Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 235

உன் ரகசிய ரசிகை நான் 235

by Layas Tamil Novel
169 views

EPI 235

ஆதி, துர்கா, போதி, மாதவி நால்வரும் தனியாக டென்மார்க்கைச் சுற்றிப் பார்க்க வெளியே செல்ல… ரியாவும், ஸ்ரீயும் தனியாகச் சென்றனர்.

ஸ்ரீயுடன் கைகோர்த்த படி சாலையில் நடந்து சென்ற ரியா, அங்கே இருந்த அழகழகான கட்டிடங்களையும், இயற்கைக் சூழ்நிலைகளையும் ரசித்தவாறே நடந்து சென்றாள்.

தன்னைச் சுற்றி இருக்கும் இடத்தையே ரசித்துக்கொண்டு நடந்து செல்ல, ஸ்ரீயோ தன் கையோடு கைகோர்த்து நடந்து செல்லும் ரியாவை ரசித்தபடி அவள் பின்னால் சென்றான்.

ஸ்ரீயுடன் எதையோ பேசிக்கொண்டு வந்த ரியா, “டேய் ஸ்ரீ, அதோ அங்க பாரு அந்த கடையில இருக்க பூவெல்லாம் எவ்வளவு அழகா இருக்குன்னு… நம்ம ஊர்ல எல்லாம் இந்த மாதிரி பூவைப் பார்க்கவே முடியாது இல்ல?” என்று கேட்டாள்.

அவள் பேசுவதைக் கேட்டு ஸ்ரீ எந்த பதிலும் பேசாமல் அமைதியாக வருவதை கவனித்தவள், திரும்பி அவன் என்ன செய்கிறான் என்று பார்க்க… அவள் என்ன பேசினாள் என்று கூடப் புரிந்து கொள்ளாத அளவிற்கு ரியாவையே ரசித்துக்கொண்டு நின்றிருந்தான் ஸ்ரீ.

தன்னையே இப்படிக் கண்ணிமைக்காமல் பார்ப்பதைக் கவனித்த ரியாவிற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. வெட்கப்பட்டுக்கொண்டே ஸ்ரீயின் தோளில் அடித்த ரியா, “டேய் என்னடா பண்ணிட்டு இருக்க? இப்படி என்னைக் கண் சிமிட்டாமல் பார்த்து என்னை வெட்கப்பட வைக்காத… எனக்கு ஒரு மாதிரியா இருக்கு,” என்று தரையைப் பார்த்து அப்படியே கூறினாள்.

அவள் வெட்கப்பட்டுத் தலை குனிந்து பேசுவதை ரசித்த ஸ்ரீ, “அங்க இருக்கிற பூவை விட… நீ ரொம்ப அழகா இருக்க, அதனாலதான் நான் உன்னையே ரசிச்சிட்டு வந்தேன்,” என்று ஸ்ரீ சொல்ல…

அவன் சொல்வதைக் கேட்டுத் தலை நிமிர்ந்து ஸ்ரீயைப் பார்த்த ரியா, “ரொம்ப ஓவரா தான் ஐஸ் வைக்கிற… போடா!” என்று செல்லமாக அவன் மார்பில் குத்திவிட்டு அங்கிருந்து ரியா ஓடப் போக…

அவள் கையைச் சட்டெனப் பிடித்தவன், “நீ இப்படி வெட்கப்படாதே… ரொம்ப அழகா இருக்க உன்னை இப்படிப் பார்க்க,” என்று சொல்ல…

“சீ போடா…” என்றவள் அந்தப் பூக்கள் நிறைந்திருந்த கடைக்கு உள்ளே ஓடியவள், “எனக்கு இங்கே இருக்கிற பூ எல்லாமே வேணும் வாங்கித் கொடு…” என்று கேட்டாள்.

அவள் கேட்டதற்கு மறுப்புச் சொல்லாமல் சிரித்தபடியே கடைக்குள் நுழைந்த ஸ்ரீ, அங்கிருந்த அனைத்துப் பூக்களையும் அவளுக்கு வாங்கிக் கொடுத்தான். அவள் கை நிறைய அனைத்துப் பூக்களையும் சேர்த்து ஒரு பெரிய மலர்க்கொத்தாகச் செய்யச் சொல்லி, அதை வாங்கி அவளிடம் கொடுத்த ஸ்ரீ, “இப்போ சந்தோஷமா?” என்று கேட்டான்.

“நான் ரொம்ப ஹேப்பி டா!” என்று ரியா சொல்ல…

“என்ன வேணா சொல்லு… இத்தனை பூவை நீ கையில வச்சிருக்க… ஆனா இந்த பூவுக்கு முன்னாடி நீயும், உன்னோட வெட்கப்படுற முகமும் தான் ரொம்ப அழகா இருக்கு,” என்றான் அவளை ரசித்தபடியே. அவன் சொல்வதைக் கேட்டு ரியா மேலும் வெட்கப்பட…

ஸ்ரீ திடீரென ரியாவின் கையில் இருக்கும் மலர்க்கொத்துக்களைப் பார்த்துப் பாடுவது போல, அவள் மேனியையும் அவளைப் பற்றியும் சில வரிகளைப் பாட ஆரம்பித்தான்:

“பூவே உந்தன் மேனியில் ஏதோ ஒரு வாசனை… நீயும் கூட காதல் கொண்டாயோ?”

இதைச் சற்றும் எதிர்பாராத ரியா, இத்தனை பேர் முன்னிலையில் தன்னை பார்த்து அழகாகப் பாடும் ஸ்ரீயைப் பாடுவதை நிறுத்தத் தோன்றாமல் அவனை ரசித்தபடி நின்று இருந்தாள். அவன் பாடி முடித்து அவள் முன்பு காலை மண்டியிட்டு கைகள் இரண்டையும் விரித்தபடி ரியாவை பார்த்து சிரித்துக் கொண்டு இருக்க…

அதுவரை அவன் பாடியதைச் சுற்றி இருந்தவர்கள் கேட்டுவிட்டு, அவன் பாடி முடித்ததைப் பார்த்ததும் அனைவரும் ஒருசேரக் கைதட்டி அவர்கள் இருவரையும் பார்த்தனர். அப்போதுதான் இத்தனை பேர் முன்னிலையில் சிறிதும் யோசிக்காமல் ரியாவை ரசித்துப் பாடியதை நினைத்து வெட்கமடைந்த ஸ்ரீ, வேகமாகத் தரையில் இருந்து எழுந்தவன் அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடினான்.

அந்த இடத்தை விட்டுச் சிறிது தூரம் தள்ளி வந்த ஸ்ரீ, ரியாவைப் பார்த்து, “சாரிடி… ஏதோ உன்னை இந்தப் பூவோட சேர்த்துப் பார்க்கிறப்போ நீ ரொம்ப அழகா இருந்தியா… அதனாலதான் உணர்ச்சி வசப்பட்டு நம்மைச் சுத்தி யாரு இருக்காங்கன்னு கூட யோசிக்காமல் பாடிட்டேன்,” என்று ஸ்ரீ கூற…

“இதுக்கு எதுக்குடா சாரி சொல்ற? நீ ரொம்ப அழகாதான் பாடின… எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது,” என்று ரியா கூறினாள்.

தன் பாடலை ரசித்த ரியாவைப் பார்த்துச் சந்தோஷப்பட்ட ஸ்ரீ, அவள் கையைப் பிடித்து வெடுக்கெனத் தன்னருகில் இழுக்க… ரியா அவன் மார்பில் மோதி நின்றாள். அவன் மீது மோதியதில் இருவர் உடலும் உரசிக்கொள்ள… இருவர் உடலிலும் திடீரென மின்சாரம் பாய்ந்தது போல இருவருக்கும் தோன்றியது. ரியா படபடக்கும் விழிகளோடு வெட்கப்பட்டுக் கொண்டே நிமிர்ந்து ஸ்ரீயைப் பார்க்க…

தன் மார்பின் மீது ரியாவின் மார்பு மோதி உரசிக் கொண்டு நின்று, அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத் தன்னைப் பார்ப்பதைக் கவனிக்கவும் அவனுக்கும் மூச்சுவிடச் சிரமமாக இருப்பது போல ஆகிவிட்டது. வேக மூச்சுகளாக எடுத்த ஸ்ரீ, ரியாவின் தாடையைப் பிடித்து லேசாக மேலே நிமிர்த்தியவன், குனிந்து அவள் இதழில் முத்தமிட்டான்.

ஸ்ரீ இப்படித் திடீரென முத்தமிட்டதும் அதிர்ச்சியான ரியா, தன் கையில் இருந்த பெரிய மலர்க்கொத்தை அப்படியே தரையில் நழுவவிட்டாள். ஸ்ரீ முதல்முதலாகக் கொடுக்கும் முத்தத்தில் தன்னை மறந்து அவன் கைக்குள் அடைந்து கிடந்தாள் ரியா. எங்கே இருக்கிறோம் என்று கூட உணராமல் இருவரும் நீண்ட நேரம் முத்தத்தில் மூழ்கி இருக்க…

அப்போது திடீரென அவர்கள் இருந்த இடத்திற்கு அருகில் ஏதோ சத்தம் கேட்கவும், அதில் சுயம் பெற்ற இருவரும் சட்டென்று ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து நின்றனர். ரியா மூச்சுவிடச் சிரமப்பட்டுக் கொண்டே ஸ்ரீயைப் பார்க்க… அவனும் அதே நிலையில் தான் ரியாவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளை நேருக்கு நேராகப் பார்க்க ஸ்ரீக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. ரியாவின் அனுமதி இன்றி இப்படி அவளுக்கு முத்தம் கொடுத்ததால் தன்னைப் பற்றி அவள் என்ன நினைப்பாளோ என்று மிகவும் சங்கடப்பட்டான் ஸ்ரீ. எப்படி அவசரப்பட்டுத் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிட்டோமே என்று ஸ்ரீ தன்னையே மனதிற்குள் திட்டித் தீர்த்துக் கொண்டு இருக்க…

இங்கு ரியாவோ, ஸ்ரீ தன்னிடம் எதுவும் பேசுவான் என்று அவனையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள். அவன் எதுவும் பேசாமல் ரியாவைப் பார்க்கச் சங்கடப்பட்டுக்கொண்டு தன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொள்ள… அவன் முன்பு வந்து ரியா ஸ்ரீயின் முகத்தைப் பிடித்துத் தன்னை பார்க்குமாறு திருப்பியவள், “நீ எதை நினைச்சும் மனசு போட்டு வருத்திக்காத… நான் உன்னைத் தப்பா எதுவும் நினைக்கல,” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்க்காமல் திரும்பி முன்னே நடந்து செல்ல…

ரியா தன் மீது கோபித்துக் கொள்ளவில்லை என்பதை உணர்ந்த ஸ்ரீ, அவள் பின்னாலே சென்றவன், “அப்போ நான் உனக்கு முத்தம் கொடுத்தது உனக்கு பிடித்திருந்ததா?” என்று கேட்டபடி அவள் பின்னால் ஓடினான்.

“டேய் என்னடா இப்படி லூசு மாதிரி கேள்வி கேட்டுட்டு இருக்க? உனக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா?” என்று அவன் முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டே ரியா தன் நடையை வேகப்படுத்தினாள்.

“நான் ஏன் வெட்கப்படணும்? நான் கல்யாணம் பண்ணிக்கப் போற என்னோட காதலிக்குத் தானே முத்தம் கொடுத்தேன். வேறு யாருக்கும் இல்லையே!” என்று கேட்டுக் கொண்டே அவள் பின்னால் ஓடினான்.

“அதுக்காக இப்படியா வெளிப்படையா பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு கேட்பியா?” என்றவள் நிற்காமல் செல்ல… “ஏய் இப்ப எதுக்கு நீ இவ்வளவு வேகமா போற? மெதுவா போடி!” என்று அவள் பின்னால் ஸ்ரீ செல்ல… “ம்ஹும்… முடியாது போடா!” என்றபடி ரியா ஓட… அவள் கீழே போட்ட மலர்க்கொத்தைக் கையில் ஏந்தியபடி ரியா வெட்கப்பட்டுத் தன்னைப் பார்க்காமல் செல்வதைப் பார்த்து ரசித்தபடி சென்றான் ஸ்ரீ.

❤️

அபியும் மரகதமும் வெங்கடாசலம் – விசாலாட்சியின் அறுபதாம் திருமணம் நடைபெறும் வேளையில் அவர்கள் வீட்டிற்கு வந்து தங்கி இருக்க… அங்கிருக்கும் யாருக்கும் பிடிக்கவில்லை, சங்கவியைத் தவிர. அவர்கள் வந்ததிலிருந்து சங்கவி அபியுடன் நெருக்கமாகிவிட… இதைப்பார்த்த கீர்த்திகாவிற்கும் மற்றவர்களுக்கும் சங்கவியின் மீது ஆத்திரமாக வந்தது. ஆனால் அவளை எதுவும் சொல்ல முடியாமல் செண்பகத்திற்காகப் பொறுத்துக்கொண்டு சென்றனர்.

அறுபதாம் திருமணத்திற்காக ஷாப்பிங் செய்வதற்குச் சங்கவியை விட்டுவிட்டு அனைவரும் கடைக்குச் சென்றிருந்தது சங்கவிக்கு எரிச்சலைத் தந்தது. கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் ஜரூராக நடந்து கொண்டு இருந்தது, ஆனால் இதையெல்லாம் பார்த்துச் சங்கவியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

இந்தத் திருமணத்தில் ஏதேனும் குழப்பம் செய்ய வேண்டும் என்று யோசித்தவள், அபியும் மரகதமும் அந்த வீட்டிற்கு வரவும் அவர்களை வைத்தே அடுத்து என்ன செய்யலாம் என்று காய் நகர்த்த ஆரம்பித்து இருந்தாள். அவர்கள் இருவரும் சங்கவியுடன் சேர்ந்து கொண்டு இந்தத் திருமணத்தில் தங்களுக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்பதில் ஆர்வமாக இருந்தனர்.

இவர்கள் இருவரையும் வீட்டில் இருந்த மற்றவர்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. செண்பகம் மட்டும் அவ்வப்போது வந்து மரகதத்துடனும் அபியிடமும் பேசிச் செல்வார். இதைப் பார்த்த கனகாவும் விசாலாட்சியும் செண்பகத்திடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. ஏனென்றால் மரகதமும், செண்பகமும் சிறுவயதிலிருந்து மிகவும் நெருங்கிய தோழிகள்.

செண்பகத்தின் தோழி என்பதால் தான் வெங்கடாசலம் மரகதத்தை திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆனால் மரகதம் வெங்கடாசலத்துடன் வாழப் பிடிக்காமல் பிரிந்து செல்வார் என்று செண்பகமும் நினைக்கவில்லை. அதனால் அவருடன் பேசுவதையே முற்றிலும் தவிர்த்து இருந்தார் செண்பகம். இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தங்கள் வீட்டிற்கு மரகதம் தன் மகள் அபியுடன் வந்திருக்கவும், செண்பகம் மற்றவர்களைப் போல இவர்களை ஒதுக்கி வைத்துவிட்டால் நன்றாக இருக்காது என்று நினைத்து அவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழகினார்.

அதை இவர்கள் இருவரும் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டனர். செண்பகத்தை முன்னிறுத்தியே அவர்கள் வீட்டில் அனைத்து வேலைகளையும் தங்களுக்கு ஏற்பச் சாதித்துக் கொண்டனர் மரகதமும் அபியும்.

❤️


You may also like

1 comment

S joshna December 23, 2025 - 3:33 pm

Sangavi problem panrathu pathathunu ippo ivunga vera😐😒 next episode podunga please sis 🥺🫂💋

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured