EPI 223
சந்தோஷை பைக்கை நிறுத்த சொல்லி அவசரப்படுத்திய ராதா அவன் பைக்கை நிறுத்தி ஸ்டாண்ட் போடுவதற்குள் பைக்கில் இருந்து இறங்கி ரோடை கிராஸ் செய்து இருந்தாள்.
ஏய் எங்கடி இவ்வளவு அவசரமா போற என்று சாலையை கவனிக்காமல் சந்தோஷ் அவளை நோக்கி நடந்து செல்ல…
அவனை தாண்டி செல்ல வந்த ஒரு பைக்கின் மீது மோதி விட்டான் சந்தோஷ்.
மோதிய வேகத்தில் சந்தோஷின் கால் மீது அந்த பைக் ஏறி தடுமாறி பைக்கில் வந்தவர் கீழே விழ… சந்தோஷும் காலை பிடித்துக் கொண்டு அப்படியே தரையில் அம்மா என கத்தியபடி அமர்ந்து விட்டான்.
பைக்கில் வந்த நபர் கீழே விழுந்து இருக்க அவர் தட்டு தடுமாறி எழுந்து சந்தோஷிடம் வந்து சார் எதுவும் காயம் எதுவும் ஆயிடுச்சா? உங்களுக்கு எங்கேயும் வலிக்குதா? என்று கேட்க…
அதெல்லாம் ஒன்னும் இல்ல பாஸ் நான் தான் ரோட்டை சரியா கவனிக்காம வந்துட்டேன் நீங்க போங்க என்று சொல்ல…
பைக்கில் வந்த நபரும் சந்தோஷை ஒரு முறை நன்றாக பார்த்துவிட்டு அவனுக்கு எதுவும் இல்லை என்று பைக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
சாலையைக் கடந்து ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு இருந்த ராதா சந்தோஷின் சத்தம் கேட்டு திரும்ப, அவன் தரையில் காலை பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்க்கவும் பதறியவள் கையில் இருந்த ஐஸ்கிரீமை தூக்கி போட்டுவிட்டு நேராக சந்தோஷை நோக்கி ஓடி வந்தாள்.
யோவ் வாத்தி என்னயா ஆச்சு ஒழுங்கா ரோட்டை பார்த்து கிராஸ் பண்ணி வர மாட்டியா அப்படி என்ன அவசரம் உனக்கு என்று கேட்டபடி குனிந்து அவன் அருகில் அமர்ந்து காலை பார்க்க அவன் சுண்டு விரலில் லேசாக காயம் ஏற்பட்டிருந்தது.
இந்த சின்ன காயத்துக்கு தான் இப்படி உயிர் போற மாதிரி கத்துனியா நான் என்னமோ ஏதோ பதறி அடிச்சுட்டு வரேன் என்று உன்னால நான் வாங்குன ஐஸ்கிரீமெல்லாம் வீணா போச்சு என்று அவனிடம் கோபித்துக் கொள்ள…
ஏண்டி உன் புருஷன் மேல பைக் ஏறிட்டு போகுது… சின்ன காயமோ பெரிய காயமோ எப்படியோ காயம் ஆயிடுச்சு தானே ஏதாவது உனக்கு என் மேல அக்கறை இருக்கா என்று சந்தோஷ் கேட்டுக் கொண்டிருக்க…
அதற்குள் அவள் கையில் இருந்த கர்ச்சீப்பை கிழித்து அவன் விரலில் கட்டி இருந்தாள்.
பரவாயில்லையே உனக்கும் என் மேல அக்கறை இருக்கே என்று அவள் கட்டு போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து கேட்டான்.
அதெல்லாம் நிறையவே இருக்கு உனக்கு தான் தெரிகிறது இல்லை என்று அவள் எழுந்திருக்க போக…
ஏண்டி வழக்கமா சேலையை கிழிச்சு தானே கட்டுப்போட்டு விடுவாங்க நீ என்ன கர்ச்சீப்பை கிழித்து கட்டுப்போட்டு விடுற என்று கேட்டான் சந்தோஷ்.
எது இந்த இத்துனூண்டு காயத்துக்கு நான் என்னோட பட்டு சேலையை கிழிச்சு உனக்கு கட்டு போடணுமா? உன்னோட காயத்துக்கு இந்த கர்சிப்பே பெருசுதான். மூடிக்கிட்டு எழுந்துரு என்றால் ராதா.
வர வர என்ன மனுசனாவே நீ மதிக்க மாட்டேங்குற கொஞ்சம் கூட உனக்கு என் மேல அக்கறையே இல்லை என்றான் சந்தோஷ்.
யோவ் வாத்தி உன் மேல நான் அக்கறை இல்லாம எப்பயா நடந்து இருக்கேன். என்னமோ நான் உன்னை கொடுமை படுத்துற மாதிரி இல்ல பேசுற… என்றால் ராதா.
ஆமாண்டி பாரு என் காயம் எப்படி இருக்கு எனக்கு என்ன ஏதுன்னு பாக்காம சும்மா ஒரு பேருக்கு ஒரு கட்டு போட்டு விட்டுட்டு மறுபடி ஐஸ்கிரீம் வாங்கத் தானே நீ போற என்றான் சந்தோஷ்.
ஐஸ்கிரீம் வாங்க நடந்து சென்றவள் அப்படியே நின்று அவனை திரும்பிப் பார்த்து இப்ப என்ன நான் ஐஸ்கிரீம் வாங்க கூடாது அவ்வளவு தானே என்றவள் திரும்பி அவனிடம் வாயை கட்டி சரி வா வீட்டுக்கு போகலாம் என்று அவனை கை பிடித்து அழைத்தாள்.
ஏய் நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் போ உனக்கு என்ன புடிச்சிருக்கோ அதை வாங்கிட்டு வா அதுக்கப்புறம் நம்ம கிளம்பலாம் என்றான் சந்தோஷ் சிரித்தபடி.
எனக்கு தேவையே இல்ல நீ முதல்ல போலாம் வா… என்று அவனை இழுத்துக்கொண்டு நடக்க…
அவன் சுண்டு விரலில் தான் காயம் ஏற்பட்டு இருந்தது சாதாரணமாக நடப்பான் என இருவருமே நினைத்திருக்க, அவன் காலை எடுத்து ஒரு அடி தான் நடந்திருப்பான் அவ்வளவுதான் மீண்டும் காலை பிடித்துக் கொண்டு அப்படியே அம்மா என அலறியபடி தரையில் அமர…
அவனைத் தாண்டி செல்லப் போன ராதா மீண்டும் சந்தோஷ் கத்தவும் திரும்பி என்ன ஆச்சு வாத்தி ஏன் கத்துற என்று பதட்டமாக கேட்டாள்.
தெரியலடி… காலை தரையில ஊனவே முடியல ரொம்ப வலிக்குது என்றான் சந்தோஷ்.
குனிந்து அவன் காலை பார்த்தவள் ஒன்றும் காயம் ஆன மாதிரி தெரியலையே ஒருவேளை உள் காயம் எதுவும் ஆகி இருக்குமோ… என்று அவன் பாதத்திற்கு மேலே தொட…
அவள் தொட்ட இடம் சந்தோசத்திற்கு உயிர் போக வலிக்க மீண்டும் அம்மா என்று அலறினான்.
வாத்தி என்னய்யா இப்படி சத்தம் கத்துற அவ்வளவு வலிக்குதா? என்றால் அவனைப் பார்த்து வருத்தமாக.
ஆமாம் என்று சந்தோஷ் தலையை ஆட்ட…
இப்ப என்னய்யா பண்றது என்று யோசித்தவள் சரி வா நம்ம ஹாஸ்பிடல் போகலாம் என்றாள்.
எப்படி எனக்குத்தான் கால் வலிக்குது நான் எப்படி வண்டி ஓட்டுவது என்றான் சந்தோஷ்.
நீ மெதுவா என்னை பிடிச்சுகிட்டு எழுந்து வண்டி வரைக்கும் எப்படியாவது வந்துடு நான் வண்டி ஓட்டுறேன் நீ பின்னாடி உக்காந்துக்க என்றால் ராதா.
என்ன விளையாடுறியா நான் இப்பதான் ஒரு வண்டியை ஒரு பைக்ல இடிச்சு என் காலை நகர்த்தவே முடியல.. இதுல வேற நீ என் வண்டியை ஓட்டுறியா நான் உன் பின்னாடி உட்கார்ந்து வரதா? எங்கேயும் கொண்டு போயி வண்டியை விட்டுட்டா மொத்தமா என்னை முடிச்சு கட்டிட்டலாம்னு முடிவு பண்ணிட்டியா? என்றான் சந்தோஷ்.
ரொம்ப பேசாத ஒழுங்கா எழுந்திரு என்று அவன் முன்பு கையை நீட்ட…
அவள் கைப்பிடித்து மெதுவாக எழுந்தவன் தன் காலை லேசாக ஊன்றி மற்றொரு காலின் உதவியோடு அவன் பைக் வரை வந்து விட்டான்.
அவனால் அந்த காலை ஊன்றி சரியாக நிற்கவே முடியவில்லை அதை பார்த்த ராதா சந்தோஷை நினைத்து வருத்தப்பட்டாள். தான் அவசரப்பட்டு சாலையை கடந்து போகாமல் இருந்திருந்தால் தன்னை பார்த்துக் கொள்ள பின்னால் வந்த சந்தோஷிற்கு இந்த நிலை வந்திருக்காது என்று வருத்தப்பட்டவள், “நில்லு வாத்தி” என்று அவனை கை பிடித்து நிறுத்தியவள் சாலையை பார்க்க… தூரத்தில் ஒரு ஆட்டோ வந்தது. அதை கைநீட்டி நிறுத்தியவள் சந்தோஷை அந்த ஆட்டோவில் ஏற்றிவிட்டு “நீ முன்னாடி ஹாஸ்பிடல் போ… பின்னாடி பைக் எடுத்துட்டு வரேன்” என்றால் ராதா.
“ராதா என்ன விளையாடுறியா? நீ ஓட்டுறது ஒன்னும் சாதாரண சின்ன வண்டி கிடையாது இது புல்லட் உடைய வெயிட் தாங்கி வண்டி ஓட்டுவதே பெரிய விஷயம் அதுவும் இல்லாம நீ இதுவரைக்கும் என்னோட வண்டியை ஓட்டுனதே இல்லை எங்கேயும் விழுந்துட போற அதெல்லாம் ஒன்னும் இல்ல… வண்டி இங்கேயே நிக்கட்டும் நீயும் என் கூட ஆட்டோவுல வா நாம ஒண்ணாவே ஹாஸ்பிடல் போவோம். ஸ்ரீயை வரச்சொல்லி என்னோட வண்டியை எடுத்துக்க சொல்லலாம்” என்றான் சந்தோஷ்.
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீ முதலில் நான் சொல்றதை கேளு எனக்கு உன் வண்டியை ஓட்டி பழக்கம் இருக்கு… என்றவள் அவனை ஆட்டோவில் ஏற்றிவிட்டு அவன் பைக்கை சர்வ சாதாரணமாக ஸ்டாண்ட் எடுத்துவிட்டு ஏறி அமர… ஆட்டோவில் இருந்தபடி அவளை பார்த்தவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஆட்டோ கிளம்பிக் கொண்டு செல்ல…. ஆட்டோவின் பின்னால் வண்டியை ஸ்டார்ட் செய்து மெதுவாக ஓட்டி வந்தாள் ராதா. அவளை ஆச்சரியமாக பார்த்தபடியே ஆட்டோவில் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டே வந்த சந்தோஷ் எங்கே அவள் கீழே விழுந்து விடுவாளோ என்ற பதட்டத்தோடு ஆட்டோவில் சென்றான்.
ஹாஸ்பிடலுக்கு வந்து சேர வண்டியை நிறுத்திவிட்டு ஆட்டோவை கட் செய்தவள் அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்று டாக்டரிடம் காட்ட சந்தோசத்திற்கு பாதத்திற்கு மேலே இருக்கும் எலும்பு பிராக்சர் ஆகிவிட்டது. அவர் எழுந்து நடக்க எப்படியும் ஒரு 15, 20 நாள் ஆகிவிடும் என்று சொல்லிவிட்டார். லேசான பிராக்சர் தான் என்பதால் சீக்கிரமே குணமடைந்து விடுவார் ஆனால் அதுவரை அவர் காலை கீழே ஊனவே கூடாது என்று டாக்டர் சொல்ல..
ஏற்கனவே தன்னால்தான் அவனுக்கு காயம் ஆனது என்று கவலையில் இருந்த ராதாவிற்கு இப்போது தன்னால் அவன் கால் உடைந்துவிட்டதே என்று நினைத்து மிகவும் வருத்தப்பட்டாள். டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்துகளை எல்லாம் வாங்கிவிட்டு அவனுக்கு கட்டுப்போட்ட பின்பு அவனை பைக்கில் அமர வைத்து தன்னோடு அழைத்து வீட்டிற்கு வந்தாள்.
சந்தேஷை அவன் அறையில் ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு அவனுக்கு வேண்டியது எல்லாம் இருந்த இடத்திலேயே கொண்டு வந்து கொடுத்து அவனை நல்ல விதமாக கவனித்துக் கொண்டாள். அவனுக்கு சாப்பிட கொடுத்து மாத்திரைகளையும் கொடுத்து படுக்க வைத்து அவன் தூங்கிய பிறகு ஹாலில் வந்து அமர்ந்து கொண்டாள்.
ராதா நடந்ததை எல்லாம் ஸ்ரீயிடம் சொல்லி முடிக்க “என்னடி ராதா சொல்ற என் அண்ணாவிற்கு கால்ல பிராக்சர் ஆயிடுச்சா? கட்டு போட்டு இருக்கானா!!!” என்று ஆச்சரியமாக கேட்டவன் வேகமாக அவன் அருகில் சென்று பார்க்க சந்தோஷ் நன்றாக மாத்திரையின் உதவியில் உறங்கிக் கொண்டு இருந்தான்.
அவர்கள் அருகில் இருந்து வெளியே வந்த ஸ்ரீ ராதாவை பார்த்து “சரி அதுதான் அண்ணாவுக்கு கட்டுப்போட்டாச்சு எப்படியும் இன்னும் 10 15 நாள் சரியாயிடும்னு சொல்லி இருக்காங்க அப்புறம் ஏன் சோகமா இருக்க” என்றான் ஸ்ரீ.
“உன் அண்ணனுக்கு இப்படி ஆனதுக்கு காரணமே நான் தானே உன் அண்ணன் எவ்வளவு கம்பீரமா சுத்திட்டு வருவான். இன்னைக்கு என்னால கால் உடைந்து அவன் படுத்த படுக்கையில் இருக்கிறத என்னால பார்க்க முடியல ஸ்ரீ.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று மிகவும் மனம் வருந்தினாள் ராதா.
“ஐயோ ராதா பீல் பண்ணாத எல்லாம் சரியா போயிடும் அவன் சீக்கிரமா சரியாயிடுவான். நீ வேணா பாரு” என்று ராதாவை சமாதானம் செய்தான். அவன் சமாதானம் செய்த பிறகும் ராதா சோகமாக இருக்க “என்ன ஆச்சு நான் தான் அவனுக்கு சீக்கிரம் சரியாயிடும்னு சொல்றேன்ல… இன்னமும் ஏன் முகத்தை இப்படி சோகமா வெச்சி இருக்க.. பார்க்க சகிக்கல” என்றான் ஸ்ரீ.
“அது ஒன்னும் இல்லடா ஸ்ரீ நான் ஆசை ஆசையா ஐஸ்கிரீம் வாங்க போனேனா காசு கொடுத்து ஐஸ்கிரீம் வாங்குனேன் ஆனா உங்க அண்ணன் கீழே விழுந்தத பாத்துட்டு அதை கீழே போட்டுட்டேன். ஐஸ்கிரீம் வீணா போயிடுச்சுன்னு எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு” என்றாள்.
அவளை வித்தியாசமாக பார்த்த ஸ்ரீ “இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல ஒரு ஐஸ்கிரீமுக்கு நீ பீல் பண்ற அப்படித்தானே” என்றான். அவனைப் பார்த்து “ஈ…” என்று ராதா பல்லை காட்ட.. தலையில் அடித்துக் கொண்ட ஸ்ரீ… “ஒரு நிமிஷம் இரு வரேன்” என்று வெளியே பைக்கை எடுத்துக்கொண்டு சென்றவன், அவளுக்கு பிடித்த பிளேவர் ஐஸ்கிரீமை வாங்கிக் கொண்டு வந்து அவள் கையில் திணித்தவன் “இந்தா இத்தனையும் உனக்குத் தான் போய் உட்கார்ந்து நல்லா குடி…” என்று விட்டு தன்னறைக்குச் சென்றான்.
அவன் கையில் கொடுத்த ஐஸ்கிரீம் எல்லாம் பார்த்ததும் ராதாவின் முகம் சிறு பிள்ளை போல சந்தோஷத்தில் பிரகாசித்தது. நேராக அந்த ஐஸ்கிரீம்களை எல்லாம் எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்குச் சென்றவள், அங்கிருந்த சோபாவில் அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட ஆரம்பித்தாள்.
அப்போது அந்த அறையில் உறங்கிக் கொண்டிருந்த சந்தோஷ் மெல்லக் கண் விழித்துப் பார்க்க தன் அருகே அமர்ந்து ஐஸ்கிரீமை ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த ராதாவைக் கண்டான். “ஏய் என்னடி பண்ற?” என்று அவன் கேட்க, ராதா ஐஸ்கிரீம் வாயோடு அவனைப் பார்த்துச் சிரிக்க, அங்கு வந்த ஆதி மற்றும் துர்கா ஆகியோரும் அவர்கள் நிலையை கண்டு சிரித்தனர்.
