அறையில் வைத்துப் போதியின் சட்டையைப் பிடித்துக் கொண்டு அவன் பின்னால் நின்றிருந்த அந்தக் காட்சியைத் தத்ரூபமாக வரையப்பட்டு ஒரு ஃப்ரேம் அதனுள் இருந்தது.
அந்தப் புகைப்படச் சட்டத்தில் போதியின் உருவமும் மாதவியின் உருவமும் தத்ரூபமாக வரையப்பட்டு இருந்தது. அதேபோல அன்று இருவரும் அணிந்து இருந்த அதே உடையும் எந்த ஒரு மாறுதலும் இல்லாமல் அப்படியே அதில் வரைந்து இருந்தார்கள்.
அந்தச் சிறிய புகைப்படச் சட்டத்தை ஆசையாகத் தன் கைகளால் தடவிப் பார்த்து மாதவி மெலிதாகப் புன்னகைத்தாள். போதியுடன் இருட்டில் தனியாக அவள் அலுவலக அறையில் இருந்த அந்த நிமிடங்கள் மாதவிக்கு நினைவு வர… அந்தப் புகைப்படத்தை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு, ஈரத் துண்டுடன் அப்படியே மெத்தையில் சரிந்தவள், போதியை பற்றிய நினைவுகளில் மூழ்கிப் போனாள்.
எங்கே போதியை நினைத்து மாதவி அவன் கொடுத்த பரிசுப் பொருளைக் கட்டிக்கொண்டு படுத்து இருக்க…. தன் படுக்கை அறையில் மெத்தையில் படுத்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போதி, ‘இந்த நேரம் மாதவி ஞாபகமாக அந்தப் பரிசைத் திறந்து பார்த்திருப்பாளா?’ என்று நினைத்தவன். ‘அவள் மறக்கக் கூடாது என்பதற்காகத் தானே அந்த டெடி பொம்மையில் சரியாகப் பத்து மணிக்கு நேரம் செட் செய்து வைத்திருந்தேன். கண்டிப்பாக இந்த நேரம் திறந்திருப்பாள்,’ என்று நினைத்தான் போதி.
‘ஒரு வேலை நேரம் செட் பண்ணுனது சத்தம் போடாமல் விட்டிருந்தா,’ என்று யோசித்தால் போதி. ‘அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. நான் தான் ஒரு தடவைக்கு பல தடவை அது வேலை செய்யுமான்னு சரி பார்த்துட்டுத் தானே அந்தப் பொம்மையை அந்தப் பெட்டிக்குள் வெச்சு மூடினேன்,’ என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவன்… தான் அவளுக்குக் கொடுத்துவிட்டப் பரிசைப் பார்த்துவிட்டு அவள் எந்த உணர்வில் இருப்பாள்? அவளுக்குத் தான் கொடுத்த பரிசு பிடித்திருக்குமா? என்று பல யோசனைகளோடு தன் மெத்தையில் இருந்த தலையணையை எடுத்து மாதவியை நினைத்துக் கட்டிக்கொண்டு இங்கும் அங்கும் உருண்டு பிரண்டு கொண்டு இருந்தான் போதி.
போதியின் கல்லூரியில் நடந்த கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொண்ட ஆதியும் துர்காவும் அங்கிருந்து கிளம்பி நேராக வீட்டிற்கு வராமல் துர்காவை அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச் (Beach) சென்றான் ஆதி.
“வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகாம இங்கே கூட்டிட்டு வந்தேன்னு?” கேட்டாள் துர்கா.
“ஒரு மாற்றத்திற்காகத் தான் நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன் துர்கா. நீயும் எப்போதுமே வீட்டுக்குள்ளேயே இருக்க. வெளியே எங்கேயும் வரதே இல்லையே. அதனால்தான் உன்னை இன்னைக்கு இந்த நிகழ்ச்சிக்கும், அப்படியே கடற்கரைக்குக் கூட்டிட்டுப் போகலாம்னு நான் முடிவு பண்ணித் தான் வீட்டில் இருந்து உன்னை அழைச்சிட்டு வந்தேன்,” என்று சொன்னான் ஆதி.
அவனைப் பார்த்து மென்மையாகச் சிரித்த துர்கா, சக்கர நாற்காலியில் (Wheel Chair) அமர்ந்து அருகில் நின்று இருந்த ஆதியின் கையைப் பிடித்துக் கொண்டு கடல் அலைகளை ரசித்துக் கொண்டிருந்தாள்.
அவளோடு சேர்ந்து ஆதி அவள் சக்கர நாற்காலிக்கு அருகில் கடல் மணலில் அமர்ந்தவன், அவள் கைகளைப் பிடித்தவாறு கடல் அலைகளை ரசித்துக் கொண்டு, துர்காவின் முகத்தைத் தன் கைகளால் தாங்கியபடி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி. ஆதி தன்னை ரசிப்பதைக் கவனிக்காத துர்கா, கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க… எதிர்பாராதவிதமாகத் திரும்பிப் பார்த்த துர்காவுக்கு, ஆதி தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருப்பதைக் கண்டதும் வெட்கம் வந்து தலையைக் குனிந்து கொண்டாள்.
“ஏன் ஆதி, என்ன இப்படிப் பார்க்குற?” என்று கேட்டாள் துர்கா. “உனக்கு எப்போ பழைய ஞாபகம் எல்லாம் வரும்? நீ எப்போ என்கிட்ட பழையபடி பேசப் போறேன்னு ரொம்ப எதிர்பார்த்துக் காத்துக்கிட்டு இருக்கேன் துர்கா,” என்றான் ஆதி.
“ஏன் ஆதி, இப்ப இருக்கிற என்னை உனக்குப் பிடிக்கலையா? உனக்கு அந்தத் துர்கா தான் பிடிச்சிருக்கா?” என்று கேட்டாள்.
“அப்படி இல்ல துர்கா. இந்தத் துர்காவுக்கு நான் தான் உன்னுடைய கணவன். நீ என்னைக் காதலித்தாய் என்று நான் தான் விளக்கம் கொடுத்து உனக்குப் புரிய வைத்து என்னுடன் பேச வைத்தேன். ஆனால், பழைய துர்கா எனக்குத் தெரியாமலேயே என்னை பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தாள்.”
“அப்படி அந்தத் துர்காவுடன் அவள் காதலுடன் நான் சந்தோஷமாக ஒன்று சேரும்போது அவளுடைய மனநிலை எப்படி இருக்கும். அவள் என்னை எப்படி நடத்துவாள்? அவள் என்னிடம் எப்படிப் பேசுவாள்? பழகுவாள் என்று ஒவ்வொன்றையும் நான் நேரடியாக உணர ஆசைப்படுகிறேன். அதற்காகத்தான் நான் என்னுடைய பழைய துர்காவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்,” என்று சொன்னான் ஆதி. ஆதி சொன்ன விஷயம் துர்காவுக்குப் புரிந்தது போலத்தான் இருந்தது.
பின்பு தூரத்தில் ஒருவர் வண்டியில் வைத்துப் பனிக்கூழ் (Ice Cream) விற்றுக் கொண்டிருக்க…. அதைப் பார்த்த துர்கா, ஆதியிடம் திரும்பி, “ஆதி, எனக்கு அது வேண்டும்,” என்று கையை நீட்டிப் பனிக்கூழைக் கேட்க…
“சரி, நீங்க இங்கேயே பத்திரமா இரு… நான் போய் வாங்கிட்டு வரேன்,” என்று சொல்லிவிட்டு ஆதி துர்காவை கடற்கரை ஓரத்தில் மணலில் சக்கர நாற்காலியில் அப்படியே அமர வைத்துவிட்டு எழுந்து சென்று பனிக்கூழ் வாங்கச் சென்றான். துர்கா இருக்கும் இடத்திற்கும் பனிக்கூழ் இருக்கும் இடத்திற்கும் சற்றுத் தொலைவு அதிகம். பனிக்கூழ் வாங்க எழுந்து சென்ற ஆதி, போகும்பொழுது எல்லாம் அவளை அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றான்.
ஆதியை பனிக்கூழை வாங்கி வரச் சொல்லிவிட்டு, துர்கா திரும்பி கடல் அலைகளை ரசித்துக் கொண்டு இருக்க… அப்போது அங்கே இரண்டு குழந்தைகள் கடற்கரை மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் விளையாடுவதைத் தன் சக்கர நாற்காலியில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்க… இப்போது துர்கா அமர்ந்திருந்த இடத்திற்கு முன்னால் ஒரு நிழல் தெரிந்தது.
ஆதிதான் பனிக்கூழ் வாங்கிவிட்டுத் தன் பின்னால் வந்து நின்றிருக்கிறான் என்று நினைத்துச் சிரித்தவாறு துர்கா திரும்ப… அவள் பின்னால் நின்று இருந்தவரைப் பார்த்ததும் துர்காவின் முகம் அப்படியே சுருங்கிப் போனது….
பனிக்கூழ் வாங்கும் கடைக்குச் சென்றதும் துர்காவுக்குப் பிடித்த பனிக்கூழின் சுவையை (Flavour) ஆர்டர் செய்துவிட்டு ஆதி அங்கே நின்று இருக்க… அப்போது அங்கே வந்த ஒரு குழந்தை தனக்குப் பனிக்கூழ் வேண்டும் என்று ஆதியிடம் கேட்க…. அந்தக் குழந்தையின் குனிந்த ஆதி. “நீ மட்டும் தான் பனிக்கூழ் வாங்கத் தனியா வந்தியா? உன்னோட அம்மா அப்பா எல்லாம் எங்கே?” என்று கேட்க… அந்தக் குழந்தை தான் அம்மா அப்பா உட்கார்ந்து இருந்த திசையைக் காட்ட… அது அந்தக் குழந்தை இருந்த திசைக்கு நேர் எதிராக மிகவும் தள்ளி அவர்கள் இருவரும் அமர்ந்திருந்தனர்.
அந்தக் குழந்தையைக் கையில் தூக்கிய ஆதி, அந்தக் குழந்தைக்குப் பிடித்த பனிக்கூழின் சுவையை வாங்கி அதன் கையில் கொடுத்துவிட்டு, நேராகப் போய் அதன் பெற்றோரிடம் அந்தக் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்றவன், அந்தக் குழந்தையின் பெற்றோரிடம் கொண்டு போய்க் குழந்தையைக் கொடுத்து. “குழந்தையை இப்படித் தனியா கடற்கரையில் விளையாட விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் இப்படிப் பொறுப்பே இல்லாம உட்கார்ந்திருக்கீங்களே,” என்று அவர்களை ஆதி கடிந்து கொள்ள…
அவனைப் புரியாமல் பார்த்த அந்த இருவரும், “என்ன சொல்றீங்க? எங்க ரெண்டு பேருக்கும் இன்னும் கல்யாணமே ஆகல. அப்புறம் எப்படி இந்தக் குழந்தை வந்திருக்கும்?” என்று அவர்கள் கேட்க…
“அப்போ இது உங்க குழந்தை இல்லையா?” என்று ஆதி புருவம் சுருக்கி அவர்களிடம் கேட்க… “இல்லை சார், நாங்க ரெண்டு பேரும் காதலர்கள் (Lovers),” என்று அவர்கள் சொல்ல…
“சாரி, நான் அடையாளம் தெரியாமல் வந்து பேசிட்டேன்னு நினைக்கிறேன்,” என்று சொன்ன ஆதி அங்கிருந்து அந்தக் குழந்தையோடு சென்றவன், அந்தக் குழந்தையைப் பார்த்து, “உன் அம்மா அப்பா இவங்க தானே நீ காட்டினாய்?” என்று கேட்க… ஆதி பேசியதற்குப் பதில் பேசாமல் தன் கையில் இருந்த பனிக்கூழைச் சாப்பிட்டுக்கொண்டு அந்தக் குழந்தை இருக்க…
ஆதி இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தவன், ‘சரி இந்தக் குழந்தையின் பெற்றோர் யாரேனும் தேடி அலைகிறார்களா என்று பார்க்கலாம்’ என்று துர்கா இருப்பதே மறந்துவிட்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு கடற்கரை மணலில் நடந்து கொண்டிருக்க… தங்கள் குழந்தையைக் காணவில்லை என்று தேடிக் கொண்டு ஒரு ஜோடி கடற்கரை மணலில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தைகளைப் பார்த்து தங்கள் குழந்தை அதில் இருக்கிறதா என்று தேடிக்கொண்டு வந்தனர்.
கையில் இருக்கும் பனிக்கூழ் முழுவதையும் சாப்பிட்டு முடித்த அந்தக் குழந்தை தூரத்தில் இருந்த தன் பெற்றோரை அடையாளம் கண்டுவிட்டு, “அம்மா,” என்று அழைக்க… அந்தக் குழந்தை அழைத்த திசையைத் திரும்பிப் பார்க்க, அங்கே இருவர் இவன் தன் கையில் இருந்த குழந்தையைப் பார்த்ததும் பதட்டமாக அங்கே ஓடி வர….
ஆதியிடம் வந்த அவர்கள் இருவரும், அவனிடம் இருந்த தங்கள் குழந்தையை வாங்கிக் கொண்டு… “யார்? சார் நீங்க… எங்க குழந்தையை நீங்க தூக்கி வெச்சிருக்கீங்க…” என்று குழந்தையின் அப்பா சற்று மிரட்டுவது போல ஆதியிடம் பேச.. அவர் பேசும் தோரணையைப் பார்த்து கடுப்பான ஆதி. “நீங்க கவனமில்லாம உங்க குழந்தையைத் தொலைச்சிட்டு, அதை பத்திரமாகப் பாதுகாத்துக் கையில் வைத்திருந்த என்கிட்ட வந்து, என்னமோ நான் தான் குழந்தையைக் கடத்திட்டுப் போற மாதிரி இப்படிப் பேசுறீங்களே,” என்றால் ஆதியும் அவர்களிடம் கோபமாக.
“என்ன சார் சொல்றீங்க?” என்று அந்தக் குழந்தையின் அப்பா கேட்க… “சார், உங்க குழந்தை நான் என் மனைவிக்குப் பனிக்கூழ் வாங்கிக் கொண்டிருக்கும்போது, அங்கே வந்து என்கிட்டப் பனிக்கூழ் வேணும்னு கேட்டாள். ‘உன்னோட அம்மா அப்பா எங்கே?’ என்று கேட்டதற்கு, என்கிட்ட அவங்க ரெண்டு பேரையும் காட்டி, அவங்க தான் அவளோட அம்மா அப்பான்னு சொன்னாள்,” என்று தூரத்தில் அவன் சற்று முன்பு சென்று பேசிய அந்த இரு காதல் ஜோடிகளையும் காட்டி அந்தக் குழந்தையின் பெற்றோரிடம் சொல்ல…
ஆதி பேசியதைக் கேட்டு அதன் அம்மாவின் கையில் இருந்த அந்தக் குழந்தை, “அம்மா, நான் தான் அந்த மாமா கிட்ட வேணும்னே அவங்களக் காட்டி, அவங்க என்னோட அம்மா அப்பா என்று சொன்னேன்,” என்று குறும்புத்தனமாகச் சொல்ல…
அந்தக் குழந்தையைப் பார்த்துச் சிரித்த ஆதி, அதன் கன்னத்தைப் பிடித்து லேசாகக் கிள்ளியவன். “ஏய் வாலு! அப்போ நீ தெரிஞ்சே தான் என்கிட்ட அவங்களைக் காட்டி உன்னோட அம்மா அப்பான்னு பொய் சொன்னியா?” என்று கேட்டான்.
“ஆமாம்,” என்று அந்தக் குழந்தை தலையை ஆட்ட… தன் கையை நீட்டி, “அவங்க தான் சொன்னாங்க,” என்று ஒருவரைக் காட்ட… அந்தத் திசையில் இருந்த நபரைப் பார்த்ததும் உறைந்து போய் அப்படியே நின்றான் ஆதி.

1 comment
Ayooo intha sangavi mathavi vishiyathula care edukurathu enaku romba pidichiruku💐💋 ana ippo enna thidirnu twist la kudukuringa enaku oru pakkam bayama vera iruku🥺🫢🤔