EPI 234
ஆதி, துர்கா அவள் சூட்டிங் விஷயமாக டென்மார்க் வந்திருக்க… அவர்களுடன் ஸ்ரீயும், ரியாவும் வந்திருந்தனர்.
காரில் இருந்து இறங்கிய ஆதியும் துர்காவும் பேசிக்கொண்டே தங்கள் வீட்டிற்குள் நுழைய… அவர்களை வரவேற்பதற்காக வாசலில் நின்றிருந்தவர்களைப் பார்த்து ஆதியும் துர்காவும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
ஆதியும் துர்காவும் டென்மார்க் வருவதற்கு முன்பே கதிரிடம் சொல்லி, தாங்கள் டென்மார்க் செல்லப் போவதாக போதியும் மாதவியும் ஏற்கனவே டென்மார்க் வந்து விட்டனர்.
ஆதி, துர்கா மாலை வந்திருக்கிறார்கள் என்றால், போதியும் மாதவியும் மதியமே வந்து விட்டிருந்தனர்.
இருவரையும் பார்த்த ஆதிக்கும் துர்காவுக்கும் நம்ப முடியவில்லை. துர்கா வேகமாக மாதவியிடம் வந்தவள் அவள் கையைப் பிடித்தவாறு போதியைப் பார்த்து, “நீங்க ரெண்டு பேரும் எப்போ இங்கே வந்தீங்க… எங்க ரெண்டு பேர் கிட்டயும் சொல்லல, என்ன சர்ப்ரைஸா?” என்று கேட்டாள்.
போதியும் சிரித்துக் கொண்டே, “ஆமாம் துர்கா, நானும் மாதவியும் ஹனிமூன் போகலாம் என்று முடிவு செய்ததும் எங்கே போறதுன்னு எங்களுக்குள்ள ஒரு வாக்குவாதமே நடந்துச்சு.”
“நான் சுவிட்சர்லாந்து போலாம்னு சொன்னேன். இவள் அங்கெல்லாம் எதுவும் வேண்டாம் சிம்லா போகலாம் என்று சொன்னாள்.”
“எங்க ஹனிமூன் பத்தி பேசிட்டு இருக்கும்போது தான் கதிர் எனக்கு கால் பண்ணி இருந்தான். டென்மார்க்கிற்கு நீயும் ஆதியும் மாடலிங் விஷயமா வர்றதாகவும், என்னோட கம்பெனி சார்பாக எனக்கும் சில வேலைகள் அங்கே இருக்கிறதுனால எனக்கு எப்போ டைம் இருக்கோ அப்போ என்னையும் டென்மார்க் போய் வரச் சொல்லி கதிர் சொன்னான்.”
“உடனே நீங்க எப்போ இங்க வர்றீங்களோ அப்பவே நானும் டென்மார்க் வர்றதா கதிர் கிட்ட சொல்லிட்டேன். ஆனா அதை உங்ககிட்ட சொல்ல வேண்டாம், சர்ப்ரைஸா வச்சுக்கலாம்னு சொல்லி இருந்தேன். அதனாலதான் நாங்க ரெண்டு பேரும் டென்மார்க்கிற்கே ஹனிமூன் வரலாம்னு டிசைட் பண்ணி இங்கே வந்துட்டோம் உங்க கிட்ட சொல்லாமலே,” என்றான் போதி.
அவன் சொன்னதைக் கேட்ட மாதவியும், “ஆமாம் அக்கா, அவரு நீங்களும் ஆதி சாரும் இங்கே வரீங்கன்னு சொன்னதும் எதை பத்தியும் யோசிக்காம டென்மார்க் தான் ஹனிமூன் போறோம்னு முடிவு பண்ணிட்டாரு,” என்றாள் மாதவி.
அவள் குரலில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்த துர்கா, “ஏன் போதி, அவளுக்குத் தான் சிம்லா போகணும்னு ஆசையா இருக்குன்னு சொன்னாளே… நீ அங்க மாதவியைக் கூட்டிட்டுப் போயிட்டு அதுக்கப்புறம் டென்மார்க் வர வேண்டியதுதானே? உன்னை யார் இப்பவே வரச் சொன்னது?” என்று கேட்டாள்.
“இல்ல துர்கா, நீங்க ரெண்டு பேரும் டென்மார்க் வரீங்கன்னு கதிர் சொன்னதும் எனக்கு வேற எதுவும் யோசிக்கத் தோணல, உடனே நாங்களும் கிளம்பி இங்கே வந்துட்டோம்,” என்றான்.
இவர்கள் நால்வரும் பேசிக் கொண்டிருப்பதைச் சற்று தள்ளி நின்று கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ, ரியாவைப் பார்த்து, “உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி இருந்தா இவங்கள மாதிரியே நம்மளும் இங்கே வந்து ஹனிமூன் கொண்டாடி இருக்கலாம் இல்ல?” என்று ஆசையாக கேட்டான்.
“டேய்… இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவரா இல்ல? நீயும் நானும் காதலிச்சு கிட்டத்தட்ட மூணு மாசம் தானே இருக்கும், அதுக்குள்ள என்னடா கல்யாணத்துக்கு அவசரம்? கொஞ்ச நாள் காதலிச்சிட்டு அதுக்கப்புறம் மெதுவா கல்யாணம் பண்ணிக்கலாம் டா…” என்றாள் ரியா.
“சரி சரி, எனக்கும் நீ சொல்றது புரியுது. முதல்ல நம்ம ஜாலியா லவ் பண்ணுவோம், அதுக்கப்புறம் மெதுவா கல்யாணம் பண்ணிக்கலாம் சரியா?” என்றவன், “நாம இப்ப போய் நம்ம வந்த வேலையைப் பார்ப்போம்,” என்று சொல்லிக் கொண்டு கையில் லக்கேஜ்களுடன் அவர்கள் இருவரும் உள்ளே வர… அவர்கள் இருவரையும் துர்கா, போதிக்கும் மாதவிக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.
இன்று அவர்களுக்கு என்று ரியாவிற்கும் ஸ்ரீயிற்கும் தனித்தனியாக ரூமை ஒதுக்கி கொடுத்த துர்கா, போதிக்கும் மாதவிக்கும் ஒரு ரூமையும், வழக்கம் போல ஆதியின் ரூமுக்கு அவர்களும் சென்றனர்.
சற்று நேரத்திலேயே பிரஷ் ஆகிவிட்டு அனைவரும் ஹாலுக்கு வர… வீட்டில் வேலை செய்யும் வேலையாள் வந்து அவர்களுக்கு இரவு உணவு தயாரிக்கவா என்று கேட்க…
“இல்ல எங்களுக்கு வேண்டாம். நாங்க எல்லாருமே வெளியே போறோம், நைட் வர லேட் ஆகும். அதனால நீங்க உங்களுக்கு அளவா செஞ்சு சாப்பிட்டுக்கோங்க,” என்று துர்கா சொல்ல…
உடனே ரியா துர்காவிடம் வந்து, “அக்கா, நீங்க எல்லாரும் ஒண்ணா வெளியே போயிட்டு வாங்க. நானும் ஸ்ரீயும் தனியா வெளியே போயிட்டு வருவோமே…” என்றாள் தயக்கத்துடனே.
ஆதி ஏற்கனவே ரியாவும் ஸ்ரீயும் காதலிக்கும் விஷயத்தைக் கதிர், விக்கி மூலம் தெரிந்து கொண்டிருந்தவன், அதை துர்காவிடம் சொல்லி இருந்தான்.
துர்காவும், “சரி, ரெண்டு பேரும் ரொம்ப நேரம் வெளியே சுத்தாம சீக்கிரமா வீட்டுக்கு வந்துடனும்,” என்றவள், ஸ்ரீயைப் பார்த்து, “உன்ன நம்பித்தான் இவளை அனுப்பி வைக்கிறேன். ஒழுங்கா பத்திரமா பாத்துக்க… ஏதாவது அத்துமீறி அவகிட்ட எதுவும் செஞ்சேன்னு எனக்கு தெரிஞ்சது, உன்னை இங்கேயே வெட்டி கண்டம் துண்டமாகப் போட்டு விடுவேன்!” என்று ஸ்ரீயை எச்சரித்தாள்.
“அக்கா, என்ன நீங்க என்னை பார்த்து இப்படி எல்லாம் பேசுறீங்க? நான் அவ்வளவு ஒன்றும் மோசமானவன் கிடையாது. என்னை நம்பி வந்த பொண்ணை நான் எதுவும் செய்திட மாட்டேன்,” என்று சற்று டென்ஷனாகி ஸ்ரீ கூற…
“எனக்கு உன்னைப் பத்தி நல்லா தெரியும் ஸ்ரீ. நான் அப்படி சொன்னால் நீ என்ன ரியாக்ட் பண்றேன்னு பார்க்கிறதுக்காகத் தான் அப்படி வேணும்னே பேசினேன். உன்னை ஹர்ட் பண்ணி இருந்தா சாரி…” என்றாள் துர்கா.
“சரிக்கா பரவாயில்ல, நான் எதுவும் நினைக்கல,” என்றவன், ரியாவைப் பார்த்து, “போகலாமா?” என்று தலையாட்ட… ரியாவும் தயங்கியபடியே அனைவரிடமும் சொல்லிவிட்டு ஸ்ரீயுடன் டென்மார்க்கைச் சுற்றிப் பார்க்க வெளியே கிளம்பினாள்.
❤️
வெங்கடாசலம் – விசாலாட்சியின் 60-வது திருமணத்திற்காக ஏற்பாடுகள் எல்லாம் மிகவும் ஜரூராக கதிர் – கீர்த்திகா தலைமையில் ஏற்பாடு ஆகிக் கொண்டே இருந்தது.
அபியும் அவள் அம்மா மரகதமும் தங்கள் ரூமை விட்டு அதிகமாக வெளியே வருவதில்லை. விசாலாட்சியும் அவர்கள் வந்ததிலிருந்து அதிகமாக வெளியில் வராமல் தன்னறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்.
செண்பகத்திற்கும் மரகதத்திற்கும் முதலில் இருந்தே நல்ல பழக்கம் உள்ளதால், அவர் மட்டும் அடிக்கடி மரகதத்திடமும் அபியிடமும் சென்று பேசி வருவார். மற்றபடி மிகவும் ஒட்டுதலோடு அவர்களுடன் செண்பகம் பேசுவதில்லை.
இன்று நகைக் கடைக்குச் சென்று விசாலாட்சிக்கு மாங்கல்யமும் தாலிக்கொடியும் எடுக்கப் போவதாக வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். செண்பகம் தான் வரவில்லை என்று முன்பு ஒதுங்கிக் கொண்டதால், மற்றவர்கள் அனைவரும் கிளம்பிச் செல்வதாக முடிவு செய்யப்பட்டு இருந்தது.
ஆதி இல்லாததால் வெங்கடாசலம் ஆபீஸ் வேலைகளைத் தான் பார்த்துக் கொள்வதாக அவர் சென்றுவிட, இவர்களை அழைத்துச் செல்ல கதிர் வந்து இருந்தான்.
கதிர், கீர்த்திகா, துரை, கனகா, விசாலாட்சி இவர்கள் ஐவர் மட்டும் தாலிக்கொடி எடுக்க நகைக் கடைக்குச் சென்றனர். சங்கவியை தங்களுடன் அழைக்கவில்லை. சொல்லப் போனால் அவர்கள் தாலிக்கொடி எடுக்கக் கடைக்குச் செல்கிறார்கள் என்று சங்கவிக்குத் தெரியாது.
அவளைப் பற்றி விசாலாட்சிக்கும் கதிருக்கும் ஏற்கனவே தெரிந்திருந்ததால், அவள் வராமல் இருப்பதே நல்லது என அவர்கள் இருவரும் நாசுக்காக மற்றவர்களிடம் சொல்லி சங்கவியை ஒதுக்கிவிட்டு இவர்கள் மட்டும் சென்றனர்.
இவர்கள் அனைவருமே கடைக்குச் சென்றுவிட, வீட்டு வேலை ஆட்களும் மரகதம், அபி, சங்கவி மற்றும் செண்பகம் இப்போது வீட்டில் இருந்தனர்.
செண்பகம் ஹாலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டு இருக்க… நீண்ட நேரம் தன்னறைக்குள்ளேயே இருந்த சங்கவி வெளியே வந்து ஹாலில் இருந்த செண்பகத்தைப் பார்த்தவள், “என்னம்மா இங்க தனியா உட்கார்ந்து இருக்கீங்க? வீட்டில் இருக்கிறவர்கள் எல்லாம் எங்கே?” என்று கேட்டாள்.
“வா சங்கவி, இப்போதான் தூங்கி எழுந்து வந்தியா… அண்ணியும் மத்தவங்களும் அண்ணிக்குத் தாலிக்கொடி எடுக்கக் கடைக்கு போயிருக்காங்க,” என்றார் செண்பகம்.
“என்ன சொல்றீங்க? தாலிக்கொடி எடுக்க அவங்க மட்டும் போயிருக்காங்களா? ஏன் நீங்க அவங்க கூட போகலையா?” என்று கேட்டாள் சங்கவி.
“நான் எப்படி சங்கவி அங்கே போறது? அதுவும் அண்ணிக்கு அறுபதாம் கல்யாணத்துக்காகத் தாலிக்கொடி எடுக்கப் போறாங்க. அங்கே நான் போனா சரியா இருக்காது,” என்று தன் கணவன் இல்லாமல் இருப்பதை மறைமுகமாகச் சங்கவியிடம் சுட்டிக்காட்டினார்.
“இதுல என்னம்மா இருக்கு? நீங்களும் கூட போயிருக்க வேண்டியது தானே?” என்று கேட்டாள் சங்கவி.
“நீ சொன்னது போலத்தான், அண்ணியும் கனகாவும் கூட என்னை அவங்க கூட கடைக்கு வரச் சொல்லி கூப்பிட்டாங்க. ஆனா எனக்குத்தான் அங்கே எல்லாம் போக விருப்பமில்லை. அதனாலதான் நான் வரலைன்னு சொல்லிட்டேன்,” என்றார் செண்பகம்.
“சரி நீங்க தான் வரலைன்னு சொன்னீங்க… என்னையாவது கூப்பிட்டு இருக்கலாமே, நானாவது அவங்க கூட போயிட்டு வந்திருப்பேனே,” என்றாள் சங்கவி.
“கனகா கூட கடைக்குக் கிளம்பும்போது உன்னை கேட்டா. நான் தான் நீ தூங்கிட்டு இருக்க, அதனால நீங்க மட்டும் போயிட்டு வாங்கன்னு அவங்களை அனுப்பி வைத்தேன்,” என்றார் செண்பகம்.
‘ம்கூம்… இந்த அம்மா தான் போகலைன்னா என்னையாவது அவங்க கூட அனுப்பி வச்சிருக்கலாமே, என்னை விட்டுட்டு இவங்க மட்டும் எப்படி சந்தோஷமா வெளியே போயிட்டு வரலாம்’ என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்ட சங்கவி, பிறகு செண்பகத்திடம் எதுவும் கேட்காமல் அவளும் ஹாலில் அமர்ந்து டிவி ஆன் செய்து பாட்டு கேட்க ஆரம்பித்தாள். வீட்டில் யாரும் இல்லை என்பதால் சங்கவி மிகவும் சத்தமாகப் பாட்டு கேட்டுக் கொண்டு இருக்க…
ஹாலில் சங்கவி பாட்டு வைத்த சத்தம் அபி – மரகதம் இருவரும் இருக்கும் அறைக்குள் வரை கேட்கவும், ‘யார் இப்படி சத்தமாகப் பாட்டு கேட்கிறார்கள்’ என்று ரூமிற்குள் இருந்து அவர்கள் இருவரும் வெளியே வந்து ஹாலில் பார்க்க… அங்கே செண்பகமும் சங்கவியும் ஹாலில் அமர்ந்திருக்க, சங்கவி பாட்டு கேட்டுக் கொண்டு இருந்தாள், செண்பகம் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார்.
உடனே மரகதம் அபியிடம், “அங்க பாரு… என்னமோ அவங்க ரெண்டு பேருக்கும் இதுதான் சொந்த வீடு மாதிரி எவ்வளவு உரிமையா உட்கார்ந்து எவ்வளவு சத்தமா வச்சு பாட்டு கேட்டுட்டு இருக்காங்கன்னு.”
“நீ தான் இருக்கியே வந்ததிலிருந்து ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்குற… அந்த சங்கவி தான் உன் கிட்ட நல்லா பேசி பழகுறாளே… அவளையாவது பேசி கொஞ்சம் தாஜா பிடித்து வைத்துக்கொண்டால் தானே நம்ம வந்த வேலை கொஞ்சமாவது நமக்கு சாதகமாக நடக்கும்,” என்றார் மரகதம்.
“அம்மா நீங்க அதைப் பத்தி எல்லாம் ஒரி பண்ணிக்காதீங்க… நம்ம வந்த வேலை சுலபமா முடிய வாய்ப்பு அதிகமா இருக்கு, எந்த பிரச்சனையும் வராது,” என்று அபி சொல்ல…
“என்ன அபி அப்படி சொல்ற? நம்ம வந்த வேலை எப்படி எந்த பிரச்சனையும் இல்லாம சுமுகமாக முடியும்?” என்று கேட்டார்.
“ஆமாம்மா, அன்றைக்கு நாம் ஷாப்பிங் செய்ய சங்கவி கூட கடைக்கு போயிருந்தோமே ஞாபகம் இருக்கா?” என்றாள்.
“நம்ம இங்க வந்த மறுநாள் ஷாப்பிங் போனோமே அப்போ கேட்கிறாயா?” என்றார் மரகதம்.
“ஆமாம், அப்போதான் நம்ம ஷாப்பிங் போயிருந்தப்போ நீங்க ட்ரையல் ரூம்ல டிரஸ் போட்டுப் பார்க்க போயிட்டீங்க. அப்ப நானும் சங்கவியும் இந்த வீட்டில் இருக்கிறவங்களைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம். சங்கவிக்கும் இங்கே இருக்கிறவங்களை யாரையும் சுத்தமா பிடிக்கல. அவளும் ஏதோ ஒரு பிளானுக்காக தான் இந்த வீட்டில் இருக்கிறதா சொன்னா,” என்று அவள் எதற்காக இங்கே இருக்கிறாள் என சங்கவி அபியிடம் சொன்னது அனைத்தையும் மரகதத்திடம் அபி கூறினாள்.
அபி சங்கவியைப் பற்றி சொன்னதைக் கேட்ட மரகதம் வாயைப் பிளந்தவர், “இவ சரியான ஆள் தான் போல, எப்படி எல்லாம் பிளான் போட்டு காய் நகர்த்தப் பார்க்கிறா பாத்தியா? இவகிட்ட இருந்து நிறைய கத்துக்க வேண்டியது இருக்கு,” என்று சொன்னவர், “சரியாவே அப்போ நீ அவகிட்ட அப்போ அப்போ பேசி கொஞ்சம் நட்பா பழகி வச்சுக்க, பின்னாடி நமக்கு எப்பவாவது அவ யூஸ் ஆவா,” என்றார்.
“சரி மம்மி… அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க, நான் போய் கொஞ்ச நேரம் சங்கவி கூடவும், செண்பகம் அத்தை கூடவும் பேசிட்டு வரேன்,”என்றவள் சங்கவியைக் காணச் சென்றாள்.
