EPI 251
வெங்கடாசலம் விசாலாட்சியின் அறுபதாவது திருமணநாள் விழாவிற்காக ஏற்பாடுகள் ஒருபுறம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்க.
மற்றொரு புறம் அபி சங்கவியின் உதவியுடன் லேப்டாப்பில் இருந்த விபரங்களை திருடி அவர்களுக்கு சாதகமாக அந்த கான்ட்ராக்ட்டை வாங்கி விட்டார்கள். அந்த டென்ஷன் கதிரை போட்டு வாட்டி வதைத்தது.
ஆபீஸில் அவனால் நிம்மதியாக ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. எங்கே தன்னுடைய கவனக்குறைவால் மீண்டும் எதுவும் இழக்க நேரிடுமோ என்ற பதட்டம் கதிருக்கு இருந்து கொண்டே இருந்தது.
அவன் அதே பதட்டத்தோடு ஆபீஸில் இருக்க அதை கவனித்த விக்கி, “டேய் பரவால்ல விடுடா இந்த டெண்டர் போயிடுச்சுன்னா நம்ம இன்னொரு டெண்டர் பாத்துக்கலாம். அதுக்காக நீ ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க? விடு, உன் அண்ணன் வேற அவளுக்கே அந்த டெண்டர் கிடைக்கட்டும்னு முழு பணத்தையும் தூக்கி கொடுத்துட்டான். இனி நீ டென்ஷனாகி எந்த பிரயோஜனமும் இல்லை” என்றான்.
“இல்ல விக்கி, ஆதி அண்ணன் அவ்வளவு பெரிய தொகையை தூக்கிக் கொடுத்திருக்காங்க. அதுக்கு பின்னாடி ஏதோ ஒரு பெரிய விஷயம் இருக்கு இல்லனா அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் இந்த பணத்தை கொடுத்து இருக்க மாட்டார். எனக்கு என்னன்னா இந்த சங்கவி எப்போ எப்படி என் லேப்டாப்பில் இருந்து அத்தனை டீடைலையும் எடுத்துட்டான்னு தெரியல” என்றான்.
“சரிடா அது தெரிஞ்சு இப்போ என்ன பண்ண போற? அதான் கான்ட்ராக்ட் நம்ம கையை விட்டு போயிடுச்சே” என்றான் விக்கி.
“இல்ல விக்கி, அந்த கான்ட்ராக்ட்க்கு நம்ம கோட் பண்ண அமௌன்ட் இவங்க திருடித்தான் அவர்களுக்கான அமௌன்ட் கோட் பண்ணி இருக்காங்கன்னு தெரிஞ்சதுன்னா அவங்களுக்கு அந்த கான்ட்ராக்டை கொடுக்காமல் கேன்சல் பண்ணிடுவாங்க. அதான் எப்படி யோசிச்சிட்டு இருக்கேன். ஏதாவது ஒரு சின்ன க்ளூ, ஆதாரம் எதுவும் கிடைத்ததுன்னா போதும் அந்த சங்கவியை ஒரு வழி பண்ணிடுவேன்” என்றான் கதிர்.
“என்னடா சொல்ற? அப்போ அவங்க நம்ம கிட்ட இருந்து நம்ம கான்ட்ராக்ட் கோட் பண்ணின அமௌன்ட் திருடிட்டாங்க என்கிற விஷயத்தை தெரியப்படுத்த, அவங்களுக்கு போக வேண்டிய அந்த டீலிங் நமக்கு வந்துடும்னு சொல்றியா?” என்றான் விக்கி.
“அதைத்தான் விக்கி. அதுக்குத்தான் நான் போராடிட்டு இருக்கேன். அவ எப்போ எங்க அந்த கான்ட்ராக்ட்க்கு நம்ம கோட் பண்ண அமௌன்ட் எடுத்தான்னு தெரியணும். அதுக்கு என்ன பண்றதுன்னு தெரியல” என்றான்.
“சரி என்கிட்ட இந்த விஷயத்தை சொல்லிட்ட இல்ல? நீ இதை இத்தோட மறந்துடு. உனக்கு என்ன, அந்த சங்கவி உன்கிட்ட இருந்து எப்படி அந்த கான்ட்ராக்ட் பத்தின டீடைல் திருடிட்டான்னு தெரிஞ்சுக்கணும் அவ்வளவுதானே? நான் அதை முடித்து தர்றேன்” என்றான் விக்கி.
“என்ன விக்கி நிஜமாத்தான் சொல்றியா? கண்டிப்பா உன்னால முடியுமா?” என்றான் கதிர் சந்தேகமாக.
“நீ கேட்கிறதை பார்த்தா உனக்கு என் மேல் நம்பிக்கை இல்லை போல இருக்கு” என்றான் விக்கி.
“அப்படி இல்ல விக்கி. நான் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்தேன் ஆனா என்னால இப்ப வரைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் கண்டுபிடிக்க முடியலையே. அதான் நீ எப்படி அவ்வளவு சீக்கிரம் அதை கண்டுபிடித்து தர்றேன்னு சொல்றேன்னு… அதனால் தான்…” என்று இழுத்தான்.
“நான் தான் சொல்லிட்டேனே இனி அது என்னோட பிரச்சனை நான் பார்த்துக்கிறேன். நாளைக்கு காலைல அதுக்குள்ள அந்த டாக்குமெண்ட்ட எப்படி சங்கவி திருடினான்னு நான் உனக்கு கண்டுபிடிச்சு சொல்றேன்” என்ற விக்கி, “சரி நான் உனக்கு அதை கண்டுபிடித்து கொடுத்துட்டா நீ எனக்கு என்ன செய்வ?” என்றான் விக்கி.
“என்ன விக்கி இப்படி சொல்ற? நீ எவ்வளவு பெரிய விஷயத்தை எனக்கு செய்து கொடுக்கிறேன்னு சொல்லி இருக்க, அதுக்காக நான் உனக்கு ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்ல வேண்டாமா?” என்றான் கதிர்.
“உன் தேங்க்ஸ் யாருக்கு வேணும்? அதை கொண்டு குப்பைத் தொட்டியில் போடு. எனக்கு இப்போ ஜாலியா எங்கேயும் வெளியே போயிட்டு வரணும் போல இருக்கு” என்றான்.
அதைக் கேட்டதும் கதிரின் முகம் பிரகாசமானது. “இந்த நேரத்தில் நம்ம வெளியே போனா நிலானி உன்னை திட்ட மாட்டாளா? அவ வேற கன்சீவா இருக்காளே” என்றான் கதிர்.
“அதை பத்தி எல்லாம் நீ ஏன்டா கவலைப்படுற? நிலானிக்கு என்ன பத்தி நல்லா தெரியும், அவளை எப்படி சமாளிக்கணும்னு எனக்கும் நல்லா தெரியும். நீ டென்ஷன் ஆகாத வா” என்றான் விக்கி.
“சரி டா டென்ஷன் ஆகல. ஆமா இப்போ நீ என்னை எங்க கூப்பிடுற?” என்றான் கதிர்.
“நீ முதல்ல என்கூட கிளம்பி வா… அப்புறம் மத்ததையெல்லாம் சொல்றேன்” என்று கதிரை இழுத்து செல்லாத குறையாக தன்னுடன் வெளியே அழைத்து சென்றான் விக்கி.
செல்கையில் மதுவிடம், “நானும் கதிரும் ஒரு முக்கியமான விஷயமா கொஞ்சம் வெளியே போக வேண்டியது இருக்கும். நான் வர நைட் லேட்டாகும். கொஞ்சம் என் பொண்டாட்டியை கவனிச்சுக்க மது. அவளை சீக்கிரமே சாப்பிட்டு தூங்க சொல்லிரு” என்றான்.
“சரி விக்கி… ஆமா நீங்க…” என்று அவள் அடுத்து “நீ எங்கே போறே?” என்று கேள்வி கேட்பதற்குள் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
“டேய் இதை நீ நிலானி கிட்டயே சொல்லி இருக்கலாமே? ஏன் மது கிட்ட சொல்லி நிலானி கிட்ட சொல்ல சொல்ற?” என்றான் கதிர்.
“டேய் இப்போ நான் நிலானியை பார்க்கச் சொன்ன பிறகு மது என்கிட்டே பேச வந்துச்சே கவனிச்சியா?” என்றான் விக்கி.
“ம்ம்ம்… ஆமா ஏன் டா?” என்றான் கதிர்.
“சரின்னு சொல்லிட்டு அடுத்து நான் எங்க போறேன்னு தான் கேட்க வந்தா… அப்புறம் ஏன் போற, எதுக்கு போற, எப்ப வருவ, இப்ப அங்க போய் ஆகணுமான்னு அடுக்கடுக்கா கேள்வி மது கிட்ட இருந்து வரும். என் பொண்டாட்டியோட அக்காவே இப்படின்னா என் பொண்டாட்டி அதுக்கு எப்படி கேள்வி கேட்பான்னு யோசிச்சு பாரு” என்றவன், “இவங்க கிட்ட வெளிய போறதை மட்டும் தான் சொல்லணும். எங்க போற ஏன் போறன்னு காரணம் கேட்பாங்க. அதெல்லாம் சொல்லக் கூடாது புரிஞ்சுதா? நீயும் இனிமேல் அப்படியே உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி மெயின்டைன் பண்ணி பழகிக்க இல்லைன்னா உன்னால வெளியே போய் என்ஜாய் பண்ணவே முடியாது” என்றான். கதிர் விக்கி சொன்னதைக் கேட்டு சிரித்தவன் “பக்கா குடும்பஸ்தன் ஆயிட்டடா நீ” என்று சொல்லி கிண்டல் செய்தவாறே அவனோட கிளம்பினான்.
❤️
ஆதி துர்கா இந்தியாவுக்கு சென்று இரண்டு நாட்களும் கழித்து தான் டென்மார்க்கில் இருந்த மற்ற நால்வரும் கிளம்பியாக இருந்தது.
போதி மாதவி இருவரும் ஹனிமூனை இரவு முழுவதும் தங்கள் ரூமில் கொண்டாடிவிட்டு பகல் முழுவதும் டென்மார்க்கை சுற்றிப் பார்க்க சென்று விட்டனர்.
கிட்டத்தட்ட ரியா ஸ்ரீ நிலையும் அதுதான். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் இரவு அவரவர் அறையில் சென்று தனியாக படுத்துக்கொண்டனர். பகல் முழுவதும் இருவரும் டென்மார்க்கை சுற்றிப் பார்ப்பதும் இரவு நேரம் கழித்து வீட்டிற்கு வந்தவர்கள் பிரிய மனமே இல்லாமல் அவரவர் அறைக்குச் சென்று படுத்து உறங்கினர்.
நாளை காலை விடிந்தால் இந்தியா கிளம்புவதற்கு நால்வரும் தயாராக வேண்டும். மாதவியும் போதியும் இரவு டென்மார்க்கில் இருந்த ஒரு பெரிய கிளப்பிற்கு சென்று இருக்க தங்களோடு ரியா, ஸ்ரீ இருவரையும் அழைத்துச் சென்றனர்.
டென்மார்க் வந்ததுல இருந்து மாதவியும் போதியும் அடிக்கடி பேசி சற்று நெருக்கமாக இருக்க அவர்கள் இருவரும் ஒரு டேபிளில் அமர்ந்திருந்தனர். ரியா, ஸ்ரீ இருவரும் இணைந்து பார்ட்டியை என்ஜாய் செய்து கொண்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர்.
போதி மிகவும் சந்தோஷமாக ஆடிக் கொண்டு இருந்தான். அவனுக்கு கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்த ஸ்ரீ போதியிடம் “என்ன சார் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது” என்றான்.
“ஆமா ஸ்ரீ என் வாழ்க்கையிலேயே நான் இங்கே இருந்த இந்த அஞ்சு நாளும் மறக்க முடியாத நாளா எனக்கு அமைஞ்சிருச்சு. அழகான மனைவி, அவளோட சந்தோஷம்… இந்த அஞ்சு நாளையும் நான் என்ஜாய் பண்ணிட்டேன்” என்றான் போதி.
“ஓஹோ உங்க வைஃப் கூட வந்து ஹனிமூன் கொண்டாடினீங்களே அதைத்தான் சொல்றீங்களா மறக்க முடியாத நாள்னு?” என்று சொல்லி சிரித்தான் ஸ்ரீ.
“வெறும் ஹனிமூன் கொண்டாடினதுக்காக மட்டும் நான் சந்தோஷமா இருக்கேன்னு சொல்லல ஸ்ரீ. இந்த அஞ்சு நாளும் நான் மாதவி கூட இருந்த நேரங்களில் அவளை பத்தி என்னால நிறைய விஷயம் தெரிஞ்சுக்க முடிஞ்சது. என்னதான் நாங்க காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அவ்வளவா ரெண்டு பேரும் ஒருத்தர பத்தி ஒருத்தர் மனசு விட்டு பேசி புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவே இல்ல. ஆனா இந்த அஞ்சு நாளும் நான் அவளுக்காகவும், அவ எனக்காகவும்னு யாருடைய தொந்தரவும் இல்லாம எங்களுக்கே எங்களுக்கான நேரங்களில் செலவழிச்சு நாங்க ரொம்ப சந்தோஷமா இருந்தோம். என்னை பத்தி அவளும் அவளை பத்தி நானும் நிறைய புரிஞ்சுகிட்டோம்” என்றான் போதி.
“உண்மைதான் சார் நானும் ரியாவும் சமீபமா தான் காதலிக்க ஆரம்பிச்சோம். ஆபீஸ்ல ரெண்டு பேரும் ரொம்ப நேரம் ஒன்னாவே இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் ரொம்ப கம்மிதான். ஆனா இங்கே இருந்த இந்த அஞ்சு நாளும் நாங்க ரெண்டு பேரும் நிறைய பேசினோம். எங்களோட எதிர்காலத்தைப் பற்றி நிறைய நிறைய பேசினோம். என்னவோ அவளும் நானும் பிரியவே முடியாத அளவுக்கு நாங்க ரெண்டு பேருக்குள்ளேயும் ஒரு பந்தம் உருவான மாதிரி நான் பீல் பண்றேன்” என்றான் ஸ்ரீ.
ஸ்ரீயின் தோளில் தட்டிக் கொடுத்த போதி, “நீ ரொம்ப லக்கி ஸ்ரீ. கல்யாணத்துக்கு முன்னாடியே உன் ஆள் கூட நேரம் செலவழிச்சு மனசு விட்டு பேசுவதற்கு உனக்கு நல்ல வாய்ப்பு அமைஞ்சிருக்கு. அதை நீ நல்லாவே யூஸ் பண்ணிக்கிட்ட. உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? நாங்க கல்யாணம் பண்ணி ஹனிமூன் கொண்டாட வந்திருக்கோம், நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸா வந்திருக்கீங்க அவ்ளோதான் வித்தியாசம்” என்றான்.
“கூடிய சீக்கிரம் நாங்களும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இதே போல ஹனிமூன் வரலாம்னு பிளான் பண்ணி இருக்கோம் சார்” என்று சொல்லி லேசாக வெட்கப்பட்ட படி சிரித்தான் ஸ்ரீ.
“வாவ்!!!! கங்கிராட்ஸ்… ஸ்ரீ. சீக்கிரமா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கோங்க. அந்த லவ்வர்ஸா இருக்குற அனுபவம் ஒரு மாதிரி இருக்கும், கணவன் மனைவி ஆன பிறகு அனுபவம் வேற மாதிரி இருக்கும்” என்று சொன்னான்.
ஸ்ரீ மெல்ல சிரித்து தூரத்தில் டேபிளில் அமர்ந்து தன்னையே சைட் அடித்துக் கொண்டிருந்த ரியாவை பார்த்தான். அதே போல தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த தன் காதல் மனைவியை மோகத்துடன் அவளை அங்கேயே விழுங்கிவிடும் பார்வை பார்த்தபடி நடனம் ஆடிக் கொண்டு இருந்தான் போதி.
