Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 171

உன் ரகசிய ரசிகை நான் 171

by Layas Tamil Novel
184 views

EPISODE 171

ஆதியிடம் அவனைப் பார்க்க யாரும் வந்திருப்பதாகத் தகவல் கூறி போனை வைத்த ரியா, ஃபைலை எடுக்க ஃபைல் ரூமிற்குள் செல்லப் போக, அப்போதுதான் ஆபீஸ்க்குள் வந்தான் ஸ்ரீ.

அவனைப் பார்த்த ரியா, ‘ஐயோ… இவன் வேற வந்துட்டானே… இனி நாம எங்க போனாலும் நம்ம பின்னாடி வருவானே’ என்று யோசித்தவாறே அவனைக் கடந்து செல்ல… உள்ளே வந்த ஸ்ரீ ரியாவைக் கண்டுகொள்ளாமல் அவளைத் தாண்டி தன் கேபினுக்கு சென்றான்.

தன்னைத் தாண்டிச் சென்று ஸ்ரீயைப் பார்த்து, ‘என்னடா இது? ஸ்ரீதானா? நான் இருப்பது அவனுக்கு மறந்து போயிடுச்சா? இல்லை நான் அவனுக்குக் கண்ணுக்குத் தெரியாம போயிட்டேனா….’ ‘அவன் முன்னாடி இவ்வளவு பெரிய ஆளா நின்னுட்டு இருக்கேன். என்னைப் பார்க்காமயே போயிட்டானே’ என்று அதிசயமாக ஸ்ரீயைப் பார்த்துக் கொண்டு நின்றாள் ரியா.

ரியாவைக் கடந்து வந்த ஸ்ரீ, அவள் தன்னை கவனிக்கிறாளா என்று தன் கேபினுக்குள் வந்ததும் அவளுக்குத் தெரியாமல் ரியாவைப் பார்க்க… அவள் ஸ்ரீ சென்ற வழியையே பார்த்துக் கொண்டு அதிர்ச்சியாக நின்று இருந்தால்.

ரியா அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு நின்றதைப் பார்த்து ஸ்ரீ, ‘விக்கி மாமா சொன்னது சரியாத் தான் இருக்கு. அவளை அவர் சொன்ன மாதிரியே ஒரு ஒரு வாரத்துக்குக் கண்டுக்காமயே இருப்போம். எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு பார்க்கலாம்’ என்று நினைத்தவன் சென்று தன் வேலைகளில் மூழ்க ஆரம்பித்தான்.

ஸ்ரீ வந்ததிலிருந்து தான் இருக்கும் இடத்திற்கு வராமல் இருக்கிறானே… என்று ஸ்ரீ தன்னிடம் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்று யோசனையாக இருந்தது. ஸ்ரீ இருக்கும் இடத்தைச் சுற்றியே ரியா அடிக்கடி வந்து கொண்டு இருக்க, அதைக் கவனித்தும் கவனிக்காதவன் போலத் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீ.

ஸ்ரீ தன் கேபினிலிருந்து ஒரு ஃபைலுடன் எழுந்து ரியாவின் கேபினுக்கு வந்தவன், அவள் முன்பு அந்த ஃபைலை நீட்டி, “இதுல இருக்கிறது எல்லாம் நான் செக் பண்ணிட்டேன். நீங்களும் ஒருமுறை தரவாகச் செக் பண்ணிட்டு சார் டேபிள்ல வச்சிடுங்க” என்று சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு அவன் வேலையைப் பார்க்கச் சென்றுவிட…

தன் கேபினில் இருந்து எழுந்து ரியாவின் கேபினுக்கு வந்து அவளிடம் ஃபைலைக் கொடுத்துவிட்டுத் திரும்பவும் தன் கேபினுக்குச் செல்லும் வரை ஒரு முறை கூட ஸ்ரீ ரியாவின் முகத்தைப் பார்த்துப் பேசவே இல்லை.

அவனின் இந்தத் திடீர் மாற்றம் ரியாவினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் ஏன் இப்படித் திடீரென்று மாறிவிட்டான் என்று தனக்குத் தெரிந்து ஆக வேண்டும் என்று ரியா சிந்தனையில் மூழ்கினாள்.

‘ஒருவேளை அவனுக்கு வீட்டில் எதுவும் பிரச்சனையாக இருக்குமோ? அந்த டென்ஷனில் தான் தன்னைக் கவனிக்காமல் இருக்கிறானோ?’ என்று யோசித்தாள்.

‘இத்தனை நாள் ஒரு முறை கூட அவன் இப்படி இருந்ததில்லையே. திடீரென அவன் ஏன் இப்படி மாறி இருக்கிறான்?’ என்று யோசித்தவள், ‘சரி, ஒரு ரெண்டு நாள் விட்டுப் பார்ப்போம். அவன் எப்படி நடந்துகொள்கிறான் என்று பார்த்துவிட்டு அதன் பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம்’ என்று ரியா ஸ்ரீயின் யோசனையோடு தன் வேலைகளில் மூழ்க ஆரம்பித்தாள்.

ரியா தனக்குத்தானே ஏதோ முனுமுனுவெனப் பேசிக்கொள்வதும், எதையோ யோசித்துக் கொண்டு அமர்ந்திருப்பதையும் தன் கேபினிலிருந்து அவளுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீக்கு விக்கி சொன்ன ஐடியா ஒர்க் அவுட் ஆகிவிடும் போலத் தோன்ற…

‘இன்னும் ஒரு வாரத்திற்கு இப்படியே நாம மெயின்டைன் பண்ணினால், கண்டிப்பா ரியாவே வந்து என்கிட்ட அதைப்பற்றி கேட்பா. இல்லை அவள் மனசுல இருக்குறது கண்டிப்பா வெளிவரும்’ என்று உறுதியாக நம்பினான் ஸ்ரீ.


ஷிவு தன் ஆபீஸில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டு இருக்க, அவளிடம் தட்டிக்கொண்டு உள்ளே வந்த நர்மதா மேடம், “உங்களப் பார்க்க ஒரு வயசான அம்மா வந்து வெளியில காத்துட்டு இருக்காங்க. அவங்கள நான் உள்ள அனுப்பி வைக்கவா?” என்று கேட்டாள்.

‘வயதான அம்மாவா? யாராயிருக்கும்?’ என்று யோசித்தவாறே, “சரி நர்மதா அவங்கள அனுப்பு” என்று சொல்லியவள் தன் ஃபைலை மூடி வைத்துவிட்டு, கம்ப்யூட்டரை ஆன் செய்து சிசிடிவி யின் வழியாக வந்திருப்பது யார் என்று பார்க்க…

வெளியே ரூபேஷின் அம்மா அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் ஷிவுவிற்கு உள்ளுக்குள் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

‘இவர் எப்படி நான் இங்கே இருப்பது தெரிந்து வந்தார்? இவருக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை அவரிடம் என்னைப் பற்றி எதுவும் சொல்லி, நான் வேலை பார்க்கும் இடத்தில் தான் இவளும் இருக்கிறாள் என்று எதுவும் என்னைப் பற்றி சொல்லி இருப்பானா?’ என்று புரியாமல் ஷிவு கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டு இருக்க…

அவரிடம் சென்று உள்ளே செல்லச் சொல்ல, கதவைத் தட்டிக் கொண்டு ரூபேஷின் அம்மா உள்ளே வந்தார்.

அவர் உள்ளே வந்ததும் தான் அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்து வேகமாக அவர் அருகில் சென்ற ஷிவு, அவர் கையைப் பிடித்துக் கொண்டு அவரை அழைத்துக்கொண்டு போய் அங்கிருந்த சோபாவில் அமர வைத்துவிட்டு, நர்மதாவிற்கு கால் செய்து அவருக்கு ஜூஸ் கொண்டுவரச் சொல்லி போனை வைத்தவள்.

அவரிடம் வந்து அமர்ந்த ஷிவு அவர் உடல்நிலையைப் பற்றி விசாரித்தாள், “எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டேன். இப்போ எப்படி இருக்கு?” என்று ஷிவு நலம் விசாரித்தவள்.

“நான் நல்லா இருக்கேன் ஷிவு. நீ எப்படி இருக்க?” என்று கேட்டவர் ஷிவுவின் வயிற்றில் கை வைத்து, “என்னுடைய பேரன்/பேத்தி எப்படி இருக்கு?” என்று கேட்டார்.

ஷிவுவின் வயிற்றில் கை வைத்து அவள் கர்ப்பமாக இருப்பதை ஏற்கனவே அவருக்குத் தெரியும் என்பது போல அவளைப் பற்றியும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பற்றியும் நலம் விசாரிக்க ஷிவுவிற்குத் தூக்கி வாரிப் போட்டது.

“என்ன பாக்குற ஷிவு? எனக்கு இந்த விஷயம் தெரியாதுன்னு நெனச்சிட்டியா… எனக்கு எல்லா விஷயமும் தெரியும். என் மகன் உன்னை ஏமாற்றின விஷயமும் தெரியும்” என்றார்.

சோபாவில் அவர் அருகில் அமர்ந்திருந்த ஷிவு அப்படியே சோபாவில் இருந்து கீழே இறங்கி அவர் காலைப் பிடித்துக் கொண்டு அழுதவாறே, “அம்மா நீங்க என்னை தப்பா நினைச்சுக்காதீங்க.. நான் தப்பான பொண்ணு கிடையாது. இந்த விஷயம் என்னையும் அறியாமல் நடந்தது. நான் நினைவில் இல்லாத போது நடந்தது. எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ஏன், ரூபேஷிற்கும் இதற்கும் கூட இந்த விஷயம் நாங்கள் சுயநினைவில் இருக்கும்போது நடந்தது கிடையாது. ஆனா அவன் ஏன் இப்படி திடீர்னு மாறினான் என்று எனக்குத் தெரியல. இந்த குழந்தையை அழிக்கவும் எனக்கு மனசு வரல. அவன் காதல் உண்மையானதுன்னு நான் நம்பினேன்” என்று தன் மனதில் இருப்பதைக் கொட்டித் தீர்க்க…

தன் காலுக்குக் கீழே அமர்ந்து அழும் ஷிவுவைப் பதறிய படியே தூக்கித் தன் அருகில் அமர வைத்தவர், “எனக்கு எல்லாம் தெரிஞ்சுதான் நான் இங்கே வந்திருக்கேன். நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே. என் பையன் கிட்ட நான் ஏற்கனவே பேசிட்டேன். அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதித்துவிட்டான். உன்கிட்ட பேசி சம்மதம் வாங்கத் தான் நான் இங்கு வந்தேன்” என்று ரூபேஷின் அம்மா சொல்ல…

அவர் அப்படிச் சொன்னதும் இவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்த ஷிவு சோபாவில் இருந்து எழுந்தவள், “அம்மா நீங்க என்னை என்ன வேணா சொல்லுங்க. நான் எதையும் எல்லாமே செய்யத் தயாரா இருக்கேன். ஆனா ரூபேஷை மட்டும் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி என்ன வற்புறுத்தாதீங்க. எனக்கு அதுல துளியும் இஷ்டம் இல்லை. உனக்கு வேண்டுமென்றால் என்னைக் கூடச் சேர்த்துக் கொள்வதும், வேண்டாம் என்றால் ஒரு குப்பையைப் போல என்னைத் தூக்கி எறிவதற்கும் நான் இடம் கொடுக்க விரும்பவில்லை. அவனை திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை அம்மா” என்று சொன்னால் ஷிவு.

“உன்னோட கோபம் புரியுது ஷிவு. உன்னோட கோபம் நியாயமானது தான். அதுக்காக உன் வயிற்றில் வளர குழந்தைக்கு அப்பா யாருன்னு தெரியாமலேயே இந்தச் சமூகத்தில் வளர்க்கப் போறியா? உன்னை இந்தச் சமூகம் தாலி கட்டிக் கொள்ளாமலேயே வயிற்றில் குழந்தையைச் சுமந்து கொண்டிருப்பவள் என்று உன்னைக் கேலி பேசுவதற்கு நீயே இடம் கொடுக்கப் போகிறாயா?” என்று ரூபேஷின் அம்மா கேட்டார்.

அவர் கேட்ட கேள்விகளுக்கு ஷிவுவால் பதில் சொல்ல முடியவில்லை.

“நான் சொல்றதை கவனமா கேளு ஷிவு. உனக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ இந்தச் சமூகத்திற்காக என் பையனைக் கல்யாணம் பண்ணிக்க. என் பையனைக் கல்யாணம் பண்ணின பிறகு அவன் கூடச் சேர்ந்து வாழறதும் வாழாததும் உன்னோட விருப்பம். அதை நான் உன் போக்கிலேயே உன் விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன். ஆனால் எனக்கு இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீ செய்து கொடு. அவன் கையால் தாலி கட்டிக் கொண்டு நீ என் வீட்டிற்கு மருமகளாக வரவேண்டும். இதுதான் என்னோட கடைசி ஆசை” என்று அவர் சொல்ல..

அவர் தன்னுடைய கடைசி ஆசை என்று சொன்னதும் அதிர்ந்த ஷிவு அவர் வாயில் கையை வைத்து, “அப்படி சொல்லாதீங்கம்மா. எனக்கு இருக்கிற ஒரே ஆறுதல் நீங்க மட்டும் தான்” என்றவள், “நீங்க இவ்வளவு தூரம் சொன்ன பிறகு நான் இந்த மறுப்பும் சொல்லலை அம்மா. என் வீட்ல பேசிட்டு நான் உங்ககிட்ட சொல்லட்டுமா?” என்று ஷிவு கேட்க..

ஷிவு திருமணத்திற்குச் சம்மதித்து விட்டாள் என்ற செய்தியே அவருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

ஷிவு கையைப் பிடித்துக் கொண்டு, “நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் மா… உன் மாமா ஆதி வந்து நான் ஹாஸ்பிடலில் உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது என்னை வந்து பார்த்து, இந்தத் திருமணத்தை நடத்தி வைக்க ரூபேஷிடம் பேசி சம்மதம் வாங்க அவர்தான் எனக்கு உதவி செய்தார். உன் மாமா மட்டும் இல்லை என்றால் ரூபேஷ் இவ்வளவு சீக்கிரம் உன்னைத் திருமணம் செய்து கொள்ள சம்மதித்து இருப்பான் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை” என்றார் ரூபேஷின் அம்மா.

“என்னம்மா சொல்றீங்க? என் ஆதி மாமா வந்து உங்களப் பார்த்து எங்க கல்யாணத்தைப் பத்திப் பேசினாரா?” என்று கேட்டாள் ஷிவு.

“ஆமாம்மா” என்று சொன்னவர், ஆதி தன்னிடம் எதைச் சொல்லி ரூபேஷை சம்மதம் வாங்கச் சொன்னார் என்று அனைத்து விஷயத்தையும் ஷிவுவிடம் கூற…

அவன் அம்மாவுக்காகக் கூடத் தன்னைத் திருமணம் செய்து கொள்ள ரூபேஷ் சம்மதிக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்ட ஷிவுவின் மனம் மிகவும் வலித்தது.

அவனைத் திருமணம் செய்து கொண்டு அவனுக்கு ஒரு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று தன் மனதிற்குள்ளேயே முடிவெடுத்துக் கொண்ட ஷிவு, “சரிமா அப்போ நான் என் மாமாகிட்ட பேசிட்டு உங்கள வந்து பார்க்கச் சொல்றேன். என் அம்மா அப்பா கிட்டயும் இதப் பத்தி பேசச் சொல்றேன்” என்று ஷிவு சொன்னாள்.

நர்மதா அதற்குள் இவர்களுக்கு ஜூஸ் கொண்டுவர இருவரும் ஜூஸ் குடித்துவிட்டுச் சிறிது நேரம் பேசியவர்கள், ரூபேஷின் அம்மாவை அவர் வீட்டில் இறக்கிவிட்டுத் தன் வீட்டிற்கு கிளம்பினாள் ஷிவு.


ஆஃபீஸில் அவனுக்காக ஆதியின் கேபினுக்கு வெளியில் ஒருவர் காத்திருக்க… தன் ஆபீஸ் இருக்கும் தளத்திற்கு வந்தவன் அவரைப் பார்த்துவிட்டுத் தலையை லேசாக ஆட்டிவிட்டு அவரைக் கடந்து தன் கேபினுக்கு உள்ளே சென்றவன் ரியாவிற்கு அழைத்தான்.

போனை அட்டென்ட் செய்த ரியாவிற்கு வெளியில் ஆதிக்காகக் காத்திருந்த நபரை உள்ளே வரச் சொல்லிவிட்டு, நான் சொல்லும் வரை வேறு யாரையும் தன் கேபினுக்குள் விட வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போனை வைத்தான்.

கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வந்த அந்த நபரைப் பார்த்துத் தலை ஆட்டிய ஆதி, தனக்கு எதிரில் இருந்த சேரைக் காட்டி அந்த நபரை அமரச் சொல்ல…

அவர் ஆதியின் அறையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தவர் ஆதிக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவர் ஆதியைப் பார்த்துச் சிரிக்க.

“நான் நேரா விஷயத்துக்கு வரேன். நீங்க தானே என் செண்பகம் அத்தையுடைய பெண்ணை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கடத்திட்டு போனீங்க” என்றான் ஆதி.

“அது யாரு செண்பகம்?” என்றான் அந்த ஆள்.

கண்களை மூடிப் பெருமூச்சொன்றை எடுத்த ஆதி எதிரிலிருந்தவரைப் பார்த்து, “பதினேழு வருசத்துக்கு முன்னாள் நீங்க சென்னையில் இருந்து கும்பகோணம் ரயிலில் ஆறு வயது குழந்தையுடைதான் ஒரு பெண் தனியா வந்துட்டு இருந்த அப்போ… நீங்க அந்தப் பெண் அசந்த நேரமா பார்த்து அந்தப் பெண் கையில் இருந்த சின்னப் பெண்ணைத் தூக்கிட்டுப் போயிட்டீங்க. சரியா?” என்றான் ஆதி.

தன்னைப் பற்றித் தான் பல வருடங்களுக்கு முன்னால் செய்த தவறைச் சரியாகக் கணித்து தன்னைக் கண்டு பிடித்து இங்கே வரவழைத்து இருக்கிறான் என்றால் இவன் பெரிய ஆளாகத் தான் இருக்க வேண்டும் என்று மனதில் கணக்குப் போட்டுக் கொண்ட அந்த வயதான ஆள் ஆதியையே பார்த்துக் கொண்டு இருக்க..

அந்தப் பெரியவர் எந்தப் பதிலும் கூறாமல் இருக்கவே, அவரைப் புருவம் சுருங்கப் பார்த்த ஆதி தன் மேஜை ட்ரையரைத் திறந்து அதில் இருந்து இரண்டு ஐநூறு ரூபாய் கட்டுகளைத் தூக்கி அவர் முன் வைத்து, “இப்போ சொல்லுங்க. அந்தப் பெண் இப்போ எங்கே இருக்கா? அவ இப்போ உயிரோட இருக்காளா?” என்றான்.

“ஐயோ… நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் அவ்வளவு பெரிய கொடுமைக்காரன் எல்லாம் கிடையாது தம்பி. நீங்க சொன்ன அந்தப் பெண்ணை நான் கடத்திட்டு அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி மும்பை போற ரயிலில் தூக்கிட்டு மும்பை போய்ட்டேன்” என்றார் அவர்.

அவர் அப்படிச் சொன்னதும், “அங்கே கூட்டிட்டுப் போய் அந்தக் குழந்தையை என்ன செய்தீங்க?” என்று கேட்டான்.

“நான் அங்கே போய் முதல்ல அந்தக் குழந்தையை என்கூடவே தான் வெச்சி இருந்தேன் தம்பி. ஏதாவது நல்ல விலைக்கு வந்தா அந்தப் பொண்ணை விற்றுடலாம்னு” என்றார் அவர்.

சொன்னதைக் கேட்டு கோபம் வந்த ஆதி மேஜையின் மேல் ஓங்கி அடித்தவன் தன் இருக்கையில் இருந்து எழுந்து அவர் அருகில் எதிரே மேஜையின் மீது சாய்ந்தவாறு நின்று கை கட்டிக் கொண்டு அவரைப் பார்க்க…

ஆதி வந்து நின்ற தொனியிலேயே அவருக்கு உள்ளுக்குள் ஆதியின் மீது பயம் தொற்றிக் கொள்ள…

எச்சிலை விழுங்கியபடியே ஆதியைப் நிமிர்ந்து பார்க்க..

அவன், “சொல்லுங்க. அதுக்கு பிறகு அந்தக் குழந்தையை என்ன செய்தீர்கள்?” என்று கேட்டான்.

“அது வந்து தம்பி, அந்தக் குழந்தையை நான் அங்கிருந்த ஒரு தமிழ்க் காரங்க நடத்தும் அனாதை ஆசிரமத்தில் கொண்டு போய் விட்டுட்டேன்” என்றார்.

“ஒரு பொண்ணை அவங்க அம்மா கிட்டே இருந்து பிரிச்சிட்டுப் போய் வேற ஒரு பக்கம் அனாதை அசிரமத்துல விடுறதுக்காகவா கடத்துனீங்க?” என்று கேட்டான் ஆதி.

“இல்ல தம்பி. அந்தப் பொண்ணை வெச்சு எதுவும் காசு சம்பாரிக்கலாம் அதை வெச்சு நான் எதுவும் காசு பாக்கலாம்னு நினைச்சிருந்தேன் தம்பி. ஆனா நான் எதிர்பார்த்த மாதிரி யாருமே அந்தப் பொண்ணை நான் சொன்ன விலைக்கு வாங்க மறுத்துவிட்டார்கள். அதன் பிறகு அந்தக் குழந்தையை வெச்சு எனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதனால் தான் என் பொண்ணை அங்கயே விட்டு விட்டேன்” என்றார்.

“அந்த ஆசிரமம் எங்கே இருக்குதுன்னு உங்களுக்கு இப்ப தெரியுமா? அந்தப் பொண்ணு எங்கன்னு எதுவும் தெரியுமா?” என்று கேட்டான் ஆதி.

“அந்த ஆசிரமத்தை எப்பவோ எடுத்து மூடிட்டாங்க தம்பி. அங்க இருக்குற குழந்தைகளை எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிற ஒரு ஆசிரமத்துக்குத் தான் அழைச்சிட்டு வந்ததா கேள்விப்பட்டேன். அங்கே வேலை பார்த்துட்டு இருந்த ஒருத்தவங்க எனக்கு இன்னும் பழக்கத்துல தான் இருக்காங்க. நான் வேணும்னா அவங்க கிட்ட கேட்டு சொல்லட்டுமா?” என்று கேட்டான் அந்த ஆள்.

“நீங்க எதுவும் கேட்க வேண்டாம். அவர் போன் நம்பர் எதுவும் இருந்தா குடுங்க. நானே பேசுகிறேன்” என்ற ஆதி அவரிடம் போன் நம்பரை வாங்கிவிட்டு அவரை எதுவும் செய்யாமல் அங்கிருந்து அனுப்பி வைத்தான்.

அந்த ஆள் கொடுத்துவிட்டுச் சென்ற ஃபோன் நம்பரை வாங்கிய ஆதி அந்த நம்பருக்கு அழைக்க,.. ஓரிரு ரிங்குக்குப் பிறகு அந்தப் போனை அட்டென்ட் செய்து, “ஹலோ யாரு?” என்று ஒரு வயதானவர் குரல் நடுங்கப் பேசினார்.

அவரிடம் செண்பகத்தின் பின்பற்றிய விபரங்களை ஆதி கேட்க… அவர் ஒரு இரண்டு நாட்கள் தனக்கு அவகாசம் கொடுக்கும் படியும் தான் அதற்குள் ஆதி கேட்ட விஷயங்களை எல்லாம் தேடி எடுத்துத் தருவதாகச் சொன்னார்.

அவரிடம் பேசிவிட்டுப் போனை வைத்த ஆதி தன் ஆபீஸ் வேலைகளில் மூழ்கினான். மாலை ஆனதும் துர்காவைப் பார்க்கும் ஆவலில் வீட்டிற்கு கிளம்பிச் சென்றான்.


துர்கா ஆதி வந்துவிடுவான் என்று அவசரமாக ரெடி ஆகியவள் கீழே வந்து தோட்டத்திற்குச் சென்று அவளுக்குப் பிடித்த ஜாதி முல்லை பூவைப் பறித்துத் தன் கைகளால் அந்தப் பூக்களைத் தொடுத்துச் சரமாகக் கட்டியவள், அதை எடுத்து வந்து சுவாமி படத்திற்கு வைத்துவிட்டு மீதி இருந்த இரண்டு சரங்களை தான் தலையில் சூடிக் கொண்டாள்.

முத்துத் தாத்தாவிடம் சொல்லி ஆதிக்குப் பிடித்த உணவுகளாகச் செய்யச் சொன்னவள் தன் கைத்தடியை ஊன்றிக் கொண்டே வாசலுக்கும் வீட்டிற்கும் நடந்துகொண்டு இருந்தாள்.

துர்கா ஆதிக்காக இங்கும் அங்கும் அலைபாய்வதைக் கவனித்த அவள் வீட்டு வேலையாட்கள் அனைவரும் தங்களுக்குள் கூடிப் பேசிச் சிரித்துக் கொண்டு இருந்தனர்.

அவர்கள் ஏதோ பேசுவதைக் கவனித்த துர்கா கிட்சனிற்கு வந்து, “ஏய் வாணி இங்கே வா…” என்று அழைத்தாள்.

அந்தப் பெண் வாணி பவ்வியமாக நின்றாள். “அங்கே என்ன எல்லாரும் என்னைப் பார்த்து முனுமுனுத்துட்டு இருக்கீங்க? என்னைப் பார்த்து அப்படி என்ன பேசுறீங்க?” என்று கேட்டாள் துர்கா.

அந்தப் பெண் தயங்கியபடியே, “அது வந்து மா, அது நீங்க ஐயா வருவார் என்று அவருக்கு எதிர்பார்த்துட்டு வாசலுக்கும் ஹாளுக்கும் நடந்துட்டு இருக்கீங்களா… இதே மாதிரி அய்யாவும் ஆபீஸ் வேலை எல்லாம் எப்ப முடியும் எப்போ உங்கள வீட்டில் வந்து பார்க்கலாம்னு அவரும் உங்களை எதிர்பார்த்துட்டு தான் நீங்க வந்துட்டே இருப்பாரு… அதனால…” என்று சொல்லி அந்தப் பெண் நிறுத்த…

வாணி, “அதனால் நாங்க எல்லாரும் இன்னைக்குச் சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு அவுட் ஹவுஸ் போயிடலாம். ஐயா வந்தாருன்னா யார் இருக்கோம்னு என்று எல்லாம் பார்க்க மாட்டாரு… அங்கேயே உங்களுக்குத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பிச்சிடுவாரு… அதையெல்லாம் பார்க்க எங்களுக்கு வெட்கமாக இருக்கும் என்று சொல்லிப் பேசிச் சிரிச்சுக்கிட்டு இருந்தோம்” என்று சொன்னாள்.

அவள் சொன்னதைக் கேட்ட துர்காவுக்கே வெட்கம் வந்துவிட்டது. “ச்சி…. போடி” என்று அவள் தோளில் அடிக்க…

வாணி, “அம்மா நீங்க வெட்கப்படும்போது உங்க முகம் ரொம்பச் சிவந்து போகுது… அய்யா மட்டும் உங்களை இப்படிப் பார்த்தா அப்படியே உங்களை அள்ளிகிட்டு பெட் ரூமிற்கு ஓடிருவாரு” என்று சொல்ல…

அவள் சொல்லச் சொல்ல மேலும் துர்காவின் முகம் சிவந்துவிட… அதை மறைக்க துர்கா மிகவும் சிரமப்பட்டாள்.

துர்கா வாணியை அடிக்கக் கையை ஓங்கியவள், “போடி… பொய் வேலையைப் பாரு” என்று சொல்ல…

“அம்மா இப்பவே ரொம்ப வெட்கப்படாதீங்க… அய்யா வந்து பாக்குற வரைக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க” என்று சொல்லிவிட்டுச் சமையல் அறைக்கு ஓடி விட..

அவளைப் பார்த்து வெட்கப்பட்டுக் கொண்டு கொண்டே வாசல் பக்கம் துர்கா திரும்ப…

அங்கே தான் கண்ட காட்சியை நம்பாமல் அப்படியே உறைந்து போய் துர்கா நின்றாள்.

வாசலில் ஆதி மிகவும் அதிகமாகக் குடித்துத் தள்ளாடிய படியே இருக்க…

குடித்திருந்த ஆதியைப் பார்த்துக் கூட துர்காவுக்குப் பெரிதாக அதிர்ச்சி இல்லை…

ஆனால் அவன் குடித்துவிட்டு சங்கவியின் தோளில் சாய்ந்து இருக்க… ஆதியின் கையைத் தான் தலைக்குச் சுற்றித் தோள் மீது போட்டு அவனைத் தாங்கிப் பிடித்தவாறு துர்காவைப் பார்த்து இளக்காரமாகச் சிரித்துக் கொண்டு நின்று இருந்தாள் சங்கவி.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured